Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை கவிதை

பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்...!!!

E-mail Print PDFகம்பனின் கற்பனைக்கெட்டாத
கவியொன்று பூத்தது என்னுள்
கவியே நீ
கண்ணனா !!! கண்ணகியா !!!

ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
வீர குடி வித்தே !!!

பொதிகை தமிழே
உன்னை உயிரிலே செதுக்கி
உதிரத்தை உணவாக்கி
பத்து திங்கள் காத்தேன் ...!!!

குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ பாலாம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம் ...!!!

எட்டி உதைத்து விளையாடி
கருவறையிலே வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
ஏங்கினேன் உன்முகம் காண ...!!!

மஞ்சள் திரையிட்டு ஆதவன்
மதி வருகைக்காக மறைந்திருக்க
முகில்கள் முத்தமிடும் மாலையிலே
பெற்றேன் பிரசவ வலியை ...!!!

அக்கணமே மனதில் மழை
இன்ப துளிகள் கண்களில்
சிப்பியின் முத்தாக முகம்காட்டி நீ
அம்மா என்றழைக்க வருவதையெண்ணி ..!!!

வலியின் வன்முறையில்
ரணம் தேகத்தை தீயாக்கி
உயிர் நாடியை இறுக்கி
ஆன்மாவை ரணமாக்க ..!!!

அந்நொடியில் இரத்த திலகமிட்டு
நவ ரத்தினமாய் உதித்தாய்
கீதத்தோடு உன்பிஞ்சு விரல்கள்
எனைத்தீண்டியதும் நானும் பிரசவித்து ..!!!

அள்ளி அணைத்து முத்தமிட்டேன்
அங்கமெல்லாம் என் உயிர் தங்கமே .
அங்கமானாய் அம்மாவின் வாழ்வில் ...!!!


நன்றி: சுதா

 

 

 

 

 

 

 

 

 

 


கல்லறைப் பூக்கள் - கவிதை

E-mail Print PDF

ஆக்கம்: மணிகண்டன். மா

கல்லறை தோட்டத்து பூக்கள் அனைத்தும்
என்ன பேசிடும் என்னென்ன பேசிடும்

வாடினாலும்
வருத்தப்பட யாருமில்லை !

வயது வந்த பின்
மாலைகட்ட மணமக்கள் இல்லை !

தென்றல் மட்டுமே சத்தமிடும்
வெள்ளை கொடி கட்டி !

புறாக்களுக்கு இங்கு அனுமதியில்லை
அமைதி கெடாமல் இருக்க !

அவசரமாய் கடந்து செல்வோரின்
ஆழ்நிலை தூக்கம் இங்கேதான் !

பொருளாதாரம்
இங்கே பொருட்படுத்த படுவதேயில்லை !

நில அபகரிப்பு வழக்கு தொடர
கல்லறைச் சட்டத்தில் அனுமதியில்லை !

தார் சாலைகள் அமைக்க மனு பெற்ற
அமைச்சரின் இறுதி ஊர்வலத்திற்கு சாலை அமைக்கப்பட்டது !

நிலவின் துணை கொண்டு
மின்னொளிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !

பேச்சாளன் இங்கே
மௌனத்தின் தூதுவனாக நியமிக்கப் பட்டிருக்கின்றான் !

புத்தாண்டில் புதிய ஆணை எடுக்க
யாரும் இங்கே கிடந்த பின் எழுவதில்லை !

நமது சுவாச வெளியிடு மட்டும்தான் சிதைவு பெறாமல்
இங்கே சிம்போனி இசைத்து கொண்டிருக்கின்றது !

சதைவெறி கொண்டவனும்
சட்டத்தின் துளைகளுக்குள் சாலைகள் அமைத்தவனும்
இங்கே புதையுண்டு புத்தனாகி போனார்கள் !

”போதி” மரம் கேட்கவில்லை
போதிய மரம் மட்டும் வேண்டிய சமூக ஆர்வலரின்
மகன் நட்ட பூச்செடி நாங்கள்..!

எங்கு நட்டாலும்
புன்னகையே அறிவிக்கப்படாத எங்களது தேசிய மொழி..


நன்றி


காதலனின் உள்ளத்தை கிலி கொள்ளச் செய்த காதலியின் தோற்றம்

E-mail Print PDF

ஆர்பழிக்கும் இடமில்லா அழகுநிறை இளையவள் நீ
கார்பழிக்கும் கருங்குழலில் களிமுல்லை சூடினையே!
கார்பழிக்கும் கருங்குழலில் களிமுல்லை சூடியது
பார்பழிக்கும் அஞ்சாஎன் படரிதயம் பொடித்திடவோ?

கான்வியக்கத் துள்ளிநடம் காட்டுகின்ற இளம்புள்ளி
மான்வியக்க விழிகளிலே மைபூசி வந்தனையே!
மான்வியக்க விழிகளிலே மைபூசி வந்ததுவும்
நான்வியக்க வோ?என்னை நன்றாண்டு கொண்டிடவோ?

குளம்நெகிழ்த்தே மெல்லலைகள் கொண்டாற்போல் மெல்லியல்நீ
மெலநெகிழ்த்தே இதழ்களிலே மென்னகையைச் சிந்தினையே!
மெலநெகிழ்த்தே இதழ்களிலே மென்னகையைச் சிந்தியதென்
உளம்நெகிழ்த்தே என்னையென்றும் உன்னடிமை ஆக்கிடவோ?

கட்டிவெல்லத் தளிர்மேனிக் கன்னிமகள் கரம்வளைத்தே
எட்டிமெல்லத் தொடின்ஒடியும் இடைநெளித்து வந்தனையே!
எட்டிமெல்லத் தொடின்ஒடியும் இடைநெளித்து வந்ததுவும்
கிட்டிமெல்ல என்னுளத்தைக் கிறங்கவைத்துப் போவதற்கோ?

விள்ளரிய தலைமகளே, மெல்லியபூங் காவிடையே
சொல்லரிய உன்னிரண்டு தோள்குலுக்கி வந்தனையே!
சொல்லரிய உன்னிரண்டு தோள்குலுக்கி வந்ததுவும்
மெல்லமெல்ல எனைக்குலுக்கி மெலியவைத்துச் செல்வதற்கோ?

தனிவாழைத் தோப்பன்ன தமிழமகள் என்முன்னே
கனிவாழைத் தண்டன்ன கரம்வீசி வந்தனையே!
கனிவாழைத் தண்டன்ன கரம்வீசி வந்ததுவும்
இனிவாழை மரமாக என்னெஞ்சை ஆக்கிடவோ?
(தமிழ்மலர்)

 

13/23/05

சித்திரைப் புத்தாண்டே வருக!

E-mail Print PDFஎங்கும் தமிழர் களித்திருக்க
ஏற்றம் நிறைந்தே புவி சிறக்க
பொங்கும் மகிழ்வே நிறைந்திருக்க
போதும் என்ற மனமிருக்க
வரும் புத்தாண்டை வரவேற்போம்!

அங்கம் வருத்தி அகிலத்தை
அன்னமிட்டுக் காக்கின்ற
கைகள் பொலிந்து தனம் பெருக்க
வையம் சிறந்து வாழ்வினிக்க
வரும் புத்தாண்டை வரவேற்போம்!

எண்ணம் முழுதும் தமிழாக
ஏக்கம் என்றும் தமிழாக
பண்ணும், கலையும் அவை கூறும்
பண்பில் தமிழன் புகழ் வாழ,

தன்னை நினையா மண்ணுயிரைக்
காக்கும் தலைவன் திறம் வாழ
கண் போல் தமிழைக் காக்கின்ற – கலி
காலக் கவிஞன் கவி வாழ,

பொன்னைப், பொருளை விரும்பாமல் – மனம்
போற்றும் துணைவன் நலம் நாடி
எண்ணெய் விளக்கின் ஒளி போல – ஒளி
சேர்க்கும் பெண்மை நெறி வாழ
வரும் புத்தாண்டை வரவேற்போம்!

வாசல் பெருக்கி அழகழகாய்
வண்ண வண்ணக் கோலமிட்டு,
பூசு மஞ்சள் குங்குமமும்,
பூத்துச் சிரிக்கும் மல்லிகையும் – பல
காசு கொடுத்து சரிகையுடன்
வகையாய் மின்னும் பட்டுடுத்தி
நேசமுடனே குலமகளிர்
படைக்கும் பொங்கல் பார்த்திருந்தோம்!

தேசம் விட்டு நீள்புவியில்
எந்தத் திசையில் வாழ்ந்தாலும்
பாசம் பொங்கும் தாய் மடியில்
படைக்கும் பொங்கல் தனிப் பொங்கல்!

வீசும் தென்றற் காற்றிருக்க,
வெள்ளி நிலவு துணையிருக்க
ஆசையுடனே பொங்கி வைத்து
அருகே இருந்து ரசித்திருப்பாள்!

வேஷம் அறியாத் தாய் முகத்தில்
விழிக்கும் நாளே திருனாளாம்! – தாய்
தேசம் கொடுத்த நினைவுகளை
மீட்டே தமிழா பொங்கிடுக!

அன்னைத் தமிழை ஆன்றோர்கள்
கண்ணே என்று அழைத்திட்டார்!
கண்ணைப் போலே பண்பாடு
காக்கும் மொழி என்றறிந்தாரோ?

வண்ணத் தமிழால் கரம் கூப்பி
வணக்கம் உரைத்தேன் ஆகா – என்
உள்ளத்தின்பம் பிறந்ததையா,
உயிர்த் தாய்மொழியால் பொங்கிடுக!

தத்தித் தவழும் சிறு மழலை
தாவிக் குதிக்கும் சிறார் கூட்டம்
தஸ்புஸ் என்றே ஆங்கிலத்தை
தழுவும் சுகத்தை வியந்தே நாம்
யெஸ்யெஸ் என்றே தலையசைத்தால், – தமிழும்
மிஸ்மிஸ் ஆகிப் போய் விடுமே
உணர்ந்தே தமிழா பொங்கிடுக!

பஞ்சம், பசி, நோய், பட்டினிகள்
பாரில் குறைந்து நலம் பெறவே,
தஞ்சம் என்று வருவோரை
தாங்கும் நிலமாய் வளம் பெறவே,
விஞ்சும் திறமை, புகழ், வீரம்
வியக்கும் கலைகள் சிறந்தோங்க,
அஞ்சேல் என்ற பெருவுள்ளம்
அறிவின் பெருக்கம், ஆற்றலெல்லாம்
தங்கும் இனமாய்த் தமிழுள்ளம்
தழைக்கத் தமிழா பொங்கிடுக!

-கவிதாயினி S.லினோதினி


அடுப்படியும் போச்சு இடுப்பொடிவும் போச்சு

E-mail Print PDF

அடுப்படிக்குள் அம்மிக் கல்லு
அதன் மேலே அழுக்குத் துணி
அருகேயொரு எண்ணெய் தாச்சி
அதை மூடும் கறை படிந்த
அலுமினிய மூடி.

இவையெல்லாம் இன்றெங்கே?

அம்மியும் ஆட்டுக் கல்லும்
பெயரே தெரியாது
மறைந்துவிட்ட காலம் இது.
இடுப்பொடிய சமைத்தெடுக்கும்
பொழுதெல்லாம் சாயந்துவிட்டது.

Kitchen னேயில்லாமல்
கச்சிதமாய் கடைச் சாப்பாடு
காசு கொடுத்தால்
ஹோம் டெலிவரி
எண்ணெய் பொரியல் தளதளக்க

வேலையற்று இருதயமும்
நின்றுவிட யோசிக்கிறது.

- டாக்டர். எம்.கே.முருகானந்தன்-

 

111/23/05

காதலியின் உள்ளக் குமுறல் - நான்தான் அவள்

E-mail Print PDF


நீ
என் தேகத்தின் மேல்
கொண்ட மோகத்தினால்
என் மனதை
காதல் வார்தையால்
வசப்படுத்தி
மானத்தைச் சிதைத்து
தலை கோணச் செய்து விட்டாயே!

பூவின் தேனைச் சுவைத்து
மற்ரொரு பூவினைத் தேடும்
கருவண்டினைப் போல்
என் வாழ்வினை கேள்விக்குறியாக்கி
என் குடும்பத்திற்கு இழுக்கினை
உண்டாக்கி விட்டு....
உன் இச்சைக்கு
மறு துணை தேடுகிறாயோ?

இதோ வருகிறேன் விளையாட!!
காதல் விளையாட்டா?
மரண விளையாட்டு...
புலியினை முறத்தினால்
விரட்டிய வீரத்தமிழச்சியின்
வம்சமடா நான்!
தன் மானம் சிதைத்தவனை
உயிரோடு சிதைக்காமல்
சிதையில் விழமாட்டேன்!

பெண்
கொஞ்சி மகிழ்ந்தால் மலர்...
கொதித்து எழுந்தால் புயல்...
நீயும் உணர்வாய் என் காலடியில்
உன் உயிரினை விடிகையில்...
இதோ வருகிறேன் !
நான்

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்