Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: உலகம் இலங்கை

இலங்கை

வற்றாத நீர் வளம் கொண்ட நிலாவரை கேணியின் சிறப்பும் அதன் வரலாற்றுப் பெருமையும்

E-mail Print PDF

வற்றாத நீர் ஊற்றைக் கொண்ட நிலாவரை கேணியானது யாழ்மாவட்டத்தின் வலி-கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டு; யாழ் நகருக்கு வடதிசையில் அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசவீதி, புத்தூர் சுன்னாகம் நெடுஞ்சாலை சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இவ் அமைவிடம் யாழ் நகரில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

நிலாவரை என அழைக்கப்படும் இவ் சிறப்பு மிக்க நீர்நிலை, அச்செழு, கலைமதி, சிறுப்பிட்டி கிராமங்களுக்கு நடுவிடத்தில் அமைந்திருப்பதோடு புத்தூர் கமநல சேவை நிலையம், சுதேச வைத்திய திணைக்களத்தின் மூலிகைத் தோட்டம், கமநல சேவை திணைக்களத்தின் உரக்களஞ்சியம், வாதாரவத்தை குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான நீரை வழங்கும் தேசிய வடிகாலமைப்பு குடி நீர் விநியோக அதிகார சபையின் ஆழ் துளைக்கிணறு, நிலாவரை இராணுவ முகாம் என்பவற்றின் நீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இங்கு பாதுகாப்பு தரப்பினரால் நிர்மாணிக்கப்பட்ட அறு கோண கூரை அமைப்புக் கொண்ட முருகன் கோயில் படையினரின் தேனீர்சாலையுடன் கூடிய விற்பனை நிலையம் மற்றும் சில குடும்பங்களின் வாழ்விடங்களான இல்லங்களையும் கொண்டது.

அமைதியான சூழல், மருது, வேம்பு, வாகை மரங்கள் ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பும் ரம்மியமான சோலை, கால் பதித்தால் நிறமூட்டும் செம்மண், மண் வளர்த்தை எடுத்துக் காட்டும் பயிர்ச்செய்கைச் சுற்றாடல், பருகும் போது மீண்டும் பருகத்தூண்டும் நீர் வளம், வந்தாரை வரவேற்கும் வீதியோர வர்த்தக நிலையங்கள், வற்றாத நீர் நிலையான ஆழ் கிணறு, அத்தனையும் உற்று நோக்கிய வண்ணம் கோயில் கொண்டிருக்கும் நவசைலேஸ்வரர் ஆலயம், அத்துடன் யுத்த வடுக்களை தாங்கி நிற்கும் கட்டிட இடிபாடுகளுடன் கூடிய சுற்றாடல் கொண்டதுதான் நிலாவரை.

அண்மைக்காலம் வரை மிக அமைதியாகவும் ஆள் அரவமற்ற பிரதேசமாகவும் காணப்பட்டது. உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கும் வழிப்போக்கர்கள் மற்றும் விவசாயிகள் இளைப்பாறிச் செல்லும் இடமாகவும் விளங்கியது. ஏ9 பாதை திறக்கப்பட்டு இயல்பு நிலை ஏற்பட்டதை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் குடா நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் தரிசனத்துக்கு தப்பிவிடாமல் உற்று நோக்கப்படும் மிக முக்கியமான சுற்றுலா மையம். நளாந்தம் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பல ஒரே நேரத்தில் தரித்து நிற்பதையும் பல நூற்றுக் கணக்கான பயணிகள் ஆறுதலாக அமர்ந்திருந்து உண்டு மகிழ்ந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் படாமல் நிலாவரை தப்புவது இல்லை. அது மட்டுமல்ல நிலாவரைச் சூழலை தமது கமராக்கள் வீடியோ பதிவுகளுக்கு உள்ளாக்காமல் விடுவதும் இல்லை. சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கும் யாழ் மாவட்டத்துக்குச் சிறப்பாக உரிய பனம் பண்டங்களையும், பனையோலை கைப்பணிப் பொருட்களையும், யாழ்ப்பாணத்து சின்ன வெங்காயத்தையும், மாம்பழத்தையும் விற்பதற்கு நடைபாதை விற்பனை நிலையங்கள் மணிப்பிரவான நடையில் சிங்களத்ததையும் தமிழையும் கலந்து பேசும் நடைபாதை வியாபாரமும் பார்ப்போரை கவர்ந்திழுக்காமல் இல்லை.

அது மட்டுமல்ல தென்னிலங்கை கைப்பணிப்பொருள் கித்துள் பனங்கட்டி, பல்வேறு வகையான வளையல்கள் மற்றும் உணவு நிலையங்களும் வகை வகையாக வந்தோரை வரவேற்றவண்ணம் உள்ளன. மேலும் விசாலமான சிற்றுண்டிச் சாலைகளும் தமிழ், சிங்கள சிறப்புச் சிற்றுண்டிகளும் சைவ உணவு அசைவ உணவு வகைகள் உள்ளடக்கியதாக உள்ளன.

நிலாவரைக்கும் நவசைலேஸ்வரத்துக்கும் பூர்வீகமான புராண இதிகாச கதைத் தொடர்புகளும் கர்ண பரம்பரைக் கதைத் தொடர்புகளும் பல உண்டு. அந்த வகையில் இராம பிரான் தமிழ் வேந்தன் இராவணணை சங்காரம் செய்து விட்டு வடநாடு திரும்பும் போது ஸ்தாபித்த தலம் தான் நவசைலேஸ்வரம் என்றும் அவரது அம்பினால் தோண்டப்பட்டது தான் நிலாலவரை வற்றாத நீர் நிலை என்றும் கூறப்படுவது உண்டு.

நிலாவரை வற்றா நீர் நிலை மற்றும் நவசைலேஸ்வரம் தொடர்பாக இராமயணத்துடன் தொடர்புபடுத்தியும் கர்ணபரம்பரையாகவும் பல்வேறு கதைகள் சம்பவங்கள் கூறப்பட்ட போதிலும் நிலாவரை வற்றாநீர் நிலைக்கு புவியியல் ரீதியிலான விஞ்ஞான விளக்கமும் நவசைலேஸ்வரத்துக்கு பூர்வீக வரலாற்றோடும் சிவன் வழிபாட்டோடும் தொடர்பான வரலாறும் உண்டு. இது உண்மைதான் என்பது சில சான்றுகள் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.

நல்லூர் இராசதானிக் கால ஆலயங்கள் பற்றிக் கூறும் போது தக்ஷிணகைலாய புராணத்தின் நவசைப்படலத்தில் புத்தூரில் இருந்த சிவன் கோயில் பற்றியும் அதன் கேணி பற்றியும் நந்தவனம் பற்றியும் கூறப்படுவதோடு குறித்த ஆலயத்தை வழிபட்ட அடியார்கள் பெற்ற நன்மைகள் பேறுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சிவன் கோயில் நவசைலேஸ்வரம் சிவன் கோயில் தான் என்று ஒரு சாரார் கூறும் அதே வேளையில் சிலர் இதில் கூறப்படும் சிவன் கோயில் புத்தூர் சிவன் கோயில் எனக் கூறுவதும் உண்டு.

நவசைலேஸ்வரம் புராதனமானதும் தல மகிமை கொண்டதும் பூர்வீகமானதும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. இந்த ஆலயம் ஈழத்தில் சிறப்பு பொருந்திய ஆறு ஈஸ்வரங்களில் ஒன்று.

அதன் பூர்வீகம் போர்த்துக்கீசர் காலத்தில் இடித்து அழிக்கப்பட்டது. ஆலயத்தின் பூர்வீக விக்கிரகங்கள் முன்னோரால் அயலில் உள்ள கிணற்றில் இடப்பட்டு மறைக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இறையருளால்

மீட்டெடுக்கப்பட்டு தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு அதில் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
போர்த்துக்கீசரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்ட பூர்வீக ஆலயத்தின் அடித்தளமும் சுற்றுப்பிரகாரமும் தற்போதைய ஆலயத்தக்கு அருகில் மண்ணுள் மறைபட்டுள்ளது. சில இடிபாடுகள் மண்ணுக்கு மேல் இப்பொழுதும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.

நவசைலேஸ்வரத்தில் தற்போது காணப்படும் ஆலயம் 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக மீட்டெடுக்கப்பட்டு கட்டப்பட்டது. ஆலயத்தின் முக்கிய விக்கிரகங்கள் மற்றும் மூல மூர்த்தியாகிய சிவலிங்கமும் ஆலயத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

தற்போதைய ஆலயத்தை நிர்மாணித்த பரம்பரைப் பூசகரான வேலுப்பிள்ளை சுப்பையாவும் அவரின் மனையாள் சிவக்கொழுந்தும் பூசை வழிபாடு செய்தனர் என்றும் வேலுப்பிள்ளை சுப்பையாவின் பேரனும் தற்போதைய ஆலய பரிபாலன சபையின் தலைவருமான வேலுப்பிள்ளை அருணாசலம் தெரிவிக்கின்றார்.

தற்பொழுது காணப்படும் ஆலயம் வெளிச் சுற்றுப்பிரகாரத்துடன் சிறிய ஆலயமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் நித்தியபூஜைகள் வழிபாடுகளுக்கு புலம்பெயர்ந்த உறவுகள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஆலயத்தின் தற்போதைய தினசரி பூசையை அச்சேழுவைச் சேர்ந்த சிவஸ்ரீ விக்னேஸ்வரக் குருக்களும் அவர்களது குடும்பத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலயத்தின் தீர்த்தமாக வற்றாநீர் ஊற்று காணப்படுகின்றது. ஆலயத்தின் முன்றலில் சில மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வற்றா நீர் ஊற்றுக்கு இறங்குவதற்கு மேற்கு கிழக்காக பல படிகள் கட்டப்பட்டு தேவையின் நிமித்தம் படிக்கட்டுக்களை பயன்படுத்தி இறங்கி ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் 20 ற்கும் மேற்பட்ட படிக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆலயமும் ஆலய வாசலில் அமைந்துள்ள வற்றா நீர் ஊற்றும் அத்தோடு இணைந்து நூற்றாண்டுக்கு மேற்பட்ட வளர்ச்சி கொண்ட மரங்கள் நிறைந்த சுற்றாடலும் ஆலயத்தின் சூழலை அழகூட்டுவனவாக இருப்பதோடு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் மையமாகவும் விளங்குகிறது.

வலி.கிழக்கில் புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தனித்துவம் மிக்கதாகவும் அழகும் அமைதியும் நிறைந்த இடமாகவும் விளங்கும் நிலாவரை ஆழ் கிணறு தொடர்பாக புராண இதிகாசங்களில் இடம்பெறுவதாக கூறப்பட்ட போதிலும் அதனுடன் தொடர்பான சுலோகங்களோ பாடங்களோ இது வரை கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகின்ற அதே வேளையில் வற்றாதநீர் நிலை அமைப்பதற்கு வரையறை செய்யப்பட்டு கூறப்படும் நியாயங்களும் வரைவிலக்கணமும் விஞ்ஞான ரீதியில் வேறுபட்டதாக அமைந்துள்ளன.

அடியார்கள் சமுத்திரத்தில் நல்லூர் முருகன் தேரினில் ஆரோகணித்து அலையாக ஆடி வந்து அருள் பாலித்தார் -படங்கள்,வீடியோ இணைப்பு

E-mail Print PDF

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களுள் ஒன்றான யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதிகாலை இடம்பெற்ற வசந்த மண்டப பூசை மற்றும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி ஆலயத்துக்கு வெளியே தேருக்கு எழுந்தருளிச் செய்தபோது, விமானப் படையின் ஹெலிக்கொப்டர்கள் மூலம் மலர் சொரிந்து முருகனின் அருளைப் பெற்றுக் கொண்டனர்

முருகப் பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் சித்திரத் தேரேரி காலை 7.30 மணியளவில் ஆரோகணித்து திருவீதி உலா வந்தார்.

தேர்திருவிழாவின்போது வடம் பிடித்து எம் பெருமானை தரிசித்து இறையருளை பெற்றுக்கொள்வதற்கென நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நல்லூர் ஆலயத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் தென் பகுதிவாழ் சிங்கள மக்களும் பக்தி பரவசத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பம்பைகள், முரசு ஒலிக்க பக்தி உணர்வுடன் தமது நேற்றிக் கடன்களை நிறைவேற்றினர். தூக்குக் காவடி, பறவைக் காவடி, செதில் காவடி என்பவற்றுடன் பெண்கள் கற்பூர சட்டிகளும் ஏந்தியவண்ணம் இறையாசி வேண்டி சென்றனர்.

சித்திரத் தேரேறி சுவாமி திருவீதி உலா வருகையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேருக்கு பின்னால் அங்கப் பிரதட்சணம் செய்தனர்.

நல்லைக் கந்தன் தேர்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெண் பொலிஸார் சைவ சமய கலாசார முறைப்படி சேலை அணிந்தும் ஆண் பொலிஸார் வேட்டி சால்வையுடனும் பக்தர்களுடன் பக்தர்களாக இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் னெடுத்தனர்.

இராணுவத்தினர் பக்தர்களின் வசதி கருதி பல்வேறு உதவிகளை செய்திருந்தனர். தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் வழங்கினர். இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் முதலுதவி சேவைகளை வழங்கியிருந்தனர்.

அலை அலையக திரண்ட அடியார்கள் மத்தியில் சித்திரத் தேரில் பவனிவரும் நல்லூர் முருகன்

500 ஆண்டுகள் பழைமையான தமிழர் பாரம்பரியம்கூறும் தொல்லியல் தலம் (பட இணைப்பு)

E-mail Print PDF

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.

இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.

கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பணிச் சபை - புதிய அங்கத்தினர்கள் தெரிவு

E-mail Print PDF

கடந்த 20.11.2011 அன்று ஆலய வளாகத்தில் இடம்பெற்ற திருப்பணிச் சபை பொதுக் கூட்டத்தில் ஊரில் இருக்கும் பல பிரமுகர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் பங்குபற்றிச் சிறப்பித்துடன், அன்றைய தினம் எதிர்வரும் ஆண்டிற்கான திருப்பணிச் சபை அங்கத்தினனர்கள் உதவி அரச அதிபர் காரியாலயத்தில் இருந்து வருகை தந்திருந்த அரச அதிகாரியின் முன்னிலையில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பெற்றனர். அவர்களின் விபரம் பொது மக்களின் பார்வைக்காக மேலே உள்ள விளம்பர பத்திரத்தில் வெளியாகியுள்ளன.

பொதுகூட்ட நிகழ்வுகள் கீழே பதியப்பெற்றுள்ளன

படங்கள்: சேகர்


கூட்ட நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

 

நன்றி


சங்கடக சதூர்த்தி விநாயகன் திருவருள் துணை கொண்டு புதிய திருப்பணிச் சபையினர் எதுவித சங்கடமும் இன்றி இறைபணி தொடர பிரார்த்திக்கின்றோம்
பணிப்புலம்.கொம்

சாந்தை சித்தி விநாயகர் ஆலய உட்பிரக்காரத்தில் அமைந்துள்ள வேம்பும் அதன் தோற்றமும்

E-mail Print PDF

சாந்தை சித்திவிநாயகர் ஆலயத்தின் மேற்கு பக்க உட்பிரகாரத்தில் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள மதிலுக்கு அருகாமையில் இருக்கும் தான் தோன்றியாக முளைத்த ஒரு வேப்பமரம் தப்பொழுது  ஆலய தலவிருட்சமென சித்தரிக்கப் பெற்று  நடைபெற்று வரும் ஆலய புனருத்தான வேலைகளைப் இடைநிறுத்த பலர் முயன்று வருவதாக ஆலய திருப்பசபை கூறுகின்றது. இதனால் நன்கொடை செய்வோர் அதிருப்தி அடைந்து தம் திருப்பணியை வேறு ஆலயங்களுக்கு செய்ய முன்வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.  இந்த இறை பணியை தடைசெய்ய ஆலய திருப்பணியில் பங்கு பெறாதவர்கள் தம் சுயநலம் கருதி முன்னினிலை வகிப்பதாகவும் அறிய முடிகின்றது.

ஆலயத்தைச் சுற்றி மரங்கள் (பனைகள், வேம்புகள்) பல தானாகவே முளைத்து வளந்துள்ளன. அத்துடன் ஆலய உள்வீதியில் இன்னும் பல வேப்ப மரக்கன்றுகள் முளைத்துள்ளன. ஆலய முன் வீதியில் பல மரங்களை சாந்தையில் வாழ்ந்த பிள்ளையார் பக்தனான மதிப்பிற்குரிய வடிவேலு ஐயா அவர்களால் நடப்பெற்று பராமரிக்கப்பெற்று அவை இப்போது சோலைபோல் காட்சி தருகின்றன.

மேலே உள்ள படத்தில் காட்டப்பெற்றுள்ள வேப்பமரமானது இதுவரை காலமும் கவனிப்பாரற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதன் அடிப்பகுதியில் பாரிய பழுது (நோய்வாய்ப்பட்டு) இருப்பதையும் பார்க்க முடிகின்றது.

தற்பொழுது ஆலயம் விஸ்தரிக்கப்பெற்று உள்பிரகாரத்தைச் சுற்றி மதில் கட்டப்பெற்று வருவதால் இம் மரம் உள்வீதியில் மதிலுக்கு அண்மையில் அமைந்து  உள்வீதிக் கொட்டகை அமைப்பதற்கும், சுவாமி வீதிவலம் வருவதற்கும் இடைஞ்சலாக உள்ளது.

இம்மரத்தை ஆலய தலவிருட்ஷமாக எம்முன்னோர் ஏற்றிருந்தால் அதற்கு உரிய சிறப்பை செய்திருப்பார்கள். ஆனால் இம் மரமோ கவனிப்பாரற்று இருந்ததுடன் ஆடுமாடு வளர்ப்போரின் குளைவெட்டும் ஒரு மரமாக இருந்துள்ளது. தலவிருட்சம் இல்லாத புகழ்பெற்ற பல ஆலயங்கள் எம்மூரிலும், அயல் ஊர்களிலும், வெளியூர்களிலும் இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அத்துடன் இவ் ஆலயத்தின் தலவிருட்ஷம் என்ன மரம் என்பது இதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை. 

சுமார் 2500-3000 வருடங்கள் பழமையான ஆலயத்தில் சுமார் 30-40  வருடங்களில்  முளைத்த  வேப்ப மரம் அதுவும் பழுதுபட்ட குறையுடன் காணப்படும் ஒரு வேப்ப மரம் தலவிருட்சம் என குறிபிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு ஆலயத்தின் தலவிருட்சம் எப்பொழுதும் அவ் ஆலய தோற்றத்துடன் அல்லது அதன் சிறப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை.

இவ் ஆலய திருப்பணிக்கு நன்கொடை செய்வோரும், ஆலய திருப்பணிச் சபையினரும் இவ் விடயம் சம்பந்தமாக சிவாலய நிர்மாண வல்லுணர்களிடமும், சிவாகம சாஸ்திர சிற்பாச்சாரியார்களிடமும், கட்டிடக் கலைஞர்களிடமும் ஆலோசனைகள் பெற்று அனை தறிப்பதா அல்லது விடுவதா என்பதனை முடிவு செய்யலாம். அல்லது சித்தி விநாயகரிடமே அவரின் விருப்பை உளச் சுத்தியோடு "பூ" கட்டிவைத்து அதன் மூலம் ஒரு நல்ல முடிவுக்கும் வரலாம்.

எதுவித சங்கடமும் இன்றி இறைபணி தொடர சங்கடக சதூர்த்தி நாயகனை பிரார்த்திக்கின்றோம்

பணிப்புலம்.கொம்

சாந்தை காளிகா அம்பாள் பலஸ்தாபன விழா - 16.09.2011

E-mail Print PDF

காளிகா தேவி - காயத்தி மந்திரம்
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

சாந்தையம்பதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் காளிக்காதேவி ஆலயம் மிகவும் பழுதடைந்து இருப்பதனால், அதனை ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக அமைக்கும் புனருத்தாபன திருப்பணி வேலைகள் ஆலய பரிபாலன சபையினரால் முன்னெடுக்கப்பெற்றுள்ளது.

இறைவியின் நல்லாசியுடன் ஊர்மக்களின் நன்கொடைகள் பெறப்பெற்று 16.09.2011 வெள்ளிக்கிழமை நல்சுப முகூர்த்த வேளையில் காளிக்காதேவி பாலஸ்தாபனம் செய்யப்பெற்று நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இப் புண்ணிய திருப்பணி இனிதே நிறைவுபெற புலம்வாழ், புலம்பெயர்வாழ் ஊர் மக்களின் பங்களிப்பினை ஆலய பரிபாலன சபை அன்போடு எதிர்பார்த்து நிற்கின்றனர்.

காளிகாதேவி:

“மஹா காளீ; பெருமைமிகு காளிதேவி. நீலநிறம் பெற்றுள்ளதாலும், காலத்தின் வடிவமாகத் திகழ்வதாலும் தேவியைக் காளி என்றனர். சிவபெருமானின் நான்கு சக்திகளில் காளி குரோத சக்தி ஆவாள். காளி என்றும், காலி என்றும் இரு வேறு விதமாகக் கூறுவர்.

தக்ஷன் வேள்வியை அழித்தது போன்ற அரிய, பெரிய செயல்களைப் புரிந்ததால், மகாகாளி என்று சிறப்பித்தனர்.பிரமனைத் துன்புறுத்திய மது, கைடபர் என்ற அசுரர்களை அழிக்கத் தோன்றியவள் காளி. நீலநிறத்துடன், பத்துக் கைகளில் வாள், சக்கரம், கதை, அம்பு, வில், இரும்புத்தடி, சூலம், குத்துவாள், அசுரன் தலை, சங்கு ஆகியவற்றைத் தாங்கிய அச்சந்தரும் கோலத்துடன் தோன்றி மது, கைடபரை காளிதேவி அழித்தாள் என்று தேவிமகாத்மியம் உரைக்கிறது.

காளி என்றால் விரட்டுபவள் என்றும் பொருள் உண்டு. காலனை விரட்டுவதாலும், தீமைகளை விரட்டுவதாலும் காளி என்றனர். தமிழகத்தில் காளி பாலை நிலத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவள். தற்காலத்தில் பல ஊர்களின் கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள்.

வைரபுர மாகாளி கம்பரின் நாவில் தனது வித்தெழுத்தைச் சூலத்தால் எழுதி, அவரை, கல்வியிற் பெரிய கவிஞராக உயர்த்தியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

திருவொற்றியூர் காளி, கம்பர் இராமாயணம் இயற்றிய பொழுது, இரவில் அவருக்கு, தீவட்டி ஏந்தி ஒளி காட்டி உதவியதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. உஜ்ஜயினி காளி, காளிதாசன் நாவில் வித்தெழுத்தை எழுதி அவனை மகாகவியாக உயர்த்தினாள்.

தானே காளிதாசன் என்று கூறிச் சிறப்பித்தவளும் உஜ்ஜயினி காளியே ஆவாள். கொல்கத்தா காளியே காளிகளுள் முதன்மை பெற்றுத் திகழ்கிறாள். இராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சிணேஸ்வரம் காளிக்குப் பூஜை செய்தவர். அவருக்குக் காட்சியளித்து, பரமஹம்சராக உயர்த்தியவளும் அவளே. சென்னை தம்புச்செட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாளை மராட்டிய மன்னன் வீரசிவாஜி தரிசித்து வணங்கினான்

மகாகவி பாரதியாரும் காளிகாம்பாளை வணங்கியவரே. சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாகத் திகழ்பவள். காரைக்காலுக்கு அருகில் உள்ள அம்பகரத்தூர் மதுர காளியும் வரப்பிரசாதியாக விளங்குகிறாள். புதுவைக்கு அருகிலுள்ள வக்கிர காளியம்மன் தற்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்குகிறாள். உஜ்ஜயினியில் சிவபெருமான் மகாகாலர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார். மகாகாலரின் சக்தியாக விளங்குபவள் என்ற பொருளிலும் தேவியை மகாகாளி என்றனர்.

காளிகா புராணம் என்ற உபபுராணம் காளிதேவியின் தோற்றம் முதலான செய்திகள் அனைத்தையும் விரிவாகக் கூறுகிறது. கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியும், கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணத்தின் தட்சகாண்டமும் காளியின் ஆற்றலை வெகுவாகப் புகழ்கின்றன. மகாகவி பாரதியாரின், “யாதுமாகி நின்றாய் காளி” என்று தொடங்கும் பாடல் மிகவும் பிரபலமானது. நவராத்திரி(உஜ்ஜயினி) பாட்டு, காளிப் பாட்டு, காளி ஸ்தோத்திரம், காளிக்கு சமர்ப்பணம், ஹே காளீ!, மகாகாளியின் புகழ் ஆகிய தலைப்புகளிலும் பாரதியார் காளிதேவியைப் போற்றிப் பாடியுள்ளார்.

“யார் தருவார் இந்த அரியாசனம்!” என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரபலமானது.” “கருத்த உன் குழலுக்குக் கவி வேண்டுமா? சிறுத்த நின் இடையாட ஜதி வேண்டுமா?” என்று காளிதாசன் காளியிடம் வினவுவதாகக் கற்பனை செய்து பாடிய கண்ணதாசனின் வரிகளில் எத்தனை அழகு! இலக்கிய நயம்! இசைநயம்!

அபர்ணா “அபர்ணா’ இலையும் புசியாதவள். பர்ணம் என்றால் இலை என்று பொருள். இலையால் அமைக்கப்படும் குடிலை, ‘பர்ணசாலை’ என்பர். தவம் செய்வோர், தங்கள் உணவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு, இறுதியில் தன்னிடம், தானே பறந்து வரும் பழுத்த  இலைச் சருகுகளை மட்டுமே புசிப்பார்கள்.  அம்பிகை பார்வதியாகி, ஐந்து வயதில் தவம் இயற்றியபொழுது, இலையும் புசிக்காமல் கடுந்தவம் புரிந்தாள். அதனால், அபர்ணா என்றனர். பர்ணசாலையும் இல்லாமல் வெட்டவெளியில் அமர்ந்து தவம் புரிந்ததாலும் அவளை அபர்ணா என்றனர்.

“ருணம்’ என்றால் கடன் என்று பொருள். கடன் இல்லாதவள் அபர்ணா. அதாவது, தேவி எவருக்கும் கடன்படாதவள். அவரவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தன் கடமையைச் செய்துவிடுகிறாள். எனவே, அவளுக்கு அருட்கடன்கூட இல்லை! சிவபெருமான் சற்றும் அசைவில்லாமல் விளங்குவதால், மரக்கட்டையைப் போன்றவன் என்ற பொருளில் ஸ்தாணு என்பர். அந்த மரக்கட்டையைச் சுற்றிய கொடி அம்பிகை! ஆனால், அக்கொடிக்கு இலைகள் இல்லை! அதனால் அவள் அபர்ணா.

மகான் பாஸ்கரராயர் ஒரு முறை கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. குறிப்பிட்ட காலத்தில் அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. கடன் கொடுத்தவர் அதனால் சினம் கொண்டார். பாஸ்கரராயரின் இல்லத்தின் முன்னால் நின்று மிகவும் தாழ்வாகப் பேசிவிட்டார். அம்பிகையால் அதனைப் பொறுக்க முடியவில்லை. பாஸ்கரராயரின் மனைவி ஆனந்தியின் உருவெடுத்து, கடன் கொடுத்தவரின் இல்லத்திற்குச் சென்றாள். கடனைக் கொடுத்துவிட்டு, கடன் பத்திரத்தையும் வாங்கிச் சென்றாள். அதன்பிறகு, பாஸ்கரராயர், கடனைக் கொடுக்கச் சென்றபோது, கடன் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்து வியந்தார்! ஏனெனில், அன்று முழுவதும் மனைவி ஆனந்தி அவருடைய பூஜைக்கு உதவிகள் செய்து கொண்டு இல்லத்திலேயே இருந்தாள்! அபர்ணா என்ற நாமத்திற்கு,” “ருணத்தைத்(கடனை) தீர்ப்பவள்” என்று தாம் எழுதிய விளக்கத்தை தேவி மெய்ப்பித்ததை எண்ணி உள்ளம் பூரித்தார் பாஸ்கரராயர்.

இருவகை அசுரர்கள்:
சண்ட முண்ட அஸுர நிஷுதிநீ’ சண்டன், முண்டன் என்ற அசுரர்களைக் கொன்றவள். சண்டனும் முண்டனும் முறையே சும்ப, நிசும்ப அசுரர்களின் படைத் தலைவர்கள். அவர்களைக் காளிதேவி வதம் செய்தாள். தீயசக்திகளிடத்தில் கோபம் கொள்பவள் என்ற பொருளில், இதற்கு முந்தைய நாமம், “சண்டிகா’ என்று போற்றியது. அதற்குச் சான்றாக ஒரு வரலாற்றை இந்த நாமம் எடுத்துக்காட்டியது. பராசக்தியாகிய தேவியின் சினத்திலிருந்து தோன்றிய காளிதேவி, சண்டனையும் முண்டனையும் வதம் செய்தாள். ஆகவே, சண்டமுண்டர்களை வதம் செய்தவள் என்ற பொருளில், “சாமுண்டா என்று பெயரிட்டு அழைத்தனர். தலையில்லாத உடலை முண்டம் என்றும், உடலற்ற தலையைச் சண்டம் என்றும் கூறுவர். அறிவாற்றல் சற்றும் இல்லாமல் சிலர் தங்கள் உடல் வலிமையால் சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பார்கள். அவர்களே முண்டர்கள். “அறிவு கெட்ட முண்டம்!” என்று திட்டுவதன் பொருளை இதனால் உணரலாகும். மூளை வலிமை பெற்று, உடல் வலிமை இல்லாத சிலர், தம் அறிவாற்றலை அழிவுக்கே செலவிடுவர். இவர்களே சண்டர்கள். இவ்விரு வகையான சமூக விரோதிகளையே சண்ட, முண்ட அசுரர் வரலாறு குறிப்பால் உணர்த்துகிறது. அழிவுக்கு வித்திடும் அத்தகைய கொடியவர்களை அம்பிகை வதைத்தாள்.

சாமுண்டா தேவி மைசூர் அரசவம்சத்தின் குலதெய்வமாக விளங்குபவள். கர்நாடக மாநிலத்தில் சாமுண்டா தேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் இன்றும் நடைபெறுகின்றன.

கல்கத்தா அருகில் தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் இருக்கிறது. இங்கு காளிக்கு ‘பவதாரிணி’ என்று பெயர்.‘பவதாரிணி’ என்றால், ‘ஜீவாத்மாக்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவித்து, முக்தி என்னும் கரை சேர்ப்பவள்.’ என்று பொருள்.

இந்த பவதாரிணி காளிதேவியை வழிபட்டவர் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர்.காளிதேவி கருமை நிறம் கொண்டவள்.நாம் தூரத்திலிருந்து பார்த்தால், கடலின் நிறம் நீலமாகத் தென்படுகிறது. அருகில் சென்று கடல் நீரைஎடுத்துப் பார்த்தால், அந்தக் கடல் நீருக்கு என்று தனியே ஒரு நிறமும் இல்லை. அதுபோல் அஞ்ஞான நிலையில் இருப்பவர்களுக்கு, காளி கருமை நிறம் கொண்டவளாகத் தென்படுகிறாள். ஞானிகளுக்கோ அவள் எல்லையற்ற தெய்விக ஒளி வடிவினள்.காளி பார்ப்பதற்கு பயங்கர வடிவம் கொண்டவள். அஞ்ஞானிகளுக்கு பயங்கர வடிவம் உள்ளவளாகத் தென்படும் காளிதேவி, ஞானிகளுக்கு ஆனந்த சொரூபிணியாகக் காட்சி தருகிறாள்.

காளிக்கு ‘திகம்பரி’ என்று ஒரு பெயர். இதற்குத் ‘திசைகளையே ஆடையாகக் கொண்டிருப்பவள்’ என்று பொருள்.திசைகள் அனைத்தையுமே ஆடையாகக் கொண்ட அவளுக்கு, எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்? எந்த ஆடையை, எவ்வளவு பெரிய ஆடையை அவள் அணிந்து கொள்ள முடியும்? பிரபஞ்சமே அவளாக இருக்கும்போது, அவளை எந்த உடை கொண்டு போர்த்த முடியும்? எனவேதான் அவள் உடை எதுவும் இல்லாமல் இருக்கிறாள்.நம் இந்துமதத்தில் நான்கு கைகள் உடையவர்களாக தேவர்கள்-தேவியரின் வடிவம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இது அவர்கள் மனிதர்களைக் காட்டிலும் அதிக ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்த்துகிறது. காளி தன் இடுப்பில் கைகளை ஒட்டியாணமாக அணிந்திருக்கிறாள்.

கைகளைக் கொண்டு நாம் செயல் புரிகிறோம். உலகில் உள்ள அனைவரின் கைகளின் மூலமாகவும் காளியே செயல்படுகிறாள். எனவே உலகில் செயல் அனைத்தும் காளிதான் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை, அவள் இடுப்பில் அணிந்திருக்கும் கைகளாலான ஒட்டியாணம் குறிப்பிடுகிறது. காளிக்கு ‘முண்டமாலினி’ என்று ஒரு பெயர். இதற்கு ‘மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவள்’ என்று பொருள். காளியின் கழுத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வெவ்வேறு வயதுடையவர்களின் மண்டையோடுகள் மாலையாக உள்ளன.

இது குழந்தை பிறந்ததிலிருந்து எந்த வயதிலும் மரணம் நேரிடும்; வாழ்க்கை நிலையற்றது; எனவே அரிதாகக் கிடைத்த மனிதப்பிறவியைப் பயன்படுத்தி மனிதன், ஆண்டவனுக்கும் ஆண்டவனின் அடியார்களுக்கும் மனிதகுலத்திற்கும் பயன்படும் வகையில் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. காளியின் ஒரு கை வரதஹஸ்தம்-வரம் தரும் நிலையில் இருக்கிறது. பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வதில் அன்னை காளிக்கு இணை அவளேதான்.அன்னையின் இன்னொரு கை அபயஹஸ்தம். அது பக்தர்களின் பயத்தையும் துன்பங்களையும் நீக்கிப் பாதுகாப்பு அளிக்கிறது.காளி தன் ஒரு கையில் வாள் ஏந்தி இருக்கிறாள். அது தீமை எங்கே இருந்தாலும், முடிவில் அதை காளி வெட்டிச்சாய்த்து விடுவாள்; அவளுடைய தண்டனையிலிருந்து தீமைகள்-தீயவர்கள் தப்பிவிட முடியாது என்பதை உணர்த்துகிறது.

காளி இன்னொரு கையில் வெட்டிய ஒரு தலையைப் பிடித்திருக்கிறாள். இது தீயவர்கள் காளிதேவியால் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை உணர்த்துகிறது. உலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றையும் காளி தன் மூன்று கண்களாகக் கொண்டிருக்கிறாள். காளியின் கணவன் சிவபெருமான். அவர் சடைமுடி உடையவர், காளியும் விரிந்த கரிய கூந்தல் உடையவள். காளியின் விரிந்த கரிய கூந்தல், அவளது எல்லை காண இயலாத வியாபகத் தன்மையையும் ஆற்றல்களையும் உணர்த்துகிறது.

“சக்திக்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாடு, பெயர் அளவில்தான் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை. நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, பாலும் அதன் வெண்மையும் போல, சுயம் பிரகாசமுள்ள மணியும் அதன் ஒளியும் போல, சக்தியும் சிவமும் ஒன்றேயாகும். ஒன்று இல்லாமல் மற்றொன்றை நினைக்க முடியாது. அவை இரண்டையும் வேறுபடுத்தவும் முடியாது” என்று தட்சிணேஸ்வரத்திலிருந்து மாமுனிவராய் விளங்கிய பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறியுள்ளார்.

சுபம்

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 2