Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும் சமயநெறி ஹரிஹரசுதன் ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் - சபரிமலை யாத்திரை - படங்கள் இணைப்பு

ஹரிஹரசுதன் ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் - சபரிமலை யாத்திரை - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

 

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
"ஓம் க்ரூம் பராய கோப்த்ரே நமக"

ஹரிஹரசுதன் ஸ்ரீ ஐயப்பன் மண்டல மகர விரதம் இவ்வருடம் 17.11.2017 ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைது அவதரித்த ஹரிஹர புத்திரன் அவதாரம் :
தேவர்களும், அசுரர்களும் தேவாமிர்தம் பெறுவதற்காகவும்;  துருவாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும்;  மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருபாற் கடலைக் கடைந்தார்கள். அப்போது வாசுகி வேதனையால் கக்கிய "காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து "ஆலகால விஷமாக" திரண்டு தேவர்களையும், அசுரர்களையு அழிக்க துரத்தியது.

தேவர்களும் அசுரர்களும் பரமசிவனிடம் தம்மை காப்பாற்ற வேண்டினர். பரமசிவன் அவ் ஆலகால விஷத்தினை ஏந்தி அதனை அருந்தி தேவர்களையும், அசுரர்களையு காப்பாற்றியதுடன் திருநீலகண்டன் ஆனார்.

அதன் பின்னர் அவர்கள் திருபாற்கடலைக் கடைந்த போது; திருபாற்கடலில் சங்கமித்த இந்திரனின் செல்வங்களான சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, அறுபத்தாறாயிரம் அரம்பாஸ்த்திரீகள், காமதேணு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவம் முதலானவை தோன்றின.

ஆனால் தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்த தேவாமிர்தம் தோன்றவில்லை. அதனால் மனச்சோர்வடைந்த தேவர்களும், அசுரர்களும் செய்வதறியாது ஏங்கினர். தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தேவாமிர்தம் பாற்கடலில் தோன்றியது. தேவர்கள் அங்கு இலாதிருக்கவே அதனை அங்கிருந்த அசுரர்கள் பெற்று தமதாக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்ட திருமால் தேவாமிர்தத்தை அசுரர்கள் அருந்தினால் அவர்கள் சாகாவரம் பெற்றுவிடுவார்கள் என எண்ணி அதனை அவர்களிடம் இருந்து தந்திரமாக பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.  அசுரர்களின் பலவீனத்தை (அளகான பெண்களைக் கண்டால் தமை இழந்து மயங்கும் தன்மையை) நன்குணர்ந்த நாராயண மூர்த்தி "மோகினி" அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பி, தேவாமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தந்திரமாகப் பெற்று தேவர்களுக்கு பகிந்தளித்தார்.

அப்போது, அசுரர்கள் எல்லாம் அப்படியே மோகினியின் அழகில் மயங்கிக் கிடந்தார்கள். தேவர்களும் மோகினியின் அழகில் மயங்கத்தான் செய்தார்கள்; ஆனாலும், உடனேயே தங்கள் மனதை நிலை நிறுத்திக்கொண்டு, அமுதத்தைப் பெறுவதிலே அறிவைச் செலுத்தினார்கள். அசுரர்கள் பலரும் மோகினியிடம் மயங்கி இருந்தாலும் அவர்களில் ”சுவர்பானு” என்ற அசுரனுக்கு மட்டும் சந்தேகம் இருந்தது. அவனும் உண்மையை தெரிந்து கொண்டதும், மெல்ல நகர்ந்து தேவர்களின் பக்கம் போய் தேவர்களில் ஒருவனாக வரிசையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வந்து அமர்ந்தான். அவன், சுவர்பானு, காஸ்யப்பர் வம்சத்தில் வந்தவன். பெற்றோர், விப்பிர சித்து-சிம்ஹிகை

மோகினி, தேவர்களுக்கு அமுதம் வழங்கியபோது அவனும் அமுதம் பெற்று, அதை உண்டுவிட்டான். அப்போது சூரியனும் சந்திரனும், "இவன் அசுரன்” என்று, குறிப்பு (சாடை) காட்டினார்கள். உடனே மோகினி தன் கையிலிருந்த  அகப்பையால்,  சுவர்பானுவின் தலையில் அடித்தார். அதனால், சுவர்பானுவின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் விழுந்தது. அமுதம் உண்டதால், சுவர் பானு இறக்கவில்லை. தலையும் கைகளும் பர்ப்பர தேசத்தில் விழுந்தன. அவற்றை பர்ப்பர தேசத்து அரசனான பைடீனசன் என்பவன் எடுத்துப்போய் வளர்த்து வந்தான். அவனால் வளர்க்கப்பட்ட, அந்தத் தலையும் கைகளும் சேர்ந்த வடிவம்தான், ராகு. ராகு, மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்து, கறுத்த பாம்பின் உடலைப் பெற்றான்; கிரக பதவியும் பெற்றான் என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

சூரிய, சந்திரர் தன்னைக் காட்டிக் கொடுத்ததால், அவர்களுடன் பகைமை கொண்டான் ராகு. அதனால், அவர்களைப் பீடிக்கத் தொடங்கினான். அதுவே, கிரகணம் எனப்படுகிறது.

இவ் " நாராயண மூர்த்தியின் மோகினி" அவதாரத்தை சாதகமாக்கி; விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்ததுவதற்காக; கைலாசபதியான ஸ்ரீ பரமேஸ்வரன்; மோகினியின் அழகில் மயங்கி, ஆழ்ந்து பரவசம் கொள்ள; அவ் இரு மூர்த்திகளின் ஆற்றல்கள் முழுவதும் ஒன்றாகப் பெற்ற ஸ்ரீ ஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்தா அவதரித்தார் என விஷ்ணு புராண வரலாறுகள் கூறுகின்றது.

ஆனால்; பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெரும் தவம் செய்து சிவபிரானிடம்; தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக வேண்டும் என்னும் வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்சித்து பார்க்கத் துணிந்தான்.

சிவபிரான் செய்வது அறியாது  திகைத்து நின்ற போது; மகாவிஷ்ணு மோஹினி ரூபமெடுத்து  பஸ்மாசுரன் முன் தோன்றி; அவனின் எண்ணத்தை திசை திருப்பி; அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து பஸ்ப மாக்கினார். அந்த மோஹினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்ததுவதற்காக நாராயண மூர்த்தியாகிய மோஹினி மேல் மோகம் கொள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன் அவதரித்ததாக பத்ம புராணம் கூறுகின்றது.

இவ் இரு புராணங்களும் (விஷ்ணு புராணமும், பத்ம புராணமும்) இரு வேறு நிகழ்வுகளைக் கூறினாலும் அவை இரண்டும்; ஐயப்பன் அவதாரம்; நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைந்ததால் அவதரித்த ஹரிஹரபுத்திரன் என்பதை உறுதியாக நிரூபிக்கின்றன.

ஹரிஹர புத்திரரான தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயண மூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக  (ஐயனாராக) ஆசீர்வதித்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். (நாராயண மூர்த்தியின் கையில் அவதரித்தமையால் கைஅப்பன் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்பு அப்பெயர் மருவி ஐயப்பன் ஆகிற்று என்று கூறுவாருமுளர்).

குறுகிய காலத்திலேயே சகல சாஸ்திரங்களையும்  பிரம்மாவிடம் கற்று "மஹா சாஸ்த்ரு" என்ற நாமத்தையும் பெற்றார். தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன். ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திருஅவதாரமாகும். அத்துடன் ஒவ்வொரு ”யுகத்திலும்” தோன்றும் இறைவனின் தோற்றங்கள் வேறு விதமாக வர்ணிக்கப் பெறுவதாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப்பெறுகின்றது. அவையாவன:

1.  சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.
2.  கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.
3.  வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
4.  ஞான சாஸ்தா: தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.
5.  பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.
6.  மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.
7.  வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.
8.  தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும்.

புண்ணிய பூமியான நேபாள தேசத்தை அப்பொழுது பளிஞன் என்ற அரசன் ஆண்டு வந்தான். மந்திர சாஸ்திரத்தில் பண்டிதனாகவும், காளியின் வரப்பிரசாதம் பெற்றவனாகவும் இருந்த அந்த அரசனுக்குப் புஷ்கலை என்ற ஒரு மகளும் இருந்தாள்.

பளிஞன் தான் என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் பெறுவதற்காக அநேக கன்னி ஸ்திரீகளை காளிக்குப் பலியிடலானான். அதே தேசத்தில் பரமசிவனிடத்தில் பக்தி கொண்ட ”கன்னிகா” என்ற கன்னி ஸ்திரீயும் வசித்து வந்தாள். பரமசிவனிடத்தில் பக்திகொண்ட கன்னிகாவையும் காளிக்குப் பலியிட பளிஞன் நிச்சயித்தான்.

கருணாமூர்த்தியான சங்கரன் கன்னிகாவை ரட்ஷிக்க எண்ணி, குமாரனாக இருந்த (ஐயனாரையும்) சாஸ்த்தாவையும் அவரது பூத கணங்களின் ஒன்றான  கருப்பண்ணனையும் கன்னிகாவிற்கு பாதுகாப்பு கொடுக்க பணித்து மறைந்தார்.

சாஸ்த்திரத்தில் வல்லவரான ஹரிஹர புத்திரன் பளிஞனால் செய்யப்பட்ட பல சூழ்ச்சிகளையும் வென்று கன்னிகாவை காப்பாற்றியதுடன்; சாஸ்தா தான் யார் என்பதனை  மன்னனுக்கு காட்டி  உபதேசித்து, உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு அல்லாமல், தன் மகளான புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து புஷ்களா காந்தன் என்ற நாமத்தையும் அடைந்தார்.

புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழி வந்த கதை ஒன்று:
மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படி
தந்தையும், மகளும் கோயிலில் தங்குகின்றனர். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள்.

மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல புஷ்கலை மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாக பிடிவாதமாகச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்கவில்லை. நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லினாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளை கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.

ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த வணிகன் மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான் அந்த வேடன்.

அவனுக்குப் பரிசாக வணிகர் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, "நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான்.

இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய் ! வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார்.

"உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும் போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள் அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார்.

தூக்கத்தில்  ஐயப்பன் கனவில் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி.

காலையில் கோயிலை திறந்து ஐயன் சந்நிதியை பார்த்தார்கள். என்ன அதிசயம்! காட்டில் வேடனுக்கு வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்ட்டது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.

பூரனை, புஷ்கலை அவதார  தத்துவம்:
சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்க வேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள்.

மற்றொருத்தியான பூரணையானவள், தற்பொழுது மலையாளம் (கொச்சி, கேரள ராஜ்ஜியம்) என்று அழைக்கப்பட்டு வரும் பிரதேசமானது அப்பொழுது பிஞ்சகன் என்ற அரசனால் ஆளப்பெற்றது. வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார்.

இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந் தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம்,  அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.

மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார்.  பூர்ணையையும் மணந்து கொண்ட ஹரிஹராத்மஜன் கைலாசம் வந்தடைந்தார்.

கைலாசத்தில் பரமசிவன் ஆணைக்குட்பட்டு பூதகணங்களுக்குத் தலைவராகி பூதநாதன் என்ற பெயரையும் பெற்று; பூர்ணா, புஷ்களை சப்தனாக எழுந்தருளினார். இவருக்கு சத்யகன் என்ற புத்திரனும் உண்டு. அப்புத்திரனைச் செல்லப்பிள்ளை என்று அழைப்பார்கள்.

பூர்ணையை ஐயன் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் புஷ்கலையின் தந்தையாகிய பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்

"ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த "நீ புலோகத்தில் ஜனித்து பிரம்மச்சாரியாயும், யோகியாயும் இருக்கக் கடவாய் என சபித்தான்" சாபத்தை வரமாக ஏற்றுக் கொண்ட பூதநாதன்; தான் பூலோகத்தில் அவதரிக்கும் பொழுது தன்னை வைத்துக் காப்பாற்றுவதற்காகப் பளிஞனையே பந்தள தேசத்து அரசனாகத் தோன்றும்படி அருளினார்.

ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார்.

பளிஞனும் பந்தள தேசத்தில் பிறந்து ராஜசேகரன் என்னும் பெயருடன் அரசாண்டு வந்தான்.  ராஜசேகர மன்னன் ஒர் சிவபக்தன்.  மகாராணி கோப்பெருந்தேவி ஓர் விஷ்ணு பத்தினி.  விவாகமாகி பல ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கென ஒரு வாரிசு இல்லையே என்ற பெரும் கவலையோடு பிரார்த்தனை செய்து மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வரலாயினன்.

ஆனால், பாண்டி நாட்டில்தான தர்மங்கள் செய்து, தர்மசீலனாய் வாழ்ந்து சர்வேஸ்வரனையே வழிபட்டு வந்த விஜயன் என்னும் பிராமணன்; ஐயனின் அருளினால் பந்தள தேசத்தில்  ராஜசேகரன் என்னும் பெயருடன் பிறந்து அரசாண்டு வந்தான் என கூறுவாருமுளர்.

மன்னனின் மன வேதனைகளையும், அவனது தயாள குணத்தையும் பலவீனமாக உணர்ந்து கொண்ட அந் நாட்டு மந்திரி அதனைச் சாதகமாக வைத்து நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இராச்சியத்தை தானே கைப்பற்றும் நோக்கோடு பல சூட்சிகள் செயயலானான்.  இவை இவ்வாறு இருக்க....

வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர். இக்காலத்தில்...

மஹிசாசுரனின் தோற்றமும் மறைவும்
தனு என்ற அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற  இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான்.  அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும்காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய்  பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் என்னும் பெயருடன் பிறந்தான்.

மகிஷாசுரன்; பிரமதேவனிடம் பெற்ற தவ வலிமையினால் அகந்தை மேலிட  தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது.  மகிஷாசுரன் தனக்கு ஓர் ஸ்திரியால் அன்றி மரணம் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். தன்னை அழிக்கும் தகுதி உள்ள ஒரு ஸ்திரி  சர்வலோகங்களிலும் இல்லை என எண்ணி அவன் கர்வமும், அகங்காரமும் கொண்டான்.

அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக் என்ற மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.

மகிஷாசுரனிடம்  தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த  இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மகிஷாசுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இரஞ்சி நின்றனர்.

தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்திகளும்  மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மகிஷாசுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு ஸ்திரியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு,  பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சங்கார மூர்த்தியை" சிருஸ்ட்டித்தார்கள்.

அந்த சங்கார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக உருவெடுத்தாள்.

அதற்கு "துர்கா தேவி" (சண்டிகாதேவி, காளிதேவி எனவும் கூறுவாருமுளர்) என நாமம் சூட்டி ஆசிகளும் வழங்கினர். மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மகிஷாசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள். மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால்  துர்க்காதேவி  "மகிஷாசுரமர்த்தினி" என்று  பெயர் பெற்றாள்.

மகிஷாசுர சங்காரம் சுலபமான ஒன்றல்ல மகிஷாசுரனின் தலை கொய்யப்படும் பொழுது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒவ்வொரு மகிஷாசுரனாக உருவாகும் சக்திகொண்டது. அதனால் துர்க்காதேவி ஒருபாத்திரத்தில் அவன் இரத்தத்தை ஏந்தி அவை நிலத்தில் சிந்தாவண்ணம் தானே அதைப் பருகி மகிஷாசுரனின் சங்காரத்தை நிறைவுசெய்தாள்.

மகிஷாசுரனுடன் இணைந்து தேவலோக சுகங்களில் மகிழ்ந்திருந்த கரம்பன் மகளான மகிஷி தந்தையின் தூண்டுதலினால்;  தன் சகோதரனான  (தந்தையின் சகோதரன் மகனான) மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் எனக் கருதி அவர்களை பழிவாங்க முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற்றுக்கொள்ள அவள் பிரம்மாவை நோக்கி நெடுநாள் தவம் புரிந்தாள்.

மகிஷியின் கடும் தவம் கண்டு மகிழ்ந்த பிரம்ம தேவன், அவள் முன் தோன்றி, உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம்.  வேண்டும் வரம் கேள் என்றார். ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கி பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கும் பிரம்மச்சாரியான குழந்தையால் மட்டும் அன்றி வேறு எவராலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது  என்றும், தான் இறந்த பின்பு தன் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும் என்னும் வரத்தையும் மகிஷி  கேட்டுப்  பெற்றுக் கொண்டாள்.  

இரண்டு புருஷ மூர்த்திகளால் ஒரு புத்திரன் பிறக்கமாட்டான் என்று எண்ணிய மகிஷி; தான் அழியாவரம் பெற்றுவிட்டதாக கர்வம் கொண்டு  தேவலோக சிம்மாசனத்தை கைப்பற்றியதோடு தேவர்களையும், பூலோகத்தில் முனிவர்களையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தாள். மகிஷியின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பரமேஸ்வரனிடம் முறையிட்டு தம்மை காப்பாற்ற வேண்டினர்

யார் இந்த மஹிஷி ?: முற்பிறப்பில் தனது கணவனான தத்தாத்ரேய ரிஷியின் (அத்திரி முனிவருக்கும் அநுசூயைக்கு பிறந்த மகனும், துருவாசர் சகோதரனுமாகிய தத்தாத்ரேயர்) சாபத்தால் அசுர குலத்தில்  பிறந்து வாழ்ந்து வந்தாள். முற்பிறப்பில் அவர்கள் கணவன் மனைவியாக இருந்த போது தத்தாத்ரேய ரிஷிக்கும் அவன் மனையியான லீலாவதிக்கும் இடையில் அவர்களின் பக்தியின் சக்தியை கூறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது லீலாவதி ஆணவ மேலீட்டினால் "நீ மகரிஷி அல்ல மகிஷி" என பழித்தாள். மகரிஷிக்கு கோபம் பொங்கவே  மெளட்டீகமும், பிடிவாதம் கொண்ட எருமைபோல் இருக்கிறாயே "நீ  அசுரகுலத்தில் மகிஷியாகக் பிறக்கக் கடவது" எனச் சபித்தார். இதைக்கேட்ட லீலாவதி  நீ என்னை சபித்துவிட்டாயா? எனக்கூறி பதிலுக்கு லீலாவதியும் "நீயும் சுந்தரமஹிஷமாவாக அசுர குலத்தில் பிறந்து எனக்கு கணவனாகக் கடவது" எனச் சபித்தாள். இருவருடைய சாபங்களும் பலித்தன.

(விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் காலவன் என்னும் முனிவரும் அவரது மகள் லீலாவதியும், சீடனாகிய தத்தாத்ரேயன் என்பவனும் வாழ்ந்துவந்தனர். தத்தாத்ரேயனிடம் விருப்பம் கொண்ட லீலாவதி அவனிடம் காதல் வயபட்டாள். தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். லௌகீக வாழ்க்கையில் ஆர்வம் காட்டாத தத்தாத்ரேயன் அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை. ஒருநாள் தத்தாத்ரேயன் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவனை நோக்கி, "தாங்கள் என்னைப் "பட்ட மஹஷி" (மனைவி) ஆக்கவேண்டும்" என லீலா வேண்டினாள். . அந்நேரம் கோபம்கொண்ட தத்தாத்ரேயன், நீ மஹிஷியாகவே (எருமை) போ என சபித்தானாம். அவ்வாறாக அவள் கரம்பன் என்னும் அசுரனின் மகளாக எருமைத் தலையோடு பூமியில் பிறந்தாள் என கூறுவாருமுளர்.)

மணிகண்டன் அவதாரம்:
கைலாசவாசன் தேவர்களின் குறை தீர்க்க எண்ணி விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ-வைஷ்ணவ ஜோதியான  ஐயனாரிடம் சென்று மகிஷியை மர்த்தனம் செய்து தேவர்களைக் காப்பாற்றவும், பந்தள மன்னனின் பிள்ளைக் கலி தீரக்கவும், சபரிக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவும்  பாண்டிய நாட்டின் இராசசேகர மன்னனுக்கு மகனாக அவதரிக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது என அனுக்கிரகித்து; பூலோகத்தில் உனது அவதார நோக்கம் நிறைவுற இதோ இந்த "மணி" உனது கழுத்திலே "ரட்சா பந்தனமாக இருக்கட்டும்" என்று கூறி ஒரு மணி மாலையை அணிந்தார். அதன் பின் ஐயப்ப பிரானை  ஒரு குழந்தையாக்கி பம்பா நதிக்கரையை அடைந்தார். அங்கு அவர் ஓர் ரிஷிபோல் ரூபமெடுத்து சாஸ்தாவாகிய குழந்தையுடன் வேட்டைக்கு வந்த தனது பக்தனான ராஜசேகரனின் வரவை எதிபார்த்து ஒரு மரத்தடியில் காத்திருந்தார்.

வனத்தில் வேட்டைக்கு வந்த பந்தள தேசத்து மன்ன பம்பா நதிக்கரை பக்கம் வந்தபோது ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.  குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மன்னன். என்ன ஆச்சரியம் கோடி சூரியனின் பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை கழுத்தில் மணியுடன் அழுது கொண்டிருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போல மன்னனைப் பார்த்ததும் சிரித்தது. மன்னன் கையில் எடுத்தான் அந்தக் குழந்தயை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான்,  யாரையும் காணவில்லை.

அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.  "மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனக் கூறி மறைந்தார்.

கழுத்தில் மணி இருந்ததால் "மணிகண்டன்" என்னும் பெயர் சூட்டினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணிகண்டன் வளர்ந்து வந்தான்.  மணிகண்டன் வந்த சில நாட்களில் ராணிக்கும் எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என பெயர் சூட்டி வளர்த்து வரலாயினர்.

ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தான். தெய்வக்குழந்தையான அவன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தான்.

பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தான். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும் செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார்  என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பனை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினான்.

தனது ஞான அறிவாலும், சமயோசித புத்தியாலும் பூலோகத்தில் இருந்த பல பண்டிதர்களையும், வித்துவான்களையும் தோற்கடித்து பந்தள நாட்டின் புகழை நிலை நாட்டினான். மணிகண்டன் திறமைகளைக் கண்டு  பொறாமையும், வெறுப்பும் கொண்ட மந்திரியார்; மணிகண்டன்  யார் என்பதை உணராது;  அவர் இராஜாவானால் தனக்குள்ள எல்லாச் செல்வாக்கும், வசதிகளும் பறிபோய்விடும் என எண்ணி மணிகண்டனை கொன்றுவிட தீர்மானித்து பலவழிகளாலும் முயற்சிகள் செய்தான். உணவில் நஞ்சூட்டச் செய்தும், நஞ்சு பூசப்பெற்ற அம்புகளை ஏவச்செய்தும், பலரை ஏவிவிட்டு தாக்கியும் அவரைக் கொல்ல எடுத்த எல்லா முயற்ச்சிகளும் அவரின் தெய்வ சக்தியாலும், இறைவனின் அருளிளாலும் தோர்வியில் முடிந்தது.

இதற்கிடையில் மணிகண்டன் பந்தள தேசத்தில் கொள்ளையிட துர்க்கிஸ்தானிலிருந்து படை வீரர்களோடு வந்த கடற் கொள்ளைக்காரனான பாபர் என்ற  கொள்ளைக்காரனை தனது அன்பு வார்த்தைகளினால் அடிபணியச் செய்து அவனைத் தனது நண்பனாக்கினார்.  அதன் பின்னர் பந்தள நாட்டை ஆக்கிரமிக்க வந்த உதயனையும் அவனது தம்பிமாரான உக்கிர சேனன், பத்திர சேனன் ஆகியோரையும், படைகளையும் பாபரின் உதவியுடன் அழித்து. பந்தள நாட்டை பேராபத்தில் இருந்து காப்பாற்றினார்.

மணிகண்ட குமாரனின் வரவால் நாட்டில் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகர மன்னன், மணிகண்ட குமாரனுக்கு "பட்டாபிஷேகம்" செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால் வேதனை அடைந்த மந்திரி அரசனிடம் சென்று அதனைத் தடுப்பதற்காக பல காரணங்களை முன்வைத்து பட்டாபிஷேகத்தை நிறுத்த முயற்ச்சித்தான். மந்திரியாரின் சூழ்ச்சி அரசனிடம் பலிக்காததினால், பட்டாபிஷேகம் நடைபெற்வதற்கு முன்  மணிகண்டனை  கொன்று விடபல சூழ்ச்சிகள் செய்தான்.

மந்திரியார்  மகாராணியாரை அணுகி; இந்த நாட்டை அரசாளும் உரிமை அரசபரம்பரையில் வந்த ராசராசனுக்கே உண்டு என்றும், காட்டில் கண்டெடுத்த மணிகண்டன் முடிசூடினால் மகாராணியாரின் சொந்த மகனான ராஜராஜனுக்கு அரசாளும் வாய்ப்பு கிடையாமலேயே போகும் என்றும் ராஜ பரம்பரையில் வந்த ராஜ ராஜனை யுவராஜன் ஆக்குவதே ராஜ நீதி என்றும் பல துர்ப்போதனை செய்து  கோபெருந்தேவியின் மனத்தை மாற்ற முயற்ச்சித்தான். அவை ஒன்றும் பலனளிக்கவில்லை.

இதற்கிடையில்; இறை அருளால் மஹிஷிக்கு தேவலோக வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டதனால், லௌகீக வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு; முற்பிறப்பில் தனது கணவனாக இருந்த ததாத்திரேயன் தனது சாபத்தினால் அசுர குலத்தில் பிறந்து சுந்தரமஹிஷி என்ற பெயருடன் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்து; பூலோகத்திற்கு வந்து சுந்தரமஹிஷியை விவாகம் செய்து லௌகீக வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்தாள்.

(தேவலோகத்தில் மகிஹி சம்காரம் நடைபெற்றால் தேவலோகம் அசுரரின் இரத்தக் கறை பட்டு கழங்கம் ஏற்பட்டு விடும் என்பதனால் மஹிஷி சம்காரம் பூலோகத்தில் நடைபெற்றதாக ஐதீகம்)  

மஹிஷியின் சம்கார காலம் நெருங்கி வரவே மணிகண்டனை மஹிஷி இருக்கும் வனத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஒரு சாதகமான சந்தற்பத்தை ஏற்படுத்துவதற்காக பரமசிவனே மகாராணிக்கு தலைவலியை வரச்செய்தார். அந்த தலைவலியையை சாதாரண மருந்துகளால் மாற்ற முடியாது போகவே, மருந்தாக புலிப்பால் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லுமாறு மந்திரியார் அரண்மனை வைத்தியரை கூறவைத்து, தந்திரமாக மணிகண்டனை புலிகள் நிறைந்த காட்டிற்கு அனுப்பி கொல்ல நினைத்தான்.

(மகாராணி கோப்பெருந்தேவி மந்திரியாரின் துர்ப்போதனையால் மனம் மாறி தாங்க முடியாத தலைவலி உள்ளது போல் நடித்ததாகவும் கூறுவாருமுளர்.)

மணிகண்டனும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்து அவை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதால்; புலிப்பால் கொண்டுவர சம்மதித்து காட்டிற்கு செல்ல ஆயத்தமானார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூட்ச்சி இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மனம் கலங்கிய மன்னனையும் மணிகண்டன் ஒத்துக் கொள்ள வைக்கிறான்.

அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தன் அருமைக் குமாரன் தவிப்பானே என எண்ணி; மணிகண்டன் தனது குலதெய்வமான சிவனைப் பூஜை செய்வதற்காக; ஒரு துணியின் ஒரு பக்கத்தில் மூன்று கண்ணுள்ள தேங்காயும், பூசைக்குரிய பொருட்களும்; மற்றைய பக்கத்தில்; மணிகண்டன் பாதையில் உண்பதற்கான ஆகாரப் பொருட்களும் வைத்து இரண்டு முடிச்சுகளும் தலையில் இருக்கக் கூடியதாக ஒன்றாக இணைத்து; பூஜைப் பொருட்கள் உள்ள முடிச்சு முன்பக்கம் இருக்கக் கூடியாக, "இருமுடிபோல்" ஐயப்பரின் தலைமீது வைத்து வழியனுப்பி வைத்தான்.

அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், அந்தமலை "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள்.

மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப்படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது.

மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண் வடிவெடுத்து - மஞ்சள் மாதாவாக ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

அப்போது ஐயன்;  என்னுடைய அவதார நோக்கமே மகிஷி சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் மாளிகைபுறத்தம்மன் (மஞ்ச மாதா) என்ற பெயருடன் என் பக்தர்களுக்கு அருள்புரிவாயாக"என்று கூறினார் . எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், (புதியதாய்) கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று கூறினார்.

மகிஷியின் கொடுமைகள் நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலிகளாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் செல்ல ஆயத்தமாகினர்.

புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு மலையில்; சாபத்தால் கிழரூபம் அடைந்த "சபரி" என்ற பித்யாதர ஸ்திரீ தவம் செய்து கொண்டிருந்தாள்.

கடும்புலியின் சிம்மத்தின்மீது வருகின்ற மணிகண்டனை அவள் உபசரிக்கவே அவளையும், அவள் சாபத்தையும் அறிந்த ஐயனும் அவளுடைய சாபத்தை நீக்கி தேவலோகம் செல்லும்படி அருளினார்.

தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ அந்த மலை (சபரி) தன் பெயரால் வழங்க வேண்டும் என்றும் அம்மலையை அடையும் மானிடர்கள் பிறவி என்னும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்து, பதினெட்டு பிரதட்ஷனை நமஸ்காரங்கள் செய்தாள்.

மணிகண்டனும் வித்யாதர மங்கை தன்னைப் பதினெட்டு சித்திகளையும் பதினெட்டு படிகளாக அமைத்து கோயில் கொள்ளுவதாகவும், ஒவ்வொரு வருஷமும்; தன்னைத் தரிசிக்க வருபவர்கள் ஒவ்வொரு சித்தியையும் அடைந்து பதினெட்டு வருஷங்கள் தரிசித்தவர் சித்த புருஷர்களான முமூச்சுகளாவார்கள் என்றும் அதற்காகச் செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாயும் வாக்களித்து பந்தள தேசத்திற்குப் புலிக்கூட்டத்துடன் வந்து சேர்ந்தார்.

புலிக்கூட்டம் ஒன்று பந்தள அரண்மை நோக்கி வருவதையும் பெரிய புலி ஒன்றின் சிம்மத்தின் மீது மணிகண்டன் அமர்ந்திருப்பதையும் கண்டு மக்கள் அதிசயமும், பீதியும் அடைந்தனர்.

மணிகண்டனை யாரென்று அறிந்த பந்தள தேசத்து மந்திரியார் தன்னுடைய குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான்.

மணிகண்டனும், நீங்கள் எவரும் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும்; எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக அவதரித்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கியுள்ள இந்த வேளையில் இறைவனின் ஆணைப்படி தர்மத்தை நிலைநாட்ட தர்மதாஸ்தாவாக தவம் செய்யப் புறப்படும் காலம் நெருங்கி விட்டது எனக் கூறினார்.

இதைக்கேட்டு மனமுடைந்த மன்னனும், மகாராணியாரும் தங்கள் பட்டாபிஷேகம் நடைபெறும்போது அணிவதற்காக பலநாட்களாக தேடி வைத்துள்ள ஆபரணங்களை அணிந்து ஒருநாளாவது சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என பிடிவாதமாக கேட்டனர்.

ஐயப்பரும் பந்தள சிம்மாசனத்தை விட மேன்மையான சிம்மாசனம் எனக்காக காத்திருக்கின்றது. அது இறைவனின் நியதி. அதனை விலக்கவோ தடுக்கவோ இயலாதகாரியம் என்று கூறி; தாங்கள் எனக்காக அன்போடு வைத்திருக்கும் அந்த ஆபரணங்களை "மகர ஜோதி தினத்தன்று அணிந்து தங்களுக்கு காட்சி தருவேன்" என்று உறுதியளித்தார். அத்துடன் அவ் திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரி மலைக்கு எடுத்து வரப்பட வேண்டும், எந்த ஆலயங்களில் இறக்கப் பெற்று ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதனையும் மன்னனுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

மன்னன் "பகவானே " தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்தி, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு ஓர் கோயில் எழுப்புங்கள் என்றான்.

அந்த அம்பு சபரிமலையில் வீழ்ந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், இடப்பாகத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறி; தான் இனி அரச மாளிகையில் தங்க முடியாது என்றும், சபரிமலைக்குத் தவம் செய்யப் போவதாயும் கூறி மறைந்தார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

புத்திர சோகத்தினால் வருந்திய அரசன் அகஸ்திய முனிவரால் ஹரிஹரப் புத்திரரின் தத்துவங்கள் உபதேசிக்கப்பெற்று ஐயனின் உத்தரவுப்படி கோவில் அமைத்து மானிடப் பிறவியின் நற்கதி பெற அருள் புரிந்தார்.

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் அனுஷ்டித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு "ஜோதி" வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

மணிகண்டன் தனது குருவுக்கு குரு தட்சணையாக ஆண்டு தோறும் "மகர ஜோதியாக" காட்சிஅளிக்கிறார்.

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐய்யப்பா

சபரிமலை யாத்திரை - தரிசிக்க இங்கே அழுத்துங்கள்

29.11.2014: 5526


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS