
ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றிய நிர்வாக சபைக்கூட்டம் 12.11.2012 அறிக்கையும், ஒரு பார்வையும்
ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றிய நிர்வாக சபைக்கூட்டம் 12.11.2012 அன்று பீலபெல்ட் மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வு இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. இறைவணக்கத்தை தொடர்ந்து ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தலைவர் தலமையுரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து செயலாளர் இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணங்களையும், பண்மக்கள் ஒன்றியம் செய்ய இருக்கும் செயற்றிட்டங்களை காரணம் காட்டி உரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு தீர்மானத்தின் போதும் தீர்மான திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகவும், உணர்வுபூர்வமாகவும் விவாதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானத்தையும் அலசி ஆராய்கின்றபொழுது அவர்கள் ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அவர்கள் இந்த ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பணி புரிகிறார்கள் என்பதும் அங்கே காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் தொடர்ந்து விவாதிக்கும் போது ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த இளையோர்களை இவ்வமைப்புக்குள் உள்வாங்குவது பற்றியும், இனிவரும் காலங்களில் எப்படிஎப்படியாக எம்நிகழ்வுகளை நடாத்துவது, எமது ஊரில் வசிப்பவர்களுக்கு எவ்வாறான உதவிகளை எமது ஒன்றியம் வழங்க முடியும், இளையோர்களுக்கு எப்படியான உதவிகளை செய்ய முடியும் என பல விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விவாதத்தின் முடிவாக பல ஆரோக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலில் ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் புகைப்படம், மற்றும் ஒளிநாடாக்கள் தொடர்பிலான ஊடகஅமைப்பாளராக திரு தவம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தீர்மானத்தை திரு கேதாரம் அவர்கள் தாக்கல் செய்ய உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேறியது.
அடுத்ததாக பீலபெல்ட் மாநகர ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் நிதிக்கு பொறுப்பான அமைப்பாளராக திருமதி தீபாராணி சுதாகரன் தேர்வுசெய்யப்பட்டார். இந்த தீர்மானத்தை ஜெனா கொண்டுவர அனைத்து உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேறியது.
இதனை தொடர்ந்து மேலதிக உறுப்பினர்கள் திரு சேகர், திருமதி துசி கோபாலகிருஸ்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த கூட்டத்தின் மேன்மை தங்கிய தீர்மானத்தை எம்மூரின் சமூகசேவையாளரும், சிறந்த பேச்சாளருமான திரு அருளானந்தம் அவர்கள் எமது ஊர் உறவுகளின் பிள்ளைகளை எவ்வளவுக்கு கல்வி அறிவு உள்ளவர்களாக உயர்த்தமுடியுமோ அவ்வளவிற்கு நாங்கள் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு அவர்களின் கல்வி வளர்ச்சி உயர உயர எமது கிராமமும் எல்லா வகையிலும் முன்னேறுவதற்கும் அது அடிப்படையாக அமையும் எனவும் கூறியதோடு அதன் முதல்படியாக நாங்கள் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் ஐந்தாம் வகுப்பில் தோற்ற இருக்கும் புலமைப்பரிசிலுக்கான பரீட்சையில் சித்திஅடைய வைப்பதற்காக அவர்களுக்கு தேவையான முக்கிய பாடங்களுக்காக அப்பாடங்களில் விசேட திறமையுள்ள ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி பகுதிநேர வகுப்புகளை (ரியூசன்) ஒழுங்கு செய்துகொடுப்பதோடு அப்பரீட்சையில் சித்தி அடையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதியாக ஒருதொகைப்பணத்தை அவர்களது பெயர்களில் வங்கியில் வைப்பில்இட்டு அவர்களை ஊக்கிவித்தல்.
இவ் ஊக்குவிப்பு நிதியானது சித்தி அடைந்த மாணவர்களை மட்டுமன்றி எதிர்காலத்தில் இப்பரீட்ச்சைக்கு தோற்றும் மாணவர்களையும் மேலும் ஊக்குவிப்பதாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அடுத்து இதேபோன்று க.பொ.த சாதாரண தர பரீச்சைக்கு தோற்றும் மாணவர்களையும் அவர்கள் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு தெரிவாகும் வகையில் சித்தி அடையும் பொருட்டு அவர்களுக்கும் அவர்களுக்கான முக்கியமான பாடங்களுக்கு விசேட ஆசிரியர்கள் மூலம் விசேட பகுதிநேர வகுப்புக்களை ஒழுங்கு படுத்தி கொடுத்தல்.
அத்துடன் க.பொ.த உயர்தரவகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இதேபோன்று பகுதிநேர வகுப்புக்களை ஒழுங்கு செய்து கொடுத்து பட்டப்படிப்புக்கு அவர்கள் தெரிவாகும் வகையில் அவர்களுக்கும் நாம் இப்பேர் உதவியை வழங்குவதோடு இவர்களுக்கும் நாம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதுபோன்று ஊக்குவிப்பு நிதியினை ஒரிரு மடங்குகளாக அதிகரித்து வழங்கி எம்மாணவர்களை ஊக்குவிப்பதோடு பட்டதாரிகளாக ஆக்கமுடியும் என வேண்டியதோடு, இதற்கான வேலைகளை சிறந்த முறையில் செய்வதற்கு அங்குள்ள எமது மிகவும் படித்த முதுகலை பட்டதாரி (எம்.ஏ) முதுகலைப்பட்டப் படிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் மாணவர்கள், மற்றும் அரசசேவையில் உயர்பதவி வகிப்பவர்களும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி கூறியுள்ளார்கள் என்பதையும் தெரிவித்து இருந்தார்.
அத்துடன் இதனை எமது ஒன்றியத்தோடு ஏனைய எமது அயல்நாட்டு ஒன்றியங்களையும் எம்மோடு சேர்ந்து இத்திட்டத்தை நாம் எல்லோரும் பொதுத்திட்டமாக ஏற்று நிறைவேற்ற ஆவன செய்யவேண்டும் எனவும் தாழ்மையாகவும், பணிவோடும் கேட்டுகொள்வதாக கூறிஇருந்தார்.
இதனை செவிமடுத்திருந்த அத்தனை நிர்வாக சபை உறுபினர்களும் தாம் இதனை ஏற்றுக்கொள்வதாகவும், நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் ஒருமித்த குரலில் உறுதி கூறியிருந்தார்கள்.
இந்த செயற்றிட்டத்தை முழுமையாக செய்கின்றபோது எமது கிராமத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும், காபொத சாதரணதர பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும், பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியுமென எம்வொன்றியம் நம்புகிறது.
எமது கிராமத்தில் வசிக்கும் கல்வியியலாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியம் துரிதகதியில் மேற்கொள்ளும்.
இந்த திட்டத்தின் மூலம் எமது ஊரின் எதிர்காலத்தலைவர்களாக விளங்கக்கூடிய வருங்காலசமுதாயத்தை கல்வியியலாளர்களாகவும், புத்திஜீவிகளாகவும் மாற்றிப்படைக்க முடியும் என நம்புகிறோம்.
அதனாலே நாம் கல்வியை அடைந்தால் அனைத்தையும் அடையலாம் என்ற குறிக்கோளுடன் இந்த திட்டத்தை முதலில் எடுத்திருக்கிறோம்.
இந்த திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்க ஜேர்மனிய பண் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டிநிற்கிறோம்.
நன்றி
செயலாளர்,
பண்மக்கள் ஒன்றியம் ஜேர்மனி.