Saturday, Mar 24th

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் திறமை பாராட்டு / அறிவியல் மேதைகள் திரு. நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (மணி மாஸ்ரர்) அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்

திரு. நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (மணி மாஸ்ரர்) அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்

E-mail Print PDF

”இளமையில் கல்” என்பது ஔவைப் பாட்டி எமக்கு ஆத்திசூடி மூலம் ஊட்டிய முது உரை. இளமையில் கல்லாது விட்டால் என்னவாகும் என்பதை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் பிற்பாதி கூறப்படவில்லைப் போலும்.  இக் கூற்றை நாம் இளமையில் கல் - கல்லாதவன் கல்லு” என்றும் ”இளமையில் கல் கல்லாதவன் - முதுமையில் மண்” என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அத்துடன் இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். இளமையில் பெற்ற கல்வியானது சிலையில் பதியப் பெற்ற எழுத்துக்கள் போல் அழியாது என்பதும், பசுமரத்தாணிபோல் சுலபமாக பதியக் கூடியதாகவும் நிலைத்து நிற்பதாலும் ”இளமையில் கல்” என்றார்.

சிறுவர்கள் எப்போதும் விளையாட்டிலும், நண்பர்களோடு உல்லாசமாக ஊர் சுற்றுவதிலும், சுவையான சாப்பாட்டிலும் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்வது பருவத்தின் பழக்கமாகும். இப் பழக்கமானது அவர்கள் வாழும் சுற்றாடல், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். கற்றவர்கள், கல்லாதவர்கள், பணக்காரர், ஏழைகள் வாழும் சூழலில் வாழ்வோர் தம் சுற்றாடல் பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்றனர். இளம்பராயம் என்பது பொறுப்புகள் அற்ற துன்பங்கள் அற்ற இன்பமான பருவம். அங்கே உழைக்க வேண்டும் என்ற கட்டாயமோ, பொறுப்புகளோ இல்லையெனலாம்.

பொதுவாக இந்த வயதில் பள்ளிப் படிப்பு என்றால் முதலில் நெல்லிக்காய் போல் துவர்க்கத்தான் செய்யும். அதனை மெல்ல மெல்ல சுவைக்க இனிக்க ஆரம்பிக்கும். ஆனால் அவை இனிக்கும் காலம் வருவதற்கு முன்பே அதனை சிலர் கக்கி விடுகின்றார்கள். அதனால் அவர்களுக்கு அதன் இனிப்புப் தன்மை புரிவதில்லை. அத்துடன் நெல்லிக் கனியானது ஒரு சர்வ நிவாரணி என்பதனை புரியாதவர்கள். அது இருந்தால் எந்த துன்பத்தையும் நீக்க வல்லது என்பதனை அவர்களுக்கு எடுத்துரைக்க பெற்றோருக்கும் முடிவதில்லை. இவ்வாறான இளையோரை எவர் ஒருவர் அவர்களைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றுக்கொளும் விதமாக எடுத்துரைத்து இனிக்கும் வரை சுவைக்கச் செய்து கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாக மாற்றும் திறன் கொண்டவராக உள்ளாரோ அவரே உண்மையான ஆசிரியனாவான்.

அந்தவகையில் எம் ஊரில் இலைமறை காய்போல் வாழ்ந்து; கல்வி வலயத்தின் மத்தியில் நற்கனி மரமாக கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், அன்பு, அறிவு, ஆற்றல், பண்பு, பணிவு, விவேகம், இறை பக்தி, மதிநுட்பம், கல்வி, பெருந்தன்மை, உடையவராக விளங்கும் எம்மூர் கல்விமானும், பாடசாலை அதிபருமான மதிப்பிற்குரிய நல்லதம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் திறமையை அடையாளம் கண்டு கௌரவித்த வலிகாமம் கல்வி வலய இயக்குனர் குழுவினரை போற்றி பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றோம்.

நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணி வேராகவும், எமது வாழ்கையின் அத்திவாரமாகவும் இருக்கும். எழுத, வாசிக்க தெரியாதவர்கள் கண்கள் இருந்தும் குருடர்கள் போல் வாழ்கின்றார்கள். இதனை கூறவந்த  திருவள்ளுவரும் கல்வி கற்றவர்களிற்கு மட்டுமே முகத்தில் இரு கண்கள் இருப்பதாகவும், கற்காதவர்களுக்கு கண்களிற்குப் பதிலாக முகத்தில் இரு புண்களே உள்ளன என்றும் திருக்குறளில் வலியுறுத்துகின்றார்.

இளமையில் கற்க வேண்டியதை கற்காது கல்லாகவும், மண்ணாகவும் இருக்கும் சிலரை நாம் இன்று பார்க்கின்றோம். இக்கல்வியில் சிறிதளவையேனும் கற்றுச் சிந்தையுள் இருத்தி, அறிவுச் செல்வத்தைச் சிரத்தையுடன் தேடும்போதே மனித வாழ்வு செழிப்படைகிறது. அப்போதே மனிதன் மாமனிதனாகிறான். இதையே அன்று தொட்டு இன்று வரை பல நூல்களும் பழமொழிகளும் பறைசாற்றி வருகின்றன.

மன்னனையும், கற்றோனையும் ஒப்பிடுகையில் மன்னனுக்குத் தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனி கல்வியை பெறுவதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு உயர்ந்த நுால்களையும் கற்று வரும் போதே அந்நுால்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களையும் நாம் பழகி வருதல் வேண்டும். அதற்காக கல்வி கிடைத்ததையிட்டு செருக்கு அடையாமல் பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமையாய் எல்லா உயிர்களிடத்தும் அனபும் இரக்கமுங்காட்டி நல்லொழுக்கத்தில் வாழுவதும் கற்றதனால் ஆய பயனாகும் என வள்ளுவ பெர்ந்தகை எடுத்துரைக்கின்றார்.

தான் கற்ற கல்வியினாlலும் பெற்ற அறிவினாலும் மட்டும்மன்றி உள்ளத்தாலும் உயருகிறான். வாழ்வினையும் வாழ்வின் விழுமியங்களையும் புலப்படுத்தும் இலக்கியங்கள் கட்டுரைகள் கவிகைகள் முதலானவற்றைப் படிப்பதால் வாழ்வில் தான் கண்டறியாத புதிய புதிய மாந்தரோடு பழகுகிறான்; அவர்களின் குணாதியங்களை உணருகிறான்; வாழ்வின் பல கோணங்களையும் காணுகிறான். பல பல புதிய அனுபவங்களைப் பெறுகிறான். நல்லன எவை தீயவை எவை எனப் பகுத்துணரும் பகுத்தறிவுப் பண்பை பெறுகிறான். இதனால் அவனது உள்ளம் விரிவடைகிறது; பண்படுகிறது. ஏதிர்கால வாழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்து கொள்ளும் உன்னதநிலையை பெறுகிறான்.

இளமையில் கல். கல்லாதவன் கல்லு:
நாம் பல ஆலயங்களுக்கு சென்றிருக்கின்றோம். அங்கே முக்கியமான இடங்களில் (கருங்)கற்கள் வைக்கப் பெற்றிருப்பதையும் பார்த்திருக்கின்றோம். அவற்றுள் ஒன்று தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைப்பதற்கு வைக்கப் பெற்றிருக்கும் கல்லாகும், மற்றொன்று ஆலயத்தினுள் செல்வதற்கு படிக்கல்லாக அமைந்திருப்பதாகும், இன்னொன்று ஆலய கருவறையில் மூலமூர்த்தியாகவும் பதியப் பெற்றிருக்கும். இவை யாவும் (கருங்)கற்களே. ஆனால் அவற்றிற்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் வித்தியாசமானவை. பொதுவாக இவ் வித்தியாசத்தை நாம் மானிட வாழ்க்கையிலும் காணலாம்.

ஆலயத்தில் தேங்காய் உடைக்க வைத்துள்ள கல்லுக்கோ தினமும் தேங்காய்களால் அடியும், எறியும் கிடைக்கின்றன. படிக்கட்டில் உள்ள கல்லுக்கோ தினமும் பலரின் மிதியும், உதையும் கிடைக்கின்றன. ஆனால் கருவறையில் இருக்கும் கல்லுக்கோ தினமும் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிசேகமும், தீபாராதனைகளும், படையல்களும் கிடைக்கின்றன. இவற்றை பார்த்துகொண்டு முன்னால் இருக்கும் படிக் கட்டு கல்லுக்கும், தேங்காய் உடைக்கும் கல்லுக்கும் பொறாமையும், வெறுப்பும் ஏற்பட்டது.  

ஒருநாள் அவை இரண்டும் கருவறையில் உள்ள கல்லைப் பார்த்து நீயும் எங்களுடன் இருந்த கல்லுத்தானே. இதில் உனக்கென்ன அதிவிஷேசமாக ஆடை அலங்காரங்களும், ஆபரணங்களும் தந்து  ஆராதனை செய்கின்றார்கள் என வினவினர். அப்போது; மூலமூர்த்தியாக கருவறையில் அமர்ந்திருந்த கல்லானது அவர்களைப் பார்த்து நாங்கள் எல்லோரும் ஒரே இனத்தவர்கள்தான்; ஆனால் நான் எனது சிற்பாச்சாரியராக இருந்த ஆசிரியரிடமும், விரிவுரையாளர்களிடமும் பல உளிக் கொத்துகளை தாங்கி உடையாது பொறுமை காத்து அவர்கள் கூறியவற்றை கிரகித்து நித்திரையின்றி கற்றதனால் அழகான சிற்பமாகி வணக்கத்திற்குரிய தெய்வமாக இங்கு அமர்ந்துள்ளேன். நீங்களோ பொறுமையின்றி அற்ப இன்பத்திற்காக விளையாடி, ஊர்சுற்றித் திரிந்தீர்கள் அதனால் உங்களுக்கு அழகான சிற்பமாக வரமுடியவில்லை.

சிற்பியின் உளிக் கொத்துகளை தாங்கி உடையாது பொறுமை காத்த கருங்கல்லானது அழகான உருவமாகி வணக்கத்திற்குரிய தெய்வமாக தினமும் தூபம் தீபம் அபிழ்ஷேகம் பெறுவதுபோல்; ஆசிரியரின் உபதேசங்களை பொறுமையாக கேட்டு ஆர்வமாக படித்தவன் வித்தகனாகி படித்தோர் அவையில் முன்னிருந்து பலபேர் போற்ற சுக வாழ்வு வாழ்கின்றான்

சிற்பியின் உளிக் கொத்தைத் தாங்காது பொறுமை இழந்து உடைந்த கல்லானது படிக்கல்லாகவும், தேங்காய் உடைக்கும் கல்லாகவும் மாறி தினமும் உதையும், உழக்கும், அடியும் வாங்குகின்றன. ஆசிரியரின் உபதேசங்களை பொறுமையாக கேட்டு படிக்காதவர்களும், நொண்டிச் சாட்டு பல கூறி படிப்பிற்கு ஆப்பு வைத்தவர்களும் தினமும் கூலி வேலை செய்து கஷ்டப்டுகின்றனர்

இங்கே ”இளமையில் கல்”.  கல்லதவன் கல்லு என்ற ஔவையின் கூற்று நிஜமாகியுள்ளது.

நன்றி

பணிப்புலம்.கொம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS