Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள்

கட்டுரைகள்

பணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்தினம் ஐயா அவர்கள் - ஆக்கம்: கணபதிப்பிள்ளை கனகரத்தினம் – பணிப்புலம்

E-mail Print PDF

Image may contain: one or more people, eyeglasses and text

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் மட்டுமல்ல, எம் எல்லோர் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் நீங்காத இடம் பெற்ற எம் ஊர் பெரியவர் திருஅழகரத்தினம் ஐயா அவர்களின் நினைவு மீட்பு இப்பகிர்வு.

எம் சமூகத்தின் குறைகளை தாங்கும் தூணாகவும், நிறைவுகளை பறை சாற்றி ஊரின் பெருமைகளை அடையாளப்படுத்தும் நிறை தீரனாகவும் திகழ்ந்தவர் அமரர் அழகர் ஐயா அவர்கள். தொல்காப்பியம் கூறிநிற்கும், தலைவனாகிய ஆடவன்மேல் அமைவன என்ற இரண்டு பண்பின் தொகுதிகளான “பெருமையும் உரனும் ஆடூஉ மேன” இற்கு முற்றும் சொந்தக்காரர்.

அமரர் ”அழகர்”. நெடியதோற்றமும், கூரிய விழிகளும், குமிண் சிரிப்பும், பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும், கூடிய புறத்தோற்றத்திலும், முகத்தினூடு தெரியும் அகத்தோற்றத்திலும், மற்றோர்கள் கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வசீகரத்தினை இயற்பிற் கொண்டவர் ஐயா அவர்கள்,

நற்குணமும், நல்லறிவும், அனுபவமும், விவேகமும், தீர்கதரிசனமும், ஆன்மீக அறிவும் மிக்க ஒரு சமூகத் தொண்டன். வெண்கலத்தின் ஓசை மிகுவது போல்புல்லியர் ஆர்ப்பரிக்க, வெள்ளிக் கலத்தின் ஓசை மிதமாவது போல் சிற்றுணர்வோர் சிலுசிலுக்க, பொன் கலத்தில் உண்டாகா ஒலி போல் முற்றுணர்வோர் ஒன்றும்மொழியாது அமைதியாக இருப்பர்.

பெருமகனார், முற்றுணர்வோர் தோற்க, முழு நிலையான அறிவிற்றனயன் தளம்பாத நிறைகுடம். ஆர்பரிப்பற்ற செயல்வீரன். நிதானமான சொல்வேந்தன். வாழ்வியலின் நுண்ணிய நயங்க ள் முற்றும் தன்னகத்தே இயற்பிற் கொண்ட பெரு மகனின் இழப்பு, எம் சமூக உறவுகளுக்கு ஒப்பற்ற துயர்.

அவர் இளைஞனாக இருந்த காலத்தில், தனது நண்பர்களுடன் இணைந்து மிகுந்த சிரமங்களின் மத்தியில் அம்பாள் சனசமூக நிலயத்தை அமைத்து, அங்கு கிராம முன்னேற்றச்சங்கம், இந்து இளைஞர் இயக்கம், மாதர் சங்கம் மற்றும் ஆங்கில, தமிழ் நூல்களைக் கொண்ட நூல் நிலையம் என்பன இயங்க முன்னோடியாக திகழ்ந்தார்.

ஊரின் மத்தியில் அமைந்துள்ள முத்துமாரி அம்பாள் ஆலயத் திருப்பணி வேலைகள் முடங்கிக் கிடந்த நேரம், அதன் தேவைகளில் அதீத கவனம் கொண்டவராக, பெரும்சிரமங்கள் மத்தியிலும் திருப்பணி சபை ஒன்றை நிறுவி, அதனூடு, ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று. புதுப் பொலிவுடன் காட்சியளிக்க கண்டார் .

உட் புறப் பூசல்கள்காரணமாக இவ்வாலயம், 1976 ம் ஆண்டு பூட்டப் பெற்று இருந்த காலத்தில், இரு பெரும் முரண் அணிகளாக பிளவு பட்டு இருந்த திருப்பணிச் சபையினரையும், ஆலயபூசகர்களையும் சமாதானமாக்கி, ஆலயத்தினை மீண்டும் திறந்து, பூசைகள் மற்றும் திருப்பணிகள் செவ்வனே நடைபெற அயராது முயன்றிருந்தார்.

பூசாரிமார் சார்பில்என்னையும், மறைந்த நலன்விரும்பியும், சமாதான விரும்பியுமான அமரர் சின்னையா பொன்னுத்துரை அவர்களையும் அழைத்து கலந்தாலோசித்தபின், தானே சமாதானதூதுவனாக திருப்பணிச் சபையினரிடம் சென்று பூசாரிமாரின் விருப்பத்தை தெரிவித்து அவர்களின் சம்மதம் பெற முயன்றார்.

இருப்பினும், கற்றறிந்து, சமூகப் பொறுப்பில் தீர்க்கமான நிலைகளில் இருந்தோருக்கும் சாமான்ய சமூகத்திற்கும் புரிதல்களில் இருந்த அகண்ட இடைவெளியும், பிடிவாத மன இறுக்கங்களும், இவரது விடா முயற்சியை, அந்த கால கட்டதத்தில் நிறைவேற்றாத தடை முட்களாக இருந்துவிட்டன, இருந்த போதிலும், அதிலிருந்து சற்றும் மனம் தளராதவராக, பக்கச் சார்பற்ற, பொறுப்பான, மனுதர்ம சாத்திர வழி முயன்று கொண்டே இருந்து, ஒரு கட்டத்தில் அவரது உயர் நோக்கங்கள் நிறைவேறக் கண்டார்.

எனது இள பராயக் காலங்களில் (1960-1970), அவர் திருமணமாகி மனைவி மக்களுடன் வாழ்ந்த குடும்ப சுமையிலும் , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்; அம்மன்கோவில் முற்றத்திற்கு வரத் தவறுவதும் இல்லை. வந்தால் எங்களுடன் அளவளாவி எமக்கு அறிவு சார்ந்த தூண்டுதல்களை விதையாது வீடு செல்வதும் இல்லை.

தாம்அறிந்தை மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டு கேட்டு எம்மை சிந்திக்க தூண்டி பின் விளக்கம் சொல்லி, எமது அறிவுத்தேடலை உந்தச்செய்த உத்தமர். அவர்தம் கூறிய புத்திமதிகள் மற்றும் காட்டிச்சென்ற அறவழி இப்பொழுதும் எம் வாழ்வியலில் அழியாத சாட்சிகளாக எதிரொலிக்கின்றன.

அமரர் அழகரத்தினம் ஐயா அவர்களின் கல்வியறிவும், உயர்தக இயல்பாற்றல்களும், சுங்க திணைக்கழத்தில் ஆரம்ப நிலை உத்தியோகத்தராக இணைத்தது. அவரது நேர்மை,அறிவு, ஆற்றல் பணிவு, விவேகம் போன்ற நற்குணங்கள் சுங்கத் திணைக்கழகத்திற்கு அரும்பெரும் சொத்தாக அமைந்தது, செவ்வனே, சிறப்பியல்புச் சேவை நிமித்தம் பதவிஉயர்வுகள் பெற்று, சுங்க இலாகா பிரதிப் பணிப்பாளராக உயர்ந்த பதவியை வகித்து, ஓய்வு பெற்றார்.

ஐயா அவர்களுக்கு ஆன்மீக அறிவும், தெவீக சக்தியும் பரம்பரையாக வந்த சொத்து. முருகப்பெருமானிடம் அமைந்த கட்டுக்கடங்காத பக்தி நிமித்தம், அருணகிரிநாதர்அருளிச் செய்த ”கந்தர் அநுபூதி” என்னும் தோத்திரத்தில் மறைந்துள்ள ஆழமான கருத்துக்களை மிக நுட்பமாக ஆராய்ந்து, “அநுபூதிச் செல்வன்” என்னும் நூலில் பதிப்பித்து, ஓய்வு பெற்ற அதிபரும், அமரருமான மதிப்பிற்குரிய சண்முகரத்தின சர்மா அவர்கள் மூலம் காலையடியில் அமைந்துள்ள ஞானவேலாயுதர் ஆலயத்தில் வெளியிட்டு தமிழுக்கும் சைவத்திற்கும் பெருமை சேர்த்தார்.

அத்துடன் திருமுறைகளின் தாற்பரியம் என்னும் நூலையும் பதிவிலிட்டு வினியோகித்தார். இவ் நூல்களில் குறிக்கப்பெற்ற சில விடயங்களில், பொருள் விளக்கம் வேண்டி வினவிய பொழுது, அவர் தெரிவித்ததாவது, புத்தகத்தில் இடம்பெற்ற சில பொருளடக்கம், தனது இயல்புகளுக்கும் அப்பாற்பட்டது என்றும், அவற்றை நிறுவியது தன்னோடு பொருதிய தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அமானுசிய அனுக்கிரகமேயன்றி வேறேதும் இல்லை என்றார்.

அவை மட்டுமன்றி; ஜோதிட சாஸ்திரத்திலும் வித்தகராக திகழ்ந்தார். அண்மைக் காலம் வரை சோதிட வல்லுணர்களில் பெயர் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அவர் முதன்மையாளராகவும் விளங்கினார்.

ஐயா அவர்களின் கல்வியறிவும், ஆற்றலும் சுங்க திணைக்கழத்தில் ஆரம்ப நிலை உத்தியோகத்தராக இணைத்தது. அவரது நேர்மை, அறிவு, ஆற்றல் பணிவு, விவேகம்போன்ற நற்குணங்கள் சுங்கத் திணைக்கழகத்திற்கு அரும்பெரும் சொத்தாக ஆக அமைந்தமையால் பதவி உயர்வுகள் பெற்று சுங்க திணைக்கழக பிரதிப் பணிப்பாளராகஉயர்ந்த பதவியை வகித்து ஓய்வு பெற்றார்.

இத்துணை பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட எம்மூர் பெருமகன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதனை புருவம் உயர்த்தி சொல்வதில் பெருமை கொள்கின்றோம்.

பெரியார் அமரர் அழகரத்தினம் ஐயா அவர்கள் பெருமையையும், புகழையும் பெற்றுக் கொள்ள இவ்வுலகில் அவரை சரியான முறையில் வழிநடத்திய அந்த ஜீவாத்மா, பொறிவழிச் செல்லாது, பஞ்சமா பாதகங்கள் புரியாது, அறநெறிவழி நின்று நற்செயல்கள் புரிந்ததினால் அந்த ஜீவாத்மாவை பீடித்திருந்த கன்மவினைகள் நீக்கி பரிசுத்த ஆன்மாவாகி பரமாத்மாவுடன் இணைந்து மோட்ச நிலை அடைய வேண்டும் என்பதே நியதி.

பெரியார் அமரர் அழகரத்தினம் ஐயா அவர்களை மதிப்போடும், மரியாதையோடும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வைத்த அந்த ஆத்மா வானுறையும் தெய்வத்துள்வைக்கப்படும் என்ற குறள் மொழிக்கு இணங்க; பரமாத்மாவுடன் இணைந்து மோட்ச நிலை அடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக.

அந்த நன்நோக்காளர், உயர் பண்பாளர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதனை எண்ணி பெருமை கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா மோட்ச நிலை அடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக.

ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!.
நன்றி, வணக்கம்

கணபதிப்பிள்ளை கனகரத்தினம் – பணிப்புலம்

"பணி செய்வதே பணி" பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்ற சங்கம் - 70ம் ஆண்டு நிறைவு விழா

E-mail Print PDF

Image may contain: 2 people, people sitting

பணிப்புலம் வாழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக இறை பணிக்காகவே தம்மை அர்ப்பணித்தவர்கள். வைகறையில் துயில் எழுந்து முதற் பணியாக மொட்டறாது மலர் பறித்து, பூமாலை புனைந்து இறைவனை அலங்கரித்து, பூஜையின் போது சங்குநாதம் செய்து, பண்ணோடு பாமாலை பாடி "இறைவனை பணி செய்வதே தம் பணி" என இன்றும் பணி செய்து வருகின்றார்கள். அவ்வூரில் பிறந்தமையால் நாமும் பெருமை அடைகின்றோம்.

தேவை எங்கு தேவைப்படுகின்றதோ அங்கு அதை பெற்றுக் கொடுப்பதே சேவை. எதிர் பார்க்காத நேரத்தில் தம் தேவையை பெற்றுக் கொடுப்பதும் சேவைதான். தேவை ஏற்படாத இடத்தில் சேவைக்கு வேலையில்லை.

சேவை-பணி என்பது எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய ஒன்றன்று. அதற்கு பல அற்பணிப்புகள், நற்பண்புகள், வசதிகள் தேவை. சேவை செய்வதற்கு மற்றைய உயிர்களிடத்து அன்பு, கருணை, மனிதநேயம் நிறைந்தவர்களாக இருத்தல் அவசியம். மனித குலத்தில் மாணிக்கங்களாக திகழ்கின்றவர்களில் மட்டுமே இவ் ஒளிக் கீற்றுகள் பிரகாசிக்கின்றன.

சேவை என்பது மானிட வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றை இல்லாதவர்களுக்கும், அது தேவைப் படுகின்றவர்களுக்கும் ஈதல் அல்லது அதனை கிடைக்கச் செய்தல் என பொருள் பெறும். ஈகை என்பது தன் நலம் கருதாது பெறுபவர் நலன் கருதி வழங்குவதாகும். கொடுத்தல் என்பது ஈகையில் இருந்து வேறு படுகின்றது. உதவி செய்பவர் பெற்றவரிடம் இருந்து அதற்கு பதிலாக வேறு ஒன்றை எதிர் பார்த்துச் செய்வதாகும். இதனை

"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து." என வள்ளுவர் கூறுகின்றார்..


இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

சாதி, மதம், குலம், இன பேதம் காட்டாது பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் சென்று அவர்களுக்கு தஞ்சமளித்து அவர்களின் பசியையும், பிணியையும் போக்கி தாயார்போல் உடன் இருந்து சேவை செய்த அன்னை திரேசா அம்மையாரின் சேவையும் தேவையானவர்களுக்கு வழங்கப்பெற்ற ஒரு மகத்தான பணியே.

இல்லறத்தில் நல்லறம் செய்து இப் பிறப்பின் நோக்கத்தை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற வள்ளுவன் கூற்றிற்கு அமைய இல்வாழ்க்கை பண்புடையதாகவும், பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

இங்கே அன்பு என்ற வார்த்தையையின் பின்னால் பல நற்பண்புகள் அடங்கி இருக்கின்றன. அன்பு இருக்கும் இடத்தில் பரிவு, இரக்கம் இருக்கும், இவை இரண்டும் இருக்கும் இடத்தில் பணிவு இருக்கும், இவை அனைத்தும் நிறைந்த இடத்தில் சேவை-பணி இருக்கும். பணி செய்யும் போது அறன் தானாக வந்து சேருகின்றது. எனவே இவ் மானிடப் பிறப்பின் பண்பும், பயனும் அதுவாகி விடுகின்றது.

1945ம் ஆண்டளவில் எம்மூரில் வாழ்ந்து கொண்டிருந்த (இளையோர்) பள்ளிப் படிப்பு முடித்தோரும், பல்கலைக் கழகம் முடித்தோரும், படித்துக் கொண்டிருந்தோரும், பெரியோர்களும் முதலில் புதினப் பத்திரிகைகள் வாசிப்பதற்காக வாசிகசாலை ஒன்றை அமைத்தனர். அதன் பின்னர் ஊர் மக்களின் ஒத்தாசையுடன்; முத்தமிழும், சைவமும், தமிழர் பண்பாடும், கலாச்சார விழுமியங்களும் வருங்கால எமது சந்ததியினர் மத்தியில் வளர்ப்பதற்காக, விரிவாக்கம் அடைந்து வளர்ந்த்தே “அம்பாள் சானசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கமாகும்.

அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கம் கடந்த 70 வருட காலமாக செய்த நற்பணிக்கு கிடைத்த வெற்றியை ஊர்மக்கள் அனைவருடனும் கொண்டாடும் இந் நந்நாள் ஊரிலும், எமது சமூகத்திலும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பெற வேண்டிய பொன்நாளே.

இந் நன்நாளில் அம்பாள் சனசமூக நிலையத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்த எம்மூர் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

ஆக்கம்: கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
(ஓய்வு பெற்ற கணினி வலை பின்னல் இணைப்பு பரிபாலகர்)

பணிப்புலம், பண்டத்தரிப்பு

பணிப்புலம் கிராமமும் முத்துமாரி அம்பாள் வழிபாடும் - ஆய்வு செய்தவர்: ஆ. த. குணத்திலகம் ஓய்வு நிலை ஆசிரியர்

E-mail Print PDF

ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதுவதில் எவ்வளவு சங்கடங்கள் ஏற்படும் என்பதை நான் நன்கு அறிவேன். இங்கு பல விமர்சனங்களும் கேள்விகளும் எழலாம். எனினும் கேள்விகள் பிறந்தாலே உண்மையும் தெளிவும் கிடைக்கும். இதை அடிப்படையாகக் கொண்டே இவ் ஆய்வினை எழுதத் துணிந்தேன். எந்த விமர்சனங்களையும் ஏற்கத் துணிந்து கொண்டே எழுத முற்படுகின்றேன். எனவே இங்கு காணப்படும் தவறுகளைச் சுட்டும் போது அவற்றை ஏற்கவும் தயாராய் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதியோர்கள் ”அறளை” பெயர்தலுடன் உயிர் வாழுதல்(LIVING WITH DEMENTIA)

E-mail Print PDF

”அறுபதில் அறளை பேரும்” என்பதும், ”நாற்பதில் நாய்க்குணம் வரும்” என்பதும் எம்முன்னோர் அனுபவத்தால் தந்த முதுமொழிகள்.  வயது அறுபதை தாண்டிவிட்டால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு ஞாபகமறதி ஏற்படலாம். அத்துடன் அவர்கள் வேறு நோயினால் பீடிக்கப் பெற்று வாழும் நிலை ஏற்பட்டுவிட்டால் நிலைமை மோசமடைகின்றது. ஒருமுறை கூற வேண்டியதை பலமுறை கூறியும், மற்றவர்களில் செயலில் வெறுப்பைக் காட்டியும், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதுமாக பயித்தியம் பிடித்தவர்கள்போல் இருப்பார்கள். இதையே இளையோர் அறளை பேருதல் என்கிறார்கள். டாக்ரர்கள் இது ஒரு பருவ வருத்தம் என்கின்றார்கள்.

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 24