Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை சினிமா

இனி அவன் - திரை விமர்சனம்

E-mail Print PDF

இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்' இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று.

இலங்கையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அசோக ஹெந்தகமவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்து தனது ஊரிலேயே சாதாரணமான வாழ்க்கையை தொடரவிரும்பும் ஒரு இளைஞனின் கதை.

பஸ் ஒன்று மெதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைய ஆரம்பிப்பதுடன் படமும் மெதுவாக நகருகிறது. முன்னாள் போராளியான இளைஞனுக்கு (தர்ஷன் தர்மராஜ்) அவனது ஊரில் தாயை அவனது காதலியையும் தவிர ஏனையவர்கள் அவனது மனநிலையை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்.

ஆனால் எப்படியாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ போராடுகிறான். இந்நிலையில் நகைக்கடையொன்றில் வேலை கிடைக்கிறது. பின்னர் அக்கடை முதலாளியும் வெளிநாடுகளில் வாழும் இவனது பழைய நண்பர்களும் இணைந்து மீண்டும் ஆயதக்கலாச்சரத்திற்கு நாயகனை தள்ளிவிடுகிறார்கள்.

தொடர்ந்து நாயகன் அதிலிருந்து மீண்டானா? அல்லது மாண்டானா? என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. இரவு நேர கடற்கரை காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள லைட்டிங் தவிர ஏனையவை சிறப்பு.

அத்துடன் முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்திய விதமும் அருமை. மீண்டும் தவறுதலாக ஆயுதக் கலாச்சாரத்திற்கு சென்றதை உணர்ந்துகொண்ட போது ஏற்படுகின்ற பரிதவிப்பையும் சிறப்பாக காட்டுகிறார்.

இவர்கள் தவிர ஏனைய கதாபாத்திரங்களும் தேவையானதை செய்து படத்தினை ரசிக்க உதவியிருக்கிறார்கள். குறிப்பாக சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா பாத்திரத்தினை உள்வாங்கிருக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில வசனங்களும் சில இடங்களில் படத்துடன் ஒன்றிப்போகவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட கோளாறு போலவும் தெரிந்தது. இருப்பினும் ஒன் லொக்கேசன் இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைகிறது.

வசனங்கள் குறைவு என்றாலும் யதார்த்தமாகவும் அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரபாகரனை கேள்வியா கேட்டிங்க?, பிரபாகரன் வென்றிருக்கலாம் என்ற இடங்கள் பன்ச் ரகமாய் அமைகிறது.

நிறைகள் அதிகமிருந்தபோதிலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனரின் திரைக்கதையிலிருக்கும் நேர்த்தி முதல் அரை மணி நேரத்திற்கு எடிட்டிங்கில் இல்லாமல் போனது திரைக்கதையை மிக மெதுவாக நகரச்செய்வது வருத்தம்.

இதுமட்டுமன்றி ஒப்பனை ஒரு சில இடங்களில் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நிரஞ்சனி சண்முகராஜாவின் மேல் பூசப்பட்டுள்ள கருப்பு சாயம் பட்டும் படாமல் இருக்கிறது. இயல்பான படமொன்றிக்கு ஒப்பனையில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே உழைத்திருக்கலாம்.

இயக்குனரின் தமிழர்களின் மீதான பார்வை பல இடங்களில் சிறப்பாக பளிச்சிடுகிறது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் நாயகனுக்கு உதவ ஒரு சிங்கள வாகன ஓட்டுனர் கேட்க பதிலேதும் இல்லாமல் திருத்த வேலையை தொடர மோட்டார் சைக்கிளின் கோளாறும் திருத்தப்பட்டுவிடும். பின்னர் அந்த சிங்கள நண்பருக்கு நன்றி சொல்லி வழியனுப்புகிறார்கள். இந்த இடத்தில் நாயகனுடன் சேர்த்து தமிழர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் ஒரு உணர்வை ஏற்படுத்தியிப்பது மகிழ்ச்சி.

அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.

ஆனாலும் தமிழர்கள் அழிவதற்கு அவர்களே காரணமாகின்றனர் என நாசுக்காக காட்டியிருக்கும் இயக்குனர் இறுதியில் மீண்டும் யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை கைவிட்டதாக காட்டாமல் போனது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் முடிவில் வரும் எழுத்தோட்டத்தில் இனியவன் என்று சிங்களத்தில் வருவதை கவனத்தில் எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் யுத்தத்தினை அனுபவித்தவர்கள் மீண்டுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை என்பதை உணர்த்தி நாயகன் ஒரு பக்கம் விரைந்து செல்ல கெமரா வானத்தை நோக்கி சென்று ஓங்கி வளர்ந்திருக்கும் பனமரங்களை காட்டியவாறு தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதை உணரவைத்து இனியவனாய் முடிகிறது இந்த 'இனி அவன்'.

உறவுக்காரரை மணக்கிறார் த்ரிஷா?

E-mail Print PDF

கொலிவுட்டில் ராணா, விஷால் போன்ற நடிகர்களுடன் இணைத்து நடித்த த்ரிஷா பல கிசுகிசுக்களின் மத்தியில், தனது உறவுக்காரரை மணக்க இருக்கிறார்.

ராணா, விஷால் கிசுகிசு மத்தியில், ராணாவை திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் பரவின. அதற்கு த்ரிஷா நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இப்போது த்ரிஷா இந்த ஆண்டு இறதிக்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறார் என்ற செய்திகள் மீண்டும் வெளியாகியிருக்கிறது.

ஆனால் சினிமாக்காரர்கள் யாரும் அவரது மனதில் இல்லையாம். அவரது உறவுக்காரர் ஒருவர்தான் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்கிறாராம்.

இரண்டு குடும்பத்துக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாம்.

தற்போது த்ரிஷா பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் யாராவது புதிய படங்கள் சம்பந்தமாக அவரை தொடர்பு கொண்டால், கைவசம் உள்ள படங்கள் அனைத்தும் திரைக்கு வந்த பின்பு தான் புதிய படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று நாசுக்காக பதில் கொடுத்து நழுவிக்கொண்டு வருகிறார்.

அதேசமயம், தான் திருமணம் செய்து கொள்கிற சமாச்சாரம் சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களுக்கு தெரிந்து விட்டதால், இந்த செய்தியை இப்போதைக்கு வெளியிட வேண்டாம்.

இதனால் உங்களது படங்களின் வியாபாரம் தான் பாதிக்கும் என்று கூறி அவர்களின் வாயடைத்து வைத்திருக்கிறார் த்ரிஷா.

பிரெண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘சொல்ல மாட்டேன்’.

E-mail Print PDF

05.03.2013

புதுமுகங்கள் சக்தி, ஜிஸ்மி, ஆதிரா, ஆதித்யா, ஜித்தன் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, பாலு இசை, ராஜேஷ்மோகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் என். பி. இஸ்மாயில் கூறும்போது, ‘தன்னை கொடூரமாக கொலை செய்தவர்களைப் பழிவாங்க, கல்லாக மாறிய ஒருவரைப் பற்றிய திகில் கதை கல் பேசும் கிராபிக்ஸ்.
காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறுகிறது. 15 ஆம் திகதி ரிலீசாகிறது’ என்றார்.

‘கோச்சடையான்’ திருப்புமுனையாக அமையும் - ரஜினிகாந்த்

E-mail Print PDF

என் சினிமா பயணத்தில் கோச்சடையான் படம் திருப்புமுனையாக அமையும் என நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஜாக்கிஷராப், சரத்குமார், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு லண்டன் பைன்வுட் ஸ்டூடியோவில் தொடங்கி திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக லண்டன், சென்னை ஆகிய இடங்களில் கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று முடிவடைந்தன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் கதாசிரியர் கே. எஸ். ரவிக்குமார், படத்தின் இயக்குநர் செளந்தர்யா, ஆர். அஷ்வின் உள்ளிட்ட படக் குழுவினர் கோச்சடையான் படத்தை வியாழக்கிழமை பார்த்தனர்.

படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் இயக்குநரும் தன் மகளுமான செளந்தர் யாவை வெகுவாக பாராட்டியதுடன் தன் சினிமா பயணத்தில் கோச்சடையான் படம் மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்ட வேலைகளான டப்பிங், ரீரெக்கார்டிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பணிகள் மார்ச் மாதம் 15ம் திகதி தொடங்கி லொஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹொங்கொங் ஆகிய இடங்களில் நடைபெறும் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் : பாரதி ராஜா

E-mail Print PDF

14.02.2013

காஜல் ஆகர்வால் திமிர் பிடித்தவர், யாரையும் மதிக்கமாட்டார் அவரை அறிமுகப்படுதியதை எண்ணி வருத்தப்படுகின்றேன் என இயக்குனர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் காஜல் ஆகர்வால் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், தமிழில் நடிகர்களுக்குத்தான் மதிப்பு. நடிகைகளுக்கு மதிப்பே இல்லை. தெலுங்கில் தான் நடிகைகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று கூறினார்.

இந்த கருத்திற்கு பலதரப்பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையிலேயே இயக்குனர் பாரதி ராஜா மேற்படி கூறியுள்ளார்.

காஜல் குறித்து பாரதிராஜா கருத்து தெரிவிக்கையில்இ அந்த பொண்ணு ரொம்ப திமிர் பிடித்தவர். யாரையும் மதிக்காதவர். நான் அவரை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

பொம்மலாட்டம் படத்தின் மூலம் காஜல் ஆகர்வாலை அறிமுகம் செய்துவைத்தவர் இயக்குனர் பாரதி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் பேச்சில் இணக்கம்

E-mail Print PDF

அரச அதிகாரிகள், முஸ்லீம் குழுக்கள் மற்றும் கமல்ஹாசன் தரப்பினரிடையே நடந்த 6 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் ஊடகங்களுக்குப் பேசியுள்ளார்.
படத்தில் வரும் சில ஒலிக் குறிப்புக்களை நீக்க தான் ஒப்புக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஆனால் எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் நீக்க சம்மதித்துள்ள விடயங்களை திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் மத்திய சபையிடமும் சமர்ப்பிக்கவுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.

பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழக முதல்வருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இரு தரப்பும் திருப்தி
தமிழக அரசு படத்தை வெளியிட விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து தாம் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்த கமல், அரசும் தடையை திரும்பப் பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
படம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

தமது கோரிக்கைகளை கமல்ஹாசன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தையில் முழு திருப்தி கிடைத்துள்ளதாகவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட முஸ்லீம் தரப்பினர் கூறியுள்ளனர்.

Page 6 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்