Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் "எம் கடன் பணி செய்து கிடப்பதே" - பணிப்புலம்.கொம்

"எம் கடன் பணி செய்து கிடப்பதே" - பணிப்புலம்.கொம்

E-mail Print PDF

புதிய பரிணாமம்!  புதிய பரிமாணம்!  "எம் கடன் பணி செய்து கிடப்பதே" என நாம் கொண்ட பணியில், மேலும் ஒரு வளர்ச்சிப்படியாக, விரிவாக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட பணிப்புலம்.கொம் இணையம் இதோ உங்கள் முன் விரிகிறது.

 

எமது ஊரின் பெருமைகளை உலகறியச் செய்வதற்காகவும், இலைமறைகாய் போல் இருக்கும் எம்மூர் படைப்பாளிகளை ஊக்கம் கொடுத்து அவர்களை பிரகாசிக்க செய்யவும், உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எம் உறவுகளை ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாகவும் பணி ஆற்றும் உன்னத பொறுப்புகளோடு, 05.07.2000 அன்று பணிப்புலம்.கொம் இணையத்தளம் அரியணை ஏறியது! பத்து வருடங்களிற்கு பதிவில் இருந்த இவ் இணையம், மக்களுக்கு சேவை செய்யும் தளமாக உங்கள் முன் அவதரித்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தோடி விட்டன!

வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல நவீன வசதிகளைக் கொண்டதாகவும், சகல தரப்பினருக்கும் பயன் தரும் வகையிலும் இவ் இணையத்தை காலத்திற் கேற்ப வடிவமைக்க வேண்டிய தேவையும், கட்டாயமும் எம்மைத் தூண்டியதால் இதனை நவீன முறையில் வடிவமைத்து தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்..

பணிப்புலம்.கொம் தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், தேவைகளையும் இயலுமான வரை செவிமடுத்து நிறைவேற்றுவதில் எப்பொழுதுமே தீவிரமாக இயங்கி வந்துள்ளது.  பல வசதிகளோடு விரிவாக்கப்பெற்ற சேவைகளை தாங்கிவரும் இப்புதிய வடிவமைப்பும் கூட தங்கள் வேண்டுதல்களை செவிமடுத்ததின் செயல் வடிவ ஆதாரமே.

பணிப்புலம்.கொம் என்பது வெறும் ஒரு இணையத்தளம் அன்று.  இது ஒரு உன்னத சிந்தனை.  எமது ஊரின் ஆக்கபூர்வமான அடையாளங்களின் ஒருமித்த முகவரி.  இதற்கு ஒரு தனிப்பட்ட உரிமையாளரோ, தனிப்பட்ட அமைப்போ கிடையாது.  இது தான் தாங்கும் மக்களின் ஒருமித்த வடிவத்தினையே தன் எண்ணப்பாடாகக் கொள்ளும்.  இந்த எண்ணக் கருவிற்கு செயல் வடிவம் கொடுப்பவர்களே இதன் படைப்பளிகளாகிய யாம்.

இங்கே அறிவுக்கும், விவேகத்திற்கும் அதி முக்கியத்துவம் கொடுக்கப் பெறுகின்றது.  இத்தளத்தில் உருவாக்கம் பெற்று, பிரசுரிக்கப்பெற்ற பல ஆக்கங்கள், பல இணைய தளங்களில் பிரதி செய்யப்பட்டு வெளிவந்தமையும் இத்தள ஆக்கங்களினதும் படைப்பாளிகளினதும் தரத்திற்கு ஒரு சான்றாகும். சேவையே அடித்தளமாக  கொண்டு இயங்கிவரும் இவ் இணையத்தளம்,  திறமைசாலிகளைப் பாராட்டவும் தவறவில்லை. இவ்விணையம் நம் ஊரில் இருந்து பல படைப்பாளிகளைள் அறிமுகப்படுத்தியுள்ளதோடல்லாது புதிய படைப்பாளிகள் பலரை உருவாக்கியும் வருகிறது!

வளர்ந்து வரும் இத்தள பார்வையாளர்களின் எண்ணிக்கை, எம்மை மேலும் தரமான ஆக்கங்களையும், விபரங்களையும் தேடி செல்ல ஒரு உந்து சக்தியாக அமைகின்றது. இதன் பிந்திய தகவலாக, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 21065 தடவைகள் எமது தளத்தை மக்கள் பார்வை இட்டுள்ளனர் என்பது எம் சமுதாய வட்டத்திற்கென இயங்கும் இணையத்திற்கு ஓர் மாபெரும் இலக்கு.  இப் பார்வையாளர் தகவலானது மக்களிடம், இதற்கு எவ்வகை வரவேற்பு உள்ளது என்பதற்கும், மக்கள் இதனை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதற்கும், கட்டியம் கூறுவதாக அமைகிறது.

பணிப்புலம்.கொம்  இதுவரை தாங்கி வந்த விளம்பர சேவை, திருமண வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து, பூப்புனித நீராட்டு விழா, கருத்து பரிமாற்றல், ஆன்மீகம், மருத்துவம், குழந்தைகளுக்கான பக்கம், திருமண சேவை, மகளிர்களுக்கான பிரிவு, சினிமா, மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய சகல இலவச சேவைகளும் ஒரு முழு கட்டமைப்பாக இவ்விணையம் உங்கள் முன் தவழவிடப்படுகிறது.

கருத்து பரிமாற்றல் - ஆக்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஒழுங்கை ஏற்படுத்தி தந்ததோடல்லாது, ஒரு முழு அளவிலான கருத்தாடல் தளமும் ஒழுங்கமைக்கப் பெற்றுள்ளது.  நீங்கள் விரும்பும் தலைப்பை நீங்களே அறிமுகம் செய்து, அது பற்றி மற்றவர்களோடு நீங்கள் கருத்தாடல் செய்யவும், அல்லது மற்றவர்களின் கருத்துகளோடு நீங்கள் கருத்தாடல் செய்யவும் இக்கருத்தாடல் தளம் வழிசமைக்கும்.

அனைவரினது கருத்துக்களுமே முக்கியமானவை. கருத்து பரிமாறல்களில், ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளப்பட கூடாததும்  அநாகரீகமான செயலுமாகும்.  ஊரில் இருக்கக்கூடிய, சர்ச்சைக்குரிய விடயங்களை, ஒருதலைப் பட்சமாக எழுதி, அதில் உச்சக்கட்டம் வரை சென்று, ஒருசில மக்களின் மனங்களில் வேற்றுமை மற்றும் காழ்ப்புணர்ச்சிகளை உண்டுபண்ணுவது எப்பொழுதுமே உடன்பாடான விடயம் அன்று.  ஆகவே, கருத்து பரிமாற்றல் பகுதியில் ஆக்கபூர்வமான கருத்துகளோடு மட்டும் மோதிக்கொள்ளுங்கள்!

விரிந்து பரந்து வாழும் எம் சொந்தங்களிடையே, உறவும் அறிமுகங்களும் தொடர்பும் அற்றுப் போகும் நிலையில் எம் ஊர் மக்கள் வாழ்ந்து வருவதால், எம்மவரிடையே  திருமண சொந்த பந்தங்களை வளர்ப்பதற்காக கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பெற்ற திருமண சேவை, இப்புதிய கட்டமைப்பு மூலம் முழுவீச்சில் செயல் பெற ஆரம்பிக்கின்றது.  திருமண சேவையில் கிடைக்கப்பெறும் அனைத்து தரப்பு தகவல்களும்  இரகசியம் பேணப்பெறும்.

இத்தளம் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம். இதுவரை காலமும் இவ் இணையத்தள மூலம் ஊருக்கு அரும்பெரும் தொண்டினை செய்வதற்கு எமக்கு உறுதுணையாக இருந்த அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் நாம் நன்றியுணர்வுடன் பற்றிக்கொள்கிறோம்! தொடர்ந்தும் இப் பணியை திறம்படச் செய்வதற்கு எமக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு நல்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

பணிப்புலம்.கொம்

16.12.2010

 

(ஒரே நேரத்தில் 2345 நேயர்கள் பார்வையிட்ட பணிப்புலம்.கொம்)

“ஊரின் வளர்ச்சியே எங்கள் உயற்சி”

பணிப்புலம்.கொம்


1247.14.04.2014

BLOG COMMENTS POWERED BY DISQUS