Saturday, Sep 23rd

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

ஆலயங்கள்

ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கோயில் மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் - 2017

E-mail Print PDF

Image may contain: one or more people and outdoor

ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கொயில் மஹோற்சவ விழா விஞ்ஞாபனம் - 2017

அன்னை ஶ்ரீ இராஜ மகாமாரி அம்பிகை பெரும் திருவிழா 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்ற உற்சவதுடன் ஆரம்பமாகி 18 தினங்கள் பெருவிழா நிகழ அம்பிகையின் பேரருள் கூடியுள்ளது என்பதனை அறியத்தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

கொடியேற்ற உற்சவம்: 09.06.2017 வெள்ளிக்கிழமை

தேர் உற்சவம்: 24.06.2017  சனிக்கிழமை

தீர்த்த உற்சவம்: 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை

ஆலய அறங்காவலர்கள்

 


காலையடி ஞானவேலாயுதர் இரதோற்சவ விழா - 24.05.2017 - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

Image may contain: one or more people and indoor

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை

காலையடி ஞானவேலாயுதர் தேர் உற்சவம் நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

நன்றி: படங்கள் காலையடி ஞானவேலாயுதர் ஆலயம்

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் "சக்தி வேல்" பெற்று, சூரர் குலத்தை கருவறுத்து, தேவர் குழாத்தைக் காத்தருளி்ய குமரன் ஞான வேலாயுதனைத் துதி செய்தால் மலம் அழிந்து, மெய்ஞான அருள் பெற்று முக்திப்பேற்றையும் அடையலாம்.

காலையடியில் மூலமூர்த்தியாக ஞானவேலும், உற்சவ மூர்த்தியாக வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுக சுவாமியும் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா 14.05.2017 ஞாயிற்றுக் கிழமை பிரதம சிவாச்சாரியார் "குமரகுருமணி" பிரம்மஸ்ரீ. இ. உலகேஸ்வரக் குருக்கள் அவர்களின் தலைமையில் (துவஜாரோகணம்) கொடியேற்ற உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் பெருவிழா நடைபெற திருவருள் பாலித்துள்ளது என்பதனை அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி தேவஸ்தான நிகழ்வுகளும் வளர்ச்சியும்:
கதிகாமத்தில் ஒளிவீசும் வேலனாகவும், நல்லூரிலே அலங்கார வேலனாகவும், செல்வச்சன்நிதியில் அன்னதானக் வேலனாகவும், எழுந்தருளி அருள் பாலிக்கும் முருகன் பண்டத்தரிப்பு - காலையடியில் ஞானவேலனாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இவ் ஆலயங்களில் மூலமூர்த்தியாக ”வேல்” பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளமை சிறப்பாகும். கதிர்காமத்தில் மாத்திரம் ஒளிவீசும் கந்தன்னின் யந்திரமும், வேலும் புனிதப் பேழையுனுள் வைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

காலையடி எனும் சிற்றூர் யாழ்பாணகுடாநாட்டில், பண்டத்தரிப்பு  நகருக்கு தென்-மேற்கு பக்கமாக சுமார் ஒருமைல் தொலைவில்  அமைந்துள்ளது. வடலியடைப்பு - அரசடி வீதி வழியாக மேற்கு திசை நோக்கி செல்கையில் சுமார் ஒரு மைல் தூரத்தில் வரும் நாற்சந்திக்கு அருகாமையில் வீதியோடு அமைந்து இருப்பதனால் எல்லோரும் சுலபமாக தரிசிக்கலாம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ் வாலயத்தை சிறப்பாக ஸ்தாபித்து மகா கும்பாபிஷேகம் செய்து பராமரித்து வந்தவர்களில் நவாலி விதானையார் பரராசசிங்கம் அவர்களும், அவரது சகோதரர் திரு.மு. இராமுப்பிள்ளை அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தெல்லிப்பளை திரு. சபாபதி வேலுப்பிள்ளை அவர்கள் இவ் ஆலய முன் பிரகாரத்தில் "இடும்பனை" பரிவார மூர்த்தியாக பிரதிஸ்ட்டை செய்த  பெரியாராவார். அதனால் இவ் ஆலயம் ”இடும்பன் ஆலயம்” என எல்லோராலும் அழைக்கப்படலாயிற்று.

ஒல்லாந்தர் காலத்தில் சிதைவுற்றிருந்த இவ்வாலயத்தை காலையடியில் வசித்து வந்த செட்டியார் குலத்துதித்த விதானையார் இ.சு காசிநாதன் (புலவர் கா. வேல்முருகன் அவர்களின் தந்தை) அவர்கள் 1934ம் ஆண்டளவில் திருத்தி அமைத்து நித்திய நைமித்திய பூசைகளை சுழிபுரம் குடியிருப்பு அந்தண குருமார்கள் மூலம் செய்வித்து வந்ததுடன், கந்த புராண படன விரிவுரைகளையும் ஆகமவிதி தவறாது செய்வித்து வந்தார்.

விதானையார் இ. சு. காசிநாதன் அவர்களின் மறைவின் பின் அவரின் புதல்வரும், ஆசிரியருமான புலவர் கா. வேல்முருகன் அவர்கள் பொறுப்பேற்று இவ் ஆலயத்தை நிர்வகித்து வந்தார், சிறிது காலத்தின்பின் அவரும் நோய்வாய்ப்பட்டதனால் ஆலயத்தை நிர்வகிக்க யாரும் இல்லாத காரணத்தினால் இவ் ஆலயம் பொதுமக்களினால் தெரிவு செய்யப்பெற்ற பரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பெற்றது.

ஆலய பரிபாலன சபை பொதுமக்களின் நன்கொடைகளைப்பெற்று ஆலயத்தை புனருத்தானம் செய்து, உள்வீதிகளுக்கு கொட்டகைகள் அமைத்தும்; வசந்தமண்டபம், கொடித்தம்பம், சித்திரத் தேர் அமைத்து மஹோற்சவ விழா நிகழ்த்தப்பெறுகின்றது.

தற்போது இவ் ஆலயத்தின் பிரதான வாயிலில் மூன்று தளங்களைக் கொண்ட இராச கோபுரமும், அன்னதான மண்டபமும் அமைக்கப்பெற்று நித்திய நைமித்திய பூசைகள் யாவும் கிரமமாக நடைபெற்று வருகின்றது. இவ் ஆலய மஹோற்சவ காலத்தில் அன்னதானமும் வழங்கப்பெறுவதனால் அன்னதானக் கந்தனாகவும் திகழ்கின்றார்.

இவ் ஆலய மஹோற்சவ விழா கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 9 ம் நாள் வேட்டைத் திருவிழாவும், 10 ம் நாள் சப்பறத்திருவிழாவும் 11 ம் நாள் தேர்த்திருவிழாவும் மிகச் சிறப்பாக பக்தி பூர்வமாக நடைபெற்று வருகின்றது. வேட்டைத் திருவிழாவின்போது ஞானவேலாயுதர் அருகே இருக்கும் அன்னை முத்துமாரி அம்பிகை ஆலயத்தில் அன்னையுடன் சங்கமிக்கும் நிகழ்வும் வேட்டையாடும் உற்சவமும்; தீர்த்தத் திருவிழாவின் போது சம்பில்துறை தீர்த்தக் கரையினில் தீர்த்தமாடி அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் தந்தை சம்புநாதீஸ்வரருடன் சங்கமிக்கும் நிகழ்வும் பெருவிழாவாக கொண்டாடப்பெறுகின்றது.

இவ்வாலயத்திலும், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இருப்பதுபோல் ஆதி முதல் "ஞானவேல்" கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளதுடன். உற்சவ மூர்த்தியாக தெய்வயானை வள்ளி நாயகிகள் சமேத ஆறுமுக வேலவர் அமைந்துள்ளார். இவ் ஆலயத்தின் உள் பிரகாரத்திற்கும் வெளிப் பிரகாரத்திற்கும் இடையே திருக்கேதீஸ்வர "நரசிங்க சுவாமி அன்னதான மடம்" ஸ்தபகர் உயர்திரு. தம்பிப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக சிவன் ஆலயமும் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது

பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பிகை தன் பாலகுமாரன் வேலவனை நாடி ஆண்டு தோறும் வேட்டைத் திருவிழாவின்போதும், மானம்பூ திருவிழாவின்போதும் இவ்வாலயத்துக்கு வருவது வழக்கம். நாவலர் பெருமான் குறிப்பிடும் யாழ்பாணத்து கந்த புராண கலாச்சாரம் இவ்வாலயத்திலும் தழைத்தோங்கியதுடன். அந் நாளில் முதன்மை பெற்ற கந்த புராண உரையாசிரியர் பலர் ஆலய மண்டபத்தில் கூடி இருப்பதும் இசை வல்லாளர் செய்யுள் படிப்பதும் உரையாசிரியர் பயன் கூறுவதும் பக்தர்களின் உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சியாகும்.

காலையடியில் பிறந்து, வளர்ந்து, கொழும்பில் வசித்து வரும் பிரபல சோதிடரும், எழுத்தாளரும், இளைப்பாறிய சுங்க இலாகா பிரதிப் பணிப்பாளருமாகிய; மதிப்பிற்குரிய திருவாளர். ச. அளகரத்தினம் அவர்கள் ஞானவேலன் மீது கொண்ட அளப்பரிய பக்தியினால்; அருணகிரிநாதர் சுவாமிகள் முருகனை வியர்ந்து பாடிய "கந்தர் அனுபூதி" என்னும் தோத்திரத்தில் மறைந்திருந்த பல சம்பவங்களை; ஆழமான பல விளக்கங்களுடன் "அனுபூதிச் செல்வன்" என்னும் நூலாக எழுதி இவ் ஆலயத்தில்தான் ஞானவேலனுக்கு சமர்பணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானவேலாயுதர் எழுந்தருளி இருக்கும் இவ் ஆலயத்தை எம் முன்னோர்கள் "இடும்பன் கோயில்" என அழைத்தார்கள். அதற்கான காரணம் என்ன?
முருகனால் சங்காரம் செய்யப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் ”இடும்பன்” என்னும் அசுரன்.  முருகனால் சூரபத்மன் ஆகியோர் அழிக்கப்பட்ட பின்பு இடும்பன் மாத்திரமே எஞ்சி இருந்து சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் "இடும்ப  வனம்” எனப்பட்டது. இடும்பன் சூரபத்மனைப்போல் அல்லாது முருகனின் அருள்வேண்டி கேதாரமலையில் தவமிருந்த நேரமிது.

அகத்தியர்; இமயமலைச்சாரலில் சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளையும் பூஜித்து வந்திருக்கிறார். அகத்தியரின் இருப்பிடமோ பொதிகைமலை. இமயமலையில் நெடுங்காலம் தங்க முடியாது இருந்தமையால் கிரிகள் (மலைகள்) இரண்டையும் பொதிகை மலைக்கு எடுத்து செல்ல அகத்தியர் விரும்பினார்.

எனவே கேதாரமலை வரை இருமலைகளையும் கொண்டு வந்து அதற்குமேல் முடியமையால்  அங்கே அகத்தியர் இளைப்பாறினார். அப்போது, அங்கே தவம் செய்து கொண்டிருந்த இடும்பன்;  அகத்தியரை கண்டதும் ஓடி வந்து வணங்கினான். இடும்பனை ஆசீர்வதித்த அகத்தியர் "யாரை நோக்கி தவம் இருக்கிறாய்?" என்று கேட்டார். சூரபத்மனைப் போல நானும் அழியாமல் இருக்க முருகனை வேண்டி தவமிருக்கிறேன்" என்றான்.

அகத்தியர், "முருகனின் அருள் பெற சுலபமான வழி ஒன்று கூறுகிறேன். சிவகிரி, சக்தி கிரி இரண்டும் முருகனின் பெற்றோர் அம்சம். இவற்றை பொதிகை மலை வரை தூக்கி வந்து உதவினால் நீ முருகனின் அருள் பெறுவாய்" என்றார். இடும்பன் மலைகளைத் தூக்கப் பல விதங்களிலும் முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை.

"முடியவில்லையே" என்றான். அகத்தியர் முருகனின் மூல மந்திரங்களை உபதேசித்தார். இடும்பன் மூல மந்திரங்களை பக்தியோடு உச்சரித்தான். அஷ்ட நாகங்கள் கயிறுகளாக மாறின. பிரம்ம மந்திரம் ஜபித்தவுடன் பிரம்ம-தண்டம் துலா-தண்டமாக மாறியது. கயிறான நாகங்களை துலா தண்டத்தின் இருமுனைகளிலும் உறிகளாக கட்ட சொன்னார்.

மலைகளை மந்திரங்களை சொல்லிக் கொண்டே தூக்கி உறியில் வைத்தான் இடும்பன். திருஆவினன்குடி (பழநி) வரை வந்தாயிற்று. மூச்சிறைத்தது. இரு மலைகளையும் கீழே வைத்து இளைப்பாறினான். பின்தொடர்ந்த அகத்தியரும் திருவாவினன்குடி முருகனை தரிசித்து திரும்பினார். இளைப்பாறிய இடும்பன் மலைகளைத் தூக்கி கொண்டு புறப்பட முயற்சித்தான். மலைகள் நகரவில்லை. மந்திரங்களும் பலிக்கவில்லை.

"மிகவும் பலசாலியாக இருந்தும் உன்னால் தூக்க முடியவில்லையே"
என்ற குரல் கேட்டு இடும்பன் திரும்பி பார்த்தான். மலை மேல் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் கேலி செய்தான்.

ஆத்திரத்துடன் சிறுவன் மேல் பாய்ந்தான் இடும்பன். சிறுவன் நகர, மலை மீதிருந்து உருண்டான். கூடவே இடும்பனின் மனைவி ஓடி வந்தாள். ஆடு மேய்க்கும் சூதுரட்டிக் கம்பு "வேலாக" மாற, சிறுவன் ”குமரனாக” காட்சி தந்தான்.

"முருகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வேலவா, சுப்பிரமண்யா, ஆறுமுகா எனது கணவனின் தவறை மன்னித்தருள வேண்டும். எனக்கு மாங்கல்ய பிச்சை தந்தருள வேண்டும், என கண்ணீர் விட்டு கதறினாள்.

முருகன் அருளினால் இடும்பன் எந்த சேதமுமில்லாமல் எழுந்து வந்தான். இருவரும் முருகனை வணங்கி அவனருள் பெற்றனர்.

"இடும்பா! இந்த மலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இதிலுள்ள மூலிகைச் செடிகள் மக்களின் உடல் பிணி தீர்க்கும். நீ இங்கு காவல் தெய்வமாக இருப்பாய்.

உன்னைப் போல் காவடி தூக்கி வருபவர்களின் குறைகள் உடனே விலகி விடும். உன்னை வணங்கிய பின்பு என்னை வணங்குபவர்களின் கோரிக்கை உடனே நிறைவேறும்" என்று வரமளித்து அகத்தியரையும், இடும்பன் தம்பதியினரையும் ஆசிர்வதித்து மறைந்தான். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் வழிபாடு ஆரம்பமாகியது.

முருகனை வழிபடுவதற்கு முன் இடும்பனை வழிபட வேண்டும் என முருகன் விரும்பியதால், அனேகமான முருகன் கோவில்களில் இடும்பன் வாசலிலேயே காட்சி அளிக்கிறார்.

பழநீ மலையை தரிசிக்கச் செல்பவர்கள் அதன் அருகே அமைந்துள்ள இடும்ப மலையில் எழுந்துளி இருக்கும் இடும்பனை வணங்கிய பின்னரே பழநீ மலை சென்று பழநி ஆண்டவரை வழிபடும் வழக்கம் தற்பொழுதும் இருந்து வருகின்றது. அதனால் போலும் இவ் ஆலய வாசலிலும் இடும்பன் காவற்  தெய்வமாக காட்சி தருகின்றார். அதுவும் சிரஞ்சீவி மூலிகை மரமான நெல்லியின் நிழலில்.

ஆறுபடை வீடு
மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரிக்கிறது. இவற்றில் மலையும் மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான்.

பழநி:
பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது

திருச்செந்தூர்:
கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

திருப்பரங்குன்றம்:
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சுவாமிமலை:
தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார்.  அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

திருத்தணி:
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.    

பழமுதிர்ச்சோலை:
நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.    

முருகக் கடவுளுக்கு  கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?

முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சரவண பவன்
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

ஆறுமுகம்(ன்)
சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

குகன்
மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.

குமாரன்
கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.

கந்தன்
கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.

விசாகன்
விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

வேலன்
வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

குருநாதன்
பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.

சுப்பிரமணியம்
சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.

வேறு சில பெயர்கள்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய


திருச்சிற்றம்பலம்

* சிவனின் நெற்றிக்கண் பொறிகளில் முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்
* உருவாகிய குழந்தைகள் அறுவரும் உமாதேவியாரின் அணைப்பில் ஒருவர் ஆன நாள் - கார்த்திகையில் கார்த்திகை
* சூரசங்காரத்திற்காக அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்
* பத்மாசுரணை அழித்தாட்கொண்ட நாள் - ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்

இவ் மஹோற்சவ காலத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அடியார்கள் அனைவரும்  ஆசார சீலர்களாக விரதமிருந்து;  எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்வோமாக.

ஞானவேலாயுதர் ஆலய மஹோற்சவ விழா நிகழ்வுகளை நிழல் படம் எடுக்கும் பக்தர்கள் தங்கள் படங்களை எமக்கு ( This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ) அனுப்பிவைத்து இவ் நிகழ்வுகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்களும் ஞானவேலாயுதனை தரிசித்து அருள் பெறச் செய்யும் அரும் பெரும் பணியை செய்யலாம். எத்தனை படங்களானாலும் யாரும் அனுப்பிவைக்கலாம். நாம் அவற்றை அவர்களுடைய பெயர் விபரத்துடன் பதிவிலிட்டு உலகறியச் செய்கின்றோம்.

”வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமைக்காக்க”

சுபம்

 


சாந்தை சித்திவிநாயகர் மஹோற்சவ விழா - 2017 முன்னறிவித்தல்.- விளக்கங்களுடன்:

E-mail Print PDF

Image may contain: text

ஆடி மாதத்தில் பௌர்ணமி திதியில் தீர்த்த உற்சவம் நிகழக்கூடியதாக மஹோற்சவ விழாவுக்கான கொடியேற்ற தினம் கணிக்கப் பெறுகின்றது. சுருக்கமாக சொல்வதானால் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனின் தீர்த்த தினத்தில் இவ் ஆலயத்திலும் தீர்த்த உற்சவம் நிகழ உள்ளது. இவ் ஆலயத்தில் 12 தினங்கள் மஹோற்சவ விழா நிகழ்வதால்; அதன் பிரகாரம் இவ் வருடம்:

கொடியேற்றம்: 27.07.2017
தேர்த்திருவிழா: 06.08.2017

தீர்த்தம்: 07.08.2017

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்

வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்

துள்ளியோடும் தொடர்வினைகளே!

அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய

தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட

அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,

நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்கு இனிமையான

அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.

இவ் இல்வாழ்க்கையில் சித்தியும்,  முக்தியும் பெறுவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;

சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று; மிகவும் பழமையும், கீர்த்தியும், நிறைந்து சாந்தைப் பதிதனில்

அருள்பாலிக்கும் சித்திவிநாயகரை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கடாட்சத்தை பெற்று உய்வோமாக

நன்றி

சுளிபுரம்-வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் - 06.02.2017 - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

சுழிபுரம் வடக்கு, பணிப்புலம் காடேறி ஞானபைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் - 06.02.2017

மிகவும் பழமையும், புதுமையும் நிறைந்த காடேறிபைரவர் என அழைக்கப் பெற்ற காடேறிஞான பைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் 06.02.2016 அன்று
காலை 8:30 மணிமுதல் 10:30 மணிவரை அமைந்துள்ள சுபமுகூர்த்த வேளையில் நிகழ்வுற இறையருள் பாலித்துள்ளது என்பதனை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் விழாவின்போது அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து சிவனின் ஒரு தோற்றமாக விளங்கும் ஞானபைரவரின் கும்பாபிஷேக விழாவினை தரிசித்து இஸ்டசித்திகளை பெற்று இன்புற்றிருக்க வேண்டுகின்றோம்.

ஆலய நிர்வாக சபை

06.02.2017 இன்று நிகழ்வுற்ற குப்பாபிஷே நிகழ்வினை தரிசிக்க இங்கே அழுத்துக

கும்பங்கள் எடுத்துச் செல்லும் காட்சி

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும் விளக்கமாக அறிந்து கொள்ள

 

Page 2 of 46