Thursday, Jul 27th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், சுழிபுரம் - பறாளை ஈஸ்வர விநாயகர் மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் -- கொடி 19.06.2017

சுழிபுரம் - பறாளை ஈஸ்வர விநாயகர் மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் -- கொடி 19.06.2017

E-mail Print PDF
Image may contain: sky, house and outdoor

மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விலம்பித ஸூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்னவிநாயக பாத நமஸ்தே!

சுழுபுரம் - பறாளை அருமிகுகு ஈஸ்வர விநாயகர் மஹோற்ச பெருவிழா 19.06.2017 அன்று கொடியேற்ர உற்சவத்துடன் ஆரம்பமாகி, 29.06.2017 அன்று தேர்த்திருவிழாவும், 30.06.2017 தீர்த்தத் திருவிழாவும் நிகழ இறையருள் கூடியுள்ளது என்பதனை அறியத் தருவதிதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் மஹோற்சவ காலத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அடியார்கள் அனைவரும் உடல், உடை, உள்ளத் தூய்மையுடன்; ஆசார சீலர்களாக, விரதம் அனுஷ்டித்து வல்வினைகளை வேரோடு அறுக்கும் எம்பெருமான் அருள்பெற்று உய்வோமாக!

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம், நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

-விவேக சிந்தாமணி-

 

பறாளை ஈஸ்வரவிநாயகர் ஆலயம்
இலங்கையின் வடபால் சைவமும் தமிழும் செழித்தோங்கி "தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்" என புகழ் பூர்த்த சுழிபுரம் நகரின் வடபால் வயலும் வயல்சூழ்ந்த மருதநிலத்தில் திடலாக அமைந்துள்ள
"பறாளாய்" என்னும் பதிதனில், தொன்மையும், கீர்த்தியும் மிக்க ஆலயமாக திகழ்வதே பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயமாகும்

இலங்கையில் விநாயகர் ஆலயங்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம். விநாயகர் பெரிய ஆலயங்களாக மட்டுமன்றி, மற்றைய தெய்வங்களின் ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், ஆற்றங்கரை, குளக்கரை, மருத மரத்தடி, அரச மரத்தடி போன்ற இடங்களி்லும் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

விநாயகப் பெருமானின் புராதன ஆலயங்கள் பலவற்றின் சுவடுகள் வன்னிப் பகுதிகளிலும், புராதன அநுராதபுரப் பகுதிகளிலும், பொலன்னறுவை, தெய்வந்துறை முதலான இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய வற்றின் அடிப்படையில் நோக்கும் போது, ஆதிகாலம் முதல் இலங்கை முழுவதிலும் விநாயகர் வழிபாடு நடைபெற்று வந்திருப்பது புலனாகின்றது. இன்னும் புராதன அமைப்போடும், சிறப்போடும் விளங்குகின்ற ஆலயங்கள் பலவற்றை இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு முதலான பகுதிகளில் காணமுடிகின்றது.

இலங்கையில் உள்ள புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயமானது யாழ்ப்பாணத்தின் வடமேற்கே  சுழிபுரம் என்னும் நகரில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் சோழியபுரம் என அழைக்கபெற்ற பட்டினமே பிற்காலத்தில் சுழிபுரம் என மருவி உள்ளதாக கூறப்படுகின்றது

இலங்கையில் உள்ள புராதன விநாயகர் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக இவ்வாலயம் விளங்குவதுடன், அவர் தம்பி சிவசுப்பிரமணியரும் அவரருகே கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருப்பதும் பறாளாய்பதியின் சிறப்பாகும். “பாறாலயம்பதி” என்ற பெயர் மருவி தற்போது பறாளாய் என அழைக்கப்பெறுகின்றது..

இவ் இரு ஆலயங்களைச் சூழ நெல் வயல்களும், தோட்ட வயல்களும் பசுமையாய் சூழ்ந்திருக்க; அங்கிருந்து வரும் குளிர்ந்த இளம் தென்றலின் தாலாட்டில் அண்ணனும் தம்பியும் ஒய்யாரமாக வீற்றிருந்து தம்மை பக்தியோடு வழிபடும் பக்தர்களின் குறை தீர்த்து பரசவத்தில் திகழ்கின்றார்கள்.  

ஆலயத்தைச் சூழ்ந்துள்ள வயல் வெளியை அடுத்து குடிமனைகள் அமைந்துள்ளன. இவ் ஆலயங்களிற்கு  தெற்கே சுழிபுரமும், தென்-மேற்கே தொல்புரமும், கிழக்கே பணிப்புலமும், வடக்கே தொடர்ந்து மாதகல் வரை வயல் வெளியும், மேற்கேயும் தொடர்ந்து வயல் வெளியும் "திருவடிநிலை" தீர்த்தக் கரை வரை (கடற்கரை வரை) அமைந்துள்ளன. சுழிபுரம், தொல்புரம் பகுதியில் இருந்து இவ் ஆலயத்திற்கு வருபவர்கள் பறாளை வீதியினூடாகவும், பணிப்புலம் பகுதியில் இருந்து வருபவர்கள் இவ் ஆலயத்தை முருகன் வீதியினூடாகவும் வந்தடையலாம்.

இவ்விரு ஆலயங்களுக்கும் தனித்தனியாக தீர்த்தக் கேணிகள் அமைந்துள்ளமையால், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்பைப் பெறுகின்றன.. இவ் ஆலத்தின் வடக்கு பிரகாரத்துடன் இணைந்து முருகன் ஆலயமும் அமைந்துள்ளமை ( வடக்கு வெளிப்பிரகாரம் முருகன் ஆலயத்தின் தெற்குப் பிரகாரமாக அமைந்துள்ளமை மற்றுமோர் சிறப்பு அம்சமாகும்.

பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கும், சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் பொதுவானதாக இருந்த, மிகப் பழமைவாய்ந்ததும், புராண வரலாற்றை நுட்பமாக மரத்தில் செதுக்கப் பெற்ற சிற்பங்கள் நிறைந்ததுமான தேர் பழுதடைந்த காரணத்தால், கொட்டகையில் வைத்து பாதுகாத்து வருவதுடன்  நவீன சித்திரத் தேர் அமைக்கப் பெற்று, அண்ணனும், தம்பியும் தங்கள்தங்கள் மஹோற்சவ காலங்களில் ஒரே தேரில் ஆரோகணித்து அருள் பாலிப்பதும் இங்கு நடைபெறும் சிறப்பம்சமாகும்.

இவ்வாலயம் சோழர்காலத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலமாக இருந்ததாக மரபு வழிச்செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இவ்வாலயத்தில் இந்தியாவில் இருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிப்பாடுகள் நடந்ததாகவும், சோழ தேசத்தில் இருந்து வந்த எழுவர் தங்கள் பரிவாரங்களுடன் பறாளை விநாயகரை தரிசித்துச் சென்றதாகவும் சொல்லப்பெறுகின்றது.

இவ் ஆலயத்தில் தற்பொழுதும் தேவதாரணிய சைவக் குருமார்கள் பரம்பரையில் வந்த சைவக் குருமார்களில் ஒருவரான சின்னத்துரை குருக்கள் பிறைசூடி குருக்கள் அவர்களினால் பரிபாலிக்கப் பெற்றும், பூசைகளும் செய்யப் பெற்றும் வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

பறாளை விநாயகர் மீது இவ் ஊர் மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாழ்கின்றனர். தாம் எக்காரியத்தைச் செய்வதற்கு முன்பும் இவ்வாலயத்தை, தரிசனம் செய்கின்றனர். மக்கள் தாங்கள் தமது வயல்களில் இருந்து பெறும் அறுவடையை முதலில் விநாயகருக்கே சமர்ப்பிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பறாளை விநாயகர் ஆலயத்தை, போர்ததுக்கேயர் (டச்சுக்காரர்) இடிக்கத் தொடங்கினர். அதன் போது போர்த்துகேய படை அதிகாரி ஒருவர் மூல விக்கிரகத்தினை குறிபார்த்த வேளையில் காகம் ஒன்று வந்து, அந்த அதிகாரியின் கண்ணைக் கொத்தி ஆலயத்தை இடிக்க விடாது தடுத்தது என புராணக் கதைகள் கூறுகின்றன.. அதனால், இங்குள்ள பிள்ளையார் "கண் கொத்திக் காக்கைப் பிள்ளையார்" எனவும் அழைக்கப்படுகிறார். அந்த அற்புத வரலாற்றினைப் பறாளை விநாயகர் பள்ளு சிறப்பாக கூறுகின்றது.

இன்னும் இதற்கு சமீபமாக இராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் (சிவபிரான் பாதம் பதித்ததால் எனக் கூறுவாருமுளர்) "திருவடிநிலை" எனப் பெயர்பெற்ற தீர்த்த தலம் அமைந்துள்ளது. இத்தலம்மானது கீரிமலையைப்போல மூர்த்தி தலம் தீர்த்த ஆகிய விசேடங்களை பெற்றதுள்ளது. "திருவடிநிலை" தீர்த்தக் கரையினில் பறாளை விநாயகர், பறாளை முருகன் தீர்த்த உற்சவங்களும், பொன்னாலை வரதராசப் பெருமாள் தீர்த்த உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன.

இத் தீர்த்தக் கரைக்கு கிழக்கு கரையோரமாக “சம்பில்துறை” என்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது. இத் தீர்த்தக்கரையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள், காலையடி ஞானவேலாயுதர், சுழிபுரம் கிழக்கு சம்புநாதீஸ்வரர் தீர்த்த உற்சவங்கள் நடைபெறுகின்றன. சம்பில்துறை தீர்த்தக்கரையில் முற்காலத்தில் பிரபல்யமாக இருந்த சம்புநாதீஸ்வரர் ஆலயமும், பட்டினமும், துறைமுகமும் இயற்கைக் அனர்த்தங்களால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமுத்திரத்தில் சங்கமித்தது என்பது வரலாறு.

இவ் ஆலயம் இருந்த இடத்தின் கரையோரமாக பணிப்புலத்தைச் சேர்ந்த “நரசிங்க சுவாமிகளால்” பல வருடங்களுக்கு முன்னர் சம்புநாதீவரர் ஆலயம் அமைக்கப்பெற்று கும்பாபிஷேகமும் நிகழ்த்தப்பெற்று பூசைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அருகாமையில் "சங்கமித்த விகாரை" அமைந்துள்ளது. இங்கு இருந்த துறைமுகத்தில்தான் அசோகச் சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்த வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது.

முற்காலத்தில் இப்பிரதேசத்தை ஆட்சிசெய்த "திசைமழுவன்" என்னும் சிற்றரசன் அரசு செய்த இடம் ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கு சமீபமாக மேற்குத் திசையில் அமைந்துள்ளதாக செவிவழி வந்த கதைகள் கூறுகின்றன.  அந்த இடம் தற்போது "மழுவைக்காடு" என்னும் பெயரால் அழைக்கப் பெறுகின்றது. அந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய "சம்பேசுரன்" என்னும் சிவாலயம் அழிந்து போன நிலையில் காணப்படுகின்றது. அழிவுற்றிருக்கும் இவ் ஆலயத்தை, விநாயகர் ஆலயத்திற்கு மேற்காக திருவடிநிலை தீர்த்தக்கரைக்கு செல்லும் குறுக்குப் பாதையில் இப்போதும் காணலாம்.  

ஈஸ்வர விநாயகர் ஆலயம் தற்போழுது புனநிர்மான திருப்பணி வேலைகள் செய்யப்பெற்று, பிரதான வாயிலில் இராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றது,.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தின் மீது  நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பறாளை "விநாயகர் பள்ளு" என்னும் பிரபந்தமொன்றைப் பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் பறாளை விநாயகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிந்து, விருத்தம், கல்ப்பா, ஆகிய யாப்புக்களால் அந் நூல்பாடப்பட்டதாகும்.

விநாயகரை வணங்குவது எப்படி?

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தயே"

விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து;  இடக்கையால் இடது நெற்றியிலும்(நெற்றியின் ஓரத்திலும்), வலக்கையால் வலது நெற்றியிலும்(நெற்றியின் ஓரத்திலும்) மூன்று அல்லது ஐந்து முறை குட்டுகளிட்டு;

வலக்கையால் இடது காதையும், இடக்கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு இடது கை மார்பைத் தொட்டவாறும், வலது கை வெளிப்பக்கமாகவும் இருக்கும்படி “ஓம் விநாயகா நமக” என்ற மந்திரத்தை சொல்லியபடி) மூன்று முறை தோப்புக் கரணம் போட்டு   தோத்திரங்கள் பாடி வணங்கி தம் குறைகள்தீர வேண்டுதல் செய்தல் வேண்டும்.

இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது; எமது உடம்பின் மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்பெறுகின்றது.

அத்தோடு முன்னொரு காலத்தில் விநாயகப் பெருமான் காக்கை உருவெடுத்து அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார்.

தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். நெற்றியில் குட்டி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை வணங்கினால் நாம் அறியாது செய்த பாவங்கள் அற்றுப் போய்விடும் என்பது ஐதீகம்.

விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

இத் தீர்த்தக் கரையினில் பறாளை ஈஸ்வர விநாயகர், பறாளை சிவசுப்பிரமணியர், பொன்னாலை வரதராஜப் பெருமாள் தங்கள் தங்கள் தீர்த்தோற்சவ காலத்தில் இவ் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி சமுத்திர தீர்த்தம் ஆடுவது வழக்கம். அதற்காக இத் தீர்த்தக் கரையினில் விசாலமான பூஜை மண்டபம் ஒன்று எம்முன்னோர்களல் அமைக்கப்பெற்றிருந்தது. அத்துடன் இத் தீர்த்தக் கரையினில் "வாகை வைரவர்" எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார். தீர்த்த உற்சவ காலங்களில் இங்கு வரும் அடியவர்கள் பொங்கல் இட்டு பூசைகள் செய்து வாகை வைரவரை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

தற்பொழுது அங்கு இருந்த ஆலயமும், பூஜை மண்டபமும் முற்றாக சேதமுற்றிருப்பதை கீழே உள்ள படங்களில் காணலாம்

நன்றி

பறாளை விநாயகர் பள்ளு
காப்பு
தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்வாழ் ஐங்கரன்மேற்
பல்வளஞ்சேர் பள்ளினிசை பாடவே – வில்வழங்கு
மையாழிக் கண்ணன் மலர்க்கண் வளர்ந்ததிருக்
கையாழிக் கண்ணனே காப்பு.

துதி
விநாயகர்
நந்து தவழ நதிதனி லாம்ப னனிமலருஞ்
சுந்தரஞ் சேரும் பழனப் பறாளையிற் றோன்றுசுடர்
வந்தெதிர் நின்ற கயமுகன் றன்னை வதைத்ததந்த
வைந்து கரப்பிள்ளை யென்னகத் தேநின் றருள்செயுமே.

நடேசர்
சுருதி யின்முத லாகிய காரணர்
துளைபொ லிசுர வாரண மாமுகர்
சுழிபுர நகர் மேவுப றாளையி   லுறைநாதர்
கரும ணிவிழி யாழுமை பாலகர்
கதிரை யின்வடி வேலர்ச கோதரர்
கருணை யின்மத தாரையி னார்பளி   னிசையோதச்
செரும ருவுத்ரி சூலவ ராயுதர்
திரிதி ரிபுர கோபர நாமயர்
திகழி ரணிய மேருச ராசனர்   பணிநாணார்
பொருமு ழுவையி னீருரி யாடையர்
புரிச டைவளை சோமக லாதரர்
பொதுவி னினட மாடிய சேவடி   மறவேனே

சிவகாமியம்மை

தோட்டு வாரிச நான்முகன் பேணிய
தும்பி மாமுக னம்புவி தாங்கிய
சேட்டு மேருவிற் பாரதந் தீட்டிய
தென்ப றாளைப் பரஞ்சோதி யன்னை
கோட்டு வாரணி கொங்கைப் பெருக்குங்
குழற்சு ருக்கு மணிவாய் முருகும்பஞ்
சூட்டு சீறடி யுந்துடி நேரிடை
யுடையு மெங்கணு மென்கணி னின்றவே


''பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே''
“அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது இறை”.  ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்சணா மூர்த்தி, பராசக்தி பரம்பொருளின் இச்சா, கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின்  வடிவமே விநாயகர்.

ஓம்  ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரஜோதயாது

விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் "காணபத்யம்". ஆனால் இந்து மதம் முழுவதற்கும்  பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர். எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் விநாயகர் வழிபாட்டில் விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால், சாணத்தினால், அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையரை எளிதில் உருவாக்கிடலாம். வேறு சின்னம் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து நிற்கும்.இயற்கையின் முறைமைகளைக் காக்கச் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான் என்பது ஐதீகம்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருமந்திரம்

விநாயகரின் முப்பத்திரண்டு தோற்றங்களும் அவற்றின் விளக்கமும்

பிரபஞ்ச சக்தி, காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர். பூமி, காற்று, நெருப்பு, நீர், வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழு வடிவம்மே இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள். "ஒரு கை தனக்கும், ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு ,இரு கைகள் நம்மைக் காக்க"என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

சிவனுக்கு - "ஆல் அமர் செல்வன்" கண்ணனுக்கு  "ஆலிலைப் பாலன்" என்று விருட்ஷங்களை இணைத்து அளைப்பதுபோல் விநாயகனுக்கு "ஆலமர அல்லது அரசமரத்தடி பிள்ளையார்" என அழைப்பார்கள். விநாயகரை மகா கணபதி, ஹரித்ரா கணபதி அல்லது துந்திராஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி, நவநீதி கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்கிற ஆறு வடிவங்களில்
வழிபடுவார்கள்.

முத்கல புராணம் விநாயகரின் எட்டு அவதாரங்களையும், முப்பத்திரண்டு திருவுருவங்களையும் விவரித்து கூறப்பெற்றுள்ளது. எட்டு அவதாரங்கள் என்பது மனிதர்களின் எட்டு பலவீனங்கள் அல்லது அசுர குணங்களை குறிக்கின்றன.
அவையாவன:

1. அகந்தையை வெல்லும் - ஏகதந்தர்;

2. செருக்கை அகற்றும் - தும்ரவர்ணர்;

3. பொறாமையை அழிக்கும் - வக்ரதுண்டர்;

4. மோகத்தை அடக்கும் - மகோதரர்;

5. பேராசையை நீக்கும் - கஜானானர்;

6. கோபத்தை குறைக்கும் - லம்போதரர்;

7. காமத்தை விளக்கும் - விடர்;

8. தற்பெருமையை தணிக்கும் - விக்னராஜா என்பனவாம்.


முப்பத்திரெண்டு திருவுருவங்களும் தோற்றமும்:

1. "ஸ்ரீபால விநாயகர் " குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம், ஒன்றில் மாம்பழம், ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக் "கை"யில் அவருக்கு பிடித்த கொழுக்கட்டை.

2. "ஸ்ரீ தருண விநாயகர்" : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந்த தந்தம், விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3. "ஸ்ரீ பக்தி விநாயகர்" : அறுவடை கால முழு நிலவு போல் ஒளிரும் சாம்பல் நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம், தேங்காய், கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள் உடையவர்.

4. "ஸ்ரீ வீர விநாயகர்"
: வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு,  அங்குசம், மழு, குந்தாலி, சம்மட்டி, சூலம், வாள், சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5. "ஸ்ரீ சக்தி விநாயகர்" : தனது சக்தியரில் (சித்தி, முக்தி) ஒருவரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6. "ஸ்ரீ துவிஜ விநாயகர்": நான்குமுக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை, தண்டம், கமண்டலம், ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7. "ஸ்ரீ சித்தி விநாயகர்": எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி, மாம்பழம், பாசு, கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள், துதிக்கையில் எள்ளுருண்டை.

8. "ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்": பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.

9. "ஸ்ரீ ஷிப்ர விநாயகர்": வரமருளும் விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10. "ஸ்ரீ விக்ன விநாயகர்"
: விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழுக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11.'ஸ்ரீ ஹரம்ப விநாயகர்": சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி. அபயகரம், தந்தம், மலர்மாலை, அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழுக்கட்டை கொண்ட பத்து கரம்.

12. "ஸ்ரீ லட்சுமி விநாயகர்": வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13. "ஸ்ரீ மகர விநாயகர்": மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழுவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14. "ஸ்ரீ விஜய விநாயகர்": மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15. "ஸ்ரீ நிருத்திய விநாயகர்": ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழுக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16. "ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்": இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில், தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17. "ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்": பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18. "ஸ்ரீ வரத விநாயகர்": வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19. "ஸ்ரீ திரயாட்சர விநாயகர்": ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.

20. "ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்": பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.

21. "ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்": மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.

22. "ஸ்ரீ ஏகதந்த விநாயகர்": பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.

23. "ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்": தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24. "ஸ்ரீ உத்தண்ட விநாயகர்": வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம், நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25. "ஸ்ரீ ருணமோகன விநாயகர்": செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.

26, "ஸ்ரீ துண்டி விநாயகர்": நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி. தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.

27. "ஸ்ரீ இருமுக விநாயகர்": இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28. "ஸ்ரீ திரிமுக விநாயகர்":
அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.

29. "ஸ்ரீ சிங்க விநாயகர்": சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்கரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30. "ஸ்ரீ யோக விநாயகர்": யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31. "ஸ்ரீ துர்க்கா கணபதி": அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.

32. "ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்": துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்!
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு: காமார்த்த ஸித்தயே!!

பொருள்: தீர்க்காயுள், விருப்பம், செல்வவளம் ஆகியவற்றை அருளும் பார்வதியின் மைந்தனும், தூய்மையான பக்தர்களின்
நெஞ்சில் வசிப்பவருமானவிநாயகப்பெருமானை தினமும் வணங்குகிறேன்.

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளியோடும் தொடர்வினைகளே!
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட
அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,
நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார்.தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்குஇனிமையான
அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.

இல்வாழ்க்கையில் சித்தியையும்,  முக்தியையும் அடைவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;
சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று;
மிகவும் பழமையும், புதுமையும், நிறைந்த பறாளைப் பதிதனில் அருள்பாலிக்கும் ஈஸ்வரவிநாயகரை
இவ் மஹோற்சவ உற்சவ காலத்தில் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து, பக்தி சிரத்தையுடன் வழிபட்டு,
இஸ்டசித்திகளைப் பெற்று உய்வோமாக

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பணிப்புலம்.கொம்

திருச்சிற்றம்பலம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS