சாந்தை சித்தி விநாயகர் ஆலய உட்பிரக்காரத்தில் அமைந்துள்ள வேம்பும் அதன் தோற்றமும்

Print

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தின் மேற்கு பக்க உட்பிரகாரத்தில் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள மதிலுக்கு அருகாமையில் இருக்கும் தான் தோன்றியாக முளைத்த ஒரு வேப்பமரம் தப்பொழுது  ஆலய தலவிருட்சமென சித்தரிக்கப் பெற்று  நடைபெற்று வரும் ஆலய புனருத்தான வேலைகளைப் இடைநிறுத்த பலர் முயன்று வருவதாக ஆலய திருப்பசபை கூறுகின்றது. இதனால் நன்கொடை செய்வோர் அதிருப்தி அடைந்து தம் திருப்பணியை வேறு ஆலயங்களுக்கு செய்ய முன்வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.  இந்த இறை பணியை தடைசெய்ய ஆலய திருப்பணியில் பங்கு பெறாதவர்கள் தம் சுயநலம் கருதி முன்னினிலை வகிப்பதாகவும் அறிய முடிகின்றது.

ஆலயத்தைச் சுற்றி மரங்கள் (பனைகள், வேம்புகள்) பல தானாகவே முளைத்து வளந்துள்ளன. அத்துடன் ஆலய உள்வீதியில் இன்னும் பல வேப்ப மரக்கன்றுகள் முளைத்துள்ளன. ஆலய முன் வீதியில் பல மரங்களை சாந்தையில் வாழ்ந்த பிள்ளையார் பக்தனான மதிப்பிற்குரிய வடிவேலு ஐயா அவர்களால் நடப்பெற்று பராமரிக்கப்பெற்று அவை இப்போது சோலைபோல் காட்சி தருகின்றன.

மேலே உள்ள படத்தில் காட்டப்பெற்றுள்ள வேப்பமரமானது இதுவரை காலமும் கவனிப்பாரற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதன் அடிப்பகுதியில் பாரிய பழுது (நோய்வாய்ப்பட்டு) இருப்பதையும் பார்க்க முடிகின்றது.

தற்பொழுது ஆலயம் விஸ்தரிக்கப்பெற்று உள்பிரகாரத்தைச் சுற்றி மதில் கட்டப்பெற்று வருவதால் இம் மரம் உள்வீதியில் மதிலுக்கு அண்மையில் அமைந்து  உள்வீதிக் கொட்டகை அமைப்பதற்கும், சுவாமி வீதிவலம் வருவதற்கும் இடைஞ்சலாக உள்ளது.

இம்மரத்தை ஆலய தலவிருட்ஷமாக எம்முன்னோர் ஏற்றிருந்தால் அதற்கு உரிய சிறப்பை செய்திருப்பார்கள். ஆனால் இம் மரமோ கவனிப்பாரற்று இருந்ததுடன் ஆடுமாடு வளர்ப்போரின் குளைவெட்டும் ஒரு மரமாக இருந்துள்ளது. தலவிருட்சம் இல்லாத புகழ்பெற்ற பல ஆலயங்கள் எம்மூரிலும், அயல் ஊர்களிலும், வெளியூர்களிலும் இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அத்துடன் இவ் ஆலயத்தின் தலவிருட்ஷம் என்ன மரம் என்பது இதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை. 

சுமார் 2500-3000 வருடங்கள் பழமையான ஆலயத்தில் சுமார் 30-40  வருடங்களில்  முளைத்த  வேப்ப மரம் அதுவும் பழுதுபட்ட குறையுடன் காணப்படும் ஒரு வேப்ப மரம் தலவிருட்சம் என குறிபிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு ஆலயத்தின் தலவிருட்சம் எப்பொழுதும் அவ் ஆலய தோற்றத்துடன் அல்லது அதன் சிறப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை.

இவ் ஆலய திருப்பணிக்கு நன்கொடை செய்வோரும், ஆலய திருப்பணிச் சபையினரும் இவ் விடயம் சம்பந்தமாக சிவாலய நிர்மாண வல்லுணர்களிடமும், சிவாகம சாஸ்திர சிற்பாச்சாரியார்களிடமும், கட்டிடக் கலைஞர்களிடமும் ஆலோசனைகள் பெற்று அனை தறிப்பதா அல்லது விடுவதா என்பதனை முடிவு செய்யலாம். அல்லது சித்தி விநாயகரிடமே அவரின் விருப்பை உளச் சுத்தியோடு "பூ" கட்டிவைத்து அதன் மூலம் ஒரு நல்ல முடிவுக்கும் வரலாம்.

எதுவித சங்கடமும் இன்றி இறைபணி தொடர சங்கடக சதூர்த்தி நாயகனை பிரார்த்திக்கின்றோம்

பணிப்புலம்.கொம்

BLOG COMMENTS POWERED BY DISQUS