Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: சைவமும் தமிழும் சமயநெறி மாசிமகத்தின் மகிமையும் சிறப்பும்

மாசிமகத்தின் மகிமையும் சிறப்பும்

E-mail Print PDF

மாசி மாதம் வரும் பௌர்ணமி திதியன்று; சந்திரன் சிங்கராசியில் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளே மாசிமகம் என்றழைக்கப் பெறுகின்றது. இந்நாள் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான நன்நாளாகும். இத் திருநாள் 19.02.2019 செவ்வாய்க்கிழமை அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

புனித நீர்நிலைகளில் மகம் நீராடலுக்கு மிகவும் புகழ்பெற்றது கும்பகோணம் மகாமகக் குளம். இத்திருக்குளத்தில் இருபது புனித தீர்த்த  தேவதைகளின் தீர்த்த கிணறுகள் உள்ளன.

அவை அனைத்திலும்  மாசிமக நட்சத்திரத்தன்று, உடலுக்கு வலிமையும், புனிதத்தையும் தரக்கூடிய அற்புதமான காந்த சக்தி இயற்கையாகவே தோன்றுவதாக ஞான நூல்கள் கூறுகின்றன. மேலும்,  புண்ணிய நதிகள் அனைத்தும் அங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

மகம் நட்சத்திரத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி, குளத்தை மூன்று முறை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும் என்றும், இக்குளக்கரையில் வேதவிற்பன்னர் உதவியுடன் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிட்டும். இதனால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.

மகம் நட்சத்திரத்தன்று இங்கு தீர்த்தவாரி நடைபெறும். குடந்தைத் திருத்தலத்தில் அருள்புரியும் எல்லா சிவாலயங்களிலிருந்தும் சுவாமியின் உற்சவத் திருமேனிகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வருகை தந்து, சுபஓரையில் வழிபாட்டுடன் தீர்த்தவாரி காண்பார்கள்.

இதேபோல் அங்குள்ள பெருமாள் கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளும் சக்கரப் படித்துறைக்கு வந்துசேர, தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடைபெறும்.  அந்த சுபவேளையில் பக்தர் பெருமக்கள் தீர்த்த வாரியில் கலந்துகொண்டு நீராடி புனிதம் பெறுவார்கள். சிவனுக்காக அஸ்திர மூர்த்தியையும் (சுற்றுப் பலி), பெருமாளுக்காக சக்கரத்தாழ்வாரையும் கடல் நீராடச் செய்வதற்கு தீர்த்தவாரி என்று பெயர்.

அமுதம் வேண்டி திருபாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதனால் விஷ்ணு சமுத்திரராஜனின் மருமகன் ஆனார்.

மகாவிஷ்ணு தன் மகளை மணந்து கொண்டு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி அவர்களை தரிசிப்பது என சமுத்திரராஜன் வருந்தினார். தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள். திருமால் ஆண்டிற்கு ஒரு முறை மாசிமகம் தினம் தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் அருளினார்.

மீனவ குலத்தில் அவதரித்த கருணாசாகரியான அம்பிகையை மணக்க காலம் கனிந்தபோது, ஈசன் மீனவர்போல் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடம் சென்றார். அங்கு அவர் ராட்சத திமிங்கலத்தை அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி கொடுத்து மீனவப் பெண்ணை மண்ந்தார்.

மீனவர் தலைவன், இறைவனை நோக்கி "தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்க அருள் புரிய வேண்டும்' என வேண்டினார். அதற்கிணங்க ஈசன், "மாசி மகத்தன்று கடல் நீராட வருவேன்' என்று அருள்புரிந்தார். மாசி மகம் தினத்தன்று ஈசன் வேடமூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்குச் சென்று அருள்பாலிப்பதாக ஐதீகம்.

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடுவதும்; புண்ணியத்தைத் தரும், பாவங்கள் தொலையும். இத்தினத் தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்றும் ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபவேண்டும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

அன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும். சதுரகிரி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை ஷேத்ரங்களில் கிரிவலம் செல்வது சாலச் சிறந்தது.

மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிட்சமாக இருக்கும்.

உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.

அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம்.

மாசி மாதம் மக நட்சத்திர பவுர்ணமி தினத்தன்று திருண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள், மனித வடிவில் பறந்து வருவர்.

ஆனால், அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும். இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களின் பிரச்சினைகள் அடுத்த சில மாதங்களில் (அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.

குறிப்பாக மகம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்கள் அனைவரும் இந்த மாசி மகத்தை – நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்வது அவசியம். அன்றைய தினம் , இறை வழிபாடும், இறை தரிசனமும், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு தேவையான மன வலிமையை தரும்.

மாசிமகம் தினத்தில் நிகழ்வுற்றதாக புராணங்கள் கூறும் சில சம்பவங்கள்

1. மயிலாடுதுறைக்கு  அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.

2. இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.

3. கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.

அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். அப்போது, "திருநல்லூர்  கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.

4. தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமையவளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார். அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.

5. மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.

6. வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மகம் நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.

பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.

மாசி மாத்தின் சிறப்புக்கள்

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தில் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமகம் ஸ்தானம் செய்வேருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். அன்று புண்ணிய நதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கப் பேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக் கலாம் என ஈசனே திணறுவாராம்.

17. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

18. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

19. மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.

20. ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப விழா நடக்கும் சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.

21. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறுகிறது.

22. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண் டத்தில் இடம் கிடைக்கும்.

23. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

24. மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

25. கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.

சுபம்

 

 

 

6649 -09.02.2019

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS