Tuesday, Dec 12th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவ விழா - 2017

வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவ விழா - 2017

E-mail Print PDF
Image may contain: 3 people, outdoor

04.10.2017 அன்று நிகழ்வுற்ற தேர்த்திருவிழாவினை தரிசிக்க thanam kanaga முகநூலை பார்வையிடவும்

வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக சுயம்பு வடிவில் (தானாகவே) தோன்றிய விஷ்ணுவின் ”சுதர்சனச் சக்கரம்” அமைந்துள்ளது. ஆலயத்தில் திருத்த வேலைகளுக்காக பாலஸ்தானம் செய்யப் பெறும்போது கூட இவ் சுதர்சன சக்கரம் பாலஸ்தானம் செய்யப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.

ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திரு விழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்தம்” உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் ”பட்டுத் தீர்த்தம்” உற்சவமும் நிகழ்த்தப்படும்.

இவ் வருடம் இவ்வாலய மஹோற்சவ விழா 20.09.2017 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகியதுடன் 03.10.2017 சப்பறத் திருவிழாவும், 04.10.2017 இரதோற்சவமும், 05.10.2017 தீர்த்த உற்சவமும், மறுநாள் பட்டுத் தீர்த்தவிழாவும் (கேணிநீராட்டு திருவிழா) நிகழ இறையருள் பாலித்துள்ளது.

இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக “சுயம்பு மூர்த்தியாக தோன்றிய கிருஷ்ணரின் சுதர்சனச் சக்கரம்” அமைந்திருப்பதும், அலங்கார மூர்தியாகவும்  ”சக்கரம்” அமைந்திருப்பதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பம்சங்களாகும். இவ் ஆலயத்தை ஏழு தளங்களை கொண்ட சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இராச கோபுரம் பிரதான கிழக்கு வாசலில் அலங்கரிக்கின்றது. இவ் ஆலயம் மூன்று பிரகாரங்களை (வீதிகளை) தன்னகத்தே கொண்டுள்ளது. உள் வீதி முழுவதும் “ரெறாசோ” என்னும் பளிங்கு  பதிக்கப்பெற்று இருப்பதுடன், பரிவார மூத்திகளின் கோயில்களும் அமைக்கப் பெற்றுள்ளன.

இரண்டாவது பிரகாரமானது; “ரெறாசோ” பதிக்கப் பெற்ற அழகாக அலங்கரிக்கப்பெற்ற விசாலமான வசந்த மண்டபத்தினையும், தூண்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. இவ் வீதியின் தெற்கு, மேற்கு, வடக்க வீதிகள்  சீமெந்தினால் அமைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது பிரகாரமானாது; இப் பகுதியின் இயற்கை வளமாக விளங்கும், மெருதுவான மணல் தன்மையும், விசாலமான விருட்சங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. உற்சவ காலங்களில் மாதவானின் அருள்பெற வரும் அடியார்களுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப் பெற்ற அன்ன சத்திரங்களும், தாகசாந்தி நிலையங்களும், வியாபார நிலையங்களும் வெளி வீதியை அலங்கரிக்கின்றன. 

இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும். இவ்வாறு இறைவன் ஒருவனே என்ற கருத்தின் அடி நாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை வெளிப்படுத்தும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு விபூதியும் திருநாமமும் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையைக் கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.

காரணப் பெயர்
வல்லிபுரம் என்ற பெயர் இக்கிராமத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303 இலும் லம்பகர்ணர் ஆட்சி 556 இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.

இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வட மறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமராட்சி எனப்பட்டது. நூலாசிரியரான ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரியவருகிறது. அக்குழுவின் தலைவனாக வல்லியத்தேவன் என்பவன் இருந்ததாகவும் அவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது

வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கண்ணன் வளர்த்த இடமாகவும் கொள்ளப்படுகிறது. இவ்வாறு வல்லிபுரம் என்ற பெயர் வரக்காரணமான பல விடயங்கள் கூறப்பட்டாலும் இப்பிரதேசத்தில் குடியேறிய மக்கள் தெலுங்கர்களாகவும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்ததாக கருதவும் இடமுண்டு.

ஆழ்வார்

ஆழ்வார் என்ற சொல் திருமாலையும் ஆழ்வான் என்ற சொல் சூரியனையும் குறித்து நிற்கிறது. வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இதன் காரணத்தாலும் வல்லிபுரநாதரை வல்லிபுர ஆழ்வார் என்று வழிபட்டிருக்கலாம். அது மாத்திரமல்லாமல் இலங்கையின் வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.

சக்கர வழிபாடு
ஸ்ரீ வல்லிவுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரம் வைத்தே பூசை நடைபெறுவது வழக்கம். சூரிய வழிபாட்டிலும் வழிபாட்டுச் சின்னமாகச் சக்கரம் இடம்பெறுகிறது. இதே வழிபாட்டுச்சின்னம் பௌத்த மதம் ஆதிக்கம் பெற்ற காலத்தில் தர்ம சக்கரமாக மாறியதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் வைணவ குடியேற்றத்தால் திருமாலின் சக்தி வாய்ந்த சக்கர ஆயுதமாக இச்சக்கரம் பூஜிக்கப்படுகிறது.

செவிவழி வந்த கதை வல்லிபுர ஆழ்வார்
வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டிடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது. 4 வரிகளைக் கொண்ட இச்சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பியகுக என இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளம் காணப்படுகிறது. எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்குரிய இடமாகக் கருதப்படுகின்றது.

ஐதீகக் கதை
வல்லிபுர ஆழ்வார் கோவிலின் ஐதீக வரலாறு அற்புதமானது. தற்போது இக் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று (மீன்) துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. கற்கோவள கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கை கூட வில்லை. இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற வல்லி எனப்படும் ”வல்லி நாச்சி” பிள்ளை வரம் வேண்டி பயபக்தியுடன் விரதமிருந்தார் (தவமிருந்தார்). அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவற்றைக் கூறி மறு நாள் ”கற்கோவளம்” எனும் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு சென்று கரையில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார். அப்போது அந்த மீன் (மச்சம்) கடலில் இருந்து துள்ளிக் குதித்து அவர்மடியில் அழகிய குழந்தையாக மாறியது. கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த அடியவர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர்.

களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர். பின்னர்பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது. சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இக்கதை ஐதீகக் கதையாகக் காணப்படுவதனால் அன்று தொட்டு இன்று வரை செவி வழியாகப் பேணப்பட்டு வருகிறது.

பிள்ளையார் வழிபாடு

வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல் வயல்கள் என இயற்கையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர்கள் மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு செல்பவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபட எண்ணுவார்கள் என்பதுவும் இக்கோவிலுக்கு பெருமை சேர்க்கக் கூடிய விடயமாகும்.


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS