Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

ஆலயங்கள்

சாந்தை - சித்தி விநாயகர் ஆலயம் - வரலாறு

E-mail Print PDF
viwaayakar


சாந்தை சித்தி  விநாயகர் ஆலய வரலாறு

ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)

அமைவிடம்
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் லங்காபுரியின் தலையாக பிரகாசிக்கும் யாழ்ப்பாண குடாநாட்டின் வலிகாமம் மேற்கு பகுதியில் பண்டத்தரிப்பு எனப்படும் பழம் பெரும் பட்டினத்துக்குள் இயற்க்கை எழில் பொருந்திய விவசாய பெரும் நிலபரப்புகளும் (வயல்) விண்ணை முட்டும் அரசும்.ஆலும்.மரதமரமும் ஒன்று  இணைந்து  உறவாடும் சாந்தை என்னும் திவ்விய சேஷ்த்திரத்தில் அமைந்துள்ளது சாந்தை சித்தி விநாயகர் ஆலயம்.

ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் சாந்தை சித்தி விநாயகர் ஆலயமும் ஆதியும் அந்தமும் அற்றது என்று தான் கூறவேண்டும் கி.மு 250ம் ஆண்டளவில் வெள்ளரசமர கிளைகளுடன் இலங்கை வந்த  அசோகச் சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்த வட-இலங்கையில் சம்பில்துறை துறைமுகத்தில் வந்து இறங்கி தான் கொண்டுவந்த வெள்ளரசமர கிளைகளில்  ஒன்றை சாந்தை மண்ணில் நாட்டி விநாயகபெருமானை  வழிபட்டு அனுராதபுரம் சென்று அனுராதபுரத்திலும். செல்வகதிர்காமம் தற்பொழுது அமைந்துள்ள இடத்திலுமாக முன்று இடங்களில்  நாட்டினாள் என்று இலங்கையின் வரலாற்று நூல்களில் ஒன்றான  மகாவம்சம் என்னும் நுல் கூறுகின்றது.

ஆலயத்திற்கு முன்பக்க வாசலில் பல நுற்றாண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்றும் இருந்துள்ளதனால்  இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தை வேம்படி என்றும் அழைப்பார்கள். அது தற்போதும் சிலரிடம் வழக்கத்தில் உண்டு. 1992ம் ஆண்டு காலபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் இவ்மரம் சேதம்அடைந்து முற்றாக அழிந்துவிட்டது. இவ் யுத்தகாலத்தில் இவ்மரம் உட்பட அருகில் இருந்த சாந்தை சித்தி விநாயகர் சனசமுகநிலயம்.சிற்றம்பலவித்தியாலயம் என்பனவும் பல சேதங்களுக்கு உள்ளாகி இடிபாடுகளுடன் காணப்பட்டபோதும் எம்பெருமானின் ஆலயம்மட்டும் எவ்வித சேதமும் இன்றி பழமையுடன் காணபட்டது அனைவரையும் வியக்கவைத்தது.

இவ் ஆலயம் முன்பு தனிநபர் ஒருவருக்கே சொந்தமானதாகவும் அவரினாலேயே பராமரிக்கபட்டு பூஜைகளும் நடாத்தபட்டு வந்தது. பிற்கால பகுதியில் ஊர் மக்கள் விரும்பியபடி பரிபாலனசபை தெரிவு செய்யபட்டு பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டு; இன்று இலங்கை இந்து சமய கலாச்சார அமைச்சின் கீள் பதிவு செய்யப்பட்ட ஆலயமாக திகழ்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் என்பதனால் 1995ம் ஆண்டு காலபகுதியில் ஆலய கட்டடங்களும் கூரைகளும் இன்றைக்கோ நாளைக்கோ இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. ஆலயத்தை புனரமைக்க தீர்மானித்த ஊர் மக்கள் 1999 ஆண்டு திருப்பணிச்சபை ஒன்றை தெரிவு செய்து எம்பெருமானுக்கும் பரிபாலன மூர்த்திகளுக்கும் பாலஸ்தானம் செய்யபட்டது. பழைய ஆலயம் முற்று முழுதாக அகற்றப்பட்டு புதிய ஆலயத்திற்கான  ஆதிமுல அத்திவாரம் 1999ம் ஆண்டு ஆவணிமாதம் இடப்பட்டு திருப்பணிவேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இடைக்காலப்பகுதியில் திருப்பணிச்சபை கலைக்கப்பட்டு பரிபாலனசபையினராலே திருப்பணிவேலைகள் மேற்கொள்ளப்பட்டது ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட புதிய ஆலயத்திற்கு 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி புனர்வத்த மகா கும்பாவிசேகம் சிவ ஆகம தத்துவ நிதி ஸ்ரீ ஆறுமுகநாவல குருக்கள் அவர்களால் செய்துவைக்கப்பட்டது. புதிய ஆலயத்தை அமைப்பதற்கு அப்போதைய பரிபாலனசபை தலைவராக இருந்த திரு  செல்வராசா  சிவசந்திரபோஸ் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது,  2003ம் ஆண்டு தைமாதம் பஞ்சமுக விநாயகர் பிரதிஸ்டை இடம்பெற்றது.

அண்மையில் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம் ஒன்று.
ஆலய கருவறையில் இருந்து  விநாயகபெருமான்  எழுந்தருளி நடந்தது போன்று கருவறையில் இருந்து நந்திபலிபீடம் அமைந்துள்ள இடம்வரை விநாயகபெருமானின் பாதச்சுவடுகள்  காணப்பட்டது. அப்பாதசுவடுகள் தற்போதும் ஆலயத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதற்க்குமுன்னரும்  இவ்வாறு  பல அதிசயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இறைவனின் அற்புதத்தையும் ஆலயத்தின் மகிமையையும் எடுத்துக்காட்டுவதாக திகழ்கின்றது.

ஆகம முறைபடி அமைக்கபட்ட புதிய ஆலயத்தின் அமைப்பு.

"ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தாந்திருக் கோயில்க ளெல்லாஞ்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே"


என்பது திருமூலர் திருவாக்கு.  இங்கே சாற்றிய பூசைகள் என்பது சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறைகள் என்று பொருள்.
சிவாகமங்களில் விதிக்கபட்ட முறைகளின்படி ஆலயத்தின் அமைப்பானது மனிதன் ஒருவன் நீட்டி நிமிர்ந்து  படுத்திருப்பதை ஒத்தது. அந்த வகையில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயமும் அமைந்துள்ளது.  மூலஸ்தானத்தில் சித்திவிநாயகரும். சபைமண்டபத்தில் ஐந்துமுகவிநாயகரும். ஆனைமுகஎழுந்தருளி விநாயகர் சகிதம் ஞனவேலும் காணப்படுகிறது. மற்ரும்  வைரவர், சண்டேஸ்வறருக்கும்  சிறிய ஆலயங்களும் உயர்ந்த மணிக் கோபுரமும், மடப்பள்ளி, களஞ்சியஅறையும் காணப்படுகின்றது. ஆலய தலவிருட்சமாக ஆலய உள்வீதியில் காணப்படும் வேப்பமரம் கருதபடுகிறது ஆலயவெளிச் சூழல் எந்தநேரமும் அமைதிநிறைந்து காணப்படும்.
ஆயயத்திலிருத்ந்து  200m தூரத்தில் இலுப்பை மரத்தின் கீள் வீற்றிருக்கும் காளி அம்பாளின்  ஆலயமும் அமைந்துள்ளது.

பூஜைகளும் விழாக்களும்:
தினமும் இரண்டு நேர நித்திய பூஜையும்  ஆவணி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்திக்கு முன்பு பன்னிரண்டு நாட்கள் அலங்காரதிருவிழாவும். மாதம் தோறும்  வளர்பிறை சதுர்த்தியும். மற்றும் பிள்ளையார் கதை, திருவெம்பாவை  என்பன  சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. விசேட பண்டிகை தினங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று  வருகிண்றன.

அலங்கார உற்சவ இறுதி நாளாகிய ஆவணி சதுர்த்தி தினத்தன்று பஞ்சமுக விநாயக பெருமான் பஞ்சமுக மஞ்சத்தில் வீதிவலம் வரும் கண்கொள்ளா காட்சியை கண்ட அடியவர் ஒருவர் மெய்மறந்து பாடியபாடல்.பஞ்சமுகம் கொண்டு பாவங்கள் அகற்றிட

அலங்காரம் நிறைந்த எங்கள் ஊர்  ஐங்கரன்
பஞ்சமுகமஞ்சம் தன்னில் ஆடிஆடிவருகையில்
அடியேன் அகங்காரமற்ருநின்றேன்.

சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திற்க்கான இளைஞர்களின் பங்களிப்பு:
சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கான நிதியினை சேகரிப்பதிலும், ஆலயத் தொண்டு செய்வதிலும் இளைஞர்கள் முன்னின்று செயல்பட்டு வருகின்றனர்.  அத்துடன், அலங்கார உற்சவ இறுதி நாளில் விநாயக பெருமான் வீதிவலம் வருவதற்கான பஞ்சமுக திருமஞ்சம் 2006 ஆண்டு  இளைஞர்களின் முயற்ச்சியினால் அமைக்கபட்டது. மற்றும்  ஆலயத்தில் கூட்டு வழிபாடு நடாத்தியும், சமயப் பிரசங்கங்கள் செய்தும் ஊர்மக்களை ஆசார சீலர்களாகவும், சயப்பற்றுள்ளவர்களாகவும் வாழ வழிகாட்டி வருகின்றனர்.

"உள்ளது போகாது: இல்லது வாராது" என்று நம்பும் இறை உணர்வாளர்கள் அன்பே வடிவான ஆண்டவனை ஆலயத்தில் தரிசித்து, அன்புருவாக நெகிழ்ந்து நிற்போம். ஆன்மாக்கள் அன்பில் லயிக்கும் ஆலயமே நம் அழுக்குகள் களையும் பலிபீடம்.

ஐங்கரனை மனம் உருக தொழு மனமே
உன் ஐம்புலனும் ஐங்கரன் பாதத்தில்
வைத்திடவே நீர் கேட்பதெல்லாம்
நினைப்பதெல்லாம் அருளிடுவான்
சாந்தை ஊர் சித்தி விநாயகனே.

ஓம் விநாயகா ஓம்

Page 46 of 46