Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் நோய்கள் டெங்கு காய்ச்சல் - Dengue Fever - அதன் தாக்கமும் சிகிச்சையும்- அறிந்து கொள்வோம்

டெங்கு காய்ச்சல் - Dengue Fever - அதன் தாக்கமும் சிகிச்சையும்- அறிந்து கொள்வோம்

E-mail Print PDF
Image may contain: nature

தற்போது இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பெற்றிருப்பதால் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் அந் நோய் பற்றிய முக்கிய சில தகவல்கள் பிரசுரமாகின்றன

டெங்குக் காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும். டெங்கு ஏடிஸ் எனும் நுளம்பு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது

இந்த நுளம்பு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இவ் நுளம்பு கடிக்கின்றது. இவ் நுளம்பை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாகக் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும்.

இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது

உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்

டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகின்றது?
டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோய் தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படலாம். வாந்தி, காபி கொட்டை நிறத்திலோ அல்லது மலம் கறுப்பு நிறத்திலோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக்கும் ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகின்றது ? டெங்கு (Dengue) என்ற ஸ்பானிய மொழிச் சொல் எலும்பு முறிக் காய்ச்சல் எனப் பொருள்படும். இந்நோய் ஒருவகை வைரஸ் கிருமியால் ஏற்பட்டு; நுளம்புகளால் காவப்பட்டு பரப்பப்படுகிறது. ஏடிஸ் ஏகிப்டி, ஏடிஸ் அல்போடிக்டஸ் Aedes aegypti என்ற இரண்டு வகை நுளம்புகள் இந்நோய்க் கிருமிகளைக் காவி சுகதேகிகளைக் கடிக்கும்போது அவர்கட்குப் பரப்புகின்றன. 

இவை கடித்த இரண்டு முதல் ஏழு நாட்களுள் நோய் ஏற்படும். இந்நோய்க் காவி நுளம்புகள் கறுப்பு நிறமானவை. இறக்கையில் வெள்ளி நிறப் புள்ளிகள் தென்படும். மற்றைய நுளம்பு வகையுடன் (மலேரியா-Aanophleles,  யானைக்கால்-Culicines ) ஒப்பிடுகையில் தோற்றத்தில் சிறியவை. முதுகில் வெள்ளி நிறக் கோடுகள் இரண்டு தெரியும். பெண் நுளம்புகள் தான் நோயைப் பரப்புபவையாகும்.

இந் நுளம்புகள் கறுப்பு நிறமான முட்டைகளை தனித்தனியாக ஒரு தடவையில் 30 முதல் நூறு வரை தண்ணீரின் மேல் இடும். இவை கடிக்கும் நேரம் சூரிய உதயத்தின் பின் 2 - 3 மணித்தியாலங்களும், பின்னேரம் சூரிய அஸ்தமனத்திற்கு முன் 2 - 3 மணித்தியாலங்கள் எனக் கூறலாம். ஆனால் சில வேளைகளில் எல்லா நேங்களிலும் கடிக்க வாய்ப்பு உள்ளது. 

வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்து மனிதரின் இரத்தத்தைக் குடித்துவிட்டு மீண்டும் வெளியே போய்த் தங்கும். ஆனால் வீட்டிற்குள் வசதியாக தங்க இடவதி கிடைத்து விட்டால் வீட்டினுள் தங்கி பசிக்கும் போது இரத்தம் புசிக்க ஓய்ந்து இருப்பவர்களைக் கடிக்கும்.  இது சாதாரண சூழலில் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது. தற்போதைய வைத்திய முறைகள் மூலம் நோயைக் குணப்படுத்த முடியாது. நோயின் தாக்கத்தைக் குறைத்து மரணங்களைக் குறைக்கலாம். இந்த நுளம்புகள் கடிக்காதவாறு பார்த்துக் கொள்வதன் மூலமும், அவை பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமுமே நோய் ஏற்படுவதையும், பரவுவதையும் முற்றாகத் தடுக்க முடியும்.

நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றே நுளம்புகள் எம் இருப்பிடங்களை கண்டு பிடிக்க உதவுகின்றன. உயிரினங்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் காபனீரொக்கசைடு அதிகமாக காணப்பெறுகின்றது. காபனீர் ஒகைசைட்டை தேடிவரும் எம்மை கண்டு கொண்டு இரத்தத்தை உறுஞ்சுவதுடன் தாம் பிறரிடம் இருந்து பெற்று வந்த கிருமிகளையும் எம்முள் செலுத்தி விடுகின்றது.      

நோய்க் கணிப்பு:
உடலில் நோய் எதிப்பு சக்தி கொண்ட வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். 

த்ராம்போசைட்டோபீனியா: Dengue காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (platelets) எண்ணிக்கை குறைவாக காணப்படும். Dengue வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

1990 ஆம் ஆண்டுகளில் நுளம்பு மூலம் பரவும் முக்கியமான நோயாக Dengue இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இது ஒரு தொற்று நோயாக பரவுவதால் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

Aedes Aegypti என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் Dengue காய்ச்சல் அதிகமாக ஏற்படுகின்றது. வெப்பமண்டல நாடுகளில் இது மிகவும் சகஜமாக தோன்றுகிறது. மக்கள் நெரிசல், தண்ணீரை திறந்த வெளியில் சேமிப்பது, பாசன கால்வாய்கள் ஆகியவைகளில் இந்த வகை கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன.

சிகிச்சை:
Dengue காய்ச்சலை பொறுத்தவரை, ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்திற்கும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.

கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள், கொசு விரட்டிகள் இவைகளின் பங்கு அவசியமாகும். வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் எந்த நீரையும் நன்றாக காய்ச்சிய பிறகு பயன்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

டெங்கு நோயின் அறிகுறிகள்

1.கடுமையான காய்ச்சல்

2.வயிற்றுவலி

3.தாங்க முடியாத அளவு தலைவலி

4.உடல்வலி

5.மூட்டுவலி

6.கண்ணுக்குப் பின்புறம் வலி

7. தொடர்ச்சியான வாந்தி

8. களைப்பு

9.எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது( இந்த நோயின் முக்கிய அறிகுறி)

10. உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றினால் ஆபத்து அதிகம்.

இந்நோய் மூன்று நிலைகளுக்கு மாற்றம் பெறும்.
1.  அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை, 
2.  ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் நிலை, 
3.  இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை, 

1 .சாதாரண டெங்கு ஜூரம்  (dengue fever)

2. உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்( dengue hemorrhagic fever) :

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம்  (DENGUE Shock Syndrome):

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

இதில் முதல் வகை(DENGUE Fever) வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி என்று இருக்கும்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது.

இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை

( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் , மலத்தில் சிறுநீரில் ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்

அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்

முதல் நிலையை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்படும். ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சல் ஓரிரு நாட்களுள் குறையாவிடின் உடனடியாக அரசாங்க வைத்திய மனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றால் முற்றிய நிலை ஏற்படுவதைத் தடுத்து மரணத்தைத் தவிர்க்க முடியும். பெரும்பாலான டெங்கு நோயாளர்கள் நோய் முற்றிய நிலையிலேயே வைத்திய மனைகளுக்குச் செல்வதால் அதிகமானோர் சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். 

திடீரென ஏற்பட்ட கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி முக்கியமாக முன்தலைப் பக்கத்தில், கண்களின் பின் புறத்தில் வலி, கண்களை உருட்டும் போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுக்கள், தசைகள், கை, கால், எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறிக் காணப்படல், பசியின்மை, வெளிச்சத்திற்குப் பயம், திடீரெனக் காய்ச்சல் குறைதல், குருதிச் சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைதல் போன்றவை ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகளாகும். 

இவ் அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக நோயாளியை அரசாங்க வைத்தியமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அலட்சியமாக இருந்தால் இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் நிலை ஏற்பட்டு ஏழு முதல் எட்டு நாட்களுள் டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை ஏற்படும்.

உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, திடீரெனக் காய்ச்சல் குறைதல், தோலில் இரத்தக் கசிவு, இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படல், இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும் சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைதல், முதலியன டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலையின் அறிகுறிகளாகும். 

சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000 இற்குக் கீழ் குறையும் போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியைக் காப்பாற்றுதல் மிகவும் கடினம்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும். 

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்கலாம்.  வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும். மருந்து மாத்திரை கொடுப்பதற்கு குடும்ப வைத்தியரின் ஆலோசனை பெறவேண்டும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது என டாக்ரர்களால் பரிந்துரைக்கப் பெற்றுள்ளது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும். 

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். 

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும். ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன் போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். 

அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாது உடன் வைத்தியசாலைக்கு செல்லல் வேண்டும். 

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை. 

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன. 

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும். 

இப்படிப்பட்ட கைவிடப்பட்ட நிலையிலுள்ள நோயாளர்கட்கு எளிய மூலிகை மருத்துவம் துணை செய்யக்கூடும். எளிதில் கிடைக்கக்கூடிய பப்பாசி இலைகள் இரண்டை எடுத்து தண்டு நீக்கி நன்றாக அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டித் தினமும் இரண்டு மேசைக் கரண்டியை நோயாளர்கட்குக் கொடுக்க அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவர். பப்பாசி உடலின் வெப்பத்தன்மையைக் குறைக்கும் தன்மை கொண்டது. டெங்கு வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது. பப்பாசி இலைகளை அவிக்கவோ அல்லது சுடுநீரில் கழுவவோ கூடாது என்பது முக்கிய விடயமாகும். இப்படிப்பட்ட பக்கவிளைவுகளற்ற செலவற்ற எளிய மாற்று மருத்துவ முறை உலகளாவிய ரீதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கட்கு எதிர்காலத்தில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கக்கூடும்.

(இந்த மூலிகை மருத்துவம் பற்றி செல்லையா துரையப்பா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை சமீபத்தில் தேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தமை. வாசகர்கள் அறிந்ததே. இந்த மூலிகை மருத்துவம் சமீபத்தில் இரண்டு நோயாளர்களிடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டது. இதுபற்றிப் பிரபல வைத்திய நிபுணர் பேராசிரியர் குயுபேட் அபொன்சொ (Prof.Hubert Aponso) அவர்கள் ஆனி 19 ஆம் திகதி டெய்லி நியூஸ் (Daily News) பத்திரிகையில் அவரால் டெங்கு நோய் பற்றி எழுதப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.)

சிறு தட்டுகளின் எண்ணிக்கை இரத்தம் பாய்ச்சிய போதும் மிகவும் குறைந்து காணப்பட்டதால் வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு கடைசி முயற்சியாக அவரின் தந்தை பப்பாசி இலைச்சாற்றைப் பருக்கினார். எதிர்பாராதவாறு அவரின் சிறுதட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து அவர் உயிர்பிழைத்ததைக் கண்டு வைத்திய நிபுணர்களும் தாதியர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இரண்டு நாட்களின் பின் நோயாளி பூரண சுகமடைந்து வீடு திரும்பினார்.

32 வயதுடைய மற்றுமொரு டெங்கு நோயாளியின் சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000 க்குக் கீழ் குறைந்து சுவாசப்பைக்குள் நீர் புகுந்து சுவாசிக்கக் கஷ்டப்பட்டு மரணிக்கும் தருவாயில் இருந்த போது பப்பாசிச்சாறு கொடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த மூலிகை மருந்தைக் கொடுத்த உடனேயே சிறுதட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தன. காய்ச்சலும் விட்டது. மூன்று நாட்களின் பின் பூரணசுகமடைந்து நோயாளி வீடு சென்றார்.

மேற்படி வைத்திய நிபுணரின் அறிக்கை டெங்கு நோயாளர்கட்குப் பெரும் வரப்பிரசாதமாகும். உலகளாவிய ரீதியில் டெங்கு நோயால் ஏற்படும் பல மரணங்களை இவ் எளிய மூலிகை மருத்துவம் மூலம் தடுக்க ஏதுவாக இருப்பது எமக்குப் பெருமையாகும்.

டெங்கு நோயின் அடையாளங்கள்
1. கடுமையான காய்ச்சல
2. தலைவலி
3. கண்களுக்கு கீழாலும் தசைகளிலும் மூட்டுக்களிலும் வலி ஏற்படுதல
4. பசியின்மை/உணவில் விருப்பின்ம
5. வாந்தி ஏற்படுவதோடு தோலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் 

நோய் அடையாளங்கள் வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
1. காய்ச்சலின் போது ஓய்வெடுக்க வேண்டும
2. காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நீரினால் உடம்பு முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
3. ஒவ்வொரு 6 மணித்தியாலயத்தின் பின்னரும் பெரசெடமோல் வகையைச் சார்ந்த வில்லைகளை உட்கொள்ள வேண்டும்.
4. இரத்தப் போக்கிற்கான அடையாளங்கள் வெளிப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1. நீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும்.
2. கொங்ரீட் கூரைகள், பீலிகள், கான்கள் போன்றவற்றிலுள்ள இலைகுலைகளை அகற்றி, நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
3. சூழலிலுள்ள தண்ணீர் தேங்கக் கூடிய சிரட்டைகள், போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்றவற்றை புதைத்து விட வேண்டும்/எரித்து விட வேண்டும்.
4. பாவிக்கக் கூடிய பாத்திரங்கள், வாளிகள் போன்ற வற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். 
5. பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
6. எறும்பு வராது மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
7. குளிரூட்டிகளிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும். 
8. தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்த்து விடவும். 
9. தண்ணீர் தாங்கிகளில் வாளியை விட்டு நீர் எடுக்காதபோது அங்கும் நுளம்புகள் பெருகலாம். எனவே, அதன் மூடியை ஒழுங்காக மூடவேண்டும். மூடி இல்லாதபோது மெல்லிய வலையினால் மூட வேண்டும். 
10. பழைய ரயர்களை அகற்றி புதைத்து விட வேண்டும். 

எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?
திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)
காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.
காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?
கண்களில் பின்புறம் வலி
தசை வலி
மூட்டு வலி
தோலில் சினைப்பு
வயிறு வலி, வாந்தி
டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு (தொற்றுமா) பரவுமா?
இல்லை. நுளம்புக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?
நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா?
முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா?
டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். 

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா?
டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்?
டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். 

எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா?
ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?
1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?
இந்த நுளம்பு இட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் நுளம்பு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த நுளம்பு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
டெங்கு நுளம்புகள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.
கொசுவலை, நுளம்புகளை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா?
டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி நுளம்புகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?
டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 
நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை? 
ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும். 

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?
பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் நுளம்பு உற்பத்த்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

எனவே நுளம்புகள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் நுளம்புகள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

15/06.03.2018

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS