Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் எம் சமூகத்தில் உள்ள முரண்பாடு களைவோம்! உடன்பாட்டில் இணைவோம்!

எம் சமூகத்தில் உள்ள முரண்பாடு களைவோம்! உடன்பாட்டில் இணைவோம்!

E-mail Print PDF

"தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்"

பகைவர், நண்பர், உறவினர், அயலார் என்னும் பிரிவினர் என்ற பேதம் இன்றி நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பனவற்றுக்கு பின்னால் மௌனமாக நின்று கொண்டிருப்பது அந்த சமூகத்தின் வயதில் மூத்த  மக்களும்,  அவர்கள் சிந்திய வியர்வையுமே.  இந்நாளில், அவர்கள் வழி வந்த சாரல்கள், சமுதாய முன்னேற்றதிற்கென எழுப்பப்பெற்ற சனசமூக நிலைய கட்டிடதினை    கட்டி எழுப்புவதற்க்கு காட்டி வந்த அக்கறையும் இலகுவில் எடுத்துக்கொள்ளப் படக்கூடியதல்ல.

இது ஒரு மகத்தான பணி.  அதன்பின் அக்கட்டிடத்தினை பழுதுபார்ப்பதற்கு  எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும்,   தமது நேரத்தினை அர்ப்பணித்து, பல தேசம் பரந்து வாழும் எம் உறவுகளிடம் பணம் சேகரித்து, புனரமைப்பு பணியினை செவ்வனே செய்து முடித்த  அனைத்து அங்கத்தினரும் வரலாற்றில்  நன்றியுணர்வோடு பார்க்கப்படுவர்.   அத்தோடு, எம்மக்கட்  கொடைப்  பெருந்தகைகளின்  தாராள  உள்ளத்தையும் ஊரில் எழுப்பப்பெற்றிருக்கும் ஆலயங்களின் வளர்ச்சியிலும் சனசமூக நிலையங்களின் வளர்ச்சியிலும் கண்கூடாகக் கண்டு போற்றலாம்

நிற்க.  இத்தருணம் இன்னொரு கோணத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளையும் பார்ப்போம்.   தற்கால நிலைமைகளுக்கான விடை  ஓரிரு  வருடங்களின்  முன்னிருந்து  நடந்த விடயங்கள் ஒரு சிலவற்றை நினைவு மீட்டினால் ஓரளவேனும் ஊகிக்க முடியலாம்.

இவையையும் தாண்டி, இங்கே இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது.  இவை எல்லாம் ஒரு சமுதாய முன்னேற்ற நிலையை ஒட்டி வெளிப்படுத்தும் ஒரு தற்போதைய விடயங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் பணியில் வேறெந்த எந்த பங்கும் ஆற்றப்போவதில்ல்லை என்பதால் ஒரு சில உதாரணங்களோடு விட்டு விடலாம்.

அடுத்த விடயம், புலம் பெயர் நாட்டில் இயங்கும் 2012 சன சமூக நிலைய அமைப்பு என்பது எவ்வாறு யாரால் எப்போது தெரிவு செய்யப்பட்டது என்பது. இந்தச் சிதம்பர ரகசியம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே வெளிச்சம்.  புலம் பெயர் நாடுகள் சார்பில் இயங்குவதாயின்,  புலம் பெயர் நாடுகள் அனைத்திலும் வாழும் ஊர் மக்களுக்கு இத்தேர்வு பற்றி முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.  அப்படி  எதுவுமே  செய்யாமல்,  தாமாக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டு அதனை முன்னே கொண்டு செல்வதாக பல வித தகவல்களை அவ்வப்போது கட்டவிழ்த்து விடும் பாங்கு எம் எல்லோரையும் பிரதி பலிக்கும்  ஒரு தலைமைக்கு உரியதா? உண்மையை சொல்லப்போனால், எம் மக்களெல்லாம்,  'ரொம்பவே நல்லவர்கள்' - காரணம், இங்கே யார் எவ்வாறு எப்போது தெரிவு செய்யப்பட்டார் என்று எதுவுமே கேள்வி கேட்காமல், தாமாக நியமிக்கப் பெற்றாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு, எதோ நல்ல விடயம் நடந்தால் சரி என்னும் சகிப்புத் தன்மையோடு வாழ்கிறார்களே.  இது ஒரு உயரிய பண்பு.  இப்பண்புக்கு ஏனும் பிரதியோபகரமாக எவ்வகை நடவடிக்கைகளை  மேற்கொள்ள முடியும் என்று பார்த்தால், எண்ணிக்கை கணக்கில் இல்லை.

ஊரின் வளர்ச்சியை நிறுத்துமளவுக்கு யாருக்கும் இங்கே வஞ்சக நெஞ்சம் இல்லை.  ஒவ்வொன்றும் பார்பவர்களின் பார்வைக்கேற்ப மாறுபடுகிறது.  ஒரு பிச்சைக்காரர் ஒரே இடத்திலேயே அமர்ந்து தினமும் பிச்சை எடுத்து காலம் கழித்து வந்தாராம்.  அவர் இறந்த பின் அந்த இடத்திலேயே அவரை புதைத்து விடலாம் என்று தோண்டிய போது மிகப்பெரிய புதையல் இருந்ததாம்.  தன் காலுக்கு அடியில் புதையல் இருந்தது தெரியாமலேயே  இறந்திருக்கிறார் பிச்சைக்காரர்.   அதுபோல, ஒற்றுமை எனும் செல்வம் நாம் எட்டும் தூரத்திலேயே இருக்க, அப்படி ஒன்றினால் ஏற்படக்கூடிய நன்மைகளை கட்டவிழ்த்துவிடப்பெற்றிருக்கும் பொய்ப் பிரம்மைகள் மழுங்கடித்து விடுமா?

இங்கே, இவர் பெரிசா அவர் பெரிசா என்னும் தர்க்கத்திற்கு வரவில்லை.  அநாவசியமான செய்திகளை பரப்புரை செய்வதை விட்டு, ஊர்நோக்கி செய்யும்  எப்பணியிலும்,  ஒற்றுமையான  நிலையை  உருவாக்கி  முன்னெடுக்கவே  கடந்தகால நிகழ்வுகளின் அலசல் முன்வைக்கப்படுகிறது.

இன்றைக்கு இருக்கின்ற தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஊரின் முன்னோடிகளான சனசமூக நிர்வாகத்திற்கே உண்டு.  இன்றைய நிலையை தீர்க்கமான முறையில் ஊரோடு ஒத்த சமாதான வழியில் கொண்டு செல்ல:

•    ஒளிவு மறைவில்லாத தெளிவான செயல்பாடு

•    அனைவரையும் அரவணைத்து செல்கின்ற திறன்

•    ஊர் முன்னேற்றம் குறித்த தொலை நோக்கு சிந்தனை என்பன அத்தியாவசியமாகும்.

யார் பொறுப்பேற்கிறார்கள் என்பதைவிட ஊர் மேம்பாட்டிற்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.  அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் மட்டும் சேவையாற்றும் துடிப்பான நிர்வாகமே இன்றைய இன்றியமையாத  தேவை.  எப்போதும்போல் அரைத்த மாவையே அரைக்காமல், ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காக சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நமதூரில் மறைந்திருக்கும் மனிதவளத்தை வெளிக்கொணர்ந்து அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் முயற்சிக்கலாம்.  பணிப்புலத்தையும் அதன் சுற்று வட்டார பிரதேசங்களையும் தலைச்சிறந்த முன்மாதிரி  செயல்களுக்கான  நிலைக்கு  இட்டு  செல்லும் வெற்றிப்பாதையை நாம் தொடரலாம்.  ஊர் நிர்வாக சபையை பல்வேறு துறைகளாகப் பிரித்து ஒவ்வொருத் துறையும் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பாக செயலாற்ற வகை செய்யலாம்.

கல்வித்துறை (பாலர் பள்ளி, பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்விக்கான வழிகாட்டுதல், கலந்தாய்வு, அரசு உதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் விளையாட்டுத்துறை (மாணவர்கள் & இளைஞர்களை விளையாட்டு, உடற்பயிற்சியின் அவசியம் உணர வைப்பதன் மூலம் தீயப் பழக்கங்களிலிருந்து காப்பாற்றுதல், சுகாதாரத்துறை (மாதாந்த அல்லது 2 – 3 மாதத்திற்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம்கள், உயிர்க்கொல்லி நோய்கள் வரும் முன் காக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்), பராமரிப்புத்துறை (ஆலயங்கள், பொது சேவை உடைமைகள்  மற்றும் நிர்வாகத்திற்குட்பட்ட கட்டிடங்களைப் பராமரித்தல்) இன்னும் இதுபோன்ற அத்தியாவசியமானத் துறைகளை உருவாக்கி அதற்கானப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து உத்வேகத்துடன் சிறப்பாக செயல்பட வகை செய்ய வேண்டும்.

நாட்டிற்கு மட்டும் தான் ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் இருக்கவேண்டும் என்றில்லை.  எம் ஊரிற்கும் இருக்கலாம்.  அவ்வாறு நிறுவப்படும் இலக்குகளை நோக்கி உத்வேகமாக செல்லும்  அர்பணிப்பு  எல்லோர்  மனதிலும்  பதிய  வேண்டுமே  அன்றி,  வேற்றுமைகளை  படர விட்டு வேடிக்கை பார்க்கும் தருணம் அல்ல இது.

அநேகமான இடங்களில், பொருளாதார நிலை தான் எத்தனையோ மந்த நிலைக்கு இட்டு செல்கிறது.  இன்றைக்கு வாசிகசாலை கட்டுவதற்கு கூட தெற்கிலிருந்து கூலிக்கு ஆட்களை கொண்டு வர வேண்டிய நிலை என்றால், எமது ஊரில் என்ன எல்லோரும் வைத்தியர் வக்கீல் வேலையா பார்க்கிறார்கள்?  ஒருவர் கூட கூலிக்கு இல்லையா?  அல்லது கூலிக்கு செய்ய கூடியவர்களை நாம் வெளிநாடில் இருந்து பணம் அனுப்பி அனுப்பியே சோம்பேறி ஆக்கி விட்டு இப்பொழுது அந்த சோம்பேறித்தனத்தால் வந்த மேலதிக செலவினையும் நாமே ஏற்கவேண்டுமா?

எப்பொழுது சிந்திப்போம்?  ஊரில் இருக்கும் சமூகத்தில் முன்னுதாரணமாகக் காட்டக்கூடிய தொழில் திறமைகளையும் பொறியியல் வல்லுனர்களையும் உள்ளடக்கி, அவர்கள் மூலம் இதனை கட்டி முடித்தால், எம் மக்கள் செய்த மகத்தான பணி என்று எம் எதிர்காலம் தலை நிமிர்த்தி சொல்லாதா?  எம் எதிர் கால சந்ததியினர் தலை தூக்கி பெருமையாக சொல்வதற்கு இங்கே நாம் விட்டு செல்லும் அடையாளம் தான் என்ன?

எமது ஊர் மாணவர்கள் உலகளாவிய ரீதியில் எத்தனையோ சாதனைகளை படைத்து வருகின்றார். ஊரிலும் இவ்வாறாக ஒரு சிலர் இருந்தாலும் கூட, ஏன் நாமெல்லாம் சேர்த்து ஒரு உறுதியான கல்வி வழங்கும் ஒரு கட்டமைப்பை அமைக்க கூடாது? அன்னதான மடத்தை ஊரின் முன்னேற்றத்திற்கு எதுவாக பயன்படுத்துவதற்கு அன்னதானம் வழங்காத காலத்தில் வழங்குவதற்கு தர்மகர்த்தாக்கள் மறுப்பு தெரிவித்தமையால் வாசிகசாலையின் மேல் மாடியில் சிறுவர் பாடசாலை இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்னதான மடத்தை ஊரின் உயர்ச்சிக்காக பொது நோக்கோடு அனுமதித்திருந்தால்; காலையில் சிறுவர்களுக்கான பாடசாலையகவும் மாலையில் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

வாசிகசாலை என்பது அமைதியாக அமர்ந்து பத்திரிகையோ புத்தகமோ  வாசிப்பதற்கு உரிய இடம்.  இங்கே, பத்திரிக்கையை கீழே வாசிப்பவருக்கு மேலே சிறுவர்கள் பள்ளி இயங்குவதாயின்  இடைஞ்சல்.  சிறுவர்களுக்கான பாடசாலை என்று பார்த்தால், எந்த நாட்டிலுமே ஒரு வரையறை உண்டு.  அதில் முக்கியமான ஒன்று, காற்றோட்டமான பாதுகாப்பான் சூழ்நிலை.  இது வாசிகசாலை இல்லை என்று அர்த்தம் ஆகாது.  அனால் வாசிகசாலையோடு ஒப்பிடுகையில், அன்னதான மடம் ஒரு மகத்தான தேர்வு. அதனை ஊர்ன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வழங்க மறுப்பது அறியாத்தனம் என்றுதான் கூற வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் எம் சமூக முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பாக தம்மால் இயன்ற பண உதவியை செய்ய முன்வரும் எத்தனையோ உறவுகள் இருக்கின்றனர்.  இங்கே தெளிவான பாதையில், அமைக்கப்பெறும் எந்த திட்டங்களுக்கும் நாடுவாரியாக அவர்கள் முழு ஆதரவு வழங்க முன்வருவார்கள்  என்பதனை கடந்த காலங்களில் அவர்கள் செய்த நற்பணிகளை பார்த்தே சொல்லி விடலாம்.  நெதர்லாந்த் அமைப்பினர், ஸ்வீடன் அமைப்பினர், சுவிஸ் அமைப்பினர், கனடா பண்பாட்டு கழகத்தினர், என்று தாமாக முன்வந்து இவர்கள் செய்த பணிகளை அடுக்கி கொண்டே போகலாம்.  இது மட்டும் இல்லாமல், தனித்தனியாக கூட எத்தனையோ நல்லுள்ளங்கள் ஊர் உறவுகளுக்கு இன்னும் உதவியவாறே உள்ளனர்.

இவர்களை ஒன்று படுத்தி, எம் ஊர் நோக்கி மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல ஆதரவு திரட்டுவது, புலத்தில் இயங்கும் அமைப்பிற்கு இருக்கும் தலையாய கடமை. இன்னும் ஒருசில தசாப்தங்களில் நாமெல்லாம் எங்கிருக்கின்றோம் என்று எமக்கே தெரியாது.  ஆனால், ஆரோக்கியமான் ஒரு சூழலை உருவாக்கியிருப்போம் என்றால், அது காலம் காலமாக நிலைத்து நிற்கும்.  இன்றைய பிரச்சனையின் வேர் என்ன வென்று ஆராய்வது ஒரு பக்கம் இருந்தாலும் பிரச்சனைக்கான தீர்வு குறித்து சிந்தித்து செயல் வடிவம் கொடுப்பதே நன்மை தரும்.

நீயா? நானா? நடத்துகின்ற களமாக மாறிவிட்ட எத்தனையோ மற்றைய இடங்களாக தொடர விடக்கூடாது.  நீயோ நானோ யாரும் பெரியவரில்லை. பொதுப்பணி ஒன்றே பெரியது என்ற சிந்தனை மேலோங்கினால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.  நம் சமூகம் கெட்டுப் போகாதிருப்பதற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் நாம் வெற்றியாளர்களாகலாம்.

திருவள்ளுவரின் கூற்று, உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம், ஏற்றத்தாழ்வு என்பது கற்பித்தலே, கற்பனையே. ஏற்றத்தாழ்வு கற்பித்தல் காரணமாக உலக அமைதி அழிகின்றது.  எனவே திருவள்ளுவரின் சமநோக்கு ஒப்புரவு பார்வையோடு மனிதநேயத்தோடு சக மனிதனை மனிதனாக மதித்து வாழ்வோம்.

முக்காலமும் பொருந்தக் கூடிய முப்பால் நம் திருக்குறள். தமிழுக்கு மகுடம் சூட்டிய திருக்குறள் வழி நடப்போம்.

நன்றி

 

BLOG COMMENTS POWERED BY DISQUS