Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை

கத்தி : திரை விமர்சனம்

E-mail Print PDF


சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார்.
‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை வச்சு உயிர் வாழ்வே? என்று கேள்வி கேட்கிறார். டீப் வில்லேஜ் தொடங்கி டாப் சிட்டி வரைக்கும் விஜய்க்கென இருக்கும் மாஸ், இந்த படத்தின் கருத்தை எங்கேயோ கொண்டு போய் சேர்க்கும். அந்த ஒரு விஷயத்திற்காகவே விஜய்க்கு ஒரு வெல்கம்! கத்திக்கு ஒரு கவன ஈர்ப்பு!

வெளிமாநில சிறையிலிருந்து தப்பிக்கும் விஜய், அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்கிறார். அறைத்தோழன் சதீஷ் உதவியுடன் போலி பாஸ்போர்ட் எடுத்து பாங்காக் செல்வதுதான் அவரது குளுகுளு திட்டம். ஏர்போர்ட்டில் சமந்தாவை நோக்கும் இந்த விளையாட்டுப்புள்ள விஜய், அந்த வினாடியே பாங்காக் பயணத்திற்கு ஒரேயடியாக முழுக்கு போட்டுவிட்டு ‘சமந்தாவே நமஹ’ என்று திரிய நினைக்கிறார். நடுவில் தன்னை போலவே இருக்கும் இன்னொரு விஜய்யை யாரோ மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பியோட, அவரை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்க்கிறார்.

சுடப்பட்ட விஜய் ஒரு முதியோர் இல்லம் நடத்துவதையும், அவருக்கு பல லட்ச ரூபாய் பணம் தருவதற்காக சிலர் முன் வருவதையும் அறிந்து, மேற்படி விஜய்யை தப்பி வந்த சிறைக்கு பேக்கப் பண்ணி விட்டு இங்கேயே தங்குகிறார்....வேறொன்றுமில்லை, பணத்தை ஸ்வாகா செய்யும் திட்டத்துடன்தான்! இவரை அவரென்று நினைத்துக் கொண்டு மற்றவர்கள் டீல் செய்வதும், அவராகவே இவர் மாறி சில முக்கிய முடிவுகளை எடுப்பதும்தான் படம்.

ஆள்மாறாட்ட விஜய் எப்போது சிக்குகிறார்? தன்னை விட தன் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் விஜய்யை ஒரிஜனல் விஜய் எப்போது சந்தித்தார்? இருவரும் என்னவானார்கள்? சமந்தாவின் லவ் என்னாச்சு? இப்படி பற்பல கேள்விகள். சிற்சில சுவாரஸ்யங்கள் என்று கத்தி, சில இடங்களில் மழுங்கிய கத்தியாகவும், சில இடங்களில் கருகரு கத்தியாகவும் மாறி மாறி கூர்மை காட்டுகிறது. எப்படியிருந்தாலும், எவ்வளவு ரத்தம் சிந்தினாலும் விஜய்யின் கேரியரில் ‘பி பாஸிட்டிவ்’ படம்தான் இது.

விஜய்யின் முதல் வித்தியாசமே படம் நெடுகிலும் அவரை சுற்றி நாளைக்கோ, மறுநாளோ என்கிற பெரிசுகள் இருப்பதுதான். ‘கெழங்கட்டைகளை வச்சுகிட்டு போராட்டம் பண்றீங்க?’ என்று டி.வி நிருபர் ஒருவர் கேட்கிற அளவுக்கு பெரிசுங்க ஏரியா அது. வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கும் விளக்கமும் கொடுக்கிறார் விஜய். தந்தை பெரியார், அன்னை தெரசா, அண்ணல் காந்தி என்று அவரவர் வயசை சொல்லி பொளக்கிறாரே... விஜய்யின் ஆக்ரோஷ பதிலே அந்த பெரிசுகளையும், அவர்களை நேசிக்கும் விஜய்யையும் நேசிக்க வைக்கிறது. இந்த படத்திற்காக வசனம் எழுதிய ஏ.ஆர்.முருகதாசை கூட பிறகு பாராட்டலாம். எதிர்கால அரசியல், நிகழ்கால கவிழ்ப்புகள் என்று எதற்கும் அஞ்சாமல், அவற்றை விஜய் தன் வாயால் உச்சரிக்கும் ஒவ்வொரு தருணமும், சூடானவை. தைரியமானவை. அதுவும் 2ஜி அலைக்கற்றை மோசடி பற்றியெல்லாம் அவர் பேசும்போது, இந்த கர்ஜனை எப்படி சாத்தியமாச்சு என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

படத்தில் இரண்டு விஜய் என்று காட்டும்போதே இவருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று தேட ஆரம்பிக்கிறது கண்கள். ஆனால், ஜீவானந்தத்திற்கும், கதிரேசனுக்கும் நடுவே குணத்தால் சுவர் எழுப்பி, நடிப்பால் அசர வைக்கிறார் விஜய். வடை மாவை கொண்டு வத்தல் பிழிந்த மாதிரி, அரைகுறையாகதான் இருக்கிறது விஜய் சமந்தா லவ்.

இருந்தாலும், அதிலொன்றும் பெரிய நஷ்டம் இல்லை. நடுநடுவே டூயட் பாடிக் கொள்கிறார்கள். ரகசியமாக சிரித்துக் கொள்கிறார்கள். பட்... சண்டை காட்சிக்கும் ஒரு லாஜிக் வைத்து அடிக்கிறாரே... அங்கே நிற்கிறது விஜய்யின் ஆக்ஷனும், முருகதாசின் பர்பெக்ஷனும். ‘ஒரே நேரத்தில் நாற்பது பேரு வர்றாங்களே, எப்பிடிடா?’ என்கிற சதீஷிடம், கொத்தாக சில்லரை அள்ளி வைத்துக் கொண்டு ‘காசை கீழே போடும்போது கரண்ட் ஆஃப் பண்ணு. அப்புறம் ஆன் பண்ணு. திரும்பவும் காசு போடும்போது கரண்ட் ஆஃப் பண்ணு’ என்று திட்டம் வகுத்து கட்டம் கட்டுவது செம... செம...!

சட்டென்று ‘புளூ பிரிண்ட் கொடுங்க’ என கேட்டு வாங்கி, சடாரென அதை மேசையில் விரித்து பிளான் போடும் விஜய், அவ்வப்போது மேஜைக்கு கீழே குனியும்போது கீழே குழாய் தெரிவதெல்லாம், இன்னும் கொஞ்சநாளைக்கு பேஸ்புக், ட்விட்டர்களை கதற வைக்கும். அப்படியொரு பொழுதுபோக்கு பீரங்கி...ங்ணா அது!

‘நம்ம ஊரு பிரச்சனையை நாட்டுக்கு வெளிப்படுத்துறதுக்கு ஒரு மீடியா கூட முன் வரலே. விடுங்க. நாமளே அவங்களை வரவழைப்போம்’ என்று அவர் போடுகிற திட்டத்தில் லாஜிக் இல்லாவிட்டாலும் ரகளை இருக்கிறது. ‘சென்னைக்கு போற குடிநீரை நாலு நாளைக்கு முடக்குறோம்’ என்று களமிறங்கும் அவரும், பெருசுகளும் நினைத்த மாதிரியே சென்னையை ஸ்தம்பிக்க வைப்பது கற்பனைக்கும் எட்டாத சொரேர்...! இந்த தடாலடியை முன் வைத்து அவர் மீடியாவை நெருப்பில் புரட்டி எடுப்பதை எந்த வகையில் சேர்க்க? (நாட்ல சட்டம் ஒழுங்கு சவுரியமா இருக்குன்னா அதுக்கு மீடியாயும் ஒரு காரணம்ங்ணா... )

ஜீவானந்தம், கிராமத்தை விட்டு சிட்டிக்கு வருவது ஏன்? அந்த கிராமத்தின் நிஜ வேதனை என்ன என்பதை ஒரு அரை மணி நேர பிளாஷ்பேக்காக காட்டுகிறார் ஏ.ஆர்..முருகதாஸ். ஒளிப்பதிவாளர் தந்திருக்கும் அந்த ‘டோர்ன்’ அவசியமேயில்லையே ஐயா? இருந்தாலும் அந்த கதை சொல்லும் நிஜம்தான் படத்தை உயிரோட்டமாக ஓட வைக்கும் ரத்த நாளம்.
சமந்தா ஆள் சிக்கென்று இருக்கிறார். முகத்தில்தான் ஏனோ எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எடையுடன் ‘பூரிப்பு’ பொங்குகிறது. சற்றே குறைப்பது சவுரியம் தாயீ...! காமெடிக்கு சந்தானம், சூரி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு வடிவேலுவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் கூடவா கிடைக்காமல் போய்விட்டார்கள். விஜய்யுடன் இணைந்து நம்மை சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று சல்லடை போடுகிறார் சதீஷ். பட் சிரிப்புதான் சிக்கவேயில்லை. நல்லவேளை, தனிப்பட்ட விஜய்யே அதையும் தந்துவிடுவதால் தப்பித்தோம்.
எம்.என்.சி நிறுவனங்கள் எப்படியெல்லாம் பொதுமக்களின் சொத்துக்களை கபளீகரம் பண்ணுகிறது என்பதை அதன் எல்லைவரை சென்று விளக்கியிருக்கிறார் முருகதாஸ். அந்த கேரக்டருக்கு சர்வ பொருத்தமாக இருக்கிறார் நீல் நிதின் முகேஷ்.

பாடல்களில் செல்ஃபி புள்ள -யில் கலக்குகிறார் அனிருத். அந்த ஹிப்ஹாப் தமிழனின் எக்ஸ்பிரஸ் வேக தமிழ் பாட்டு எப்பவோ வந்த ஓல்டு பேஷன் அண்ணாச்சி. ஒரு காட்சியில் பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தை மற்றவர்களுக்கு ஒலிக்க விடுகிறார் விஜய். அதை காதில் கேட்டு அனுபவிப்பதற்குள் குறுக்கீடு செய்கிறது அனிருத்தின் பின்னணி இசை. இப்படி அபத்தம் பாதி, அப்பம் மீதி என்று கலவையாக கவர்கிறார் மனுஷன்.

பன்னாட்டு நிறுவனங்கள் வரட்டும். நல்லதுதான். ஆனால் அவையெல்லாம் என்ன மாதிரியான கம்பெனிகளாக இருக்க வேண்டும் என்று விஜய் விவரிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் கைதட்டல்கள் பறக்கிறது. கம்யூனிசம்னா என்ன என்று கேட்கும்போது, ‘என் பசி தீர்ந்த பிறகு, நான் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது’ என்று விஜய் கூறும் வசனம், சின்ன தீப்பெட்டிக்குள் அடக்கப்பட்ட தீப்பிழம்பு. ‘உலகம் முழுக்க ரசிகர்கள். ரசிகர்கள்தான் உலகம்’ என்று வாழும் விஜய்க்கு இந்த வசனங்கள் தரப்போகும் பரிசுகள் எதுவாகவும் இருக்கட்டும்... இனி ஹீரோக்கள் அனைவரும் சப்தமாக பேச வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்தியிருக்கிறார் அவர்.

கெத்து ஃபைட்டு, குத்து பாட்டு, வெத்து வேட்டு வசனங்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்தே ரசிகர்களை வளைத்துக் கொண்டிருந்த விஜய், தன் எல்லைகளை விரித்து இறக்கைகளை பறக்க விட்டிருக்கிறார். இத...இத...இததான் எதிர்பார்க்குது ஊரும் உலகமும்! கமான் விஜய்...

கோச்சடையான் திரைப்பட விமர்சனம்

E-mail Print PDF

நடிப்பு: ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி

இசை: ஏ.ஆர்.ரகுமான் இயக்கம்: சவுந்தர்யா அஸ்வின் தயாரிப்பு: ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல்.

கலிங்கபுரியும், கோட்டைப்பட்டினமும் பகை நாடுகள். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராணா யாருக்கும் தெரியாமல் கலிங்கபுரிக்குள் நுழைந்து, படித்து வளர்ந்து, போர்க்கலை பயின்று அந்த நாட்டுக்கே தளபதியாகிறார். பல சிற்றரசுகளைப் பிடித்து கலிங்கபுரியை பேரரசாக்குகிறார். கலிங்கபுரியில் உள்ள ரகசிய குகைக்குள் முன்பு போர்க்கைதிகளாக பிடிபட்ட கோட்டைப்பட்டின படை வீரர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அடிமையாக நடத்துவதை விட, போர்வீரர்களாக மாற்றி கோட்டைப்பட்டினத்தின் மீது படையெடுத்தால், சொந்த நாட்டு வீரர்கள் மீது கோட்டைப்பட்டின வீரர்கள் தாக்க மாட்டார்கள். ஒருவேளை தாக்கினாலும், நம் வீரர்கள் இறப்பது குறையும். நாம் கோட்டைப்பட்டினத்தைப் பிடித்து விடலாம் என்கிறார் ராணா. அதன்படி அடிமைகள் படையெடுக்கிறார்கள்.

எல்லையில் எதிரிகளை சந்திக்க வேண்டிய ராணா, கோட்டைப்பட்டின இளவரசர் சரத்குமாருடன் கைகுலுக்குகிறார். தான் வீரர்களாக மாற்றிய அடிமைகளை, கோட்டைப்பட்டின படைக்கு ஆதரவாகத் திருப்புகிறார். ‘கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கோச்சடையானின் மகன்தான் நான், அடிமைப்பட்டிருக்கும் வீரர்களை மீட்கவே கலிங்கபுரிக்குள் நுழைந்ததாக அறிவிக்கிறார்’ ராணா. கோட்டைப்பட்டினத்துக்குள், அதாவது, சொந்த நாட்டுக்குள் தளபதியாக நுழைகிறார் ராணா. தேசப்பற்று மிக்க ராணா, கோட்டைப்பட்டின மன்னர் நாசரைக் கொல்ல திட்டமிடுகிறார். அது ஏன்? உண்மையில் ராணா யார்? அவர் தந்தை கோச்சடையான் யார்? இறுதியில் வெல்வது யார் என்பதற்கான புதிரை அவிழ்த்து, விடை சொல்கிறது படம்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் சவுந்தர்யா அஸ்வினுக்கு முதலில் வாழ்த்து சொல்லலாம். ஒவ்வொரு பிரேமிலும் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்துக்கான அனல் பறக்கும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ராணாவின் எதிர்பாராத திருப்பங்கள், கோச்சடையானின் பிளாஷ்பேக் எதுவும் யூகிக்க முடியாதவையாக இருப்பது படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என ராணாவின் தோற்றம். விரிந்த தோள்கள், நீண்ட தலைமுடி, கொஞ்சம் ஆன்மீக பலம் கொண்ட கோச்சடையான் என, இருவேறு தோற்றங்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். தன் குரலாலும் வித்திசாயப்படுத்தி நடித்திருக்கிறார் ரஜினி. சரித்திரக் கதைக்கே உரித்தான வசனங்களை தன் பாணியில் ரஜினி உச்சரிக்கும் அழகே தனி. கோச்சடையான் ரஜினியின் ருத்ர தாண்டவம், ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.

தீபிகா படுகோன் நிஜத்தில் இத்தனை அழகா என்று சந்தேகிக்கும் வகையில் அவரது கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். வீரம், காதல், பிரிவு ஆகிய உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராணாவின் தங்கை ருக்மணி, தாய் ஷோபனா, நண்பர்கள் சரத்குமார், ஆதி, வில்லன் நாசர், ஜாக்கிஷெராப் ஆகியோரின் மேனரிசங்களையும், தோற்றத்தையும் அனிமேஷனில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மறைந்த நாகேஷை நிஜத்தில் உருவாக்கி அவரது உடல்மொழியையும், வசனத்தையும் அப்படியே மறு உருவாக்கம் செய்திருப்பது பிரமாதம். இதில் நடித்தவர் ரமேஷ்கண்ணா.

இத்தனை பிரமாண்ட படத்துக்கு அம்புலிமாமா ஸ்டைல் கதை இல்லாமல், வித்தியாசமான கதையை யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பிட்ட முக்கிய கேரக்டர்கள் தவிர, மற்ற கேரக்டர்கள் உயிரோட்டம் இல்லாத பொம்மைகளாக இருப்பதால், கதையோடு ஒன்றமுடியவில்லை. நாட்டு மக்களுக்கே தெரிந்த கோச்சடையானின் கதை, இளவரசிக்குத் தெரியவில்லை என்பதில் லாஜிக் இல்லை. பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்க வேண்டிய பிரமாண்ட தொழில்நுட்பத்தை, அவசரகதியில் அள்ளித் தெளித்திருப்பது படம் முழுக்க தெரிகிறது. என்றாலும், ஜாலியான டைம் பாசுக்கு கியாரண்டி தருகிறார், கோச்சடையான்.

பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்...!!!

E-mail Print PDFகம்பனின் கற்பனைக்கெட்டாத
கவியொன்று பூத்தது என்னுள்
கவியே நீ
கண்ணனா !!! கண்ணகியா !!!

ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
வீர குடி வித்தே !!!

பொதிகை தமிழே
உன்னை உயிரிலே செதுக்கி
உதிரத்தை உணவாக்கி
பத்து திங்கள் காத்தேன் ...!!!

குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ பாலாம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம் ...!!!

எட்டி உதைத்து விளையாடி
கருவறையிலே வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
ஏங்கினேன் உன்முகம் காண ...!!!

மஞ்சள் திரையிட்டு ஆதவன்
மதி வருகைக்காக மறைந்திருக்க
முகில்கள் முத்தமிடும் மாலையிலே
பெற்றேன் பிரசவ வலியை ...!!!

அக்கணமே மனதில் மழை
இன்ப துளிகள் கண்களில்
சிப்பியின் முத்தாக முகம்காட்டி நீ
அம்மா என்றழைக்க வருவதையெண்ணி ..!!!

வலியின் வன்முறையில்
ரணம் தேகத்தை தீயாக்கி
உயிர் நாடியை இறுக்கி
ஆன்மாவை ரணமாக்க ..!!!

அந்நொடியில் இரத்த திலகமிட்டு
நவ ரத்தினமாய் உதித்தாய்
கீதத்தோடு உன்பிஞ்சு விரல்கள்
எனைத்தீண்டியதும் நானும் பிரசவித்து ..!!!

அள்ளி அணைத்து முத்தமிட்டேன்
அங்கமெல்லாம் என் உயிர் தங்கமே .
அங்கமானாய் அம்மாவின் வாழ்வில் ...!!!


நன்றி: சுதா

 

 

 

 

 

 

 

 

 

 


தெனாலிராமன் - திரை விமர்சனம்!

E-mail Print PDF

மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாளன். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும் ‘தெனாலிராமன்’.

தன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், அவனைச் சிந்திக்க வைக்க சில செயல்களை செய்து, நாட்டு மக்கள் நலமாய் வாழ வழி செய்யும் ஒரு நாயகன். கிட்டத்தட்ட ‘இம்சை அரசன்’ படத்தை நினைவுபடுத்துகிற கதையமைப்பு தான் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘டும் டும் டும்’ என்றும் ‘அடடா டா அடடடடா’ என்று வடிவேலு அவருக்கே ஏற்ற பாணியில் ராஜா வேடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்துகிறார். சின்னக் குழந்தையாக நடித்துக் காட்டி அசத்தினாலும், சீரியஸ் வசனங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகிறார் தெனாலிராமனாக வரும் இன்னொரு வடிவேலு.

சீன நாட்டு வியாபாரிகள் விஜயநகரில் தங்களின் முதலீட்டை செய்ய துடிக்கும் நிலையில், அமைச்சர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் மன்னரும் அதை அனுமதிக்கிறார். மக்களின் அவஸ்தைகளை மன்னருக்கு புரியவைக்க தெனாலிராமன் போடும் திட்டத்தால் மக்களோடு மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் மன்னர். மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதோடு கூழ் குடிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடும் மன்னர்ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னாட்டு மக்களோடு வாழும் போது பல உண்மைகள் விளங்குகிறது. சீன நாட்டு வியாபாரிகளால் தன் நாட்டு சிறு வியாபாரிகள் வறுமையில் வாடுவதும், சீனாக்காரர்கள் குறைந்த சம்பளத்தில் மக்களை அதிக வேலைகள் வாங்குவதும் என அனைத்து விஷயங்களையும் மன்னர் உணர்ந்துகொள்கிறார்.

பிறகென்ன, நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது, அமைச்சர்கள் செய்த துரோகம் அம்பலமாகிறது, சீன நாட்டு சகுனிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். தன் தந்திரத்தை பயன்படுத்தி சீன நாட்டு கயவர்களிடமிருந்து மன்னரை மீட்டு மீண்டும் நல்லாட்சியை தொடரச் செய்கிறார் தெனாலிராமன்.

பாடல்களில் ஆட்டமாய் ஆடி கலக்கியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவின் ‘ரம்பப... ரம்பப...’ பாடல் குழந்தைகளுக்கு குதூகலம் தான். அந்தப்பாடலில் பாடகர் முகேஷின் குரலுக்கும் இசையமைத்த டி.இமானின் விரலுக்கும் ஈடுகொடுத்திருக்கிறது வடிவேலுவின் இடுப்பு! ஆணழகு என்ற மெல்லிசை பாடல் மதுரமாய் இனிக்கிறது. நெஞ்சே... நெஞ்சே... என வடிவேலு உணர்ச்சிபெருக்கோடு பாடும் பாடலின் பாடல் வரிகள் நெகிழவைக்கிறது. ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இருப்பது தான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா’ என்ற கலை வித்தகர் ஆரூர்தாஸின் வசனத்திற்கு இதயம் கைத்தட்டுகிறது.

காமெடி மட்டுமல்ல தன்னால் கருத்துக்களை பேசியும் நடிக்க முடியும் என்பதையும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் அழுத்தமாய் ஆழமாய் பதிவு செய்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அவரின் நீண்ட கால இடைவெளியை மறக்கடிக்கிற வகையில் அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். மீனாட்சி தீக்‌ஷித் கண்களாலும், இடையாலும் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

அந்நிய முதலீட்டால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியது வரும் என்பதை வெள்ளித்திரை வழியாக பாமரனுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட புரிகிற வகையில் எளிமையாய் பதிவு செய்கிறது தெனாலிராமன். குடும்பத்துடன் குதூகலிக்க சம்மர் சீசனை கொண்டாட சரியான படம் தெனாலிராமன்.

தெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்!

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

E-mail Print PDF

`


சந்தானம் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘ படத்தின் First look ரசிகர்களின் மத்தியிலும், திரை உலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து , அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம். கதாநாயகனாக நடிபதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் பொலிவுடன் இருக்கும் சந்தானம், இந்த படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார்

இந்த படத்தில் சந்தானத்துக்கு இணையாக ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” கதாநாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.
‘அவரது ஈடுபாடு வியப்புக்குரியது . தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும் , ஜனரஞ்சகத்தில் ஒரு விகிதம் கூட குறைய கூடாது என்ற எண்ணத்தில் எல்லா காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் .

நகைசுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என்று எல்லா காட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘ எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் தயாரிக்கபடும் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும்‘ என்று கூறுகிறார் நகைசுவை நடிகரும், இந்த படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத்.

கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘49-ஓ’

E-mail Print PDF

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது.

உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ’. ஆரோக்கிய தாஸ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ‘49-ஓ’ படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக இப்படம் அமையும். அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்கும்.

முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே குன்றத்தூரில் ஆரம்பமாகி பொங்கல் வரை நடைபெற உள்ளது. ‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அது மக்களிடம் எளிதில் சென்றடையும். நிச்சயம் இந்தப்படத்தின் மூலமாக 49-ஒ பிரபலமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 84

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்