ஆப்பிழுத்த குரங்கு

Print


ஒரு காட்டில் குரங்கு ஒன்று தனியாக வசித்து வந்தது. அது மிகவும் குறும்புகாரக் குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குறும்புத்தனம் செய்யும்.

அந்த குரங்கு வசித்த அந்த காட்டுப் பகுதிக்குள்  ஒரு விறகு வெட்டியும் வசித்துவந்தான். அவன் மரங்களை பெரிய துண்டுகளாக வேட்டிவந்து, அவற்றை தன் குடிசை அருகே வைத்து கோடரியால் பிளந்து அடுப்பில் வைக்கக் கூடியதாக சிறு துண்டுகளாக்கி, அவற்றை பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தான். அவன் மரத்துண்டுகளைப் பிளப்பதற்க்கு ஆப்புகளைப் பாவிப்பது வழக்கம். ஆப்பு என்பது V வடிவமான மரம் அல்லது இரும்பினால் ஆன ஒரு பக்கம் ஒடுக்கமாகவும் மற்றப் பக்கம் அகலமாகவும் உள்ள ஒரு ஆயுதம்.

ஒருநாள் வழமைபோல் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். அவனுக்கு களைப்பு வந்ததால் அடிமரத்தின் பாதியளவு பிளந்திருந்த பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.

விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி மரத்தில் இறுக்கி இருந்த ஆப்பை நோக்கியவாறு அமர்ந்தது. அப்போது பிளவுபட்ட பகுதியில் அதன் வால் முழுவதும் செறிருந்தது.
குரங்கு ஆப்பை இழுக்கும் அவதானத்தில் இருந்ததால் தனது வால் மரத்துண்டின் பிளவில் போயிருப்பதை உணரவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. மரப்பிளவு இறுகாமல் செருகி இருந்த ஆப்பை தன் முழுப் பலத்தையும் பாவித்து ஆட்டி ஆட்டி எடுக்க  முயற்சி செய்த்து.

திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்ட மரத்துண்டு சுருங்கிக் கொண்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.

பாடம்: 'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

BLOG COMMENTS POWERED BY DISQUS