Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் - வரலாறும் நிகழ்வுகளும் - புதிய பல விபரங்களுடன் - புளியங்கூடல் இராஜமஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் வீடியோ இணைப்பு

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் - வரலாறும் நிகழ்வுகளும் - புதிய பல விபரங்களுடன் - புளியங்கூடல் இராஜமஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் வீடியோ இணைப்பு

E-mail Print PDF
Image may contain: 2 people

தேவஸ்தான வரலாறும் நிகழ்வுகளும்


ஆக்கம்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம் - மூத்த தர்மகர்த்தாவும் அதிகார பூசகரும்       

"முத்தராய் மனமோன மெய்திய பக்தர் மேவுநற் பணிப்புலத் உறை
முத்துமாரி பொன்முளரி மென்பதஞ் சித்தமிருத்துவார் சித்தராவரே"

இ. நமசிவாய தேசிகர்

இந்து சமுத்திரத்தின் "முத்து" என வர்ணிக்கப் பெறும் ஈழ நாட்டின் "சிரம்" போல் அமைந்துள்ள யாழ்ப்பாண குடாநாட்டில் திலகமிட்டாற்போல்  விளங்கும் பழம் பெரும் பட்டணமாம் பண்டத்தரிப்பில்  சைவமும், தமிழும் தழைத்தோங்க சமயத் தொண்டாற்றி வரும் வீரசைவர்கள் செறிந்து வாழும் பணிப்புலம் பதிதனில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான வரலாறும் நிகழ்வுகளும்; வளர்ந்து வரும் எமது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக இங்கு பிரசுரமாகின்றது.


சுருக்கமாக: தற்போதைய ஆலய பரிபாலகர்களின் கூற்றின் பிரகாரம்;  முன்னொரு காலத்தில் (சுமார் 300 வருடங்களுக்கு முன்பு) பூசகர் வேலாயுதர் கனகர் என்பவரால் பராமரிக்கப் பெற்று அவரின் பரம்பரையில் வந்தோரால் பராமரித்து, பூசைகள் செய்து வந்த பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம்; ஸ்தாபகர் பரம்பரையுடன் தொடர்புடைய பூசகர்களான வேலாயுதம், தம்பிப்பிள்ளை ஆகிய இருவரும் 1976ம் ஆண்டு இருவார கால இடைவெளியில் சமாதியாகியதும்; 1970 ம் ஆண்டு திருப்பணி செய்வதற்காக அமைக்கப் பெற்ற திருப்பணிச் சபையினர்; ஆலய பரிபாலனத்தில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டமையால்; 1976 ம் ஆண்டு ஆலயத்தில் குழப்பம் ஏற்பட்டு பூசைகள் எதுவுமின்றி பூட்டப் பெற்று மல்லாகம் நீதிமன்றில் 10845, TR-2149, TR-1807 வழக்குகள் நடைபெற்று வந்தன. இவற்றுள் TR-2149 வழக்கானது மல்லாகம்  நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பெற்றதனால் (சுப்பிறீம்) உயர் நீதிமன்றிற்கு அப்பீல் செய்யப்பெற்று வழக்கு நடைபெற்று வந்தது.

இக் காலகட்டத்தில் இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் ஆலய தர்மகர்த்தாக்கள் 1978ம் ஆண்டு முதல் சுமார் இரண்டு வருடகாலமும்; வழிபடுவோர் சபையினர் 1985 முதல் 1994ம் ஆண்டுவரையும் ஆலயத்தை பரிபாலித்து பூசைகள் செய்வித்தும் வந்துள்ளனர்.

இக்கால கட்டத்தில் மல்லாகம் நீதிமன்று தீக்கிரையானதால் வழக்கு கோவைகள் யாவும் தீக்கிரையானதுடன் மல்லாகம் நீதிமன்றும் இயங்க முடியாது போயின.

1993 ம் ஆண்டுவரை எதுவித நிரந்தர தீர்வும் நீதி மன்றுகளினால் வழங்கப்பெறாத நிலையில்; அப்போது வடமாகாணத்தில் நீதி நிர்வாகத்தினை பரிபாலித்து வந்த தமிழீழ காவல்துறையினர் தலையிட்டு விசாரனை செய்தபின் ஆலய நிர்வாகத்தினை 1994ம் ஆண்டு ஆலய பொறுப்பாக இருந்து வந்த உரிமைகாரர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆலய பரிபாலகர்களினால் ஆலயம் திறக்கப்பெற்று இலிங்கதாரிகளினால் பூசைகள், திருவிழாக்கள் யாவும் மிக சிறப்பாக செய்யப்பெற்று வருகின்றன.


விரிவாக: இக் கிராமத்தில் ஆலயப் பணி செய்வோர் நிறைந்து வாழ்வதால் ”பணிப்புலம்” என பெயர் பெற்றது என ஒரு சாராரும்; பன்னைப் பற்றைகள் நிறைந்து காணப் பெற்றதால் பன்னைப்புலம் என பெயர் பெற்று காலப் போக்கில் அப் பெயர் மருவி பனிப்புலம் - பணிப்புலம் என அழைக்கப் பெறுவதாக இன்னொரு சாராரும் கூறுகின்றனர். ஆனால் ஆலய பணி செய்வோர் நிறைந்து வாழ்வதால் “பணிப்புலம்” என பெயர் பெற்றது என்பதனையே சான்றோர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு  இக் கிராமத்தில் வாழ்ந்து வந்த வேலாயுதர் கனகர் அவர்கள் ஒரு அம்பிகைப் பக்தராவார். அவர் ஓர் நன் நாள் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தான் ஓர் கனவு கண்டதாகவும் அதில் அம்பிகை தன் முன் தோன்றி பின் வளவில் இருக்கும் பன்னைப் பற்றைக்குள் கத்தி ஒன்று இருப்பதாகவும், அவ்விடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும், அக் கத்தியை அவ்விடத்தில் வைத்து தன்னை ஆதரிக்கும்படி தனக்கு அருள் வாக்கு கொடுத்து மறைந்து விட்டதாகவும் கூறியபடி அவர் பன்னைப் பற்றைகள் நிறைந்த (தனக்குச் சொந்தமாக இருந்த 7 பரப்பு வளவின்) பின் வளவிற்குச் சென்று சல்லடை போட்டு தேடலானார்.

என்ன ஆச்சரியம்! செழித்தோங்கி வளர்ந்து நின்ற பன்னைப் பற்ரை ஒன்றின் அடியில் "மிருகபலியிடும் கத்தியின் தோற்றமுடைய ஒரு சிறிய கத்தி" நிமிர்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டார். தான் கண்ட கனவு நனவாகி விட்டதே என பரவசமடைந்தார். இச் செய்தியை ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன் அவர் அவ் இடத்தில் சிறிய ஆலயம் அமைத்து அப்புனித கத்தியை வைத்து  பூசைகள் செய்து வழிபட்டு வந்ததாக தற்போது ஆலய தர்மகர்த்தாகாளாக இருபோரால் செவிவழி வந்த கதைகள் கூறுகின்றன. ஆனால்;
வேலாயுதர் கனகர் அவர்கள் உரிமையாளராகவும், தர்மகர்த்தாவாகவும் (ஆதீனகர்த்தா அல்ல), மனேச்சராகவும், பூசகருமாக உள்ளார் என 1906 ம் ஆண்டு ஆனிமாதம் 25ம் திகதி பிரசித்த நொத்தாரிஸ் வீ. சீனிவாசகம் அவர்கள் உறுதி இலக்கம் 11265 இல் அத்தாட்சிப் படுத்திய உறுதியின் பிரகாரம் உறுதிப்படுதப் பெற்றுள்ளது.

செவிவழி வந்த கதையின் பிரகாரம் இவ்வாலயம் எம்மூர் பெரியார் (கோவிந்தர்) ஒருவரினால் ஸ்தாபிக்கப் பெற்றதாகவும், அதன் பின்னர் வேலாயுதர் கனகர் பரம்பரையினர் பரிபாலித்து வந்ததாகவும்;

இறை அடையாளமாக மிருக பலியிடும் கத்தியைப் போன்ற கத்தி தானகவே தோன்றியமையால்; எம்மூர் மக்கள் அம்பிகையே மிருக பலி வேண்டி ”பேச்சி அம்பாளாக” காட்சி தந்துள்ளதாக எண்ணி “அம்பாளுக்கு” ஆடு, கோழி பலியிட்டு மாமிச படையல்கள் படைத்து வழிபட்டும் வந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல ஊர் மக்களிடையே தோன்றிய கொப்பளிப்பான், சின்னம்மை, பெரியம்மை போன்ற கொடிய நோய்கள் இறைவியின் அருளினால் நீங்கப்பெற்று செல்வச் செழிப்போடு வாழ்வதை கண்ணுற்ற ஸ்தாபகர்-பூசாரியார் இவ்வாலயத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது அம்பிகையின் வடிவமான ”முத்துமாரித் தாயே” என தீர்மானித்து தாமிர (ஐம்பொன்னாலான) முத்துமாரி அம்பிகையின் விக்கிரகம் ஒன்றை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததுடன் இதுவரை காலமும் பூசிக்கப் பெற்று வந்த புனித கத்தியையும் கருவறையில் வைத்து பூசைகள் செய்து, வழிபட்டு வந்தார்.

இவ் நிகழ்வின் பின்னர் அம்பிகையின் அருள் பெருகவே பொதுமக்களின் நேர்த்திகளும், நன்கொடைகளும் அதிகரித்தன. கிடைக்கப் பெற்ற நிதியை கொண்டு அவ்வப்போது ஆலய திருத்த-திருப்பணி வேலைகளும், ஆலய புனருத்தான-திருப்பணிகளும் செய்யப்பெற்று வந்ததுடன், தேரும் அமைக்கப் பெற்று ஆலயத்தில் மஹோற்சவ விழாவும் நடாத்தப் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹோற்சவ விழாவானது; ஆரம்பத்தில் வைகாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் (திருவிழா) நடைபெற்றதுடன், சில வருடங்களின் பின்னர் பத்து தினங்களாக அதிகரிக்கப் பெற்று, பத்தாவது தினம் வேள்வியோடு (மிருக பலி-மாமிச படையல்) கூடிய தேர்த் திருவிழாவாக கொண்டாடப் பெற்று வந்துள்ளது.

இவ்வாறு நிகழ்ந்துவரும் காலத்தில் இவ் ஆலயத்தில் நிகழ்வுற்ற ஓர் அற்புதம் அம்பிகையின் மகிமையை வெளிப்படுத்துகின்றது. செவிவழி வந்த கதை ஒன்றின்படி (கி.பி. 1898-1907 காலப் பகுதியில்)  இக் கிராமத்தில் பலர் கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு மரணித்தனர் என்றும் அதனால் ஊர் மக்கள் எல்லோரும் இவ் ஆலயத்தில் ஒன்று கூடி அக் கொடிய நோயில் இருந்து தம்மை காப்பாற்ற இறைவியின் அருள் வேண்டி வழிபட்டுக் கொண்டிருந்த பொழுது ஆலயத்தின் முன்பாக மர்மமாக தோன்றிய ஒரு மந்திரவாதி தன் கையில் வைத்திருந்த மந்திர கோலை ஆட்டியதன் மூலம் இக் கிராமத்தில் இருந்த எல்லா எலிகளையும் தம்மைச் சூழச்செய்தார் என்றும், அதன்பின் அவைகளை சம்பில்துறை கடற்கரை வரை அழைத்துச் சென்று மறைந்தார் என்றும் அதன் பின்னர் கொள்ளை நோய் அற்றுப்போகவே மக்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தனர் என்றும் மந்திரவாதியாக தோன்றியவர் அம்பிகையே என்றும் அம்பிகையின் மகிமையை பறைசாற்றுகின்றது.

(கி.பி. 1898-1907) காலப் பகுதியில் உலகின் பல பாகங்களிலும் கொள்ளை நோயினால் பீடிக்கப்பெற்ற சுமார் 3,70,000 மக்கள் உயிரிழ்ந்தனர் என வரலாறு கூறுகின்றது).

இவ் ஆலய நித்திய பூசைகள் யாவும் ஆலய தர்மகர்த்தா பரம்பரையில் வந்தோர்களினால் (வேலாயுதர் கனகர், கனகர் வேலாயுதர், வேலாயுதர் கனகர் ஆகியோரினாலும், அவர்களின் பின்னர் வேலாயுதர் கனகர் அவர்களின் பிள்ளைகளான சுப்பையா, கந்தையா, வேலாயுதம், தம்பிப்பிள்ளை ஆகியோரினாலும்) செய்யப்பெற்று வந்ததுடன் மகோற்சவ விழா கிரியைகள் சுளிபுரம் யாவும் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராமண குருமார் மூலம் நடாத்தப்பெற்று வந்ததுள்ளன.

தேர்த்திருவிழாவின் போது அம்பாளுக்கு மாமிச-படையல்கள் படைக்கப்பெற்று தேருக்கு முன்னால் மிருகபலி கொடுக்கப்பெற்ற பின்னரே தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெறுவது வளக்கமாக இருந்து வந்துள்ளது.

தேர்த் திருவிழாவின்போது இவ் ஆலயத்தில் முதலாவதாக பலியிடப்பெறும் ஆட்டுகடா புளியங்கூடலில் வசித்து வந்த வைரமுத்து என்பரின் உபயமாக இருந்தது. ஒருமுறை தேர்த் திருவிழா தினம் கடலில் புயல் ஏற்பட்டதனால் படகு சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதனால் முதலாவதாக பலியிட வேண்டிய ஆட்டுக்கடா உரிய நேரத்திற்கு ஆலயத்திற்கு வந்துசேர முடியவில்லை.

முதலாவதாக பலியிடவேண்டிய ஆட்டுக்கடா குறித்த நேரத்தில் வந்துசேராத காரணத்தால் இரண்டாவதாக பலியிட வேண்டிய ஆட்டுக்கடாவை முதலாவதாக பலியிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் முதலாவதாக பலியிட வேண்டிய ஆட்டுக்கடா ஆலயத்திற்கு வந்து சேர்ந்தது. தனது ஆட்டுக்கடா முதலாவதாக பலியிடப்பெறவில்லையே என புளியங்கூடலில் இருந்து வந்த உபயகாரனும், உறவினர்களும், நண்பர்களும் ஆத்திரமடைந்ததால் குழப்பம் மூண்டது. இக் கைகலப்பின்போது புளியங்கூடலில் இருந்து வந்தோரால் ஆலய கருவறையில் இருந்த புனித-கத்தி அபகரிக்கப்பெற்று புளியங்கூடலுக்கு எடுத்துச் செல்லப் பெற்றது.

இப் புனிதகத்தியை புளியங்கூடலுக்கு எடுத்துச் சென்ற வைரமுத்து என்பவரும் அவரின் உறவினரும் அங்கு ”செருத்தனைப்பதி” என்னும் இடத்தில் ஒரு சிறிய ஆலயம் அமைத்து அப் புனித கத்தியை பிரதிஷ்டை செய்து; தாம் பலியிட கொண்டு வந்த அந்த ஆட்டுக்கடாவை அங்கு பலியிட்டனர். அந்த புனித கத்தியை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு பலர் முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை.

இவ் ஆலயத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பெற்ற புனித கத்தியை வைத்து புளியங்கூடலில் அமைக்கப் பெற்ற அந்த ஆலயமே தற்பொழுது புளியங்கூடலில் பிரசித்தி பெற்று விழங்கும் ”மஹாமாரி அம்மன்” ஆலயமாகும். இவ் ஆலயத்தில் அமைந்துள்ள ஏழு தளங்களைக் கொண்ட இராச கோபுரத்தில் இப் புனித கத்தியை ஆலய ஸ்தாபகர் வணங்கும் காட்சி சிற்பமாக செதுக்கப்பெற்றுள்ளது. அப் புனித கத்தியானது தற்பொழுதும் ஆலய மூலஸ்தானத்தில் (கருவறையில்) மூலமூர்த்தியுடன் பிரதிஷ்டை செய்யப்பெற்று பூசிக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிட்த் தக்கது.

புளியங்கூடல் - செருத்தனைப் பதி இராஜ மஹாமாரி அம்பாள் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் மதிப்பிற்குரிய சிவஞாச்செல்வம் செந்தூரன் அவர்கள் அண்மையில் IBC தமிழ் நிறுவனத்தாருக்குஅளித்த பேட்டியும் ஆலயத்தின் தோற்றமும் வீடியோ படமாக்கப் பெற்று இப்போது யுரியூபில் வலம்வந்து கொண்டு இருக்கின்றன. இவ் வீடியோவில் புனித் கத்தியானது மூலமூர்த்தியுடன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது. இவை யாவும் வீடியோவில் தெளிவாக பார்வையிடலாம்.

யாழ்ப்பாணத்தில் பிரபல்லியமான தினசரி இதளான "உதயன்" பத்திரிகையில் புளியங்கூடல் மாரியம்மன் ஆலய ஆதீனகர்த்தவினால் எழுதப்பெற்று கடந்த 2003ம் வருடம் பிரசுரிக்கப்பெற்ற புளியங்கூடல் ”மஹா மாரியம்மன்” ஆலய வரலாற்றில் அவ் ஆலய மூலஸ்தானத்தில் இருக்கும் புனித கத்தியானது வலிகாமம்-மேற்கில் இருக்கும் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பெற்றதாக மறைமுகமாக குறிக்கப்பெற்றுள்ளமை நினைவுகூறத்தக்கது.

1946 ம் ஆண்டு பணிப்புலம் முத்துமாரி ஆலயத்தில் இடம்பெறும் மிருக பலியை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றது. அதன்போது பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தமையால்; அதற்கான அம்பிகையின் அனுமதி வேண்டி அப்போது நைமித்திய பூசைகளை செய்து வந்த பிராமணக் குருவான குமாரசாமி குருக்கள் மூலம்  பூசைகள் செய்து ”பூ" கட்டி பார்த்ததில் மிருக பலி நிறுத்துவதற்கு அம்பிகையின் அருள் கிடைக்கப் பெற்றதனால் அன்று முதல் மிருகபலி நிறுத்தப்பெற்றது.

அன்றிலிருந்து மிருக பலிக்கான நேர்த்திப் பொருட்கள் யாவும் ஆலயத்தில் ஒப்படைக்கப்பெற்று, அவை யாவும் அன்றே ஏலத்தில் விற்கப் பெற்ற பணத்தில் திருப்பணி வேலைகள் செய்யப்பெற்று வந்துள்ளன.

அன்று முதல் தேர்த் திருவிழாவின் போது அம்பிகைக்கு படைக்கப்பெற்ற மாமிச-படையல் சைவ பொங்கலாக மாற்றப்பெற்று படைக்கப் பெறுவதுடன் மிருக பலிக்குப் பதிலாக தேங்காய்கள் சிதறு-தேங்காய்களாக அடிக்கப்பெற்ற பின்னர் தேர் இழுக்கப்பெறுகின்றது.

இதுவரை காலமும் தங்கள் தங்கள் காலங்களில் ஒரு நேர நித்திய பூசையை  செய்து வந்த ஆலய பூசகர்கள், அவர்களுக்கு ஆசூசம் ஏற்படும் காலங்களில் எம்மூர் செட்டியார் குலத்தைச் சேர்ந்த (சாந்தை சித்திவிநாயகர் ஆலய ஆதீனகர்த்தா பூசகர் ஆறுமுகம் செட்டியார் குடும்ப அங்கத்தினர்கள் மூலம் நித்திய பூசைகள் செய்விக்கப் பெற்று வந்துள்ளது. அத்துடன் நைமித்திய, காமிக பூசைகள் யாவும் சுழிபுரம் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வந்த பிரம்மஸ்ரீ நடராசா குருக்கள், பிரம்மஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகியோரினாலும், அவர்களின் பின்னர் அவர்களின் வழிவந்தோரினாலும் புரோகிதமாக ஊதியம் வழங்கி செய்விக்கப் பெற்றது.

1945ம் ஆண்டு, எம்மூர் பெரியாரும், செல்வந்தருமான பெரியார் தம்பு சிவசம்பு ஐயா அவர்களுக்கு இறைவியின் அருளால் பணப் பொக்கிஷம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அப் பணத்தை தாமே எடுத்துக் கொள்ளாது அதனை இறைவியின் ஆலயத்தில் திருப்பணி செய்வதற்கு முன்வந்தார்.

சிவசம்பு ஐயாவின் வேண்டுதலை ஏற்று திருப்பணி செய்வதற்கு அப்போதைய ஆலய தர்மகர்த்தா கனகர் சுப்பையா அவர்கள் அனுமதி வழங்கியிருந்தார். திருப்பணியை பொறுப்பேற்ற சிவசம்பு ஐயா அவர்களும் அப்போது ஆலயத்திற்கு தேவையாக இருந்த திருப்பணிகளை செய்து கொடுத்ததுடன் மிகுதியாக இருந்த பணத்தில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும் திருப்பணிகள் செய்தார்.

1965 ம் ஆண்டு இவ் ஆலயத்தின் கருவறைத் ஸ்தூபி (சுண்ணாம்பினால் கட்டப் பெற்றது) சிதைவுற்று இருந்தமையால் புனருத்தானம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பெற்றன. இவ் ஆலயத்தின் திருப்பணிகளில் பெரும் தொண்டாற்றி வந்த பெரியார் தம்பு சிவசம்பு ஐயா அவர்கள் அதனைப் பொறுப்பேற்று பொது மக்களின் நன்கொடைகளைப் பெற்று உள்ளூர் சிற்பாச்சாரிகளின் சேவையைப் பெற்று செதுக்கப்பெற்ற வெள்ளை வைரக் கற்களினால் கருவறைத் ஸ்தூபி புனருத்தானம் செய்யப் பெற்றது. அத்துடன் பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் திருத்தி அமைக்கப்பெற்று 1970 ம் ஆண்டு ஆலய பிரதம குருவான (பிராமண) பிரம்மஸ்ரீ நடராசா குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது.

1970ம் ஆண்டு நிகழ்வுற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர்; எமது கிராம மக்களின் வேண்டுதற்கு இணங்க (ஆசாரமற்றிருந்த) ஆலய பூசகர்களால் செய்யப் பெற்று வந்த நித்திய பூசைகளையும்; (நைமித்திய, காமிக பூசை கிரிகைகளை செய்து வந்த) பிராமண குருமார் மூலம் மூன்று நேரப் பூசைகளாக செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பெற்றன. எமது கிராமத்தில் வசித்த குடும்பத்தினர் சிலர் ஒவ்வொருமாதத்தையும் தங்கள் மாத உபயமாக பொறுப்பேற்க முன்வந்தமையால் நித்திய பூசைக்கான செலவுகளும், பிராமண குருமாருக்கான ஊதியமும் அவர்களிடம் இருந்து பெறப்பெற்று மூன்று நேரப் பூசைகளும் சிறப்பாக நடாத்தப் பெற்று வந்துள்ளன.

கும்பாபிஷேகத்தின் பின்னர் பெரியார் சிவசம்பு ஐயா அவர்களை தலைவராக கொண்ட திருப்பணிச் சபை ஆலய பரிபாலகர்கள் சம்மதத்துடன் அமைக்கப் பெற்று திருப்பணி வேலைகள் பொறுப்பேற்கப் பெற்றன. அதன் பிரகாரம் அப்போதைய ஆலயப் பூசகர்களான பூசகர் கந்தையா சதாசிவம், பூசகர் வேலாயுதம், பூசகர் தம்பிப்பிள்ளை ஆகியோர் தங்கள் பூசைக்காலங்களில் ஆலயத்தை திறந்து பூசைகளுக்கான எல்லா ஆயத்தங்களும் செய்து, பிரசாதமும் தயார் செய்து கொடுக்க பிராமண குருமார் கிரியைகளை செய்து வந்தனர். இக் காலத்தில் ஆலய பரிபாலனம், மேற்பார்வை, பராமரிப்பு, பூசைக்கான ஒழுங்குகள், மஹோற்சவ விழா ஒழுங்குகள் யாவும் ஆலய பரிபாலகர்களினால் செய்யப் பெற்று வந்துள்ளன.

1965ம் ஆண்டு பூசகர் கனகர் கந்தையா அவர்கள் சிவபதம் எய்தியதும் அவரின் ஒரே வாரிசான பூசகர் கந்தையா சதாசிவம் அவர்கள் பூசகர் கந்தையா அவர்களுக்கு உரித்தான 1/2 பங்கிற்கு உரித்துடையவராகி ஆலயத்தை பரிபாலித்து பூசைகள் செய்தும், செய்வித்தும் வந்தார்.  பூசகர் கந்தையா சதாசிவம் அவர்கள் இளம்பராயமாக இருந்தமையால் பூசகர் தம்பிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டலின்படி தனது பங்குக் காலத்தில் ஆலயத்தை பரிபாலித்து வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பூசகர் கனகர் வேலாயுதம் அவர்கள் நொய்வாய்ப்பட்டு இருந்தமையால் அவரின் பங்கையும் பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களே அவருக்காக செய்து உதவி வந்தார்.

1976 ம் ஆண்டு பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களும், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களும் குறுகிய கால இடைவெளியில் (இரண்டு கிழமைகள்) சமாதி அடைந்தமையால் அப்போதைய ஆலய தர்மகர்த்தாவாக இருந்த பூசகர் கனகர் தம்பிப்பிள்ளையின் பங்கிற்குரியவர்களுக்கு ஆலயத்திற்கு செல்ல முடியாது "ஆசூசம்" ஏற்பட்டது.  ஆலயத்திற்கு செல்ல முடியாது போகவே; பிராமணக்குரு தினமும் அப்போதைய ஆலய உரிமைகாரராக இருந்த பூசாரியார் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களின் வீட்டிற்கு சென்று படலையில் சயிக்கிள் மணி அடிக்க வீட்டில் இருப்போர் ஆலயத் திறப்புகளை ஐயரிடம் ஒப்படைப்பார்கள். பிராமண குரு பூசை முடிந்ததும் திறப்புகளை திரும்ப பூசாரியார் வீட்டில் கொண்டுவந்து குடுத்துச் செல்வார்.

இந் நிகழ்வினைக் கண்ட பூசகர் தம்பிப்பிள்ளை அவர்களின் மருகன்; பிராமணக்குரு தினமும் வீட்டிற்கு வந்து திறப்பை பெறுவது பிராமண ஐயாவிற்கு சிரமம் என்பதனால் திறப்புகளை தற்காலிகமாக ஆறு மாத காலத்திற்கு பிராமணக் குருவிடமே ஒப்படைத்து திரும்பப் பெறுவதற்கு மற்றைய பங்குரிமைகாரர்களிடம் அனுமதி பெற்றார்.

அதன் பிரகாரம் ஆலய திறப்புகளை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று பல தொண்டர்கள் முகதாவில் அப்போதைய பிராமணக் குருவான பிரம்மஸ்ரீ நடராசா குருக்களின் மகன் சோமாஸ்கந்த குருக்களிடம் ஒப்படைத்து ஆறு மாத காலத்தில் எல்லாத் திறப்புகளையும் தன்னிடம் ஒப்படைக்கும் படி ஆலய வாசலில் கையளித்தார். அதற்கு பிராமணக்குரு சோமஸ்கந்த குருக்களும் முழுமனதுடன் கேட்கும் போது திருப்பித் தருவதாக சம்மதித்து திறப்புகளைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால், ஆறுமாதம் கடந்த பின்னர்; ஆலய பூசை உரிமைகளை மற்றைய பங்குரிமைகாரரிடம் (பூசகர் கந்தையா சதாசிவத்திற்கு) பாரங் கொடுப்பதற்காக திறப்புகளை  திருப்பித்தரும்படி பூசகர் தம்பிப்பிளையின் மருமகன் சோமாஸ்கந்த குருக்களை கேட்ட போது பிராமணகுரு திருப்பணிச் சபையினரை காரணம் காட்டி திறப்புகளை திருப்பி வழங்க மறுத்துவிட்டார். இது இவ்வாறு இருக்க;

பெரியார் தம்பு சிவசம்பு ஐயா அவர்கள் திருப்பணிச் சபை தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றதும் வருடாவருடம் புதிய தலைவர்கள் நியமிக்கப் பெற்றனர். தலைவர்கள் காலத்திற்கு காலம் மாற்றப்பட திருப்பணிச் சபையின் பெயரும் மாற்றமடைந்தது. திருப்பணிச்சபை திருப்பணிப் பரிபாலனசபை என பெயர் மாற்றமடைந்தது.

அதன் பின்னர் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களும், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களும் இறைபதம் எய்தியதும் திருப்பணிச் சபை (தலைவராக தொண்டர் விசுவலிங்கம் கந்தசாமி அவர்கள் பதவி வகித்த காலத்தில்) ஆலய பரிபாலனசபை என பெயர் மாற்றப் பெற்றது. அதனால் அப்போதய ஆலய பரிபாலகர்களுக்கும்; ஆலய பரிபாலனசபை என பெயர் மாற்றப்பெற்ற திருப்பணிச் சபையினருக்கும் இடையில் உரிமைப் பிரச்சனை எழுந்தது. இதே காலகட்டத்தில் தான் ஆலயத் திறப்புகள் சம்பந்தமான பிரச்சனையும் ஏற்பட்டது.

இதனால்; 1976 ம் ஆண்டு ஆலய பரிபாலகர்களுக்கும், ஆலய திருப்பணி சபையினருக்கும் இடையில் ஏற்பட்ட உரிமைத் தகராறு காரணமாக இவ் ஆலயம் பூட்டப்பெற்று மாவட்ட / மேல் / உயர் நீதிமன்றுகளில் வழக்குகள் நடைபெற்று வந்தன.

1978 ம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றில் வழங்கப் பெற்ற இடைக்கல தீர்ப்பின் பிரகாரம் இவ் ஆலய ஆதீனகர்த்தாக்களினால் ஆலயம் திறக்கப்பெற்று கீரிமலை வீரசைவ குருபீடம் சிவஸ்ரீ ஐயம்பிள்ளை குருக்கள் தலைமையில் பிராயச்சித்த சம்ரோசன கும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்று; சிவஸ்ரீ நவரத்தின குருக்கள் அவர்களினால் ஆலய நித்திய பூசைகளும், நைமித்திய பூசைகளும் நிகழ்த்தப் பெற்று வந்தன.

இக் காலகட்டத்தில் இதுவரை காலமும் இவ் ஆலய மஹோற்சவ காலத்தில் இடம்பெறாதிருந்த யாகமும், ஓமகுண்ட பூஜையும் வீரசைவ குருவான சிவஸ்ரீ நவரத்தின குருக்கள் அவர்களின் ஆலோசனைபடி ஆரம்பித்து வைக்கப்பெற்றதுடன் ”அஸ்திர தேவரும்” (சுற்றுப்பலி) உருவாக்கப் பெற்று மகோற்சவ விழாவை சைவ ஆகம முறைப்படி நிகழ்த்தி வந்தனர். அத்துடன் இதுவரை காலமும் செய்யப் பெற்று வந்த “பேச்சி அம்மன்” படையலும், நாசக வழங்கு படையலும் நிறுத்தப்பெற்றது.

இவ் ஆலய கருவறையில் ஸ்தாபகரினால் பிரதிஷ்டை செய்யப் பெற்று பூசிக்கப் பெறும் முத்துமாரி அம்பிகையின் தாமிர விக்கிரத்திற்கு பதிலாக ஆகம விதிப்படி கருங்கல்லிலான சலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, திருப்பணிச் சபையினர் மல்லாகம் நீதிமன்றில் செய்த புகாரினைத் தொடர்ந்து நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப் பெற்றது. அதனால் அவ் முயற்சி கைவிடப் பெற்றதுடன் ஆலயத்தில் பூசைகள் யாவும் வழமைபோல் நடைபெற்று வந்துள்ளமை குறிப்பிட்த் தக்கது.   

இக் கால கட்டத்தில் நித்திய, நைமித்திய, காமிக பூசைகளைச் செய்து வந்த சிவஸ்ரீ நவரத்தின குருக்கள் அவர்களை இனம் தெரியாதோர் பூசைக்கு வரும்போது வழி மறித்து தாக்கியதால்; அவர் பூசைகள் செய்வதற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இச் சம்பவத்தினைத் காரணங்காட்டி மற்றைய குருமாரும் பூசைகள் செய்வதற்கு முன்வர மறுத்து விட்டனர்.

அதனால், இதுவரை காலமும் அதிகார பூசகர்களாக இருந்த கந்தையா சதாசிவம் அவர்களும், வேலாயுதம் பேரின்பநாதன் அவர்களும், தம்பிப்பிள்ளை அம்பிகைபாலன் (வயது-10) அவர்களும் கீரிமலையில் அமைந்திருக்கும் ”இரேனுகா வீரசைவ குருகுலத்தில்” சமய தீட்சை பெற்றதுடன்; கந்தையா சதாசிவம் அவர்களும், வேலாயுதம் பேரின்பநாதன் அவர்களும் இலிங்கதாரிகளாகி ஆசார சீலர்களாக நித்திய பூசைகள் செய்யும் போது திருப்பணிச் சபை அங்கத்தினர்களும், பொதுமக்கள் சிலரும் அதனைத் தடுக்க முயற்சித்தமையால் ஆலயத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது பூசகர் தம்பிப்பிளை அவர்களின் பங்கிற்கு பொறுப்பாக இருந்த கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்களும், பொதுமக்கள் சிலரும் காயப்பட்டனர்.

சில மாதங்களின் பின்னர் மீண்டும் இவ் ஆலயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து ஆலயம் பூட்டப் பெற்று வழக்குகள் தொடர்ந்தன. 1985 ம் ஆண்டு இவ் ஆலய ”வழிபடுவோர் சபை” யினரால் மல்லாகம் நீதி மன்றில் சமர்பிக்கப் பெற்ற மனுமூலம் ஆலயம் பூட்டப்பெற்று இருப்பதனால் ஊரில் நோய்நொடி அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பெருங் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார்கள் எனவும்  முறைப்பாடு செய்தமையால்; வழிபடுவோர் சபையினருக்கு ஆலயத்தை திறந்து பூசைகள் செய்விப்பதற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கப் பெற்றது.

இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் வழிபடுவோர் சபையினரால் 1985ம் ஆண்டு இவ் ஆலயம் திறக்கப் பெற்று, முக்கிய திருப்பணி வேலைகள் செய்யப் பெற்று பிரம்மஸ்ரீ நடராசா குருக்கள் சோமாஸ்கந்தர் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிராமண குருமார் மூலம் மூன்று நேர நித்திய பூசைகளும் நைமித்திய காமிக விழாக்களும் 1994ம் ஆண்டுவரை செய்யப் பெற்று வந்தன.

இடைப்பட்ட கட்டத்தில் மல்லாகம் நீதிமன்று தீக்கிரையானதால் விசாரனையில் இருந்த 10845, TR-1807 வழக்கு கோப்புகள் யாவும் தீக்கிரையாகின. அத்துடன் நீதிமன்றும் இயங்கமுடியாது தடைபட்டன. கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரனையில் இருந்த TR-2149 வழக்கும் விசாரனை எதுவுமின்றி தடைபெற்றது.

1993ம் ஆண்டுவரை எதுவித நிரந்தர தீர்வும் நீதிமன்றுகளினால் வழங்கப்பெறாத நிலையில் வடமாகாணத்தில் ஆதிக்கத்தில் இருந்த தமிழீழ காவல் துறையினர் தலையிட்டு இருபகுதியினரையும் விசாரனை செய்தபின்; இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் ஒன்பது வருடங்களாக ஆலயத்தை பரிபாலித்து நித்திய, நைமித்திய, பூசைகளை செய்வித்து வந்த வழிபடுவோர் சபை (திருப்பணிச் சபை) யினரிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்று 1994 ம் ஆண்டு ஆலய பரிபாலனத்தினை ஆலய பூசகர்களிடம் ஒப்படைத்தனர். அன்றிலிருந்து இன்றுவரை ஆலய தர்மகர்த்தா பரம்பரயில் வந்த பூசகர்கள் இவ் ஆலயத்தை பரிபாலித்து பூசைகள் செய்து வருகின்றனர்.  

கொழும்பு உயர் நீதிமன்றில் திறந்த நிலையில் இருந்த TR-2149 இலக்க வழக்கானது நீண்டகாலமாக கிடையாக இருந்தமையால், மல்லாகம் நீதிமன்று இயங்க ஆரம்பித்ததும் உயர் நீதிமன்றம் இவ் ஆலயத்தின் தற்போதைய நிலைமையை கண்டறிந்து கொள்வதற்காக மல்லாகம் நீதிமன்றிற்கு இவ் வழக்கை பாரப்படுத்தி இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்காளிகளுக்கும், எதிர்வாதிகளுக்கும் அழைப்பானை அனுப்பி 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நீதிமன்றுக்கு அழைத்து இவ் ஆலயத்தின் தற்போதைய நிலை பற்றி விசாரித்தனர்.

அதன்போது இவ் ஆலயம் தமிழீழ காவல்துறையினரால் விசாரனை செய்யப்பெற்றபின் 1994 ம் ஆண்டு தங்களிடம் ஒப்படைக்கப் பெற்றுள்ளதாகவும்; அன்றிலிருந்து இன்றுவரை தாமே இவ் ஆலயத்தை பரிபாலித்து பூசைகள் செய்து வருவதாகவும் சமூகம் கொடுத்திருந்த ஆலய உரிமைகாரர்கள் கூறினர். இவ் வழக்கில் வழக்காளிகளான திருப்பணிச் சபையினர் எவரும் சமூகம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதனைத் தொடர்ந்து நீதி மன்றிற்கு சமூகம் கொடுத்தோரிடம் கையொப்பம் பெறப்பெற்று இவ் வழக்கு இன்றுடன் மூடப்பெறுகின்றது என அறிவித்தனர்.  

1994 ம் ஆண்டு முதல் இன்றுவரை நித்திய, விசேஷ, நைமித்திய பூசைகளும்,  திருப்பணி வேலைகளும், ஆலய பரிபாலகர்களினாலும், அவர்களினால் நியமிக்கப் பெற்ற வீரசைவ குருமார் மூலமும் வெகுசிறப்பாக செய்யப்பெற்று வருகின்றன.

இவ்வாலயம் எம்மூர் பெரியார் ஒருவரினால் ஸ்தாபிக்கப் பெற்றதாகவும், அதன் பின்னர் வேலாயுதர் கனகர் பரம்பரையினர் பரிபாலித்து வந்ததாகவும் செவிவழி வந்த செய்திகள் கூறுகின்றன. அதற்கு ஆதாரமாக 1906ம் ஆண்டு இவ் ஆலயம் ஆட்சி உரிமையுடன் பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் உறுதி முடித்துள்ளார். பூசகர் வேலாயுதர் கனகர் பரம்பரை ஆலய ஸ்தாபகர் பரம்பரை உரிமைகாரராக இருந்திருந்தால் தாய் உறுதி மூலம் தமது உரிமைகாரர்களுக்கு உரிமை வழங்கப்பெற்று இருந்திருக்கும் என்பது பலரினது கேள்வியாக உள்ளது. 

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் - வரலாறும் நிகழ்வுகளும் - புதிய பல விபரங்களுடன் பகுதி - 2

புளியங்கூடல் -  செருத்தனைப்பதி இராஜ மஹாமாரி அம்பாள் ஆலய வரலாறும் நிகழ்வுகளும் - வீடியோவில்


7505.01.05.2017

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS