Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை சினிமா திரை விமர்சனம் - தென்மேற்கு பருவக்காற்று

திரை விமர்சனம் - தென்மேற்கு பருவக்காற்று

E-mail Print PDF

இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் வாழ்வியல் சார்ந்த கதை

இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் வாழ்வியல் சார்ந்த கதை.தமிழ் சினிமாவில் முதன்முதலாக சொல்லப்பட்ட புவியியல் பற்றிய படம். வயல்பட்டி என்ற செழிப்பான கிராமத்துக்கும் ஜல்லிப்பட்டி என்ற வானம் பார்த்த வறண்ட பூமிக்கும் இடையே கதை நிகழ்கிறது. வயல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய்இ வீராயி.

கணவனை பறிகொடுத்த அவள் தன் ஒரே மகன் முருகன் மீது உயிரை வைத்து இருக்கிறாள். முருகனுக்கு ஆடு மேய்ப்பது தொழில். அம்மா சேர்த்து வைக்கும் காசைத் திருடி நண்பர்களுடன் சாராயம் குடிப்பது பொழுதுபோக்கு.ஒருநாள் நள்ளிரவில் ஆடு திருட வந்த திருடர்களை விரட்டிப் பிடிக்கும் போது அதில் ஒருத்தி பெண் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.

அவள் பக்கத்து ஊரான ஜல்லிப்பட்டியை சேர்ந்த பேச்சி என்பதையும் ஆடு திருடுவது அவர்களின் குடும்பத் தொழில் என்பதையும் கண்டுபிடிக்கிறான். தங்கையை அடையாளம் கண்டு கொண்டான் என்பது தெரிந்ததும் பேச்சியின் அண்ணன்கள் முருகனை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். விவகாரம் போலீஸ் கோர்ட்டு என்று வளர்ந்து பேச்சியின் அண்ணன்கள் இருவரும் ஜெயிலுக்குப் போகிறார்கள்.

இதற்குள் முருகனுக்கும் பேச்சிக்கும் இடையே காதல் ஆழமாக வேர் விடுகிறது. இவர்கள் காதலை முருகனின் தாய் வீராயியும் எதிர்க்கிறாள். பேச்சியின் அண்ணன்களும் எதிர்க்கிறார்கள். இந்த காதல் விவகாரம் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்பது உயிரை உருக்குகிற இறுதிக்காட்சி. இயக்குநருக்கு முதல் பாராட்டு.

இப்படியொரு மண்ணும் மண் சார்ந்த கதையையும் தேர்ந்தெடுத்ததற்கு.. காதலை வைத்திருந்தும் காமத்தைத் துளி கூட காட்டாமலும் தாய்ப்பாசத்தை வைத்திருந்தும் அது முட்டாள்தனமாக இல்லாமல் தாயின் பரிதவிப்பையும் ஒரு சேர உணர்த்தியிருக்கும் அந்த நேர்மைக்கு சல்யூட்.புழுதி பறக்கும் இந்தக் காட்டில் ஒத்தைப் பொம்பளை தானே ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கும் காட்சியில் நடிகை சரண்யாவை மறக்க வேண்டியிருக்கிறது.

சரண்யாவின் நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த படம் இது.மகன் குடிக்கிறானே என்ற கவலையுடன் அவனை விரட்டி விரட்டி அடிப்பது.. குடித்துவிட்டு வயலில் வந்து விழுந்து 'பசிக்குதும்மா’ என்று கேட்பவனிடம் தூக்குவாளியைக் கொண்டாந்து வைத்துவிட்டு கடுகடுப்போடு செல்லும் அந்தக் கிராமத்துத் தாய் போல் பலர் எத்தனையோ ஊர்களில் இன்னமும் இருக்கிறார்கள்.

பையனுக்கு பேசி முடிக்க மிக எளிமையாக சுருக்குப் பையில் இருந்து காசை எடுத்து வெத்தலையை தம்பியிடமே வாங்கி பரிசம் போடும் அந்தக் காட்சியில் எந்த ஆடம்பரமும் இல்லை.ஆடு காணாமல் போன கதையை விசாரிக்க வரும் போலீசிடம் 'ஏய் போலீசு களவாண்டவங்களைப் பார்த்த ஆளு இருக்கு' என்று எகத்தாளமாக சொல்கின்ற அழகு.

மகன் ரத்ததானம் கொடுக்கச் சென்ற இடத்தில் 'எவன்டா என் புள்ளைகிட்ட ரத்தம் எடுக்குறது..?' என்று புரியாமல் சவுண்டு விடும் கோபம். கலைச்செல்வியின் தந்தை வீட்டு வாசலில் வந்து நின்று மண்ணை வாரி இறைத்துவிட்டுப் போகும்போது காட்டுகின்ற அந்த பரிதவிப்பு. பேச்சியின் வீட்டிற்கே சென்று அவர்களுடன் சண்டையிடுவது என்று சரண்யா அசத்தல் ஸ்கோர் செய்திருக்கிறார். இது அவருக்கு 100-வது படம் என்று தெரிகிறது. வாழ்த்துகள் மேடம்.

இன்னும் அசத்துங்கள்.கிராமத்து ஹீரோ என்றால் சீவாத தலை தாடி என்ற ஃபார்முலாவிலிருந்து கொஞ்சம் மாறி ஹீரோ சேது அழகாகத் தலை சீவி ஆனால் தாடியோடு வருகிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு. வரவேற்க வேண்டிய புதுமுகம்.'பேராண்மை' படத்தில் நடித்த வசுந்தராதான் இதில் பேச்சியாக உருமாறியிருக்கிறார். இயக்குநர்களிடத்தில் தங்களை நம்பி ஒப்படைத்துவிட்டால் இது போன்ற அருமையான கேரக்டர்கள் சிறந்த நடிப்பிற்காகக் கிடைக்கும். வசுந்தராவுக்கு உறுத்தாத மேக்கப்பும் அலட்டாத மிகையில்லாத நடிப்பும் மிகச் சரளமாக இதில் வந்திருக்கிறது.

ஹீரோவைப் பார்த்து பயந்து போய் ஓடும் வேகமும் கண்டுபிடித்தவுடன் முகத்திலேயே ஏதோ தெரியாத ஆளிடம் பேசுவது போல பேசுகின்ற தொனியும் இயக்குநரின் திறமையையும் தாண்டி வசுந்தராவின் நடிப்பைக் காட்டுகிறது. அவருடைய முகத்தைக் காட்டியே காட்சிகளை சிற்சில இடங்களில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.குறிப்பிட்டுப் பாராட்டக்கூடிய இன்னொரு நபர் தீப்பெட்டி கணேசன். 'ரேணிகுண்டா'வில் கலகலக்க வைத்தவர் இதிலும் அப்படியே.

ஆயிரம் ரூபாயை சுருக்குப் பையில் வைச்சிருந்தனே காணோமே என்ற சரண்யாவின் பரிதவிப்பைக் கேட்டு 16 குவார்ட்டர் வாங்கிருக்கலாமே என்ற நக்கல் அங்கலாய்ப்பு செம கலகலப்பு. படத்தின் துவக்கத்தில் இருந்தே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் துணையாய் இருக்கிறது. இவர்களைப்போல ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் ஸ்டில்ஸ் குமார்இ காதல் சுகுமார் ஹேமலதா ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

கிராமத்து வாசனைத் தெறிக்கும் அத்தனையையும் பிரேம் டூ பிரேம் வைத்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு கை கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனையும் பாராட்டத்தான் வேண்டும்.கலைச்செல்வியாக நடித்த அந்தப் பெண்ணைத் தேர்வு செய்த இயக்குநருக்கு தனி ஷொட்டு. கருமை என்றாலும் பளிச். தன்னை நிராகரித்த ஹீரோவிடம் திரும்பி வந்து அவருடைய புகைப்படத்தைக் கொடுத்து "இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா" என்று சொல்லி நீட்டுகின்ற இடத்தில் தியேட்டரில் அப்ளாஸ் பறந்தது. 'களவாணிக் குடும்பத்துல பொண்ணெடுக்க உங்கம்மா சம்மதிப்பாங்களா?' என்று பேச்சி கேட்டவுடன் ஹீரோ நிற்க. 'பார்த்தீங்களா நின்னுட்டீங்க.?' என்று திரும்பவும் பேச்சி சொல்கிற காட்சி டாப் கிளாஸ்.

அதேபோல் பேச்சியை ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஹீரோ அழைத்துவிட்டுப் போனவுடன் பேச்சியின் குடும்பத்தினர் ஆளாளுக்கு அவளுக்கு அட்வைஸ் செய்கின்ற சீனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.புது இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தனின் இசையும்இ பின்னணி இசைக்கு பதில்இ படம் முழுக்க வரும் கவிஞர் வைரமுத்துவின் வசீகரமான பாடல் வரிகளும் படத்தின் தரத்தை தூக்கிப் பிடிக்கின்றன.

குறிப்பாக 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலும் அதை படமாக்கியிருக்கும் விதமும் கண்களை குளமாக்குகிற கவிதை. படத்தின் பின்பகுதியில் உள்ள அழுத்தம் முன்பகுதியில் இல்லாதது குறை.ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கேப்டன் ஷிபு ஐசக் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். வெறும் 36 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறாராம் இயக்குநர்.

ஆச்சரியம்தான் எத்தனைத் தெளிவாக திரைக்கதை எழுதி எத்தனை வேகமாக எடுத்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது.
பாலுமகேந்திரா மற்றும் சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பயிற்சி பெற்றிருக்கும் சீனு ராமசாமியின் இத்திரைப்படம் நிச்சயமாக அவரது குருநாதர்களைப் பெருமைப்படுத்தும்..!மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை.
நடிகர்கள்   :சேது, வசுந்தரா, சரண்யா, தாஸ், ஸ்டில்ஸ் குமார், அஜயன், பாலா, தீப்பெட்டிகணேசன்

இசை           :என்.ஆர்.ரஹ்நந்தன்
இயக்கம்     :சீனு ராமசாமி
தயாரிப்பு     :கேப்டன் ஷிபு ஐசக்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS