Tuesday, Feb 19th

Last update06:41:01 AM GMT

You are here: பல்சுவை சினிமா கோச்சடையான் திரைப்பட விமர்சனம்

கோச்சடையான் திரைப்பட விமர்சனம்

E-mail Print PDF

நடிப்பு: ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி

இசை: ஏ.ஆர்.ரகுமான் இயக்கம்: சவுந்தர்யா அஸ்வின் தயாரிப்பு: ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல்.

கலிங்கபுரியும், கோட்டைப்பட்டினமும் பகை நாடுகள். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராணா யாருக்கும் தெரியாமல் கலிங்கபுரிக்குள் நுழைந்து, படித்து வளர்ந்து, போர்க்கலை பயின்று அந்த நாட்டுக்கே தளபதியாகிறார். பல சிற்றரசுகளைப் பிடித்து கலிங்கபுரியை பேரரசாக்குகிறார். கலிங்கபுரியில் உள்ள ரகசிய குகைக்குள் முன்பு போர்க்கைதிகளாக பிடிபட்ட கோட்டைப்பட்டின படை வீரர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அடிமையாக நடத்துவதை விட, போர்வீரர்களாக மாற்றி கோட்டைப்பட்டினத்தின் மீது படையெடுத்தால், சொந்த நாட்டு வீரர்கள் மீது கோட்டைப்பட்டின வீரர்கள் தாக்க மாட்டார்கள். ஒருவேளை தாக்கினாலும், நம் வீரர்கள் இறப்பது குறையும். நாம் கோட்டைப்பட்டினத்தைப் பிடித்து விடலாம் என்கிறார் ராணா. அதன்படி அடிமைகள் படையெடுக்கிறார்கள்.

எல்லையில் எதிரிகளை சந்திக்க வேண்டிய ராணா, கோட்டைப்பட்டின இளவரசர் சரத்குமாருடன் கைகுலுக்குகிறார். தான் வீரர்களாக மாற்றிய அடிமைகளை, கோட்டைப்பட்டின படைக்கு ஆதரவாகத் திருப்புகிறார். ‘கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கோச்சடையானின் மகன்தான் நான், அடிமைப்பட்டிருக்கும் வீரர்களை மீட்கவே கலிங்கபுரிக்குள் நுழைந்ததாக அறிவிக்கிறார்’ ராணா. கோட்டைப்பட்டினத்துக்குள், அதாவது, சொந்த நாட்டுக்குள் தளபதியாக நுழைகிறார் ராணா. தேசப்பற்று மிக்க ராணா, கோட்டைப்பட்டின மன்னர் நாசரைக் கொல்ல திட்டமிடுகிறார். அது ஏன்? உண்மையில் ராணா யார்? அவர் தந்தை கோச்சடையான் யார்? இறுதியில் வெல்வது யார் என்பதற்கான புதிரை அவிழ்த்து, விடை சொல்கிறது படம்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் சவுந்தர்யா அஸ்வினுக்கு முதலில் வாழ்த்து சொல்லலாம். ஒவ்வொரு பிரேமிலும் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்துக்கான அனல் பறக்கும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ராணாவின் எதிர்பாராத திருப்பங்கள், கோச்சடையானின் பிளாஷ்பேக் எதுவும் யூகிக்க முடியாதவையாக இருப்பது படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என ராணாவின் தோற்றம். விரிந்த தோள்கள், நீண்ட தலைமுடி, கொஞ்சம் ஆன்மீக பலம் கொண்ட கோச்சடையான் என, இருவேறு தோற்றங்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். தன் குரலாலும் வித்திசாயப்படுத்தி நடித்திருக்கிறார் ரஜினி. சரித்திரக் கதைக்கே உரித்தான வசனங்களை தன் பாணியில் ரஜினி உச்சரிக்கும் அழகே தனி. கோச்சடையான் ரஜினியின் ருத்ர தாண்டவம், ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.

தீபிகா படுகோன் நிஜத்தில் இத்தனை அழகா என்று சந்தேகிக்கும் வகையில் அவரது கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். வீரம், காதல், பிரிவு ஆகிய உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராணாவின் தங்கை ருக்மணி, தாய் ஷோபனா, நண்பர்கள் சரத்குமார், ஆதி, வில்லன் நாசர், ஜாக்கிஷெராப் ஆகியோரின் மேனரிசங்களையும், தோற்றத்தையும் அனிமேஷனில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மறைந்த நாகேஷை நிஜத்தில் உருவாக்கி அவரது உடல்மொழியையும், வசனத்தையும் அப்படியே மறு உருவாக்கம் செய்திருப்பது பிரமாதம். இதில் நடித்தவர் ரமேஷ்கண்ணா.

இத்தனை பிரமாண்ட படத்துக்கு அம்புலிமாமா ஸ்டைல் கதை இல்லாமல், வித்தியாசமான கதையை யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பிட்ட முக்கிய கேரக்டர்கள் தவிர, மற்ற கேரக்டர்கள் உயிரோட்டம் இல்லாத பொம்மைகளாக இருப்பதால், கதையோடு ஒன்றமுடியவில்லை. நாட்டு மக்களுக்கே தெரிந்த கோச்சடையானின் கதை, இளவரசிக்குத் தெரியவில்லை என்பதில் லாஜிக் இல்லை. பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்க வேண்டிய பிரமாண்ட தொழில்நுட்பத்தை, அவசரகதியில் அள்ளித் தெளித்திருப்பது படம் முழுக்க தெரிகிறது. என்றாலும், ஜாலியான டைம் பாசுக்கு கியாரண்டி தருகிறார், கோச்சடையான்.

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS