Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் அமேசன் நதியின் இயற்கை வளமும் அதன் கீழ் ஓடும் அதிசய நிலக்கீழ் நதியும்

அமேசன் நதியின் இயற்கை வளமும் அதன் கீழ் ஓடும் அதிசய நிலக்கீழ் நதியும்

E-mail Print PDF

அமேசன் மழைக்காடுகளில் பலவற்றிற்குப் பஞ்சமில்லை. ஏழு மில்லியன் சதுரக் கிலோமீற்றர் பரப்பளவை ஆக்ரமிக்கும் தென் அமெரிக்காவின் அமேசன் நதிப் படுக்கையில் ஏறத்தாழஐந்தரை மில்லியன் ச.கிலோமீற்றர் விஸ்தீரணமான பகுதியை, மழைக்காடுகள் நிறைத்திருக்கின்றன. இந்தக்காடுகள் 9 தென் அமெரிக்கநாடுகளுக்குப் பரவியிருப்பினும், பெரும்பகுதி-அதாவது60வீதமான காடுபிரேசிலில்தான் இருக்கின்றது. அடுத்த இடத்திலிருப்பது பேரு. இங்கு 13 வீதமான மழைக்காடுகளைக் காணமுடியும். மிகுதி 27 வீதமான காடுகள், கொலம்பியா, வெனிசூலா, ஈகுவடோர், பொல்வியா, கயானா, சுரிநாம், பிரெஞ் கயானா போன்ற இடங்களில் பரவலாக உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான அளவு வாசனைத் திரவியங்களைக் கொண்ட மழைக்காடுகள் என்ற பெருமை, இந்த அமேசன் மழைக்காடுகளையே சார்கின்றது. பிரேசில் நாட்டின் அமேசன் மழைக்காட்டில், இதுவரையில் சந்தித்திராத காட்டு வாசிகள் அங்கு வாழ்கின்றன சிலர், கண்ணில் தென்பட்டு, முழு உலகையுமே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றர்கள். இந்த அரிய கண்டுபிடிப்பை , பிரேசில் அரசாங்கமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

 

மக்கள் நடமாடும் பிரதேசங்களைத் தவிர்த்து, காடுகளில் பரவலாக தமது தனி உலகத்தை அமைத்துக் கொண்டு, அமேசன் நதிப் படுக்கைக் காடுகளில் சிறு தொகையினர் வாழ்ந்து வருகின்றார்கள். Funai என்ற அமைப்பு,விமானங்களில் இந்தக் காடுகளுக்கு மேலாகப் பறந்து, இப்படி வாழ்ந்து வருபவர்களை நோட்டம் விட்டபடி இருந்து வருகின்றது.

இவர்களால் கண்டுபிடிக்கப்படும் இடங்கள், அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் அந்நிய மனிதர்கள் நுழைந்து, காட்டுவாசிகள் இராஜ்யத்தை சீர்குலைக்காமல் இருக்க, விழிப்போடு, இவற்றைக் கண்காணித்து வருகின்றன. இந்த அமைப்பின் ஒரு கணிப்பின்படி, காட்டுக்குள்  வேறுபட்டஇடங்களில் 68  கூட்டங்கள் வரையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட குழுவில், 200 பேர் வரையில் இருக்கலாம் என்று கணித்திருக்கின்றார்கள். வைக்கோலால் வேயப்பட்ட நான்கு பெரிய குடிசைகள்தான் இவர்கள் வதிவிடம். சோளம், வாழை, கச்சான், போன்றவற்றோடு, ஏனையவற்றையும்  இவர்கள் பயிரிட்டு வருவதாக அறியப்படுகின்றது. Pano என்ற மொழியைப் பேசும் இனத்தைச் சார்ந்த காட்டுவாசிகளாக இவர்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த இனத்தவர்கள் பிரேசில் அமேசன் காடுகளிலும்,பெரு, பொல்வியன் காடுகளிலும் காணப்படுகின்றார்கள்.

இவர்கள் பேருவை எல்லையாகக் கொண்ட பிரேசில் அமேசன் காடுகளில் வாழ்ந்து வருவதாகவும், இந்தப் பிராந்தியம் ஏறத்தாழ போர்த்துக்கல் நாட்டளவு பெரியது என்று கூறப்படுகின்றது. ஒருவர் ஒருவருடன் தொடர்பு வைத்திராத 14 வித்தியாசமான இனக் காட்டுவாசிகள் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

காட்டுக்குள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் போக்கில் எந்தப் புதிய இடையூறும் இன்றி வாழவிடுவது எமது அமைப்பின் தலையாய பணி என்று Funai பேச்சாளர்
ஒருவர் கூறியுள்ளார். இப்படியாகப் புதியவர்களை இந்த அடர்ந்த காடுகளில் கண்டுபிடிப்பது மிகச் சிரமமான பணி. பல வருடத் தேடுதலின் முடிவிலேயே எவராவது எமது கண்ணில் தென்படுகின்றார்கள் என்று இந்தப் பேச்சாளர் மேலும் கூறியிருக்கின்றார்.

அண்மைய புதிய கண்டுபிடிப்போடு, காட்டுக்குள் 2000 பேர் வரையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கணிப்பிட்டுள்ளார்கள். களவில் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது, சுரங்கங்களை அகழ்தல் போன்ற காரணிகள், இந்தக் காட்டு ஆதிவாசிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்து வருகின்றன.

இந்தச் செய்தியோடு, இந்த மழைக்காடு பற்றிய சில சுவையான தகவல்களை இங்கே தருவது சாலப் பொருத்தமாக இருக்கும். இந்த அமேசன் மழைக்காடுகள் 2.5 மில்லியன் வித்தியாசமான பூச்சி இனங்களின் வதிவிடம் என்பது நம்ப முடியாத ஒரு நிஜம். அதேபோல 2,000 வித்தியாசமான பட்சி இனங்களும், முலையூட்டிகளும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

இன்றைய திகதி வரையில், 40,000 வேறுபட்ட இனத் தாவரங்கள், 3000 வேறுபட்ட மீன் இனங்கள், தரையிலும் நீரிலும் வாழும் 428 வேறுபட்ட உயிரினங்கள், 378 வேறுபட்ட ஊர்வன இந்தக் காடுகளை நிறைக்கின்றன என்பது பிரமிப்பூட்டும் ஒரு தகவலாகும்.

உலகில் வாழும் மொத்தப் பறவை இனங்களை நோக்கினால், ஐந்தில் ஒன்று இந்த அமேசன் மழைக்காடுகளில் இருக்கின்றது என்பது  இன்னொரு வியப்பான தகவல்தான். பிரேசிலில் மாத்திரம் 96,660 தொடக்கம் 128,843 வரையிலான முதுகெலும்பைக் கொண்ட உயிரினங்கள் இருக்கின்றனவாம்.

ஒரு சதுர கிலோ மீற்றர் (247 ஏக்கர்) வீஸ்தீரணமான இடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வித்தியாசமான இன மரங்கள் நிச்சயமாக இருப்பதோடு, ஆயிரக்கணக்கான வித்தியாசமான தாவரங்களையும் அதே நிலப்பரப்பில் காணமுடிவது அற்புதத்திலும்

அழகு கொழிக்கும் அடர்ந்த கானகத்தில் ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. இராட்சத அனக்கொண்டா பாம்பு, மனிதரைக் கடித்துக் கிழிக்க வல்ல கூரான பற்களைக் கொண்ட பிரன்ஹா மீன்கள், மின்சாரத்தை உடலில் வைத்துக் கொண்டு மிரட்டும் ஆற்று விலாங்குகள், மிகக் கொடிய விடத்தைத் தமது தோல்களில் வைத்துக் கொண்டு நடமாடும் பல வண்ணங்கள் கொண்ட தவளைகள், பல தொற்று நோய்களைப் பரப்பும் கிருமிகள், விசர் நாய்களில் இருக்கும் வைரஸை ஒத்த கிருமிகளை வைத்துக் கொண்டு பறந்து திரியும் வம்பயர் வெளவால்கள், மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் போன்றவற்றைப் பரப்ப வல்ல நுளம்புகள் என்று ஆபத்துக்கள் இந்த அழகிய காட்டில் அணிவகுத்து நிற்கின்றன. அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதற்கு, அமேசன் மழைக்காடுகள் ஒரு நல்ல உதாரணம் போலும்.

அமேசன் நதியின் கீழ் ஓடும் இன்னுமொரு நிலக்கீழ் நதி (ஹம்சா நதி)
உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் 7 மில்லியன் சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது. மிகவும் விசாலமான இந்த நதியின் பிரமாண்டத்தினை முழுதாக இதுவரை எவரும் பார்க்கவில்லை. அமேசன் நதியின் அரைவாசியைத்தான் இதுவரை உலகம் கண்டு வியந்திருக்கிறது என்பதே உண்மையாகும்

இப்படி பிரமாண்டமான அமேசன் நதியின் கீழ் இன்னுமொரு நதியிருப்பதை பிறேஸில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமேசன் நதிக்குள் கீழ் 4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நதிப்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கீழ் நதியினை ஆய்வுசெய்த குழுவின் தலைவரான பேராசிரியர் றியோ ஹம்சாவின் பெயரே கண்டுபிடிக்கப்பட்ட நதிக்கும் சூட்டப்பட்டிருக்கிறது.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெற்றோலிய படுக்கைகளை ஆய்வுசெய்த வேளையிலேயே அமேசன் நதிக்கு கீழ் இன்னுமொரு நதி இருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு எழுந்தது. அதனடிப்படையில் பேராசிரியர் றியோ ஹம்சா தலைமையில் விஞ்ஞானிகள் குழுவொன்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவிலேயே இந்த அதிசய தகவலினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அமேசன் நதியினைப்போன்றே ஹம்சா நதியும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்கிறது. இந்த நிலக்கீழ் நதியும் அமேசன் நதியைப்போன்றே 6000 கிலோமீற்றர் நீளமானது. ஆனால், அமேசன் நதியின் அகலம் ஒரு கிலோமீற்றரிலிருந்து 100 கிலோமீற்றர்வரை விரிந்து காணப்படுகிறது. ஹம்சா நதியின் அகலம் 200 கிலோமீற்றரிலிருந்து 400 கிலோமீற்றர்வரை விரிந்து காணப்படுகின்றமை ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பினையூட்டியிருக்கிறது


ஹம்சா நதி நிலத்துக்குக் கீழ் ஓடுவதே அமேசன் கழிமுகத்தை அண்மித்த பகுதிகளில் நீரின் உருவாக்கத் தன்மை மிகக்குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நதிபற்றிய ஆராய்ச்சிகளின் முடிவினை இரண்டொரு மாதங்களில் நிறைவு செய்துவிடலாம் என்ற நம்பிக்கையையும் பேராசிரியல் றியோ ஹம்சா வெளியிட்டுள்ளார்.

பரந்துகிடக்கும் பூலோக பந்துக்குள் புதைந்திருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்றென்று கூறினால் அது மிகையாகாது.

நன்றி

BLOG COMMENTS POWERED BY DISQUS