Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள், பொன்னாலை வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் - மஹோற்சவ பெருவிழா - தேர் உற்சவம் நாளை 02.09.2018 - ஆலய வரலாறு இணைப்பு

பொன்னாலை வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் - மஹோற்சவ பெருவிழா - தேர் உற்சவம் நாளை 02.09.2018 - ஆலய வரலாறு இணைப்பு

E-mail Print PDF
Image may contain: sky and outdoor

கொடியேற்றம்: 17.08.2018             - தேர் உற்சவம் ;02.09.2018 :

ஆலயத்தை தரிசிக்க:

https://youtu.be/5nlXUSl9lTY -

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் வரலாறு

அருட்பெருமையும் வரலாற்றுப் பழமையும் மிக்க திருமால் ஆலயங்களுள் ஒன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில். இலங்கையில் பழமையும் பெருமையும் மிக்கனவாக விழங்கும் சைவ மக்களின் ஆலயங்களான திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், கதிர்காமம், நகுலேஸ்வரம், கீரிமலை முதலிய ஆலயங்களின் தோற்றம் பெருமை என்பன தக்ஷண கைலாச புராணத்தில் இவ்வாலயத்தின் தோற்றம் மகிமை என்பன கூறப்பட்டுள்ளது.

இத்தக்ஷன கைலாசபுராணம் நைமிசாரண்ய முனிவர்கள் கோமதியாற்றங்கரையில் தீர்க்க சத்திரம் என்னும் ஞாகம் செய்து முடித்த போது சூதமுனிவரால் சொல்லப்பட்டதாகும்.

தக்ஷண கைலாச புராணத்திலே பொன்னாலயப் பெருமை உரைத்த படலம் என்னும் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் தோற்றமும் பெருமையும் சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னொரு சமயத்திலே துர்வாச முனிவரால் தேவேந்திரன் சாபம் பெற்று நீசத்தன்மையை அடைந்தான். அப்போது இந்திரன் ஓ பகவானே! அத்திரி முனிவரின் குலத்தில் பிறந்தோய்! நான் செய்த பிழையைப் பெறுத்துக்கொள்க: என் சாபம் நீங்கும் பொருட்டு ஒரு உபாயம் கூறியருள்க: நல்ல விரதமுடையோய்! என்று துர்வாச முனிவரைப் பிரார்த்தித்தான்.

இந்திரனால் பிரார்த்திக்கப்பட்ட முனிவருள் மேலானவராகிய துர்வாச முனிவர் இந்திரனைப் பார்த்து: ஓ இந்திரனே! உன் சாப விமோசன காரியத்தில் துக்கம் அடைய வேண்டாம்.

சேது மத்தியிலிருக்கும் இலங்கையிலே பொன்னாலையம் என்னும் பட்டனத்திலே வலைஞர் குலத்திலே நீ பிறப்பாய் ஜனார்த்தனராகிய வாசு தேவர் ஒரு காலத்தில் கூர்மாவதாரம் எடுப்பார். (ஒரு சமயம் இந்திரனின் தாயின் மோதிரம் ஒன்று யாராலும் எடுக்க இயலாத வகையில் ஒரு பாதாளக் கிணற்றுக்குள்ளே விழ நாராயணர் ஆமையாகச் சென்று அதனை எடுத்துக் கொடுத்தார் என்றும் அந்தக் கூர்மமே இந்திரனுக்குச் சாபவிமோசனம் அளித்தது என்றும் வடமொழி தக்ஷண கைலாச புராணத்தில் விளக்கப்பட்டுள்ளதாம்) அக்கூர்மம் உன் வலையினாலே கட்டப்படும். இது மெய்: அந்த ஆமையின் அங்கம் தீணடப்பட்டவுடன் நீ சாபத்தினின்றும் விடுபடுவாய் என்று கூறி விட்டு துர்வாச முனிவர் தம் இருப்பிடத்தை அடைந்தார்.

துர்வாசர் கூறியபடி வலைஞனாகப் பிறந்த இந்திரன் ஒரு நாள்: இப்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள கடலில் வலை வீசினான். வலையில் ஒரு ஆமை அகப்பட்டது. அதனை அவனால் தனித்து கரை சேர்க்க முடியவில்லை. தன் இனத்தவரின் துனையை நாடி அவர்களை அழைத்து வந்தான்: வந்தவர்கள் அனைவருமே அங்கே ஒரு அதிசயத்தைக் கண்டனர்.

அச்சமயத்தில் ஆகாயமார்க்கத்தில் பொன்னொளி வீசும் விமானம் ஒன்று காணப்பட்டது அதனைக்கண்டு அதிசயம் நிறைந்தவர்களாய் ஆமையின் பக்கத்தை விரைவாகச் சென்றடைந்தார்கள். அச்சமயத்தில் அந்த ஆமை கல்லாயிருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம்! என்று வியந்தார்கள். பின்பு அவர்கள் அனைவரதும் மனதில் இவ்வாமை இலக்குமி பதியாகிய நாராயணரே என்றும் காணப்பட்ட விமானம் அவருடையதே என்றும் ஒரு துணிவு உண்டானது அத்துணிவை முன்னிட்டு நாராயணரின் பிரதிட்டைக்குரிய இந்த இடத்திலே நல்ல நாளிலே நல்ல முகூர்த்தத்திலே உத்தமபிராமணரைக் கொண்டு வைகாசன தந்திர விதிப்படி பிரதிட்டை செய்யும் காரியத்தை இப்பொழுதே செய்ய முற்படுவோம் என்று தீர்மாணம் பண்ணினார்கள்.

அவர்கள் அப்படி முயற்சித்து விஷ்ணுவை பிரதிட்டை செய்து வரதராசப் பெருமாள் என்று நாமகரணம் செய்து வழிபட்டார்கள்.

அவர்கள் பொன்னாலை ஆண்டவன் கிருபையினால் அதிக சந்தோஷம் கொண்டவர்களாய் நித்திய பூசையையும் நைமதித்திய பூசையையும் நடத்தி வந்தார்கள். அவர்கள் எல்லோரும் பொருட் செல்வத்தினாலும், விளைநிலச் செல்வத்தினாலும் நிறைவுடையவர்களாய் சுகத்துடன் வாழ்ந்தார்கள். மேலும் அவர்கள் எண்ணியவைகளையெல்லாம் அநுபவித்துப் புத்திர பௌத்திரர்களோடு கூடச் சுகமாய் வாழ்ந்திருந்தனர் இங்கே சொல்லப்பட்டவையெல்லாம் சத்தியம், சத்தியம்.

பின்வரும் சூதமுனிவர் தன்னிடம் புராணம் கேட்டுக் கொண்டிருந்த பிராமணர்களைப் பார்த்து: இந்திரனாலேயே கூர்ம வேடங் கொண்ட விஷ்ணு கட்டப்பட்டார். வலைஞனுடைய சாபமானது ஆமையைத் தீண்டியவுடன் நீங்கியது அங்கு தோன்றிய விமாணம் இந்திரனுடையதே. சாபம் நீங்கியவுடன் அவ்விமானத்தில் இந்திரன் சென்றான். விட்டுவாணவர் சாபம் நீங்கிய இந்திரனுக்கு தன் திவ்விய லோகத்தைக்காட்டி அருள் புரிந்தார். அவ்வாறு காட்சி வழங்கிய போது திருமாலின் திருவடிச் சுவடுபதித்த இடம் மிகவும் பரிசுத்தமானது.

இவ்விடத்திற்கு திருவடிநிலை என்று பெயர் என கூறியதோடு பொன்னாலைப் பெருமை உரைத்த படலத்தை தக்ஷணகைலாச புராணத்தில் படிப்பவர் கேட்பவர்களும் நாராயணன் அருளைப்பெற்று மன விருப்பங்கள் எல்லாம் நிறைவேறப் பெறுவர் என்றும் ஆவணிமாத கிருஷ்ணபட்ச அட்டமி திதியாகிய விசேடதினத்தில் பொன்னாலயத்திலே வாசம் செய்யும் லோகரட்சகராகிய அச்சுதப் பெருமானை யரவன் ஒருவன் அன்புடன் தரிசனம் செய்வானோ அவனுடைய பாவங்கள் எல்லாம் அப்பிறவியிலே அக்கினியால் பஞ்சுப்பொதி அழிவது போல அழிந்துவிடும். அவன் இப்பிறப்பிலே எல்லா நலன்களையும் அடைந்து மகிழ்ந்து மறுமையில் வைகுண்டலோகத்தை அடைந்து களிப்புற்று வாழ்வான் என்று கூறினார்.

இப்புராணத்திலே பொன்னாலயத்திலே தரிசனம் வழிபாடு என்பன செய்வதற்கு உரியதாகச் சொன்ன தினத்தில் இவ்வுண்மையை அறியாதவரும் தரிசனம் செய்து நலன்கள் அடையத்தக்கதாக அன்று தேர்த்திருவிழா அமைய மகோற்சவம் நடை பெற்று வருவது வரதராஜப் பெருமாளின் அருட் சிறப்பேயாகும்.

புராண காலம் என்று மதிக்கப்படுகின்ற மிகப் பழமையான காலத்தில் இவ்வாறு சிறப்புடன் தோன்றிய ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவில் சரித்திர காலத்தில் சீரும் சிறப்பும் உடையதாயும் ஸ்ரீமந்நாராயணனின் அருள் பிரவாகிக்கும் மகிமை உடையதாகவும் விளங்கியிருக்கிறது.

ஸ்ரீகோணேஷ்வரம் என்னும் திருகோணமலையில் பல திருப்பணிகள் செய்தவனும் கந்தளாய்க் குளம் முதலிய குளங்களை தன் ஆடசியில் ஏற்படுத்தியதனால் குளக்கோட்டன் என்னும் பெயரால் புகழடைந்தவனுமான அரசன் பொன்னாலை வரதராஜப் பெருமாளை வணங்கி அருள் பெற்று பல திருப்பணிகளை செய்திருக்கின்றான்.

தமிழ் நாட்டிலே முதன்மையான திருமால் தலமாக விழங்கும் ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல பொன்னாலையிலும் ஏழு வீதிகள் கோபுரங்கள் அமைக்கும் திருப்பணிகளைக் குளக்கோட்டன் செய்தா.

உரிய பல இனமக்களையும் ஆலயச் சூழலில் குடியிருத்தினான் இன்றும் நிலப்பெயர்கள் அப்படி குடியிருந்தவர்களின் பெயரால் வழங்கப்படுகின்றன. இம் மன்னன் அமைத்த ஏழாம் வீதியில்: ஆலயத்திற்குச் செல்பவர் முதலில் வணங்க அமைத்த விநாயகர் ஆலயமே இப்போது வரதராஜப் பெருமான் கோவிலுக்கு சுமார் கால்மைல் முன்பாக அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயமாகும். இக் குளக்கோட்டு மன்னன் இவ்வாலயத்திற்கு செய்த திருப்பணிகளின் பெருமையில் இருந்தே நாராயணன் மன்னனுக்கு விசேடமாக அருள் புரிந்ததை அறியலாம்.

நம் நாட்டிற்கு அந்நியப்படையெடுப்ப ஏற்பட்டதைத் தொடர்ந்து உண்டான சமய அழிவில் ஏழு வீதிகளுடன் இருந்த ஆலயம் அழிந்தது. அந்த ஆலயத்தில் எடுத்த கற்களைக் கொண்டே சங்காணைக்கோட்டை, ஊர்காவற்றுறைக் கடற் கோட்டை முதலியன அமைக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன் அரசாங்க வேலையை குத்தகைக்கு எடுத்து செய்யும் ஒப்பந்தக்காரர் ஒருவர் ஊர்காவற்றுறைக் கோட்டை கட்டப் பயன் பட்டிருந்த கற்களில் சங்கு சக்கரச் சின்னங்கள் இருப்பதை அவதானித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேய அரசாங்கம் சமய சுதந்திரம் வழங்கியவுடன் தோன்றிய ஆலயங்களுள் ஒன்றாக பொன்னாலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலும் இடம் பெறுகின்றது. யாழ்ப்பாணச் சமய நிலை என ஆறுமுக நாவலர் எழுதிய நூலில் சிறப்பாகத் திருவிழா நடைபெற்று அதிக மக்கள் கூடும் ஆலயங்களின் வரிசையில் இவ்வாலயமும் இடம் பெறுகிறது.

ஸ்ரீவரதராஜப் பெருமாளிடம் கொண்ட பெரும் ஈடுபாடு காரணமாக மிகப் பெரிய அளவில் ஆலயம் அமைக்க விரும்பிய அன்பர்கள் பெரிய திட்டத்தில் மூலஸ்தானத்தை அமைத்து அதற்கேற்ப மற்றைய மண்டபங்களை அமைத்து வருகின்றனர்.

மிகப் பெரிய அளவில் ஆரம்பித்தபடியால் உட்பிரகார வேலைகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. இவ்வாலயத்தில் உள்ள நாகதம்பிரான், மகாலக்குமி சனீஸ்வரன் நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளும் இவ்வாலயத்துடன் தொடர்புடைய ஆலயங்களாக விழங்கும் விநாயகராலய வைரவராலய மூர்த்திகளும் அருட்சிறப்பு மிக்கனவாக விளங்குவதும் இவ்வாலய மகிமைக்கு அடையாளங்களாக உள்ளன.

இவ்வாலயத்தில் மகாலக்குமி அம்பாளும் நாராயணனை பூசித்து அருள் பெற்றுள்ளார் என்று ஒரு கருத்து திருக்கேதீச்சர புராணத்தில் விசேடமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்திரனின் பொன்மயமான விமானம் பலருக்கும் தெரிந்த காரணத்தாலும், பொன் என்னும் பெயருடைய இலக்குமி பூசித்த காரணத்தாலுமே இவ்வாலயத்துக்கு பொன்னாலையம் என்னும் பெயர் ஏற்பட்டது.

பொன்னாலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலில் சமீபத்தில் பூமிலக்குமி அமைக்கப்பட்டது. இப் பூமிலக்குமி கோவில் கும்பாபிசேகத்தினத்திலிருந்து இவ்வாலய வெளி வீதியை நூற்றெட்டு முறை வலம் வந்து அருள் பெற்றவர் அநேகர் இன்றும் பலர் சிரத்தையுடன் இவ் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதியர் ஒரே தினத்தில் நூற்றெட்டு முறை வலம்வர எண்ணி வலம் வந்தனர். இவர்கள் நூற்றெட்டாவது முறை வலம் வந்த போது கருடன் தன் இறக்கைக் காற்று அவர்கள் மீது படும் படியாகத் தாழ்ந்து பறந்து ஆசீர்வதித்தது. இவ்வாலயத்தில் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ஆலயத்துக்கு மேல் கருடன் பறப்பதும் இயல்பாகும்.

சுபம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS