Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் இளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு - அறிந்து கொள்வோம்

இளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

புத்தம் சரணம் கச்சாமி
புத்தி மனிதனுக்கு சக்தி. பகுத்தறிவுடன் வாழ கற்றுக் கொள்ளல் வேண்டும்.

சங்கம் சரணம் கச்சாமி
சங்கம் - அமைப்பு
ஒற்றுமையோடு இணைந்து வாழ வேண்டும். ஒன்றுபட்டு வாழ்ந்தால் உண்டு உயர்வு.

தருமம் சரணம் கச்சாமி.
பிறருக்கு உதவி செய்து வாழ்க் கற்றுக் கொள்.
தொண்டு செய்வது மனிதக் கடமை.

கௌதம புத்தரின் அவதாரம்

கௌதம புத்தர் என அழைக்கப் பெறும் இளவரசர் சித்தார்த்தர்; வடகிழக்கு இந்தியாவில் நேபாள எல்லையில் அமைந்துள்ள ”கபிலவஸ்து” என்னும் நாட்டின் மன்னனான சுத்தோதனருக்கும் மகாராணி மகாமயாவுக்கும் ”லும்பினி” என்னும் கிராமத்தில் கி.மு. 563-ல் அவதரித்தார்.

 

அவர் பிறந்த ”வைகாசி விசாக” தினமும் சிறப்பான நாளாகும். இத் தினத்தில்தான் இந்துக்கள் வணங்கும் ”ஆறுமுக கடவுளும்” அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் முழு நிலவு நாளான பௌர்ணமி தினத்தைக் குறிப்பதாகும்.

அத்துடன் இவருக்கு பெற்றார் சூட்டிய சித்தார்த்தர் (இயற்)பெயரும் சிறப்புப் பொருந்தியது. சித்தார்த்தர் என்பது இலட்சியத்தை அடைந்தவர் என்பது இதன் பொருள்.

சித்தார்த்தர் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாயார் மகாமாயா இயற்கை எய்தியமையால் அரசனின் விருப்பிற்கேற்ப சித்தார்த்தரின் அத்தையான பிரஜூபதி கௌதமியின் பாதுகாப்பில் வளர்த்து வந்ததுடன் தனது மகனான சித்தார்த்தரை உலகத் துன்பங்கள், கவலைகள், குறைகள் எதுவும் (அண்டாவண்ணம்) அறியாதவராக வளர்க்கப்பட்டார்.

சித்தார்த்தர் அரசர்களுக்கு உரிய கல்வி, போர்ப்பயிற்சி போன்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். அவர் தமது 16 ஆம் வயதில் தனது வயதை ஒத்த வயதுள்ள உறவினரான ”யசோதரா” என்னும் மங்கையை மணந்து ”இராகுலன்” என்னும் பெயருடைய ஓர் அழகான மகனையும் பெற்றார். இளவரசர் சித்தார்த்தரின் அரசபோக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. வாழ்வில் எந்தக் குறையும் இருக்கவில்லை.

இளவரசர் சித்தார்த்தர் ஒரு நாள் வெளியில் பவனி வந்தபோது, அவர் இதற்குமுதல் காணாத, கேள்விப்படாத சில காட்சிகள் அவரை சிந்திக்க தோன்றியதோடு மிகுந்த மனவருத்தத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு வயோதிபர், ஒரு நோயாளி, இறந்த ஒருவரின் இறுதி யாத்திரை ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தர் மிகவும் சிந்தித்தார்! மூப்பு, பிணி, சாக்காடு இவற்றுக்குக் காரணம் என்ன? இவற்றைத் தவிர்க்க முடியாதா? என்று ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.

அதே சிந்தனையில் இருந்த சித்தாத்தருக்கு சில காலங்களின் பின் அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அதனால் அமைதியை இழந்தார். உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்.

இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் கழைந்துவிட்டு இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார்.

தமது 29 ஆவது வயதில், சித்தார்த்தர் மனைவி, மகன் தந்தை, அரச சுகபோகம் அனைத்தையும் விட்டுப் பிரிந்து துறவறம் பூண்டார். இளவரசர் புறப்பட்டதைக் கண்டு துணுக்குற்ற தேரோட்டி, இளவரசே! தங்களுக்கு வாழ்வில் என்ன குறை? அரச பதவி, அரண்மனை சுகம், அன்பு மனைவி, ஆண் மகன் என அனைத்தும் உள்ளன. இவற்றையெல்லாம் பிரிந்து சென்று என்ன சுகத்தைக் காணப் போகிறீர்கள்? என்று வினவினார். சித்தார்த்தர் பதிலேதும் கூறாமல் புன்னகைத்தார்.

துறவிக்கோலம் பூண்ட சித்தாத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவன பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த ”அலாரர்” என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான ”உருத்திரிகா” என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

உண்மை ஞானத்தைத் தேடி ”நைரஞ்சனா” ஆற்று கால்வாய் ஒன்றில் புனித நீராடி (இக்காலத்தில் போத்-கயா என அழைக்கப் பெறுமிடத்தில்) ”பிப்பல்” அல்லது ”அரச” மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் ஆழ்ந்த தியானத்தில் தவமியற்றினார். முடிவில் தனது 36-வது வயதில் பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ”ஞானம்” புத்ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார்.

ஞானம் பெற்ற அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், ”சாக்கியமுனி” அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்" "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

அத்துடன் அவரின் குலப்பெருமையை உணர்த்தும் வகையில் ”கௌதம புத்தர்” என அழைக்கப்பட்டார். இடைவிடாத முயற்சியும் தவமும் ஞானத்தை அளிக்கும் என்பர். ஞானத்தை அடைய கடும் முயற்சி செய்யவேண்டும். அல்லது கடுந்தவம் செய்ய வேண்டும். சித்தார்த்தர் தாம் பெற்ற ஞானத்தை உலகின் நன்மைக்காக உபதேசித்தார்.

கொள்கைகள் :
ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் இராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

அவர் சென்ற இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-பரகதி எனும் மோட்சம் அடைந்தார்.

பௌத்த சமயத்தின் வளர்ச்சியும் தளர்ச்சியும்
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

பிற்காலத்தில், அங்கு அசோகச் சக்கரவர்த்தி ஒரு ஒரு சலவைக்கல் தூணை எழுப்பினார். அதன் உச்சியில் நான்கு கிரகங்களின் உருவம் செதுக்கப்பட்டது. இந்தச் சின்னமே நம் நாட்டின் ”தேசியச் சின்னமானது”. பல இடங்களிலும் தாம் சந்தித்த மக்களின் குறைகளைத் தீர்த்த புத்தர், நாற்பது ஆண்டுகள் தமது உபதேசங்களை அருளினார். அவை ஆசியாவெங்கும் வேகமாகப் பரவின.

கி.மு, மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகர், புத்தரின் கொள்கைகளைப் பரப்பியதில் முன்னணியில் நின்றார். கயாவிலிருந்த போதிமரக் கன்றுகளுடன் தமது பிரதிநிதிகளை அசோகர் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் "நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் "எட்டு வகைப் பாதை" எனப்படும்.

அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.

கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது.

அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.

இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது.

புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று ”தேரவதா” பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை ”மகாயானம்”. இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.

புத்தரின் போதனைகள் :
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்து ”பௌத்த மதம்” என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர் சித்தாத்தர் எனும் இயற்பெயர் கொண்ட கௌதம புத்தராவார். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் ”பௌத்தர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :
1. துன்பம்: இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
2. அதன் தோற்றம்: சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. அதை ஒழித்தல்: ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. அட்டசீலம்: (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி: புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

இடைவழி: ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :
1. நல்ல நம்பிக்கை: நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.
2. நல்லெண்ணம்: இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.
3. நல்வாய்மை அல்லது நல்லமொழி: பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.
4. நற்செய்கை: பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.
5. நல்வாழ்க்கை: பிச்சை எடுத்து வாழ்தல்.
6. நன் முயற்சி: தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
7. நற்சாட்சி: சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.
8. நல்ல தியானம்: லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்து ”பௌத்த மதம்” என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர் சித்தாத்தர் எனும் இயற்பெயர் கொண்ட கௌதம புத்தராவார்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் ”பௌத்தர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். "புத்" என்றால் வடமொழியில் ஞானம் (புத்தி) என்று அர்த்தம். ஞானம்(புத்தி) பெற்றவர் என்னும் பொருள்படவே சித்தார்த்தர் "புத்தர்" என்று அழைக்கப்படுகிறார்.

அன்புதான் இன்ப ஊற்று.
அன்புதான் உலக ஜோதி.
அன்புதான் உலக மகா சக்தி.
அன்பு இல்லாதவன் ஒரு மரக்கட்டை.
அன்பு உள்ளவனை இந்த உலகம் போற்றும்.
புத்தம் நமக்கு கற்பித்த பாடம் *அன்பு*.

நன்றி

BLOG COMMENTS POWERED BY DISQUS