Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும் சமயநெறி சபரிமலை யாத்திரையும் மகர மண்டல விரதமும் - யாத்திரைப் படங்கள் இணைப்பு

சபரிமலை யாத்திரையும் மகர மண்டல விரதமும் - யாத்திரைப் படங்கள் இணைப்பு

E-mail Print PDF

 

சபரிமலை ஐயப்பன் ஆலயம்

சபரி மலை யாத்திரை:

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்  ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

"நோன்பிருந்து,  புலன் அடக்கி   உள் அன்போடு ஐயனை அழைத்தால்
அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து "

சபரிமலை ஆலயம்: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. பெரும்பான்மையான யாத்திரிகர்கள் இன, மத பாகுபாடு இன்றி விரும்பிச் சென்று பிறவிப்பிணி போக்கும் ஐயனை தரிசித்து முக்தி என்னும் பெரும் பேற்றை நாடி வந்து கூடும் ஒரு முக்கிய தலமாக திகழ்கின்றது.

சபரிமலை செல்லும் பாதை அரண்யத்தின் இடையில் அமைந்திருப்பதால் அங்கு செல்வது கடினமாக இருந்தாலும், ஐயப்பசாமிமார்கள் நோன்பிருந்து துளசி, உருத்திராக்க மாலை அணிந்து, ஐயனை வேண்டி ஐயப்ப சரணங்கள் சொல்லிக்கொண்டு மிக ஆனந்தமாக கடந்து செல்கிறார்கள்

ஐயப்பன் சபரிமலையில் பிரமச்சாரியாக யோக முத்திரையில் அமர்ந்திருப்பதினால்; ஆண்களே பெரும்பாலும் தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் "மாளிகாபுரம்" என்று அழைக்கப்படும் பெண் பக்தர்கள் 10வயதிற்கு உட்பட்ட சிறுமிகளாக அல்லது 50 வயதைத் தாண்டிய பெண்களாக இருப்போரும் தரிசிக்கச் செல்கின்றார்கள்.

மாலை அணிதல்:

சபரிமலையில் கார்த்திகை (தமிழ்)முதலாம் திகதி மண்டல காலம் ஆரம்பமாகும். அன்று முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டலகாலம் எனப்படும். 41வது நாள் மண்டலபூஜை நடக்கும். சபரி மலைக்கு யாத்திரை சென்று சபரிமலை நாதனையும், மகர ஜோதியையும் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் மாலை அணிந்து கொள்கிறார்கள்.

 

ஹரிஹர சுதனான ஐயப்பனைக்காண அணியும் மாலை: இம் மாலை மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி மாலையாக அல்லது பரமசிவனுக்கான உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாக பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினையும் இணைத்து; பலமுறை (7-முறையாவது) முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதைவழியாக சபரிநாதனச் தரிசித்து வந்த ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும்.

மாலை அணிந்து கொண்டவர் பொருளாதார ரீதியாகவும் வயதிலும் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் அவரையும் மற்றவர்கள் 'சாமி, சாமி' என்று மரியாதையாக அழைத்து சரணம் சொல்லி வணங்குகிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்து, வணங்கும் கலாச்சாரம் இங்குதான் ஆரம்பமாகின்றது.

எல்லோரையும் ஐயப்பனாகவே காண்கிறார்கள். சபரிமலை யாத்திரை செல்லும்போது இருமுடி அணிந்து செல்வார்கள்.

"இருமுடி" என்பது, இரண்டு முடிச்சுகளாகும். அதன் ஒரு முடிச்சில் இறைவனை அபிழ்ஷேகித்து பூஜிப்பதற்காக; உரித்த தேங்காயில் பெரிய கண்ணை துளையிட்டு அதனுள் இருக்கும் இளநீரை வெளியேற்றிய பின் அதனுள் சுத்தமான பசு நெய் நிரப்பி ஒழுகாது இருப்பதற்காக மெழுகினால் முத்திரையிடப்பெற்ற தேங்காயும்,  அபிழ்ஷேகத் திரவியங்களும் இருக்கும். தேங்காயாகிய முக்கண்ணன்) சிவனுக்குள்  நெய்யாகிய நாராயணமூர்த்தி நிறைந்திருப்பதனால், நெய் நிரப்பிய தேங்காய் ஹரிஹர புத்திரன் ஐயப்பனைக் குறிக்கின்றது.

மற்றைய முடிச்சில் யாத்திரையின் போது பாவிப்பதற்கான பாவனைப் பொருள்கள் இருக்கும். இவை யாத்திரையின் இறுதியில் தீர்ந்துவிட எஞ்சி இருப்பது சிவனுக்குள் நிறைந்திருக்கும் நாராயணமூர்த்தியின் வடிவமான ஐயப்பன் மட்டுமே.

இவ்வுலகில் இன்பம் போன்ற துன்பத்தை கொடுத்து நிலையான பேரின்பத்தை அடைய தடையாக இருக்கும், மும்மலங்களை எப்பொழுது ஆன்மா விட்டு விலகி நிற்கின்றதோ அப்பொழுது இறைவனை காணலாம் என உணர்த்துவதாகும். வேறு விதமாக கூறின் முன்முடிச்சு இறைவனை நாடிச் செல்ல பின்முடிச்சு கன்மவினைகளினால் பின்நோக்கி இழுக்கின்றது. எப்பொழுது பின்முடிச்சு அனுபவித்து வெறுமையாகின்றதோ அப்பொழுது இறைவனை அடையலாம் என்பதை உணர்துவதாக அமைகின்றது. 

இருமுடி கட்டும் முறை: நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் நெய் நிரப்பிய தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகிய பூசைப் பொருட்களை வைக்க வேண்டும்.

பின் முடியில் தனக்கு தேவையான உணவுப் பொருள்களை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாலை அணிந்து இருமுடிதாங்கிச செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாத்திரம்; ஐம்பொன் தடு பதித்த 18 சித்திகள் நல்கும் 18படிகளினால் ஏறி ஐயப்ப தரிசனம் பெற முடியும்.

மாலை அணியாது சபரிநாதரை  தரிசிக்க செல்வோர் அவர்களுக்கென தனியாக அமைக்கப் பெற்ற தனிப்பாதை வழியாக சென்று ஐயப்ப தரிசனம் பெற ஒழுங்குகள் செய்யப் பெற்றுள்ளன. மாலை அணிந்து சபரிமளை செல்லும் சுவாமிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்,  இக்கட்டுரையின் இறுதிப் பாகத்தில் தரப்பெற்றுள்ளன்.

சபரிமலை யாத்திரைப் பலன்கள்:
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம்

வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து இருந்து, பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

எருமேலி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும்.

ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன.

வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதாநதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன.

அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன.

இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்.

சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை. ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்பாதையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன.

சபரிமலை யாத்திரையின்போது சாதி, சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை.

ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள். இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடாத்திக் காட்டப்படுகிறது. நல்லவைகளையே செய்து நல்லவைகளையே நினைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற தாரக மந்திர சக்தியுடன் பக்தர் பெருவெள்ளம் பரம்பொருளை உணர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் அறப்போர்க்களமே ஐயப்ப சுவாமியின் சபரிமலை யாத்திரை என்றால் மிகையாகாது.

இந்த யாத்திரையின்போது வாழ்வின் பல்வேறு துறையிலிருப்பவர்களும், பலவிடங்களில வசிப்பவர்களும், பல திறத்தவரும், பல குணத்தவரும், ஓரிடத்தில் வந்து ஒன்று கூடுகின்றார்கள். ஒருவரோடொருவர் மனம் விட்டு பேசிப் பழகுகிறார்கள். இதன் பயனாக கூச்ச மனப்பான்மையுள்ளவர்களுக்கு மனக்கூச்சம் விலகி மனத்தெளிவு பிறக்கிறது. மனப்பயம் நீங்கி தைரியமும் மன உறுதியும் ஏற்படுகின்றன. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் உயர்வுள்ளம் பெறுகிறார்கள். எல்லோரையும் போலவே நாமும் நம்மை போலவே எல்லோரும் என்ற உணர்ந்து உறுதி பெறுகின்றார்கள்.

இப் பூவுலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஐயப்பனு்க்கு பல ஆலயங்கள் இருந்த போதிலும்; இந்தியாவின் மேற்குத் தொடர் மலையில் ஐயப்பனின் முக்கியமான கோயிகள் அமைந்துள்ளன.

 

ஏழு சிரஞ்ஜீவிகளில் (பலி, வியாஸர், ஹநுமான், விபீணஷனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா) ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.

"குழத்துப்புழா" ஆலயத்தில் ஐயன் குழந்தை வடிவில் பாலசாஸ்தா ஆகவும்,
"ஆரியங்காவு" ஆலயத்தில் மனைவியுடன் கிரகஸ்தராகவும்,
"அச்சங்கோவிலில்" பூரணா, புஷ்கலை என்ற இரு மனைவியருடன் கல்யாண வரதசாஸ்தாவாகவும்,
"சபரிமலையில்" மானிடரை உய்விக்கும் தவக்கோலத்தில் யோக முத்திரையுடன் தர்மசாஸ்தாவாகவும் காட்சி தருகின்றர்.

முருபெருமானுக்கு விஷேசமாக ஆறு  படை வீடுகள் இருப்பது போல் அவன் தம்பி ஐயப்பருக்கும்  நான்கு படை வீடுகள் உள்ளன.

ஐந்தாவது படைவீடாக அமைந்ததுதான் காந்தமலை. இங்கு சாதாரண மானிடர்களால் வளிபட முடியாது. தேவர்களாலும் முனிவர்களாலும் தான் காந்தமலையில் வழிபட இயலும் என்பது ஐதீகம்.

குளத்துப்புழா ஆலயம்: கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய நதிக்கரையில் அமைந்திருக்கின்ற ஓர் ஊர்தான் குழத்துப்புழா. இந்த ஆலயத்தில் ஐயன் குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றார். இந்த ஆலயத்திற்கு அருகில் கல்லடையாறு என்னும் புனித நதி ஓடுகின்றது.

பாலகனாக ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டுத் துண்டாக உடைபட்ட கற்சிலைதான் இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது. அவை பூஜை நேரங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, பூஜை முடிந்ததும் பழையபடி எட்டுத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவதும் தற்போது வழக்கமாக இருக்கிறது. இப்போதுள்ள இவ் ஆலயம்; கொட்டாரக்கரா என்ற பகுதியை ஆண்ட மன்னரால் உருவாக்கப்பட்டது. இந்த மன்னன் ஒரு சமயம் இந்த காட்டுப்பகுதிக்கு வந்தபோது, அவருடன் வந்த பணியாளர்கள் உணவு சமைப்பதற்காக , மூன்று கற்களை எடுத்து அடுப்பு தயாரித்தனர். அதில் ஒரு கல் மட்டும் சற்று பெரியதாக இருக்கவே கல்லை உடைத்து சிறிதாக்க எண்ணி, அவர்கள் அங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த பெரிய உருவ அமைப்பு கொண்ட கல் ஒன்றை எடுத்து அக் கல்லின் மீது போட்டு உடைத்தனர். ஆனால் உடைந்தது கல் அல்ல; அவர்கள் எடுத்துப் போட்ட அந்த உருவம் கொண்ட கல்தான். அப்போதுதான் அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது. உடைபட்ட அந்தக் கல் எட்டுத் துண்டுகளாக சிதறி அதிலிருந்து ரத்தம் கொட்டத் துவங்கியது. மன்னரும் அவருடன் வந்தவர்களும் பதறிப் போயினர்.

உடைபட்ட அந்தக் கல் ஐயப்பன் விக்ரகம் என்றும்; அந்த இடத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் ஒன்று இருந்தது என்றும் தெரிய வந்தது. மிகப் பெரிய தீங்கை இழைத்து விட்டோமே என்று மன்னர் வருந்த, அதற்குப் பரிகாரமாக அதே இடத்தில் கோவில் ஒன்றை நிறுவினால் போதும் என்று நம்பூதிரிகள் சொல்ல, அதன்படி மன்னர் கட்டிய கோவில்தான் இப்போது இருக்கிறது.

குளத்துப்புழா கோவிலுக்கு அருகில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது கல்லடையாறு. இந்த ஆற்றிற்கும் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஆற்றில் சில மீன்கள் உண்டு. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மீன்களுக்கு பொரி போடுவது ஒருவித வழிபாடாகவே இருக்கிறது. இங்குள்ள மீன்கள் மச்சகன்னி எனப்படும் கடல் கன்னியின் வழி வந்தவைகளாகும். புராண காலத்தில் மச்சக்கன்னி இங்குள்ள பாலகன் ஐயப்பன் மீது மையல் கொண்டு அவனையே மணம் முடிப்பேன் என்று பிடிவாதமாக இங்கு வந்தாளாம். அவளை மணம் முடிக்க மறுத்து விட்ட ஐயப்பன், பின்னர் அவளது வேண்டுகோளுக்கு இணங்க, அந்தக் கல்லடை ஆற்றிலேயே இருந்து கொள்ள அனுமதி அளித்தார். மச்சக் கன்னி தனது தோழிகளுடன் மீன்களாக இந்த ஆற்றில் இருக்கிறாள் என்பது ஐதிகம். தோல் நோய் உள்ளவர்கள் இங்குள்ள மீன்களுக்கு உணவிட்டால் நோய் தீரும் என்பது ஐதிகம்.

ஆரியங்காவு ஆலயம்: தமிழகம் மற்றும் கேரளத்தின் மிகச்சரியான எல்லையில் அமைந்திருக்கிறது ஆரியங்காவு.  இந்தக் கோவிலில் ஐயப்பன், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற நிலையில் வீற்றிருக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பன், மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் காட்சி தருகிறார்.

இங்குதான் ஐயப்பனை திருமணம்செய்ய விரும்பிய மதுரையச் சேர்ந்த பிராமண குலப்பெண்ணான புஷ்கலாவை ஐயன் மனைவியாக ஆட்கொடார். பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு புஷ்கலா திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம், ஆரியங்காவுதான்.

இந்த வைபவம் இத் தலத்தில் ஆண்டுதோறும் மார்கழி 9ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் திருக்கல்யாண வைபவமாக நடக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வைபவம் நிஜ திருமணம் போல, எல்லா சம்பிரதாயங்களையும் கொண்ட வகையில் விருந்து உட்பட நடக்கும்.

அச்சன் கோவில்ஆலயம்: தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை அண்மித்து அமைந்துள்ள கேரள மலைப்பகுதி. ஐயப்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அரசனாக ஐயப்பன் இங்குதான் வீற்றிருக்கிறார்.  இக் கோவிலில் பூர்ண, புஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார்.  பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கபட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டு படிகள் உண்டு.  இக்கோவிலின் சிறப்பு ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலை என்ற எழுத்துகள் உண்டு. இந்த வாளின் சிறப்பு அம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான். இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

இங்குள்ள சுவாமி தீர்த்தம் பாம்புகடிக்கு அருமருந்தாகும். இத்தலத்தைச் சுற்றி பாம்பு கடித்து இறந்தவர்கள் யாரும் இல்லையாம். ஐயன் விக்ரகத்தின் முன் தினமும் தீர்த்தம் வைக்கப்பட்டிருக்கும். யாருக்கேனும் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் நடை திறக்கப்பட்டு இந்தத் தீர்த்தம் கடிபட்டவருக்குக் கொடுக்கப்படுகிறது.

புண்ணியம் நல்கும் சபரிமலை யாத்திரை:
உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் தேசத்திலிருந்து புறப்பட்டு எருமேலி என்ற இடத்தில் வந்து கூடுவார்கள். பக்தர்களின் கணக்கற்ற வருகை எருமேலி இன்று ஜன நெரிசல் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இங்கு ஒரு சாஸ்தா ஆலயம் உண்டு


ஆலயத்திலிருந்து சுமார் 1 /2 மைல் வடகிழக்கில் எருமேலி பேட்டைக் களமாகும். இங்கு ஐயன் ஐயப்பனின் அருமை நண்பரான வாவரின் ஆலயமும் பேட்டை சாஸ்தாவின் பிரதிஷ்டையுள்ள சிறுகோயிலும் உண்டு. இந்த ஆலயங்களைச் சுற்றி அநேகம் இஸ்லாமிய அன்பர்கள் குடியிருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் வாவர் ஆலயத்தில் கொடியேற்றப்படும்.

எருமேலி
எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி கடைவீதியின் நடுமையத்தில் வாவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஹரிஹர புத்திரரான ஸ்ரீ தர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் (தங்கும் கூடாரம்) போடாமல் செல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப்பொடிகள் பூசி வாவரை வணங்கி, பேட்டை துள்ளி பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.

பேரூர்த்தோடு
இது மிகவும் புராதனமான முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலாகும். கிழக்கு முகமாக நாம் துவங்கிய வனயாத்திரையில் இளைப்பாற சிறந்த இடம் இந்தப் பேரூர்த்தோடாகும். எருமேலியிலிருந்து இரண்டு மைல் தூரமுள்ள இந்தப் பேரூர்த்தோடு கானகத்தையும், கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது.
வனயாத்திரையில் ஸ்ரீதர்ம சாஸ்தா இந்த பேரூர்த்தோடில் குளித்து இளைப்பாறியதாகக் கூறப்படுகின்றது. யாத்திரை மேற்கொண்டுள்ள ஐயப்பன்மார் இத்தோடில் குளித்து மலர், அரிசிப்பொரி இவற்றை வாய்க்காலில் உள்ள மீன்களுக்கு தூவி தமது பக்தியை வெளிப்படுத்துவர்.   இந்த இடத்திலிருந்து அரசாங்கத்தின் விலையுயர்ந்த தேக்கு தோட்டம் ஆரம்பமாகும். பேரூர்த்தோடை அடையும் இடம் வரை உள்ள ஸ்தலத்திற்கு கோட்டைப்படி என்று பெயர்.

கோட்டைப்படி
கோட்டைப்படியைக் கடந்தால் அங்கிருந்து தொடங்கும் இடம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் என்றழைக்கப்படும். ஆகையால் அங்கு இரண்டு இலைகளைப் பறித்து வழிபாடு செய்த பிறகுதான் கடந்து செல்ல வேண்டும். கோட்டைப்படி என்பது கோஷ்டஸ்தானம் என்ற அர்த்தத்திலிருந்து இந்த கோட்டைப்படி என்ற சொல் தோன்றியுள்ளது.

காளைக(கெ)ட்டி
கோட்டைப்படி கடந்தால் அடுத்த முக்கிய இடம் காளைகெட்டியாகும். எருமேலியிலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ளது இந்தக் காளைகெட்டி என்ற இடமாகும். காளைகெட்டி ஒரு அழகு மிகுந்த வனப்பிரதேசமாகும். இங்கு மஹிஷியை வதம் செய்த ஐயப்பன் அவளைத் தனது காலால் மர்த்தனம் செய்யும் காட்சியை காணவந்த கைலாயவாசன் தனது வாகனமான காளையை இந்த இடத்தில் கட்டியதால் இந்த இடத்திற்கு காளைகெட்டி என்ற பெயர் ஏற்பட்டதாய் கூறப்படுகின்றது.

அழுதாநதி
காளைகட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் கிழக்காக நடந்தால் அழுதாநதி என்ற இடத்தை அடையலாம். இந்த அழுதாநதி தொடர்ச்சியாகப் பாய்ந்து பம்பாநதியில் கலக்கின்றது. இந்த அழுதாநதியில் குளித்து மூழ்கும்போது நம் கையில் கிடைக்கும் சிறு கல்லை மடியில் கட்டிக் கொண்டு அதை மிகவும் கவனமாய் நாம் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போடவேண்டும்.

அழுதாமேடும் கல்லிடும் குன்றும்
அழுதையிலிருந்து நடக்க ஆரம்பிக்கும் ஐயப்பன்மார்களுக்கு இரண்டு மைல் செங்குத்தான மலையேற்றம் எதிர்படும். இதைத்தான் அழுதையேற்றம் என்று சொல்வார்கள். இதைவிட கடினமான ஏற்றம் வேறு ஏதுமில்லை என்று கூறவவேண்டும்.
பக்தர்களான வயோதிகர்களும், குழந்தைகளும் ஐயனின் கருணையினால் சிரமப்படாமல் ஏறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஒவ்வொருவருடைய இருதய சுத்தியையும், பாப சக்தியையும் அளக்கும் இடமாகும். ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் கொண்டு வந்த கல்லை அழுதாமேட்டின் முடிவில் ஒரு பக்கமாக இருக்கும் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போட்டு வணங்க வேண்டும்.
அழுதா ஆற்றில் இருந்து தேவர்களால் எறியப்பட்ட கற்கள் மஹிஷியின் பூதவுடலை மறைத்த இடம் இது என்றும் அந்த குன்றை கல்லிடும் குன்று என்றழைத்து பயபக்தியுடன் வணங்குவார்கள்.

இஞ்சிப்பார கோட்டம்
அழுதை ஏற்றத்தின் கடினம் இந்த இடத்தை அடையும்போது எதிர்படும் சிறுவாய்க்காலுடன் முடிவடைகிறது. வாய்க்கால் என்றாலும் இங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். ஆயினும் இதை ஒரு இளைப்பாறும் கட்டமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு கோட்டைப்படி சாஸ்தாவை நினைத்து பூஜைகள் நிகழ்த்துவது வழக்கம்.

தாவளங்களையும் கோட்டைகளையும் பற்றிய விபரங்கள்
இஞ்சிப்பார கோட்டையில் இருந்து கிழக்காக நடந்தால் கரிமலை வரும் கரிமலை உச்சியும் ஒரு இளைப்பாறச் சிறந்த தாவளமாகும். ஆக மொத்தம் ஏழுகோட்டைகளும் அவற்றில் ஏழு தாவளங்களும், சபரிமலை யாத்திரீர்களின் இளைப்பாறும் கேந்திரங்களாகும்.

எருமேலி, கோட்டைப்படி, காளைகட்டி, இஞ்சிப்பார கோட்டைக் கோட்டை, உடும்பாரமலை, கரிமலைத் தோட்டம், கரிமலை உச்சி, பம்பையாற்றங்கரை, சன்னிதானம் போன்ற இடங்களில் மட்டும் தாவளங்களடித்து இளைப்பாற சிறந்த இடங்களாகத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

மேற்கூறப்பட்டுள்ள கோட்டைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை உண்டு. ஆகையால்தான் ஒவ்வொரு கோட்டையைத் தாண்டும்போதும் கானகத்தில் நமக்கு துணை புரியும்.

கரிமலைத்தோடு தீரம்
கரிமலை ஏற்றம் ஏறுவதற்கு முன்பு ஆகாராதிகள் தயார் செய்யவும், சற்று இளைப்பாறவும் தகுதியுள்ள இடமாகும். இந்த கரிமலைத்தோடு தீரம். தங்குவதற்கு சற்று வசதிக்குறவு என்றாலும், தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதால் பக்தர்கள் இங்கு கூடி சற்று இளைப்பாறுகின்றார்கள்.

கரிமலை ஏற்றம்
இளைப்பாறி முடிந்ததும் உடன் நடந்தால் செங்குத்தான கரிமலை ஏற்றம் தான். கரிமலை ஏற்றத்தைப் போன்ற கடினமான ஏற்றம் சபரிமலை யாத்திரையில் வேறு கிடையாது என்று பல பழமக்கார சுவாமிகள் கூறுவது வழக்கம். கரிமலை ஏற்றத்தைக் காட்டிலும் கரிமலை இறக்கம் மிகவும் கடினம். எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு இறக்கம் உண்டு.

மரங்களின் வேர், பெரிய, சிறிய பாறைகள் இவற்றின் மீது அதிகவனமாக இறங்க வேண்டும். இந்த இறக்கம் இறங்கும்போது, பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என்ற இடங்கள் எதிர்ப்படும். இங்கு சிறு வாய்க்கால்களில் பளிங்கு போன்ற நீர் சலசலத்தோடும். யானைகள் கூட்டமாய் வந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் இடம் என்பதால் இருட்டு வேளைகளில் தனியாக இந்த இடத்தைக் கடக்க மாட்டார்கள். இந்த இடத்தை கடந்து சிறிய தூரம் சென்றால் பம்பாநதியைக் காணலாம்.

புண்ணிய பம்பாநதி

பம்பாஸ-கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தஷிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு. அநேக வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப்பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரை புரண்டோடும் பம்பையின் ஜலப்ரவாஹம் நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும்.

பம்பாஸத்தியும் குருதட்சணையும்
கங்கை நதிக்கொப்பான புனித பம்பையில் நீராடி பாவங்களைந்து புனிதராய் ஐயப்பன்மார் தமது விரியில் குருசாமி எல்லோருடைய இருமுடிகளின் பின்முடிகளைப் பிரித்து அதிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து உணவு தயாரிப்பார்கள். இதனை பம்பாஸத்தி என்று அழைப்பார்கள்.  இங்கு கன்னி ஐயப்பன்மார்களிடம் தட்டு கொடுத்து 108 அடுப்புகளில் இருந்து சாம்பல் எடுக்கப்பட்டு அதனை வஸ்திரகாயம் செய்து கொண்டு வரும்படி குருசாமி கூறுவார்.
இச்சாம்பலை பூஜையின்போது விபூதியாக உபயோகிப்பது வழக்கம். அதன்பின் இருமுடிகளை கட்டி ஒன்றாக வைத்து உணவுகளை இலையில் இருமுடிகளுக்கு முன்வைத்து நைவேத்தியம் செய்து பஜனை, பூஜைகள் செய்து முதலில் கன்னி ஐயப்பன்மார்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த விருந்தில் சாஷாத் ஐயப்ப சுவாமியே கலந்து கொண்டு தங்களுடன் உணவருந்த வருவார் என்பது கருதப்படுகின்றது.

பம்பா விளக்கு
பம்பாஸத்தி முடிந்த மாலை நேரத்தில் பம்பா விளக்கினை சிறு மூங்கல், மெழுகுவர்த்திகள் கொண்டு அவரவர் கைவண்ணத்தில் தமது குழுவினராக  தமது தோளில் சுமந்து சென்று பம்பா விளக்கே சரணமய்யப்பா என்று சரணகோஷத்துடன் பம்பையாற்றில் விடுவர்.

நீலிமலையும் அப்பாச்சிமேடும் அப்பாச்சிக் குழியும்
பம்பையிலிருந்து புறப்பட வருவது நீலிமலையாகும். நீலிமலை சற்று கடினமாகவே இருக்கும் ஏனென்றால் அது மிகவும் செங்குத்தாக இருக்கும். மலை ஏற்றம் முடியும் இடத்திற்கு அப்பாச்சிமேடு என்று பெயர். அப்பாச்சிமேடு வந்தவுடன் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளிற்கு வெல்லக்கட்டி இட்டு வணங்க வேண்டும் கடூரவனையும், துர்தேவதைகளையும் திருப்பதிப்படுத்த வேண்டி இச்சடங்குகள்  நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

நீலிமலையில் சுப்பிரமணியர் பாதை: ஐயப்பன் வாசம் செய்யும் சபரியை அடையும் முன்பு கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு நாம் ஏறும் மூன்றாவது மலை இது. நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்ததாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை' என்பர்.

இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது

சபரிபீடம்
அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.

மதங்க முனிவர் என்னும் முனிவர்; மதங்கொண்ட ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்து தவத்தின் வலிமையால் தனது சீடர்களுடன் பிரமலோகம் செல்லும் பாக்கியம் பெற தவம் செய்த இடம் இதுதான்.

மதங்க முனிவரின் முதல் சீடரான "சபரி" மதங்க முனிவரோடு பிரமலோகம் செலும் பாக்கியம் கிடைத்தும் இராமபிரான் மீது கொண்ட பக்தியால் அவரைப்  பூலோகத்தில் பூசிப்பதற்கும் அதன் பின்னர் பிரமலோகம் செல்வதற்கும் பிரமதேவனிடம் வரத்தினைப்  பெற்றுக் கொண்டு தவம் செய்து இராமபிரானைச் தரிசித்த இடமும் இதுதான்.

இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்... ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம்.

அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.

இந்த இடத்தில் இராமபிராணைக் காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தது. இச்சபரிபீடத்தில் விடல் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள் இந்த ஸ்ரீ சபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.

யானைப்பாதை
நீலிமலை உச்சியில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்கின்றனர். சபரிபீடத்தை அடுத்து வருவது சரங்குத்தி. இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரக்கத்திகளை போட்டு வழிபடுகின்றனர்.

சரங்குத்தி ஆல்
சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதிஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டுவந்த சரத்தை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்க வேண்டும்.

சபரிமலை ஐயப்பன்
சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுபபி மனம் உற்சாகமாகிறது. சரங்குத்தியிலிருந்தே ஐயப்பனின் நான்காவது மலையான சபரிமலை ஆரம்பமாகிறது. நெருங்க நெருங்க "சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது. சன்னிதானத்தை அடைந்ததும், பதினெட்டாம் படியை நெருங்கியவுடன் கருப்பசாமி, கடுத்தசாமியை வணங்கி வலது பக்கத்தில் தேங்காயை உடைத்து விட்டு படியேற வேண்டும்.

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.

மூலஸ்தானம்
கொடிமரம் தாண்டியவுடன் உள்ள சன்னதியில் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை' காட்டுகிறார். "சித்' என்றால் "அறிவு'. இந்த வார்த்தையே "சின்' என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.

நாம் உய்யும் வழியை காட்டுவதுதான் சின்முத்திரை. கட்டைவிரலை ஆள்காட்டிவிரல் வளைந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. மற்றைய மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கின்றது.

இங்கே கட்டைவிரல் இறைவனாகவும், ஆள்காட்டிவிரல் ஆன்மாவாகவும், மற்றைய மூன்று விரல்களும் மும்மலங்கள் என்றழைக்கப்ப்டும் ஆணவம், கன்மம், மாயையாக ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதுவும் பெருவிரல் இறைவனாக வேறு இடத்தில் அமைந்திருக்க மற்றைய நான்கு விரல்களும் ஒன்றாக அமைந்துள்ளன. எப்பொழுது ஆள்காட்டிவிலான ஆன்மா தன்னைப் பீடித்துள்ள மும்மலங்களை விலக்கி இறைவனாகிய கட்டைவிரலுடன் இணைகின்றதோ அதுவே முக்தி என சின்முத்திரை உணர்த்துகிறது.  நாம் எடுத்த பிறவியின் நோக்கமே அதுதான். அதைத்தான் ஐயப்ப்ரும், அவருடைய தந்தையாகிய தெட்சனாமூர்த்தியும் தமது வலது கரத்தால் உணர்த்துகிறார்கள்.

"மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம், மாயை (உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்...
மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,''என்கிறார். யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம்' என்பர்.

கோயில் அமைப்பு
பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் "தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். "ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை. காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை.

உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு'' என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.

நெய் அபிஷேகம்
ஐயப்பனை வணங்கி விட்டு கணபதி, நாகரை வணங்க வேண்டும். இருமுடியில் உள்ள நெய் தேங்காயை உடைத்து அதிலிருக்கும் நெய்யை ஐயப்பனின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

உடைத்த தேங்காயின் ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் போட்டு விட வேண்டும். எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.

மஞ்சமாதா (மாளிகைபுறத் அம்மை)

ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா தனிச் சன்னதியில் அருளுகிறாள். இங்குள்ள மணிமண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.
இவளது சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.

மாளிகைப்புறமும் மலைநடை பகவதியும்
மாளிகைப்புறத்தம்மனின் சன்னதி சாஸ்தா ப்ரதிஷ்டைக்கு வடக்காக சற்று தூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ருஷ்டி, ஸ்துதி ஸம்ஹார காரிணியாக பராசக்தியாக விளங்கும் மாளிகைப்புறத்தமனைத் தரிசிப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆகையால் திரிசூலம், விளக்கு, போன்றவைகளில் ஆவஹித்து அம்மனை வழிபடுகின்றார்கள். இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது.

இங்கு நடையில் பக்தர்கள் தேங்காய் உருட்டியும், மஞ்சள் பொடி தூவியும் அம்மனுக்கு ரவிக்கை துண்டு கொடுத்தும் வெடிவழிபாடு நடத்தியும் கும்பிடுவது வழக்கம். மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.

கற்பூர ஆழி
சன்னிதானத்தில் பலிக்கல்லின் அருகில் தரையில் கற்பூரம் எரிந்து கொண்டே இருக்கும் இதைத்தான் கற்பூர ஆழி என்று சொல்வார்கள். ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் கைவசம் தாராளமாய் வைத்திருக்கும் கற்ப+ரங்களை கற்பூர ஆழியில் இட்டு வணங்குவார்கள்.
மற்றுமுள்ள சுவாமிகள்
சபரிமலை சன்னிதானத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கடுத்த சுவாமி, கருப்பண்ண சுவாமி, வாவர் சுவாமி என்ற மூன்று சுவாமி நடையுண்டு.

வாபர் வழிபாடு:
ஐயப்பன் கோயில் 18ம் படிக்குகீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.

ஜோதி தரிசனம்
தைமாதம் முதலாம் நாள் மாலை சபரிமலை சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள திசையில் உள்ள காந்தமலை உச்சியில் மாலை 6.30 மணிமுதல் 6.45 மணிவரைக்குள் ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பா சுவாமி ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.

ஹரிகரன்சுதன் ஸ்ரீ ஐயப்பர் அவதாரம் பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்துக


சபரிமலை யாத்திரையின்போது தரிசிக்கும் இடங்களை

பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பதினெட்டு மலைகளே பதினெட்டு படிகள்

1 காலகெட்டிமலை
2 இன்சிபாறைக்கோட்டை
3 புதுச்சேரிக்கணம்
4 கரிமலை
5 நீலிமலை
6 கௌண்டர்மலை
7 பொன்னம்பலமேடு
8 சித்தம்பலமேடு
9 மயிலாடும் மேடு
10 தலப்பரமலை
11 நிலாக்கல்மேடு
12 தேவர்மலை
13 ஸ்ரீபாதமலை
14 காட்கிமலை
15 மாதங்கமலை
16 சுந்தரமலை
17 நாகமலை
18 சபரிமலை
இந்த பதினெட்டு மலைகளும் பதினெட்டு படிகளையும் குறிப்பதாக ஐதிகம்.


வழிநடை சரண மந்திரம்:

சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் போது வழியில் சொல்ல வேண்டிய சரண மந்திரங்கள் தரப்பட்டுள்ளது.

சாமியே ஐயப்பா  ஐயப்பா சாமியே
பள்ளிக்கட்டு  சபரிமலைக்கு
சபரிமலைக்கு  பள்ளிக்கட்டு
கற்பூரஜோதி  சுவாமிக்கே
பகவானே  பகவதியே
பகவதியே  பகவானே
தேவனே  தேவியே
தேவியே  தேவனே
ஈஸ்வரனே  ஈஸ்வரியே
ஐயப்பபாதம்  சாமிபாதம்
சாமிபாதம்  ஐயப்பபாதம்
பாத பலம் தா  தேக பலம் தா
தேக பலம் தா  பாத பலம் தா
வில்லாளி வீரனே  வீர மணிகண்டனே
வீரமணி கண்டனே  வில்லாளி வீரனே
பகவான் சரணம்  பகவதி சரணம்
பகவதி சரணம்  பகவான் சரணம்
தேவன் சரணம்  தேவி சரணம்
தேவி சரணம்  தேவன் சரணம்
தாங்கி விடப்பா  ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா  தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா  ஏற்றி விடப்பா
ஏற்றி விடப்பா  தூக்கி விடப்பா
கல்லும் முள்ளும்  காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை  கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம்  சுவாமிக்கே
சுவாமிக்கே  நெய் அபிஷேகம்

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம் வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே -
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்
சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:


மாலை கழற்றும் மந்திரம்:
அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு ணித்ராத் மகாதேவ
தேஹமே விரத விமோசனம்

சுவாமியே சரணம் ஐயப்பா

அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!
உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!
ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!
எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!
ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!
ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!
ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!
ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!
ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!

சபரிமலை யாத்திரை

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்”

என்றார் பொய்யாமொழிப்புலவர்.

அசாதாரணத் துணிச்சல், அறிவார்ந்த செயல்பாடு ஆகியன வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பது அதன் பொருள். எண்ணியது எண்ணிய வாறு எய்த (நிகழ); எண்ணியவர் திண்ணியராக (ஒருமனதாக-ஒரே நோக்கோடு) இருத்தல் வேண்டும்.

சபரிமலை யாத்திரை; பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கம் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.

விரத முறைகள்
இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத்தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரியாத்திரை என்பதனை உலகறியும். பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.

1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டுயது இல்லை. குறைந்த பட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

2. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

3. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.

4. காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த  நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.

5. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளைத் தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

6. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

7. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது ‘‘சாமி சரணம்’’ என்று தொடங்கி பின் விடைபெறும் போது ‘‘சாமி சரணம்’’ எனச் சொல்ல வேண்டும்.

8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

9. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ‘‘ஐயப்பா’’ என்றும் பெண்களை ‘‘மாளிகைபுறம்’’ என்றும் சிறுவர்களை ‘‘மணிகண்டன்’’ என்றும் சிறுமிகளைக் ‘‘கொச்சி’’ என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

10. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் ‘‘நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம்’’ என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது ‘‘போய் வருகிறேன்’’ என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

11. மாலையணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது. சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது. மாத விலக்கானப் பெண்களைக் காணக்கூடாது. அப்படி தெரியாது காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வணங்குதல் வேண்டும்.

12. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.

13. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் ‘‘கன்னி பூஜை’’ நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.

14. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் ‘‘கன்னி ஐயப்பன்’’ என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை ‘‘பழமக்காரர்கள்’’ என்றும் அழைக்கப்படுவார்கள்.

15. இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும்       முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்துவிட்டு ‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’’ என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

16. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட திகதியிலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும்வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

17. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் விளித்துக் கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும். பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும். பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்தடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

18. ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல் நலம்  ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம்.

நீண்ட வழிப் பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் விளிப்பதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்த பக்தி உணர்ச்சியை வளர்க்கின்றது. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி வாயிற்படியில் விடலைத்தேங்காய் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஐயப்பன் திருவருளால் எல்லா நலன்களும் வாய்க்கப்பெற்று பல்லாண்டு இனிது வாழ பகவான் நாமம் துதிப்போமாக.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

1. தீட்சை வளர்த்து, பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும்.

2. மற்றவரிடம் உரையாடும்போது "சாமி சரணம்" எனத் தொடங்கி விடைபெறும் பொழுதும் சாமி சரணம் எனக் கூறவேண்டும்.

3. காலை, மாலை வேளைகளில் குளிர்ந்த நீரில் குளித்து ஐயப்பன் சரணங்கள் கூறி வணங்க வேண்டும். விசேஷ பூஜைகளை புதன், சனிக்கிழமைகளில் செய்யலாம்.

4. படுக்கை விரிப்பு, தலையணை நீக்கி சிறு துண்டை மட்டும் தரையில் விரித்துப் படுக்க வேண்டும்.

5. காலணிகள், குடை முதலிய பொருள்களை உபயோகிக்கக் கூடாது.

6. மரணம் போன்ற துக்க காரியங்களில் கண்டிப்பாக கலந்து கொள்ளக் கூடாது. சடங்கு வீடுகளுக்குச் செல்லக் கூடாது.

7. இருமுடிகட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

8. சபரிமலை பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

9. முதன்முதலாக மாலை அணிந்துள்ள கன்னிசாமிகள் மற்ற சாமிகளோடு பஜனை செய்து கன்னி பூஜை செய்ய வேண்டும்.

10. கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் செல்லுவதே நன்மை பயக்கும்.

மேலே கூறியவற்றை கவனத்தில் கொண்டு மாலையணிந்து "பொய்யின்றி, மெய்யோடு நெய்" கொண்டு சென்று ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கு ஐயப்பனின் அருள் கிடைக்கும்.

ஐயப்பனின் அருள்பெற்று இப்பிறப்பின் நோக்கத்தினை நிறைவு செய்து நலமுடன் வாழ்வோம்.

ஐயப்ப சரண கோஷங்கள்

1       ஒம் கன்னிமூல கணபதியே  - சரணம் ஐயப்பா
2       ஒம் காந்தமலை ஜோதியே - சரணம் ஐயப்பா
3       ஒம் அரிகரசுதனே - சரணம் ஐயப்பா
4       ஒம் அன்னதானப் பிரபுவே - சரணம் ஐயப்பா
5       ஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா
6       ஒம் ஆபத்தில் காப்பொனே சரணம் ஐயப்பா
7       ஒம் இன்தமிழ்ச்  சுவையே - சரணம் ஐயப்பா  
8       ஒம் இச்சை தவிர்பவனே - சரணம் ஐயப்பா
9       ஒம் ஈசனின் திருமகனே - சரணம் ஐயப்பா
10     ஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா
11     ஒம் உண்மை பரம்பொருளே - சரணம் ஐயப்பா
12     ஒம் உலகாளும் காவலனே - சரணம் ஐயப்பா
13     ஒம் ஊமைக்கு அருள்புரிந்தவனே - சரணம் ஐயப்பா
14     ஒம் ஊழ்வினை அழிப்பவனே - சரணம் ஐயப்பா
15     ஒம் எளியோர்க்கு அருள்பாவனே - சரணம் ஐயப்பா
16     ஒம் எங்கள் குலதெய்வமே - சரணம் ஐயப்பா
17     ஒம் ஏழை பங்காளனே - சரணம் ஐயப்பா
18     ஒம் ஏகாந்த மூர்த்தியே - சரணம் ஐயப்பா
19     ஒம் ஐங்கரன்  தம்பியே - சரணம் ஐயப்பா
20     ஒம் ஐயமெல்லாம் தீர்பவனே - சரணம் ஐயப்பா
21     ஒம் ஒப்பிலாத் திருமணியே - சரணம் ஐயப்பா
22     ஒம் ஒளிரும் திருவிளக்கே - சரணம் ஐயப்பா
23     ஒம் ஓங்காரப் பரம்பொருளே - சரணம் ஐயப்பா
24     ஒம் ஓதும் மறை பொருளே - சரணம் ஐயப்பா
25     ஒம் ஒளடதங்கள் அருள்பவனே - சரணம் ஐயப்பா
26     ஒம் சௌபாகியம் அளிப்பவனே - சரணம் ஐயப்பா
27     ஒம் கலியூக  வரதனே - சரணம் ஐயப்பா
28     ஒம் சபரிமலை சாஸ்தாவே - சரணம் ஐயப்பா
29     ஒம் சிவன் மால் திருமகனே - சரணம் ஐயப்பா
30     ஒம் சிவவைணவ ஐக்கியமே - சரணம் ஐயப்பா
31     ஒம் அச்சங்கோவில்கோவில் அரசே - சரணம் ஐயப்பா
32     ஒம் ஆரியங்காவு ஐயாவே - சரணம் ஐயப்பா
33     ஒம் குளத்துப் புழைப் பாலனே - சரணம் ஐயப்பா
34     ஒம் பொன்னம்பல வாசனே - சரணம் ஐயப்பா
35     ஒம் வில்லாளி வீரனே - சரணம் ஐயப்பா
36     ஒம் வீரமணி கண்டனே - சரணம் ஐயப்பா
37     ஒம் உத்திரத்தில் உதித்தவனே - சரணம் ஐயப்பா
38     ஒம் பம்பையீலே பிறந்தவனே - சரணம் ஐயப்பா
39     ஒம் பந்தள மாமணியே - சரணம் ஐயப்பா
40     ஒம் சகலகலா வல்லோனே - சரணம் ஐயப்பா
41     ஒம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே - சரணம் ஐயப்பா
42     ஒம் குருமகனின் குறைத் தீர்த்தவனே - சரணம் ஐயப்பா
43     ஒம் குரு தட்சனை அளித்தவனே - சரணம் ஐயப்பா
44     ஒம் புலிப் பாலைக் கொணர்ந்தவனே - சரணம் ஐயப்பா
45     ஒம் வன் புலியின் வாகனனே - சரணம் ஐயப்பா
46     ஒம் தாயின் நோய் தீர்த்தவனே - சரணம் ஐயப்பா
47     ஒம் குருவின் குருவே - சரணம் ஐயப்பா
48     ஒம் வாபரின் தோழனே - சரணம் ஐயப்பா
49     ஒம் துளசிமணி மார்பனே - சரணம் ஐயப்பா
50     ஒம் தூயவுள்ளம் அளிப்பவானே - சரணம் ஐயப்பா
51     ஒம் இருமுடி பிரியனே - சரணம் ஐயப்பா
52     ஒம் எரிமேலி சாஸ்தாவே - சரணம் ஐயப்பா
53     ஒம் நித்திய பிரமச்சாரியே - சரணம் ஐயப்பா
54     ஒம் நீலவச்திர தாரியே - சரணம் ஐயப்பா
55     ஒம் பேட்டை துள்ளும் பேரருளே - சரணம் ஐயப்பா 
56     ஒம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே - சரணம் ஐயப்பா
57     ஒம் சாஸ்தாவின் நந்தவன- சரணம் ஐயப்பா
59     ஒம் பேருர்தொடு தரிசனமே - சரணம் ஐயப்பா
60     ஒம் பேதமையை ஒழிப்பவனே - சரணம் ஐயப்பா
61     ஒம் காளை கட்டி நிலையமே - சரணம் ஐயப்பா
62     ஒம் அதிர்வேட்டுப் பீரியனே - சரணம் ஐயப்பா
63     ஒம் அழுதா மலை ஏற்றமே - சரணம் ஐயப்பா
64     ஒம் ஆனந்த மிகு பஜனை பீரியனே - சரணம் ஐயப்பா
65     ஒம் கல்லிடும் குன்றே - சரணம் ஐயப்பா
66     ஒம் ஊடும்பாரைக் கோட்டையே - சரணம் ஐயப்பா
67     ஒம் இஞ்சிப் பாறைக்கோட்டையே - சரணம் ஐயப்பா
68     ஒம் கரியிலந்  தோடே  - சரணம் ஐயப்பா 
69     ஒம் கரிமலை ஏற்றமே - சரணம் ஐயப்பா
70     ஒம் கரிமலை இறக்கமே - சரணம் ஐயப்பா
71     ஒம் பெரியானை வட்டமே - சரணம் ஐயப்பா
72     ஒம் சிரியானை வட்டமே - சரணம் ஐயப்பா
73     ஒம் பம்பா நதி தீர்த்தமே - சரணம் ஐயப்பா
74     ஒம் பாவமெல்லாம் அழிப்பவனே - சரணம் ஐயப்பா
75     ஒம் திருவேணி சங்கமமே - சரணம் ஐயப்பா
76     ஒம் திரு இராமர் பாதமே - சரணம் ஐயப்பா
77     ஒம் சக்தி பூஜை கொண்டவனே - சரணம் ஐயப்பா
78     ஒம் சபரிக்கு அருள் செய்தவனே - சரணம் ஐயப்பா
79     ஒம் தீப ஜோதித் திருஒளியே - சரணம் ஐயப்பா
80     ஒம் தீராத நோய் தீர்பவனே - சரணம் ஐயப்பா
81     ஒம் பம்பா விளக்கே - சரணம் ஐயப்பா
82     ஒம் பழவினைகள் ஒழிப்பவனே - சரணம் ஐயப்பா
83     ஒம் தென் புலத்தார் வழிபாடே - சரணம் ஐயப்பா
84     ஒம் திருபம்பையில் புண்ணியமே - சரணம் ஐயப்பா
85     ஒம் நீலி மலை ஏற்றமே - சரணம் ஐயப்பா
86     ஒம் நிறைவுள்ளம் தருபாவனே - சரணம் ஐயப்பா
87     ஒம் அப்பாச்சி மேடே - சரணம் ஐயப்பா
88     ஒம் இப்பாச்சிக் குழியே - சரணம் ஐயப்பா
89     ஒம் சபரி பீடமே - சரணம் ஐயப்பா
90     ஒம் சரங்கோத்தி ஆலே - சரணம் ஐயப்பா
91     ஒம் உரல் குழி தீர்த்தமே - சரணம் ஐயப்பா
92     ஒம் கருப்பண்ண சாமியே - சரணம் ஐயப்பா
93     ஒம் கடுத்த சாமியே - சரணம் ஐயப்பா
94     ஒம் பதினெட்டாம் படியே - சரணம் ஐயப்பா
95     ஒம் பகவானின் சன்னிதியே - சரணம் ஐயப்பா
96     ஒம் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே - சரணம் ஐயப்பா
97     ஒம் பரவசப் பேருணர்வே - சரணம் ஐயப்பா
98     ஒம் பசுவின் நெய் அபிஷேகமே - சரணம் ஐயப்பா
99     ஒம் கற்ப்பூரப் பீரியனே - சரணம் ஐயப்பா
100   ஒம் நகாராசப் பிரபுவே - சரணம் ஐயப்பா
101   ஒம் மாளிகைப் புரத்தம்மனே - சரணம் ஐயப்பா
102   ஒம் மஞ்சமாதா திருவருளே - சரணம் ஐயப்பா
103   ஒம் அக்கினிக் குண்டமே - சரணம் ஐயப்பா
104   ஒம் அலங்காரப் பீரியனே - சரணம் ஐயப்பா
105   ஒம் பஸ்மக் குளமே - சரணம் ஐயப்பா
106   ஒம் சற்குரு நாதனே - சரணம் ஐயப்பா
107   ஒம் மகர ஜோதியே - சரணம் ஐயப்பா
108   ஒம் மங்கள மூர்த்தியே - சரணம் ஐயப்பா


நடைவளிச் சரணம்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு பள்ளிக்கட்டு

தேவனே தேவியே
தேவியே தேவனே

ஈஸ்வரனே ஈஸ்வரியே
ஈஸ்வரியே ஈஸ்வரனே

பகவானே பகவதியே
பகவதியே பகவானே

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்

கட்டுங்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு கட்டுங்கட்டு

இருமுடிக்கட்டு சுவாமிக்கே
சுவாமிக்கே இருமுடிக்கட்டு

தேவன் பாதம் தேவி பாதம்
தேவி பாதம் தேவன் பாதம்

நெய் அபிஷெகம் சுவாமிக்கே
சுவாமிக்கே நெய் அபிஷெகம்

பாலபிஷெகம் சுவாமிக்கே
சுவாமிக்கே பாலபிஷெகம்

சுவாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் சுவாமி சரணம்

வெல்ல நெய்வேத்யம் சுவாமிக்கே
சுவாமிக்கே வெல்ல நெய்வேத்யம்

யாரோட கட்டு சுவாமியோட கட்டு
சுவாமியோட கட்டு யாரோட கட்டு

தூக்கிவிடையா ஏந்திவிடையா
ஏந்திவிடையா தூக்கிவிடையா

வில்லாளிவீரா வீரமணிகண்டா
வீரமணிகண்டா வில்லாளிவீரா

கற்பூரதீபம் சுவாமிக்கே
சுவாமிக்கே கற்பூரதீபம்

காணிப்பொன்னு சுவாமிக்கே
சுவாமிக்கே காணிப்பொன்னு

குன்றும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் குன்றும் குழியும்

சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே


ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

ஒம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், செய்த குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து, காத்து, ரட்சிக்க வேண்டும்.  ஒம் சக்தியமான பொண்ணு பதினெட்டம் படியில் வாழும், ஒம் ஹரி ஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா !


ஹரிவராஸனம்:
ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படும்போது தினமும் பாடப்படும் ஹரிவராஸன பாடல்

ஹரிவராஸனம் ஸ்வாமி விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரா ராத்ய பாதுகம்
அரிவிமர்சனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவ மாச்ரயே
1.

சரண கீர்த்தனம் ஸ்வாமி சக்தி மானஸம்
பரணலோ லுபம் ஸ்வாமி நர்த்தனாலயம்
அருண பரஸுரம் ஸ்வாமி பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
2.

ப்ரணய ஸ்தயகா ஸ்வாமி ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸ்வாமி ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
3.

துரக வாகனம் ஸ்வாமி ஸுந்த ரானனம்
வரக தாயுதம் ஸ்வாமி தேவ வர்ணிதம்
குருக்குபாசுரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
4.

த்ரி புவனார் சுதம் ஸ்வாமி தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசியம்
த்ரிதச பூஜிதம் ஸ்வாமி சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
5.

பவபயா பகம் ஸ்வாமி பாவு காவும்
புவன மோகனம் ஸ்வாமி பூதிபூஷணம்
தவன வாகனம் ஸ்வாமி திவ்ய வாகனம்
ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்ப
6.


"பூதநாதாய வித்மஹே பவபுத்திராய தீமஹி

தன்னே சாஸ்த்தா பிரசோதயாத்"

இக் கட்டுரை மூலம் பயன் பெற்றோர்:

2009/12/4 Suryaa Pathmanathan < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
சபரி மலை யாத்திரை பற்றிய கட்டுரை படங்களுடன் சபரி மலைக்குச்
சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது . பாராட்டுக்கள்
அத்துடன் டாக்டர்  குகதீபன் அவர்களின் பாரிசவாதம் நோய் பற்றிய
விளக்கமும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவருக்கும் எமது
நன்றிகள் .பனிப்புலம் .காம் எமது மக்கள் மத்தியில் மிகவும்
அவசியமான ஒன்றாக மாறி  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் சேவைக்கு எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகள்.
அன்புடன் இ.பத்மநாதன் டென்மார்க்
முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS