Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: உலகம் இலங்கை சாந்தை காளிகா அம்பாள் பலஸ்தாபன விழா - 16.09.2011

சாந்தை காளிகா அம்பாள் பலஸ்தாபன விழா - 16.09.2011

E-mail Print PDF

காளிகா தேவி - காயத்தி மந்திரம்
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

சாந்தையம்பதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் காளிக்காதேவி ஆலயம் மிகவும் பழுதடைந்து இருப்பதனால், அதனை ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக அமைக்கும் புனருத்தாபன திருப்பணி வேலைகள் ஆலய பரிபாலன சபையினரால் முன்னெடுக்கப்பெற்றுள்ளது.

இறைவியின் நல்லாசியுடன் ஊர்மக்களின் நன்கொடைகள் பெறப்பெற்று 16.09.2011 வெள்ளிக்கிழமை நல்சுப முகூர்த்த வேளையில் காளிக்காதேவி பாலஸ்தாபனம் செய்யப்பெற்று நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இப் புண்ணிய திருப்பணி இனிதே நிறைவுபெற புலம்வாழ், புலம்பெயர்வாழ் ஊர் மக்களின் பங்களிப்பினை ஆலய பரிபாலன சபை அன்போடு எதிர்பார்த்து நிற்கின்றனர்.

காளிகாதேவி:

“மஹா காளீ; பெருமைமிகு காளிதேவி. நீலநிறம் பெற்றுள்ளதாலும், காலத்தின் வடிவமாகத் திகழ்வதாலும் தேவியைக் காளி என்றனர். சிவபெருமானின் நான்கு சக்திகளில் காளி குரோத சக்தி ஆவாள். காளி என்றும், காலி என்றும் இரு வேறு விதமாகக் கூறுவர்.

தக்ஷன் வேள்வியை அழித்தது போன்ற அரிய, பெரிய செயல்களைப் புரிந்ததால், மகாகாளி என்று சிறப்பித்தனர்.பிரமனைத் துன்புறுத்திய மது, கைடபர் என்ற அசுரர்களை அழிக்கத் தோன்றியவள் காளி. நீலநிறத்துடன், பத்துக் கைகளில் வாள், சக்கரம், கதை, அம்பு, வில், இரும்புத்தடி, சூலம், குத்துவாள், அசுரன் தலை, சங்கு ஆகியவற்றைத் தாங்கிய அச்சந்தரும் கோலத்துடன் தோன்றி மது, கைடபரை காளிதேவி அழித்தாள் என்று தேவிமகாத்மியம் உரைக்கிறது.

காளி என்றால் விரட்டுபவள் என்றும் பொருள் உண்டு. காலனை விரட்டுவதாலும், தீமைகளை விரட்டுவதாலும் காளி என்றனர். தமிழகத்தில் காளி பாலை நிலத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவள். தற்காலத்தில் பல ஊர்களின் கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள்.

வைரபுர மாகாளி கம்பரின் நாவில் தனது வித்தெழுத்தைச் சூலத்தால் எழுதி, அவரை, கல்வியிற் பெரிய கவிஞராக உயர்த்தியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

திருவொற்றியூர் காளி, கம்பர் இராமாயணம் இயற்றிய பொழுது, இரவில் அவருக்கு, தீவட்டி ஏந்தி ஒளி காட்டி உதவியதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. உஜ்ஜயினி காளி, காளிதாசன் நாவில் வித்தெழுத்தை எழுதி அவனை மகாகவியாக உயர்த்தினாள்.

தானே காளிதாசன் என்று கூறிச் சிறப்பித்தவளும் உஜ்ஜயினி காளியே ஆவாள். கொல்கத்தா காளியே காளிகளுள் முதன்மை பெற்றுத் திகழ்கிறாள். இராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சிணேஸ்வரம் காளிக்குப் பூஜை செய்தவர். அவருக்குக் காட்சியளித்து, பரமஹம்சராக உயர்த்தியவளும் அவளே. சென்னை தம்புச்செட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாளை மராட்டிய மன்னன் வீரசிவாஜி தரிசித்து வணங்கினான்

மகாகவி பாரதியாரும் காளிகாம்பாளை வணங்கியவரே. சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாகத் திகழ்பவள். காரைக்காலுக்கு அருகில் உள்ள அம்பகரத்தூர் மதுர காளியும் வரப்பிரசாதியாக விளங்குகிறாள். புதுவைக்கு அருகிலுள்ள வக்கிர காளியம்மன் தற்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்குகிறாள். உஜ்ஜயினியில் சிவபெருமான் மகாகாலர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார். மகாகாலரின் சக்தியாக விளங்குபவள் என்ற பொருளிலும் தேவியை மகாகாளி என்றனர்.

காளிகா புராணம் என்ற உபபுராணம் காளிதேவியின் தோற்றம் முதலான செய்திகள் அனைத்தையும் விரிவாகக் கூறுகிறது. கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியும், கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணத்தின் தட்சகாண்டமும் காளியின் ஆற்றலை வெகுவாகப் புகழ்கின்றன. மகாகவி பாரதியாரின், “யாதுமாகி நின்றாய் காளி” என்று தொடங்கும் பாடல் மிகவும் பிரபலமானது. நவராத்திரி(உஜ்ஜயினி) பாட்டு, காளிப் பாட்டு, காளி ஸ்தோத்திரம், காளிக்கு சமர்ப்பணம், ஹே காளீ!, மகாகாளியின் புகழ் ஆகிய தலைப்புகளிலும் பாரதியார் காளிதேவியைப் போற்றிப் பாடியுள்ளார்.

“யார் தருவார் இந்த அரியாசனம்!” என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரபலமானது.” “கருத்த உன் குழலுக்குக் கவி வேண்டுமா? சிறுத்த நின் இடையாட ஜதி வேண்டுமா?” என்று காளிதாசன் காளியிடம் வினவுவதாகக் கற்பனை செய்து பாடிய கண்ணதாசனின் வரிகளில் எத்தனை அழகு! இலக்கிய நயம்! இசைநயம்!

அபர்ணா “அபர்ணா’ இலையும் புசியாதவள். பர்ணம் என்றால் இலை என்று பொருள். இலையால் அமைக்கப்படும் குடிலை, ‘பர்ணசாலை’ என்பர். தவம் செய்வோர், தங்கள் உணவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு, இறுதியில் தன்னிடம், தானே பறந்து வரும் பழுத்த  இலைச் சருகுகளை மட்டுமே புசிப்பார்கள்.  அம்பிகை பார்வதியாகி, ஐந்து வயதில் தவம் இயற்றியபொழுது, இலையும் புசிக்காமல் கடுந்தவம் புரிந்தாள். அதனால், அபர்ணா என்றனர். பர்ணசாலையும் இல்லாமல் வெட்டவெளியில் அமர்ந்து தவம் புரிந்ததாலும் அவளை அபர்ணா என்றனர்.

“ருணம்’ என்றால் கடன் என்று பொருள். கடன் இல்லாதவள் அபர்ணா. அதாவது, தேவி எவருக்கும் கடன்படாதவள். அவரவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தன் கடமையைச் செய்துவிடுகிறாள். எனவே, அவளுக்கு அருட்கடன்கூட இல்லை! சிவபெருமான் சற்றும் அசைவில்லாமல் விளங்குவதால், மரக்கட்டையைப் போன்றவன் என்ற பொருளில் ஸ்தாணு என்பர். அந்த மரக்கட்டையைச் சுற்றிய கொடி அம்பிகை! ஆனால், அக்கொடிக்கு இலைகள் இல்லை! அதனால் அவள் அபர்ணா.

மகான் பாஸ்கரராயர் ஒரு முறை கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. குறிப்பிட்ட காலத்தில் அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. கடன் கொடுத்தவர் அதனால் சினம் கொண்டார். பாஸ்கரராயரின் இல்லத்தின் முன்னால் நின்று மிகவும் தாழ்வாகப் பேசிவிட்டார். அம்பிகையால் அதனைப் பொறுக்க முடியவில்லை. பாஸ்கரராயரின் மனைவி ஆனந்தியின் உருவெடுத்து, கடன் கொடுத்தவரின் இல்லத்திற்குச் சென்றாள். கடனைக் கொடுத்துவிட்டு, கடன் பத்திரத்தையும் வாங்கிச் சென்றாள். அதன்பிறகு, பாஸ்கரராயர், கடனைக் கொடுக்கச் சென்றபோது, கடன் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்து வியந்தார்! ஏனெனில், அன்று முழுவதும் மனைவி ஆனந்தி அவருடைய பூஜைக்கு உதவிகள் செய்து கொண்டு இல்லத்திலேயே இருந்தாள்! அபர்ணா என்ற நாமத்திற்கு,” “ருணத்தைத்(கடனை) தீர்ப்பவள்” என்று தாம் எழுதிய விளக்கத்தை தேவி மெய்ப்பித்ததை எண்ணி உள்ளம் பூரித்தார் பாஸ்கரராயர்.

இருவகை அசுரர்கள்:
சண்ட முண்ட அஸுர நிஷுதிநீ’ சண்டன், முண்டன் என்ற அசுரர்களைக் கொன்றவள். சண்டனும் முண்டனும் முறையே சும்ப, நிசும்ப அசுரர்களின் படைத் தலைவர்கள். அவர்களைக் காளிதேவி வதம் செய்தாள். தீயசக்திகளிடத்தில் கோபம் கொள்பவள் என்ற பொருளில், இதற்கு முந்தைய நாமம், “சண்டிகா’ என்று போற்றியது. அதற்குச் சான்றாக ஒரு வரலாற்றை இந்த நாமம் எடுத்துக்காட்டியது. பராசக்தியாகிய தேவியின் சினத்திலிருந்து தோன்றிய காளிதேவி, சண்டனையும் முண்டனையும் வதம் செய்தாள். ஆகவே, சண்டமுண்டர்களை வதம் செய்தவள் என்ற பொருளில், “சாமுண்டா என்று பெயரிட்டு அழைத்தனர். தலையில்லாத உடலை முண்டம் என்றும், உடலற்ற தலையைச் சண்டம் என்றும் கூறுவர். அறிவாற்றல் சற்றும் இல்லாமல் சிலர் தங்கள் உடல் வலிமையால் சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பார்கள். அவர்களே முண்டர்கள். “அறிவு கெட்ட முண்டம்!” என்று திட்டுவதன் பொருளை இதனால் உணரலாகும். மூளை வலிமை பெற்று, உடல் வலிமை இல்லாத சிலர், தம் அறிவாற்றலை அழிவுக்கே செலவிடுவர். இவர்களே சண்டர்கள். இவ்விரு வகையான சமூக விரோதிகளையே சண்ட, முண்ட அசுரர் வரலாறு குறிப்பால் உணர்த்துகிறது. அழிவுக்கு வித்திடும் அத்தகைய கொடியவர்களை அம்பிகை வதைத்தாள்.

சாமுண்டா தேவி மைசூர் அரசவம்சத்தின் குலதெய்வமாக விளங்குபவள். கர்நாடக மாநிலத்தில் சாமுண்டா தேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் இன்றும் நடைபெறுகின்றன.

கல்கத்தா அருகில் தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் இருக்கிறது. இங்கு காளிக்கு ‘பவதாரிணி’ என்று பெயர்.‘பவதாரிணி’ என்றால், ‘ஜீவாத்மாக்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவித்து, முக்தி என்னும் கரை சேர்ப்பவள்.’ என்று பொருள்.

இந்த பவதாரிணி காளிதேவியை வழிபட்டவர் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர்.காளிதேவி கருமை நிறம் கொண்டவள்.நாம் தூரத்திலிருந்து பார்த்தால், கடலின் நிறம் நீலமாகத் தென்படுகிறது. அருகில் சென்று கடல் நீரைஎடுத்துப் பார்த்தால், அந்தக் கடல் நீருக்கு என்று தனியே ஒரு நிறமும் இல்லை. அதுபோல் அஞ்ஞான நிலையில் இருப்பவர்களுக்கு, காளி கருமை நிறம் கொண்டவளாகத் தென்படுகிறாள். ஞானிகளுக்கோ அவள் எல்லையற்ற தெய்விக ஒளி வடிவினள்.காளி பார்ப்பதற்கு பயங்கர வடிவம் கொண்டவள். அஞ்ஞானிகளுக்கு பயங்கர வடிவம் உள்ளவளாகத் தென்படும் காளிதேவி, ஞானிகளுக்கு ஆனந்த சொரூபிணியாகக் காட்சி தருகிறாள்.

காளிக்கு ‘திகம்பரி’ என்று ஒரு பெயர். இதற்குத் ‘திசைகளையே ஆடையாகக் கொண்டிருப்பவள்’ என்று பொருள்.திசைகள் அனைத்தையுமே ஆடையாகக் கொண்ட அவளுக்கு, எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்? எந்த ஆடையை, எவ்வளவு பெரிய ஆடையை அவள் அணிந்து கொள்ள முடியும்? பிரபஞ்சமே அவளாக இருக்கும்போது, அவளை எந்த உடை கொண்டு போர்த்த முடியும்? எனவேதான் அவள் உடை எதுவும் இல்லாமல் இருக்கிறாள்.நம் இந்துமதத்தில் நான்கு கைகள் உடையவர்களாக தேவர்கள்-தேவியரின் வடிவம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இது அவர்கள் மனிதர்களைக் காட்டிலும் அதிக ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்த்துகிறது. காளி தன் இடுப்பில் கைகளை ஒட்டியாணமாக அணிந்திருக்கிறாள்.

கைகளைக் கொண்டு நாம் செயல் புரிகிறோம். உலகில் உள்ள அனைவரின் கைகளின் மூலமாகவும் காளியே செயல்படுகிறாள். எனவே உலகில் செயல் அனைத்தும் காளிதான் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை, அவள் இடுப்பில் அணிந்திருக்கும் கைகளாலான ஒட்டியாணம் குறிப்பிடுகிறது. காளிக்கு ‘முண்டமாலினி’ என்று ஒரு பெயர். இதற்கு ‘மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவள்’ என்று பொருள். காளியின் கழுத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வெவ்வேறு வயதுடையவர்களின் மண்டையோடுகள் மாலையாக உள்ளன.

இது குழந்தை பிறந்ததிலிருந்து எந்த வயதிலும் மரணம் நேரிடும்; வாழ்க்கை நிலையற்றது; எனவே அரிதாகக் கிடைத்த மனிதப்பிறவியைப் பயன்படுத்தி மனிதன், ஆண்டவனுக்கும் ஆண்டவனின் அடியார்களுக்கும் மனிதகுலத்திற்கும் பயன்படும் வகையில் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. காளியின் ஒரு கை வரதஹஸ்தம்-வரம் தரும் நிலையில் இருக்கிறது. பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வதில் அன்னை காளிக்கு இணை அவளேதான்.அன்னையின் இன்னொரு கை அபயஹஸ்தம். அது பக்தர்களின் பயத்தையும் துன்பங்களையும் நீக்கிப் பாதுகாப்பு அளிக்கிறது.காளி தன் ஒரு கையில் வாள் ஏந்தி இருக்கிறாள். அது தீமை எங்கே இருந்தாலும், முடிவில் அதை காளி வெட்டிச்சாய்த்து விடுவாள்; அவளுடைய தண்டனையிலிருந்து தீமைகள்-தீயவர்கள் தப்பிவிட முடியாது என்பதை உணர்த்துகிறது.

காளி இன்னொரு கையில் வெட்டிய ஒரு தலையைப் பிடித்திருக்கிறாள். இது தீயவர்கள் காளிதேவியால் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை உணர்த்துகிறது. உலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றையும் காளி தன் மூன்று கண்களாகக் கொண்டிருக்கிறாள். காளியின் கணவன் சிவபெருமான். அவர் சடைமுடி உடையவர், காளியும் விரிந்த கரிய கூந்தல் உடையவள். காளியின் விரிந்த கரிய கூந்தல், அவளது எல்லை காண இயலாத வியாபகத் தன்மையையும் ஆற்றல்களையும் உணர்த்துகிறது.

“சக்திக்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாடு, பெயர் அளவில்தான் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை. நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, பாலும் அதன் வெண்மையும் போல, சுயம் பிரகாசமுள்ள மணியும் அதன் ஒளியும் போல, சக்தியும் சிவமும் ஒன்றேயாகும். ஒன்று இல்லாமல் மற்றொன்றை நினைக்க முடியாது. அவை இரண்டையும் வேறுபடுத்தவும் முடியாது” என்று தட்சிணேஸ்வரத்திலிருந்து மாமுனிவராய் விளங்கிய பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறியுள்ளார்.

சுபம்

BLOG COMMENTS POWERED BY DISQUS