Monday, Feb 19th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் சமயநெறி எம்மோடு என்ன வரும் ? ஆக்கம்: திருமதி. இரஞ்சிதம் கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியை) - கனடா

எம்மோடு என்ன வரும் ? ஆக்கம்: திருமதி. இரஞ்சிதம் கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியை) - கனடா

E-mail Print PDF
http://4.bp.blogspot.com/_bwuUUanIa90/SjjlcC6R4xI/AAAAAAAAAIU/9cjUIQMon4I/s400/Medit1.jpg

ஓம் சாந்தி

எம்மோடு என்ன வரும்? இந்த உடல் வருமா? உடல் சார்ந்த உறவு வருமா? நாம் படித்த படிப்பு வருமா? பெற்ற பட்டம் வருமா? பதவி வருமா? நாம் சேர்த்த பொருள் வருமா? அனுபவிக்கும் அதிகாரம் தான்  கூட வருமா? உண்ணாமலும், உறங்காமலும், உழைத்து உழைத்து ஓடாகிப்போகிறோமே! கூடவே வரப்போவதற்காகவும் கொஞ்சம் உழைத்தாலென்ன? இதனைப் பற்றிய சிந்தனை செயல் வடிவம் பெற்றிருந்தால் நல்லது தான். செய்யவில்லையா? இப்போது கூட  செய்ய முடியும். இங்கு வந்த போது கொண்டு வந்ததும் உண்டு. கடைசியில் கொண்டு போவதும் உறுதி.

மனிதன் தனது சொந்தம் என்று கொண்டாடுவது என்ன என்று பார்ப்போம். அதிலே முதலாவதாக மிக நெருக்கமாக உள்ளது இந்த உடல். இது பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே இருக்கிறது. இரண்டாவது சசீர சொந்த பந்தம். மூன்றாவது செல்வம். நான்காவது படிப்பு, பட்டம், பதவி, மதிப்பு, மரியாதை ஆகியன. இவை எதுவுமே கூட வரப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான். என்றாலும் இவற்றை எவ்வளவு தூரம் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்த உடலைப் பார்த்தோமேயானால் இதற்குக் கடைசியில் என்ன விலை மதிப்பிருக்கும்? எது வரையிலும் உயி்ர் உடலில் இருக்கிறதோ, அதுவரை உடலுக்கு மதிப்பு இருக்கும். ஆனால் உயிர் பிரிந்ததும் இதைப் பிணம் என்றுதான் சொல்வோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடிக்கின்றோம். என்றாலும் இன்று உடல் அலங்காரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம். உடலுக்கு சோப்பு, கிறீம், பவுடர், சாம்பு, எண்ணெய், சென்ரு என எவ்வளவோ செலவிடவும் செய்கிறோம். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை அணிவிக்கிறோம். ஆனால் ஆத்மா பிரிந்து விட்டால் உடலில் எவ்வளவு வாசனைத் திரவியங்களைத் தெளித்தாலும். துர்நாற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

இன்றைய கலியுக வாழ்க்கைப் பயணத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. வெகு சமீபகாலம் வரையிலும் கூட இன்று நடப்பது போல விபத்துக்கள் நடந்ததில்லை. விபத்துகள் நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு விபத்துக்கள் தற்காலத்தில் நடப்பதைப் பார்க்கிறோம். இதற்கு முன் எப்போதாவது அதிசயமாகத்தான் விபத்துகள் நடப்பது உண்டு. இதைக் கேள்வியுற்று அதிர்ச்சியுற்றதும் உண்டு.

ஆனால் இன்று மனிதன் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு விட்டான் என்று சொல்ல முடியும். அந்த அளவுக்கு விபத்துக்கள் நடப்பதால் அது பழகிப் போய்விட்டது. ஆதலால் வாழ்கையில் கொஞ்ச நஞ்சமிருந்த விசுவாசமும் போய்விட்டது. உடலைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பலன்? சுவாசிப்பது, பருகுவது, உண்பது எல்லாமே கலப்படப் பொருள்தானே. பூச்சி கொல்லி மருந்து மூலமாக எல்லா உணவுப் பொருள்களிலும் விஷம் இரண்டறக் கலந்து விட்டது. இது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனுமதிக்குமா? உண்ணும் உணவிலும் ஊட்டமில்லை. செல்கின்ற பயணத்திலும் உத்தரவாதம் இல்லை. இளமையும் நிலையாக இல்லை.

இந்த நிலையில் ஒவ்வொரு வினாடியும் உத்தரவாதமற்ற வினாடிகளாகவே போய்க்கொண்டிருப்பது கண்கூடு. எந்த ஒரு வினாடியிலாவது நாம் செல்லத்தான் வேண்டும் என்பது உத்தரவாதம் உள்ளதாக இருக்கும் போது, செல்லும் போது நாம் உடன் கொண்டு செல்ல என்ன சேமித்து வைத்திருக்கின்றோம்? என்பதைச் சிந்திக்க வேண்டும் அல்லவா?

சரீர சொந்த பந்தத்தை எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது. அதை எவ்வளவோ அக்கறையுடன் அன்பு செலுத்திக் கண்ணுங் கருத்துமாக வளர்க்கின்றோம். நோய் வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கின்றோம். படிக்க வைத்துப் பெரிய நிலையில் வைக்கிறோம். இப்படி எல்லாக் குடும்பங்களிலும் நடப்பதுதான். ஆனால் குழந்தை கடைசிவரை கூடவே இருக்கும் என்றோ அல்லது குழந்தையுடன் மற்றவர்கள் இருப்பார்கள் என்றோ உறுதி சொல்ல முடியுமா? அவரவர் கணக்குப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அ

ப்போது சொந்த பந்தம் கூடவருமோ? யாருமே வரப்போவதில்லை என்பது சர்வ நிச்சயம். இதனைக் கவிஞர் கண்ணதாசனும் "வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?" என்று கூறியிருக்கிறார். எனவே இதைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டுவிட முடியுமா?

இந்தக் காலத்தில் அதிகமாகப் படித்தவர்கள் அநேகராகி விட்டார்கள். எத்தைனையோ ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துப் பட்டம் பெறுகிறார்கள். பதவியும் கிடைக்கிறது. வருமானம் வருகிறது. அந்தஸ்தும் கூடுகிறது. எனினும் இந்த உடலில் உயிர் இருக்கும் வரைதான், இந்தப் பட்டம், பதவி எல்லாமே. பிறகு என்னொரு பிறவி, இன்னொரு படிப்பு, பதவி இதே தொடர்கதைதான். இதைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டுவிட முடியுமா?

வாழ்க்கை நிர்வாகத்திற்குப் பணம் அவசியம். இதற்காக இரவு பகலாக உழைக்கிறோம். பணம் சேர்த்தோம். புது வீடு கட்டினோம். வங்கியில் பணம் சேர்த்தோம். பல ஏக்கர் நிலத்தை வாங்கினோம். தொடர்ந்தும் உழைத்துக் கொண்டே இருக்கிறோம். உடலில் பாதிப்பு உண்டாகலாம். ஏதாவதொரு விஷயத்தில் மனக் கஷ்டமும் வரலாம். என்றாலும் பணம் சேர்க்கும் முயற்சியை விட்டுவிட முடிவதில்லை. இத்தனைக்கும் இடையே ஒருநாள் யோசிக்கவும் செய்தோம். நன்றாகத் தெரியவும் செய்கிறது. இவை எல்லாம் இங்கேயே இருந்துவிடும் எம்மோடு வராது. அப்படியானால் என்ன செய்யலாம்?

இந்தக் காலத்தில் மதிப்பு, மரியாதை வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. இதற்காக எப்படியாவது எத்தனை தடைகள், குறுக்கீடுகள் வந்தாலும்; அதிகாரம், அந்தஸ்தைப் பெற்றுவிடவேண்டும் என்று வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். இப்படிச் சமூகத்தில் அந்தஸ்தும் கிடைத்து விட்டது. எல்லோரும் மதிக்கிறார்கள். நல்லதுதான். ஆனால் கடைசியில் இவை எம்முடன் வருமா? இதுவும் வராதென்றால் வேறென்ன வரும்?

எல்லோரும் அறிந்திருக்கிறோம்; இங்கு வரும் போது தனியாகத்தான் வந்தோம், அப்படித்தான் போவோமென்று. ஆனால் மனிதன் வாழும் காலத்தில் மனம், சொல், செயலில் களங்கமின்றிக் கடமையைச் செய்திருந்தால்; தனக்கும் மனநிறைவு இருக்கும், மற்றவருடைய அன்புக்குப் பாத்திரமாகி இருப்போம். எல்லோரிடமும் அன்புடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டால் அனைவரது ஆசிகளும் கிடைத்திருக்கும். உண்மையில் ஒவ்வொரு செயலும், சுபாவமும், அணுகுமுறையும் தனக்கும், பிறருக்கும் திருப்தி அளிக்கக் கூடியதாக இருந்திருந்தால், இதன் காரணமாக நாம் பெறுகின்ற ஆசிகள் எம்மோடு கூட வரும்.

இவ்வாறு எல்லோரிடமிருந்தும் பெறுகின்ற நல்ல ஆசிகளே உண்மையான பொக்கிஷம். மற்றவர் உள்ளத்தில் நமக்காக உண்டாகும் நல்லெண்ணங்களே உண்மையான பட்டங்கள் ஆகும். உடல் மூலமாக நாம் என்ன தொண்டு செய்தோமோ, அந்த வருமானம் கூட வரும். ஆனால் பொருள் மூலமாக ஆன்மீக முன்னேற்றத்திற்காக, உலக நன்மையின் பொருட்டு பொது நலத் தொண்டு செய்தால், அது கூட வரும். ஸ்தூலமாகக் கிடைக்கின்ற பட்டம், பதவி, மதிப்பு, மரியாதை, பொருள், பண்டம், எதுவுமே கூட வராது. ஆனால் இதன் மூலமாக மக்களுக்கு நல்லது செய்திருந்தால், இதன் காரணமாக அவர்களிடம் உண்டாகும் மனப்பூர்வமான ஆசிகள்தான் பட்டங்களாக கூட வரும்.

எனவே நாம் போகும் போது கொண்டு போகத்தான் வேண்டும் என்பது நிச்சயமாக இருக்கும் போது நாம் நல்லதைச் சேமிப்பதும் அவசியமல்லவா?

திருமதி. இரஞ்சிதம் கந்தையா அவர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியை) பணிப்புலம்

ஓம் சாந்தி


3363.23.02.2016

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS