Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும் சங்கத்தமிழ் மஹாபாரதம் - விரிவாக பகுதி - 5

மஹாபாரதம் - விரிவாக பகுதி - 5

E-mail Print PDF


141--நன்மை யாருக்குச் செய்ய வேண்டும்..
நன்மை செய்யும் போதும் பண்பு அறிந்து செய்ய வேண்டும் என்பதை விளக்கும் கதை

மனித நடமாட்டம் அற்ற காட்டில் ஒரு முனிவர் தவம் செய்துக் கொண்டிருந்தார். கிழங்கு வகைகளையும், காய்களையும், கனியையுமே உண்டு முனிவருக்குரிய நியமங்களுடன் திகழ்ந்தார். கொடிய விலங்குகள் கூட அவர் தவ வலிமை அறிந்து அவருக்கு அருகில் அமைதியாகவே இருந்து விட்டுச் செல்லும். சிங்கம், புலி, கரடி போன்றவை கூட அவர் தவத்தை வியந்து அன்புடன் நடந்துக் கொள்ளும்.

இந்நிலையில் ஒரு நாய் மட்டும் அவரைப் பிரிய மனமின்றி அவருடனே இருந்தது முனிவரிடம் பக்தியுடன் நடந்துக் கொண்டது. அவருக்கு எது உணவோ அதுவே நாய்க்கும் உணவு. முனிவரிடம் அந்த நாய் சிநேக பாவத்துடன் நடந்துக் கொண்டது. அப்போது பசியும், தாகமும் ரத்த வெறியும் பிடித்த ஒரு சிறுத்தைப் புலி அந்த நாயை நோக்கிப் பாய்ந்து வந்தது. அது கண்டு அஞ்சிய நாய் முனிவரைத் தஞ்சம் அடைந்தது.'மா..முனியே! தாங்கள் தான் என்னை இந்தப் புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்' என வேண்டிக் கொண்டது.

முனிவர் அந்த நாயைப் பார்த்து, 'அஞ்சாதே! நீ இந்தப் புலியிடமிருந்து தப்பிப் பிழைக்க ஒரு வழி சொல்கிறேன். சற்று நேரத்தில் நீ ஒரு சிறுத்தைப் புலியாக மாறுவாய்' என்று கூறினார். உடன் நாய் புலியாக மாறியது. சீறி வந்த சிறுத்தைப் புலி இது கண்டு விலகிச் சென்றது.

சிறிது நேரம் கழித்து. பெரும் புலி ஒன்று இந்தச் சிறுத்தைப் புலியைக் கண்டு கொல்ல வந்தது. பெரும் புலியைக் கண்ட அஞ்சிய சிறுத்தை முனிவரிடம் சென்று முறையிட்டது. உடன் முனிவர் அச் சிறுத்தைப் புலியை பெரும் புலியாக ஆக்கி அதன் அச்சத்தைப் போக்கினார். நாயாக இருந்து, சிறுத்தைப் புலியாகி பின் பெரும் புலியாக மாறியதும் அந்நாய் மாமிசத்தை உணவாக உட்கொண்டது. காய் கனிகளை அறவே விலக்கியது. அசல் கொடிய விலங்காய் மாறியது.உணவுக்காக வெளியில் சென்று விலங்குகளைக் கொன்று தின்று பசியாறிய பிறகு முனிவரின் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு யானை ஆசிரமத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அது கண்டு புலி மீண்டும் முனிவரிடம் முறையிட்டது. கருணை கொண்ட அவரும் அதனை வலிமை மிக்க யானையாக்கினார். வந்த யானை இதைக் கண்டு திரும்பியது. ஆனால் யானையான நாயோ அஞ்சாமல் காடு முழுதும் உல்லாசமாக திரிந்து வந்தது.

அப்படியிருக்கையில் ஒரு நாள் சிங்கம் ஒன்று மலைக்குகையில் இருந்து காடு நடுங்குமாறு கர்ஜனையுடன் வெளிப்பட்டது. சிங்கத்தைக் கண்ட யானை முனிவரை நாடியது. இப்போது மாமுனிவர் யானையை சிங்கமாக மாற்றினார். இந்த சிங்கத்தைக் கண்ட வந்த சிங்கம் திரும்பியது. புதிய சிங்கம் காட்டு விலங்குகளுக்கு அச்சத்தை உண்டாக்கியது. அதைக் கண்டு அஞ்சிய விலங்குகள் அந்த ஆசிரமத்தின் பக்கமே வருவதில்லை.

ஆனால் வனவிலங்குகளில் வலிமை மிக்க சரபம் என்னும் மிருகம் ஆசிரமத்தின் அருகே வந்தது.அதனை எதிர்க்கும் ஆற்றல் சிங்கத்துக்குக் கூட கிடையாது. எட்டுக் கால்களுடன் நடை போட்டு அது வரும் போது அனைத்து மிருகங்களும் பயந்து ஓடும்.நாயாக இருந்து சிங்கமாக மாறிய விலங்கையும் பயம் விடவில்லை. சரபத்தைக் கண்டதும் அது மீண்டும் முனிவரை நாடியது. முனிவரும் அதையும் வலிமை மிக்க சர்பமாக்கினார். புதிய சர்பம் புதுத் தோற்றத்துடன் நிகரற்று திகழ்ந்தது. ரத்த வேட்டையாடியது. அதைக் கண்டு அனைத்து விலங்குகளும் பயந்து ஓடின.

புதுப்பிறவி எடுத்த சர்பம், திடமான ஒரு முடிவுக்கு வந்தது. இறுமாப்புடன் தன்னையே ஒருமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டது. அந்தக் காட்டில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கருதிய அதற்கு ஒரு ஐயம் எழுந்தது. ஐயம் வஞ்சனையானது. வஞ்சனை கொடுமையானது. 'இந்த முனிவரின் கருணையால் பல ஆபத்துகளிலிருந்து தப்பினேன். நாயாக இருந்து படிப்படியாக சர்பமாக மாறினேன்.

இப்போது என்னைவிட பலம் மிகுந்த விலங்கு இல்லை. இந்த முனிவர் கருணை மிக்கவர். இந்தக் கருணையே எனக்கு ஆபத்தாக முடியலாம். இரக்கம் உள்ள இவர் மற்ற விலங்குகள், பறவைகளைக் கூட என்னைப்போல மாற்றலாம். அப்போது எனக்கு அதிக எதிரிகள் உண்டாவார்கள். அப்படி ஏற்பாமல் இருக்க ஒரே வழி. இந்த முனிவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான். இவரைக் கொல்வது தவிர வேறு வழியில்லை. என்று நினைத்தது.

சர்பத்தின் வஞ்ச எண்ணத்தை தன் தவ வலிமையால் முனிவர் அறிந்தார். அந்த சரபத்தை நோக்கி 'தவத்தால் உயர்ந்த என் ஆற்றலை நீ உணர மாட்டாய். அனைத்து உலகும் என்னைக் கண்டு அச்சம் கொள்ளும். தரும நெறியிலிருந்து விலகும் யாரையும் நான் அழித்து விடுவேன். நாயாகக் கிடந்த நீ, சிறுத்தைப் புலியாக, பெரும் புலியாக,யானையாக, சிங்கமாக, சரபமாக மாறினாயே..அதெல்லாம் நானெல்லவா மாற்றி உன்னை ஆபத்திலிருந்து காத்தேன். கொஞ்சமும் நன்றியின்றி என்னைக் கொலை செய்யத் தீர்மானித்தாயே! நீ மீண்டும் நாயாவாய்' என்று சபித்தார்.சர்பம் மீண்டும் நாயானது.

ஒருவரைப் புரிந்துக் கொள்ளாமல் அவருக்கு நன்மை செய்யும் போது கூடத் தவறு நேரிடலாம்.

142-நல்லதை விரும்பாதோரும் உண்டு

நல்லதை விரும்புவோரும் உண்டு என்பதை விளக்க பீஷ்மர் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் புரிகை என்னும் நகரில் பௌரிகன் என்னும் மன்னன் இருந்தான். முற்பிறவியில் செய்த கர்மப் பயனால் அடுத்த பிறவியில், ஒரு சுடுகாட்டில் நரியாகப் பிறந்தான். நரி தன் முற்பிறவியைப் பற்றி எண்ணி வருத்தம் கொண்டது. அது பிறர் தரும் மாமிசத்தை உண்பதில்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் தருவதில்லை. வாய்மையே பேசி வந்தது. விரதம் நியமங்களைத் தவறாமல் நிறைவேற்றி வந்தது. மரத்திலிருந்து தாமே உதிர்ந்த கனிகள்தாம் அதற்கு உணவு. அது விலங்காகப் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சாதுக்களைப் போல் விளங்கிற்று. தான் பிறந்த சுடுகாட்டை விட்டு வேறிடம் சென்று வசிக்க அது விரும்பவில்லை.

இந்த நரியின் போக்கைக் கண்ட மற்ற நரிகள், நரிகளுக்கு உள்ள பொதுவான வாழ்க்கை முறையையே அது மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கூறின. சாதுக்களுக்கு விதிக்கப் பட்ட ஒழுக்கத்தை விட்டுவிட்டு நீ நரிக்குரிய பண்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.மயானத்தில் இருந்துக் கொண்டு மாமிசத்தை வெறுக்கக் கூடாது. நாங்கள் உண்பதை உனக்குத் தருகிறோம். சாதியின் இயல்புக்கு ஏற்ப நடந்துக் கொள்' என்றன. மன அடக்கமும் பொறுமையும் உள்ள அந்த நரி இனிய சொற்களால் பதில் உரைத்தது.'பிறப்புக்காரணமாக நான் நரிகளுக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ள மாட்டேன்.

எந்தக் குலமாய் இருந்தாலும் ஒழுக்கத்தை போற்ற வேண்டும்.எதைச் செய்தால் நம் இனத்தின் புகழ் பெருகுமோ அதையே நான் செய்ய விரும்புகிறேன். சுடுகாட்டில் நான் வசிப்பது குற்றமாகாது. ஆத்மாதான் நல்ல செயல்களுக்குக் காரணமாக இருக்கிறது. ஒருவர் வாழும் இடத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பிறப்பு ஒருவருடைய ஒழுக்கத்திற்குக் காரணம் அன்று. ஒழுக்கம் தான் குலத்தை உயர்த்துகிறது. ஆத்மாதான் நல்ல காரியங்கலையும் கெட்ட காரியங்களையும் செய்யத் தூண்டுகிறது. வசிக்கும் இடம் அன்று.ஆசிரமத்தில் இருக்கும் ஒருவன் அடாத செயல் புரிகிறான். ஆசிரமத்தில் இல்லாத ஒருவன் அறம் செய்கிறான். ஆகவே இருக்குமிடம் முக்கியமில்லை.நரியாகப் பிறந்ததால்-சுடுகாட்டில் வசிப்பதால்- மாமிசம் உண்ண வேண்டும் என்பதில்லை. ஆதலால் உங்கள் ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது' என்று கூறிற்று.

அந்த நரியின் ஒழுக்கம் மிக்க வாழ்க்கை காடெங்கும் உள்ள விலங்குகளால் பாராட்டப்பட்டது. ஒரு அரசப் புலி அந்த நரியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்றது. அதகைய ஞானம் நிறைந்த நரியை அமைச்சராக ஏற்க விரும்பியது. நரியை நோக்கி, 'நண்பனே! உன் புகழை நான் அறிவேன், என்னுடன் இருந்து விடு. எனக்கு நல்வழி காட்டு.உனக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம். நான் பிறந்த புலி ஜாதி கொடூரமானது. ஆயினும் நீ என் இதயத்தில் இடம் பெற்று விட்டாய். என் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொள்' என்று கேட்டுக் கொண்டது.

வலிமை மிக்க புலியை நோக்கி நரி பணிவுடன்..'வேந்தனே! உன் பெருமைக்கு ஏற்ப பேசினாய்.தருமத்தில் விருப்பம் உள்ளவரை நீ தேர்ந்தெடுப்பது நியாயமானதே! நீதியில் அன்பும் தருமத்தில் பற்றும் நன்மையில் விருப்பமும் உள்ளவர்களை நீ கண் போல போற்ற வேண்டும்.தந்தையைப் போல கருத வேண்டும். உன்னுடைய செல்வத்தில் திளைத்து இன்பம் பெற நான் விரும்பவில்லை. என்னுடைய போக்கு உன்னுடைய சேவகர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் கொடுமை செய்பவர்கள்.நம்மிடையே மோதலை உண்டாக்குவார்கள். நீ நல்ல மனம் கொண்டு பாவிகளைக் கூட மன்னித்து விடுகிறாய். எல்லா நன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன.

ஆனால் என் நிலைமையில் நான் திருப்தியடைகிறேன். எனக்குப் பதவி ஆசையில்லை.அரச சேவையையும் நான் அறியேன். அரச சேவையில் இருப்போர் பலவகையான நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும்.காட்டில் வசிப்பது விரத நியமங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. எனது வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. நல்ல தண்ணீர்,நல்ல காய்,கனி,கிழங்கு ஆகியவற்றை உண்டு விரதமேற்றிருக்கும் எனக்கு அச்சத்துடன் கூடிய அரச வாழ்வு வேண்டாம். அரச சேவையில் ஈடுபட்டு வீண் அபவாதத்திற்கு ஆளாகி நாசம் அடைந்தோர் பலர்.எனக்கு அந்தப் பதவி வேண்டாம்" என்றது நரி.

ஆனால் புலியோ வற்புறுத்தி வேண்டிக் கொண்டது. அதனால் நரி ஒரு நிபந்தனை விதித்தது. புலியை நோக்கி,'நீ உரிய மரியாதையை என்னைச் சார்ந்தவருக்குத் தர வேண்டும். எனது வாழ்க்கைமுறையை நான் தொடர்ந்து மேற்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும். நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்க மாட்டேன். காரணம் பொறாமை உள்ளவர்கள் என் ஆலோசனையைத் திரித்துக் கூறுவார்கள். உன் இனத்தாரின் நடவடிக்கை பற்றி என்னிடம் நீ கேட்காமல் இருக்க வேண்டும். என் யோசனைகளைப் புறக்கணிக்கும் அமைச்சர்களை நீ தண்டிக்கக் கூடாது. அதுபோலவே சினம் கொண்டு என்னைச் சார்ந்தவர்களையும் நீ எதுவும் செய்யக் கூடாது' என்று கூறியது. நரி.புலி, நரி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. பின்னர் நரி அமைச்சர் பதவியை ஏற்றது.

அமைச்சர் அவையில் இடம் பெற்ற நரி புகழத்தக்க செயல்களைச் செய்து வந்தது.அதனால் அமைச்சர் அவையில் இருந்த மற்ற புலிகள் பொறாமையில் புழுங்கின.கொஞ்சம், கொஞ்சமாக நரியின் செயல்களைக் குறை கூறத் தொடங்கின. உள்ளத்தில் பகையும், உதட்டில் நட்பும் கொண்டு பழகத் தொடங்கின. எப்படியேனும் நரியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் எனக் கருதிய அவை பலப்பல கதைகளைக் கூறிப் பொருள் ஆசை காட்டி மனத்தை மாற்ற முயற்சி செய்தன. முடியவில்லை. எப்படியும் நரியைத் தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன.

அவை விலங்குகளுக்கு அரசனான புலிக்குத் தயாரித்து வைக்கப் பட்டிருந்த மாமிசத்தைத் தந்திரமாக நரியின் வீட்டில் வைத்து விட்டன. அதனால் பசியுடன் இருந்த அரசனுக்கு உரிய நேரத்தில் மாமிச உணவு கிடைக்க வில்லை. அரசப் புலியும் திருடனைத் தேடி வருமாறு ஆணை பிறப்பித்தது. அந்த நேரத்தில் நரியின் பகைப் புலிகள் அதன் மீது பழியைச் சுமத்தின.மாமிச உணவை, மிகச் சிறந்த மேதாவி என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் உம் அமைச்சனான நரி திருடிக் கொண்டுப் போய்த் தன்னிடத்தில் வைத்துக் கொண்டது என்று கூறின.

நரியின் திருட்டுச் செயல் கேட்ட அரசப் புலி சினம் கொண்டது. உடன் நரியின் பகைப் புலிகள் 'இத்தகைய அற்பத்தனமான திருட்டு நரி எதைத்தான் செய்யாது? நீங்கள் நினைப்பது போல அந்த நரி அறிவு மிக்கது அல்ல. நாணயமானதும் அல்ல. தருமம் என்னும் பெயரில் அதருமம் செய்வதில் வல்லமை மிக்க நரியை எப்படித்தான் அமைச்சராக தேர்ந்தெடுத்தீரோ!. தங்களுக்குரிய மாமிசத்தைத் தன் வீட்டில் ஒழித்து வைத்திருக்கும் அந்த நரிக்கு விரதம் ஒரு கேடா? அந்த நரிதான் மாமிசத்தைத் திருடியது என்பதை நிரூபிக்க இப்போதே போய் அதனைக் கொண்டு வருகிறோம்' என்று கூறி அப்படியே கொண்டு வந்தன. அது கண்ட அரசப் புலி நரியைக் கொல்லத் தீர்மானித்தது.

இதனை அறிந்த புலியின் தாய் தன் மகனை நோக்கி.. 'மகனே. நன்கு ஆலோசித்துப் பார்.வஞ்சனையாளர்களின் பேச்சை நம்பாதே. ஒரு வேலையைச் செய்பவரிடையே பொறாமை ஏற்படும்.அந்தப் பொறாமை படிப்படியாகக் குரோத எண்ணத்தை வளர்க்கும். அதன் விளைவுதான் இப்போது நடப்பதும். நன்கு யோசித்துப் பார்.விரத சீலமுள்ள நரியா மாமிச உணவை நாடும். திருடும்..பொய், மெய் போலவும், மெய் பொய் போலவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கும். அவற்றை ஆராய்ந்து அறிதல் மன்னனின் கடமை.

ஆகாயம் கவிழ்ந்த வாணலியின் உள்பாகம் போலக் காட்சியளிக்கும். மின்மினிப் பூச்சிகள் நெருப்புப் பொறிகள் போல் தோன்றும். உண்மையில் ஆகாயத்தில் வாணலியின் தோற்றமும் இல்லை. மின்மினிப் பூச்சிகளிடம் நெருப்பும் இல்லை. எதையும் எண்ணிப் பார்த்து உண்மையைக் காண வேண்டும். அரசன் தன் மக்களில் யாரையும் கொல்ல முடியும். இது பெரிய காரியம் அன்று. உண்மை காண்பதுதான் பெரிய செயல்.உண்மையைக் கண்டுபிடி. பாவிகளான மற்ற அமைச்சர்கலீன் பேச்சைக் கேட்காதே. பழுது எண்ணும் மந்திரிகளின் பேச்சைக் கேட்டால் உனக்கு அழிவு நிச்சயம் ஏற்படும். மேலான நரியை பகைக்காதே' என்று கூறிற்று.

அரசப் புலி ஆலோசித்துப் பார்த்தது. நரியின் மீது பழி சுமத்துதல் தவறு என உணர்ந்து கொண்டது. நரியை அணைத்துக் கொண்டது.

நீதி நெறி உணர்ந்த நரிக்கு மான உணர்வு மிகுந்தது. பழிக்குப் பின் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்க விருப்பம் கொண்டது. ஆனால் புலி நட்பு முறையில் கண்ணீர் பெருக்கி நரியை அவ்வாறு செய்யாமல் தடுக்க முயன்றது. ஆனால் நரியோ தான் கொண்ட கொள்கையில் உறிதியாய் இருந்தது. அது புலியை நோக்கி.. "ஆரம்பத்தில் நீ என்னை நன்கு மதித்தாய். பிறகு பிறரின் சொல் கேட்டுப் பழி சுமத்தி அவமானப்படுத்தினாய். பதவியிலிருந்து நீக்கினாய். மீண்டும் பதவி பெற்றால் என் மீது உனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?

நானும் எப்படி பழையபடி நம்பிக்கை கொள்ளமுடியும்? முதலில் பாராட்டி பதவியில் அமர்த்திய பின் குறை கண்டு பழி சுமத்துதல் அரச நீதி ஆகாது. இனிமேல் நீயும் என்னிடம் பழையபடி இருக்க முடியாது.நானும் மனம் கலந்து பழக முடியாது. நண்பர்களும் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். பிளவு ஏற்பட்ட பிறகு ஒன்று கூடுதல் கடினம்' என்பன போன்ற நீதிகளைக் கூறியபின் புலியிடம் விடை பெற்றுச் சென்றது நரி. ஆயினும் மன நிம்மதி இழந்து, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்து சுவர்க்கம் அடைந்தது' என்று கூறினார் பீஷ்மர்.

143-ஒட்டகத்தின் கதை
சோம்பல் அழிவுக்குக் காரணமாகும் என்பதை உணர்த்த பீஷ்மர் சொன்ன ஒட்டகத்தின் கதை

ஒட்டகத்தின் கதையை அனைவரும் அறிவர்.அந்த ஒட்டகம் போல யாரும் சோம்பலாக இருக்கக்கூடாது.முற்பிறப்பைப் பற்றிய ஞானம் உள்ள ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது.அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த ப்ரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார்.'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார்.

'இருந்த இடத்தில் இருந்த படியே..உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும்.அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும்' என்று கேட்டது.அவ்வாறே ப்ரம்ம தேவர் வரமளித்தார்.அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை.நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது.உணவு எளிதாகக் கிடைத்தது.இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம்.

ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது.மழை பெய்தது.அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது.அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்த்க் குகைக்குள் நுழைந்தது.குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக - உணவாக அமைந்தது, ஒட்டகத்தின் கழுத்து.ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் புசித்தன.

தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது.நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடு பட்டது.அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன.ஒட்டகம் மாண்டு போயிற்று.

சோம்பல் உள்ளவன் வர பலம் பெற்றும் பயனில்லை என்று கூறினார் பீஷ்மர்.

144-நாணலும்..கடலும்..கதை
பலம் வாய்ந்த பகைவனிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நாணலும் கடலும் பற்றிய கதையைப் பீஷ்மர் கூறுகிறார்.


தருமரே! ஒரு சமயம் அசுரர்களின் இருப்பிடமும் நதிகளின் புகலிடமுமான கடலுக்கு ஒரு ஐயம் வந்தது.அது ஆறுகளை நோக்கி 'நதிகளே..உங்கள் வேகமான பிரவாகத்தின் போது பலம் மிக்க வேர்களை வேரோடும், கிளையோடும் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் நாணலை மட்டும் ஏன் நீங்கள் கொண்டு வருவதில்லை?அது அற்பத்தனமான புல்தானே என்ற அலட்சியத்தால்,அந்த நாணலை விட்டு விடுவீர்களா?உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்றது.அதற்கு கங்கை ஆறு பதில் அளித்தது.

'இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சமும் பணிவின்றி நிமிர்ந்து நிற்கன்றன.வேகமாக வரும் எங்களைச் சிறிதும் மதிப்பதில்லை.பணிவுடன் வணங்குவதில்லை.அதனால் பலனை அனுபவிக்கின்றன.தம் இடத்தை விட்டுப் பெயர்ந்து தலைகுப்பற எங்கள் பிரவாகத்தில் வீழ்ந்து, அடித்து வரப்பட்டு தங்களை அடைகின்றன.ஆனால் நாணலின் கதையே வேறு..பெரியாரைப் பணிதல் என்பது அதன் தனிக் குணம்.எங்களைக் கண்டு பணிந்து வணங்குகின்றது.

அதனால் எங்கள் சினத்திற்கு ஆளாவதில்லை.நாங்கள் வரும் போது வளைந்து கொடுத்துப் பின் நிமிர்ந்து நிற்கின்றது.அது சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு எங்களுக்கு அடங்கி எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.அதனால் அதன் இடத்திலேயே இருக்கின்றது.இங்கு வருவதில்லை.எந்தச் செடியாயினும் கொடியாயினும் மரமாயினும் எங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது.ஆதலால் பணிந்து போவது மட்டும் நிலைத்து வாழ்கிறது.பணிவுடைமையை அறியாது விறைத்து நிற்பவை நிலைத்து நிற்காது எங்களால் அடித்து வரப்பட்டு இங்கே நிலை குலைந்து வீழ்கின்றன.'

'கங்கையின் இந்தக் கூற்றிலிருந்து தருமரே! ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அரசர்க்கு இக்கதை நல்ல பாடம்.பகைவனின் பேராற்றலின் முன் நிற்க முடியாது என்று தெரிந்தால் அந்த நேரத்துக்குப் பணிதல் வேண்டும்.பின் நாணலைப் போல நிலைத்து வாழலாம்.பகைவரின் ஆற்றலை உணர்த்தும் பணிவின்றி சேண் உயர் தேக்கு போல் நிமிர்ந்து நின்றால் முறிந்து விழ வேண்டியதுதான் என்ற தெளிவு யாவர்க்கும் வேண்டும்' என்றார் பீஷ்மர்.

145-செல்வமாகக் கருத வேண்டியவை எவை?

ஞானம்,சத்தியம்,ஆசை,தியாகம் அகியவற்றின் தன்மையை விளக்குமாறு கேட்டுக் கொண்ட தருமருக்கு பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.

'தருமா..இது சம்பந்தமாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்ற உரையாடலைத் தருகிறேன்.

வேதம் ஓதுவதையே தமது வாழ்க்கையின் முக்கியமாகக் கருதினார் ஒரு அந்தணர்.அவருக்கு மேதாவி என்றொரு மகன் இருந்தான்.பெயருக்கு ஏற்ப அவன் மேதாவியாக விளங்கினான்.முக்தியைப் பற்றிய அறிவும் அவனிடம் இருந்தது.அவன் தந்தையிடம்,'தந்தையே! மனிதனின் ஆயுள் மிகக் குறைவாக இருக்கிறதே..இந்தக் குறைந்த ஆயுளில் நிறைந்த புண்ணியத்தைப் பெறுவது எப்படி?'என வினவினான்.

தந்தை பதில் உரைத்தார்..'மகனே..முதலில் பிரமசர்யத்தில் இருந்த் கொண்டு வேதம் ஓதுதல் வேண்டும்.பிறகு இல்லறத்தில் ஈடுபட்டுச் சிரார்த்தம் முதலான நற்காரியங்களுக்காக மைந்தர்களைப் பெற வேண்டும்.பின் மூன்று அக்கினிகளை உண்டாக்கி, முறைப்படி யாகம் செய்ய வேண்டும்.இறுதியில் காட்டுக்குச் சென்று தவம் இயற்றி முக்திப் பேற்றை அடைய வேண்டும்.'

தந்தையின் இந்தப் பதிலில் திருப்தியடையவில்லை மகன்.அவனது நல்லறக் கருத்துகள் வேறு விதமாய் இருந்தன.'உலகத்தின் இயல்பை நீ நன்கு அறிந்துக் கொள்ளவில்லை போலும்.உலகத்தின் எல்லாப் பக்கங்களிலும் கிழத்தன்மை சூழ்ந்திருக்கிறது.இந்த நிலையில் எமன் விழிப்பாக உயிர் இனங்களைக் கவனித்து வருகிறான்.இதை எண்ணிப் பார்க்க பயமாய் இருக்கிறது.எமன் உலகத்தை ஒவ்வொரு வினாடியும் அழித்துக் கொண்டிருக்கிறான்.

இரவும்,பகலும் ஒருவரின் ஆயுளை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மரணவலையில் சிக்கியிருக்கும் துன்பத்தை இன்பமாக மாற்ருவது எப்படி என சிந்திக்கிறேன்.எவன் ஒரு நாளில் எந்த நல்ல செயலையும் செய்யவில்லையோ அந்த நாள் பயனற்ற நாள் என அவன் தெளிதல் வேண்டும்.நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு முன்னரே எமன் நம்மை தொடருகிறான்.

ஒவ்வொருநாளும்,நம் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிரது.ஆழமற்ற நீர்நிலையில் வாழும் மீன் இன்பத்தை அடையாதது போல மக்கள் இன்பத்தைப் பெற முடிவதில்லை.நிம்மதியாகப் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டைச் செந்நாய் கவர்ந்து செல்வது போல மனிதனை எமன் கவர்ந்து செல்கிறான்.ஆதலால் செய்ய வேண்டிய நல் அறங்களை இப்போதே செய்து விட வேண்டும்.ஏன் எனில் 'இந்த நல்ல காரியம் முடியவில்லையே, பாவம்.. என எமன் காத்துக் கொண்டிருக்க மாட்டான்.எப்போது நம் வாழ்நாள் முடியும் என யாராலும் சொல்ல முடியாது.ஆகவே எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

புண்ணியச் செயல்களால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டாகும்.எப்போதும் தன் குடும்பம்..தன் குடும்பம் என அலைந்து திரிபவன் தகாத செயல்களிலும் ஈடுபடுவான்.குடும்ப நலன் கருதிக் காலப் போக்கில் பாவத்தை செய்யவும் தயங்க மாட்டான்.அத்தகைய அறக் கேடனை, உறங்கும் விலங்கைப் புலி கவர்ந்து செல்வது போல எமன் கவர்ந்து செல்வான்.

வீடு ,மனை, தோட்டம், செல்வம் என அவற்றைச் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் மன்னன் அவற்றை அனுபவிப்பதற்கு முன்னமே எமனால் கவரப் படுகிறான்.அறிஞன்-அறிவிலி.வீரன்-கோழை,மன்னன்-சாதாரண மனிதன் என எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரையும் அவர்கள் செயல் முடிவதற்குள், அவர்கள் ஆயுளை முடித்து விடுகிறான் எமன்.

பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவனை எந்த உயிரும் துன்புறுத்துவதில்லை.பசி,மூப்பு,பிணி ஆகிய இவை எமனின் படை வீரர்கள் என்பதை உணர வேண்டும்.இப் படை வீரர்களைத் தடுக்கும் சிறந்த கருவி சத்தியம் என்னும் வாய்மையாகும்.வாய்மை அல்லாதவற்ரை விலக்க வேண்டும்.முக்தி என்பது வாய்மையிலேயே நிலைத்துள்ளது.ஐம்புலன்களையும் அடக்கி வாய்மையை போற்றும் ஒருவனாலேயே எமனை எதிர்த்து நிற்க முடியும்.

வாய்மையைப் போற்றுபவன் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான்.விரதம்,தவம்,தியானம் இவற்றால் மனம்,சொல்,செயல் ஆகியவை தூய்மை அடையும்.தவத்திற்கு இணையானது வாய்மை.கண்ணுக்கு இணையானது கல்வி.தனித்து இருத்தல்,இன்பதுன்பங்களைச் சமமாக பாவித்தல்,ஒழுக்கம்,பணிவுடைமை,கொல்லாமை ஆகியவற்றையே ஒவ்வொருவரும் செல்வமாகக் கருத வேண்டும்.பிற செல்வங்கள் செல்வமே அல்ல.

ஞானம் தான் கண்!
சத்தியம் தான் மேலான தவம்!
ஆசைதான் மிகப் பெரிய துன்பம்!
தியாகம் தான் அழிவில்லாத இன்பம்!

மேலும், தாய், தந்தை, தாரம், மக்கள்,உறவினர், நண்பர் யாராலும் ஒரு பயனும் இல்லை. தருமம் ஒன்றே துணையாகும். ஆகவே மனக் குகையில் அடைபட்டிருக்கும் ஆன்மாவைக் கண்டு ஆராதனை செய்ய வேண்டும்.' என்று தந்தைக்கு உபதேசம் செய்தான் மேதாவி என்னும் மகன்.

பீஷ்மர் தருமரை நோக்கி,'மைந்தனின் பேச்சைக் கேட்ட தந்தை வாய்மையைப் போற்றி மேன்மை அடைந்தான். நீயும் வாய்மையைப் போற்றி உயர்வாயாக' என்றார்.

146-பொருள் ஆசை துக்ககரமானது
பொருள்களின் மீது தோன்றும் வைராக்கியமே உண்மையான இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்கும் கதை

பீஷ்மர் தருமரிடம், 'தருமா..வாய்மை,வைராக்கியம்,இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுதல்,பற்றில்லாமல் செயலில் ஈடுபடுதல்,வீணாகக் கஷ்டப் படாமலிருத்தல் ஆகிய ஐந்துமே அமைதிக்குக் காரணமாகும்.துறவிகள் இந்த ஐந்தையுமே உத்தம இன்பமாகவும், உத்தம தருமமாகவும் கருதுவர்.இது தொடர்பாக மங்கி என்பவரின் கதையைச் சொல்கிறேன்' என்றபடி தொடர்ந்தார்.

எத்தனையோ தொழில்களைச் செய்தும் பொருள் சேர்க்க இயலாமையால் மங்கி என்பவர் சோர்ந்து போனார்.அவரிடம் சிறிதளவு பணம் இருந்தது.இதுதான் இறுதி என, அப்பணத்தைக் கொண்டு இரு கன்றுக் குட்டிகளை வாங்கினார்.அவற்றை உழவுத் தொழிலுக்கு பழக்குவதற்காக ஒரு நுகத்தடியில் பூட்டி ஓட்டிக் கொண்டு போனார்.பயிற்சி இல்லாக் காரணத்தால் கன்றுக் குட்டிகள் மிரண்டு ஓடின.

அப்படி ஓடும் போது, ஒட்டகம் ஒன்று வழியில் படுத்திருந்தது.ஒட்டகம் மத்தியில் இருக்க, இரு புறமும் இரு கன்றுக் குட்டிகள் ஓட..ஒட்டகத்தின் தலை மீது நுகத்தடி உராய்ந்து சென்றது.அது கண்டு ஆத்திரமடைந்த ஒட்டகம் திடீரென எழுந்தது.இரு கன்றுக் குட்டிகளையும் நுகத்தடியுடன் தூக்கிக் கொண்டு விரந்து சென்றது.கன்றுகள் உயிர் போவது போலத் துடித்தன.மங்கி மனம் தளர்ந்து..

மனிதனிடம் ஆற்றலிருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லையெனில் பொருள் சேர்க்க இயலாது.இறைவனின் அருள் இருந்தால் தான் முயற்சியும் கை கூடும்.அலை கடலையும்,பல மலைகளையும் கடந்து முயன்றாலும் முயற்சி இல்லையெனில் பொருள் இல்லை .எவ்வளவோ முயற்சிகளில் ஈடு பட்டேன்..பயன் இல்லை.ஆயினும் விடாமுயற்சியுடன் இரு கன்றுகளை, ஏரில் பழக்கலாம் என நுகத்தடியில் பூட்டி ஓட்டினேன்.

ஒட்டகம் ஒன்று கன்றுகளை நுகத்தடியுடன் தூக்கிச் சென்று விட்டது.கன்றுகளை எவ்வளவு முயன்றும் ஒட்டகத்தின் பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.அந்த ஒட்டகத்தின் இரு புறமும் கட்டித் தொங்கவிடப்பட்ட மணிகள் போல கன்றுக் குட்டிகள் தொங்குகின்றன.

தெய்வ சம்மதம் இல்லா முயற்சியில் என்ன பயன்.உண்மையான இன்பம் என்பது பொருள் ஆசையைத் துறப்பதுதான். ஆசையை நிறைவேற்றுவது இன்பமல்ல.ஆசையே இல்லாமல் இருப்பதுதான் நிலையான இன்பம் பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகிக் கொண்டே போகும்.

என் ஆசை நிறைவேறிவிட்டது என நிம்மதியுடன் இருக்கும் மனிதனைக் காண்பது அரிது.பேராசைக் கொண்ட மனம்..வைராக்கியம் கொண்டு பொருள் பற்றினின்று விலக வேண்டும்.பொருள் சேர்க்க சேர்க்க அது அழிந்துக் கொண்டிருக்கக் கண்டும் மீண்டும் அதன் மீது நாட்டம் ஏன்' என பலவாறு சிந்தித்தார் மங்கி.

பின் உறுதி கொண்டு எழுந்தார்.'இப்போது என் மனம் உறுதி மிக்கதாய் ஆகிவிட்டது.காமமே..உன்னை மட்டும் நான் விட்டு விடுவேனா..உன்னையும் வேருடன் களைந்து எறிந்து விட்டேன்.பொருள் ஆசை துக்ககரமானது என்பதை அறிந்துக் கொண்ட நான், காமத்தை மட்டும் வளர விடுவேனா?இனி நான் எனக்கு உண்டாகும் துன்பங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்வேன்.பிறர் எனக்குத் துன்பம் தந்தாலும் நான் அவர்க்கு துன்பம் தர மாட்டேன்.

காமமே..இனி எனக்கு எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு மன நிறைவு கொள்வேன்.பழைய வாழ்க்கை இனி இல்லை.வைராக்கியம் மேலிடுகிறது.இன்பம்,மன நிறைவு,புலனடக்கம்,வாய்மை,பொறுமை ஆகிய அனைத்தும் இப்போது என்னிடம் இருக்கின்றன.காமமே! நீ ரஜோ குணத்திலிருந்து பிறந்தாய்.உன்னை ஒழிக்க வேண்டுமானால் முதலில் ரஜோ குணத்தைத் தொலைக்க வேண்டும்.குளிர்ந்த நீரில் இறங்கித் தாகத்தை போக்கிக் கொள்வது போல, பரம்பொருளைச் சார்ந்து கர்மங்களை ஒழிப்பேன்.ஆசையை அறவே துறப்பதால் ஏற்படும் இன்பம், அதைப் பெறுவதால் ஏற்படும் இன்பத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.ஆன்மாவை அலைக்கழிப்பதில் பொறாமை,வஞ்சனை ஆகிய இவற்றைக் காட்டிலும் காமமே மிகவும் சக்தி வாய்ந்தது.இவை அனைத்தையும் வைராக்கியம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திப் பரமானந்தத்தில் திளைக்கப் போகிறேன்' என்றார் மங்கி.

தருமா..இவ்வாறு மங்கி வைராக்கியம் மேலிட, எல்லா ஆசைகளையும் துறந்து அஞ்ஞானத்தை வேரறுத்து முடிவில் பிரமபதத்தை அடைந்து பேரானந்தம் அடைந்தார்.

147-காலத்தின் வலிமை
காலத்தின் வலிமை பற்றி விரோசன் மகனான பலிக்கும்,இந்திரனுக்கும் நடந்த உரையாடலைக் கேள் என பீஷ்மர் தருமருக்கு சொல்லத் தொடங்கினார்.


இந்திரன், பிரம்ம தேவனிடம்,'தானம் செய்வதில் தளராது இருந்த பலி எங்கே?பலி இருக்கும் இடத்தை அறிய விரும்புகிறேன்.அந்தப் பலி வாயுவாய் எங்கும் உலவினான்.வருணனாக இருந்து மழை பெய்தான்.சூரிய சந்திரனாக இருந்து உலகுக்கு ஒளி நல்கினான்.தீயாக இருந்து உலகைத் தகிக்கச் செய்தான்.தண்ணீராக இருந்து உயிர்களின் தாகத்தைப் போக்கினான்.திக்குகளை விளங்கச் செய்தான்.அவன் எங்கே இருக்கிறான்..சொல்வீராக..'என்றார்.

பிரம்ம தேவர், 'ஒருவர் கேட்கும் போது பொய் கூறக் கூடாது.ஆதலால் உண்மையைச் சொல்கிறேன்.அந்தப் பலி ஒட்டகமாகவோ,பசுவாகவோ,கழுதையாகவோ,குதிரையாகவோ ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் தேடிப் பார்' என்றார்.

இந்திரன் 'பலி உண்மையில் பாழடைந்த வீட்டில் இருந்தால்..அவனை நான் கொல்லலாமா?' என்றார்.

பிரம்ம தேவர்,' இந்திரா..அவனிடன் நியாயத்தைக் கேள்.கொல்லாதே.'என்றார்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எங்கும் பலியைத் தேடினான்.பாழடைந்த வீட்டில் கழுதையாக இருந்த பலியைக் கண்டு,'நீ ஏன் இந்தப் பிறவியை எடுத்தாய்? செல்வம் அனைத்தையும் தொலைத்து விட்டுக் கழுதையாக பிறந்துள்ளாயே, உனக்கு இப்பிறவியில் துன்பம் ஏற்படவில்லையா?உலகெங்கும் சுற்றித் திரிந்து பெருஞ்செல்வத்தைச் சேர்த்தாயே..இப்போது எங்கே அந்தச் செல்வம்? உனது நிலை பரிதாபமாய் உள்ளதே.நீ பலியாக இருந்த போது இன்ப போகங்களை அனுபவித்துப் பொருளை எல்லோர்க்கும் வாரி வழங்கினாய்.உன் எதிரில் தேவமகளிர் நடனம் ஆடினர்.கந்தர்வர்கள் ஏழிசை பாடினர்.நீ, ரத்தினங்கள் பதிக்கப் பட்ட தங்கக் குடையின் கீழ் அமர்ந்திருந்தாய்.யாகத்தின் போது ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தாய்.இப்போது என்னவாயிற்று அந்த வைபவம் எல்லாம்' என்று எள்ளி நகையாடினார்.

இந்திரனின் பேச்சைக் கேட்ட பலி.."தேவனே..உனது அறியாமைக்கு வருந்துகிறேன்.பிறர் வருந்துமாறு பேசுவது..உன் தகுதிக்கு இழுக்காகும்.நீ குறித்த குடை மாலை ஆகியவை குகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.நல்ல காலம் வரும்போது அவை மீண்டும் என்னிடம் வரும்.ஆகுவது ஆகும் காலத்துக்கு ஆகும்: போகும் காலத்து அனைத்தும் போகும்.இது காலத்தின் விசித்திரம்.இப்போது உன்னிடம் மிகுந்த பொருள் உள்ளதால் உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்.இந்தக் காலம் அப்படியே இருக்காது.மாறும்.சாதுக்கள் துன்பம் கண்டு வருந்த மாட்டார்கள்.இன்பத்தில் மூழ்கி திளைக்கவும் மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதி மன அமைதியுடன் இருப்பர்.செல்வச் செறுக்கால் இறுமாந்து பேசாதே..நான்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.காலம் மாறிவிட்டது.இது மாறிக் கொண்டே இருக்கும்.எல்லாம் அதன் கையில்தான் உள்ளது'என்றான்.

அது கேட்ட இந்திரன் 'இப்போது உன் நிலை உனக்கு வருத்தத்தைத் தருகிறதா? இல்லையா? என்றார்.

பலி சொன்னான் 'உனது செல்வச் செருக்கால் அறிவிழந்து பேசுகிறாய்.சில உண்மைகளைச் சொல்கிறேன் கேள்..பொருள்களின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியும்.செல்வம் நிலையில்லாதது.யாக்கையும் நிலையில்லாதது.உலகில் எல்லாமே அழியக் கூடியதுதான்.இதை உணர்ந்துக் கொண்டதால் நான் எதற்கும் வருந்தாமல் இருக்கிறேன்.இந்தக் கழுதைப் பிறவியும் நிலையில்லாததுதான்.இப்படி உலக நிலையாமை என்னும் உண்மைகளைத் தெரிந்துக் கொண்ட ஒருவன் இவற்றின் அழிவு குறித்தும் வருந்த மாட்டான்.இது உலக இயல்பு எனற தெளிவு ஏற்பட்டபின் ஏன் நிலையாமை குறித்து வருந்த வேண்டும்? ஆறுகள் எல்லாம் கடலை அடைகின்றன.அது போலப் பிறவிகள் எல்லாம் மரணத்தை அடைகின்றன.இந்த இயற்கை நியதிகள் காலத்தால் ஏற்படுபவை என்ற தெளிவு ஏற்பட்ட பிறகு எதற்காகத் துக்கப்பட வேண்டும்?

ஒருவனை ஒருவன் கொன்றுவிட்டதாகவோ, வென்றுவிட்டதாகவோ எண்ணிப் பெருமிதம் அடைகிறான்.உண்மையில் கொல்லுவதும், வெல்லுவதும் அவன் செயல் அன்று.அவனது கருமத்தின் செயல்.அவன் அதற்குக் கர்த்தா அல்லன்.வேறொருவன் கர்த்தாவாக இருக்கிறான்.அவன்தான் பரமாத்மா.அவன்தான் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றபடி இயக்குகிறான்.அதன்படி அனைத்தும் இயங்குகின்றன.மாற்றமுடியாத சக்தி வாய்ந்தது காலம்.அறிஞனையும்-முட்டாளையும், பலம் உள்ளவனையும்-பலம் இல்லாதவனையும், நல்லவனையும் -கெட்டவனையும்,வள்ளலையும்-வறியவனையும் வேறுபாடில்லாமல் காலம் தன் வயப்படுத்திக் கொள்கிறது.உலகமே காலத்தின் பிடியில்தான் இருக்கிறது.குழந்தை பிறப்பதும்,வளர்வதும், வாலிபனாகத் திகழ்வதும், வயோதிகனாக மாறுவதும், மரணத்தைத் தழுவுவதும் காலத்தின் விளைவு என்பதை உணர்தல் வேண்டும்.இப்படி யுகம் யுகமாகக் காலம் அனைத்துப் பொருளையும் மாற்றி அழித்து வருகிறது.இதற்குக் கடலைப் போல் கரை இல்லை.ஆகவே காலத்தைக் கடக்க யாராலும் இயலாது.

இப்போது கழுதையாக இருக்கும் நான் மேலும் பல வடிவங்களை எடுக்க முடியும்.ஆனால் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இந்த உலகமே காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் காலத்தின் விளைவுதான்.காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்க பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.அது கண்ணுக்கு புலனாகாது.ஆயினும் இதனைச் சிலர் ஆண்டு என்றும் மாதம் என்றும் நாள் என்றும் காலை என்றும் மாலை என்றும் நிமிடம் என்றும் விநாடி என்றும் கூறுகின்றனர்.

இந்திரா..இந்த உலகம் எதன் வசம் இருக்கிறதோ அதுதான் காலம் என உணர்வாயாக.நீ ஆற்றல் மிக்கவன் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.உன்னைப் போல ஆற்றல் மிக்க பல இந்திரர்கள் கால வெள்ளத்தில் மறைந்தனர்.காலம் உன்னையும் கொண்டு செல்லும்.அந்தக் காலம் எப்போது வரும் என சொல்வதற்கில்லை.இதை உறுதியுடன் நம்புவாயாக.

அதிர்ஷ்ட லட்சுமி இப்போது உன்னிடம் உள்ளாள்.இது போல பல்லாயிரவரை இந்த லட்சுமி அடைந்திருக்கிறாள்.இப்போது உன்னிடம் லட்சுமி இருப்பதாலேயே செருக்கு அடையாதே.காலம் மாறும்.

நான் அசுரர்க்கு அதிபதியாக இருந்தேன்.தேவர்களை நடுங்கச் செய்தேன்.பிரம்ம லோகத்தையும் வெற்றி கொண்டேன்.அத்தகைய நான் இப்போது எப்படியிருக்கிறேன்..பார்..எல்லாருடைய கதியும் இதுதான்' எனவே தேவர்க்கு அரசனே..உண்மை உணர்ந்து அடக்கமாய் இரு" என்றான் பலி

148- இந்திரனுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்
காலத்தின் இயல்பு குறித்துப் பலி இந்திரனிடம் கூறும்போது, அப்பலியிடமிருந்து லட்சுமி ஒளிமிக்க பெண்ணாக வெளியே வந்தாள்.வியப்புற்ற இந்திரன் பலியை நோக்கி, 'ஒளியுள்ள இந்தப் பெண் யார்?" என வினவினார். பலியோ தெய்வப் 'பெண்ணோ, மண்ணுலக மாதோ நான் அறியேன்.நீ அவளையேக் கேள் என்றான்.

உடன் இந்திரன், 'பெண்ணே..கண்ணைக் கவரும் அழகுடைய நீ யார்? பலியை விட்டு விலகி என் அருகில் நிற்கிறாயே ஏன்? என்றார்.

அது கேட்டு லட்சுமி சிரித்தாள்.'விரோசனும் என்னை அறியவில்லை.அவன் மகன் பலியும் என்னை அறியவில்லை.போகட்டும்..எனக்கு லட்சுமி,விதித்சை எனப் பலப் பெயர்கள் உண்டு.இந்திரா..நீயும், தேவர்களும் கூட என்னை அறியீர்' என்றாள்.

'பலியிடமிருந்து ஏன் விலகி விட்டாய்..என்னை அடையவா?' என்றார் இந்திரன்.

'பிரம்மதேவன் கூட எனக்குக் கட்டளையிட முடியாது.யாரிடம் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடும் வலிமை காலதேவனுக்கு மட்டுமே உண்டு'காலத்துக்குக் கட்டுப்பட்டவள் நான்.பலிக்கு உரிய காலம் மாறியது.நான் உங்களிடம் வந்து விட்டேன்.அவ்வளவுதான்' என்றாள் லட்சுமி.

'பலியைவிட்டு ஏன் விலகிவிட்டாய்..என்னை விடாமல் இருப்பாயா?' என்ரார் இந்திரன்.

'பலியை விட்டு விலகியதற்கு உரிய காரணங்களைக் கூறுகிறேன்.தானம்,தவம்,வாய்மை,வீரம்,தருமம் ஆகியவற்றினின்று விலகி விட்டான் பலி.ஆதலால் அவனை விட்டு விலகினேன்.இப்போது உன்னை அடந்துள்ளேன்.நீயும் அவற்றினின்று விலகினால்,நானும் உன்னை விட்டு விலகுவேன்' என்றாள் லட்சுமி.

'உலகில் உன்னைத் தன்னிடமே இருக்கச் செய்யும் சக்தி வாய்ந்தவர் யார்?' என்றார் இந்திரன்.

அத்தகையவர் யாரும் இல்லை என்றாள் லட்சுமி.

'செல்வத் திருமகளே..நீ எப்போதும் என்னிடம் தங்கியிருக்கும் உபாயத்தை சொல்வாயாக' என இந்திரன் வேண்ட, 'இதோ அந்த உபாயத்தைக் கூறுகிறேன். வேத நெறிப்படி என்னை நான்கு பாகமாகப் பிரித்து அமைத்துக் கொள்' என அருளினாள் தேவி.

'எனது ஆத்ம பலத்திற்கும்,உடல் வலிமைக்கும் ஏற்ப அவ்வாறே உன்னை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்'

'உலக உயிரினங்களைத் தாங்கும் ஆற்றல் பூமி தேவிக்குத் தான் உண்டு.ஆதலால் உனது நாங்கில் ஒரு பாகத்தைப் பூமி தேவியிடம் தந்துள்ளேன்.இனி அவள் பூமி பாரத்தைத் தாங்குவாள்'

ஓடும் நீர்தான் உலக உயிர்களை வளர்க்கிறது.எனவே உன் இரண்டாம் பாகத்தை னிரிடம் வைத்து உள்ளேன்'

'உனது மூன்றாம் பாகத்தை யாகத்திற்கு முதல் காரணமாக விளங்கும் அக்கினி தேவனிடம் வைத்துள்ளேன்'

உனது நான்காம் பாகத்தை மாந்தருள் சிறந்தவர்க்குக் கொடுத்துள்ளேன்.இந்த நான்கினிடத்தும் நீ நிரந்தரமாக தங்கியிருக்க உன்னை வேண்டுகிறேன்.உன்னிடம் தவறு செய்வோர் தண்டிக்கப் படுவர்' என்றார் இந்திரன்.

அப்படியே நடக்கட்டும் என இந்திரனுக்கு அருளினாள் லட்சுமி.

பின் லட்சுமியால் கை விடப்பட்ட பலி, இந்திரனிடம்,'சூரியன் கிழக்கே எந்த அளவு ஒளி வீசுகிறானோ அந்த அளவு மற்ற மூன்று திக்குகளிலும் ஒளி வீசுவான்.அந்தச் சூரியன் நடுப்பகலில் இருக்கும் போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மறுபடி போர் மூளும்.அந்த நேரத்தில் நான் தேவர்களை வெற்றி கொள்வேன்.அந்தச் சூரியன் எப்போது பிரம்ம லோகத்திலிருந்து கீழ் உலகங்களைத் தகிப்பானோ அப்போது உன்னை நான் தோற்கடிப்பேன்.பின் நான் இந்திரன் ஆவேன்' என்றான்.

அது கேட்டு இந்திரன் கோபமுற்று

'உன்னைக் கொல்லக்கூடாது என பிரம்மதேவர் கட்டளையிட்டுள்ளார்.ஆகவே நீ தப்பித்தாய்.உடனே இந்த இடத்தைவிட்டுப் போ.நீ சொல்வது போல சூரியன் நடுவில் இருந்து ஒளி வீசுவதில்லை.எங்கும் சுற்றிக் கொண்டு ஒளி வீச வேண்டும் என்ற பிரமதேவனின் ஆணையை மீறாமல் அந்தச் சூரியன் செயல் படுகிறான்.அவனுக்கு ஆறு மாதம் உத்தராயணம்.ஆறு மாதம் தட்சணாயணம் ஆகும்.அதன்படி உலகிற்கு ஒளி வழங்கி வருகிறான், சூரியன்' என உரைத்தான்.

தருமரே! இவ்வாறு இந்திரன் சொன்னவுடன் பலி தெற்கு நோக்கிச் சென்றான்.பின் இந்திரன் விண் வழியாக இந்திர லோகம் அடைந்தார்.இந்தப் பகுதியில் காலத்தின் பெருமை கூறப்பட்டுள்ளதை கவனமாக ஆராய்ந்து பார்.கண்ணுக்குத் தெரியாத ஒப்பற்ற அந்தப் பொருளின் ஆற்றலை உணர்ந்துக் கொள்வாயாக' என்றார்

150- தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (2)
பின்னர் அமைச்சர்கள் மன்னனை அடைந்து நடந்ததைக் கூறினர்.அதைக் கேட்ட விருஷாதர்ப்பி சினம் கொண்டான்.கடுமையான யாகத்தைச் செய்தான்.யாக குண்டத் தீயிலிருந்து பெண் பேய் ஒன்று தோன்றியது.அதற்கு 'யாதுதானி' எனப் பெயர் வைத்தான்.சப்த ரிஷிகளையும், அருந்ததியையும்,வேலைக்காரர்களையும் நீ அழித்து விடு.அவர்கள் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்.கவனம் இருக்கட்டும் என ஆணையிட்டான்.ஆணைப்படி அந்தப் பேய் அவர்கள் இருக்குமிடம் நாடிச் சென்றது.

அப்போது அந்த ரிஷிகள் காட்டில் காய் கனிகளை உண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.ஒருநாள் அவர்கள் கை, கால்,முகம், வயிறு ஆகிய இவை பருத்த சரீரம் உடைய 'சுனஸ்ஸகன்' என்ற பெயருடைய துறவியைக் கண்டனர்.அப்போது அருந்ததி ரிஷிகளைப் பார்த்து. 'நீங்கள் இந்தத் துறவியைப் போல தேஜஸ் உடையவர்களாக இல்லையே..ஏன்' என்றாள்.

'இவனுக்கு நம்மைப் போல சாஸ்திரப் பயிற்சி இல்லை. இவனுக்குப் பசி தீர்ப்பது ஒன்றே குறிக்கோள்.இவன் கஷ்டப்பட்டு எதுவும் செய்வதில்லை.ஆகமப் பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை.அதனால் மூர்க்கன்.சோம்பேறி.இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் நகர்வது இல்லை.அதனால் உடல் பருத்து இருக்கிறான்' என பதில் உரைத்தனர்.

ஆனால் சுனஸ்ஸகனோ பதில் ஒன்றும் சொல்லாது, அந்த ரிஷிகளைத் தாழ்ந்து வணங்கிப் பணிவிடைகள் செய்தான்.ஒருநாள் ரிஷிகள் காட்டில் மரங்கள் அடர்ந்து நிழல் செய்யும் பெரிய குளத்தைக் கண்டனர்.அந்தக் குளம் யாவராலும் மாசுபடாத நீரைத் தன்னகத்தே கொண்டுவிளங்கியது.அதில் தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருந்தன.சேறில்லாது பளிங்கு போல விளங்கும் தூய நீரைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் அக்குளத்தை, விருஷாதர்ப்பி மன்னன் ஏவிய யாதுதானி என்னும் கொடிய பேய் காவல் காத்து வந்தது.ரிஷிகள் தாமரைக் கிழங்குக்காக சுனஸ்ஸகனோடு அக்குளத்தை அடைந்தனர்.பேயைக் கண்டு வியந்தனர்.'நீ யார்? யாருக்காக இங்குக் காத்துக் கொண்டிருக்கிறாய்?என்ன செய்ய நினைக்கிறாய்? என்று வினவினர்.

நான் யாராயிருந்தால் உங்களுக்கென்ன..பொருளற்ற வினாக்களை வினவ வேண்டாம்.இக்குளத்தைக் காவல் காக்கிறேன்..இந்த விடை உங்களுக்குப் போதும் என நினைக்கிறேன் என்றது பேய்.

ரிஷிகள் ஒன்றாக..'நாங்கள் பசியோடு இருக்கிறோம்.அதனால் நாங்கள் தாமரைக் கிழங்குகளைப் பறித்து உண்ண அனுமதி தர வேண்டும் என்றனர்.

ஒரு நிபந்தனைக்கு உட்பட்டால், தாமரைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ள அனுமதி தருகிறேன் ..உங்கள் பெயரை ஒவ்வொருவராக எனக்குச் சொல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றாள் யாதுதானி.

ரிஷிகள் ஒவ்வொருவராக பெயரைக் கூறினர்..

முதலில் அத்ரி மகரிஷி 'நான் ஒவ்வொரு இரவிலும் மூன்று முறை அத்யயனம் செய்கிறேன்.அதனால் அராத்ரி என்னும் என் பெயர் அத்ரி ஆயிற்று' என்றார்.

மகரிஷியே உம் பெயரை என் நினைவில் கொள்ள முடியவில்லை..ஆதலால் நீர் போய் குளத்தில் இறங்குக என்றாள் யாதுதானி.

அடுத்து வசிஷ்டர்..'நான் யாவரினும் சிறந்து இருப்பதாலும், சப்தரிஷி மண்டலத்தில் வசிப்பதாலும் எனக்கு வஷிஷ்டர் என்ற பெயர்' என்றார்.இந்தப் பெயரையும் நினைவில் கொள்ள முடியவில்லை.நீரும் போய் குளத்தில் இறங்குக' என்றாள் யாதுதானி.

இது போலவே..பரத்வாஜர்,காச்யபர்,கௌதமர்,ஜமதக்னி,விசுவாமித்திரர்,பசுசகன்..என அனைவரும் தங்கள் பற்றிக் கூற..எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என குளத்தில்

இறங்கச் சொன்னாள் யாதுதானி.

அருந்ததியும், 'நான் என் கணவரின் கருத்துப்படி நடப்பவள்.மேலும் எல்லாப் பொருளையும் தாங்குவதும்,காப்பதுமாகிய இப் பூமியில் நான் என் கணவரை எப்போதும் சார்ந்திருப்பதால், எனக்கு அருந்ததி என்னும் பெயர் அமைந்தது' என்றால்.அப்பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாத யாதுதானி அவளையும் குளத்தில் இறங்கச் சொன்னது.,

கடைசியாக சுனஸ்ஸகன் யாதுதானியிடம் வந்தான்.

149-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள்..
தருமர் பீஷ்மரை நோக்கி, 'தானம் கொடுப்பவர் மற்றும் ஏற்பவர் இயல்புகள் யாவை? என வினவ பீஷ்மர் கூறலானார்..

'தருமா..இது தொடர்பாக விருஷாதர்ப்பி என்ற மன்னனுக்கும் சப்த ரிஷிகளுக்கும் நடந்த உரையாடலை அறிவாயாக..

ஒருசமயம் விருஷாதர்ப்பி அந்தணர்களிடம் 'தானம் வாங்கி உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.உங்களிடம் எனக்கு மரியாதை உண்டு.அன்பு உண்டு.நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைத் தருகிறேன்.ஒவ்வொரு கன்றை ஈன்ற பத்தாயிரம் பசுக்களைக் கொடுக்கிறேன்.விரைந்து செல்லும் வெள்ளைக் குதிரைகள் கொடுக்கிறேன்.எருதுகள் பத்தாயிரம் கொடுக்கிறேன்..கிராமங்களையும் ரத்தினங்களையும் தருவேன்.இன்னும் என்னென்ன உங்களுக்குத் தேவையோ..கேளுங்கள் தருகின்றேன்' என்றான்.

ரிஷிகள் மன்னனிடம் தானம் வாங்க விரும்பவில்லை.மன்னர் தரும் தானம் முதலில் இன்பம் தருவது போல இருந்தாலும் முடிவில் துன்பம் தரும்.ஆயிரம் கசாப்புக் கடைகளை வைத்திருக்கும் கசாப்புக்காரனும், மன்னமும் சரி.எனவே மன்னனிடம் தானம் வாங்குவது தீமை பயக்கும்.பொதுவாக அந்தணர்களுக்குத் தவம் எளிதில் கிடைக்கும்.மன்னனின் பொருள் காட்டுத்தீயைப் போல அந்த தவத்தையே எரித்து விடும்..என்று கூறி ரிஷிகள் காட்டுக்குச் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து செல்லுமாறு அமைச்சர்களை அனுப்பினான் மன்னன்.அத்திப் பழங்களைப் பறித்துத் தந்தனர் அமைச்சர்கள்.ரிஷிகள் அப் பழங்களை வாங்கச் சென்ற போது மன்னனின் வேலைக்காரர்கள் உள்ளே பொன்னை வைத்துத் தந்தனர்.

அத்ரி முனிவர் அவை பளுவாய் இருந்ததால் வாங்க மறுத்துப் பேசினார்..'நாங்கள் முட்டாள்கள் அல்ல.இவற்றின் உள்ளே பொன் உள்ளதை அறிவோம்.நாங்கள் ஏமாற மாட்டோம்.மறுபடியும் சொல்கிறேன்..அரசன் தரும் பொருள் மறுமை இன்பத்தை அளிக்காது.இம்மை மறுமைகளில் இன்பம் வேண்டுவோர் அரசர் தரும் இத்தகைய பொருள்களை வாங்கவே கூடாது' என்றார்.

கச்யபர்,'பூமியில் பொன்னும் பொருளும் போகமும் விரும்பத் தக்கது அல்ல' என்றார்.

வஷிஷ்டர்,'நூறு ஆயிரம் என மிகுதியானப் பொன்னை வாங்கினால் தாழ்ந்த கதிதான் கிடைக்கும்' என்றார்.

பரத்வாஜர்,'மான் குட்டி வளரும் போது கூடவே வளரும் கொம்பு போன்றது ஆசை.அது வளர்ந்து கொண்டே போகும்.அதற்கு எல்லையே இல்லை' என்றார்.

கௌதமர், "ஆசை நிறைவேறுதல் என்பது இல்லை.நதி நீரால் கடல் நிரம்பாதது போன்றது ஆசை.ஒரு நாளும் மனிதன் நிறைவடைய மாட்டான்' என்றார்.

ஜமதக்னி,'பிறரிடம் வாங்குவதற்கும் மனக் கட்டுப்பாடு வேண்டும்.ஆசைப்படுபவர்களுக்குத் தவம் என்னும் செல்வம் தொலையும்' என்றார்.

விசுவாமித்திரர், 'ஒரு விருப்பம் நிறைவேறும் போதே மற்றொரு விருப்பம் அம்பு போல மனதில் பாயும்' என்றார்.

சீலம் மிக்க ரிஷிகள் அனைவரும் உள்ளே பொன் வைத்த அக்கனிகளை ஏற்க மறுத்து வேறு இடம் சென்றனர்..

151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)

சுனஸ்ஸகன் யாதுதானி என்னும் அந்தப் பேயை நோக்கி, 'நான் நாய்களுக்கு எப்போதும் துணைவனாவேன்.இவர்கள் கூறியது போல என் பெயரைப் பகுத்துக் கூறமுடியாது.' என்றான்.

யாதுதானி அவனிடம் 'உம் பேச்சு தெளிவாக இல்லை.உச்சரிப்பும் சரியாக இல்லை.ஆதலால் இன்னொருமுறை உம் பெயரைச் சொல்லவும்' என்றாள்.நான் ஒரு போதும் கூறியதை திரும்பக் கூறமாட்டேன் என்று கூறியவாறு சுனஸ்ஸகன் திரிதண்டத்தால் அந்தப் பேயை ஓங்கி அடித்துக் கொன்றான்.திரிதண்டத்தை பின் தரையில் ஊன்றித் தரையில் அமர்ந்தான்.

பின் அனைத்து ரிஷிகளும் தாமரைக் கிழங்குகளையும்,தாமரை மலர்களையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு குளக்கரையில் ஏறினர்.பின் தரையில் அவற்றை வைத்துவிட்டு தன்னீடிர் இறங்கி தர்ப்பணம் செய்தனர்.கரை எறி பார்க்கையில் தாமரைக் கிழங்குகளைக் காணவில்லை. 'எந்தப் பாவி கிழங்குகளை எடுத்துப் போனானோ' என வருந்தினர்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டனர்.

அத்ரி, 'தாமரைக் கிழங்கை திருடிச் சென்றவன் பசுவைக் காலால் உதைத்தவன் ஆவான்! காலமல்லாத காலத்தில் வேதம் ஓதியவன் ஆவான்,நாய்களை இழுத்துச் செல்லும் இழிநிலையை அடைவான்.சந்நியாசம் ஏற்றும்,காமத்தை விடாத போலித் துறவி ஆவான்.அடைக்கலம் அடைந்தவனைக் கொன்ற பாவி ஆவான்' என்றார்.

காச்யபர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பேசும் நாவடக்கம் அற்றவனாவான்.அடைக்கலைப் பொருளை அபகரித்துக் கொள்பவனாவான்.பொய் சாட்சி சொல்பவன் ஆவான்.புலால் உண்ணும் பாவத்தைச் செய்பவனாவான்' என்றார்.

ஜமதக்னி, 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தண்ணீரை மாசுபடுத்தியவன் ஆவான்.பசுவை அடித்துத் துன்புறுத்திய பாவி ஆவான்.காலம் அல்லாத காலத்தில் மனைவியைப் புணர்ந்தவன் ஆவான்.எல்லோரையும் பகைத்தவன் ஆவான்' என்றார்.

பரத்வாஜர்,'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தருமத்தைக் கை விட்டவன் ஆவான்.பெண்களுக்குத் தீமை புரிந்தவன் ஆவான்.குருவை பழித்தவன் ஆவான்.' என்றார்.

கௌதமர். 'தாமரைக் கிழங்கைத் திருடியவன், வேதங்களை மறந்தவன் ஆவான்.மூன்று அக்கினிகளைத் துறந்தவன் ஆவான்' என்றார்.

விசுவாமித்திரர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் , தாய் தந்தையைக் காப்பாற்றதவன் ஆவான்.வேதத்தை வஞ்சகமாகக் கற்றவன் ஆவான்.செருக்குடையவன் ஆவான்' என்றார்.

அருந்ததி,'தாமரைக் கிழங்கைத் திருடியவள் மாமியாரை அவமதிப்பவள் ஆவாள்.விருந்தினரைப் புறக்கனித்தவள் ஆவாள்.கணவனால் விரும்பத்தகாதவள் ஆவாள்' என்றாள்.

பசுஸகன்' தாமரைக் கிழங்கைத் திருடியவன் சந்ததியில்லாதவன் ஆவான்.ஏழையாவான்.அடிமையாகப் பிறப்பான்.நாஸ்திகன் ஆவான்' என்றார்.

சுனஸ்ஸகன், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் ரித்விக்குகளில் ஒருவனான அத்வர்யு என்பவனுக்கும்,சாம வேதம் ஓதியவனுக்கும்,அதர்வண வேதம் ஓதியவனுக்கும் பெண்ணைக் கொடுத்தவன் ஆவான்' என்று கூறினான்.

ரிஷிகள் உடன் அவனை நோக்கி, 'உன் சபதம் அந்தணர்களுக்கு விருப்பமானது.ஆதலால் தாமரைக் கிழங்குகளைத் திருடியது நீதான்' என்று கூறினர்.

உடன் சுனஸ்ஸகன், "உண்மைதான்..கிழங்குகளை எடுத்தவன் நான்தான்.ரிஷிகளே உங்களைக் காக்கவே நான் இங்கு வந்தேன். உங்களைக் கொல்ல விருஷாதர்ப்பியினால் அனுப்பப் பட்ட யாதுதானி என்னும் பேய் என்னால் கொல்லப்பட்டது.நான் இந்திரன்.ஆசையை அகற்றியதால், அழியாத உலகங்கள் உங்களுக்குக் கிடைத்தன.உடன் புறப்பட்டு அந்த உலகங்களை அடையுங்கள்' என்று கூறினான். பின் ரிஷிகள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.

'தருமா..மிக்க பசியால் வாடிய போதும், அரசனால் பரிசுகள் வழங்கப்பட்டப் போதும் அந்தப் பரிசுகளில் ஆசை கொள்ளவில்லை ரிஷிகள்.இவர்கள் வரலாற்றைக் கொண்டு, 'எந்த நிலையிலும் ஆசை அற்றவர் மறுமை அடைவர்" என்பதை உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.


152-உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்
பீஷ்மர் தருமருக்கு மேலும் சொல்லத் தொடங்கினார்..

'தருமா..காலகவிருஷியர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு கூண்டில் காகம் ஒன்றை அடைத்துக் கொண்டு,ஆங்காங்குச் சென்று குற்றம் புரிபவரைக் கண்டுபிடித்து விடுவார்.காகத்தின் மொழி எனக்குத் தெரியும்..ஆகவே காகம் சொல்வதை நான் புரிந்துக் கொள்வேன் என்பார்.அவர் ஒரு சமயம் கோசல நாட்டு மன்னனான க்ஷேமதரிசியைக் காணச் சென்றார்.மன்னனைச் சார்ந்த அதிகாரிகளின் குற்றத்தைக் காக மொழியின் மூலம் தெரிந்து கொண்டார்.

நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட முனிவர் அமைச்சர்களுடன் மன்னன் இருக்கையில் அங்குச் சென்றார்.அமைச்சருள் ஒருவரை நோக்கி..'நீ செய்த அரச குற்றங்களை நான் அறிவேன்.அரசாங்க உடமைகளைத் திருடியதையும்,செல்வத்தைக் கொள்ளை அடித்ததையும் நான் என் காகம் மூலம் அறிந்து கொண்டேன்.நீ செய்தது சரிதானா..என உன் மனசாட்சியைக் கேட்டுப் பார்' என்றார்.முனிவரின் அப்பேச்சைக் கேட்ட அவையோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் கோசல நாட்டில் எங்கும் காகம் மொழி பற்றியே பேசப்பட்டது.அதிகாரிகளின் ஒழுக்கக் கேட்டை மக்கள் கடுமையாக விமரிசனம் செய்யத் தொடங்கினர்.அமைச்சர்கள் பற்றிய புகார்கள் எங்கும் எழுந்தது.இந்நிலையில் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் முனிவருக்கு எதிராகச் சதி செய்யத் தொடங்கினர்.முனிவரின் காகத்தைத் தீர்த்துக் கட்டுவது எனமுடிவெடுத்தனர்.முனிவர் உறங்கிக் கொண்டிருந்த போது கூண்டிலேயே காகத்தைக் கொன்றனர்.காலையில் எழுந்த முனிவர் காகத்தின் கதி கண்டு வருந்தினார்.மன்னனைக் காணச் சென்றார்.

க்ஷேமதரிசி என்னும் அம் மன்னனை நோக்கி ..'மன்னா..உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.உனக்குச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.உன்னைச் சார்ந்த சிலர் உனக்கு கேடு செய்கின்றனர்.அரசாங்க பொக்கிஷத்தைஸ் சிறிது சிறிதாகத் திருடுகின்றனர்.நான் இதை என் காகத்தின் மூலம் அறிந்தேன்.உன்னைச் சார்ந்தவர்களின் கோபம் காகத்திடம் சென்று அதனைக் கொன்று விட்டது.

உயிர்களீடம் கருணை அற்ற அவர்கள் வேறொரு திட்டத்தையும் வைத்துள்ளனர்.உன் சமையல்காரர் மூலம் உன் அழிவை விரும்புகின்றனர்.ஆகவே நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவர்களிடம் நான் கொண்ட அச்சத்தால் நான் வேறு ஆசிரமம் செல்ல விழைகிறேன்.அவர்கள் கோபத்தால் என் மீது வீசிய அம்பு என் காகத்தைக் கொன்று விட்டது.பயங்கரமான விலங்குகளால் சூழப்பட்ட குகையில் நுழைவது போல துன்பம் தருவது, கொடியவர்களால் சூழப்பட்ட அரச நீதியில் நுழைவது.ஆயினும் அரச நீதி என்னும் நதியைக் காகம் என்னும் படகைக் கொண்டு கடந்து வந்தேன்.

உன் அரசு வஞ்சகர்களால் சூழப்பட்டுள்ளது.இந்நிலையில் நீ யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.நிலைமை இப்படியிருக்கையில்..நான் எப்படி இங்கு தங்குவது? தீமையின் கை இங்கு ஓங்கி உள்ளது.நன்மை செய்பவன் கொல்லப்படுகிறான்.தீமை செய்பவனை யாரும் கண்டுக் கொள்வதில்லை.நல்ல ஆட்சியில் நல்லவர் துன்பம் இல்லாது இருப்பர்.தீயவர் தண்டிக்கப் படுவர்.உனது ஆட்சி சுழல்கள் நிறைந்த அபாயகரமான நதியாக இருக்கிறது.நீயோ நஞ்சு கலந்த உணவாக இருக்கிறாய்.அதாவது தீயோரின் ஆலோசனைதான் உன் நெஞ்சில் நிறைந்துள்ளது.

உன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மிக்க கொடியவர்களாக உள்ளனர்.நீயோ பாம்புகள் நிறைந்த கிணறு போல் இருக்கிறாய்.முட்புதர்கள் பின்னிப் படர்ந்து தண்ணீர் வெளியே தெரியா நதியாய் இருக்கிறாய்.உடன் இருப்போரால் உனக்கு அழிவு நிச்சயம்.உனது ஆட்சியின் மாட்சியையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன்.நாடாளும் ஆசைகளையும் ஐம்புலன்களையும் அடக்கி மக்களிடம் அன்புள்ளவனாக ஆட்சி செய்கிறாயா என்பதை அறிய முற்பட்ட போது உன்னிடம் பெரிய குற்றம் ஏதும் தெரியவில்லை.ஆனால் அமைச்சர்கள் அப்படியில்லையே.அவர்கள் தாகத்திற்கு உதவாத தண்ணீர் போல உள்ளனர்.நீயோ பசித்தவனுக்குக் கிடைத்த உணவு போல இருக்கிறாய்.

உனது நன்மையை நாடுபவன் நான் என்பதை உணர்ந்த அமைச்சர்கள் என்னிடம் வெறுப்பு கொண்டுள்ளனர்.அவர்கள் செய்த தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை நான் செய்த பெரிய குற்றமாகக் கருதுகின்றனர்.நீயும் அவர்களிடம் சற்று விழிப்பாக இருக்க வேண்டும்' என்று கூறினார் முனிவர்.

மன்னன் முனிவரை நோக்கி,'உமது துன்பத்தை நான் போக்குகிறேன்.நீர் இங்கேயே தங்கி இருக்கலாம்.உம்மை வெறுப்பவரை நான் வெறுக்கிறேன்.அவர்களுக்கு எத்தகைய தண்டனை தரப் போகிறேன் என்பதை பாருங்கள்.நான் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நன்மை செய்யத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்' என்றான்.

முனிவர் மன்னனிடம், 'நீ காகம் கொல்லப்பட்ட செய்தியை வெளியே சொல்ல வேண்டாம்.ஆனால் உனது அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்து விடு.பின் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவர்களைக் கொலை செய்.ஒரு குற்றத்தைப் பல பேர் சேர்ந்து செய்வாராயின் அவர்கள் தப்பித்துவிடுவார்கள்.பொருளின் தன்மையால் தான் ஒருவரிடம் செருக்குத் தோன்றுகிறது.அந்தப் பொருளை அப்புறப்படுத்தி விட்டால் அகங்காரம் குறையும்.அறிவுடை அரசன் கருத்தை வெளியே சொல்லமாட்டான்.மனதிலேயே வைத்திருப்பான்.தீயவரைத் தீயவரைக் கொண்டே அழிக்க வேண்டும்.இந்த ரகசியம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றுதான் உனக்கு இவ்வளவு தூரம் சொல்ல வேண்டியதாயிற்று.மக்கள் நலனை நான் பெரிதும் விரும்புகிறேன். வேந்தே!இப்போது என்னைப்பற்றி உரைக்கின்றேன்..என் பெயர் காலகவிருக்ஷயன் என்பதாம்.உன் தந்தையும், என் தந்தையும் உற்ற நண்பர்கள்.அந்தப் பிணைப்பு வழி வழியாய் தொடர வேண்டும் என விழைகிறேன்.இப்போது நீ அரசன்.உன் பகைவரை நீ நண்பன் எனக் கருத வேண்டாம் என மீண்டும் உரைக்கின்றேன்.அரசாட்சியை அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஏன் துன்பம் அடைகிறாய்? அவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது தவறாகும்'" என்றார்.

நல்லது கெட்டது உணர்ந்த கோசல நாட்டு மன்னனும் முனிவரின் நல் யோசனைகளை ஏற்று நாட்டை நன்கு ஆண்டான்.
"தருமா! உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள யாரும் தயங்கக் கூடாது என்பதனையும், அதே நேரத்தில் தீயவர்களின் யோசனையை ஏற்கக் கூடாது என்பதனையும் இதன் மூலம் அறிவாயாக" என்றார் பீஷ்மர்.

153-ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்
தருமர் பீஷ்மரிடம் 'ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்' என வினவினார்.


பீஷ்மர் அதற்கு, 'இதை விளக்கப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றேன், கேள்' எனக் கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் பங்காஸ்வனன் என்னும் ராஜரிஷி ஒருவன் இருந்தான் .நீண்ட காலம் மகப்பேறு இல்லாததால் அவன், இந்திரனுக்கு விரோதமான ஒரு யாகத்தைச் செய்தான்.நூறு பிள்ளைகளைப் பெற்றான்.யாகம் காரணமாக இந்திரனின் பகை ஏற்பட்டது.சில நாட்களுக்குப் பின் அம் மன்னன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான்.இதுதான் தக்க சமயம் என்று கருதிய இந்திரன் அம் மன்னனை அறிவு மயங்கச் செய்தான்.அறிவு மயங்கிய அம் மன்னன் குதிரையில் ஏறி திக்குத் தெரியாது அலைந்தான்.பசி வாட்டியது.

களைப்பால் சோர்ந்து போன மன்னன் நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான்.குதிரையை குளத்து நீரை குடிக்கச் சொல்லிவிட்டு பின் தான் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினான்.அப்போது பெண் உருவம் அடைந்தான்.உடன் நாணத்தால் தலை கவிழ்ந்தவன்..இனி குதிரை ஏறி ஊருக்கு எப்படிப் போவது..மனைவிக்கும், மகன்களுக்கும், மக்களுக்கும் என்ன சொல்வது..என் ஆண்மை போய் விட்டதே..பெண் ஆன வெட்கக் கேட்டை யாரிடம் எப்படிச் சொல்வது..எனப் பலவாறு வருந்திய மன்னன் குதிரை மீதேறி நாட்டை அடைந்தான்.அவனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

அவன் நடந்ததைக் கூறினான்.'நான் வேட்டையாட காட்டிற்குச் சென்றேன்.ஒரு தெய்வம் என்னை மயக்கிவிட்டது.தாகத்தில் திரிந்த நான், ஒரு அழகான குளத்தில் நீராடுகையில் பெண் ஆனேன்.இது தெய்வச் செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.மனைவி மக்கள் மீதும் செல்வத்தின் மீதும் எனக்கு ஆசை குறையவில்லை.'

பின் தன் மக்களை அழைத்து'என் செல்வங்களே..நான் மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன்.நீங்கள் அனைவரும் ஆட்சியை அனுபவியுங்கள்' என்றான்

பெண் ஆன அம் மன்னன் காட்டிற்குச் சென்று ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டான்.அங்கிருந்த முனிவரின் தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.பின்னர் அந்த நூறு பேரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்தான்.முன் தான் ஆணாக இருந்த போது பிறந்த நூறு பிள்ளைகளை நோக்கி'இந்த நூறு பேரும் நான் பெண்ணான பிறகு பிறந்தவர்கள்.நீங்கள் அனைவரும் சகோதரப் பாசத்துடன் ஒன்றுபட்டு ஆட்சி இன்பத்தை அடைவீராக" என்றான்.அவர்களும் அவ்வாறே நாட்டை ஒற்றுமையுடன் ஆண்டனர்.

அது கண்டு தேவேந்திரன் மனம் புழுங்கினான்.எனது செயல் இவர்களுக்கு நன்மை ஆயிற்றே அன்றி தீமை பயக்கவில்லையே என வருந்தினான்.உடன் அந்தணன் வேடம் தாங்கி அந்த நகரையடைந்தான்.மன்னனுக்கு முதலில் பிறந்த குமாரர்களைக் கண்டு, 'ஒரு தந்தைக்குப் பிறந்த சகோதரர்களிடையேக் கூட ஒற்றுமை இருப்பதில்லை..காஸ்யபரின் புத்திரர்கள்தாம் அசுரர்கலூம், தேவர்களும். அவர்களே நாடு காரணமாகத் தங்களுக்குள் சண்டையிட்டனர்.நீங்களோ பங்காஸ்வனனுக்குப் பிறந்தவர்கள்.மற்ற நூற்றுவரோ முனிவருக்குப் பிறந்தார்கள்.உங்களுக்கே உரிய உங்கள் தந்தையின் நாட்டை முனிவரின் பிள்ளைகள் அனுபவிக்கிறார்களே! இது மரபில்லவே' என்று கூறி அம் மக்களிடையே பகையை உண்டாக்கினான்.மனம் மாறிய அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டனர்.

அது கண்ட ரிஷி பத்தினி கதறி அழுதாள்.அப்போது தேவேந்திரன் அவள் எதிரில் தோன்றி,'ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது' என வினவினான்.

அவள் அவனை நோக்கி,'நான் முன்னர் மன்னனாக இருந்தேன்.அப்போது நூறு பிள்ளைகளைப் பெற்றேன்.ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது பெண்ணாகி விட்டேன்.பெண்ணானப் பின் ஒரு முனிவரின் சேர்க்கையால் நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்.அந்த இருநூறு பிள்ளைகளும் பகை கொண்டு சண்டையிட்டு மாண்டனர்.இதைவிட எனக்கு துன்பம் வேண்டுமா? என்றாள் (ன்)

இந்திரன் அவளை நோக்கி, 'முன்னர் நீ மன்னனாய் இருக்கையில் என்னை மதிக்காது எனக்கு எதிரான யாகம் செய்தாய்.இதனால் நான் மிகவும் வருந்தினேன்.அந்தப் பழியைத் தீர்த்து விட்டேன்' என்றான்.

ரிஷி பத்தினி இந்திரனை வணங்கி'நான் பங்காஸ்வனனாய் இருக்கையில் மகப்பேறு வேண்டிச் செய்யப்பட்ட யாகம் அது.தங்களை அவமதிக்கச் செய்தது அல்ல' என மன்றாடினாள்.

தேவேந்திரன் அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு,'உனக்கு எந்தப் பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.ஆணாக இருக்கையில் பிறந்தவைகளா? அல்லது பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளா?' என வினவினான்.

;நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.' என்றாள்.

இந்திரன் வியப்புடன்,'நீ ஆணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை விரும்பாததன் காரணம் என்ன? பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளிடம் விருப்பம் கொண்டதேன்?'என்றான்.

அதற்கு அவள் 'பெண்களுக்குத் தான் மக்கள் பாசம் அதிகம்.ஆண்களுக்கு அப்படி இல்லை.ஆதலால்தான் நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை பிழைக்கச் செய்ய வேண்டுகிறேன்' என்றாள்.

உடன் இந்திரன், 'உண்மை உரைப்பவளே! இப்போது நான் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்' என்றார்.மேலும் அவளை நோக்கி, 'நீ ஆணாக விரும்புகிறாயா? அல்லது இப்போது இருப்பது போல பெண்ணாகவே இருக்கிறாயா?' என்றான்.

"நான் மீண்டும் ஆணாக விரும்பவில்லை.பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன்.ஆண் பெண் புணர்ச்சியில் பெண் தான் அதிகம் இன்பம் அடைகிறாள்.இதனால்தான் நான் பெண்தன்மையை விரும்புகிறேன்.நான் இப்படியே பெண்ணாகவே இருந்து விடுகிறேன்.இதிலேயே எனக்கு இன்பம் கிடைக்கிறது" என்றாள்.

அவ்வாறே வரம் தந்து இந்திரன் சென்றான்.  இவ்வாறு பெண் தான் அதிக இன்பம் பெறுகிறாள் என பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

154-நல்ல அறிவுதான் இன்பத்திற்குக் காரணம்
'மனிதனுக்குச் செல்வம் என்று போற்றத் தக்கது அறிவுதான்.அறிவு உடையவன் செல்வம் உடையவன் ஆவான்.சுவர்க்கம் கூட அறிவினால் கிடைக்கும் என்பது மேலோர் கருத்து.பிரகலாதன், மங்கி போன்றவர்கள் செல்வத்திற்கு அழிவு நேர்ந்த போது அதனை அறிவாலேயே திரும்பப் பெற்றுள்ளனர்.அத்தகைய அறிவைவிடச் சிறந்தது ஏதுமில்லை.இது தொடர்பாக காஸ்யபருக்கும் இந்திரனுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சொல்கிறேன்' என பீஷ்மர் தருமருக்குக் கூறலானார்.

கர்வமும் மிகுந்த செல்வமும் உடைய வணிகன் ஒருவன் இருந்தான்.ஒருநாள் காஸ்யபர் என்னும் இளம் துறவி நடந்து சென்று கொண்டிருந்தார்.செருக்கு மிக்க அந்த வணிகனின் தேர் காஸ்யபரின் மீது மோத அவர் கீழே விழுந்தார்.கடும் சினம் கொண்டார்.ஆயின் என் செய்வது..'பொருள் அற்றோர் நிலை இதுதான்.இதைவிடச் செத்துத் தொலையலாம் என மனம் கலங்கிச் செயலற்றுக் கிடந்தார்.அந்த நேரத்தில் இந்திரன் நரி உருவம் தாங்கி அங்கு வந்து இளம் துறவியை நோக்கிக் கூறினான்.

பிறவிகளில் உயர் பிறவி மனிதப் பிறவியே.மேலான இப் பிறவியை அடைந்தும் ஏன் இதனைப் பாழாக்குகிறாய்? ஏன் சாக எண்ணுகிறாய்?இவ்வுலகில் கை உள்ளவர்களைப் பேறு பெற்றவர்களாகக் கருதுகிறேன்.உன்னைப் போன்ற மனிதருக்குப் பொருளில் ஆசை உள்ளதைப் போல என்னைப் போன்ற விலங்குகளுக்குக் கைகளைப் பெற ஆசை உள்ளது.கைகள் இல்லாததால் காலில் தைக்கும் முள்ளைக் கூட அகற்ற முடியாது.தொல்லை தரும் ஈ, எறும்பைக் கூட எங்களால் அகற்ற இயலவில்லை.கைகள் இருந்தால் இத்தகைய தொல்லைகளை அகற்றலாம்.

கையில்லாததால் சரியாக உணவைக் கூட உண்ண முடியவில்லை.உடை உடுத்த முடியவில்லை.கை உள்ளவர்கள் எல்லாவற்றையும் எளிதாக அனுபவிக்கிறார்கள்.உன்னுடைய புண்ணியத்தால் நாயாகவோ,நரியாகவோ,கீரியாகவோ,எலியாகவோ, பாம்பாகவோ நீ பிறக்கவில்லை.உனது மேலான மனிதப் பிறவியைப் பற்றிப் பெருமைப்படு.இந்த கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை நல்வழிகளில் பயன்படுத்து.மனிதப் பிறவி தேவப்பிறவியை விடச் சிறந்தது.எந்தப் பிறவியாயினும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.தேவன் தேவேந்திரனாக ஆசைப் படலாம்.

அப்படி ஆனாலும் ஆசை அடங்காது.ஒரு பொருளை விரும்பி அது கிடைத்துவிட்டால், அதனாலேயே ஆசை அடங்கி விடுவதில்லை.மனம் வேறு ஒரு பொருளை நாடும்.ஆசை கொள்ளும்.அப்படி ஒவ்வொன்றாகத் தாவிச் செல்லும் மனதை அடக்குதல் மனிதப் பிறவியில் மட்டுமே கூடும்.மனதை அடக்கி அதன் மூலம் இன்பம் அடைவதும், மனதை அடக்காமல் அது போனபடியே சென்று துன்பம் அடைவதும் உன்னிடத்திலேயே இருக்கிறது.ஐம்பொறிகளையும் ஆமை போல் அடக்குபவனுக்குத் துன்பம் இல்லை.

ஒரு முறை ருசி கண்டவர்க்கு மேலும் மேலும் அப்பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டாகும்.ஆசையை உண்டாக்கும் பொருளைப் பற்றிப் பிறர் பேசக் கேட்காமல் இருக்க வேண்டும்.அப்பொருளைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.தொடாமல் இருக்க வேண்டும்.

மனிதரில் சிலர் கல்வியிற் சிறந்தவராயும்,வலிமை மிக்கவராகவும்,அனுபவம் உள்ளவர்களாக இருந்தும் பாவ காரியங்களில் ஈடுபடுகின்றனர்.யாராய் இருந்தாலும் அப்பிறவியாயினும் யாரும் உயிரை விட விரும்புவதில்லை.அந்தந்த பிறவியில் அததற்குரிய இன்பம் ஒன்று இருக்கிறது.எனவே தான் எந்த உயிரும் அந்த இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறதே ஒழிய இறக்க விரும்புவதில்லை.

உடற்குறையுள்ள மனிதர் பலர் உள்ளனர்.கை இல்லாதவர்களும்,கால் இல்லாதவர்களும், ஒரு பக்கம் செயல் இழந்தவர்களும் ஆக இப்படி ஊனத்துடன் விளங்குவோர் பலர்.நீயோ உடற் குறை ஏதுமின்றி நோயும் இன்றி இருக்கிறாய்.உனக்குக் கெட்ட பெயரும் இல்லை.இந்நிலையில் கிடைத்தற்கு அரிய உயிரை விடுதல் நல்லதன்று.எனவே உற்சாகத்துடன் எழுந்திரு.தருமம் செய்.தானம் செய்.மனத்தை அடக்கு.சக்திக்கு ஏற்றாற் போல தியாகம் செய்.நற்கதி அடைவாய்.இப்பிறவியில் நல்லது செய்தால் அதன் பயனை அடுத்த பிறவியில் நன்கு அனுபவிப்பாய்.

நான் சென்ற பிறவியில் நல்லது செய்யவில்லை.ஆகமங்களை பழித்தேன்.விதண்டாவாதம் பேசினேன்.அறவோரை பழித்தேன்.ஒன்றும் அறியா நான் மேதாவி போல நடந்து கொண்டேன்.அதனால் நரியாக பிறவியெடுக்க நேர்ந்தது.இந்த இழி பிறவியிலிருந்து விடுபட்டு எனக்கு மனிதப் பிறவி கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அதிலாவது மன நிம்மதியுடன் இருப்பேனா?' என தனது விலங்குப் பிறவி குறித்து இரங்கிக் கூறி முடித்தது.

அது கேட்டு இளந்துறவி வியப்புற்று எழுந்தான்.அறிவு மிக்க நரியின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான்.அது நரியன்று என தன் ஞானக் கண்ணால் உணர்ந்தான்.நரி வடிவில் வந்து நன்னெறி காட்டியவன் இந்திரன் என்பதை உணர்ந்தான்.பின் அறநெறியில் வாழ்ந்தான்' என பீஷ்மர் தருமருக்கு நல் அறிவுதான் இன்பத்திற்குக் காரணம் என்பதை இக்கதை மூலம் தெரிவித்தார்.

155-அகஸ்தியர்-இல்வலன்-வாதாபி பற்றிய கதை
பாண்டவர்கள் தீர்த்த யாத்திரையின் போது மணிமதி என்னும் நகரத்தில் தங்கி இருந்தனர்.அப்போது யுதிஷ்டிரர் லோமசரை நோக்கி, 'இல்வலனையும், வாதாபியையும் அகத்தியர் ஏன் அழித்தார்?" என வினவ முனிவர் சொல்லலானார்.

இல்வலன் என்னும் அசுரன் மணிமதி நாட்டை ஆண்டு வந்தான்.அவன் தம்பியின் பெயர் வாதாபி.இல்வலனுக்கு மகப்பேறு இல்லை.அவன் தவ வலிமை மிக்க அந்தணன் ஒருவனை அடைந்து, 'இந்திரனுக்கு இணையான பிள்ளையை நான் பெற வேண்டும்.அதற்கான ஆசி அருள வேண்டும்' என்றான்.அவனது செருக்கை உணர்ந்த அந்தணர், 'எனது ஆசி உனக்கு இல்லை' என்றார்.

கடும் சினம் கொண்ட இல்வலன், அன்று முதல் அந்தணர்களை கொல்ல முடிவெடுத்தான்.மாயையில் வல்ல அவன் தன் தம்பி வாதாபியை ஆடாக உருமாறச் செய்தான்.இல்வலன் அந்த ஆட்டை சமைத்து அந்தணர்களுக்கு அளித்து அவர்களை கொல்ல நினைத்தான்.இல்வலனிடம் அபூர்வ ஆற்றல் ஒன்று இருந்தது.ஒருவன் இறந்து விட்டாலும் அவனைப் பெயரிட்டு கூப்பிட்ட அளவில் உயிர் பெற்று வந்துவிடுவான்.

அந்தணர்கள் இல்வலன் படைக்கும் ஆட்டுக்கறியை உண்ட பின் அவன் 'வாதாபி' என்று குரல் கொடுத்துத் தம்பியை அழைப்பான்.உடன் வாதாபி அந்தணர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உடன் வெளியே வந்துவிடுவான்.இப்படி பல அந்தணர்களைக் கொன்றான்.

அச்சமயத்தில் அகத்திய முனிவர் தம் மூதாதையர் பள்ளத்தாக்கில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதற்கான காரணத்தைக் கேட்டார்.

'நாங்கள் உன் முன்னோர்கள்.உனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும் என்று வேண்டி, இங்கு இப்படித் தொங்குகிறோம்! உனக்கு ஒரு மகன் பிறந்தால் எங்களுக்கு நற்கதி கிடைக்கும்' என்றனர்.அகத்தியரும் தனக்குப் பொருத்தமான பெண் எங்கிருக்கிறாள் என்பதை தன் எதிர்கால உறவால் கண்டறிந்தார்,

விதர்ப்பநாட்டு மன்னனுக்கு ஒரு பெண் பிறக்குமாறு செய்தார்.லோபமுத்திரைஎனப் பெயர் பெற்ற அவளுக்குரிய கணவனை ஆராய்ந்தான் மன்னன்.அகத்தியருக்கி அஞ்சி யாரும் அவளை மணமுடிக்க வரவில்லை.

அகத்தியர் அப்பெண்ணை தனக்குத் தருமாறு மன்னனைக் கேட்டார்.பெரும் தவசிக்குப் பெண் கொடுக்க விருப்பமில்லா மன்னன் தன் மனைவியிடம் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த லோபமுத்திரை, 'தந்தையே..நீங்கள் கவலைப்பட வேண்டாம்.என்னை அம் முனிவருக்கே மணமுடியுங்கள்' என்றாள்.

அகத்தியருக்கும்,லோபமுத்திரைக்கும் திருமணம் முடிந்தது.முனிவர் தன் மனைவியிடம்,'இனி நீ ஆஸ்ரம விதிப்படி நடந்து கொள்ளவேண்டும்.விலை உயர்ந்த ஆடை,அணிகளை விலக்கி மரவுரிகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்' என்றார்.அவ்வாறே லோபமுத்திரையும் செய்து வந்தாள்.அவளது தூய தன்மையையும்,அடக்கத்தையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.ஒருநாள் லோபமுத்திரையின் அழகுக் கண்டு, அவளுடன் இன்பம் அடைய விரும்பினார்.தன் கருத்தை அவளிடம் தெரிவித்த போது அவளோ தவக்கோலத்தில் புணர்ச்சியை விரும்பவில்லை.உயர்ந்த ஆடை அணிகலன்களை இருவரும் அணிந்து இன்பம் அனுபவிப்போம் என்றாள்.உடன் முனிவர்,'எனக்கேது உயர் ஆடைகளும், அணிகலன்களும் என்றார்.

'உம் தவ வலிமையால் அவற்றை அடையலாம்' என்றாள் லோபமுத்திரை.ஆனால் தவத்தை தவறான வழியில் பயன்படுத்த விரும்பாத முனிவர் மன்னனிடம் சென்று பொருள் பெற விழைந்தார்.

அகத்தியர் முதன் முதலாய் ஸ்ருதர்வா என்ற மன்னனிடம் சென்றார்.பெரும் செல்வத்தை நாடி வந்திருப்பதைத் தெரிவித்தார்.மன்னனோ..'முனிவரே! நாட்டில் வரவும் செலவும் சரியாய் உள்ளது.நான் பெரும் செல்வத்திற்கு எங்கு போவேன்..' என வருந்தினான்.குடிகளைத் துன்புறுத்தி வரி வசூலித்துத் தருவதானால் அச் செல்வம் தனக்கு வேண்டாம் என்ற முனிவர் ..அம்மன்னனையும் அழைத்துக் கொண்டு பிரத்நஸ்வன் என்னும் மன்னனை சந்தித்தார்.அம்மன்னனும் கையை விரித்துவிட , அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திரஸதஸ்யு என்ற மன்னனைச் சந்தித்தார்.அவனும் வருவாய்க்கும், செலவிற்கும் சரியாகிவிடுகிறது என உரைக்க, அனைவரும் வேறு என்ன செய்வது என ஆலோசித்தனர்.பின், மன்னர்களின் யோசனைப்படி இல்வலன் என்னும் அசுரனைக் காணச் சென்றனர்.

அவர்களைக் கண்ட அசுரன் பெரும் வரவேற்பளித்தான்.

வாதாபியை ஆட்டுக் கறியாக்கி அவன் விருது படைக்கப் போகிறான் என அனைவரும் அறிந்துக் கொண்டனர்.மன்னர்கள் அஞ்சினர்.அவர்களிடம் அகத்தியர்,'வாதாபியை ஜீரணித்து விடுகிறேன்.கவலை வேண்டாம்' என ஆறுதல் கூறினார்.

அனைவரும் உணவுக்காக அமர்ந்தனர்.இல்வலன் மகிழ்ச்சியில் இருந்தான்.ஆட்டுக்கறியை மேலும்..மேலும் கேட்டு அகத்தியரே சாப்பிட்டார்.உடன் இல்வலன்'வாதாபி..இம்முனிவர் உன்னை ஜீரணிப்பதற்குள் வெளியே வா என கூக்குரலிட்டான்.ஆனால் அகத்தியரோ..'வாதாபி..உலக நன்மையின் பொருட்டு உன்னை நான் ஜீரணிக்கிறேன்' என்று கூறி மூன்று முறை தன் வயிறை தடவிக் கொடுத்தார்.இல்வலனோ..'வாதாபி வா..வா..' என்றான்.அகத்தியரோ..'இல்வலா! இனி வாதாபி வர மாட்டான்.அவன் கதை முடிந்தது.அவனை நான் ஜீரணித்து விட்டேன்' என்று கூறினார்.தம்பியின் மரணம் அறிந்த இல்வலன் வருந்தினான்.

பின் அவன் அகத்தியரை நோக்கி, 'முனிவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டி நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்?' என்றான்.

'அசுரா..உன்னிடம் அதிகம் செல்வம் இருப்பதாய் அறிந்தோம்..செல்வத்தால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..ஆகவே..மிக்க செல்வத்தைத் தருவாயாக' என்று கேட்டார்.

அதற்கு இல்வலன், 'நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்' என்றான் செருக்குடன்.

'இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினையாயிரம் பொன் நாணயமும்,பதினையாரிரம் பசுக்களும் கொடு. எனக்கு முப்பதாயிரம் பசுக்களும், முப்பதாயிரம் பொன்னும், மற்றும் விரைந்து செல்ல இரண்டு குதிரைகளையும், பொன் தேரையும் கொடு' என்றார் அகத்தியர்.

'முனிவரே!தாங்கள் கேட்டது போல பசுக்களும் பொன்னும் தருகிறேன்.பொன் தேர் ஏதும் என்னிடம் இல்லை' என்றான் இல்வலன்.

'போய் நன்றாகப் பார்.பொன் தேர் இருக்கிறது' என்றார் அகத்தியர்.

சென்று பார்த்த அசுரன் பொன் தேர் இருப்பதைப் பார்த்தான்.பின் , முனிவர் கேட்ட அனைத்தையும் வழங்கினான்.அகத்தியர் ஆஸ்ரமம் திரும்பினார்.இல்வலணோ மன அமைதி இழந்தான்.அகத்தியரை கொல்ல நினைத்தான்..தகவல் அறிந்த அகத்தியர் அவனைப் பார்வையாலேயே அழித்தார்.உடன் வந்த மன்னர்கள் அகத்தியரிடம் விடை பெற்று நாடு திரும்பினர்.

முனிவர் தன் மனைவியை அழைத்து செல்வங்களைக் காட்டினார்.லோபமுத்திரை மகிழ்ச்சி அடைந்தாள்.பின் அகத்தியர் அவளிடம் 'உனக்கு எத்தனை மகன்கள் வேண்டும்? ஆயிரமா..அல்லது அத்துணை வன்மை பொருந்திய நூறு பிள்ளைகள்..அல்லது நூறு பிள்ளைகளுக்கு இணையான பத்துப் பிள்ளைகள்..அல்லது அத்துணை வன்மையும் மிக்க ஒரு பிள்ளை வேண்டுமா? உன் விருப்பத்தைத் தெரிவி' என்றார்.

அனைத்துச் சிறப்பும் பொருந்திய ஒரு மகன் போதும் என்றாள் லோபமுத்திரை.

அவளுக்கு..வேதங்களையும், உபநிஷதங்களையும் ஓதிய படியே ஒரு மகன் பிறந்தான்.அக்குழந்தைக்கு த்ருடஸ்யு என்ற பெயர் இட்டனர்.பிறந்ததுமே பலவானாகத் திகழ்ந்த அக்குழந்தை தந்தையின் ஹோமத்திற்காக வேண்டிய ஸமித்தினைச் சுமை சுமையாகக் கோணர்ந்தது.இதனால் இத்மவாஹன் என்னும் பெயர் பெற்றான்.

மகனின் ஆற்றலையும் அறிவையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.அவரது முன்னோர்கள் அனைவரும் விரும்பிய சுவர்க்கம் அடைந்தனர்.அப்புத்திரனால் அகத்தியர் ஆஸ்ரமமும் உலகப் பிரசித்தி அடைந்தது...என லோமசர் கூறி முடித்தார்.

இக்கதையினால்..செருக்கும் அடக்கமின்மையும் குலத்தைக் கெடுத்துவிடும் என உணரலாம்.

156-தருமவியாதர் உரைத்த நீதிகள்
கௌசிகன் என்பவன் சிறந்த அந்தணன்.வேதத்தில் வல்லவன்.எப்போதும் தவத்தை மேற்கொண்டிருப்பவன்.ஒருநாள் வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு கொக்கு அவன் மீது எச்சமிட்டது.அதனால் கோபம் கொண்ட அந்தணன் அந்தக் கொக்கை தீ உமிழும் கண்களால் நோக்க அந்த வெம்மையைத் தாங்காது அக்கொக்கு எரிந்து தரையில் விழுந்தது.அந்தணன் பறவையின் முடிவு கண்டு வருந்தினான்.

பிறகு பிட்சைக்காகக் கிராமத்தை அடைந்தான்
.ஒரு வீட்டின் வாயிலில் நின்றவாறு 'தாயே..பிட்சை தருக' என்றான்.அவ்வீட்டுப் பெண்மணி சிறிது நேரம் பொறுத்திருக்கக் கூறினாள்.பசியுடன் வீட்டிற்கு வந்த கணவனைக் கவனிப்பதில் ஈடு பட்டாள்.கணவனையே தெய்வமாகக் கொண்ட அந்தப் பெண் சொல்லாலும்,செயலாலும் எப்போதும் கணவருக்கு மகிழ்ச்சியையே தருவாள்.

பிட்சைக் கேட்டு வந்த அந்தணனை நீண்ட நேரம் காக்க வைத்தற்கு வருந்தினாள்
.'பெண்ணே..என்னை வேறிடத்திற்குச் செல்லமுடியாதவாறு செய்து விட்டாயே' என சீறினான்.

கௌசிகனின் சினம் கண்டு வருந்தியவள்
, 'கணவனுக்கு பணிவிடை செய்துவர நேரமாகிவிட்டது.மன்னிக்கவும்.' என்றாள்.

அந்தணனும் கோபத்துடன்
'உனக்கு உன் கணவனைத் தவிர வேறு யாரும் உயர்வில்லை போலும். தேவாதி தேவனே எங்களைப் போற்றுகிறான்.நீ எம்மாத்திரம்.வேதவித்தாகத் திகழும் என் பெருமையை நீ அறியாய். அந்தணர்கள் சரியாக மதிக்கப் படாவிடின் எரித்து விடுவர்' என்றான்.
உடன் அவள் கூறினாள்

'மாமுனியே! சினத்தை அடக்குவாயாக.என்னை சுட்டு எரிக்க நான் கொக்கு அல்ல.காலம் தாழ்த்தி வந்தமைக்கு மன்னியுங்கள்.நான் உத்தமர்களை என்றும் பழித்ததில்லை.தவவலிமை மிக்க பலரை நான் அறிவேன்.வாதாபியை அடக்கிய அகத்தியர் முதலியவர்களை நான் போற்றுகின்றேன். உமது சினத்தை நீர் அடக்குவீராக.என்னைப் பொறுத்தவரை கணவரை விட உயரானவர் யாருமில்லை. அதனால் ஏற்படும் பயனும் நான் அறிவேன். நீர் சினம் கொண்டு கொக்கை எரித்ததை எனது பதிவிரதத் தன்மையால் அறிந்தேன். நீர் சினத்தால் அக்கொக்கை எரித்தது போல என்னை ஒன்றும் செய்யமுடியாது' என்றாள்.

மேலும் கூறத்தொடங்கினாள் அந்தப் பத்தினி
,'அந்தணர் என்பவர் யார் தெரியுமா?கோபத்தை விடுபவர் அந்தணர். பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் அப்பிறர்க்குத் துன்பம் செய்யாதவரே அந்தணர். யார் ஆகமப் பயிற்சியுள்ளவரோ அவரே அந்தணர். யார் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுகின்றனரோ அவரே அந்தணர். 'யான்' எனும் செறுக்கு அற்றவர் யாரோ அவரே அந்தணர்.

தருமத்தை அறிதல் எளிதன்று.நீர் தருமத்தை நங்கு அறிதல் வேண்டும்.மிதிலையில் தரும வியாதர் என்றொருவர் இருக்கிறார்.அவரிடம் சென்று தருமம் பற்றி உணர்வீர்களாக..நன்மை தீமை உணர்ந்த யாரும் பெண்களைப் பழிக்கவோ..துன்புறுத்தவோ மாட்டார்கள்' என்றாள்.

இதைக் கேட்ட கௌசிகன் வியப்புற்றான்
.'என்னிடம் இருந்த கோபம் விலகியது. மிதிலை சென்று தரும வியாதரிடம் தருமங்கள் பற்றி அறிய விரும்புகிறேன்' என்று சொல்லிவிட்டு கௌசிகன் மிதிலைக்குப் புறப்பட்டான்.

வீட்டிலிருக்கும் போதே கொக்கு எரிக்கப்பட்டதை உணர்ந்து பேசியவளின் பேச்சுகளை எண்ணி வியந்தான்
. தரும வியாதரிடம் மேலும் தருமங்களை அறிய மிதிலையை நோக்கி விரைந்தான்.அறத்தின் பொலிவுடன் இருந்தது அந்நாடு.உணவு தானியங்கள் நிறைந்திருந்தன.மக்கள் நிம்மதியுடன் இருந்தனர்.கௌசிகன் தரும வியாதர் இருக்குமிடம் சென்றான்.

அப்போது விலங்குகளைக் கொல்லும் இடத்தில், மாட்டிறைச்சியையும்,மானிறைச்சியையும் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்,தரும வியாதர்.ஜனநெருக்கடியாய் இருந்ததால் கௌசிகன் தனியான ஓரிடத்தில் அமர்ந்தான்.தருமவியாதர், அவனிடம் சென்று,'உம்மை ஒரு பதிவிரதை மிதிலைக்குப் போகுமாறு பணித்ததை நான் அறிவேன்..உனக்கு வேண்டியது யாது? என்றார்.

கௌசிகனுக்கு இது இரண்டாவது வியப்பு,'இவ்விடத்தில் நீர் இருப்பது தவறு.என் வீட்டிற்குப் போகலாம்'என தருமவியாதர் அழைக்க கௌசிகன் மகிழ்ந்தான்.

தருமவியாதர் தன் வீட்டில் கௌசிகனுக்கு தக்க உபசாரம் செய்தார். கௌசிகனும் மகிழ்ந்து'தருமவியாதரே.. நீர் செய்யும் தொழில் உமக்கு ஏற்றதன்று' என்றான். .

157-தரும வியாதர் உரைத்த நீதிகள் -2
"என் மூதாதையர் காலத்திலிருந்தே இத் தொழிலை என் குடும்பம் செய்து வருகிறது.என் பெற்றோரைக் காப்பது ஒன்றே என் கடமையாய் செய்து வருகிறேன்.இத் தொழிலைப் பற்றி நான் கவலைப்படவில்லை.என் வாழ்வில் சில நெறி முறைகளை பின் பற்றி வருகிறேன்.சத்தியம் தவறுவதில்லை.உண்மையே பேசுகிறேன்.வினைப் பயனை நம்புகிறேன்.யாரையும் இழிவாகக் கருதுவதில்லை.இன்ப துன்பங்களை சமமாய் எண்ணுகிறேன்.நாட்டில் நல்லாட்சி நடைகிறது.ஜனக மாமன்னன் நீதி தவறாது ஆட்சி செய்கிறான்.

நானாக எதையும் கொல்வதில்லை.பிறரால் கொல்லப்பட்ட மாட்டிறைச்சிகளை விற்கிறேன்.ஆனால் நான் புலால் உண்பதில்லை.நோன்பு நோற்கிறேன்.பிறரது புகழ்ச்சியையும்,இகழ்ச்சியையும் சமமாகக் கருதுகிறேன்.ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும்.காமத்தாலோ, பயத்தாலோ தருமத்தை விட்டுவிடக்கூடாது.அரிய காரியங்களைச் செய்ய தளர்ச்சியடையக் கூடாது.

நல்ல செயல்கலையே எப்போதும் செய்ய வேண்டும்.ஒரு பாவி தன் பாவச்செயலால் அழிந்துப் போகிறான்.தூயோரைப் பழிப்பதும்,தருமத்தில்பற்றின்மையும் அழிவைத் தருகின்றன.நல்லோர்கள் அனைவரிடமும் பணிவுடன் இருப்பர்.அடக்கம் இல்லாதவர்கள் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுத் தாழ்வடைகின்றனர்.தவறுசெய்பவர் அத் தவறை உணர்ந்து வருந்துவாராயின் அவர்களைப் பாவ கர்மம் பற்ருவதில்லை.

ஒருவன் தவறான செயல்களைச் செய்து விட்டு 'நான் அப்படிச் செய்யவில்லை' என சாதித்தாலும் அவன் பாவ கர்மத்தினின்றும் தப்ப முடியாது.
எவன் தன் குற்றம் உணராது பிறர் குற்றம் காண்கின்றானோ அவனுக்கு நற்கதி கிடைக்காது.அவன் மறுமையிலும் துன்புறுவான்.நற்செயல்கள் செய்வதால் ஒருவன் எல்லாப் பாவங்களையும் தொலைத்துவிடுகின்றான்., பேராசையுள்ளவர்கள் பாவப்படுகுழியில் வீழ்வர்.' என்றார் தரும வியாதர்.

கௌசிகன் தக்கோரின் மேலான ஒழுக்கங்களைக் கூறுமாறு கேட்க,வியாதர் பதில் உரைத்தார்..

'மேலான ஒழுக்கங்களில் தானம்,தவம்,யாகம்,ஆகமம்,சத்தியம் ஆகிய ஐந்தும் குறிப்பிடத்தக்கன.ஆகமத்தின் அடிப்படை சத்தியம்.சத்தியத்தின் அடிப்படை புலனடக்கம்.புலனடக்கத்தின் அடிப்படை போகங்களைத் துறத்தல்.இவை எப்போதும் மேலான ஆசாரங்களில் நிலை பெற்றுள்ளன.எப்போதும் உண்மையையே உரைத்து, தருமத்தைச் செய்து, நிதானத்துடன் ஆகமக் கருத்துகளைக் கவனமாக கற்று உணர்ந்து அறம்,பொருள்,இன்பங்களை அடைபவர்கள் மேலான ஒழுக்க சீலர் ஆவர்.

ஐம்பொறிகளையும் அடக்கி வென்றவர்கள் மோட்சத்தை அடைவர்.அல்லாதார் துன்பக் கடலில் மூழ்குவர்.கொல்லாமை,வாய்மை, எல்லா உயிரிடத்தும் அன்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் உயர்ந்த தருமம் ஆகும்.இம்மூன்றில் கொல்லாமை மிக உயர்ந்த தருமம்.அது வாய்மையில் நிலை பெறுகிறது.சாதுக்களின் தருமம் என்பது மேலான ஒழுக்கமாகும்.நியாயத்துடன் பொருந்தியது தருமம் என்றும்,அநியாயத்துடன் கூடியது பாவம் என்றும் சொல்லப்படுகிறது.யாரிடம் கோபம்,செருக்கு,வஞ்சனை முதலிய கெட்ட பண்புகள் இல்லையோ அவர்கள் ஒழுக்கம் உள்ளவராய் கருதப்படுவர்.

நல்வினை, தீவினைகளின் பயனான இன்ப, துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வினைகள் கெடுகின்றன என எண்ணுபவர்கள் மேலோராவர்.தானம் செய்வதில் நாட்டமுடையவர்கள் இன்பத்தை அடைவார்கள்.மேலான ஒழுக்கம் உடையவர் தமது குடும்பங்களின் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு சாதுக்களுக்கு உதவி செய்வர்.அறவோர் ஞானமாகிய உயர்நிலையில் நின்று புத்தி மயங்கிக் கிடக்கும் மக்களை நல்வழிப்படுத்த நினைப்பர்' என்று கௌசிகனுக்கு மேலோரின் பண்புகள் பற்றிக் கூறினார் தருமவியாதர்.
அவர் மேலும் கூறியது அடுத்த பதிவில்.

158-தரும வியாதர் உரைத்த நீதிகள் -3
மேலும் தருமவியாதர் கூறலானார்..
நான் செய்யும் தொழில் பாராட்டத்தக்கது அல்ல.உண்மையில் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.முற்பிறப்பில் செய்த தீவினையினால் இப்பிறப்பில் இத் தொழிலைச் செய்கிறேன்.விதி வலிமை மிக்கது.யாராலும் அதை அடக்க முடியாது.பிறப்புக் காரணமாக இத் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறேன்.அறவோரை போற்றி வணங்குகிறேன்.தருமத்தில் பற்றுடையவனாக இருக்கின்றேன்.எப்போதும் நான் செருக்குக் கொள்வதில்லை.நான் அதிகமாகப் பேசுவதுமில்லை.நான் பயிர்த் தொழிலை மேலானதாகக் கருதுகின்றேன்.அதிலும் ஜீவஹிம்சை உள்ளது.கலப்பைக் கொண்டு உழுகையில் பூமியில் உள்ள உயிர்கள் நாசம் அடைகின்றன..

மனிதர்களில் சிலர் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.நடக்கையில் பல உயிர்கள் மிதிப்பட்டு இறக்கின்றன.உட்கார்ந்திருப்பவர்களும்,படுத்திருப்பவர்களும் தங்கள் உடல் அசைவினால் பல உயிர்களைத் தாங்கள் அறியாமலேயே கொல்கின்றனர்.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது உயரிய தருமம்தான்.ஆனால் உலகம் முழுதும் பிராணிகளைக் கொன்று ஜீவிக்கும் பிராணிகள் தான் அதிகம் உள்ளன.கொல்லாமையே உயர்ந்தது என்னும் சாதுக்கள் கூடத் தம்மை அறியாமல் பிற உயிர்கலுக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்.உலகில் பலவகை மனிதர்கள் உள்ளனர்.உறவினர்கள் செல்வம் உடைய உறவைப் பார்த்து மகிழ்வதில்லை.செருக்கு மிக்கவர்கள் குருவையே அவமதிக்கின்றனர்.தருமத்துடன் பல செயல்கள் நடைபெறுகின்றன.அதே சமயம் தருமமும் அதருமமும் கலந்த நிகழ்வுகலும் நிகழ்கின்றன.எவன் ஒருவன் தன் தொழிலை நேர்மையுடன் செய்கிறானோ அவன் சுவர்க்கம் செல்வது உறுதி' என்றார் வியாதர்..

பின்னர் தரும வியாதர் முயற்சியை விட விதியைப் புகழ்ந்து பேசினார்.நன்மை, தீமைகளே இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்றார்.

தருமத்தின் சூட்சுமத்தைச் சுலபமாக யாராலும் உணரமுடியாது.அது பல நேரங்களில் பல வகையாகக் காட்சியளிக்கிறது.பொய் சொல்வதால் நன்மை ஏற்படுமாயின் அந்தப் பொய் பழிக்கப்படாது.அதனால் பாவமும் நேராது.அந்தப் பொய் உண்மையாகவே எண்ணப்படும்.சில நேரங்களில் உண்மை பேசுவதால் பொய்யால் நேரும் பாவம் உண்டாகக்கூடும். ஆதலால் 'எந்தப் பேச்சு உயிருக்கு இன்பம் தருமோ அந்தப் பேச்சு சத்தியமானது.' என்று சான்றோர் அறம் கூறினர்.

அது உண்மையா பொய்யா என்பதல்ல, முக்கியம்.அது பிற உயிருக்கு நன்மை தருமா, தராதா என்பதே முக்கியம்.உயிருக்கு உண்மை தராத உண்மைப் பேச்சு அதருமம் எனக் கருதப்படும்.

யாராக இருந்தாலும் நன்மை தீமைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.இதில் ஐயமில்லை.மனிதன் கெட்ட நிலையை அடைந்தால் செல்வத்தைப் பழிக்கிறான்.அது தனது கர்மப் பலன் என உணர்வதில்லை.
ஊழ்வினை என ஒன்று இல்லையானால், மக்கள் இறக்கமாட்டார்கள்.முதுமை அடைய மாட்டார்கள்.அவரவர் விரும்பியதைப் பெற்று மகிழ்ச்சியடைவர்.ஒவ்வொருவரும் மற்றவரைவிட உயர்வாகவே இருக்க விரும்புகின்றனர்.முயல்கின்றனர்.ஆனால் எண்ணம் போல ஏதும் நடப்பதில்லை.ஆன்மா என்பது தோன்றுவதும் இல்லை..அழிவதும் இல்லை.எல்லா உயிர்களின் உடலும் அழியக் கூடியவை.உடல் கொல்லப்படுமாயின் அந்த உடலுக்கு மட்டுமே அழிவு ஏற்படுகிறது.உயிரோ முன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, மீண்டும் ஓர் உடலை அடைகிறது.
அவன் இறந்தான்..அவன் பிறந்தான் என பேசப்படுவது எல்லாம் உயிரைப் பற்றி அன்று.அழிவு உடலுக்குத்தான்.உயிருக்கு அல்ல.உடல் அழிகையில் உயிர் பிரிகிறது என்பதெல்லாம் தவறு.உயிர் இப்போதுள்ள உடலைவிட்டு வேறோரு உடலை அடைவதையே மரணம் என்கிறார்கள்.இவ்வுலகில் ஒருவர் செய்த வினைப்பயனை இன்னொருவன் அனுபவிப்பதில்லை.

அவரவர் செய்த புண்ணிய பாவங்களை அவரவரே அனுபவிக்கின்றனர். அதனால் நல்லோர் நல் செயல்களையே செய்கின்றனர். தீயோர் தீய செயல்களையே செய்கின்றனர். இவ்வுலகில் புண்ணிய பாவங்களுக்கு ஏற்பப் பிறவி ஏற்படுகிறது. அவன் மனிதனாகத்தான் பிறக்கின்றான் என்பதில்லை. வினைக்கு ஏற்ப நாயாகவோ, பூனையாகவோ, ஈயாகவோ, எறும்பாகவோ, மரமாகவோ, தேவனாகவோ பிறக்கிறான்' என்றார் தரும வியாதர்.

பின் அவரை நோக்கி கௌசிகன், 'தருமமுணர்ந்தவரே! உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது' என வினவ தரும வியாதர் சொன்னது அடுத்த பதிவில்..

159-தரும வியாதர் உரைத்த நீதிகள்- 4

கௌசிகன், தரும வியாதரை நோக்கி, 'உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது? ' என வினவ, தரும வியாதர் கூறலானார்...

'உயிர் கர்ப்பத்தில் சேரும் போதே புண்ணீய பாவ கர்மமும் அதனுடன் சேர்ந்து விடுகின்றன.அவ்வாறு கர்ப்பத்தில் சேரும் நல்வினைப் பயனால் நல்ல பிறப்பும், தீவினைப் பயனால் தீய பிறப்பும் உண்டாகின்றன.தான் செய்த வினைக்கு ஏற்பப் பிறப்பு,இறப்பு, பிணி,மூப்பு,துன்பம் ஆகியவற்றைச் சம்சாரத்தில் உயிர்கள் அனுபவிக்கின்றன.

கர்மத் தொடர்பு காரணமாகவே உயிர்கள் ஆயிரக்கணக்கான விலங்கு கதிகளில் பிறப்பதும் நரகத்தை அடைவதுமாக மாறி மாறி அல்லல்படுகின்றன.கர்மத் தொடர்பினால் பிறப்பு இறப்புகளில் பலவகையான துன்பங்களை அடைந்து சக்கரம் போல உயிர்கள் சுழல்கின்றன.

அறவோன் இன்பக் காரியங்களில் இன்பத்தை அனுபவிக்கிறான்.தருமத்தின் நிழலில் தங்குகிறான்.தருமம் செய்து சம்பாதித்த பொருளைக் கொண்டு மேன் மேலும் தருமம் செய்து புண்ணியத்தை ஈட்டுகிறான்.தருமத்தையே எப்போதும் செய்துக் கொண்டு தருமம் என்னும் மரத்தி அடிவேரில் ஈரத்தன்மையை உண்டாக்குகிறான்.அதனால் புண்ணியப் பலன் பூவாகி, காயாகி,கனியாகி அவனைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.மறுமையிலும் அவன் இன்பம் தொடர்கிறது.ஒரு ஞானி விருப்பு, வெறுப்புக் கொள்வதில்லை.படிப்படியாக மோட்ச மார்க்கத்தில் சென்று முக்தி அடைகிறான்' என்றார் தரும வியாதர்.

'தரும வியாதரே! நல்வினை, தீவினைகளைப் பற்றி மேலும் விளக்க வேண்டும்' என கௌசிகன் கேட்டான்.
வியாதர் கூறினார்,'ஔ மனிதனுக்கு ஒரு பொருளைக் கண்டவுடன் அதனைப் பெற மனம் விழைகிறது.பல வழிகளில் முயன்று அதனை அடைகிறான்.அதனை அனுபவிக்கையில் மேன் மேலும் ஆசை உண்டாகிறது.மேன் மேலும் அப்பொருளை நாடி அலைகிறான்.ஆசைக்கு இடையூறு ஏற்படுகையில் சினம், ஆத்திரம் முதலிய தீய பண்புகள் உண்டாகின்றன.இவற்றால் கவரப்படும் மனிதனின் புத்தி நலத்தைப் பற்றி எண்ணுவதில்லை.அந்த மனிதன் வஞ்சனையாகத் தர்மவானைப் போல வேஷம் போட்டு பணத்தைத் திருடுகிறான்.

இப்படிப் பொருள் சேர்த்ததும் கர்வம் அடைகிறான்.அப்போது யார் அறிவுரைகளும் அவன் காதில் விழுவதில்லை.ஆகமத்தில் இல்லாததை எல்லாம் இருப்பதாகச் சாதிக்கிறான்.பொருளாசையால் அதருமம் மூன்று வகையில் தோன்றுகிறது. பாவத்தை அவன் மனம் சிந்திக்கிறது. வாய் பேசுகிறது.கை செய்கிறது. அவன் எப்போதும் அதருமத்தில் மூழ்கிக் கிடப்பதால் அவனது நற்குணங்கள் அனைத்தும் அழிகின்றன.

இத்தகையொனுக்கு இதே குணங்கள் உள்ளவனே நண்பனாகிறான்.இதனால் பாவம் மேலும் துணிந்து செயல் படுகிறது.
இவற்றையெல்லாம் எவன் சான்றோர் மூலமாகவும் அறிந்து கொள்கிறானோ அவன் நற்செயல்களைச் செய்வதிலும், பெரியோரைப் போற்றுவதிலும் சிறந்தி விளங்குகிறான்.அவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.எவன் ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்கிகிறானோ அவன் இன்பம் அடைகிறான்.

இந்த உடல் ஒரு தேர்.ஐம்பொறிகளும் அதில் பூட்டப்பட்ட குதிரைகள்.உயிரே அவற்றை இயக்கும் சாரதி.இந்த ஐந்து குதிரைகளையும் அடக்கி ஆள்பவன் நல்ல நிலையை அடைவான்' எனத் தரும வியாதர் உரைத்தார்.
"உம்மால் பலவற்றை நான் அறிந்து கொண்டேன்.இவற்றால் நான் பெரிதும் பயன் அடைந்தேன்..விடை பெறுகிறேன்" என்றான் கௌசிகன்.

அது கேட்ட வியாதர்.."நீர் எம் வீட்டிற்கு வர வேண்டும்.வந்தால், புண்ணீயப் பலனைக் கண்கூடாக பார்த்து அறிந்து கொள்வீர்' என்றார்.சம்மதித்த கௌசிகரை அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு விரைந்தார் தரும வியாதர். வீட்டில் அவரது முதிய தாய்-தந்தையருக்குச் செய்யும் பணிவிடைகளை அவன் வியக்குமாறு எடுத்துரைத்தார் .இதுவே நான் செய்யும் புண்ணிய காரியம் என்றார்.

160-தரும வியாதர் உரைத்த நீதிகள் - 5
வீட்டின் உள்ளே நான்கு அறைகள் இருந்தன.வீடு ஒரு கோயில் போல விளங்கியது.கோயிலில் உள்ள தெய்
வம் போல இருந்தனர் தரும வியாதரின் பெற்றோர்.தெய்வத்தை வழி படுவது போல பெற்றோரை வணங்கி வழிபட்டார் தரும வியாதர்.

'மகனே நீ நீடூழி வாழ்க.நீ நல்ல ஞானத்தை அடைந்திருக்கிறாய்.நாங்கள் உன்னால் உபசரிக்கப் பட்டு தேவ சுகத்தை இங்கேயே அடைந்துள்ளோம்.எங்களைத் தவிர உனக்கு வேறு தெய்வம் இல்லை எனபதை நாங்கள் அறிகிறோம்.உன் நல் ஒழுக்கத்தைக் கண்டு பாட்டனாரும்.முப்பாட்டனாரும் மிகவும் மகிழ்ந்துள்ளனர்.நீ மனத்தாலும்,சொல்லாலும்,செயலாலும் ஒரே தன்மையுடையவனாய் இருக்கிறாய்.ஜமதக்கினி தன் தந்தை பரசுராமரை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொண்டாரோ அப்படி நீ எங்களைக் கவனித்துக் கொள்கிறாய்' என தரும வியாதரின் பெற்றோர் அவரை மிகவும் பாராட்டினர்.

பின், தரும வியாதர் தன் பெற்றோரை கௌசிகனுக்கு அறிமுகம் செய்தார்.
பின் தரும வியாதர் கௌசிகனிடம்' தாய் தந்தையர் தான் நான் வணங்கும் தெய்வங்கள்.தேவர்கள் தேவேந்திரனை எப்படி வழிபடுகிறார்களோ அப்படி இவர்களை நான் வழிபடுகிறேன்.உயர்ந்த பொருள்களைக் கொண்டு இவர்களை ஆராதிக்கிறேன்.எனக்கு நாங்கு வேதங்களும் இவர்களே.என் மனைவியோடும், மகனோடும் இவர்களுக்கு நானே பணிவிடை செய்கிறேன்.இவர்களுக்கு பிரியமில்லாத எதையும் நான் செய்வதில்லை.உலகில் மேன்மை அடைய வேண்டுமாயின் தாய் தந்தையரை போற்ற வேண்டும்' என்றார் தரும வியாதர்.
அவர் மேலும்,'நீர் மிதிலை சென்று தரும வியாதரைக் காண்பீராயின் அவர் உமக்குத் தருமங்களைக் கூறுவார்' என அக் கற்புக்கரசி சொன்னாள்.இதை என் ஞானத்தால் நான் அறிந்தேன்' என்றார்.

கௌசிகன் தரும வியாதரிடம்' தூய விரதம் உடையவரே! பத்தினியின் சொற்களை அப்படியே உரைத்த உம்மை நான் சிறந்த தவசியாகக் கருதுகிறேன்' எனப் பாராட்டினார்.
தரும வியாதர், "கௌசிகனே..அந்தப் பத்தினி தருமங்களை அறியும் பொருட்டு உம்மை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்.இவை அனைத்தும் அவளுக்குத் தெரியும்.ஆயினும் என் மூலமாகவே நீர் மேன்மை அடைய வேண்டும்..என்பது அவளது எண்ணம்.நீர் நான் சொல்வதைக் கேட்பீராக! நீர் உம் தாய் தந்தையரைப் போற்றிப் பாதுகாக்கவில்லை.அவர்களின் அனுமதியின்றி வேதப் பயிற்சி பெற வீட்டை விட்டுச் சென்று விட்டீர்.உம்மைப் பிரிந்த துயரத்தால் அவர்கள் அழுது அழுது கண் குருடாயினர்.அவர்களைப் போற்றிப் பாதுகாக்க செல்வீராக' என்றார்.
கௌசிகனும், 'நான் செய்த நல்வினையால் இங்கு வரும் வாய்ப்பினைப் பெற்றேன்.இத்தகைய அறத்தைப் போதிப்பவர் உம்மைத் தவிர வேறு யாருளர்.இப்போது நான் நரகத் துன்பத்திலிருந்து கரையேறி விட்டேன்.உம்மை ஒன்று வேண்டுகிறேன்.சென்ற பிறவியில் உமது நிலை என்னவாக இருந்தது? அதையும் தெரிவிக்க வேண்டும்.அதைத் தெரிந்து கொண்டு என் ஊர் திரும்பி என்னைப் பெற்றோரை நங்கு பாதுகாப்பேன்" என்றான்.
"முற்பிறவியில் நடந்ததைக் கூறுகிறேன்.நான் முற்பிறவியில் அந்தணனாகப் பிறந்தேன்.வேதங்களைக் கற்று பண்டிதன் ஆனேன்.ஆயினும் என் பாவ கர்மத்தால் ஒரு பெரும் குற்றம் நேர்ந்து விட்டது.அரசனுடன் காட்டிற்குச் சென்ற போது, நான் ஒரு அம்பு செலுத்த, அது ஒரு

முனிவர் மீது பாய்ந்தது.முனிவர் கடும் சினம் கொண்டார்.நான் விலங்கு என எண்ணி இப்படிச் செய்து விட்டேன்! பொறுத்தருளுவீர்..!! என மன்றாடினேன்.ஆயினும் சினம் தணியாத அம்முனிவர் "நீ வேடனாக பிறப்பாயாக!" என சபித்தார்.அதனால் இப்பிறவியை அடைந்தேன்' என்றார் தரும வியாதர்.

அது கேட்டு கௌசிகன்.."தரும வியாதரே! நீர் அந்தணர் குலத்தில் பிறக்கவில்லை என்பது உண்மை..ஆனாலும் அவர்களைவிட மேலான ஒழுக்கமுள்ளவராக உம்மை மதிக்கிறேண்.அந்தணன் என்பவன் யார்" யார் அறத்தைப் போற்றி பின்பற்றுகிறாரோ அவரே அந்தணர் ஆவார்.பிறப்பால் ஒன்றுமில்லை.அவரவர் ஒழுக்கத்தால் தான் போற்றப்படுகிறார்கள்...என்பதை நங்கு புரிந்து கொண்டேன்.அறிவைவிட உயர்ந்த ஞான ஒளி உம் முகத்தில் பிரகாசிக்கிறது.தருமத்தின் மீது பற்றுள்ளவரே, நான் விடை பெறுகிறேண்' என கைகளைக் கூப்பி வணங்கினான்.  தரும வியாதரும் விடை கொடுத்தார்.

வீடு சென்ற கௌசிகன் தாய் தந்தையரைக் கண் போல பாதுகாத்து வந்தான்.
இக் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டருக்கு உரைத்தார்.இதன் மூலம் கற்பின் சிறப்பும், தாய் தந்தையரை பாதுகாக்கும் அவசியமும்,பிறப்பால் மேன்மையில்லை, ஒழுக்கத்தால்தான் மேன்மையடையமுடியும் என்பன போன்ற நீதிகள் உணர்த்தப்பட்டன.

161-கணவனை வயப்படுத்தும் வழி
கணவனை வயப்படுத்தும் வழி யாது? என்று வினவிய சத்யபாமாவிற்கு திரௌபதி உரைத்தது..

நீண்ட நாட்களுக்குப் பின் சத்யபாமாவும் திரௌபதியும் சந்தித்தனர்.கண்ணனின் மனைவியான சத்யபாமா திரௌபதியை நோக்கி..'புகழ் மிக்க பாண்டவர்களை நீ எவ்வாறு வயப்படுத்தினாய்? இதற்குக் காரணம் உனது விரதமா?தவமா? மந்திரமா? வயப்படுத்தும் மை ஏதேனும் வைத்துள்ளாயா?பாண்டவர் ஐவரும் உன்னைக் கண்டு மயங்கிக் கிடக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்? கண்ணபிரான் எப்போதும் என் வயப்பட்டு இருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் எனக்கு சொல்' என்றாள்.

'சத்யா..கெட்ட பெண்களின் நடத்தைப் பற்றி நான் ஏதும் கூற மாட்டேன்.நல்ல மாதர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் உரைக்கின்றேன்.மந்திரத்தாலோ,மாயையாலோ, மூலிகையாலோ தன்னை வயப்படுத்தும் மனைவியைக் காணும் கணவன் பாம்பைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவான்.மனைவிக்கு பயப்படும் கணவனுக்கு மன அமைதி இல்லை.அமைதியில்லை என்றால் இன்பம் ஏது!"கெட்ட நடத்தையுள்ள பெண்கள்  கணவனுக்கு தீங்கிழைக்கின்றனர்.கணவனுக்கு விருப்பமில்லா எதையும் மனைவி செய்யக் கூடாது..

நான் என் கணவர்களிடம் நடந்துக் கொள்ளும் முறை பற்றிச் சொல்கிறேன்.என்னிடம் சிறிதும் கர்வமில்லை.ஆசையும் இல்லை.சினமும் இல்லை.பொறாமை என்பது கிஞ்சித்தும் இல்லை.என் மனதைக் கட்டுப்பாடுடன் வைத்துள்ளேன்.தகாத சொற்களைச் சொல்வதில்லை.அதிகமாகவும் ஏதும் கூறுவதில்லை.கணவரின் மனம் அறிந்து நடக்கிறேன்.சூரிய, சந்தரருக்கு இணையான என் கணவர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

கணவரைத் தவிர மற்றவரை அவர்கள் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்.கணவர் உணவின்றி இருந்தாலும் நானும் அவ்வாறே பட்டினி கிடப்பேன்.வெளியேயிருந்து கணவர் வீடு திரும்பியதும் தக்கவாறு உபசரிப்பேன்.தூய உணவை உரிய காலத்தில் அளிக்கிறேன்.எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேன்.சோம்பல் என்பது என்னிடம் துளியும் இல்லை.

கணவர் வெளிநாடு சென்றிருக்கும் போது நான் என்னை அழகு படுத்திக் கொள்வதில்லை.நீராடேன்..பூச்சூடேன்.பூமி போன்ற பொறையுடைய என் மாமியாரை மிகுந்த மரியாதையுடன் கவனித்துக் கொள்கிறேன்.என் கணவர் சத்தியம் தவறாதவர்.நானும் அவ்வாறே உண்மையைக் கடைப்பிடிக்கிறேன்.குடும்பத்தின் வரவு செலவுகளையும் நானே கவனித்துக் கொள்கிறேன்.பின் தூங்கி முன் எழுவேன்..இப்படித்தான் என் கணவரை நான் வயப்படுத்தித் திருப்தி செய்கிறேன்.இது போலவே நீயும் நடந்துக் கொள்வாயாயின் உன் கணவரான கண்ணன் உன்னை விட்டுப் பிரியவே மாட்டார்.' என்றாள் பாஞ்சாலி.  சத்யபாமா திரௌபதியின் சொல் கேட்டு, வாழ்த்தி விடை பெற்றாள்.

162- சத்தியம் உயர்ந்த தருமம்

பீஷ்மர் தருமரைப் பார்த்து, "தருமா! மேலோர் சத்தியத்தை 13 பிரிவாகப் பிரித்துள்ளனர்.அவை உண்மை,சமதாபாவனை,தமம்,அழுக்காறு இன்மை,அமைதி,பொறுமை,உத்தமப் பொறுமை,வெறுப்பின்மை,தியாகம்,தியானம்,மேன்மை,தைரியம்,அஹிம்சை என்பனவாகும்.
உண்மை என்பது எப்போதும் நிலை பெற்றிருப்பது.அழிவில்லாதது.எல்லா அறங்களுக்கும் அடிப்படையானது.இது யோகத்தால் சாத்தியமாகும்.

சமதாபாவனை என்பது, இன்ப துன்பங்களை ஒரே விதமாக ஏற்றுக் கொள்வது.இது விருப்பு,வெறுப்பு இன்மையால் ஏற்படும்
தமம் என்பது, அச்சம் இன்மையும் சினத்தை அடக்குவதும் ஆகும்.இது ஞானத்தால் உண்டாகும்.

அழுக்காறு இன்மை என்பது பொறாமையின்மை.எப்போதும் உண்மையையே நாடுவதால் இது கைகூடும்.
அமைதி எனப்படுவது மனம்,சொல்,செயல் ஆகியவை சலனமற்று இருப்பது.இது தரும காரியங்களால் அடையப்படும்.

பொறுமை என்பது பொறுக்கக்கூடியவற்றைப் போலவே பொறுக்க முடியாதவற்றையும் பொறுத்துக் கொள்வதாகும்.சத்தியத்தைப் பின்பற்றுவதால் இதனைப் பெற முடியும்.
உத்தமப் பொறுமை என்பது, தருமத்தின் காரணமாகப் பிறர் செய்யும் எல்லாத் தீமைகளையும் பொறுத்துக் கொள்வதாகும்.மேலான பொறுமையாகிய இது மனவலிமையால் பெறக் கூடும்.

வெறுப்பின்மை என்பது பிறர் குற்றம் காணாதிருப்பது.இது ஈகையால் - தானத்தால் அமையும்.
தியாகம் என்பது, மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை - மாசுகளை அறவே துறத்தலாகும்.

தியானம் என்பது, தருமத்தை எப்போதும் சிந்திப்பதாகும்.இது எப்போதும் நல்லவனவற்றை சிந்திப்பதால் உண்டாகும்.
மேன்மை என்பது, எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பதாம்.நல்லவனவற்றை ஆய்ந்து ஆய்ந்து செய்வதன் மூலம் ஒருவன் மேன்மை அடையக்கூடும்.

தைரியம் என்பது கீழான சிந்தனைகளை ஒழித்தலாகும்.இது சினத்தை அடக்குவதாலும், அச்சத்தை அகற்றுவதாலும் ஏற்படும்.
அஹிம்சை என்பது மனம்,வாக்கு,செயல் இவற்றால் பிற உயிருக்குத் தீங்கு செய்யாதிருத்தல்.அன்புடைமையாலும் அருளுடைமையாலும் ஒருவர் அஹிம்சையை பின்பற்ற முடியும்.
இப்படி பதின்மூன்று பிரிவாகப் பேசப்படும் சத்தியமே அனைத்து அறங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்' என்று உரைத்தார்.

163-கொல்லாமையின் சிறப்பு
உமா மகேஸ்வரன் உமா மகேஸ்வரியைப் பார்த்து, "மக்களுக்கு இன்பத்தைத் தரும் தருமத்தைச் சொல்கிறேன்..கேள்.." என சொல்லத் தொடங்கினார்.
கொல்லாமைதான் அறங்களில் தலையாய அறம்.கடவுள் வழிபாடும், எப்போதும் ஆகமப் பயிற்சியும், மன அடக்கமும் கொல்லாமைக்கு ஈடாகாது.தாய் தந்தையரைப் போற்றுவதும் புண்ணிய நதிகளில் போராடுவதும் கூடக் கொல்லாமைக்கு நிகரில்லை' என்றார்.
'அப்படியானால் ஏன் யாகங்களில் பசுக்களைக் கொல்கின்றனர்?மன்னர்கள் வேட்டையாடச் செல்கின்றனரே! இது என்ன அறம்' என வினவினாள் மகேஸ்வரி.

'தேவி! பாராட்டத்தக்க கேள்வி..இந்த உலகில் கொல்லாதவர் யாருமில்லை.நடக்கையில் நுண்ணுயிர்கள் பல மடிகின்றன.உட்காரும் போதும்,படுக்கும் போதும் கூட இருக்கையிலும், படுக்கையிலும் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கின்றன.நீரிலும், காற்றிலும் உயிரினங்கள் எண்ணற்றவை இருக்கின்றன.பூமியில் இருக்கும் உயிர்களுக்குக் கணக்கு இல்லை.இப்படி நீரில்,காற்றில்,மண்ணில் உள்ள உயிர்கள் ஒன்று ஒன்றால் கொல்லப்படுகின்றன.

பலம் மிக்க பறவைகளும், மீன்களும் பலம் குறைந்த தம் இனங்களைப் புசித்து வாழ்கின்றன.சிறிய மீனைப் பெரிய மீன் கொல்லுதல் இயல்பாய் உள்ளது.புறா முதலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன.ஆயிரக்கணக்கான உயிர்கள் பிற உயிர்களின் மாமிசத்தாலேயே உயிர் வாழ்கின்றன.

ஒருவன் உணவு என்னும் பெயரால் உயிருள்ள பொருள்களைப் பக்குவப்படுத்தி உண்கிறான்.சில நாட்கள் சில தானியங்களை உண்ணாமல் உண்ணாநோன்பு இருப்பவன் கொல்லாதவனாகக் கருதப்படுகின்றான்.உயிர்களைக் கொன்று தின்னாதவன் புண்ணியத்தைப் பெறுகிறான்..

உணவைத் துறப்பதால் உடல் வாடுகிறது.அப்படி உடல் வாடும் போது ஐம்பொறிகளும் கட்டுப் படுத்தப் படுகின்றன.ஐம்பொறிகளையும் மனதையும் அடக்கும் ஆற்றல் பெற்றவன் யாரினும் உயர்ந்தவன் ஆகிறான்.இவ்வாறு உபவாசம் இருப்பது கொல்லாமைக்குக் காரணமாகிறது.இவ்வாறு நடப்பவன் , படுப்பவன்,பிற உயிர்களைக் கொன்று புசிப்பவன் ஆகிய அனைவரும் உயிர்க்குத் துன்பம் தருபவர்கள் என்று அற நூல்கள் கூறுகின்றன.

பிற உயிர்க்குத் துன்பம் செய்யாதவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.உண்பதற்கு ஏற்ற  கிழங்குகளையும்,கனிகளையும்,இலைகளையும் உண்டு ஓவியம் போல் அசைவற்று இருப்பவன் தான் இம்சை செய்யாதவன்.பொருள்களின் மீதுள்ள பற்றற்று எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் துறவு பூண்டு, வைராக்கியத்துடன், சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்பவரே பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவர் ஆவர்.இத்தகையோர் உலகில் சிலரே.மனதில் எழும் ஆசையை அகற்ற வேண்டும்.இதனால் புண்ணியம் பெருகும்.தருமமும்,அதருமமும் மனதில் எழும் எண்ணங்களாலேயே அமைகின்றன.

ஒரு உயிர் திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதும், இறுதியில் முக்தி அடைவதும் மனத்தாலேதான்.முன்வினைப் பயன் காரணமாக உயிர்கள் விலங்குகளாகவும்,பறவைகளாகவும்,ஊர்வனவாகவும் பிறக்கின்றன.அவ்வாறு பிறக்கும் உயிர்கள் பல்வேறு வகைப்பட்ட உடல்களுடன் ஆற்றலும் வலிமையும் கொண்டு பிறக்கின்றன.அப்படிப் பிறக்கும் பிராணிகள் தம் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களைப் பெறுகின்றன.

மரணமும் அப்படியே.ஒரு உயிர் எப்படி எங்கே எப்போது பிரிய வேண்டும் என்பது விதியால் அமைவதாகும்.மரணத்தை எத்தகைய மகான்களாலும்,அரசகளாலும்,வீரர்களாலும் கூட மாற்றி அமைத்து விட முடியாது.இதுவரை மரணத்தை வென்றவர் இல்லை.விதி மிகவும் விழிப்புடன் உயிர் இனங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.அதற்கு நண்பரும் இல்லை.பகைவரும் இல்லை.

அதன் கண்ணோட்டத்தில் எல்லோரும் சமமானவர்களே.மந்திரத்தாலோ,மருந்தாலோ,செல்வத்தாலோ,தானத்தாலோ,அரிய தவத்தாலோ,புகழாலோ,அதிகாரத்தாலோ எதனாலும் எமனை ஏமாற்ற முடியாது.எனவே..உமா..உலகில் மாற்ற முடியா மாபெரும் சக்தி மரணம்தான் என்பதைத் தெளிவாக உணர்.ஆதலால் வாழும் காலத்தில் எவ்வுயிர்க்கும் துன்பம் தராது வாழ வேண்டும்' என்றார் மகேஸ்வரன்.

164-விதியின் வலிமை
விதியின் வலிமை பற்றி மஹேஸ்வரிக்கு மஹேஸ்வரன் உரைத்தது..

"மரணத்துக்குரிய நேரம் வந்தபோது அதனை யாரும் கடக்க முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.விட்டிற் பூச்சிகள் அழியும் காலம் வரும்போது தாங்களே வந்து எரியும் விளக்கில் வீழ்ந்து மாள்கின்றன.காட்டில் திரியும் மான்களில் எதற்கு முடிவு காலம் வந்ததோ அதுதான் வலையில் அகப்படுகிறது.கொல்வதற்காகக் கொலைக் களத்திற்கு அனுப்பப் படும் விலங்குகளில் ஆயுள் குறைந்ததுதான் முதலில் கொல்லப் படுகிறது.

எல்லாமே உடனே கொல்லப்படுவதில்லை.விரைந்து பறந்து செல்லும் பறவைகள் கூட ஆயுள் காலம் முடிந்தால் சுட்டுத் தள்ளப்படுகின்றன.தண்ணீரில் இருக்கும் மீன்கள் அனைத்துமா ஒரே நாளில் வலையில் அகப்படுகின்றன? ஆயுள் குறைந்தவை மட்டுமே வலையில் சிக்குகின்றன.

உழவன் உயிகளைக் கொல்ல வேண்டும் என்றா நிலத்தை உழுகின்றான்.அந்த எண்ணம் அவனுக்கு இல்லை.ஆயினும் ஆயுள் முடிவால் கலப்பை நுனியால் பல உயிர்கள் இறக்கின்றன.யானை நடக்கும்பொழுது சாகும் உயிர்களைவிட மனிதன் நடக்கும் போது இறக்கும் நுண்ணூயிர்கள் அதிகம்.ஒரு நாளைக்கு மனிதன் ஆயிரம் நடை நடக்கிறான்.யானை அப்படி நடப்பதில்லை.எது எப்படியாயினும் இறக்கத்தக்கவைதான் இறக்கின்றன.ஆகவே எந்தப் பிராணியும் விதியை வெல்ல முடியாது.இறக்க தக்கவைதான் இறக்கும்.விடுபடத்தக்கவை விடுபடும்.

165- போரில் இறப்போர் கதி
போரில் இறப்போர் கதி பற்றி மகேஸ்வரி வினவ..ஈஸ்வரன் சொல்கிறார்..
'போர்க்களத்தில் இரு திறத்துப் படைகளும் மோதும் போதும், யானைப்படை வீரரும்,குதிரைப் படை வீரரும்,தேர்ப்படை வீரரும்,காலாட்படை வீரரும் உற்சாகம் குன்றாமல் போராடுகின்றனர்.வீர வாதம் செய்து போர் புரிகையில் எண்ணற்ற வீரர்கள் இறக்கின்றனர்.போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரரைப் பாவம் துரத்திப் பிடித்துக் கொள்ளும்.

இப்பாவம் மன்னனைச் சாராது கோழைகளையே பற்றிக் கொள்கிறது.இதுபோலவே கொல்லாமை மேற் கொள்ளும் வீரர் மனம் ஒன்றிப் போரிடவில்லையெனில் அவர்களையும் கொடிய பாவம் பற்றும்.அரசர்கள் நரகத்தை அடைவர்.தன் மன்னனுக்கு வீராவேசம் கொண்டு போரிட்டு உயிர் துறக்கும் வீரன் சுவர்க்கம் அடைவான்.

கருணையுள்ள வீரன் கூடப் பெரு வீரத்துடன் போர் புரிவதில் உற்சாகம் கொள்வான்.இங்கு இரக்கத்திற்கு இடமில்லை.பெரு வீரன் மான் கூட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தும் சிங்கம் போல கர்ஜித்துப் போரிட வேண்டும்.யுத்தத்தில் யானை மீதிருந்து போரிட்டு மாண்டவன் பிரம லோகத்தை அடைவான்.தேரிலிருந்து போரிட்டு உயிர் துறந்தவன் இந்திரர் லோகத்தை அடைந்து இன்பம் அனுபவிப்பான்.போர்க்களத்தில் கொல்லப்பட்டவர் சுவர்க்கத்தில் தேவர்களால் பாராட்டப்படுவர்.

கொன்றவர் இங்கு போற்றப்படுவர்.எனவே..போர்க்களம் செல்லும் வீரன் வெஞ்சமரில் அஞ்சாது போரிட வேண்டும்.ஆயிரமாயிரம் நதிகள் கடலில் கலப்பது போல, ராஜ தர்மத்துடன் பல்வேறு ஒழுக்கங்கள் அவனை சென்று அடையும்.
தொன்று தொட்டு வரும் தருமங்கள் எல்லாவற்றையும் மன்னன் காப்பாற்ற வேண்டும்.தருமத்தை அரசன் கைவிட்டால் , தருமம் அவனை கைவிட்டு விடும்.எந்த நாட்டில் மன்னன் ஆட்சி செம்மையாய் உள்ளதோ அங்கே மழை தவறாது பெய்யும்.நாட்டு மக்கள் பிணி முதலான துன்பங்களின்றி நலமாக வாழ்வர்.

மன்னன் எது நடந்தாலும் பொறுமையாக இருந்தால்,ராஜ தருமம் ஒழுங்காக நடைபெறாது.தீயவர்களைத் தண்டிக்கத் தயங்கக் கூடாது.நல்லவர்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.மன்னன் ஆறிலொரு பகுதியைத் தீர்வையாகக் கொள்ள வேண்டும்.அப்படிக் கொள்பவன் தன் குடிமக்களைப் பாதுகாக்காமலும், பிற நாட்டைக் கைப்பற்றாமலும் இருத்தல் கூடாது.அத்தகைய மன்னனின் திறமையின்மையைப் பயன்படுத்தி அயல் நாட்டவர் அவன் மீது படையெடுத்து வெற்றி காண்பர்.

அந்நிலையில் எதிரி நாட்டுப் பாவமெல்லாம் தோல்வியுற்ற மன்னனை வந்து அடையும்.யுத்தக்களத்தில் வீரத்துடன் போரிட்டு மாண்ட மன்னவன் விமானத்தில் ஏறி வீர சுவர்க்கம் அடைவான்.அவன் உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உளவோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவ சுகம் அனுபவிப்பான்.பின் மண்ணுலகில் மன்னனாகவோ, அறவானாகவோ பிறப்பான்.ஆதலால் மன்னன் விழிப்புடன் நாட்டை ஆள வேண்டும்' என்று முடித்தார் மகேஸ்வரன்.

166-கல்வி,அறம்,பொருள்,இன்பம்
பார்வதி ஈஸ்வரனை நோக்கிக் கல்வி,அறம்,பொருள், இன்பம் பற்றி விளக்குமாறு வேண்டிக் கொள்ள,ஈஸ்வரன் கூறலானார்.
மனிதப் பிறவி மட்டுமே தொழில் செய்யும் வாய்ப்புப் பெற்றுள்ளது.ஏனைய பிறவிகளுக்கு இவ்வாய்ப்பு இல்லை.இன்பமும்,துன்பமும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு.ஒருவன் எத் தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு அவனுக்குக் கல்வியினாலேயே

அமையும்.கல்வியால் அறிவு விரிவடைகிறது.அறிவினால் உண்மையை அறிய முடிகிறது.உண்மையை உணர்ந்தவன் பொறாமை,அவா,சினம் முதலான மாசுகளை அகற்றி மனத்தைத் தூய்மையாய் வைத்துக் கொள்வான்.
கல்வியினால் ஒருவன் எங்குச் சென்றாலும் சிறந்த வாழ்க்கை நடத்த முடியும்.

ஆதலால் ஒவ்வொருவரும் கல்வியால் தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.கல்வி அறிவினால் நன்மை தீமைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.மனத்தில் தோன்றும் சினம், ஆசை முதலிய குற்றங்களைப் போக்கி ஆன்மத் தூய்மையுடன் விளங்க வேண்டும்.பெரியோரைப் போற்றி வழிபட வேண்டும்.மனமானது குடும்பத்தில் வழி வழியாய் வரும் ஒழுக்கத்தைப் பற்றும்.ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறப்பதற்காகத் தான தருமங்கள் முற்காலத்தில் விதிக்கப்பட்டன.

ஒருவன் கல்வியின் மூலமாக வாழவேண்டும் என கருதுவானாயின்,ஒரு நல்ல ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும்.கற்ற கல்வியை மேலும் மேலும் நல்ல நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உழவுத்தொழில் மூலம் ஒருவர் வாழ நினைத்தால் நல்ல நீர்வளம் நிறைந்த இடத்தை நாடி உழவுத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.வாணிபத்தை மேற்கொள்வதாயின் காலத்திற்கு ஏற்றவாறு மிக நுணுக்கமாக விலை மாற்றங்களைச் செய்து சாதுர்யமாக வாழ வேண்டும்.பத்து, பதினைந்து பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்யலாம்.

ஒரு முதலாளியிடம் வேலை செய்யும் தொழிலாளி தான் வாங்கும் பணத்தைவிடப் பல மடங்கு வேலை செய்து முதலாளியின் நன் மதிப்பைப் பெற வேண்டும்.முதலாளியும் அத்தகைய தொழிலாளியிடம் மிகவும் அன்பு கொண்டு தன் குடும்பத்தில் ஒருவனாகக் கருதி அவன் தேவையை நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் நாட்டில் தொழில் பெருகும்,வாணிபம் செழிக்கும்.

இடம்,காலம்,மூலதனம்,செய்திறம் ஆகியவற்றை ஆராய்ந்து தெய்வத்தாலோ,மனிதனாலோ இடையூறு நேரா வண்ணம் எண்ணிப்பார்த்து ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்.கிடைத்தப் பொருளைக் காப்பாற்ற வேண்டும்.மேலும், மேலும் பெருக்க வேண்டும்.இடைவிடாமல் தொழிலைச் செய்ய வேண்டும்.ஆராய்ந்து பாராமல் இருப்பதே போதும் என்று தொழில் புரியாமல் உண்பவனுடைய செல்வம் மலை அளவு இருந்தாலும் நாளாவட்டத்தில் அழிந்து விடும்.

அறிவுடையவன் தொழிலால் வரும் லாபத்தை ஒழுங்காக வரையறை செய்து கொண்டு செலவிட வேண்டும்.ஒரு பாகத்தைத் தரும காரியங்களுக்காகச் செலவழிக்க வேண்டும்.ஒரு பாகத்தைக் கொண்டு மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.பொருள் இல்லாதவரை உலகம் ஒரு நாளும் மதிக்காது. அத்தகைய பொருளைக் கண்ணும் கருத்துமாகப் பெற முயற்சித்தல் முதல் கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு பாகத்தைத் திடீரென ஏற்படும் நோய்களையும் ஆபத்துகளையும் போக்கச் செலவிட வேண்டும்.பொருள் இல்லாதவன் இம்மை இன்பங்களையும் மறுமை இன்பங்களையும் இழப்பான்.உண்ணும் உணவினால் எப்படி ஐம்பொறிகளும் செயல் படுகின்றனவோ அப்படியே சேர்க்கும் பொருளால் உலகத்தில் செயல்கள் நடைபெறுகின்றன.உணவு இல்லையேல் ஐம்பொறிகளும் நிலைகலங்கிப் போவது போலப் பொருள் இல்லையேல் வீடும் நாடும் அழிந்தொழியும்.

பொருளை நல்வழியில் சேர்ப்பது, செலவழிப்பது என்பதோடு நில்லாமல் ஒருவன் ஞான மார்க்கத்தில் நிலை பெற வேண்டும்.ஆன்ம முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட வேண்டும்.நல்ல உணவாலும் நல்ல ஒழுக்கத்தாலும் உடலைக் காப்பாற்ற வேண்டும்.எப்படிப்பட்டவனும் தன் சக்திக்கு ஏற்றவாறு எதையும் செய்ய வேண்டும்.தன் சக்திக்கு ஏற்ற தவம்..சக்திக்கு ஏற்ற தானம்..சக்திக்கு ஏற்ற தியாகம் என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறி முடித்தார் ஈஸ்வரன்.    

167-கல்வி,அறம்,பொருள்,இன்பம் -2
பார்வதி- எல்லோரையும் படைக்கும் கடவுளான பிரமதேவர் சமமாக படைத்தார் என்றால், சிலர் ஏன் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்? சிலர் ஏன் துன்பத்தில் வாகுகின்றனர்?
ஈஸ்வரன்-முற்காலத்தில் பிரமதேவர் மனிதர்களைச் சமமாகவே படைத்தார்.அவருக்கு யாரிடத்திலும் வெறுப்பும் இல்லை.

விருப்பும் இல்லை.பிறக்கும் போது யாவரும் வேற்றுமையின்றியே பிறந்தனர்.அந்த யுகத்தில் அவர்கள் சமமாகவே இருந்தனர்.காலம் செல்லச் செல்ல, செயல் காரணமாக வேறுபட்டனர்.அதனால் மக்களிடையே பூசல் உண்டாயிற்று.இத்னை உணர்ந்த அறவோர் பிரமதேவனிடம் சென்று முறையிட்டனர்.'உமக்கு ஏன் இந்த மனோபாவம்! நாங்கள் அனைவரும் உம் புத்திரர் அல்லவா? அப்படியிருக்க ஏன் பூசல் தோன்றியது'என வினவினார்.

அதற்கு பிரமதேவர்,'நீங்கள் என் மீது குற்றம் கூறுவதில் அர்த்தம் இல்லை.நீங்கள் உங்கள் செயல்களை நினைத்துப் பாருங்கள்'.
உங்கள் செயல் காரணமாக நீங்கள் நன்மை அல்லது தீமை அடைகிறீர்கள்.ஒருவன் எந்தவிதமான வினையைச் செய்கிறானோ அதற்குரிய பயனைப் பெறுகிறான்.ஒவ்வொருவனும் தன்னுடைய வினைப் பயனைத் தானே அனுபவிக்க வேண்டும்.வேறு யாரும் அதை அனுபவிக்க முடியாது.மற்ற எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் உற்றார் உறவினர் கர்மத்தை அனுபவிப்பதில் மட்டும் உதவி செய்ய முடியாது.

அவரவர் வினைப் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும்.' என்ற அறிவுரையைக் கேட்ட அறவோர் திரும்பச் சென்று நல்ல காரியங்களைச் செய்தனர்.அதன் பயனால் சுவர்க்கம் சென்று இன்பம் அடைந்தனர்.தேவி..பேராசைக்காரர்களும்,அன்பு இல்லாதவர்களும், சுயநலம் உடையவர்களும் தருமத்தில் நாட்டம் கொள்வதில்லை.அத்தகையோர் மறு பிறவியில் துன்பம் மிக அனுபவிக்கின்றனர்' என்றார்.

பார்வதி- மக்களில் சிலர் இன்பத்தை அனுபவிப்பதற்குரிய செல்வமெல்லாம் உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லையே...ஏன்?
ஈஸ்வரன்-மாந்தரில் சிலர் தூண்டுதலால் தருமம் செய்கின்றனரே யன்றி, தருமம் செய்வது நம் கடமை என்று எண்ணிச் செய்வதில்லை.அத்தகையோர் மறு பிறப்பில் இன்பத்துக்கு ஏதுவான பொருள்களை உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லை.செல்வத்தைக் காக்கும் காவற்காரனைப் போல இருப்பாரேயன்றி அதனை அனுபவிப்பதில்லை.

பார்வதி-சிலர் செல்வம் இல்லாதிருந்தும் இன்பம் உடையவர்களாக இருக்கிறார்களே..எப்படி..
ஈஸ்வரன்-யார் தருமத்தில் விருப்பம் உடையவர்களாக ..அன்புள்ளவர்களாக-தமது வறுமையிலும் பிறருக்கு உதவ முற்படுவார்களோ அவர்கள் மறுபிறவியில் செல்வம் இல்லாதிருந்த போதிலும் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.எனவே பொருள் இல்லையென்றால் கூடத் தான தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.

பார்வதி- உலகில் பலவகை மனிதர்களைக் காண்கிறோம்.சிலர் ஓடி ஆடி வேலை செய்யாமல், உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே எல்லா அதிகாரத்தையும் திரண்ட செல்வத்தையும் பெற்று இன்பமாக இருக்கின்றனர்.அது எத்தகைய கருமத்தால்..
ஈஸ்வரன்- உனது சந்தேகம் நியாயமானதே..

உலகில் யார் தான தருமத்தின் சிறப்பை உணர்ந்து,வெகு தொலைவில் இருந்த போதும் ஊகத்தினாலேயே தானத்திற்கு உரியவர்களை அறிந்து அவர்களைச் சார்ந்து அவர்களது மனம் மகிழுமாறு தானம் முதலானவற்றை செய்கின்றனரோ அவர்கள், சிறிதும் முயற்சியின்றியே அதன் பலனை ,மறுபிறவியில்  பெருகின்றனர்.தமது புண்ணியச் செயலால் விளைந்த இன்பத்தை உட்கார்ந்தவாரே அனுபவிக்கின்றனர்.

பார்வதி-சிலர் மிகவும் முயன்று செல்வத்தைப் பெற்று இன்புறுகின்றனர்..இது ஏன்?
ஈஸ்வரன்-யாசிப்பவர் தம்மை நோக்கிவரும் போது தான தருமம் செய்கின்றனர்.அத்தகையோர் மறுபிறவியில் மிகவும் முயன்று அந்தப் பயனை-இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
(பார்வதியின் சந்தேகமும்..ஈஸ்வரனின் பதிலும் தொடரும்)

168-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 3
பார்வதி தன் சந்தேகத்தைத் தொடர்கிறார்..

பார்வதி-சிலர் என்ன தான் முயன்றாலும் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனரே..ஏ ன் ?
ஈஸ்வரன்-யார் யாசிப்பவர்க்கு ஒன்றும் தராமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்களோ அத்தகையோர் மறுபிறவியில் எவ்வளவு முயன்றாலும் ஓர் இன்பத்தையும் பெற முடிவதில்லை.எதுவும் வித்தின்றி முளைப்பதில்லை.நற்செயல் அன்றி நற்பலன் இல்லை
பார்வதி-சிலர் வயதான காலத்தில், அனுபவிக்க இயலாத முதுமையில் எல்லையற்ற செல்வத்தைப் பெறுகிறார்களே..ஏண்?

ஈஸ்வரன்-அத்தகையோர் செல்வம் உடையவராக இருந்தும் தருமச் செயல்களை வெகுநாள் செய்யாதிருந்து மரணகாலத்தில் நோயால் துன்புறும் போது அறம் செய்ய முற்பட்டவராவர்.அதனால் அனுபவிக்க வேண்டிய காலத்தில் செல்வம் முதலியவற்றைப் பெறாமல் இறுதிக் காலத்தில் (காலம் கடந்து) பெறுகின்றனர்.

பார்வதி-சிலர் திரண்ட செல்வத்தைப் பெற்றிருந்தும் நோயினால் அவதிப்பட்டு அவற்றை அனுபவிக்க முடியாமல் வருந்துகின்றனரே..ஏன்?
ஈஸ்வரன்-அத்தகையோர் முற்பிறவியில் நோயினால் பீடிக்கப்பட்டு இனிப் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபின் தான தருமங்களை செய்தவராவர்.அதனால் அவர்கள் மறுபிறவியில் செல்வத்தைப் பெற்றிருந்த போதிலும் அவற்றை அனுபவிக்க முடியாதவாறு நோயினால் துன்புறுகின்றனர்.

பார்வதி-சிலர் பார்ப்பதற்கு அழகானவராகவும், இனிமையாகவும் இருப்பது எந்தக் கர்மப் பலனால்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் நாணம் மிக்கவராகவும் இனிமையாக பேசுபவராகவும் தருமம் செய்பவராகவும் விளங்கினார்களோ..அவர்கள் இப்பிறவியில் காண்பதற்கு அழகாகவும் இனிமையாகவும் காட்சியளிக்கின்றனர்
பார்வதி-சிலர் காண்பதற்குக் கவர்ச்சியில்லாது அருவருப்பாக இருக்கின்றனரே..அது எதனால்

ஈஸ்வரன்-முற்பிறவியில் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று கர்வத்தினால் பிறரை இகழ்ந்தவர்கள், இப்பிறவியில் பிறர் இகழ அழகில்லாமல் இருக்கின்றனர்

பார்வதி-சிலரிடம் அழகும் இல்லை..செல்வமும் இல்லை..ஆயினும் மனதைக் கவரும் வண்ணம் பேசுகின்றனரே..பெண்களால் கவரப்படுகின்றனரே..அது எந்தக் கர்மத்தால்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் இனிமையாக பேசுபவராகவும், தம் மனைவியைத் தவிர வேறு பெண்களை எண்ணிப் பாராதவராகவும், தான தருமங்கள் செய்பவராகவும்,மகளிரிடம் காணப்படும் குற்றங்களைப் பொருட்படுத்தாது குணங்களையே பேசுபவராகவும் இருந்தவர்கள் இப்பிறவியில் அழகில்லாவிடினும் அன்புள்ளவராய் இருக்கின்றனர்.தன் அன்பான பேச்சால் அனைவரையும் கவர்கின்றனர்.பெண்களால் விரும்பப்படுகின்றனர்.

பார்வதி-சிலர் கல்வி அறிவும் ,கேள்வி ஞானமும், விடாமுயற்சியும் இருந்தும் வறுமையில் வாடுகின்றனரே..ஏன்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் கல்வியிலும்,செல்வத்திலும் சிறந்து இருந்த போதும் யாருக்கும் ஒன்றும் தராமல், பசித்தவர்க்குக் கூட உணவு தராமல் இருந்தனரோ, அவர்கள் இப் பிறவியில் அறிவும்,ஞானமும் உள்ளவராய் இருந்தும் வறுமையுடையவர்களாகவே திகழ்கின்றனர்.விதைத்ததுதானே முளைக்கும்.
பார்வதி-உலகில் செல்வம் மிக்கவராக இருந்தும் சிலர் கல்வி அறிவு இல்லாதவர்களாக, மன உறுதி அற்றவர்களாக, முரடர்களாக உள்ளனரே ..ஏன்
ஈஸ்வரன்-முற்பிறவியில் கல்வியில்லாதவர்களாக இருந்த போதிலும் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்திருப்பர்.அதனால் இப்பிறவியில் அவ்வாறே செல்வந்தராகவும்,கல்வி முதலான சிறப்புகள் அற்றவராகவும் இருக்கின்றனர்.கல்வி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தானத்தின் பலன் அப்படியே செல்வத்தை உண்டாக்கும்.

பார்வதி- சிலர் புத்திசாலியாகவும்,நினைவாற்றல் உள்ளவராகவும், தெளிவான உச்சரிப்பு உடையவர்களாகவும் இருக்கின்றனரே..அது எந்தக் கர்மப் பயனால்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் ஒரு குருவைச் சார்ந்து முறைப்படி கல்வி கற்றவார்கள் ஆவர்.செருக்கு இல்லாதவர் ஆவர்.மன அடக்கம் உள்ளவராக இருந்திருப்பர்.அதனால் அவர்கள் இப்பிறவியில் புத்திசாலித்தனமும்,நினைவாற்றலும் ,தெளிவான உச்சரிப்பும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்.

169-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-4

பார்வதி- சிலர் எவ்வளவுதான் முயற்சி உடையவர்களாக இருந்த போதிலும் கல்வி அறிவு பெறாதவராகக் காணப்படுகின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்- அவர்கள், முற் பிறவியில் கல்வியினால் கர்வம் அடைந்திருப்பர்.தங்கள் கல்விப் பெருமையால் பிறரை அலட்சியம் செய்திருப்பர்.இகழ்ந்திருப்பர்.அத்தகையோர் இப்பிறவியில் கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வாய்த்தும் கல்வி அறிவு இன்றிக் கானப்படுகின்றனர்.

பார்வதி-சிலர் எல்லா நற்குணங்களும் உள்ளவராய் உள்ளனர்.நல்ல மனைவி மக்களுடன் வாழ்கின்றனர்.அவர்கள் வேலைக்காரரும் அவர்கள் சொற்படி நடக்கின்றனர்.செல்வத்தில் திளைக்கின்றனர்.நோயின்றி மகிழ்ச்சியுடன் விளங்குகின்றனர்.ஒரு நாளும் அவர்கலுக்குத் துன்பம் இல்லையே..ஏன்?

ஈஸ்வரன்-முற்பிறவியில் யார் கல்வி அறிவில் சிறந்தவர்களாக..ஒழுக்க சீலராக, தானம் செய்பவர்களாகத் திகழ்கின்றனரோ..யார் கொல்லாமையும் வாய்மையையும் போற்றினரோ, யார் நல்ல நோன்புகளை மேற்கொண்டு பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதினரோ அவர்கள் இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெற்று ஒரு குறையும் இன்றி வாழ்கின்றனர்.

பார்வதி-சிலர் பசியினால் வாடி, பிணியால் துன்புற்று, வறுமைப் பிடியில் சிக்கி, யாருக்கும் ஒன்றும் தராமல் இருக்கின்றனரே..மனைவியால் துன்பப்படுகின்றனரே..எப்போதும் ஏதேனும் ஒரு இடையூற்றை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் இரக்கமற்றவராக இருந்திருப்பர்.கோபமும், பேராசையும் கொண்டவராக இருந்திருப்பர்.ஒழுக்கம் இல்லாதவராக, பிறரைத் துன்புறுத்துபவராக, உயிர்கலீடத்தில் அன்பு அற்றவராக இருந்திருப்பர்.ஆதலால் இப்பிறவியில் நீ கூறியவாறு உள்ளனர்.

பார்வதி-சிலர் பிறவியிலேயே குருடராய் இருக்கின்றனர்.சிலருக்குப் பிறந்த சில ஆண்டுகலுக்குப் பின் கண் கெட்டுப் போகிறது..ஏன்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் காமாந்தகாரராகத் திரிந்தனரோ, யார் பிறர் மனைவியை நாடிச் சென்றனரோ அவர்கள் இப்பிறவியில் கண் பார்வைக் கெட்டுத் துன்புறுகின்றனர்

பார்வதி-பார்வதி- சிலர் இளம் வயதிலேயே பல்லை இழந்து,தொண்டையில் நோயுற்றுக் காது கேளாவராக ஆகி, முக விகரமாகத் தோன்றுகின்றனரே! ஏன்?
ஈஸ்வரன்-பொய் பேசுதலையே முற்பிறவியில் தொழிலாகக் கொண்டவரும்,சினத்துடன் விளங்கியவரும், பிறர் செவி கைப்பக் கூறியவரும், பிறர் கேட்டினைக் காதால் கேட்பவரும் ஆகிய இவர்கள் இப்பிறவியில் தொண்டை,காது,பல் முதலியவற்றில் நோய் உண்டாகத் துன்புறுகின்றனர்

பார்வதி-கர்மங்களைத் தோற்றுவைப்பது ஆத்மாவா? இல்லையெனில் வேறு யார்?
ஈஸ்வரன்-ஆத்மா கர்மங்களை உண்டாக்குவதில்லை.ஆனால் கர்மங்களினால் பாதிக்கப் படுகிறது.உடலானது கபம்,வாதம்,பித்தம் ஆகிய மூன்று தாதுக்களால் நிரம்பி இருப்பது போல, சத்துவ குணம்,ரஜோ குணம்,தாமோ குணம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கிறது.சத்துவ குணம் உடையவர் எப்போதும் புகழுடன் திகழ்வர்.ரஜோ குணம் துக்கத்திற்குக் காரணம்.தமோ குணம் அறிவின்மைக்கு இடமாகும்.
வாய்மை,தூய்மை,நன்மையில் நாட்டம்,பொறுமை,அடக்கமுடைமை,இன்சொல் கூறல் முதலான நற்பண்புகள் சத்துவ குணத்தால் உண்டாகும்.

செயல்திறன்,சுறு சுறுப்பு,பொருட்பற்று ஆகியவை ரஜோ குணத்தால் ஏற்படும்.பொய்,சோம்பல்,பிடிவாதம்,துக்கம்,தூக்கம்,வீண்பகை,பிறருக்குத் துன்பம் தருதல் முதலிய பாவச்செயல்கள் தமோ குணத்தால் விளையும்.
ஆதலால் நன்மை, தீமை ஆகிய கருமங்கள் குணங்களால் அமைபவை.எனவே ஆத்மா ஆசையற்றது.விகாரமற்றது.தூய்மையானது.

சத்துவகுணம் உள்ளவர் தேவர் உலகில் சென்று பிறப்பர் .

ரஜோ குணம் உள்ளவர் மனிதப் பிறவி எடுப்பர்

தமோ குணம் உள்ளவர் விலங்கு கதி,நரக கதி என்னும் கதிகளில் பிறவி எடுத்து துன்புறுவர்.

170-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-5

பார்வதி- இந்த உடல் கொல்லப்பட்டால் ஆத்மா இதனை விட்டுப் போய் விடுகிறதே..அது எதனால்..
ஈஸ்வரன்-மிக நுட்பமான அறிவு படைத்தவரும் இதனை விளக்கமுடியாது துன்புறுவர்.பிறவி  எடுத்து உயிர்களின் கர்மம் முடியும் போது ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு உடலுக்கு இறுதி ஏற்படும்.அதனால் உடல் அழியும் போது ஆத்மா அதன் கருமத்திற்கு ஏற்பப் பயனை அனுபவித்து அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறது.உடல் அழிவுக்கான நோய்களினால் ஆத்மா துன்புறுவதில்லை.உடலை வெட்டினாலும், குத்தினாலும்,கொன்றாலும், தர தர என இழுத்துச் சென்றாலும் ஆத்மாவிடத்தில் ஒரு மாறுதலும் ஏற்படாது.அனுபவிப்பது உடல்தான்.கர்மத்தின் பயன் உள்ளவரை உடலில் ஆத்மா தங்கியிருக்கும்.பிரிய வேண்டிய காலம் வரும் போது பிரிந்து விடும்.இதையே உலகோர் மரணம் என்கின்றனர்.

பார்வதி-பிறருக்கு நன்மை செய்பவன் நன்மையை அடைந்து இன்புறுகிரான் என்பது சரி.ஆனால் பிறருக்குத் துன்பம் செய்பவன் எப்படி இன்பத்தை அடைகிறான்? இருள் என்பது என்ன?
ஈஸ்வரன்-பலரது நன்மைக்காக , சமுதாயத்தின் நன்மைக்காக ஒருவனுக்குத் துன்பம் செய்பவன் இன்பம் அடைவான்.

அரசன் சமுதாய நன்மைக்காகச் சிலருக்கு தண்டனை விதித்துப் புண்ணியம் அடைகிறான்.வழி தவறி நடக்கும் சீடனுக்குப் பிராயச் சித்தம் முதலான தண்டனைகளால் குரு நற்பயனை அடைகிறார்.மருத்துவர் நோயாளிக்குத் துன்பத்தை அளித்துச் சிகிச்சை செய்து புண்ணியம் பெறுகின்றார்.இப்படி நல்ல எண்ணத்துடன் செயல்படுபவர் புண்ணிய பலனால் தேவர் உலகம் அடைகின்றனர்.தீயவன் ஒருவன் கொல்லப்படுவதன் மூலம் ஒரு சமுதாயமே நன்மை பெறுமானால் அவனைக் கொல்வது கொலையாகக் கருதப்பட மாட்டாது.இது பாவம் அன்று.இதனால் பாவப் பயன் ஏற்படாது.புண்ணிய பலனே ஏற்படும்.

இருளைப் பறிச் சொல்வதானால்..இருள் இருவகைப்படும்.இரவில் தோன்றுவது ஒன்று..மனித மனதில் தோன்றுவது மற்றொன்று.

இருளில் தோன்றும் இருள் ஒளிகளால் மறையும்..விலகும்..ஆனால் உள்ளத்தில் தோன்றும் இருளை உலகில் உள்ள சூரியன், சந்திரன் ஆகிய ஒளிப் பிழம்புகளால் கூடத் தொலைக்க முடியாது.உல உயிர்களைப் படைத்த பிரமதேவன் மக்களின் மன இருளைப் போக்கத் தவம் செய்தார்.அப்படிச் செய்த தவத்தால் வேதமும், உபநிஷதமும் தோன்றின.பிரமதேவர் அதனால் மகிழ்ச்சி அடைந்தார்.மன இருள் அவற்றால் அழியலாயிற்று.நினைக்கத்தக்கது..சொல்லத்தக்கது..செய்யத்தக்கது என்பவற்றை எல்லாம் விளக்கும் ஆகமங்கள் இல்லையென்றால் மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருள் போக்க உதவும் ஒழுக்க நெறிகளைக் கூறும் ஆகமங்களை மக்கள் போற்றுதல் வேண்டும்.

அது மட்டுமல்லாது, இவ்வுலைகைத் தாங்குவது ஆகமம் என உணட வேண்டும்.இதைத்தவிர உயிர்களுக்கு நன்மை தருவது மூன்று உலகிலும் இல்லை.ஒருவருக்குப் பிறவியிலேயே அமையும் ஞானம் தலை சிறந்தது.கற்பிக்கப்படும் கல்வி இரண்டாவதாகக் கருதப் படுகிறது.இந்த இரண்டும் நிரைந்திருந்தால் தான் நன்மை உண்டாகும்.ஆகமப் பயிற்சி ஒருவனை முழு மனிதனாக ஆக்குகிறது.இந்த ஞானம் உள்ளவன் பொருள்களின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்கிறான்.காமம்,கர்வம்,பயம்,பேராசை ஆகியவை அனைத்தும் காற்றால் மேகம் விலகுவதைப் போல விலகும்.ஆகவே ஆகமக் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.

பார்வதி-பாவம், புண்ணியம் ஆகிய செயல்களைப் பற்ரி விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஈஸ்வரன்-கர்மங்கள் இரண்டுவகைப் படும்.அவை புண்ணிய கர்மம்,பாவ கர்மம்.பாவகர்மம் மூன்று வகையில் உண்டாகிறது.முதலில் மனதிலும், பிறகு சொல்லிலும்,பின் செயலிலும் தோன்றுகிறது.பொறாமை,ஆசை,கெட்ட எண்ணம் ஆகியவை மனத்தே தோன்றும் பாவ கர்மங்களாகும்.பொய்,புறங்கூறல்,கடும் சொல்,பிறர் மனம் புண்படப் பேசுதல்,பிறரைப் பழித்தல் ஆகிய இவை வாக்கினால் ஏற்படும் பாவங்கள்.கூடானட்பு,பிறர் மனை நாடுதல்,பிற உயிரைத் துன்புறுத்துவது,உண்ணத் தகாதவற்றை உண்ணுவது,செய்யத் தகாததைச் செய்வது,,பிறர் செய்யும் கெட்டசெயலுக்குத் துணையாக இருப்பது,புண்ணியத்திற்கு மாறாக செயல்களில் ஈடுபடுவது ஆகிய இச்செயல்கள் பாவங்கள் எனக் கருதப்படுபவை.மனதால் வரும் பாவத்தை விடச் சொல்லால் நேரும் பாவம் அதிகம் ஆகும்.அதைவிட அதிகம் செயலால் வரும் பாவம்.இத்தகைய பாவங்களால் ஒருவன் நரகத் துன்பத்தை அடைவான்.

இனிப் புண்ணியத்தின் பெருமையைக் கேள்..மனம்,சொல்.செயல் இவற்றால் ஏற்படக்கூடிய பாவச் செயல்களை விடுவதாலேயே புண்ணியம் உண்டாகிறது.பாவச் செயல்களை முற்றிலும் விலக்கும் ஒருவன் முனிவன் ஆகிறான்.பாவத்தை விலக்கிய ஆத்மா மேன்மை அடைகிறது.மனதில் மாசற்றுப் பாவத்திற்குப் பயந்த போதே புண்ணியம் உதயமாகிறது.சான்றோர் தொடர்பும்,ஆகமப் பயிற்சியும் ,மன உறுதியும்,மன நிறைவும் புண்ணியம் பெற பெரிதும் உதவுகின்றன.ஒவ்வொருவரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த தானமும் இல்லை.தவமும் இல்லை.தருமமும் இல்லை.சத்தியம் என்னும் கப்பலைக் கொண்டுதான் சம்சாரம் என்னும் துக்கக் கடலைக் கடக்க முடியும்.

171-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 6

பார்வதி- விரதம்..விரதம் என்கிறார்களே..அதை எப்படி கடைப்பிடிப்பது?
ஈஸ்வரன்-மனத்தினால்,சொல்லினால்,செய்கையினால் ஏற்படும் பாவங்களை விட முயல்வது விரதமாகும்.ஆகம விதிப்படி மனத் தூய்மையுடன்,உடல் தூய்மையுடன் பஞ்ச பூதங்களையும் வணங்க வேண்டும்.சூரிய சந்திரர்களை வழிபட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலோ,மரணம் வரையிலோ விரதத்தை மேற்கொள்ளலாம்.கர்மக் காட்டைச் சுட்டெரிக்கும் நெருப்பு என விரதத்தைக் கருத வேண்டும் பூ,காய்,கனி இவற்றைக் கொள்ளும் வகையிலும் விரதம் அமைய வேண்டும்.பிரமசர்ய விரதத்தையும் மேற் கொள்ள வேண்டும்.
பார்வதி-புலால் உண்பதால் ஏற்படும் தீமை யாது? உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?

ஈஸ்வரன்-எல்லாத் தான தருமங்களும் புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மைக்கு ஈடாகாது.தன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லக்கூடாது.நம் உடலுறுப்புக்களை அறுக்கும் போது நமக்கு ஏற்படும் துன்பம் போலவே பிற உயிர்களை அறுக்கும் போதும் அவ்வுயிர்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.நூறு வருடம் தவம் செய்தால் ஏற்படும் பயன் புலால் உண்ணாமையால் ஏற்படும்.தன் உயிரைக் காட்டிலும் ஒருவருக்கு இனிமை பிறிதில்லை.ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்துடன் இருந்து அவற்றிற்கு நன்மை செய்ய வேண்டும்.
பார்வதி-எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த மோட்ச தருமம் எப்படி வர்ணிக்கப்படுகிறது?தோற்றமும், முடிவும் இல்லாத மோட்ச தருமம் எப்படி உயர்ந்ததாக ஆகிறது?
ஈஸ்வரன்-மோட்சத்திற்கு உரிய வழிமுறைகள் எல்லா ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது.தருமத்தின் செயல் எதுவும் வீணாவதில்லை.யார் யார் எந்தெந்தத் தருமங்களில் உறுதியாய் உள்ளனரோ,அந்தநத தருமங்கள் மோட்ச மார்க்கமேயாகும்.மோட்சம் தான் எல்லாத் தருமங்களின் முடிவு.இதனினும் சிறந்த ஓர் உயநிலை வேறு எதுவும் இல்லை.எனவே மோட்ச மார்க்கத்தை அறிந்து கொள்வது அவசியந்தான்.இதைப் பற்றி விளக்குகிறேன்...

மோட்சம் மனதாலும் அறிய முடியா மாண்பு உடையது.மோட்ச ஞானமே உயர்ந்த ஞானமாகும்.மகரிஷிகள் அதை பரமபதம் என கொண்டாடுகிறார்கள்.அழியாததும் அந்தமில்லாததும் இன்பம் தரக்கூடியதுமான அம்மோட்சத்தை நோக்கித் தான் எல்லா உயிர்களும் பயணம் செய்கின்றன.ஆயினும் ஒழுக்கத்தால் உயர்ந்தவரே அதை அடைய முடிகிறது.இந்தப் பிறவியானது துக்க சாகரத்தில் மூழ்கித் துன்புறுகிறது.சம்சாரம் என்பது பிறப்பு,பிணி,மூப்பு என்னும் துக்கத்தால் நிறைந்துள்ளது.இறப்போ..பிறப்புக்கு வித்தாகிறது.ஆகாயத்தில் காணப்படும் விண்மீன்கள் எவ்வாறு மீண்டும்,. மீண்டும் சுற்றுகின்றனவோ அவ்வாரு தான் பிறப்பும் உள்ளது.எறும்பு முதல் யானை வரையிலுமான பல உடல்களில் சென்று உயிர் பல பிறவிகளை எடுக்கிறது.

இந்தப் பிறவியாகிய கடலிலிருந்து கரை ஏற உதவும் படகாக இருப்பதுதான் ஆத்ம ஞானம்.ஆத்ம ஞானம் என்பது உயிரின் உண்மைத் தன்மையை உணர்ந்து கர்மத் தளையிலிருந்து விடுபடும் உபாயம் ஆகும்..

172-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 7

பார்வதி- ஞானம் என்பது என்ன? வைராக்கியம் என்பது என்ன?
ஈஸ்வரன்-ஞானம் என்பது முக்திக்குரிய மார்க்கமாகும்.சம்சாரம் என்னும் காட்டை ஞானம் என்னும் தீ சுட்டு எரித்து விடும்.பொருள்களிடத்து பற்றற்ற மன நிலை கொண்டு சம்சாரத்தில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சியே ஞான நல்வழியாகும்.முட்டாள்கள் ஆயிரம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டு துன்பம் அடைகிறார்கள்.ஆனால் ஞானிகள் துன்பம் என்று எதையும் கருதுவதில்லை.சாதாரண மக்கள் வேண்டியது கிடைத்துவிட்டால் தலை கால் தெரியாமல் குதித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.துன்பம் வந்து விட்டாலோ சொல்லவே வேண்டியதில்லை.எல்லாமே தொலைந்தது என பதறுகிறார்கள்.ஒரு இலை அசைந்தாலும் புயல் வந்தது போல பரிதவிக்கிறார்கள்.
மனிதப்பிறவியில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வருகின்றன.எந்தப் பொருளில் பற்று ஏற்படுகிறதோ அப்போது அதன் நிலையாமையை உணர்தல் வேண்டும்.அழியப் போகிற ஒன்றின் மீது ஏன் இவ்வளவு ஆசை..பற்று என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது பற்றற்ற தன்மை தோன்றும்.வைராக்கியம் தோன்றும்.
ஆழ்கடலில் வேறு வேறு மூலைகளில் கிடக்கும் நுகத்தடிகள் பல காலம் அலைந்து திரிந்து ஒன்று சேர்ந்து பிரிதல் போல உயிரும் ..உடலும் கலந்து பின் ஒரு கால கட்டத்தில் பிரிகின்றன.பொருள்களின் உண்மைத்தன்மையை..நிலையாமையை அறிந்தவர்கள் அவற்றில் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.நால்வகைக் கதிகளில் எந்தக் கதியாயினும் அதில் துன்பம் தான்.அழியக் கூடிய..பிரியக் கூடிய அனைத்திலும் துன்பம் தான்.பொருளைச் சேர்க்கும் போதும் துன்பம்..காக்கும் போதும் துன்பம்..இழக்கும் போதும் துன்பம்.பொருள் ஆசை உள்ளவர்க்கு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டினாலும் அந்த ஆசை நிரம்பாது.விரும்பியவை அனைத்தும் கிடைத்து விட்டால் இன்பம் கிடைக்குமா? எனில் அப்போதும் இன்பம் கிடைக்காது.மேலும்..மேலும் ஆசை வளரும்.ஆனால் ஆசையே இல்லாத போதுதான் இன்பம் ஏற்படும்.இது பொருள்கள் மீது கொள்ளும் வெறுப்பினால்..வைராக்கியத்தால் ஏற்படும்.
அறிவு என்பது ஒப்பற்ற ஆற்றலால்.. யார் ..ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்கி ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களை துன்பம் அணுகாது.ஐம்பொறிகளை அடக்க முடியாது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனப் பொறி வழிச் சென்று அலைபவர் ஒரு நாளும் இன்பம் அடையார்.
கொடிது..கொடிது..காமம் கொடிது.அஞ்ஞானிகள் இதன் வலையில் வீழ்ந்து கடைத்தேற முடியாது... துன்புற்று பாவப் படுகுழியில் மீண்டும் மீண்டும் வீழ்கின்றனர்.நெருப்பெனத் தவம் இயற்றும் உண்மைத் துறவிகளை இந்த ஈனக் காமம் நெருங்குவதில்லை.ஐம்பொறிகளையும் நிலைகுலையச் செய்யும் இந்தக் காமத்தை வெற்றி கொள்ளாதார்க்கு நற்கதி இல்லை.
காமவெறி கொண்டு அலைவோர் செய்ய வேண்டிய நற்காரியங்களில் ஒன்றைக் கூட செய்ய இயலாது, மரண காலத்தில் சொல்ல முடியாத கொடிய துன்பத்தில் வீழ்ந்து தத்தளிப்பர்.பொருளே கதி என மயங்கிக் கிடப்போரையும்,காம இன்பமே இன்பம் என மயங்கிக் கிடப்போரையும் சிங்கம் ஒன்று மான் குட்டியைத் தூக்குவது போல எமன் தூக்கிக் கொண்டு செல்லும் போது புலம்பி அழுது என்ன பயன்?

173-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 8


பார்வதி-மூப்பையும்..மரணத்தையும் விலக்குவது எப்படி?
ஈஸ்வரன்-பிறப்பே இல்லாதிருக்குமாயின் முதுமை இல்லை..மரணமும் இல்லை.இதற்கு ஒரே வழி முக்தி ஒன்றுதான்.தானத்தாலோ,தவத்தாலோ,முதுமையை,மரணத்தைத் தடுக்க முடியாது.முக்தி பெற்ற உயிர் மீண்டும் பிறப்பதில்லை.பிறப்பில்லையெனில் மூப்பு முதலான வியாதி களும் இல்லை,மரணமும் இல்லை.

தனம், தானம், ஞானம், பிற நல்ல ஒழுக்கங்கள் அனத்தும் நன்மை தரத்தக்கதுதான்.எனினும் இவற்றாலும் மரணத்தைத் தடுக்க முடியாது.ஆகவே மரணத்தை தடுக்கும் முக்திக்கு உரிய வழிகளை ஒவ்வொரு உயிரும் நாட வேண்டும்.முதுமையையும்,மரணத்தையும் தடுக்கும் வழி முக்தி ஒன்றுதான் எனத் தெளிதல் வேண்டும்.உலகில் எத்தகைய நிலையில் இருப்பாராயினும் சரி, அரசராகவோ,மாபெரும் அறிஞராகவோ, முனிவராகவோ,  அனைவரையும் காலம் அவர்களுக்கு உரிய நேரம் வரும் போது மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிரது.

ஒவ்வொரு நாளும்..ஏண்..ஒவ்வொரு வினாடியும் நம் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.காலம்,,..இதன் பிடியிலிருந்து எந்த உயிரினமும் தப்பிக்க முடியாது.மனிதன் விழிப்புடன் இருக்கிறானோ இல்லையோ அவனுக்காக விதிக்கப்பட்ட ஆயுட் காலத்தை முடிப்பதற்கு மரணம் விழிப்புடன் இருக்கிறது.

ஆதலால் செய்ய வேண்டிய நற்காரியங்களை உடனே செய்து முடிக்க வேண்டும்.நாளை செய்ய நினைத்ததை இன்றே..இன்று செய்ய நினைத்ததை இப்பவே செய்துவிட வேண்டும்.இப்போது மழையாக உள்ளது..இப்போது வெயிலாக உள்ளது..இப்போது குளிராக உள்ளது, பிறகு பார்க்கலாம் என்று இருக்கக் கூடாது.இது வேண்டும்..அது வேண்டும் என்று பொருளை நாடித் திரியும் போதே மனிதன் மரணத்தை நெருங்குகிறான்.நரை கூடிக் கிழப் பருவம் அடையும் முன்..இளமை கழியும் முன்னரே மரணம் வரக்கூடும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர் அனைவராலும் ஒருவனை மரணத்தினின்று காப்பாற்ற முடியாது.இவர்கள் அனைவருமே ஒரு நாள் மரணத்தைத் தழுவ வேண்டும்.இந்நிலையில் யாருக்கு யார் துணை?நல்லறங்களைச் செய்து அசையாத ஒழுக்கத்தை மேற்கொண்டு ஆத்மத் தியானத்திலேயே திளைத்து முக்தி அடைதல் ஒன்றே மரணத்தை வெல்லும் வழியாகும்.

சுபம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS