Monday, Oct 23rd

Last update08:11:34 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் இறைவனை இனம் காட்டும் இராஜயோகம்

இறைவனை இனம் காட்டும் இராஜயோகம்

E-mail Print PDF
" ஓம் சாந்தி"
ஆக்கம்: திரு. தம்பிப்பிள்ளை கந்தையா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) கனடா

நாம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டிய மிக முக்கியமான விடயம் கடவுள் ஒருவரே என்பதாகும்.

அவர் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர்; அவர் ஒருவரே உவமையற்றவர். அவர் ஒருவரைத் தவிர வேறு எவரையும் கடவுள் எனக் கூற முடியாது. மனித குலத்தைச் சார்ந்தவர்கள் மனிதர்கள்தான். அவர்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் ஆகலாம்.

ஆலயங்களில் காணப்படும் சிலைகளும், புராண இதிகாசங்களில் கூறப்படும் தேவ தேவியர்களும் உயர்ந்த மனிதர்களே. அவர்களும் பூசைக்குரியவர்களே. ஆனால் அவர்களை அவ்வாறு ஆக்கியது, இறைவனே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கின்றோம். அவர்களுடன் உரையாடுகிறோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுகிறோம், மேலும் எத்தனையோ தொடர்புகளை மேற்கொள்ளுகின்றோம், அவ்வாறே நாம் இறைவனைச் சந்திக்க முடியுமா? அவருடன் பேச முடியுமா? கருத்துக்களைப் பரிமாற முடியுமா? ஆம் முடியும்; என இராஜயோகம் விடை பகர்கிறது. யார் இராஜயோக பயிற்சிகளை மேற்கொள்கிறார்களோ அவர்களால் இறைவனைப் பார்க்க முடியும்; உறவாட முடியும்; எண்ணங்களைப் பரிமாற முடியும்; அவருடன் ஒன்றாவும் முடியும்.

உலகில் உள்ள பல்கோடி மக்களும் பக்தியை மேற்கொண்டே வருகின்றனர். அவர்கள் இனத்தால், மதத்தால், மொழியால், நிறத்தால், பழக்கவழக்கங்களால் வேறுபட்டிருந்தாலும் ஏதொ ஒரு வகையில் பக்தி செய்து கொண்டே வருகின்றனர். என்றோ ஒரு நாளைக்கு இறைவனைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற வேட்கையினால் தொடர்ந்தும் பக்தியை மேற்கொண்டே வருகின்றனர்.

அதன் காரணமாக விக்கிரகங்களையும், பரிசுத்த ஆவிகளையும், இயற்கைகளையும், இன்னும் பல்வேறு வகைகளிலும் வழிபட்டு பக்தியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலவிதமான பூசை புனஸ்காரங்களையும், நேர்த்திகளையும்  செய்து, உடலை வருத்தி நோன்பிருந்து, பஞ்சாங்க, அட்டாங்க நமஸ்காரங்களைச் செய்தும் இவ்வாறாக பலவித வழிபாடுகளைச் செய்து பக்தியை மேற் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பலரும் பலவிதமான வழிபாடுகள் மூலம் பக்தியைச் செய்து வந்த போதிலும், இவர்கள் அனைவரினதும் பக்தியின் நோக்கம், ஆன்ம ஈடேற்றமும், இறைவனைக் கண்டு கொள்வதும் ஆகும். இவற்றின் மூலம் அவர்களின் நோக்கம் நிறைவேறியதா? என்றால் பலன் பூஜ்ஜியமே.

ஆன்மா, பரமாத்மா, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய வரலாறு புவியியல் பற்றிய முழுமையான ஞானத்தை அறியாதவரைக்கும், அவற்றின் முழுமையான அறிமுகத்தை எவராலும் கண்டுகொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது.

இறைவனே இப் பூவுலகிற்கு வந்து அவற்றின் முழுமையான அறிமுகத்தைக் கொடுக்கும் வரை, எந்த ஒரு ரிஷி, முனிவர்கள், சாதுக்கள், மகாத்மாக்கள் எவரினாலுமோ இறைவினதோ ஏனையவற்றினதோ முழுமையான அறிமுகத்தை கொடுக்க முடியாது. அவர்கள் ஒருசில உண்மைக் கருத்துக்களோடு தங்கள் கற்பனைகளையும் கலந்து கூறினார்களேயன்றி, இறைவனைத் தவிர வேறு எவராலும் முழுமையான அறிமுகத்தைக் கூற முடியவில்லை.

இந்த வகையிலே பரமபிதா பரமாத்மாவாகிய இறைவன் கல்பத்தின் சங்கமயுகத்தில் ஒருவரில் ஒருமுறை அவதாரம் செய்து, கடவுள், ஆத்மா, உலகநாடகம் பற்றிய உண்மையான முழுமையான அறிமுகத்தை இராஜயோகக் கல்வியின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த உண்மைகளை நூற்றுக் கணக்கான நாடுகளில், பல்லாயிரக் கணக்கான பிரமகுமாரிகள் இராஜயோக நிலையங்களினூடாக, பல ல்ட்சம் மக்கள் கற்று மேன்மை அடைந்து வருகின்றனர். இதனை மேற்கொள்பவர்கள் உலகச் சனத்தொகையுடன் ஒப்பிடும் பொழுது ஒரு கைப்பிடியளவினரே. ஏனையோர் இன்னும் பக்தியின் நோக்கத்தை அடைய முயற்சிக்காதிருப்பது விந்தையிலும் விந்தையாக இருக்கின்றது.

இது எப்படி இருக்கிறது என்றால், செல்லவேண்டிய இடம் தெரிகிறது.எந்தப் பதையால் செல்வதென்று தெரியவில்லை. எந்த வாகனத்தில் செல்வதென்றும் புரியவில்லை. தென்படும் வழியில் செல்கிறோம். அகப்படும் வாகனத்தில் ஏறிக் கொள்கிறோம். முடிவில் திக்குத் தெரியாமல் அகப்பட்டுத் தவிக்கிறோம். ஆனால் நான் இந்த இடத்தை அடைய வேண்டுமென்ற நோக்கம் மட்டும் தெளிவாக இருக்கிறது. அதற்கான மார்க்கமாகிய பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தை அறியாத வரைக்கும் அவற்றைப் புரிந்து கொள்வது கஸ்டமாகவே இருக்கும்.

பக்தியின்றி ஞானமில்லை. பக்தியின் முதிர்ச்சிதான் ஞானம். பக்தியின் பலந்தான் ஞானம். அந்த ஞானம்தான் இந்த இராஜயோகம். இந்த இராஜயோகம், நான் யார்? என்பதையும்; இறைவன் யார் என்பதையும்; உலக நாடகம் ப்ற்றிய முழுஞானத்தையும் போதிக்கின்றது.

மேலும் கர்மத்தின் ஆழம், அட்டசக்திகள், தெய்வீக குணங்கள் முதலியவற்றைப் ப்ற்றியும் கூறுகின்றது. இவையாவும் இறைவனே ஒருவரின் சரீரத்தில் பிரவேசம் செய்து அவர் மூலம் போதிக்கின்றார். எத்தனையோ சாதுக்கள், சந்னியாசிகள் வீட்டைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து காட்டிற்கோ, மலையடிவாரத்திற்கோ சென்று தவத்தை மேற்கொள்ளுகின்றனர். பிராணாயாமம் போன்ற மூச்சுப்  பயிற்சியையும் செய்கின்றனர்.

அவர்கள் நீண்டகாலம் ஒரே நிலையிலிருந்து புற்று மறைக்கக் கூடிய அளவிற்குக் கடும் தவம் செய்கின்ற ரிஜிகள், முனிவர்கள் எவராலும்மே முழுமையாக இனங்கண்டு கொள்ள முடியாத இறைவனை, இறைவனாலேயே கொடுக்கப்ப்ட்ட இராஜயோகத்தின் மூலமே இறைவனை முழுமையாக இனங் கண்டுகொள்ள முடியுமெனில் இந்த இராஜயோகம் எத்துணைச் சிறப்பும், மகிமையும் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே இறைவனின் முழுமையான அறிமுகத்தை அறிந்து கொள்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் இந்த இரஜயோகத்தை மேற்கொள்ளும் ஞானமார்க்கமே ஆகும்.

உடல், உயிர் அதாவது ஆத்மா இவை இரண்டும் இரு வேற்பட்ட பொருட்களாகும், இந்த இரு வேறுபட்ட
பொருட்களும் இணைந்த ரூபமே மனிதனாவான். எவ்வாறு உடல் வளர்ச்சிக்கும் உணவு அவசியமோ, அவ்வாறே ஆத்ம வளர்ச்சிக்கும் உணவு அவசியமாகிறது. அந்த வகையிலே இறைவனால் கொடுக்கப்படுகின்ற ஞானமும், யோகமுமே ஆத்மாவிற்கு உணவாகிறது.

அவற்றைத் தவறாது தினமும் மேற்கொள்வதன் மூலம், ஆத்மா சக்தியைப் பெறுகிறது. அச்சக்தி அனுபவ சக்தியாகி, அந்த அனுபவ சக்தியே அனைத்திலும் மாபெரும் சக்தியாகிறது. அம் மாபெரும் சக்தியே ஆன்மீக சக்தியாகி இறைவனின் இதயத்தில் இடம்பிடிக்கிறது. இந்தவகையிலே இந்த இராஜயோகம் இறைவனை இனங் கண்டு, அவரிடம் நம்மை இட்டுச் செல்கின்றது.

ஹத்தயோகம் தனிவழிப் பாதை
யாகும். இராஜயோகம் குடும்பப் பாதையாகும். தனிவழிப்பாதையாகிய ஹத்த யோகம் ரிஷி, முனிவர்கள் முதலியோரால் மேற்கொள்ளப் படுகின்றது. இவர்கள் வீட்டைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து காட்டிற்கோ, மலையடிவாரத்துக்கோ சென்று கடும் தவம் செய்கிறார்கள்.

குடும்பப் பாதைக்குரிய இராஜயோகம் வீட்டில் மனைவி மக்களோடு இருந்து கொண்டே அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தவாறும், ஜீவனோபாயத்துக்குரிய தொழில்களைப் புரிந்து கொண்டும் மேற்கொள்வதாகும்.

ஹத்தயோகம் உடல்வலு உள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. இராஜயோகம் இன, மத, மொழி, நிற வேறுபாடின்றி; ஆண், பெண் இருபாலாராலும், சிறியவரிலிருந்து முதியவர் வரைக்கும், ஏழை பணக்காரன், பண்டிதர், பாமரர் அனைவராலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஹத்தயோகிகளால் மேற்கொள்ளப்படும் பயிற்ச்சிகளினால் உடல் உறுதியும் ஆரோக்கியமும் பெறுவது உண்மையே. ஆனாலும் அது மனதிற்கு அமைதியையோ நின்மதியையோ கொடுப்பதில்லை. ஆனால் இராஜயோகமோ மனப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மன அமைதியையும் நின்மதியையும் பெற்றுக் கொள்வதோடு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்றுச் சந்தோசமாகவும் வாழ முடியும்.

இந்த இராஜயோகப் பயிற்சியின் மூலம் இறைவனை இனங்கண்டு கொண்டவர்கள் அளவிலா நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அறியாமை என்னும் இருளிலிருந்து விடுபட முடியும். தீய பழக்கங்களான மது, மாது, புகைத்தல், அரட்டை அடித்தல், கெட்ட சகவாசம் முதலியனவற்றிலிருந்தும், காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் முதலிய விகாரங்களிலிருந்தும், வீணான எண்ணங்களிலிருந்தும் விடுபட முடியும். இப்பயிற்சிமூலம் நல்லதொரு இணக்க மனப்பான்மையும், சமநிலையும் ஏற்படும்.

மேலும் சிந்தனை தெளிவாகும். சீரிய பண்புகள் உருவாகும். மனம் அமைதியாகும். மனக்கவலை தீரும். பேச்சு இனிமையாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். குடும்பம் கோயிலாகும். வாழ்க்கை வளமாகும். எல்லாவற்றிலும் மேலாக இறை அன்பு கிட்டும்.

இப் பயிற்சியின் மூலம் இறைவனிடமிருந்து அனைத்துப் பேறுகளையும், சக்திகளையும், தெய்வீக குணங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்வதன் மூலம்; நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் காண்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் அமைதியையும், ச்ந்தோசத்தையும் காண்பதன் மூலம் எமது குடும்ப, சூழல், தேசம், முழு உலகமுமே அமைதியையும், சந்தோசத்தையும் காண முடியும்.

"ஓம் சாந்தி"

திரு. த. கந்தையா அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

பணிப்புலம்

பண்டத்தரிப்பு

18/02/2010

1068.25.02.2015

BLOG COMMENTS POWERED BY DISQUS