Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் எங்கள் ஊரை மறக்க முடியுமா?

எங்கள் ஊரை மறக்க முடியுமா?

E-mail Print PDF

ஆக்கம்: திருமதி. குலமணி கந்தசாமி (கனடா)

எங்கள் ஊர் என்று நினக்கும் பொழுது எமக்கு பெருமையாக இருக்கிறது. முதலில் எமது குலதெய்வம் அம்பாள். மற்றது எம் ஊர் மக்களின் ஒற்றுமை, பாச உணர்வுகள் என்பன. அங்கிருக்கும் போழுது எமக்குத் தெரியாத பெருமைகளை இங்கு எமது அயலூரவர்கள் எம்மை எவ்வளவு சிறப்பாக நினைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலம் கேட்கும் போது பெருமை அடைகின்றோம். கோயில் விசேஷ திருவிழா என்றால் உங்கள் ஊர்ப் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு ஆவலோடு வருவோம். எல்லாம் உங்கள் அம்பாளின் அருட்சக்தி என்றுதான்  சொன்னார்கள்.

ஆன்மீக ஒழுக்கத்தில் சிறந்த பெரியார்கள் இருந்தார்கள். அவர்கள் கோயிலில் பஞ்சபுராணம் படிக்கும் பொழுது கேட்பவர்கள் உள்ளம் உருகும். அம்பாள் ஆலயத்தின் மேற்கு திசை சுளிபுரம்-வடக்காகவும், கிழக்குத் திசை பண்டத்தரிப்பை சேர்ந்ததாகவும் இருக்கிறது. மேற்கு திசையில் சம்புநாதீஸ்வரர், பறாளாய் பிள்ளையார், பறாளாய் முருகன் ஆலயங்களும்; கிழக்கு திசையில் ஞான வேலாயுத முருகனும் சிவன் ஆலயமும் இருக்கிறது.

வடக்கில் சாந்தைப் பிள்ளையார் ஆலயம் இப்படியே ஒவ்வொரு கோயில் திருவிழாக் காலங்கள் மற்றும் கந்தசஷ்டி, பிரதோஷம், சதுர்த்தி, பிள்ளையார் பெருங்கதை போன்ற விசேஷ தினங்கல் சிறப்பாக ந்டைபெற்று மார்கழி மாத்தில் சித்தாந்த பண்டிதர் சிவபாதம், அம்பாள் சிவம் தலையின் கீழ் திருவாசகம் முற்றோதல் நடைபெறும். கந்த சஷ்டி காலத்தில் ஞானவேலாயுத முருகன் ஆலயத்திலும், சுழிபுரம்-மேற்கு பெரிய தம்பிரான் கோயிலிலும் பண்டிதர் சிவபாதம் அவர்கள் கந்தபுராணத்தை மற்றவர்கள் மாறிமாறி படிக்க பயன் சொல்லுவார். விரதம் இருப்பவர்கள் புராணத்தையும் பயனையும் கேட்டுப் பக்தி சிரத்தையுடன் அவரிடம் திருநீறு பெற்றும் ஆசீர்வாதம் பெற்றும் செல்வார்கள்.

சிவன், பிள்ளையார், முருகன் கோயில்கள் வயல் நடுவில் இருப்பதால் கோயிலுக்குச் செல்பவர்கள் வயல் நடுவில் இருக்கும் பாதையால் நடந்து  போகும் பொழுது வயல் காற்றும், சூழலும் குதூகலமான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சின்னப் பெண் பிள்ளைகள்  பாவாடை பறக்கப் பறகக பெண்கள் சேலைகள் ஒதுக்கிப் போவதும் மறக்க முடியாதவை. ஊர்க் கிணற்றுத் தண்ணீர் கோடை காலத்தில் கொஞ்சம் உவர்ப்புத் தன்மை ஏற்படுவதால் மாலை நேரங்களில் வயல் தண்ணீர் எடுப்பதற்குப் பெண் பிள்ளைகள் வயலுக்குப் போகும் பொழுது இளவட்டங்கள் காத்திருப்பார்கள். அதில் இருந்து காதல் கல்யாணங்களும் நடைபெறும்.

ஊர் மக்கள் கமம், வெற்றிலைக்கொழுந்து, அரசாங்க உத்தியோகம் செய்தார்கள். வீட்டுத் தோட்டத்தில் வாழை, கமுகு, தென்னை, மா, பலா, போன்ற வருமானம் பெறக்கூடிய மரங்களுக்குக் குறையில்லை. சில வீடுகளில் தென்னை மரத்தின் வருமானமே வீட்டுச் செலவுகளுக்குப் போதக்கூடியதாக இருந்தது. பனை மரத்தாலும் குறையில்லை.

அம்பாள் சனசமூக நிலையம்: அறிவு வளர்ச்சிக்கு 1945 இல் அக்காலத்தில் இளையவர்களாக இருந்த ஆர்வம் மிக்கவர்களினால் உருவாக்கப் பெற்ற வாசகசாலை 1952இல் இரண்டுமாடிக் கட்டிடமாக வளர்ச்சி பெற்று பிள்ளைகள் மத்தியில் பேச்சுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், சங்கீதப் போட்டிகள், கலை கலாச்சாரங்கள் என்பன சிறப்பாக வளர்ச்சி பெற்றது.

அவை ஒரு பக்கம் இருக்க; காலயடியில் வெற்றிமடம் என்ற இடம் 25 பரப்பு நிலம் கொண்டது. பொது இடமாக இருந்தது. அதில் அயலில் உள்ள (10 வயதுக்கு உட்பட்ட) சிறுவர்களாக இருந்தவர்கள் பெரிய புளியமரங்களின்  கீழ் விளையாடப் போனார்கள். விளையாட்டிற்குக் கூடுகிறார்கள் என்று பார்த்தால் இரண்டு மூன்றாக போனவர்கள்  கொஞ்சக் காலத்தில் இருபது முப்பதாக வளர்ச்சி பெற்று அவர்களுக்குள் ஆலோசனைகள் உருவாகி விளையாட்டுப் போட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆண்டுவிழாக்கள் விரிவடைந்து "காலையடி மறுமலர்ச்சி மன்றம்" என்று பேரும் புகழும் பெற்று வளர்ச்சியடைந்தது. நாட்டின் போர்ச் சூழலால் இப்பொழுது மன்றத்து அங்கத்தவர்கள் புலம் பெயர் நாடுகளில் வசிக்கின்றார்கள்.

அவர்கள் பொறியியலாளர்கள், சட்டத்தரணி, வைத்தியர், கட்டிட கலைஞர், கடை முதலாளி, துறைமுக அதிகாரி, வங்கி அதிகாரி, ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், வீட்டு விற்பனை முகவர், வானொலி அறிவிப்பாளர் என்று பலதரம் கலந்த முன்னேற்றமான தொழில்கள் செய்து பெரும்பாலும் கனடாவிலும், லண்டன், அவுஸ்திரேலிய, டென்மாக், ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், சுவிச்சலான்ற், ஒல்லாந்து, சுவீடன், இத்தாலி போன்ற நாடுகளிலும் குடும்பங்களாக போற்றக்கூடிய வளர்ச்சி பெற்று வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்பங்களின் பிள்ளைகளும் வியக்கக் கூடிய அளவு வளர்ச்சி யுடையவர்களாகக் காணப்படுகிறார்கள். ஊரில்; பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்தும், அவர்களோடு போகாமல், 97 வயதைத் தாண்டியும், ஆசிரியர் ஓய்வு பெற்றும், தனது உறுதி எழுதும் தொழிலைச் செய்து, விளம்பரம் செய்யாது, ஊருக்குப் பல பொதுச் சேவைகள் செய்து கொண்டிருக்கும் தம்பையா ஆசிரியரை மறக்க முடியாது. எந்தவிதமான தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாது, ஆசார சீலராக, பாலும்-பழகும், காரம் குறைந்த சைவ உணவும் உண்டு, துவிச்சக்கரத்தில் பிரயாணம் செய்து, பாத அணிகளும் இல்லாது, தன்னால் முடிந்த அளவு உறுதி எழுதி உழைத்துக் கொண்டிருக்கும் பெருமகன்.  உறுதி எழுத்தில் ந்ம்பிக்கை கொண்டு அயலூரவர்கள் வயது போய் வாக்கு மாறிவிட்டாலும்மென்று காரில் தன்னை ஏற்றிக் கொண்டு போகிறார்கள் என்று எமக்குக் கடிதத்தில் எழுதியிருந்தார். "தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பதால் என்ன பயன்" என்று அடிக்கடி சொல்லுவார். அதற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்கிறார். அந்தப் பெருமைமிக்கவர் இன்னும் பல ஆண்டுகள் சுகதேகியாக வாழ அம்பாளை வேண்டுகின்றோம்.

எங்கள் கிராம மக்களின் அபரிதமான வளர்ச்சிக்கு ஆங்கில பாடசாலைகள் அனைத்தையும் இலவச கல்விகற்பிக்கும் பாடசாலைகளாக அரசு 1945 ஆண்டளவில் பிரகடனப் படுத்தியமையும் ஒரு காரணியாகும். இந்த அரிய வாய்பினை எங்கள் கிராமத்தின் இளம் ஆண்களும் பெண்களும் நூறு வீதம் பயன்படுத்தினார்கள். நான்கு ஐந்து ஆண்டுகளில் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இலங்கை அரச சேவைகள் நிறைய கைகொடுத்தன. பொலிஸ், தரைப்படை, ஆகாயப்படை, கடற்படை சேவைகளிலும், வைத்திய சாலைகளில் ஆண், பெண் தாதிகளாகவும், மருத்துவர்களாகவும், மருந்து கவையாளராகவும் வேறும் பல துறைகளிலும் பெரும்பாலானோர் வேலை வாய்ப்புகள் பெற்று வளம்பெற்றனர். அத்துடன் சுங்கப் பகுதி, புகையிரதப் பகுதி, நீர்ப்பாசனப் பகுதி, நில-அளவையாளர் பகுதி, போக்குவரத்து சபை, துறைமுக கூட்டுத்தாபனம் போன்றவற்றிலும் கணிசமானோர் வேலை வாய்ப்பு பெற்மையும் எமது கிராமத்தில்  பெரும் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தக் காரணமாயிற்று.

எங்கள் மத்தியில் பல சோதிட வல்லுணர்கள் இருந்து மறைந்து விட்டார்கள். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலும், வெளியூர்களிலும் மதிப்பிற்குரியவர்க்ளாக இருந்தார்கள்.  இப்பொழுது சுங்க இலாகவின் பிரதி அத்தியட்சகராக இருந்து ஓய்வு பெற்ற மதிப்பிற்குரிய ச. அளகரத்தினம் ஐயா அவர்கள் சோதிட வித்தகராக விளங்குகிறார். இன்னும் ஊரின் சிறப்பை எழுதிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு பெருமை மிக்க ஊரை நாங்கள் மறக்க முடியுமா? இருப்பினும் கனடிய மண்ணில் எனது ஊர்ப் பிள்ளைகள் "பண்கலை பண்பாட்டுக் கழகம்" என்னும் பெயரோடு குளிர்கால ஒன்றுகூடல், கோடைகால ஒன்றுகூடல், வாணிவிழா, விளையாட்டுப் போட்டிகள் என்பன ஒழுங்கு முறையாகச் செய்து பரிசுகள் கொடுத்து உற்சாகப் படுத்துவது பாராட்டத்தக்கது. இக்கழகம் மேலும், மேலும் வளர வாழ்த்தி; அம்பாளை வேண்டி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

நன்றி


திருமதி.  குலமணி கந்தசாமி
பணிப்புலம்

பண்டத்தரிப்பு

30.12.2008


2188/11/04

BLOG COMMENTS POWERED BY DISQUS