Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் கட்டாயத் திருமணம்

கட்டாயத் திருமணம்

E-mail Print PDF

கட்டாயத் திருமணம்

ஆக்கம்: திருமதி. வினோதினி பத்மநாதன் -டென்மாக்

திருமணம் என்பது என்ன ?
ஆயிரம் காலத்துப் பயிர். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உன்னதமான உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்கை ஆரம்பிக்க பெரியோர்களினால் நிகழ்த்தி வைக்கப் பெறும் ஒரு புனிதமான சடங்காகும்.


திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தல் என்பது முக்கியமானதாகவும், கட்டாயமானதாகவும் அமைகின்ற போதிலும் அந்தப் பொருத்தங்களில் மணமக்களின் மனப் பொருத்தம் பார்ப்பதில் அல்லது அறிந்து கொள்வதில் சில பெற்றோர் தவறி விடுகின்றனர்.

பொருத்தங்களில் முதலிடத்தை வகிப்பது மனப் பொருத்தம். அதன் பின்புதான் ஜாதகப் பொருத்தமும், மற்றைய பொருத்தங்களும் தேவையாகின்றது. மனப் பொருத்தம் இல்லாது எந்தப் பொருத்தம் அமைந்தாலும் வாழ்கை மகிழ்ச்சியாக அமையாது போய்விடுவதை நாம் அனுபவரீதியாக காண்கின்றோம்.

கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக பழகி குடும்பம் நடத்தும் போதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதற்கு மனம்தான் முக்கிய காரணம். அந்த மனம் (விருப்பம்) இல்லாது திருமணம் செய்வதால் திருமணமென்பது அர்த்தமற்றதாகி விடுகின்றது.

மணமக்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்திருக்க வேண்டும். அதற்காகவே பெண் பார்த்தல் என்னும் நிகழ்வு நடைபெறுகின்றது. அங்கு அழகு மாத்திரமல்ல; அவர்களின் குணம், நடை, பழக்க வழக்கங்களும் கணக்கெடுக்கப்படுகின்றது.

உள்ளூரில் அல்லது உறவினர்களிடையே நடைபெறும் திருமணத்தின் போது பெண் பார்த்தல் நடைபெறுவதில்லை. காரணம் அவர்கள் ஒருவருக் கொருவர் முன்னர் அறிமுகமானவர்களாக இருப்பார்கள். ஒருவரைப் பற்றி மற்றவர் அனேகமாக அறிந்திருப்பர். அப்படி இருந்தும் அவர்களின் விருப்பம் கேட்காது திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அவர்களும் பேற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்கின்றனர். அவர்களுள் ஒரு சில குடும்பங்கள் மனம் மாறி சந்தோஷமாகவும் வாழ்கின்றனர்.

பெரும்பாலான பெற்றோர்கள் தமக்கு பிடித்திருந்தால் போதும் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் என்ற தவறான எண்ணத்தோடு கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள். கட்டாயத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் பெற்றோர் தம் பொறுப்புகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து விட்டதாக கருதுகின்றனர். ஆனால் மாறாக இறுதியில் பல விபரீதமான முடிவுகளைச் சந்திக்கின்றனர்.

மனதிற்குப் பிடியாத கணவனுடனும், மனைவியுடனும் சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியுமா? முடியாது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால் ஒரு சில மணமக்கள் தம் பெற்றோரை சந்தோஷப் படுத்துவதற்காகவும், சமூகம் தம்மை குறைவாக எடைபோடும் என்பதனாலும் போலியாக கணவன் மனைவிபோல் நடித்துகொண்டும் இருக்கிறார்கள். ஒரு சிலர் சில தினங்களில் பிரிந்தும் வாழ்கின்றார்கள். இவை யாவற்றிற்கும் காரணம் மணமக்களின் மன விருப்பமே.

சந்தோஷசமாக வாளத்தானே திருமணம். வாழ்கை எனும் வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு தேவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தால் வாழ்கை எனும் வண்டி தடம் புரழுமல்லவா?. இதனால் பாதிப்பது அந்த தம்பதிகளின் வாழ்க்கை மட்டுமல்ல பெற்றோர்களின் சந்தோசமும்தான். திருமணத் தம்பதியினர், மகிழ்ச்சியின் உச்சிக்கு  பறந்து செல்ல வேண்டுமாயின் பறவைகளைப் போல் இரண்டு இறகுகளும் (இருவரும்) ஒரே நேரத்தில் ஒற்றுமையாகச் செயல்பெற வேண்டும். அப்போதுதான் குறித்த இலக்கை அடைய முடியும். அதற்கு இருவர் மனதும் ஒன்றாகவே செயல்பெற வேண்டும். அவற்றுள் ஒன்று அல்லது இரண்டும் செயல் இழந்தாலோ அல்லது வேறு விதமாக செயல் பெற்றாலோ முடிவு விபரீதம்தான். மகிழ்ச்சி குன்றி விடுகின்றது.

 

ஒருத்தி மனதிலே ஒருவன் இருந்தால் அது பெண்மையின் ஆச்சாரம், இன்னொருவனை திணிக்க முற்பட்டால் அதுவும் ஒருவகையில் அபச்சாரம். அந்த அபச்சாரத்துக்கு பெற்றோர் ஒருபோதுமே துணை போகக் கூடாது.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தின்போது அவர்களின் விருப்பம் அறிந்து திருமணம் செய்து வைப்பதனால் அவர்களின் வாழ்கையில் சந்தோஷத்தை காணமுடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.

நன்றி

வினோதினி பத்மநாதன் - டென்மாக்

14.09.2010

BLOG COMMENTS POWERED BY DISQUS