Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் பணிப்புலம் மக்களின் வாழ்கை வரலாறும், புலம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பும்

பணிப்புலம் மக்களின் வாழ்கை வரலாறும், புலம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பும்

E-mail Print PDF

பண் - ஒளி ஆண்டுமலர் 2010 ல் பதிவாகியது

பணிப்புலம்: வட-இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் இருந்து சுமார் 14 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். பசுமை, செழுமை மிகுந்த பிரதேசமாக; செழித்து வளர்ந்த மா, பலா, மரங்களும்; வெற்றிலைக் கொழுந்து, கமுகு, புகையிலை, வாழை, மரக்கறித் தோட்டங்களும்; நெல் வயல்களும், பனம், தென்னம் தோப்புகளும்; இதமான கடல் காற்று மிதந்து வரும் இயற்கைச் சூழலும் அமையப் பெற்று இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற கிராமமாக எம் ஊர் விளங்குகின்றது.

வானுயர்ந்த கோபுரத்துடன் அருள் பாலிக்கும் அம்பிகையின் ஆலயம் மத்தியில் அமைந்திருக்க வடக்கே சித்தி விநாயகர் ஆலயமும், கிழக்கே ஞான வேலாயுதர் ஆலயமும், மேற்கே சம்புநாதீஸ்வரர் ஆலயமும் அமைந்து சிவ-சக்தி சமேத விநாயகர், வேலாயுதர் அருள் கடாட்சம் கிடைக்கப் பெற்ற ஒரு கிராமமாகவும் மிளிர்கின்றது.

இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களில் பெரும்பானையானோர் ஆலயப் பணி செய்யும் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதனால் அவர்களுள் பெரும் பான்மையானோர் ஆலயத்தொண்டு செய்வதையே தமது பரம்பரைத் தொழிலாக கொண்டு “இறைபணி” செய்து கொண்டிருந்தார்கள் என்பது வெளிப்படை.

எம் மூதாதையினர் சைவசமத்தவர்களாகவும், ஆசார சீலர்களாகவும், பண்பு நிறைந்தவர்களாகவும், வாழ்ந்து வந்தமையால்; அக்காலத்தில் சம்பில்துறை துறைமுகத்தை அண்மித்து இருந்த சம்புநாதீஸ்வரர் ஆலயத்தில் தொண்டு வேலைகள் செய்வோர்களாகவும், ஓதுவார்களாகவும்,  பண்டகசாலை பராமரிப்பாளராகவும், வன்னி அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என வரலாறு கூறுகின்றது.

அத்துடன் அவர்கள் சோதிட சாத்திரத்திலும் வல்லுணர்களாகவும் இருந்துள்ளனர். இவை மாத்திரமன்றி ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை கட்டுதல், பூசைக்குரிய பூக்கள் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல், திருவமுது தயார் செய்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள்.

"பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது. பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர்.

அவர்கள் சம்புநாதீஸ்வரர் ஆலயத்தில் பூசைகள் செய்வதற்காக இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்தும் வரவழைக்கப் பெற்ற சிவாச்சாரியர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தமையால், சைவசமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்ததுடன், அவர்கள் பேசிய மொழியையும் கற்றுணர்ந்திருந்தனர். இந்த மொழிவளம் தற்பொழுதும் பணிப்புலம் மக்களிடையே பாவனையில் நிலைத்திருப்பதைக் காணலாம். இம் மொழியானது பழந்தமிழ் மொழியை ஒத்ததாகும். உதாரணமாக "வதி" என்ற சொல் "இருத்தல்" என பொருள் பெறும்.

தற்பொழுதும் வடமாகாணத்தில் பிரசித்தி பெற்று விழங்கும் திருக்கேதீஸ்வரம், நயினை நாகபூசணி அம்பாள், பொன்னாலை வரதராசப் பெருமாள், மூளாய் விநாயகர், முருகன், புளியங்கூடல் மாரிஅம்பாள், பணிப்புலம் முத்துமாரி அம்பாள், சாந்தை சித்திவிநாயகர், காலையடி ஞானவேலாயுதர் போன்ற ஆலயங்களில் சுவாமி (சாத்துப்படி) அலங்கரித்தல், பூமாலை தொடுத்தல், சங்கு வாத்தியம் போன்ற தொண்டுகளை பணிப்புலம் மக்களே செய்து வருகின்றனர். அத்துடன் பிரசித்தி பெற்ற பல ஆலயங்களில் சிவாச்சாரியர்களாகவும் சிறப்புப் பெற்று விழங்குகின்றார்கள்.

எம் முன்னோர்களால் கதிர்காமத்தில் "பொன்னம்பலச் சாமியார் மடம்", "சிவதாஸ் சாமியார் மடம்", "தம்புசாமியார் மடம்" போன்ற அன்னதான மடங்கள் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானமும், தங்குமிட வசதியும் செய்து கொடுத்து வந்ததுடன்; கதிரமலை உச்சியில் "தண்ணீர் பந்தல்கள்" அமைத்து தாகசாந்தியும் செய்து வந்துள்ளனர்.  இது போல் திருக்கேதீஸ்வரத்திலும் "நரசிங்க சுவாமி மடம்", பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும்  "அன்னபூரணி" அன்னதான மடம் அமைத்து அன்னதானம் செய்து “சைவநெறி தளைத்தோங்க” இறைபணி செய்து வந்துள்ளனர்.

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பணிப்புலம் மக்களும் நம் முன்னோர்கள் செய்த பணியை மறக்கவில்லை. கனடா, ஜேர்மனி, நெதலாந்து, போன்ற நாடுகளில் வாழும் பணிப்புலம் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் ஆலயங்களில் வருடாந்த உச்சவ காலங்களில் "தண்ணீர் பந்தல்கள்" அமைத்து தாக சாந்தி செய்து வருகின்றனர்.  கனடாவில் ரொறொன்ரோ நகரில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலயத்திலும், ஐயப்பன் இந்து ஆலயத்திலும்; ஜேர்மனியில் ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் ஆலயத்திலும்; நெதலாந்தில் ஹெல்டெர் நகரில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திலும் திருவிழாக் காலங்களில் பணிப்புலம் மக்களின் தாகசாந்தி சேவை மூலம் “மேன்மை கொள் சைவ நீதி உலகமெல்லாம் விளங்க” பணி செய்து தாம் பிறந்த குலத்திற்கும், கிராமத்திற்கும் பெருமை தேடித் தருகின்னர்.

காலப் போக்கில், தொழில் இன்றி இருந்தோர் விவசாயம், தோட்டம் செய்வதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். படித்தோர் அரச சேவைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புப் பெற்றுக் கொண்டனர். வசதி படைத்தோர் வணிகத்தில் ஈடுபெற்றனர்.  இன்னும் சிலர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிற்குச் சென்று தொழில் வாய்ப்புப் பெற்றனர்.

கல்வியில் வளர்ச்சி
எமது கிராமத்தில் படித்த கல்விமான்கள் பலர் வாழ்ந்திருந்த போதிலும், முதல் அரச உத்தியோகத்தர் என்ற பெருமையை பெரியார் இராமலிங்கம் சின்னையா அவர்கள் பெற்றுக் கொண்டார். அவர் அரச நில அளவை திணைக்களத்தில் நில அளவையாளராக பதவியேற்று, 1947 ம் ஆண்டுவரை கடமையாற்றியுள்ளார். அது மட்டுமன்றி அவரின் மகனான சின்னையா சிவானந்தன் அவர்களே எம்மூரில் இருந்து தொழில் நுட்பக் கல்லூரி சென்ற முதல் மாணவனுமாவார். அமரர். சபாபதி சண்முகலிங்கம் (அதிபர்) அவர்களே எங்கள் ஊரின் முதல் பல்கலைக் கழக பட்டதாரி ஆவார்.

அவரைத் தொடர்ந்து பட்டப் படிப்பை முடித்த பணிப்புலம் மக்களில் பலர் டாக்ரர்கள், சட்டத்தரணிகள், எஞ்ஞினியர்கள், கணக்காளர்கள், தொழில் நுட்ப வல்லுணர்கள், விரிவுரையாளர்கள் போன்ற பல உயர் பதவிகளில் உயர்ந்திருப்பதையும்; இலங்கையிலும், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் பல தொழில் நிறுவனங்களை நிறுவி தொழில் அதிபர்களாக பேரோடும், புகழோடும் சேவை செய்வதையும் காணலாம்.

பணிப்புலம் புலம் வாழ் மக்களின் எதிர்காலமும் புலம் பெயர் வாழ் மக்களின் பங்கும்:

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, எம்மூரில் பலர் இடம்பெயர்ந்து வெளியூர்களிலும், பிறநாடுகளிலும் செல்வச் சிறப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில், இன்னும் பலர் தம் உடமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து சொந்த ஊரிலேயே கஷ்டமான சூழ்நிலையில் ஆதரவற்றவர்களாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதை நாம் பலரும் அறிவோம். அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு மிகக் குறைந்த வருமானத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களால் அவர்களை எதிநோக்கும் தடைகளை தாண்டி ஒரு முன்னேற்றமான பாதைக்கு செல்ல முடியாது தவிக்கின்றனர்.

அவர்கள் உயிருக்கு உத்தரவாதமற்ற, பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பல இன்னல்களுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்தமையால் மனநிலை பெரிதும் பாதிக்கப் பெற்று பித்துப் பிடித்தவர்கள் போன்று காணப்படுகின்றனர். அவர்களுள் தம் கல்வியைத் தொடரமுடியாமலும், ஆரம்பக் கல்வியை பெற முடியாமலும் பெரிதும் பாதிக்கப் பெற்றவர்கள் வளர்ந்து வரும் எமது கிராம வருங்கால சந்ததியினரான இளையோரும், சிறார்களும்தான்.

இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதை நாம் உணர்கிறோம். அவர்களை ஆதரித்து, நல்வழிகாட்டுவோர் யாருமின்றி வெளிநாடுகளில் வாழும் உறவுகளின் ஆதரவை எதிபார்த்து அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நல்லதொரு முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது மக்கள் முன் விரிகின்றது.

தொடர்ந்து கல்வி கற்கமுடியாமல் தடைபட்டுப் போன இளம் சந்ததினருக்கு தொழில் வாய்ப்பு பெறுவதற்கான (தொழிற் பயிற்ச்சி) வழிமுறைகளைச் செய்து கொடுப்பதன் மூலமும், மத்திய பிரிவு சிறார்களுக்கு விடுபட்ட கல்வியைத் தொடர்ந்து படிப்பதற்கான விஷேட பாட வகுப்புகள் ஒழுங்கு செய்து கொடுப்பதன் மூலமும், பாலர்களுக்கு பாலர் பாடசாலைகள் மூலம் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து ஊக்கமளிப்பதன் மூலமும், எமது வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் ஒளிமயமாக்க முடியும் என்பது திண்ணம்.

இந்த கஸ்டமான சூழ்நிலையிலும்கூட தமது திறமையினாலும், விடா முயற்சியாலும், கடந்த வருடம் நடைபெற்ற 5-ம் வகுப்பு புலைமைப் பரிசில் பரீட்சையிலும், ஜீ.சி.ஈ சாதாரண பரீட்சையிலும் எம் ஊரில் மாணவர்கள் பலர் விஷேச சித்திகள் பெற்று எமது கிராமத்திற்கு நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளனர்.

அவர்களுக்கு மேலும் தேவையான வசதிகளை செய்து கொடுத்து ஊக்குவிற்பதன் மூலம் இன்னும் பலரை அதிவிஷேட சித்திகளைப் பெற்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கச் செய்து ஊரைச் சிறப்பிக்கலாம் என்பது அனுபவ உண்மை. ஒரு ஊரின் எதிகால வளர்ச்சிக்கு அங்கு வாழும் மக்களின் கல்வியறிவு முதற்காரணியாகும்.  

தற்பொழுது, பணிப்புலம் கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் செறிவின்றி (பெரும் பான்மையான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறைந்த அளவிலான மக்கள் பரந்து) வாழ்வதால் அவர்களை; ஒரு முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு புதிய “சமூக நலன்புரி சங்கம்” என்னும் கட்டமைப்பை உருவகப் படுத்தி ஒரே குடையின் கீழ் எல்லோரும் பலன் பெறும் வகையில் உதவிகள் வழங்குவதை நடைமுறைப் படுத்த வேண்டிய தேவை எமது கிராமத்திற்கு தற்போது அவசியமாகின்றது.

இச் செயல் திட்டத்திதை நடைமுறைப் படுத்த ஊருக்கு பொதுவானதோர் நிர்வாகம் அமைத்தல் முக்கியமாகும். இவ் நிர்வாகத்தில் ஊரில் உள்ள பெரியோர்களும்; கல்விமான்களும் பங்கு பெறலாம். அல்லது அவர்களுடன் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகத்தில் இருந்தும், காலையடி மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தில் இருந்தும், சாந்தை சித்தி விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தில் இருந்தும், காலையடி ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய நிர்வாகத்தில் இருந்தும் தகுதியான ஒவ்வொருவரோ அல்லது இருவரையோ இணைத்து கட்டமைப்பை உருவாக்கலாம்.

வெளிநாடுகளில் இருந்து உதவிகள் ஒரு பகுதி அமைப்புக்கு மட்டும் சென்றடைந்தால், அல்லது சென்றடைவதால் மற்றைய பகுதியினர் உதவிகள் இன்றி கஸ்டப்படலாம். அதனால் போட்டி, பொறாமை, சண்டைகள் உருவாகி பகுதிகளாகவும், குறிச்சிகளாகவும், குடும்பங்களாகவும் பிரியும் சூழ்நிலையும் உருவாகலாம். அபிவிருத்திக்கான இப் புதிய கட்டமைப்பு செயல் பெறுவதன் மூலம் ஊரின் ஒற்றுமையையும், அபிவிருத்தியையும் வளர்க்க முடியும்.

எனவே, வெளிநாடுகளில் இருக்கும் எம் ஊர்மக்களின் உதவிகள் ஊருக்கு பொதுவான ஒரு கட்டமைப்பை சென்றடைந்தால், ஊரில் உள்ள எல்லாமக்களும், சிறார்களும் பயன்பெறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.. ஒருகிராமத்தின் வளர்ச்சி அக்கிராமத்தின் எல்லாப் பகுதிகளிலும் தோற்றமளிக்க வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சியாகும்.

ஒருதாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் முன்னேற்றமடைய மற்றவர்கள் முன்னேற்றம் எதுவு மின்றி முடங்கிப்போவதா? அதற்கு அவர்கள் வாழும் (குறிச்சி) இடம் ஒரு தடையாக இருக்கலாமா? அல்லது ஒருவர் இயலாது இருந்தால் அவரையும் வாழ வழிசமைத்துக் கொடுத்து வாழ வழிசெய்தல் மற்றைய சகோதரர்களின் கடமையல்லவா?

தாமும் வளர்ந்து,  தனது சமூக மக்களையும் வளர்த்தெடுக்க ஆதரவுக் கரம் கொடுக்கும் மரபு கொண்ட யூத இன மக்கள்போல, புலம்பெயர் வாழ் நாமும் ஒன்றிணைந்து புலம் வாழ் எமது மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அவர்களையும் ஒரு முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். வாருங்கள்.

நன்றி
கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
கனடா
20.12.2010
BLOG COMMENTS POWERED BY DISQUS