Saturday, Mar 24th

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் எமது ஊரும் எமது ஊரின் வளர்ச்சிக்கு உதவிய செட்டியார் குலத்துதித்த தர்மவான்களும்

எமது ஊரும் எமது ஊரின் வளர்ச்சிக்கு உதவிய செட்டியார் குலத்துதித்த தர்மவான்களும்

E-mail Print PDF
Image may contain: outdoor

எமது ஊரும், எமது ஊரின் ஆன்மீக வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிய செட்டியார்களான சைவ வைசிக குலத்தைச் சார்ந்த தர்மவான்களும்

ஆக்கம்: தம்பிப்பிள்ளை கந்தையா அவர்கள்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

ஒவ்வொருவருக்கும் அவரைப் பெற்றெடுத்த பெற்றோரே முதலில் வணங்கிப் போற்றப்பட வேண்டியவர்கள். அவ்வாறே அவரவர் பிறந்து வளர்ந்த ஊரும் போற்றி வணங்கப்பட வேண்டியவையே. அந்த வகையிலே நாமெல்லாம் பிறந்து வளர்ந்த எமது ஊராகிய பணிப்புலம் போற்றி வணங்கப்பட வேண்டியதொன்றே. எனவே எமது ஊரைப் பற்றி அறிந்து கொள்ளுமுகமாக மிகவும் சுருக்கமாகச் சிலவிடயங்களைக் கூறுவதோடு எமது ஊரின் ஆன்மீக வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிய செட்டியார் குலத்தைச் சார்ந்த தர்மசீலர்களை; வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினருக்கு அறிமுகம் செய்து அவர்களைப் பாராட்டி, நன்றிக் கடன் தெரிவித்துக் கொள்வதே இதை எழுதுவதன் முக்கிய நோக்கமாகும்,

கதையோ, கட்டுரையோ, காவியமோ எழுதுவோர் தம்முள் இருக்கும் கருப்பொருளை தங்கள் கற்பனைத் திறனால் தாம் விரும்பியபடி எழுதலாம். நான் எடுத்துக் கொண்ட விடயமோ நம் ஊரைப் பற்றியதும், நம் ஊருக்குப் பெரிதும் உதவிய செட்டியார் குலத்தைச் சார்ந்த தர்மவான்கள் பற்றியதுமாகும். இவை உள்ளதை உள்ளபடி எழுதவேண்டிய விடயங்களாகும்.

நான் அறிந்தவரையில் மேற்படி விடயங்கள் பற்றி மிகவும் சுருக்கமாக எழுதுகின்றேன். அவ்வாறு எழுதுகின்ற பொழுது சில தவறுகள் ஏற்பட வாய்ப்புகளும் இருக்கலாம். ஏதாவது தவறுகள் இருப்பின் மன்னிப்பதும், மறப்பதும் மனித இயல்பே. அந்த வகையில் மன்னிப்பீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு.

எமது கிராமமும் அதன் எல்லைகளும்:
பணிப்புலமாகிய எமது கிராமம் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் மேற்கு காரியாதிகாரியின் நிர்வாகத்துக்குட்படிருந்தது. அப்போது அது சங்கானை மேற்கு என வழங்கப்பட்டது. வடலியடைப்பு, சித்தங்கேணி, பண்ணாகம், பணிப்புலம் ஆகிய கிராமங்கள் சங்கானை மேற்கு கிராம விதானையின் அதிகாரத்துட்பட்டிருந்தன.

காலப் போக்கில் குடிசனப் பெருக்கம் காரணமாகவும், அதிகாரப் பரவலாக்கல் முறையினாலும் அந்தந்த ஊர்களுக்கு தனித்தனி கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டனர். எமது ஊரின் சுற்றுவட்டத்தின் எல்லைகளிலுள்ள கிராமங்கள் மாதகல், சில்லாலை, வடலியடைப்பு, பண்ணாகம், சுழிபுரம் என்பனவாகும். இவை அனைத்து அயற்கிராமங்களிலும் எமது குலத்தவர்கள் கணிசமானோர் வாழ்ந்து வருகின்றனர். எமது ஊராகிய பணிப்புலம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை சாந்தை, செட்டிகுறிச்சி, காலையடி, காலையடி-தெற்கு, குஞ்சங்கலட்டி, செருக்கற்புலம், கலட்டி, சாத்தாவோலை, என்பனவாகும். இப் பிரிவுகளில் சாந்தை, செட்டிகுறிச்சி, காலையடி, குஞ்சங்கலட்டி, செருக்கற்புலம், சாத்தாவோலை, ஆகிய பிரிவுகளில் வெவ்வேறு குலத்தவர்கள் குறைந்தளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நீங்கலாக மற்றும் அனைவரும் எமது குலத்தவர்களே.

கல்வி
நாம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், எமது ஊர் மக்கள் கல்வி அறிவில் மிகமிகப் பிந்தங்கியே காணப்பட்டனர். அக் காலகட்டத்தில் எமது ஊரில் கல்வி அறிவு பெறுவதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. அது மாத்திரமன்றி எமது ஊரிலுள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால முன்னேற்றம் கருதி, அவர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்திச் செல்ல வழிகாட்டிகளோ, முன்னோடிகளோ மிகமிக அரிதாகவே இருந்துள்ளனர்.

அந்த சூழ்நிலையில் செட்டிகுறிச்சியில் வாழ்ந்து வந்த அப்பாப்பிள்ளைச் சட்டம்பியார் தமது வீட்டுத் தாழ்வாரத்தில் திண்ணைப் பள்ளி நடாத்தி வந்ததாக அறிய முடிகிறது. அங்கு பண்ணாகத்தில் உள்ள ஒருசிலர் உட்பட, அயற்கிராமங்களிலுள்ளோர் அங்கு சென்று படித்திருக்கிறார்கள் ஆனால் நமது குலத்தவர்கள் எவரும் அவரிடம் பாடம் கேட்டதாகத் தெரியவில்லை.

கால ஓட்டத்தில் நம் சமூகத்தவர்களின் கல்வியில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. அம்முன்னேற்றங் காரணமாக நமது ஊரில் உள்ள பலரும் படிப்பில் ஆர்வம் கொண்டனர். ஆர்வம் காரணமாக கல்வியில் அபரிதமான மாற்றங்கள் ஏற்பட்டன. அயராது கற்றனர். உயர் கல்வியில் தேர்ச்சி பெற்றனர். பட்டம் பெற்றனர். அதன் பலனாக அரசாங்கத்திலும், தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் கிட்டின.

நம் ஊரில் உள்ள அனேகமானவர்கள் அரசாங்கத்தின் பல துறைகளிலும் பணிபுரிந்தனர். வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதாரப் பரிசோத்கர்கள், பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்டவல்லுநர், கணக்காளர், சிறாப்பர், புகையிரத நிலைய அதிபர், தபால் நிலைய அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர், படசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சுங்க அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர், நகர காவலர்கள், கடற்படையினர், தரைப்படையினர், இ.போ.ச. முகாமையாளர், பரிசோதகர்கள், ஓட்டுனர், நடத்துனர், நில அளவைப் பகுதி ஊழியர்கள் போன்ற இன்னோரன்ன அரச பணியாளர்களாலும், சிற்றூளியர்களின் பணிகளாலும், பல தொழில் அதிபர்களின் தொழில் வளர்ச்சியாலும் எமது ஊர் முன்னேற்றம் கண்டது. அதன் காரணமாக எமது கிராமத்தின் மதிப்பும், மரியாதையும் அதிகரித்தது.   

தொழில்:
கடந்த இரண்டு மூன்று தலைமுறையினருக்கு முன் எமது ஊர் மிகவும் ஏழ்மையான நிலையிலேயே இருந்துள்ளது. அக்கால கட்டத்தில் சிலர் கமத்தொழிலையும், வீட்டுத் தோட்டங்களையும் செய்து வந்திருக்கின்றனர். இன்னும் சிலர் அயல் ஊர்களுக்குச் சென்று தேவார பாராயணங்கள்பாடி சைவத்தை வளர்த்ததோடு, சோதிடங்கள் பார்த்தும் அவைகளின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினர். அத்தோடு நம்மூரிலிருந்த பலர் ஆலயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். இலங்கைத் தீவில் பாடல் பெற்ற தலங்கள் மூன்று. அவை திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம் என்பனவாகும். இம் மூன்று தலங்களிலும் நம் முன்னோர்கள் ஆலயப் பணி செய்து வந்துள்ளார்கள்.

இலங்கைத் தீவை எடுத்துக் கொண்டால் இத் தீவின் வடபாலில் எமது ஊரும், கிழக்கில் திருக்கோணேஸ்வரமும், மேற்கில் திருகேதீஸ்வரமும், தெற்கில் கதிர்காமம் அமைந்துள்ளன. ஆகவே எமது ஊரின் ஆலயப்பணி நாட்டின் நாலாபக்கங்களிலும் பரந்து காணப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வரர் மஹோற்சவ விழாக்களில் நம் ஊரவர்களுக்கும் ஒரு விழா உண்டு. அவ் விழாவை நம்மவர்கள் மிகச் சிறப்பாகச் செய்து வந்ததோடு, விழாவுக்கு செல்லும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கியும், தாகசாந்தி செய்தும் வந்தார்கள்.

அடுத்து திருக்கேதீஸ்வர ஆலயத்தை எடுத்துக் கொண்டால், ஆலய மண்டபத்தை அலங்கரித்தல், மூலமூர்த்தி, பரிவாரதெய்வங்கள் அனைத்திற்கும் பூமாலை தொடுத்துக் கொடுத்தல், வீதியுலா வரும் உற்சவ மூர்த்திகளை (சாத்துப்படி) அலங்கரித்தல், பூத்தண்டிகை அமைத்தல், பூசை நடைபெறும்போது சங்கு நாதம் செய்தல், மேலும் சரியைத்தொண்டு போன்ற இன்னோரன்ன அனைத்தும் நம் ஊரவர்களின் பணிகளாகவே இருந்துள்ளன,

இன்னும் தூர இடங்களிலிருந்து வரும் அடியார்கள் தங்கி இளைப்பாறி வழிபாடு மேற்கொள்வதற்கு நமது ஊரரைச் சார்ந்த  சுவாமியாரால் ஆலயத்தின் வடபால் பல அறைகளைக் கொண்ட பிரமாண்டமான ஒரு மடம் அமைக்கப்பட்டிருந்தது. “நரசிங்க சுவாமியார் மடம்” என்னும் நாமத்தைக் கொண்ட அம்மடத்தில் ஆலயம் வரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கியும், தாகசாந்தி செய்தும் வந்தனர்.

மூன்றாவதாக பாடல்பெற்ற தலம் கதிர்காமமாகும். எம் ஊரைச் சேர்ந்த பல சுவாமிமார்களும், சிஷ்யர்களும் ஆலயம் வரும் அடியார்களுக்கு பெரிதும் பணிபுரிந்து வந்தனர். மலையின் அடிவாரம் தொட்டு உச்சிவரை இடையிடையே பல மடங்களையும், பந்தல்களையும் அமைத்து அன்னதானம் செய்து பசிதீர்த்தும்; தண்ணீரே கிடைக்காத மலையில் குளிர்பானம், தேனீர், கோப்பி, மோர் போன்றவற்றை வழங்கி தாகசாந்தி செய்தும் வந்துள்ளனர். இன்னும் காலிச் சுமியார், சம்பில்துறை சுவாமியார் போன்றவர்களாலும் பல பணிகள் செய்தும், செய்யப்பெற்றும் வருகின்றன. காலஓட்டத்தில் கல்வியின் முன்னேற்றங் காரணமாக ஆலயப் பணிகளில் நாட்டம் கொள்ளாது பெரும்பாலானோர் அரசின் பல துறைகளிலும் பணிபுரிந்தும், வர்த்தகத்துறையில் ஈடுபட்டும் வருவது யாவரும் அறிந்ததே.

மேலும் காலத்தின் கட்டாயத்தாலும், நாட்டுப் பிரச்சனை காரணமாகவும் நம்மூரிலிருந்து அதிகமானோர் புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் பரந்துபட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் நம் மூதாதையர் செய்து வந்த தொண்டை மறக்காது தாங்கள் இருக்கும் இடங்களில் உள்ள ஆலயங்களில், மஹோற்சவ காலங்களில் தங்கள் செலவில் அன்னதானமும் தாகசாந்தியும் செய்து வருகின்றனர். கனடாவில் உள்ள றிச்மன்கில் பிள்ளையார் கோவிலிலும், கனடா கந்தசுவாமி கோவிலிலும், கனடா ஐயப்பன் இந்து ஆலயத்திலும் தேர் உற்சவ தினம் தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாக சாந்திசெய்து வருவது குறிப்பிடத் தக்கது.  

மேலும், எமது அயற் கிராமத்தில் வாழ்ந்த நம் குலத்தைச் சார்ந்த குருக்கள் ஒருவரின் பெருமுயற்சியால் ஜேர்மனியில் உள்ள ஹம் (Hamm) நகரில் வேதாகம முறைப்படி காமாட்சி அம்பாள் ஆலயம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இக் காமாட்சி அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழாவுக்கு வருகை தரும் சுமார் இருபத்தையாயிரம் அம்பிகை அடியார்களுக்கு ஜேர்மனியில் வாழும் எம் ஊர் மக்கள் பந்தல்கள் அமைத்து அன்னதானமும், தாகசாந்தியும் தங்கள் சொந்தச் செலவில் செய்து வருகின்றனர். அத்துடன் அந் நகரில் உள்ள விநாயகர், முருகன் ஆலயங்களிலும் அவ்வாறே செய்து வருகின்றனர்.

இனி எமது ஊரின் ஆன்மீக வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேருதவி செய்த செட்டியார் குலத்தைச் சார்ந்த தர்மவான்களைப் பற்றி அறிந்து கொள்வோம். “தெய்வம் பாதி திறமை பாதி” என்பது முது மொழி. தெய்வத்தால் நமக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிட்டுகின்றன. அந்த வாய்ப்புகளைத் தக்க வைத்து அவற்றைத் திறமையால் இலாபகரமாக்கிக் கொள்பவர்கள் பேரதிஷ்டசாலிகள். வாய்ப்புகளை தவறவிடுபவர்கள் துரதிஷ்டசாலிகள். ஆன்மீக அறிவு எப்படி உயர்ந்த செயல்களைச் செய்து, ஆரோக்கியமான வருங்காலத்தை உறுதிப் படுத்திக் கொள்வதென்று நமக்குக் கற்றுத் தருகின்றது. அது நாம் நல்ல காரியங்களைச் செய்வதன் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறது.

அடுத்து கல்வி அறிவு இல்லாத மனித வாழ்கை ஒளியிழந்த வாழ்க்கையாகும். மனித வாழ்வின் முழுமைக்கு முதுகெலும்பாக அமைவது கல்வி அறிவாகும். கல்வி அறிவு என்பது மனித வாழ்வின் பௌதிக சக்தியை ஒழுங்கு பெறச் செய்யவும், அவரை நல்ல சரித்திரவானாக மாற்றுவதிலும் உலகிற்கே ஒரு மனிதரை பிரகாசமானவராக திகழச் செய்வதுமாகும். அறிவின் பலத்தால் ஒரு மனிதன் தேக ஆரோக்கியத்தையும் கடந்து, உயர்ந்த நோக்கில் இயற்கை மற்றும் அனைத்து மனித குலத்தின் மீதும் அன்பு பாராட்டக் கற்றுக் கொள்கிறான்.

“ஆன்மீகமும் கல்வி அறிவும் ஒர் ஊருக்கு இரு கண்கள்” போன்றவை. ஆன்மீகத்துக்கு அடிப்படையாக அமைவது அந்தந்த ஊர்களிலுள்ள ஆலயங்கள், ஆச்சிரமங்கள், மடாலயங்கள், சமய அமைப்புகள் முதலியன. இவைகள் அனைத்தும் அவ்வவ்வூர்களின் அருட்கண்களாகும். கல்வி அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவன அவ்வூர்களில் உள்ள கல்விக் கூடங்களும் கிராமமுன்னேற்றச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், ஒன்றியங்கள், மன்றங்கள், நூலகங்கள் முதலியனவாகும். இவையனைத்தும் அந்தந்த ஊர்களின் கலைக்கண்களாகும். அந்த வகையிலே எமது ஊருக்கு அருட்கண்களாக விளங்கும் ஆலயங்கள் பற்றியும், கலைக் கண்களாக விளங்கும் பாடசாலைகள், மற்றும் கல்வி நிலையங்கள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

முதலில் எமது சமூகத்தவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் துணையாகவுள்ள அருட்கண்களாக விளங்கும் ஆலயங்கள் பற்றி அறிந்து கொள்வோம். எமது ஊரில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம், சாந்தை சித்திவிநாயகர் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம், சாத்தா ஒல்லை சிவன் ஆலயம், கற்புக்கரசி கண்ணகை அம்மன் ஆலயம் என்பன வேதாகம முறைப்படி அமைக்கப்பட்டு பூசை, புனஸ்காரங்கள், மகோற்சவ விழாக்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இவை தவிர காலையடி ஞானவேலாயுதர் ஆலய வளாகத்தில் (ஞான வேலாயுதர் ஆலயத்திற்கு அருகாமையில்) சிவாலயமும், காலையடி தெற்கில் ஞானவைரவர் ஆலயமும், காலையடி மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் வேலாயுதர் ஆலயமும், சுழிபுரம்-வடக்கில் காடேறி வைரவர் ஆலயமும், கலட்டியில் ஞானவைரவர் ஆலயமும், காலையடியில் காளிகாதேவி ஆலயமும், சாந்தையில் காளிகாதேவி ஆலயமும், சில்லாலை தெற்கில் ஞானவைரவர் ஆலயம் போன்ற சிறுசிறு ஆலயங்களுமுண்டு.

இப்பொழுது; எங்கள் ஊரின் மத்தியில் நடுநாயகமாக வானளாவிய இராஜகோபுரத்துடன் விளங்கும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் கிட்டத்தட்ட ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு முன் எம் மூதாதையரினால் ஒரு சிறிய அளவில் முத்துமாரி அம்பாள் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு விளக்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது. அவ்வாலயம் கனகர் அவர்களாலும், பின்னர் அவர்களின் பிள்ளைகளின் பொறுப்பிலும், அதன்பின் நிர்வாக சபையின் பொறுப்பிலும் இயங்கி வந்து தற்பொழுது கனகர் அவர்களின் பேரப்பிள்ளைகளும், பூட்டப்பிள்ளைகளும் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றனர். அவர்கள் கிரியா யோகங்களை முறைப்படி கற்று, குருபட்டம், பெற்றும் பூசைகள் புனஸ்காரங்களைச் செய்து வருவதோடு, நித்திய நைமித்திய மஹோற்சவ விழாக்களையும் சிறப்பாக நடாத்தி வருகின்றனர்.

அடுத்து சாந்தை சித்திவிநாயகர் ஆலயம். செட்டியார் குலத்தைச் சார்ந்த ஆறுமுகம் செட்டியாருக்குச் சொந்தமாக இருந்தது. பின் அவ்வாலயத்தின் பொறுப்பை அவரின் மகன்களான, சைவப் புலவர் பாலகிருஷ்ணன் (ஆசிரியர்) செட்டியார் அவர்களும், செட்டியார் பஞ்சாட்சரம் (குஞ்சர்) அவர்களும், ஏற்று நடாத்தி வந்தார்கள். செட்டியார் பாலகிருஷ்ணன் அவர்கள் இறைபதம் எய்தியதும் அவரின் தம்பியாராகிய பஞ்சாட்சரம் செட்டியார் அவர்கள் ஆலயத்தில் விளக்கேற்றிப் பூசையும் செய்து வந்தார். அவரும், அவரின் குடும்பமும் புலம்பெயர்ந்து கனடா செல்லும் காலகட்டத்தில், அவ்வாலயமும் அதனைச் சார்ந்த நிலப்பரப்பும் சாந்தை வாழ் நம் குலத்தவர்களிடம் கையளிக்கப்பட்டன. அதன் பின் இவ்வாலயத்தில் பல திருப்பணிகள் செய்யப்பட்டு அலங்காரத் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது. மேலும் கொடியேற்றி மகோற்சவ விழா நடைபெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்தும் வருகின்றனர்.

காலையடியிலுள்ள ஞானவேலாயுதர் ஆலயமும் செட்டியார் குலத்தைச் சார்ந்தவரும், நமது கிராமத்து விதானையாரக இருந்தவருமான செட்டியார் காசிநாதன் அவர்களுக்குச் சொந்தமானதாகும். இவ் ஆலயயத்திற்கு ”இடும்பன் கோயில்” என்று இன்னொரு பெயருமுண்டு. செட்டியார் காசிநாதன் அவர்களின் (விதானையாரின்) மறைவுக்குப் பின் அவரின் ஏக புத்திரனான புலவர் வேல்முருகன் B.O.L செட்டியார் இவ்வாலயத்தின் பொறுப்பை ஏற்றுப் பராமரித்து வந்தார். சிலகாலத்தின் பின் அவ்வாலயத்தின் அனைத்துப் பொறுப்புகளையும், காலையடியில் வாழும் நம் ஊரவர்களின் பொறுப்பில் புலவர் வேல்முருகன் ஆசிரியரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பல  திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, நித்திய, நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருவதுடன் மஹோற்சவவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் அதே வளவில் ஞான வேலாயுதர் ஆலயத்திற்கு அருகாமையில் நம் ஊர் சிவபக்தர் ஒருவரால் சிவாலயம் அமைக்கப்பட்டு நித்திய பூசைகள் நடைபெற்று வருகிறது.

அடுத்து இவ்வாலயத்தின் சற்றுத்தூரத்தில் மூலமூர்த்தியாக “வேல்” வைத்து வழிபாடு செய்யும் முருகன் ஆலயமும், அதனைச் சார்ந்த பெருநிலப்பரப்பும் உண்டு. அதுவும் செட்டியார் குலத்தைச் சார்ந்த ஆசிரியர் ஆறுமுகம் கந்தசாமி செட்டியார் என்பவருக்கே சொந்தமானது. ஆறுமுகம் கந்தசாமி செட்டியார் அவர்களின் மறைவிற்குப் பின் அன்ரி என்று அழைக்கப்படும் கந்தசாமி ஆசிரியரின் பாரியார் மற்றும் பிள்ளைகளால் காலையடியில் வாழும் நம்மூரவர்களின் கைக்கு மாற்றப்பட்டுள்ளது. அவ்வாலயமும் புதிதாக அமைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் முன்னெடுக்கப் படுவதோடு, அப்பெரு நிலப்பரப்பில் ஊரின் முன்னேற்றம் கருதி பல ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் செய்வதற்கும் ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டிருபதும்வும் யாவரும் அறிந்ததே.

மேலும் நம் ஊரவர்களுக்குப் பெரிதும் தொடர்புகளை கொண்ட சாத்தா ஒல்லைச் சிவன் ஆலயமும், சுழிபுரம்-கிழக்கு கற்புக்கரசி கண்ணகை அம்மன் ஆலயமும் செட்டியார் குலத்தைச் சார்ந்த விசுவலிங்கம் செட்டியாருக்கே சொந்தமாக இருந்தன. அவையும் செட்டியார் விசுவலிங்கத்தின் மறைவிற்குப் பின் அவரின் ஏக புத்திரியாகிய பராசக்தி அவர்களால் சுழிபுரம் கிழக்கில் வாழும் எம்மூர் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் பல திருப்பணி வேலைகள் நிறைவேற்றப்பட்டு நித்திய, நைமித்திய பூசைகளும் மகோற்சவ விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கண்ணகை அம்மன் ஆலயத்தில் நித்திய பூசையும், அலங்காரத்திருவிழாவும் நடைபெற்று வருகின்றன.

அடுத்து நமது ஊருக்கு மிகவும் தொடர்புடைய கல்விக்கூடங்கள் மூன்று. அவை காலையடி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, சுழிபுரம்-கிழக்கு ஆறுமுகவித்யாலயம், சாந்தை சிற்றம்பல வித்தியாலயம் என்பனவாகும். இம்மூன்று கல்விக்கூடங்களிலும் நமது குல பிள்ளைகள் கல்வி கற்றது மட்டுமன்றி, நமது ஊரின் அனேகமான ஆசிரியர்கள் உருவாகுவதற்கும், மற்றும் அநேக தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதற்குமான அடிப்படைக் காரணிகளாக அமைந்துள்ளன. அ.மி.த.க. பாடசாலையும், ஆறுமுக வித்தியாலயமும் நூற்றாண்டுகளைக் கடந்தும், சாந்தை சிற்றம்பல வித்தியாலயம் ஐம்பதாவது ஆண்டுகளைக் தாண்டியும் மிகச் சிறப்பாக இப்பொழுது இயங்கி வருவது கண்கூடு.

இம் மூன்று கல்விக்கூடங்களும் நிறுவப்பட்டுள்ள நிலப்பரப்புகள் அனைத்தும் செட்டியார் குலத்தைச் சார்ந்த தர்ம சிந்தையுள்ள பெருமகான்களால் நம் குல மக்களின் அறிவு வளர்ச்சிக்காக நன்கொடைகளாக  வழங்கப்பட்டவைகளே.

அ.மி.த,க.பாடசாலை செட்டியார் குலத்தைச் சார்ந்த காசிநாதர் விதானையார் அவர்களின் சொந்தக் காணியிலேயே நிறிவப்பட்டுள்ளது. ஆறுமுக வித்தியாலயமும் அதே குலத்தைச் சேர்ந்த தம்பையா சட்டம்பியார் என்றளைக்கப்படும் இராமலிங்கம் கார்த்திகேசு அவர்களின் சொந்த வளவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பாடசாலையின் மேற்கெல்லையில் உள்ள கண்ணகை அம்மன் ஆலய்த்தின் வடபாலிலுள்ள பெரு நிலப்பரப்பும் செட்டியார் குலத்தைச் சார்ந்த ஆசிரியை மங்கையற்கரசி அவர்களின் பெயரால் சைவ வித்திய விருத்திச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டு, சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தினால் இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்துக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை நிறுவப்பட்ட நிலமும், சற்றுத் தொலைவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமும் செட்டியார் குலத்தைச் சார்ந்த சிதம்பரப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டவையே. இந் நிலப்பரப்புகளை நன்கொடைகளாக கொடுத்த சிதம்பரப்பிள்ளை அவர்கள் அக்காணியயில் அமைக்கப்படும் பாடசாலைக்கு தனது தந்தையின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்ததனால் அப் பாடசாலைக்கு சிற்றம்பல வித்தியாசாலை என்னும் நாமம் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சாத்தா ஒல்லையில் நிறுவப்பட்டிருக்கும் அறநெறிப்பாடசாலையும் செட்டியார் குலத்தைச் சார்ந்த விசுவலிங்கம் அவர்களின் காணியிலேயே நிறுவப்பட்டுள்ளது.

அடுத்ததாக பணிப்புலம் சனசமூக நிலையம்; ஆரம்பத்தில் இந் நிலையம் தற்பொழுது ப.நோ.கூ.சங்கம் இருக்கும், செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அப்பாமுத்து என்பவருக்குச் சொந்தமான இடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அச் சங்கத்தின் தலைவராக செட்டியார் ஆறுமுகம் கந்தசாமி அவர்களே தலைவராக தெரிவு செய்யப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  பின் அந் நிலையம் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய வளவின் தென்கிழக்கு மூலையில் இருமாடிக் கட்டிடமாக அமைக்கப்பட்டு சனசமூக நிலையத்துடன் கிராம முன்னேற்றச் சங்கமும் இணைந்து இயங்கி, அவற்றின் மூலம் பணிப்புலம் வாழ் மக்களின் பல தேவைகள் பூர்த்திசெய்து வருகின்றன.

சாந்தை சனசமூக நிலையமும் ஆறுமுகச் செட்டியாரின் மகனான பஞ்சாட்சரச் செட்டியார் அவர்களால் நம்மவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சித்திவிநாயகர் ஆலய வளவிலும், மறுமலர்ச்சி மன்றம் அதே குலத்தைச் சார்ந்த ஆசிரியர் ஆறுமுகம் கந்தசாமி அவர்களின் முருகன் ஆலய வளவிலும் அமைக்கப்பட்டு, நம் ஊர் மக்களின் வளர்ச்சிக்காக பலதுறைகளிலும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளைச் செய்து வருகின்றன. இம் மூன்று நிலையங்களும் மூன்று ஆலயங்களின் வளவிலேயே நிறுவப்பட்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தான் மட்டும் நலமாய் இருக்க வேண்டும்மென்று எண்ணுகின்ற மக்கள் வாழும் உலகம் இது. மனித நேயம் இக்காலகட்டத்தில் மனிதர்களிடம் தேடிப்பார்க்க வேண்டிய ஒன்றாகி விட்டது. அந்த அளவுக்கு மனித நேயம் மறைந்து கிடக்கின்றது. சுயநலம் மட்டும் முக்கியமென்று நினைத்து சமூகத்தில் செயல்படுகின்றவர்கள் அதிகம் பேர் உள்ளனர். பிறருக்கு உதவவேண்டுமென்ற சிந்தனையிலுள்ள சிலரும் அன்றைய காலகட்டத்தில் இருந்துள்ளனர். அந்தவகையில் செட்டியார் குலத்தைச் சார்ந்த பல தர்மவான்கள், அதுவும் தங்கள் உறவுகளுக்கோ, அல்லது தங்கள் குலத்தவர்களுக்கோ அன்றி இன்னொரு குலத்தவராகிய நம் குலத்தவர்களுக்கு அளப்பரிய உதவிகள் புரிந்துள்ளமை போற்றுதற்குரியது.

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயமும், மற்றும் சிறிய ஆலயங்களாகிய காலையடி ஞானவைரவர், காடேறி வைரவர் ஆலயங்கள் தவிர்ந்த சாந்தை சித்திவிநாயகர் ஆலயம், காலையடி ஞான வேலாயுதர் ஆலயம், மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள வேலாயுதர் ஆலயம், சாத்தா ஒல்லை சிவன் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் அ.மி.த,க, பாடசாலை, ஆறுமுகவித்தியாலயம், சிற்றம்பல வித்தியாசாலை, சாத்தா ஒல்லை அறநெறிப் பாடசாலை,  இன்னும் சாந்தை சனசமூக நிலையம், காலையடி மறுமலர்ச்சி மன்றம், ஆகியன நிறுவப்பட்டிருக்கும் அனைத்து பெருநிலப்பரப்புகளும் செட்டியார் குலத்தைச் சார்ந்த தர்மசீலர்களால் நம் குலத்தவர்களின் கல்வி அறிவு, ஆன்மீக வளர்ச்சிக்காக நன்கொடைகளாக வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களாகும்.

அத்துணை உதவிபுரிந்த தர்மவான்களுக்கு நம் குலத்தவர்கள் எத்துணை கடப்பாடுடையவர்களாகி விட்டோம் என்பது நம் ஊர் அறிந்த உண்மை..

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை     
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்பது வள்ளுவர் கூற்று.

எனவே நம் குலத்தவர்கள் அனைவரும் அத் தர்மவான்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மனமார்ந்த அன்பையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதோடு, அவர்களும் அவர்களின் குலமும் சீரோடும் சிறப்போடும் வாழ்க வளர்க என வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!

மேலும் அப்புண்ணியவான்களின் வாரிசுகள், உறவினர்கள், அக் குலத்தைச் சார்ந்தவர்களை அழைத்து பாராட்டுவிழா ஒன்றை நடாத்தி அவர்களைக் கௌரவிப்பதன் மூலம் நம் குலத்தவரின் நன்றியறிவித்தலை தெரிவித்துக் கொள்ள முடியும். இது எனது தாழ்மையான கருத்தும், வேண்டுகோளுமாகும்

“நன்றி மறப்பது நன்றன்று”

“ஓம் சாந்தி”


ஆக்கம்: தம்பிப்பிள்ளை கந்தையா அவர்கள்
(ஓய்வு பெற்ற ஆசிரியர் - கனடா)6174.24.01.2017

BLOG COMMENTS POWERED BY DISQUS