Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் சாந்தை சித்தி விநாயகர் - ஆய்வறிக்கை

சாந்தை சித்தி விநாயகர் - ஆய்வறிக்கை

E-mail Print PDF
images/ganesha1.gif

ஆக்கம்: திரு. த. குணத்திலகம் (ஒய்வு பெற்ற ஆசிரியர்) - சாந்தை

இலங்கையின் சிரசாக வடபாலமைந்துள்ள யாழ்ப்பாண குடாநாடின் முகம் போல் தோன்றும் பண்டத்தரிப்புப் பிரதேசத்தில்; வரலாற்று புகழ்மிக்க ஜம்புகோளத்துறையை  அண்டிய, செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும்.  இக்கிராமம் இலங்கையின் வரலாற்றுடன் மிகவும் தொடர்புடையதாகும்.

இலங்கை தோன்றியகாலம்  முதல் இங்கு குடிகொண்டிருப்பவர் சாந்தை அருள்மிகு சித்தி விநாயகர் ஆவார். இவ்விநாயகரது வரலாறு மிகப் பழமையானது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பியதீசன் இந்து சமயத்தை சேர்ந்தவன். இக்காலத்தில் இந்தியாவை ஆண்ட அசோகனுக்கும் தேவநம்பியதீசனுக்கும் மிகுந்த நட்பு இருந்தது. கலிங்கப் போருடன் மனமாற்றமடைந்த அசோகன் புத்தசமயத்தைத் தழுவியபோது தேவனம்பியதீசனும் புத்த சமயத்தை தழுவினான் என இலங்கையின் வரலாற்றை கூறும் மிகப் பழம் இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது. தீசனின் வேண்டுகோளின்படி இலங்கைக்கு புத்தசமயத்தை பரப்ப வந்த மஹிந்த தேரரும், சங்கமித்தையும் ஜம்புகோளத்துறையில் வந்திறங்கியபோது தேவநம்பியதீசன் இவ் ஆலயத்தின் வடக்கே அமைந்திருந்த மடத்தில் தங்கியிருந்து வரவேற்றதாகக் கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கும் இலங்கை வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டாதலால் இங்கு இலங்கை வரலாற்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

 

ஜம்புகோளத்துறை ஒரு காலத்தில் மிகப்பெரிய வர்த்தகத் துறையாக இருந்துள்ளது. இதன் பெயரை ஆராயும்போதே இதன் பழமையை அறியமுடிகின்றது. ஜம்பு என்ற பாரசீகச்சொல்லும் கோள என்ற சமஸ்கிருதசொல்லும் துறை என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்ததே ஜம்புகோளத்துறையாகும். இம் மும்மொழிசொற்பெயரின் பொருள், சிறிய படகுகளும், சிறிய மரக்கலங்களும் வந்தடையும் துறை என்பதாகும். இதன்மூலம் வெளிநாட்டு வர்த்தகம் இங்கு நடைபெற்றதை ஆய்தறியமுடிகிறது. இக்கால வணிகர்கள் மூலம் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியில் காணப்படும் சம்புநாதேஸ்வரர், சாந்தை சித்தி விநாயகர் ஆலயம் ஒரே காலத்தவையாகக் கருதப்படுகின்றன. பன்னெடுங்காலங்களுக்குமுன் ஏற்பட்ட கடல்கோள்(சுனாமி) காரணமாக சம்புநாதேஸ்வரர் ஆலயம் இடம்மாறியது. மக்களை காப்பற்ற சீற்றத்துடன் வந்த கடலுடன் போராடிய விநாயகர் தம் ஒரு கண்ணையும் ஒரு காதையும் இழந்தார் என கர்ணபரம்பரைக்கதைகள் மூலம் அறியமுடிகிறது.  சம்புநாதர்பற்றி பதினெண்புராணங்களில் ஒன்றான தட்சணகைலாய புராணத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். சம்புநாதர் ஆலயம் நேபாளதேசத்தில் காணப்படுவதால் இது நேபாள வணிகர்கள்மூலம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இக்காலத்தில் தென்னிந்தியவிலிருந்து  இங்கு வந்து வியாபாரம் செய்த செட்டி இனத்தவர்கள் தற்போதுள்ள சாந்தை, பணிப்புலம் ஆகிய பெருநிலப்பரப்புக்களில் குடியேறினர். இப்போதுள்ள நிலங்கள் அனைத்தும் முன்பு செட்டி இனத்தவர்களுக்குச் சொந்தமாக இருந்ததை அறியமுடிகிறது. இவர்கள் இங்கு குடியேறும்போது கொண்டுவந்து வழிபட்ட சந்தோஷிவி நாயகரே நாளடைவில் மருவிச் சாந்தை விநாயகர் என அழைக்கப்படுகிறது. சாந்த குணமுள்ள விநாயகர் என்பதால் சாந்தவிநாயகர் என்னும் பெயர் மருவிச் சாந்தைவிநாயகர் ஆயிற்று என கொள்வாருமுளர். ஆனால் தென்னிந்தியாவில் செட்டி இனத்தவர் வாழ்ந்த இடத்தில் சந்தோஷிவிநாயகர் ஆலயம் இருந்தததாகவும் அவர்கள் இங்கு குடியேறிய போது இங்கும் ஆலயம் அமைத்து வழிபட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. அக்காலச் செட்டி இனத்தவர்களால் அனேக நெல் வயல்கள் இவ்வாலயத்தின் பூசைகளுக்காகத் தருமம் செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

இவ்வாலயம் நீண்டகாலமாக தென்னிந்தியச் செட்டி இனத்தவர்களாலேயே பரிபாலிக்கப்பட்டு வந்தது. காலவோட்டத்தில் இங்குள்ள செட்டி இனத்தவர்கள் இந்தியாவுக்கும் வேறு பல நாடுகளுக்கும் சென்றுவிட்டதால்  அவர்களின் பரம்பல் மிகக்குறைந்துவிட்டது. இருந்தும் இங்கு நிலையாக இருந்த செட்டி இனத்தவர்களால் ஆலயம் பரிபாலிக்கப்பட்டு வந்தது.
கடைசியாக இவர்கள் பரம்பரையில் வந்த கந்தர் ஆறுமுகம் செட்டியார் அவர்கள் சிறப்புடன் பூசைகள் செய்து பரிபாலித்துவந்தார்.

இவர் காலத்தில் வாழ்ந்த பணிப்புலம் பிரபல வர்த்தகர் தம்பு சிவசம்பு அவர்களால் இவ்வாலய தலவிருட்சமான இலுப்பைமரத்தடியில் இவ் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு. பூசைகள் கிரமமாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆறுமுகம் செட்டியார் அவர்களின் மறைவிற்குப் பின் இவரின் மகனான பஞ்சாட்சரசெட்டியார் பூசைகள் செய்து வந்தார். அவரும் வெளிநாட்டில் வசித்த தம்மக்களுடன் சங்கமிக்க  இவ் ஆலயம் கிராமமக்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இன்று கிராமமக்கள் பல புனருத்தாரணங்கள் செய்து நித்திய நைமித்திய பூசைகளுடன் விநாயகசஷ்டி, விநாயகசதுர்த்தியுடன் கூடிய அலங்காரத்திருவிழா முதலியன செய்து வழிபடுகின்றனர்.

இன்று புதுப்பொலிவுடன் காணப்படும் விநாயகர் பற்றிப் பல கர்ணபரம்பரை கதைகள் உள்ளனவாயினும் அவைபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் கூறலாம் என்றெண்ணியுள்ளேன். "சாந்தைக் கிராமத்தின் சிறப்பு"  பற்றி ஆய்வு செய்யும்போது மேலும் பல விபரங்கள் தரப்படும் எனக்கூறி முடிக்கிறேன்.

நன்றி


ஆய்வு செய்தவர்: திரு. த. குணத்திலகம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்.
சாந்தை,
பண்டத்தரிப்பு.01.05.2010

 

பிள்ளையார் கதை
கணபதி துணை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

'சரஸ்வதி துதி'
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
[அரில் = குற்றம்.]


நூல்:

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென

அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப

எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென

எமையா ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு

பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளவு உற்றுப்

பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்

சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று

விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்

பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி

ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை

மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்

பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச

அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து

மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்

பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில

அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான் [50]

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்

கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி

மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்

கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்

பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்

பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்

சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி

வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்

தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என

மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்

சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று

சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி

நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்

மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]

மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து

தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து

ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்

சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து

தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி

மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்

நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்

கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்

விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்

கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்

பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி

ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்

பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்

பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்

பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்

குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்

திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் [150]

[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்

பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே

சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து

பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்

பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்

திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு

ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக [170]

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க

நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்

செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்

திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு

ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்

பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்

கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்

ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி

ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்

காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து

தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும் [200]


"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்

ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்

வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி

முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே

அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்

சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி

வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்

கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து

வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]

செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ

வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்

திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்

கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்

யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்

மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]

ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்

போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே

நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்

தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்

உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்

கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்

மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்

வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த

தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி

எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்

செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்

பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி

ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்

ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்

உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்

என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்

புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்

ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்

சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்

மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்

விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்

தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]

அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்]

பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்]

பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து]

கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]

விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து

ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்

ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்

பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]

பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்

ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்

ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்

தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு

[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்

[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்

நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்

[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு

உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்

தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்

[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]

இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்

திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்

[செரு=போர்]

புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்

பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி]

அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து

தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை]

அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்

உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்

[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]

கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்

[பாண்=கள்]

தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்

[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]

இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்

எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப

[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']

அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை

[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]

நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]

 

அறுகின் மகிமை
ஒரு சமயம் கெளண்டின்ய முனிவர் தன் மனைவியான ஆசிரியையுடன் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த காலத்தில், அவர் அவ்வளவு செல்வம் பெற்றவராய் இருக்கவில்லை. கெளண்டின்யரோ விநாயகர் மேல் அளவற்ற பக்தியுடன் அவரைப் பூஜித்து வந்தார். தினமும் விநாயகருக்கு அறுகம் புல்லால் அர்ச்சனைகளும் செய்து வந்தார்.

ஆசிரியைக்குக் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் நாடி பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே எனத் தாபம் இருந்து வந்தது. என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு உற்ற பணிவிடைகளைச் செய்து வந்தாள். என்றாலும் செல்வம் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது அவளுக்கு. மனைவியின் முகவாட்டத்தைக் கவனித்த கெளண்டின்ய முனிவர் காரணத்தை அறிந்திருந்தாலும், மனைவியின் வாயாலும் அதைக் கேட்டு அறிந்தார்.

மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு அருகின் மகிமையையும், இறைவனின் மேன்மையையும் உணர்த்த வேண்டி, கெளண்டின்யர் அவளிடம், அறுகு ஒன்றை விநாயகருக்குச் சமர்ப்பித்து விட்டு எடுத்துத் தந்தார். “இந்த அறுகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!” என ஆசியும் வழங்கினார்.

ஆசிரியை திகைத்தாள். “என்ன? ஒரு சிறிய அறுகம்புல்லின் எடைக்கு ஒரு குந்துமணிப் பொன் கூட வராதே?” என நினைத்தாள். அலட்சியமாகவும், நிதானமாகவும் தேவேந்திரனை அடைந்தாள். அவனிடம் நடந்ததைச் சொல்லி இந்த அறுகின் எடைக்குப் பொன் வேண்டுமாம் எனவும் கேட்கவே, தேவேந்திரன் திகைத்து அருகின் எடைக்குப் பொன்னா? என்னால் இயலாத ஒன்றே எனத் தவித்துத் தன் செல்வம் பூராவையும் தராசில் ஒரு பக்கமும், அருகை மறுபக்கமும் வைத்தான்.

அப்போது அறுகின் எடைக்கு அந்தச் செல்வம் வரவில்லை. தேவேந்திரன் தானே ஏறி உட்காரவே சமனாயிற்று, தராசு. இப்போது திகைத்தாள் ஆசிரியை. இருவரும் கெளண்டிய முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். கெளண்டின்ய முனிவரிடம் நடந்ததைச் சொன்ன ஆசிரியை வெட்கித் தலை குனிந்தாள். தேவேந்திரனைப் போகச் சொன்ன கெளண்டின்யர், ஆசிரியையிடம் இந்த அறுகின் மதிப்பு உனக்குத் தெரியவில்லை என்று அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

தேவலோகத்தில் தேவகன்னிகள் நாட்டியமாடிய வேளையில் அங்கே வந்த யமதர்ம ராஜன் தன் மனைவியைப் பார்க்க எண்ணித் தன் தர்ம லோகத்துக்குச் செல்லும் வேளையில் அவனின் உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் ஒரு அசுரனாக மாறியது. அக்னியைவிடவும் அதிகமான வெப்பத்துடன் இருந்த அந்த அசுரன் “அனலாசுரன்” எனவே அழைக்கப் பட்டான். அக்னி தேவனுக்கே அவனை நெருங்க முடியாத அளவுக்குத் தகித்துக் கொண்டிருந்தான். யமதர்ம ராஜனைத் தவிர மற்றவர் அனலாசுரனின் கொடுமையால் தவித்தனர்.

அப்போது ஒரு அந்தணர் வடிவில் தோன்றிய விநாயகர், அவர்களைத் தேற்றி அனலாசுரனைத் தேடிப் போனார். தம் சுய உருவோடு விஸ்வரூபம் எடுத்த அவர், தன் துதிக்கையால் அந்த அனலாசுரனை அப்படியே எடுத்து விழுங்கினார். பேழை வயிற்றுக்குள் மூன்று உலகையும் அடக்கிய விநாயகரின் வயிற்றுக்குள் அனலாசுரன் போகவும் அனைவரும் வெப்பம் தாங்க முடியாமல் தவித்தனர்.

பிரம்மா விநாயகனின் மேனி குளிர்ந்தால் தான் இந்த வெப்பம் தணியும் என அனைவரையும் விநாயகரின் மேனி வெப்பத்தைக் குறைக்கச் சொல்லவே, அனைவரும் ஒவ்வொரு வழியில் விநாயகரின் வெப்பத்தைத் தணிவித்தார்கள். ஒருவர் பாலாக அபிஷேஹம் செய்ய, இன்னொருவர், சந்தனம், பன்னீர், தேன், தயிர் என அபிஷேஹம் செய்கின்றனர். அப்போது அங்கே வந்த ரிஷி, முனிவர்கள் விஷயம் தெரிந்து கொண்டு 21 அறுகம்புற்களால் விநாயகரை அர்ச்சிக்கவே விநாயகர் மேனி குளிர்ந்தது.

இந்த மூவுலகின் வெப்பமும் குறைந்தது. அன்று முதல் விநாயக வழிபாட்டில் அருகு முக்கிய இடத்தைப் பிடித்தது. வேறு பூக்களோ, மலர்களோ, இலைகளோ இல்லாவிட்டாலும் ஒரு சிறிய அறுகே விநாயகரை மனம் மகிழ்விக்க வைக்கும்.

ஸ்ரீ கணேச "பஞ்சரத்னம்"
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசி'தேப தைத்யகம்
நதாச'பாசு' நாச'கம் நமாமி தம் விநாயகம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸ¤ராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸ¤ரேச்'வரம் நிதீச்வரம் கஜேச்'வரம் கணேச்'வரம்
மஹேச்'வரம் தமாச்'ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்த லோகச'ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச'ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச' பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம்

மஹா கணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன் வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்'வரம்
அரோகதா மதோஷதாம் ஸ¤ஸஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயைரஷ்ட பூதி மம்யுபைதி ஸோ(அ)சிராத்*

 

 

வேழ முகம்
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றி மிகுத்து வேலவனைத் தொழ புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநயகனைத் தொழ துள்ளி ஒடும்
தொடர்ந்த வினைகள்
அப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பையப்பனைத்
தொழ வினையறுமே

 

நன்றி

பணிப்புலம்.கொம்
பணிப்புலம் மக்களின் இணையத்தளம்

 


BLOG COMMENTS POWERED BY DISQUS