Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: ஆரோக்கியம் நோய்கள்

இலங்கையில் புதுவகை ஆட்கொல்லி வைரஸ் காச்சல் (இன்புளுயென்சா எச்1 என்1 வைரஸ் ) பரவி இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவிப்பு

E-mail Print PDF

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்புளுயென்சா 'ஏ'யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா அரச பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களையே இந்தக் காய்ச்சல் அதிகம் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதியவர்களில் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களே இந்த காய்ச்சலினால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக மருத்துவர் சுதர்சினி கூறினார்.

வைரஸ் தொற்றாத வகையில் தனிப்பட்ட சுகாதார முறைகளைக் கைக்கொள்வதுடன், நோய் அறிகுறிகளைக் கண்டதும் உடனடியாக அரச மருத்துவமனைக்குச் சென்று வைத்திய உதவி பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இந்த நோயை அடையாளம் கண்டவுடன், அதற்கென சுகாதார அமைச்சினால் அரச மருத்துவமனைகளுக்கு மட்டுமே விநியோகித்துள்ள குளிசையை வைத்திய அதிகாரிகளின் சிகிச்சை முறைக்கமைவாக உட்கொண்டால் நோய் உடனடியாகக் குணமடையும் என்றும் சுதர்சினி தெரிவித்தார்.

இந்த வைரஸ் ஏன் பரவுகிறது என்ன காரணத்தினால் திடீரென இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான சரியான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், வைரஸ்கள் புதிது புதிதாக உற்பத்தியாகி அவைகள் மனிதர்களிடத்தில் பரவி பலவிதமான நோய்களை ஏற்படுத்தி வருவதாகவும், அத்தகைய சில நோய்களுக்கு மருந்துகள் இல்லையென்றும் அந்த வகையிலேயே இந்த இன்புளுயென்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் பரவியிருக்கிறது என நம்பப்படுவதாகவும் சுதர்சினி கூறினார்.

இந்தக் காய்ச்சலைச் சுகப்படுத்துவதற்கான மருந்து கிடைத்திருப்பது அதிஸ்டவசமானது எனவும் வவுனியா பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கல்லீரலும் அதன் பாதிப்பால் ஏற்படும் நோய்களும்

E-mail Print PDF

நம் உடலானது நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாடி, நாளங்கள் என பலவற்றால், பிண்ணிப் பிணைக்கப் பெற்று உருவாக்கப் பெற்றதாகும். எமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தமது பணிகளை சிறப்பாக செய்வதற்கு உடலின் உள்உறுப்புகள் யாவும் ஒழுங்காக செயல்பெற வேண்டியது கட்டாயமாகின்றது.

இவற்றுள் ஏதேனும் ஒரு உறுப்பு செயலிழந்தால் அல்லது ஊறு பட்டால்; அது அவற்றுடன் இணைந்து செயல் பெறும் மற்றைய உறுப்புகளையும் செயலிழக்க அல்லது ஊறுபட வைத்து விடுகின்றது. எமது பழக்கவழக்கங்கள், உணவுமுறை, நாம் வாழும் சூழல் போன்ற பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது.

Read more...

புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?

E-mail Print PDF

"செல்களின் விபரீத மரபணு மாற்றமே புற்றுநோய்க்கு காரணம்"
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

"மரபணுக்களின் விபரீத மாற்றங்களே எலும்பு புற்றுநோய்க்கு காரணம்"
மனிதர்களுக்கு புற்றுநோய் வருதற்கு அடிப்படை காரணம் அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றம். நம் உடலில் இருக்கும் எல்லா அங்கங்களிலும் வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மடிந்து மறைவதும் அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும் இயல்பாக தொடர்ந்து நடக்கும் அன்றாட செயல். நம் உடலில் இருக்கும் குருத்தணுக்களில் இருந்து இப்படி புதிய செல்கள் தோன்றி வளரும் சமயத்தில் சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றமானது, அவற்றை புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்களாக மாற்றிவிடுகிறது என்பது விஞ்ஞானிகளின் விளக்கம்.

இப்படியாக குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் திடீரென புற்றுநோய்க்கான செல்களாக மாறுவது ஏன் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். உடலில் தோன்றும் எத்தனையோ கோடி செல்களில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன என்பது இவர்களின் ஆய்வின் மையப்பொருள்.

இந்த ஆய்வின் முடிவு தற்போது சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் இப்படி செல்களுக்குள் நடக்கும் விபரீத மரபணு மாற்றம் காரணமாகவே உருவாவதாகவும் அதற்கும் ஒருவரின் பழக்க வழகங்களுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
"புகைபிடித்தல் கல்லீரல் புற்றுநோயை தூண்டும்"

அதேசமயம், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவர் உண்ணும் தவறான உணவுகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களால் ஊக்குவிக்கப்படுவதையும் இவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

எனவே ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது அடிப்படையில் அவரது உடலில் இருக்கும் செல்கள் தம்மை புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறையில் இருந்து ஆரம்பிப்பதாக இந்த ஆய்வை மெற்கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி மற்றும் பொது சுகாதாரத்திற்கான புளூம்பெர்க் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் அடிப்படையில் புற்றுநோய்களை இரண்டு வகையானவைகளாக பிரிக்கலாம். அதாவது, ஒருவரின் செல்களில் நடக்கும் விபரீத மரபணு மாற்றத்தால் உருவாகும் புற்றுநோய்கள் மற்றவை ஒருவரின் பழக்கவழங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள்.

இதில் ஒருவரின் மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் முக்கியமான புற்றுநோய்கள் என்பவை மூளையில் தோன்றும் ஒரு புற்றுநோய், வயிற்றின் சிறுகுடலில் தோன்றும் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட புற்றுநோய்கள் தோன்றாமலே தடுப்பது என்பது இன்றைய நிலையில் இயலாது என்னும்போது அவை தோன்றுவதை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிப்பது அவற்றை குணப்படுத்த உதவும் என்கிறார் இந்த ஆய்வாளர்களில் ஒருவரான கிறிஸ்டியன் டோமசெட்டி.

அதேசமயம் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள் என்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பனவற்றில் ஒருவகை தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குதப்புற்றுநோய் ஆகியவை முக்கியமானவை

"மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்களுக்கு மனித தவறுகள் காரணமல்ல"
இதில் குறிப்பிட்ட ஒருவகை தோல் புற்றுநோய் சூரிய ஒளியில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தூண்டப்படுகிறது; புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை தூண்டுகிறது, மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடும்ப மரபணுக்களால் குதப்புற்றுநோய் தூண்டப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே சிலவகையான புற்றுநோய்கள் வேண்டுமானால் விபரீத மரபணு மாற்றங்கள் காரணமாக உருவாகலாம். ஆனால் மற்றவகை புற்றுநோய்களை ஒருவரின் பழக்கவழக்கங்கள் தூண்டுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய்க்கான ஆய்வு மையத்தின் மருத்துவர் எம்மா ஸ்மித்.

இவை தவிர பரவலாக மனிதர்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோய்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

எனவே புற்றுநோயை ஊக்குவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்ப்பது, மற்றும் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்பகட்டங்களிலேயே கண்டுபிடித்து உடனடி சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டுவகையான அணுகுமுறைகளும் சம அளவில் கைக்கொள்வதே உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக பார்க்கப்படும் புற்றுநோயை கையாள்வதற்கான மருத்துவ வழிமுறைகள் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

பெரும்பான்மையான புற்றுநோய் வகைகள் நமது தீய பழக்க வழக்கங்களால் வருவதை விட துரதிருஷ்டத்தாலேயே வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய்க் கலங்கள்
உடலின் சில திசுக்கள் ஏனைய திசுக்களைவிட மிக இலகுவாக புற்றுநோய் கிருமிகளால் தாக்கப்பட்டுவிடுகின்றன. அவை ஏனைய பல திசுக்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு இலகுவாக புற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிவிடுகின்றன. ''இது ஏன்?'' என்பதை அறிய ஆய்வாளர்கள் பல பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் வகைகளில் மூன்றில் இரண்டு பங்கானவை காரணம் எதுவும் இன்றி எதேச்சையாகவே தொற்றிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மிகவும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய சில வகை புற்றுநோய்கள் புகைத்தல் போன்ற, எமது தீய பழக்க வழக்கங்களாலேயே ஏற்படுகின்றன.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எப்போதுமே கொடிய வகை புற்றுநோய்களில் இருந்து உங்களை காக்கும் என்று ''கான்ஸர் ரிசேர்ச் யூகே'' என்ற அமைப்பு கூறுகின்றது.

உடலின் சில திசுக்கள் ஏனைய திசுக்களைவிட மிக இலகுவாக புற்றுநோய் கிருமிகளால் தாக்கப்பட்டுவிடுகின்றன. அவை ஏனைய பல திசுக்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு இலகுவாக புற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிவிடுகின்றன. ''இது ஏன்?'' என்பதை அறிய ஆய்வாளர்கள் பல பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் வகைகளில் மூன்றில் இரண்டு பங்கானவை காரணம் எதுவும் இன்றி எதேச்சையாகவே தொற்றிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மிகவும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய சில வகை புற்றுநோய்கள் புகைத்தல் போன்ற, எமது தீய பழக்க வழக்கங்களாலேயே ஏற்படுகின்றன.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எப்போதுமே கொடிய வகை புற்றுநோய்களில் இருந்து உங்களை காக்கும் என்று ''கான்ஸர் ரிசேர்ச் யூகே'' என்ற அமைப்பு கூறுகின்றது.

நீரழிவு நோயும் அதன் இரண்டாம் வகை நோய்க்கு மருந்தாகும் இயற்கை மூலிகைகளும்

E-mail Print PDF

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி என்றும் அழைக்கப்படுகிறது.

தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் எனும் சர்க்கரை இருக்கும்.

ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது.

குறிப்பாக, இரத்தத்தில்  குளுக்கோஸ் எனும் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது.

1921ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது.

இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்” என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்” பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன.

இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது.

கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.

நீரிழிவு நோய் மூன்று வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன:

முதலாவதுவகை
முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது.

இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 10% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாவது வகை
இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது.

இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைப்பதாலும், சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகை
கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது.

இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின்
குருதியில் உள்ள சர்க்கரை கலன்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

பல காரணங்களால் இது நிகழலாம்.
•    தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.

•    இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

நோய் யாருக்கு ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
•    அடிக்கடி சிறுநீர் கழிப்பது
•    அடிக்கடி தாகம்
•    அதிக பசி
•    மிக வேகமாக எடை குறைதல்
•    அதிகமாக சோர்வடைவது
•    கண்பார்வை மங்குதல்
•    வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
•    திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
•    பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.
•    பார்வை இழப்பு
•    மாரடைப்பு
•    சிறுநீரகக் கோளாறு
•    பக்கவாதம்
•    கால்களை இழத்தல்
•    கோமா மற்றும் இறப்பு

நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்
நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.

வகை - 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்
துன்பங்கள் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை.

கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர்.

இந்தியாவிகும், இலங்கையிலும் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுவது அவசியமாகின்றது.

நாவல்பழக் கொட்டை
நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர்
இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தையக் கீரை
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் வகை 1 வகை 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

அவரைக்காய் பொரியல்
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் வகை 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைப்பூடு

பூண்டு என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, இதயம் காக்கும், கொழுப்பைக் கரைக்கும் சிறந்த உணவுப் பொருள் என்பதுதான். பூண்டுக்கு இந்தச் சிறப்பு மட்டுமல்ல, மேலும் ஏராளமான மருத்துவக் குணங்கள் பூண்டுடில் உள்ளது.

வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.

இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தொண்டை பிரச்சினைகளுக்கு  விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.

தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.

பாகற்காய்

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 


கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்தால் என்ன செய்வது?

E-mail Print PDF


அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மைதான் உயிர் குடிக்கும் ஒரு அம்மையாக இருந்து வந்தது. பெரியம்மைக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்திவிட்டோம்.

தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன?

சின்னம்மை என்றழைக்கப்படும் (Chickenpox) சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக வரும்)
மணல்வாரி அம்மை என்றழைக்கப்படும் (Measles) மீசில்ஸ்
பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் (mumps) மம்ப்ஸ்

அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன?
அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன.
அதனால்தான் அம்மை நோயை "பிராப்லெட் இன்ஃபெக்ஷன்" என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ,  தும்மும் போதோ அவரிடமிருந்து "வைரஸ் கிருமிகள்" காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது. இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு "தொற்று நோய்" என்று சொல்கிறோம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினை என்கிறார்களே?
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது.

ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.

அம்மை நோய்க்குத் தடுப்பூசிகள் இருக்கிறதா?
சின்னம்மைக்குக்கூட தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தின் ஓரிரு ஆண்டுகளிலேயே போடப்படும் இந்தத் தடுப்பூசியால், வாழ்நாள் முழுவதும் நோய் பற்றிய பயம் இன்றி இருக்கலாம்.

எம்.எம்.ஆர். என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியால் மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம்.

குழந்தை பிறந்து ஒன்பதாம் மாதத்தில் "மீசல்ஸ் வேசின்" என்ற ஊசி மணல்வாரிக்காகத் தனியாகப் போடப்படுவது. இந்த தடுப்பூசிகளை டாக்டரின் ஆலோசனைப்படி தவறாமல் போட்டுக் கொண்டாலே அம்மை பற்றிய பயமில்லாமல் இருக்கலாம்.

அம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?
சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.

சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், பூச்சு மருந்துகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

சிகிச்சை சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.

மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி. இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, "பொன்னுக்கு வீங்கி" அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.

அம்மையின்போது என்ன சாப்பிடலாம்?
உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.

நன்றி: டாக்டர்.வெ.சீதாராமன்


அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள்:
1. சின்னம்மை (Chickenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை
சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்
காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.
வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?
ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து
1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை
குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.
ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.
உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை:
விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.
இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை:
குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.
காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.
வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை:
குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த

கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை
அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி
நோய் தடுப்பு மருந்து குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு
நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து
சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.
மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

கொப்பளிப்பானா? (Chickenpox) எம்.கே.முருகானந்தன் - குடும்ப வைத்திய நிபுணர்
அழகான இளம் பெண் அவள். கைதேர்ந்த சிற்பியால் கடைந்தெடுத்த பொற்சிலை போல இருப்பாள். எவருக்குமே அவளுடன் பேசிக் கொண்டிருப்பதில் மனநிறைவு ஏற்படும். அன்று அவள் வைத்தியசாலைக்கு வந்த போது, ஏற்கனவே காத்திருந்தவர்கள், தங்கள் நம்பரை விட்டுக் கொடுத்து அவளை உடனடியாகவே என்னிடம் உள்ளே அனுப்பி வைத்தனர்!.

அதற்குக் காரணம் அவள் மீதுள்ள அன்பும் அபிமானமும் அல்ல! அருவருப்பினால்! பல நாட்கள் குளிக்காத அழுக்கினாலும், வியர்வை நாற்றத்தினாலும், புண்கள் சீழ்ப் பிடித்திருந்ததாலும் அருகில் வைத்திருக்கப் பிடிக்காமல் உடனடியாகவே அனுப்பினர்.

அவளுக்குக் கொப்பளிப்பான் (Chickenpox)போட்டிருந்தது. மிக அதிகமாகப் போட்டதோடு சீழும் பிடித்து ஆளையே மாற்றியிருந்தது. அழகிய பொற்சிலை அலங்கோலமாக மாறியிருந்தது. கட்டிளம் பருவத்தினருக்கு கொப்பளிப்பான் வந்தால் பொதுவாக மோசமாகவே தாக்குவதுண்டு. அவள் சிறு வயதாக இருந்த காலத்தில் கொப்பளிப்பான் தடுப்பூசி அறிமுகமாகததால், போடப்படவில்லை. எனவே நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். சரி அதை விடுங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்.

“ஏன் மருந்து எடுக்க வரவில்லை” எனக் கேட்டேன்.
“பக்கத்து வீட்டு அன்ரி மருந்து சாப்பிடக் கூடாது எண்டவ.”
“ஏனாம்?;”
“அம்மன் வருத்தத்திற்கு மருந்து போடக் கூடாதாம்.”
‘என்று தணியும் இந்த மூடநம்பிக்கை மோகம்’ என பாரதி போலப் பாடத் தோன்றியது.

கொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virus என்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல!. தெய்வங்கள் ஏன் மனிதனுக்கு நோயைக் கொடுத்து துன்பத்தை விளைவிக்கப் போகின்றன என நாம் பகுத்தறிவோடு சிந்திக்கப் பழகவில்லை.

சூட்டு நோய் என்று பலரும் சொன்னாலும் கூட குளிர் காலங்களிலேயே அதிகம் பரவுகிறது. கடும் வெப்பத்தை அக் கிருமிகள் தாங்க முடியாததால்தான் வெப்ப காலங்களில் பரவுவது குறைவு.

கொப்பளிப்பான் போட்ட குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பாடசாலை செல்ல அனுமதிக்க மாட்டார்கள். காரணம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும் என்பதால். உண்மையில் இது வேகமாகப் பரவும் நோய்தான். ஆயினும் ஆரம்ப கட்டங்களிலேயே வேகமாகப் பரவும். அதாவது காய்ச்சல் வந்து கொப்பளங்கள் போட ஆரம்பிக்கும் நேரத்தில் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சுவாசம் மூலம் தொற்றும். பின்பு கொப்பளங்களில் உள்ள நீரின் மூலமும் தொற்றும். கடைசிக் கொப்பளம் போட்ட 5 நாட்களின் பின் தொற்றுவதில்லை.
கிருமி தொற்றினாலும் நோய் வெளிப்பட இரு வாரங்கள் வரை செல்லும். இது புரியாததால்தான் பலரும் கொப்பளங்கள் காயும் நேரத்தில்தான் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என எண்ணுகிறார்கள். அதனால்தான் பாடசாலைக்கும் செல்வதை நீண்ட காலம் தவிர்க்கிறார்கள். இது தவறு.

அந்தப் பெண் செய்த இரண்டு தவறுகளால்தான் அவளது நோய் கடுமையாகியது. கொப்பளிப்பான் போட்ட இரண்டு நாட்களுக்குள் வைத்தியரிடம் சென்று Aciclovir போன்ற வைரஸ் கொல்லி மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தை மிகவும் குறைத்திருக்கலாம். இந்த மருந்து சாப்பிடுவதால் எந்த வித ஆபத்தோ பக்க விளைவோ ஏற்படாது. நீண்ட காலமாகப் பாவனையில் இருந்து மிகவும் அனுபவப்பட்ட மருந்து.

18 வயதிற்கு மேற்பட்டவர்களும், கர்ப்பணிப் பெண்களும் மருந்து சாப்பிட்டு நோயின் தாக்கத்தைக குறைப்பது மிகவும் முக்கியமாகும். இரண்டாவது தவறு குளிக்காதது ஆகும். கொப்பளிப்பான் நோயின் போது குளிப்பது அவசியம். குளிப்பதால் கொப்பளங்களில் பக்டிரியா கிருமி தொற்றி சீழ்ப் பிடிக்காது தடுக்கலாம். கிருமி தொற்றினால் காய்சல் அதிகரிக்கும். புண்கள் பெருத்து மறுக்கள் ஆழமாகப் போடும். நகச் சூட்டு வெந்நீரில் குளிப்பது நல்லது.

“குளிர்மையான சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா? மாமிச உணவு சாப்பிடலாமா” என்றெல்லாம் கேட்பார்கள். எந்த வித சாப்பாட்டினாலும் நோய் பெருகாது. விரும்பியதைச் சாப்பிடலாம். ஆயினும் மத உணர்வுகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் முறித்து மாமிச உணவு சாப்பிடுவது அவசிமல்ல.

இந் நோய்க்கெதிரான தடுப்பு ஊசி இலங்கையில் பல வருடங்களாகக் கிடைக்கிறது. ஆயினும் அரச தடுப்பூசித் திட்டத்தில் இது அடங்கவில்லை. தனியார் துறையில்தான் போடப்படுகிறது.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதுமானது.
12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.

தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என தடுப்பூசித் தயார்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.


நன்றி

வேகமாக பரவி வரும் ”மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோய்

E-mail Print PDF

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட ‘சார்ஸ்’ கிருமிக்கு இணையான ”மெர்ஸ்” என்னும் கிருமியின் தாக்கம் வேகமாக பரவி வருவதுடன் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை இதுவரை காவுகொண்டுள்ளது.

இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் ‘மெர்ஸ்’ மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமான் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டது.

இந்த நோய் மத்தியக் கிழக்கு நாடுகளில் முதலில் காணப்பட்டதால் அவ் நோயை தோற்றுவிக்கும் வைரஸ் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV)  ” மெர்ஸ்” என  பெயரிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

சாதாரண சளியுடன் இணைந்த தொற்று வகையைச் சேர்ந்த இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் வெகுவிரைவில் சிறுநீரக இழப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி தலைநகர் ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாம் நகரங்களில் மெர்ஸ் நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150 பேர் தங்கி சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்நோயினை உரிய முறையில் கட்டுப்படுத்த தவறிய அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி அப்துல்லா அல்-ராபியா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் இந்த நோய்க்கு பலியானதாக சவுதி அரசு கடந்த வாரம் அறிவித்தது. அது மட்டுமின்றி 2 வெளிநாட்டினர் உள்பட 14 பேர் இந்நோய்க்கான சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மேலும் 5 மெர்ஸ் நோயாளிகள் பலியாகினர். அவர்களில் 2 பேர் சவுதிஅரேபியாவை சேர்ந்தவர்கள், 2 பேர் பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒருவர் வங்காள தேசத்தை சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தலைநகர் ரியாத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஜெட்டா நகரை சேர்ந்த 3 பேர் உள்பட மேலும் 8 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் பலியானதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் பரவி வருகிறது. இதனால் நேற்று வரை 109 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சவுதி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜெட்டாவில் 25 வயது வாலிபர் ஒருவர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறந்தார். இதேபோல் காசநோய், அனிமியாவால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் மெக்காவில் காலமானார். இவர்களுடன் சேர்த்து மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 396 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.இதற்கிடையில் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் 4 டாக்டர்கள் பணியை ராஜினாமா செய்து விட்டனர். நோயாளிகளிடம் இருந்து தங்களுக்கும் வைரஸ் தொற்றி கொள்ளும் என்ற பயத்தில் டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும் ஒட்டகங்கள் மூலம் மெர்ஸ் வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 


 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 10

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்