Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

தீபாவளித் திருநாளும் அதன் மகிமையும் - நரகாசுர வதம் இணைப்பு - 18.10.2017

E-mail Print PDF

தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் (அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பெறும்)  இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

தீயன அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து, பரவி பிரகாசித்து, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி ஒரு சம்ஸ்கிருத பதம். இதைப் பிரித்துப் பார்த்தால் (தீப + ஆவளி-வரிசை) விளக்குகளின் வரிசை எனப் பொருள்பெறும். தீபாவளி தினம் நாம் வீட்டில் தீபங்கள் ஏற்றி வீட்டிற்கு வெளிச்சம் கொண்டு வருவது போல் அகத்து இருள் நீங்க அகத்திலும் ஒளி விளக்கு ஏற்றி உள் ஒளி பெருக்கிடல் வேண்டும்.

தீபாவளி, ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடப்பெறும் ஓர் இந்துப் பண்டிகையாகும். இப் பண்டிகை இவ்வருடம் 18.10.2017 புதன்கிழமை அமைவதாக  சோதிடம் கணித்துள்ளது. தீபாவளி தினம் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து மூத்தோரை (பெரியோர்களை) வணங்குவர். அதன் பின் எண்ணெய்க் முழுக்கு (கங்கா குளியல்) செய்வார்கள். நல்லெண்ணையில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை அணிந்தும், தீபங்கள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பண்டங்கள் பரிமாறியும் மகிழ்வர்.

இப் பண்டிகை அடிப்படையில் இந்துப் பண்டிகையாக இருந்த போதிலும்;  சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் ஒரு பண்டிகையாக விளங்குகின்றது. இப் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.  தீபாவளியன்று நீராடுவதை "புனித நீராடல்" என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் “சந்திர தரிசனம்” காலத்தில் எல்லா இடங்களிலும், கிடைக்கும் தண்ணீரில் (நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர்நிலைகள்) "கங்கா தேவி" (கங்கை நீர்) வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5மணிவரை உள்ள காலம் (இலங்கை, இந்தியாவில்) எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காலம் என கணிக்கப் பெற்றுள்ளது.

"சந்திர தரிசனம்" என்றால் என்ன?
ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று கிழக்கு அடிவானத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக தேய் பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும் என்பது ஐதீகம். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

அத்துடன் அன்று நீராடும் போது அணியும், எண்ணெயில்-லட்சுமியும், அரப்பில்-சரஸ்வதியும், குங்குமத்தில்-கௌரியும், சந்தனத்தில்-பூமாதேவியும், புத்தாடைகளில்-மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

யார் இந்த நரகாசுரன்?
ஒருவன் இறந்த நாளை சந்தோஷமாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான். நரகாசுரன் இறந்த நாளான நரக சதுர்த்தியத்தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகின்றோம்.

ஒருசமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில்அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்தவன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது.

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆகஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, அந்த பௌமன் எனும் நரகாசுரன் (இன்றைய அஸ்ஸாம்) காமரூபம் என்னும் நாட்டை ஜ்யோதிஷபுரம் என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஜ்யோதிஷபுரம் என்றால் ஒளிபொருந்திய என்று பொருள்.

நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி, குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் கற்றறிந்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, "அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்" என்றார்.

"நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்" என்றான். அதற்கு "உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்"  என்றார்.

அதனால் அவன் "ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது" என்று வரமருளக் கேட்டான்.

"தந்தேன் நரகா, நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்" இதைக்கூறி பிரம்மா மறைந்து விட்டார்.

வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும்  உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.

எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.

கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு "முராரி" என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர்,

ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், "என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.

நரகாசுரனை எதிர்த்துச் போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடைய கோபமடைந்த சத்தியபாமா, நரகாசுரனுடன் சண்டை இட்டு அவனை வெட்டி வீழ்த்தினார் என்றும் கூறுவாரும் உளர். அச்சந்தற்ப்பத்தில் சத்தியபாமா தன் சக்தியை கிருஷ்ண பரமாத்மாவுக்கு அளிக்கப் பெற்று கிருஷ்ண பரமாத்மாவே நரகாசுரனை அழித்தார் எனவும் கூறுவாரும் உளர்.

நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான வரம் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரன் தனது இறப்புக்கு காரணம், எல்லோரையும் தான் வருத்தியதும், விளக்கேற்றக் கூடாது என்று கட்டளையிட்டதும் என்ற தவறை உணர்ந்து, அதற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் இரந்து கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்" என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். எம் மனதில் இருக்கும் இருளை அகற்றி தீப ஒளியை ஞான ஒளியை ஏற்றி வைப்போம். அதற்கிணங்க இந்துமக்கள் அத்தினத்தை தீபாவளி தினமாக எண்ணை வைத்து அதிகாலையில் தோய்ந்து, தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்புப் பண்டங்கள் பரிமாறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறும் கூறுவாருமுளர்..... தாயான பூமாதேவி மகனான நரகாசுரனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார். பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு சத்தியபாமா அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் சத்யபாமாவுக்கு (பூமாதேவிக்கு) முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.
இது தவிர…..

பார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றதும் ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு நோக்கின்றனர்.

தீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களைப் பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து “குபேர பூஜை” செய்வது உண்டு. இந்த குபேர பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை வரிசையாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர்.

மகாலட்சுமி தீப ஒளியில் தோன்றக் காரணம் ?:
நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி! தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம்.

அயோத்தியில் தீபாவளி: ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் “எம தீபம்” எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உளர்.

தலைத் தீபாவளி: தலைத் தீபாவளி என்பது திருமணமாகி முதலில் வரும் தீபாவளியத் தலைத் தீபாவளி என்பார்கள். இது அவர்களின் வாழ்கையை வளம்படுத்த அவர்களின் பெற்றோர்களினால் வெகுசிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. பொதுவாக இப் பண்டிகையை மணப்பெண்வீட்டார் கொண்டாடுவது வழக்கம். மணப்பெண்ணின் பெற்றோர் அவர்களுக்குரிய ஆடை அணிகளை வாங்கிக் கொடுத்து, விசேஷமாக இனிப்புப் பண்டங்கள் செய்து மணமகனின் பெற்றோரையும், உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து தம் உறவுகளோடு இன்பமாக கொண்டாடும் கொண்டாட்டமாகும். இந்த வழக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் மக்களால் தற்பொழுதும் பின்பற்றப்பெற்று வருகின்றது.

வடநாட்டில்:
ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர் - சீதாதேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.
குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.

குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன. கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர், நேரம் போக்க சீட்டும் விளையாடுகின்றனர்.

மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா" என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது.

தீபாவளியின் ஒரு வாரம் முன்பே "ரங்கோலி" என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளி அன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர்.

தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர். பின் "பாவுபீஜ்" என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது.

கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும், இதைக் குறித்து "அன்னகுட்" என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள்.

பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது.

சீக்கியர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை "பந்தி சோர்ரா" என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் "கால்ஸா" என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது.

ஜைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள். ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி "உத்தராத்த்யாயன் சூத்ரா"வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அஞ்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு.

தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள் பரவலாக உள்ளன. அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம் “கெட்டவையை நீக்கி நல்லதை அடைய வேண்டும்” என்பதாகும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி” என்கின்றனர் சான்றோர்.

தீய எண்ணங்கள்தான் (நரகன்) நரகாசுரன் என்ற அசுரன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி''. எனவே எம்மை தீய வழிக்கு இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தும் காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய ஆறுவகை அசுரக் குணங்களையும் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்ட கிருஷ்ண பராமாத்மாவையும், இலட்சுமி தேவியையும் இந் நன்நாளில் துதித்து அசுர குணங்களை அழித்து மகிழ்வான வாழ்வைப் பெற திடசங்கல்பம் கொள்வோம்.

பண்டிகை பூஜைகள்:
பூஜையறையில் தட்டுகளில் புத்தாடைகள் (துணியில் மஞ்சள் தடவ வேண்டும்), பட்டாசு, பட்சணங்கள், தீபாவளி மருந்து வைத்து படைக்க வேண்டும். பின் மருந்தை விழுங்கிவிட்டு, புத்தாடை உடுத்தி பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, பட்சணம் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பட்சணம் கொடுத்து மகிழ வேண்டும்.

தீபாவளி மருந்து எளிய வகை: வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, வெல்லம் சிறிது சிறிது வைத்து, மைபோல அரைத்து சுண்டைக்காயளவு விழுங்கலாம். தீபாவளி மருந்து சாப்பிடுவதால்  பின்னர் உண்ணும் பலகாரங்கள் ஜீரணமாகும்.
தீபாவளி பூஜைகள் பல உள்ளன. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்.

மகாலட்சுமி பூஜை
கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.

லட்சுமி குபேர பூஜை
தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’
என 108 முறை சொல்லலாம்.

குலதெய்வ வழிபாடு
நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.

முன்னோர் வழிபாடு
நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.

கோவர்த்தன பூஜை
வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது.

பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கிஅலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துளசி கல்யாணம்
தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள். பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளிஅமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி.
அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.

வரலாற்றில் தீபாவளி
மதுரை மாநகரில் திருமலை நாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது.
கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான்.

ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.
குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது.

காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது.
மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார்.
பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; “கால விவேகம்’, “ராஜமார்த்தாண்டம்’ ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

நேபாளத்தில்…
திஹார் என்ற பெயரில் ஐந்து நாள் கொண்டாடுகின் றனர். தீபாவளி முதல் நாள் காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பர். இரண்டாம் நாள் பைரவரான நாய்க்கு விருந்து வைப்பர். மூன்றாம் நாள் பசுக்களுக்கு பூஜை செய்வர். நான்காம் நாள் வீட்டுப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகள் நலனுக்கு பைலாதாஜ் என்ற பண்டிகை கொண்டாடுகின்றனர்.

உலகெங்கும் தீபாவளி
இங்கிலாந்தில் கைபாகஸ் என்றும்; ஸ்வீடனில் லூசியா என்றும்; ஜப்பா னில் டோராநாக்ஷி என்றும்; சீனாவில் தஹிம் ஹீபர் என்றும்; பர்மாவில் தாங் கீஜி என்றும் தீபாவளிப் பண்டிகையை வரிசையாய் தீபம் ஏற்றி கொண்டாடுவர்.

பர்மா, சீனா, சயாம் நாடுகளில் மூங்கிலில் வண்ணக் காகித அலங்காரம் செய்து அதில் தீபமேற்றி ஆடிப் பாடுவர். இது ஆகாய தீபம். கனடா நாடாளுமன்றத்தில் 1998-ல் தீபாவளி கொண்டாடினர். வண்ண விளக்கு அலங்காரத் துடன் மகாலட்சுமி பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கயானாவில் இந்துக்கள் வாழும் இடத்தில், சம்பிரதாயப்படி தீபாவளியைக் கொண்டாடு கின்றனர். அன்று அங்கு தேசிய விடுமுறை நாள்.

இந்தியாவில் ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு ஆடுவர். ராஜபுத்திரர்கள் ராம பட்டாபிஷேகம் கொண்டாடுகின்றனர். சௌராஷ்டிரத்தில் லட்சுமி பூஜையுடன் புது கணக்கு எழுதுவர். மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள் இதுதான். பஞ்சாப் பொற் கோவிலில் தீபமேற்றி அலங்காரம் செய்வர். இமாசலப் பிரதேசத்தில் பசுவிற்கு பூஜை செய்வர். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை செய்வர். வங்காளத்தில் காளி பூஜை செய்து கொண்டாடுவர்.

தீபாவளி வாழ்த்து

தீப ஒளி வீசும் இந் நன்னாளில்
ஞான ஒளி தேடி வேண்டுவோம்

அஞ்ஞான இருள் நீங்கி என்றும்
விஞ்ஞானம் நிறைந்த இவ்வுலகில்

மெய்ஞானம் கொண்டு வாழ
சொற்சுவையுடன் இறைவனைப் பாடி

அறுசுவைப் பண்டங்களுடன் அவனை நாடி
அருஞ்சுவையாம் அவன் அருள் பெறுவோம்!

தன்னை எரித்துக்கொண்டு தீபம்
உன்னை ஒளியோடு வாழச்செய்யும்

தியாகத்தை உணர்த்தும் தீபாவளி
ஞாலம் போற்றும் திருநாளாம்!

மாலுக்கும் மண்ணின் தாய்க்கும் பிறந்து
பாலூட்டி வளர்த்தாலும் தன் மகன்

அசுரனானதால் அவன் தாய்முன்னேயே
வதைத்த கண்ணனைப் போற்றும் பெருநாள்!

உலகிலேயே சிறந்த சுவை இனிப்பு
இனிப்புடன் நாம் என்றும் உறவாட

வெடிகொண்டு இவ்வுண்மையைப் பறைசாற்றி
இன்பமாய் வாழ்வோம் பல்லாண்டு!

பணிப்புலம்.கொம்

 

0
5042.30.10.15

BLOG COMMENTS POWERED BY DISQUS