Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை சினிமா

வந்தே மாதரம்

E-mail Print PDFநடிப்பு: மம்மூட்டி, அர்ஜுன், சினேகா, தீபக் ஜெதி.
இயக்கம்: டி.அரவிந்த்
தயாரிப்பு: ஹென்றி
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ், எம்.வி.பன்னீர் செல்வம்.

இந்தியாவின் நதிகளை இணைத்து அதன் மூலம் விவசாய பிரச்னைகளை தீர்த்து வல்லரசு நாடாக்க முயற்சிக்கிறார் பிரதமர். இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத பயங்கரவாத கும்பல் ஒன்று இந்த திட்டத்தை சீர்குலைக்க தீபக் ஜேதி தலைமையில் ஒரு கூட்டத்தை அனுப்புகிறது. அதை உளவுத்துறை அதிகாரிகளான மம்மூட்டியும், அர்ஜுனும் எப்படி முறியடித்து நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.

தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் வருகிறது. அதை தொடர்ந்து கொச்சி துறைமுகத்தில் ஒரு கொலை நடக்கிறது. இரண்டையும் தொடர்புபடுத்தி மம்மூட்டியும், அர்ஜுனும் விசாரணையைத் துவங்குவதிலிருந்து விறுவிறுப்பு துவங்குகிறது. திடீர் திருப்பங்களோ, அதிரடி மாற்றங்களோ இல்லாமல் விசாரணையும், துப்பறிவும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதாலும், எப்படியும் ஹீரோக்கள் தீவிரவாதிகளை அழித்து நாட்டை காப்பாற்றி விடுவார்கள் என்பது நமக்குத் தெரிவதாலும் காட்சியோடு ஒன்ற முடியவில்லை. ஆனாலும் தரையில் கன்னிவெடிகள் இருக்க, மரத்தின் மீதே நடக்கும் சண்டை, சாலையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தீவிரவாதி தப்பிப்பது, பிரதமரின் பொதுக்கூட்டத்தை குண்டு வைத்து அழிக்க போடும் திட்டம் என பிரேமுக்கு பிரேம் காட்சி பிரமாண்டங்கள் பிரமிக்க வைக்கிறது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடமிருந்து உண்மையை வரவழைக்க, அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவன் 20 வருடம் கோமா நிலையில் இருந்ததாக நாடகமாடி உண்மையை வரவழைக்கும் அந்த நாடகம் நல்ல ஐடியா.

மம்மூட்டியும், அர்ஜுனும் துடிப்பு மிக்க உளவுத்துறை அதிகாரிகள் கேரக்டருக்கு கச்சிதம். இருவரின் மிடுக்கு உண்மையான அதிகாரிகளுக்கு ரோல் மாடலாகலாம். சண்டை காட்சிகளிலும் இருவரும் வயதை மறந்து கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சினேகா வரும் காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். எடுத்த ஒரு டூயட்டை வீணாக்க வேண்டாம் என்று முதல் ரீலிலேயே அதனை காட்டிவிட்டு கதைக்கு வந்து விடுகிறார்கள். இடையில் காணாமல் போகும் சினேகா, திடீரென வந்து செத்துப்போவதில் அனுதாபம் பிறக்கவில்லை. அவ்வப்போது திணிக்கப்படும் குத்துப்பாடல்கள் கதையின் டென்ஷனை குறைக்க பயன்பட்டிருக்கிறது. மம்மூட்டி, அர்ஜுனுக்கு பிறகு மூன்றாவது ஹீரோ கேமரா. அதனை ராஜேஷ் யாதவும், பன்னீர் செல்வமும் அற்புதமாக கையாண்டிருக்கிறார்கள். ஆக்ஷன் படத்துக்கான பின்னணி இசையை தந்திருக்கிறார் இமான். முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் வில்லன் என்பதால் அர்ஜுனை அன்வராக்கியும், மம்மூட்டியை ஹீரோவாக்கியும், நாசரை பிரதமராக்கியும் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அரவிந்த். பிரமாண்டத்தில் செலுத்திய கவனத்தை கதையிலும், காட்சி அமைப்பில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் மெகா ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும்.

துரோகி

E-mail Print PDF

நடிப்பு: ஸ்ரீகாந்த், விஷ்ணு, பூனம் பஜ்வா, பூர்ணா, பூஜா, தியாகராஜன்.
இயக்கம்: சுதா.கே.பிரசாத் தயாரிப்பு: இந்திரா இன்னோவேஷன்ஸ்
இசை: செல்வ கணேஷ் ஒளிப்பதிவு: அல்போன்ஸ் ராய்.

பெண் இயக்குனர்கள் என்றால் மென்மையான கதையை இயக்குபவர்கள் என்ற மரபுகளை உடைத்து முதன் முறையாக சுதா.கே.பிரசாத் இயக்கியிருக்கும் பக்கா ஆக்ஷன் படம். ஸ்ரீகாந்தும், விஷ்ணுவும் வட சென்னையின் நெரிசலான பகுதியில் பிறந்து வளரும் நண்பர்கள். தங்களது அன்பான டீச்சர் பூஜாவை, லோக்கல் தாதா ஒருவன் கொலை செய்ய, அவனை தூக்குகிறார்கள். கொலை செய்தது விஷ்ணுதான் என்று ஸ்ரீகாந்த் காட்டிக் கொடுக்கிறார். இருவருக்குள்ளும் விரோதம் வளர்கிறது. படிக்க ஆசைப்படும் ஸ்ரீகாந்த், தாதா தியாகராஜனிடம் சேர்கிறார். படிப்பில் ஆர்வம் இல்லாத விஷ்ணு, ஐ.பி.எஸ் அதிகாரியாகும் லட்சியத்தோடு இருக்கிறார். இருபெரும் துருவங்களான இருவரும் ஒருவருக்கொருவர் எப்போதும் மோதிக்கொண்டிருக்கிறார்கள். காலை வாருவதும் கழுத்தை பிடிப்பதுமாக நகரும் இவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பம். விஷ்ணு ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஸ்ரீகாந்த் தாதாவாகவும் எதிரெதிர் களத்தில் நிற்கிறார்கள். இறுதி வெற்றி யாருக்கு என்பதை பரபரப்பான திருப்பங்களோடு சொல்வது மீதிக் கதை.

வட சென்னை வாழ்க்கையை சினிமா சாயம் பூசாமல் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சிறுவர்களின் பேச்சிலும், நடவடிக்கையிலும் பிஞ்சில் பழுத்த சினிமாத்தனம் இருக்கிறது. நடுரோட்டில் கொலை செய்துவிட்டு ரத்த கத்தியுடன் நிற்கும் தாதாவிடம் 12 வயது சிறுவன் “நான் உங்கிட்ட சேரணும், இந்த ஊரே என்னை பார்த்து பயப்படணும்” என்று சொல்லி நிற்பதும், தாதாவும் அவன் கையில் கத்தியை கொடுத்து சேர்த்துக் கொள்வதும் சிறுவர்களின் மனதை குதறிப் போடும் காட்சி.

சிடுசிடுவென்றிருக்கும் ராயபுரம் இளைஞன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் விஷ்ணு, மூக்கு விடைக்க ஸ்ரீகாந்துடன் மோதும்போதும், போலீஸ் அதிகாரியாகி கடுமை காட்டும்போதும், காதலி இறந்து விட்டதாக கதறும்போதும் விஷ்ணு நடிப்பில் முதிர்ச்சி. மென்மையான கேரக்டர்களில் வலம் வந்த ஸ்ரீகாந்த், முதன் முறையாக அழுக்குப் பையனாக அவதாரம் எடுத்திருக்கிறார். பாடி லாங்குவேஜும் வசன உச்சரிப்பும் அவரை நிஜ தாதாவாக மாற்றுகிறது. ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை தகுதியும் தனக்கு உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார். ரயில் தண்டவாளத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கும் அவர் ஒவ்வொரு ரயில் கிராசாகும்போது எழுப்பும் மரண ஒலியும், உயிர் தப்பும்போது ஏற்படும் திருப்தியும், விஷ்ணுவால் காப்பற்றப்படும் போது ‘இதற்கு நான் செத்தே போயிருக்கலாம்’ என்று வெறுப்பு காட்டுவதும் அபாரம். மகன் கெட்டவன் என்பதை அறிந்து ‘என் ரத்தம் இவ்வளவு அழுக்கா’ என்று கேட்கும் வித்தியாசமான தாதாவாக தியாகராஜன், நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அன்பான டீச்சராக பூஜா மனதில் பதிகிறார். பூனம் பஜ்வா வழக்கம்போல காதல் கம் கவர்ச்சி வேஷம் கட்டுகிறார். ஸ்ரீகாந்தை வலிந்து, மிரட்டி காதலிக்கும் தெனாவெட்டு பெண்ணாக பூர்ணா. ஒளிப்பதிவும், இசையும் ஆக்ஷன் படத்துக்கான பங்கை சரியாக செய்திருக்கிறது. இரு இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பாகவும், அளவுகடந்த பகையாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு வரி கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியிருப்பதிலும், அதை படமாக்கியிருப்பதிலும் இயக்குனர் தெரிகிறார்.

ஆக்ஷன் கதையில் லாஜிக் பார்க்க வேண்டாம்தான். ஆனாலும் சிறுவர்களின் வன்முறை, ஐ.பி.எஸ் செலக்சனுக்கு சென்ற ஒருவனை செலக்ஷன் அதிகாரி ரவுடிகளை, களை எடுக்க அனுப்புவது, டீச்சரை கொலை செய்த இளைஞனை, ஒரு போன் காலில் விடுதலை செய்வது, தாதா அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது, எந்த கொலையையும் போலீஸ் கண்டு கொள்ளாமல் இருப்பது, தாதா கூட்டத்துக் கிடையே போலீஸ் சமாதானம் செய்து வைப்பது போன்றவை லாஜிக் கொலை.

நடிகை அசினுக்கு கறுப்புக் கொடி

E-mail Print PDF

நடிகை அசினுக்கு கறுப்புக் கொடி காட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே விஜய்யுடன் காவலன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற போது இந்த போராட்டம் நடந்தது.

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திடீரென்று ஆதரவு தெரிவித்ததால், தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.

ஆனால் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அசினுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவர் இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் இதற்கெல்லாம் அசின் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை. தனது செயலை நியாயப்படுத்தியதுடன், விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார், பலத்து பாதுகாப்புடன். எந்த எதிர்ப்பும் இல்லை.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார்.

இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்-அசின் நடிக்கும் இப்படத்தில் வடிவேல் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களைப் பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் மேட்டுப்பாளையம் வந்தார். நடிகர் வடிவேலு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது.

அசின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எதிராக திடீரென்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. 'அசின் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கக்கூடாது' என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

உடனடியாக போலீசார் வந்து கறுப்புக் கொடி காட்டியவர்களில் 4 பேரைக் கைது செய்தனர்.

எந்திரன் - ர‌சிக‌ர்க‌ள் ‌விய‌ப்பு

E-mail Print PDF

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 75 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்