Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக இருந்தாலும்; அவர்களால் பின்னடிக்கு இடைஞ்சலா? ? ?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக இருந்தாலும்; அவர்களால் பின்னடிக்கு இடைஞ்சலா? ? ?

E-mail Print PDF
Image may contain: bird

தாம் கல்வி அறிவின்றி இருந்தமையால் இளம் வயதிலே அனுபவித்த பல வலிகளை தமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் அனுபவிக்க விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்குடன் அதிக நேரம் வேலை வேலை செய்து அவர்களை படிப்பிக்கின்றார்கள்.

தாம் மகிழ்வோடு குடும்பத்துடன் வாழக்கூடிய சூழ் நிலையிலும் தம் மகிழ்வை தம் குடும்ப ஈடேற்றத்திற்காக அர்ப்பணித்து ஓய்வின்றி சம்பாதிக்கும் அனைவரும் வலி இல்லாத நின்மதியான கடைசி கட்ட வாழ்கையையே எதிர்பார்க்கிறார்கள்.

பிள்ளைகள் முன்னேறிவிட்டால் தமது பிற்காலத்தில் தாங்களும் மதிப்பும், மரியாதையுமுடன் வாழலாம் என்ற அவாவில், ஒளிதரும் மெழுகு வர்த்திபோல் தம்மை உருக்கி உருக்கி உழைத்த முதியவர்கள் பலர் கவனிப்பாரற்று முதியோர் இல்லங்களிலும், கருணை இல்லங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்வதை இன்று நாம் பார்க்கின்றோம்.

வயதான காலத்தில் தம் பிள்ளைகள் தம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அனேகமாக எல்லா பெற்றோர்களிடத்திலும் ஏற்படுவது இயல்பே. தாம் தம் பெற்றோருக்கு செய்ததை தமக்கும் தமது பிள்ளைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனே அவர்கள் வாழ்கின்றார்கள்.

ஆனால், அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்து விடுகிறது. அனேகமாக யாருக்காக அவர்கள் கஷ்டப் பட்டார்களோ அவர்களே துன்பமாகியும் விடுகின்றார்கள்.

பொதுவாக பெற்றோர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிள்ளைகளுடன் வாழ்வதையே விரும்புகின்றார்கள். அவர்களுக்கு தனிமை வேதனையைக் கொடுக்கின்றது. அதாவது கஸ்டப்பட்டு ஆக்கிய கூளை கூடியிருந்து குடிக்கும் பருவமது. ஆனால் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் தற்போதுள்ள தலைமுறையினரில் சிலர் தங்களின் நலனுக்காக அவர்களைப் பிரித்து வாழ வைக்கின்றனர். தனித்து வாழ விடுகின்றார்கள் அல்லது தவிக்க விட்டு விடுகின்றனர்.

தங்களுடைய தகுதிக்கும், அந்தஸ்திற்கும் தங்களோடு சேர்ந்து வாழ அவர்கள் தகுதியில்லை என்பதும். நாங்கள் எங்கள் பிள்ளைகளையே பார்க்க முடியாமல் இருக்கின்றோம் அவர்களைப் பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை என்பதும் காரணங்களாக கூறப்படுகின்றன.

முதியோருக்கு 2 பிள்ளைகளுக்கு மேல் இருந்துவிட்டால் அவர்கள் பாடு அதோகதிதான். மற்றப் பிள்ளைகள் வைத்திருந்தால் என்ன? இவர்கள் வைத்திருந்தால் என்ன? என்ற போட்டி தோன்றி கடைசியில் அவர்களைப் பார்ப்பதற்கு ஒருவருமே முன்வராத நிலையில் தாமாகவோ அல்லது எல்லாப்பிள்ளைகளும் சேர்ந்து அவர்களை முதியோர் காப்பகத்தில் அல்லது கருணை இல்லங்களில் சேர்த்து விட்டு தாம் சுக போலங்களை அனுபவிக்கின்றனர்.

அல்லது ஆளுக்கு ஒருவராக வைத்திருக்க முன்வருகின்றனர். அதிலும் தாய் கொஞ்சம் சுகதேகியாக இருந்து விட்டால் அவவை வீட்டு வேகைக்காரி போல் எடுக்க அதிலும் பிள்ளைகளுக்குள் போட்டி. அம்மா தலைமகன்/மகள் வீட்டில் ஒரு மாதம் இருந்தால், அப்பா இளையவன்/இளையவள் வீட்டில் இருப்பார். அடுத்த மாதம் இருவரும் இடமாறிவிடுகிறார்கள். இருவரையும் ஒரே வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள பிள்ளைகள் சம்மதிப்பதில்லை. வயதான காலத்தில் பழைய அனுபவங்கள் பற்றி பேசி மகிழ்வதும், பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதும்தான் அவர்களுக்கு இன்பம். அந்த இன்பத்தைக் கூட பிள்ளைகள் பெற்றோருக்கு கொடுக்க மறுக்கின்றனர்.

இவ்வாறு ஏதாவது காரணம் சொல்லி தந்தையையும், தாயையும் பிரித்துவிடுகின்றனர். இல்லை என்றால் எங்களால் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று முகத்தில் அடித்தது போல் கூறி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ் வழமை தற்போது பல வசதி படைத்த குடும்பங்களில் காணாப்படும் நாகரிகமாகிவிட்டது.

பெற்ற பிள்ளைகளை பல எதிர்பார்ப்புடன் பல கஷ்டங்களை தாங்கி படிப்பித்து அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி பெரியவர்களாக்குகின்றார்கள். ஆனால் அந்த பதவியும் அந்தஷ்தும் பின்னடிக்கு தங்களுக்கு இடைஞ்சலாக அமையும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை,

டாக்டராக, வழக்கறிஞராக, அல்லது எஞ்ஜினியராக பெரும் பதவிகளில் பிள்ளைகள் இருக்கும் போது அவர்களின் பெற்றோர் முதியோர் இல்லத்தில் உறவினர் வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு விடுகின்றது. அதை நினைத்து நினைத்து பெற்றோர் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர்.

என் பிள்ளையை எப்படியெல்லாம் ஆசையாய், அன்பாய் வளர்த்தோம், பின்னடிக்கு எங்களை பார்ப்பான் என்று கனாக்கண்டோம். அவனோ மனைவியைக் கண்டதும் இப்படி எங்களை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு துரத்தி விட்டுவிட்டானே என்று நினைந்து நொந்தே சாகின்றனர்.

இவ்வாறான நிகழ்வுகள் பொதுவாக ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கே பெரும்பாலும் நிகழ்கின்றது. மனைவியிடமும், மனைவியின் உறவினரிடமும் தாம் நல்ல பேர் கேட்கவே கணவன்மார் தமது பெற்றோரை விலத்தி வைக்கின்றார்கள். ஆனால் மனைவியின் பெற்றோர்கள் இவ் விடயத்தில் கொஞ்சம் குடுத்து வைத்தவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் இதற்கு மறுதலையாக தனது பெற்றோரோடு இனைந்து வாழாத மனைவியை துரத்தும் கணவன்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனது கருவறையில் வளர்ந்து என் உதிரத்தையே உண்டு வளர்ந்த எனது பிள்ளைக்கு என்னைப் பாக்கவே அருவருக்குதாம்!

தங்கள் வயது முதிர்ந்த பெற்றோரை வருத்தும் இளம் பெற்றோரும் முதுமையாகும்போது இன்நிலைமை ஏற்படுமா?

இதனை உணர்த்தும் ஒரு சிறுகதை.

இராசன் என்பவன் இராசாத்தி என்னும் பெண்ணை விவாகம் செய்து கூலி வேலையில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மகிழ்வோசு வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு வரதன் எனும் ஆண் மகன் இருந்தான். அவன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்ததனால் பாடசாலையிலும் கெட்டிக்கர மாணவன் என்ற பெருமையும் அவனுக்கு கிடைத்தது. இதனை அறிந்த பெற்றோருக்கு பெருமகிழ்ச்சி. அவனை எப்படியாவது படிப்பித்து பெரியவனாக்கி நல்ல அரச வேலையில் சேர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள்.

அதனால் மேல்படிப்பிற்கு அதிக பணம் செலவாகும் என்பதனால் தாயும் தந்தையும் சேர்ந்து அதிக நேரம் கூலி வேலை செய்து மகனின் பட்டப் படிப்புக்கு செலவு செய்து படிப்பித்து வந்தனர்.

அவனும் ஊக்கமாக படித்து பட்டம் பெற்றதும் அவனுக்கு உதவி அரச பதவியும் பட்டணத்தில் கிடைத்தது. அதனால் அவன் தன் பெற்றோருடன் பட்டினத்திற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டது, அங்கு அவான் வாடகை வீடு ஒன்றில் பெற்றோருடன் மகிழ்வோடு வாழ்ந்து வந்தான்.

அக்கால கட்டத்தில் அவனுக்கு திருமணமும் நிகழ்ந்தது. சில நாட்களின் பின் அவனுக்கு உயர்ந்த அரச பதவிக்கு பதவி உயர்வும் கிடைத்தது, அதனால் அவன் மனைவி, பிள்ளைகள், பெற்றோருடன் அரச பங்களாவிற்கு சென்று வசித்து வந்தான்

அவன் அந்தப் பகுதி உயர் அதிகாரியாக இருந்ததினால் பல பிரமுகர்களும் பிரபுக்களும் நண்பர்களாகி அவனைச் சந்திக்க பங்களாவிற்கு வர ஆரம்பித்தார்கள். ஒருநாள் வீட்டிற்கு வந்த பிரபு ஒருவர் அவனின் பெற்றோரைப் பார்த்து யார் இவர்கள் என்று விசாரித்தார். அவர்கள் வயதில் முதிந்தவர்களாகவும்,நாகரீகம் தெரியாதவர்களாகவும்,, படிப்பறிவு குறைந்தவர்களாகவும் இருந்தமையால் அவர்கள்தான் தன் பெற்றோர் என சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.

மறுநாள் அவன் அவர்களுக்காக பங்களாவின் பின்பகுதில் ஒரு இடத்தை ஒதுக்கி அதில் அவர்களை அங்கு தங்க வைத்து அந்த இடத்தை தாண்டி எதுவித காரணம் கொண்டும் பங்களாவிற்குள் வரக்கூடாது எனவும் கட்டளை போட்டான். அவர்கள் சாப்பிடுவதற்கும், தண்ணிர் குடிப்பதற்கும் வேறு பாத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஒருநாள் வேலைக்காரி அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க அவர்களின் சாப்பாட்டுத் தட்டை தேடினாள். அவை வழமையாக வைக்கும் இடத்தில் காணப்படவில்லை. எஜமானின் பெற்றோரைக் கேட்டபொழுது அவர்கள் அவை வைக்கும் இடத்தில் தாங்கள் வைத்ததாக சொன்னார்கள். அனால் அவை எங்கேயும் காணப்படாததால் எஜமானிடம் வந்து முறையிட்டாள்.

எஜமானும் பெற்றோரிடம் போய் விசாரித்தார், பெற்றோரும் அவை வைக்கும் இடத்தில் வைத்ததாக கூறினர். அதன் பின் தன் மூத்த மகனை அழைத்து அந்த கோப்பைகளை யார் எடுத்தது என வினவினார்.

அதற்கு, மகன் நான்தான் அப்பா அதை எடுத்தேன் என்று கூறினான். அந்த அசிங்கமான கோபைகளை ஏன் எடுத்தாய் என்று தகப்பன் அடிக்க கையோங்கினார்.

அப்போது, அது அப்பா நீங்களும் அவர்களைப் போல வயதான பிறகு உங்களுக்கு நான் சாப்பாடு தரத்தான் எடுத்து பத்திரமாக ஒழித்து வைத்திருக்கிறேன் என பதிலளித்தான் அந்தச் சிறுவன். அப்போதுதான் தந்தையான எஜமானின் கண்கள் திறந்தன. இதன் பின்னால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். உங்கள் எண்ணத்தில் உதிப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவற்றைக் கருத்திலும் பதிவிலிடலாம்.

இது ஒரு கற்பனைக் கதை. பெயர்கள் யாவும் கற்பனையே.


நன்றி1861-03.12.2014

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS