Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள், தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் மஹோற்சவ பெருவிழா - கொடியேற்றம் - 11.08.2018

தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் மஹோற்சவ பெருவிழா - கொடியேற்றம் - 11.08.2018

E-mail Print PDF
Image may contain: sky and outdoor

பன்னிரு புயத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய் போற்றி

முன்னிய கருணையாறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியரிருவர் நீங்காக் கருணை வாரிட்தியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுளிருக்கு மாமணியே போற்றி

தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய விளம்பி வருட மஹோற்சவ விழா 11-08-2018 சனிக்கிழமை பிற்பகல்-04.30 மணிக்கு கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் பெருவிழா நிகழ அருள்பாலித்துள்ளது.

20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும்,

22 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும்,

24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-07.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும்,

25 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

இவ் ஆலய மூலமூர்த்தியாக மட்டுமன்றி உற்சவ மூர்த்தியாகவும் ”ஞானவேலாயுதமாகவே” எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அத்துடன் அவ் வேலாயுதத்தின் மத்தியில் பொட்டுக்கு மேல் முக்கோணமாக வெட்டப் பெற்ற வெறிலை பதியப் பெற்று இருக்கும். தேர் உற்சவத்தின் போதும் முருகனின் ”ஞானவேலே” சித்திரத் தேரினில் ஆரோகணித்து அருள்பாலிக்கின்றது. தேர்த் தினம் செல்வச் சன்னிதியான்; அண்ணர் கணேசரின் தேர் ரதம் முன்னே செல்ல, தாயார் அம்பிகையின் ரதம் பிந்தொடர நடுவினில் சித்திரத் தேரினில் அரோகணித்து அருள் பாலிக்கின்றார்கள்.

இவ் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கலியுகக் கந்தன்; அருட் செல்வம், பொருட்செல்வம், கல்விச்செல்வம், மக்கட்செல்வம் போன்ற மானிடப் பிறப்பில் முக்கியமாக கருதப்பெறும் எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்குவதால் இவ் ஆலயம் "செல்வ - சந்நிதி" செல்வங்கள் எல்லாம் நல்கும் ஆலயம் என பெயர் பெற்றது.

சந்நிதி வேலவன் அடியவர்களின் பசிப்பிணியினைப் போக்கும் அன்னதானக் கந்தனாகவும் விளங்குகின்ற சிறப்பினைக் கொண்டுள்ளான். ஆற்றங்கரையானை நாடி அருள்பெற்ற சித்தர்கள், யோகிகள், பலராவார். ஆற்றங்கரையான் ஏழை எளியவர்களின் ஒப்பற்ற பெரும் தெய்வம். தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அருள்புரிந்து எப்போதும் அவர்களது பசிப்பிணியைப் போக்குகிறான்.

சந்நிதியிலே வீற்றிருக்கின்ற முருகப்பெருமானது ஆலயத்தினை வைத்தியசாலையாகவும் அங்கே வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்ற வேலவனை நோய் தீர்க்கும் வைத்தியனாகவும் கருதி அவன் திருவடிகளை நாடிவரும் அடியவர்கள் திருக்கூட்டத்தினை இவ்வாலயத்தில் காணக்கூடியதாகௌள்ளது

ஆலய வரலாறும் பூஜை முறையும்

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது.

உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள். இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.

ஆகம விதிகட்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகிறது. இங்கே முருகன் ''பூரணம்'' என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கிறார்

இவ் ஆலயத்தில் வெற்றிலை வைத்து பக்திரசக்தி வழிபாடு செய்வதுடன் எழுந்தருளிவரும் எம்பெருமானாகிய வேலின் நடுவில் முக்கோணவடிவில் பொட்டுடன் வெற்றிலை வைத்து வீதி வலம் வருவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. உலகில் வேறு எவ்விடத்திலும் இல்லாத தனித்துவமான வழிபாட்டை கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் முகூர்த்தத்தை பக்திரசக்தி முகூர்த்தம் என்றும் வழிபாடு மானசிக மௌன அன்பு வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இத்திருத்தலம் ஞானலய திருத்தலமாக மிளிர்கிறது .

இன்று செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்த வரலாற்றினை நோக்கின் இன்றைய தோற்றத்திற்கும் ஆரம்பத்திற்கும் காரணகர்த்தாவாக மருதர் கதிர்காமர் என்ற கந்தப்பெருமானது கருணைக்கழல் பற்றிய பூசாரியாருடன் ஆரம்பமாகிய உண்மை தெளிவாகத் தெரிகின்றது.

குருகுலமாகிய வருணகுலத்தில் பரதசாதியில் இடை விடாத தியானவழிபாட்டு மூலம் எம்பெருமானது. பாதாரவிந்தத்தைப் பற்றிய மருதர் கதிர்காமரே இவ்ஆலயத்தில் தோன்றி வழிபாடு செய்த பின் இன்று உள்ள அவர்வழித் தோன்றிய சந்ததியினருக்கு வழிபாடுசெய்ய விட்டுச்சென்றுள்ள தெய்வீகப் பொக்க்கிசமாகும்

ஜராவசுமுனிவர் தியான வழிபாடு செய்து தவம் இயற்றிய இடத்தில் முத்தியடைந்தார். இந்த இடம்தான் வல்லிநதிக்கரையில் உள்ள பூவரசம்மரத்தின் அடியாகும் அவ் முனிவர் சமாதி அடைந்த இடத்தில் காணப்பட்ட பூவரசம்-மரமானது பெரியவிருட்சமாகி தொழும் அடியார்களது துன்பத்தை அகற்றும் தெய்வத்தன்மை பெற்றது அம் மரத்தின் அடியிலே தோன்றிய பூவரசுமரமானது இன்னும் இக்கோவில் நடுவில் காணப்படுகிறது

19ம் நூற்றான்டின் முற்பகுதியில் இவ் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த பரதகுலத்தவர்களில் மூத்தவரும் பக்திமானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ் ஆற்றில் மீன் பிடித்து சீவியம் நடத்தி வந்தார். இவர் மீன் பிடிக்கச் செல்லும் முன்னர் இங்கு சமாதியடைந்த பூவரசமரத்தினை வணங்கியே செல்வது வழக்கம் இவர் நாள்தோறும் இவ்வாறு செல்வதன் மூலம் பக்தி மேம்பாட்டினை பெற்றுக்கொண்டு வரலாயினார்.

இவ்வாறு இவரது பக்தி வரலாற்றினை கண்ணுற்ற எம்பெருமானார் ஆற்றங்கரையில் தன்னை நாள்தோறும் நினைந்துருகி வணங்கி மீன்பிடிக்கும் கதிர்காமர் முன் மனித உருவில் தோன்றி கதிர்காமா என்னிடம் இக்கரைக்குவா என அழைத்தார். இதன் பொருள் நீ செய்யும் தொழிலை விடுத்து என்பால் என் பாதார விந்தத்தைப் பணிய என்னிடத்தில் வா என்பதாகும். இதனைக்கேட்ட கதிர்காமர் ஆற்றின் மேலிருந்து கரைக்கு வந்தார். இவ்வாறு வந்துசேர்ந்தவரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தினடியினையும் அதன் அருகில் வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்தினையும் சுட்டிக் காட்டி நீயே எல்லா வகையிலும் ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார்.

முனிவர் சமாதியடைந்த இடத்தில் குரு பூசை செய்யவும் வேண்டும் என பெருமானார் கேட்டதன்படி கதிர்காமரும் அவர்பின்வரும் சந்ததியினரும் பிதிர்க்கடமை போன்று செய்து வரலானார்கள்.. இது செய்யாவிட்டால் மிகுந்த தொல்லைகள் ஏற்படும் எனக்கூறினார். இதனால் அன்றுமுதல் இன்றுவரை இதனைக் கடைப்பிடித்து பூஜைகள்செய்து வருகின்றனர்.

கதிர்காமர் முதலில் ஆலயம் அமைத்து பூஜைசெய்தபின் மற்றைய பங்காளரது காணிகள் யாவற்றையும் கொள்விலையாகவேண்டினார் இதற்கு தோம்பு உறுதி என்பன சான்றாக உள்ளன கதிர்காமரும் அவர் மகனான வேலுப்பின்ளை ஜயரும் மற்றும் பிள்ளைகள் எல்லோருமாக இக்கோயிலை அமைத்து  முதன்முதலில் காலத்தில் எம்பெருமான் கதிர்காமருடன் உறவாடிய காலம் 1824ம் ஆண்டு கோயில் பதிவேடு கதிர்காமரும்
வேலுப்பிள்ளை ஜயரும் மற்றும் கதிர்காமரது பிள்ளைகளும் பனையோலையால் வேயப்பட்ட சிறு கொட்டில் அமைத்து அதில் வழிபாட்டுப் பூஜைசெய்தார்கள்.

இதன் பின் இவ் ஆலயத்தை எம்பெருமான் கூறியபிரகாரம் கட்டி நிற்குண பிரமமாக வைத்து வழிபடத்தொடங்கினார். பெருமான் கூறும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்வதே பெரும்பணி என்றுகூறி கதிர்காமர் பூஜைசெய்து வந்தார் அதன்பின்னர் தனது வழித்தோன்றல்களான பிள்ளைகளுக்கு இங்கு கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகளையும் பூசைமுறைகளையும் உற்சவ முறைகளையும் உபதேச முறையில் கூறினார்.

இவர்களும் தமது பிள்ளைகளுக்கு கூறி சந்ததி சந்ததியாக உபதேச முறை கூறப்பட்டு வந்தது இதன் பிரகாரமே கர்ண பரம்பரையாக கூறப்பட்ட தொண்டுகளை மற்றைய பரம்பரையினரும் கைக்கொண்டு வருகின்றனர் இவர்கள் இக்கோயிலின் சுற்றாடலிலும் சுற்றி உள்ள ஊர்களிலும் ஆசாரமாக புனிதமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது பூசை முறையானது பக்தி மார்க்கத்தின் உச்சஸ்த்தானமாகும் செல்வச் சந்நிதி ஆலயத்தில் அமைர்ந்திருக்கும் ஆற்றங்கரை வேலவனது அருளாட்சிச் சிறப்பை நோக்கினால் செல்வங்கள் பலவற்றை தம்மை நாடி வரும் அடியார்க்கு நல்கி அவர்களது பிறவிப்பிணியை அறுக்கும் திருப்பிரசாதத்தை நாள்தோறும் கொடுத்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.
.
நாள்தோறும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் வரும் அடியார்க்கு கந்தப்பெருமானது கருணைக் கடாட்சமும் கிடைக்கத் தவறுவதில்லை. .செல்வச்சந்நிதிக்குப் போய் செல்வம் எல்லாம் பெறுவீர் என ஓர் சித்தர் கூறினார். அரும் செல்வம் பொருட் செல்வம் கல்விச் செல்வம் பிள்ளைச் செல்வம் இவ்வாறு எண்ணிறைந்த செல்வங்களை வேண்டுவார் வேண்டுவதை ஈய்ந்தவண்ணம் இருக்கிறார்

இவர் ஒரு அருட்கொடை வள்ளல் இவர் பசிப்பிணி அறுப்பதில் அன்னதானக் கந்தனாகவும் காட்சி தருகிறார். இக்கோயிலைச்சுற்றி ஏறக்குறைய 45 மடங்கள் உள்ளன இவற்றில் அன்பர்கள் தம் நேர்த்தி மூலம் அன்னத்தை தானமாக கொடுக்கின்றனர்.

தீராத நோய்களை தீர்ப்பதில் கல்லோடைக் கந்தன் பெரும் வைத்தியராக காட்சியளி;க்கின்றார். நோயுற்றவர்கள் இங்கு வந்து இவ்வாற்றில் மூழ்கி பிறவிப்பிணியை அவன் கழல் பற்றி கசிந்துருகிக் கேட்க அவர்களது தீராத்துன்பங்களை தீர்த்து வைக்கின்றான். வைத்தியர்களால் கைவிட்டு மருந்தால் மாற்றமுடியாத நோயை தன் திருவருளினால் மாற்றியதை கண்ணுற்ற பக்தி சிரோன் மணி வேதநாயகம் பிள்ளை ஆயுள் வைத்தியர் எல்லாம் கைவிட்டு மாறாத வருநோய்கள் நினதருளா மரு மருந்தாற் போக்கி ஆனந்தமுறுகின்றன என்பார். என பாடியுள்ளார்.

தந்தையுமிலை தாயுமிலை சுற்றமுமிலை என்று வரும் அடியார்க்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுக்கிறார் காசியில் இறக்க முத்தி என்பது போல் சந்நிதியில் ஆயுளை நீக்க வரும் அன்பர்கள் அனேகம். இவர்கள் சந்நிதியில் ஆன்மா ஈடேற்றம் பெறுகிறார். என்று கூறுவதும் மிகையாகாது. மனச்சாந்தி தேடி அடியார்கள் மனச்சாந்தியையும் அவரது திருவருளையும் பெறுகிறார்கள்.

சந்நிதி முருகனது கருணையாவது காந்தத்தை விட கவரும்சக்தி உடையது .அவரது திருவருள் செல்லாத இடமே கிடையாது. இத்தகைய சந்நிதி வேலவன் ஒரு கருணைக்கடல் அவரது கருணைக் கடாட்சம் எளிதில் எல்லோர்க்கும் கிடைக்கக்கூடியது. அவரது அருட் திறனை ஆயிரம் நாவை உடைய ஆதிசேடனாலும் வருணித்து கூறமுடியாது. பரந்து கிடக்கும் பார் வெளியில் பரம் சோதியாக பூரணத்துவமாக பொலிந்து விளங்குகிறார் செல்வச்சந்நிதிக் கந்தப்பெருமான்.

இப்புனித ஆலயத்தைச்சூழ தற்போது 15 மடாலயங்கள் மூலம் ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்க்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

இவற்றுள் தகர மடம். (ஆலயத்தின் வடக்கு பக்கத்தில்) திரு. வி. தெய்வேந்திர ஐயர் அவர்களாலும்,

வைத்திலிங்கம் மடம் (ஆலயத்தின் வடக்கு பக்கத்தில்)
திரு. த. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களாலும்,

செல்லையா ஐயர் மடம் (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)
திரு.பொ.புவனேந்திர ஐயர் அவர்களாலும்,

கந்தசாமி ஐயர் மடம் (ஆலயத்தின் தெற்கு பக்கத்தில்)
திரு. க. உலககுருநாத ஐயர் அவர்களாலும்,
ஆலய உரிமையாளர்கள் என்ற வகையிலும் நடாத்தப்படுகின்றன.

சந்நிதியான் ஆச்சிரமம். (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)


அடியார் மடம். (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)

அரசம்மா மடம். (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)

மணியம் மடம். (ஆலயத்தின் தெற்கு பக்கத்தில்)

வல்லிபுரம் மடம். (ஆலயத்தின் தென்கிழக்கு பக்கத்தில்)

அமுதசுரபி (ஆலயத்தின் தென்கிழக்கு பக்கத்தில்)

போன்ற மடங்களைத் தொண்டர்களும் நடாத்துகின்றனர்.

சகலமும் தருவார் சந்நிதி முருகன்
அவன் தாள் வணங்கி அவன் அருள் பெறுவோம் ''
சுப மங்களம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS