Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் "தந்தையர் தின வாழ்த்துக்கள்" - 19.06.2016

"தந்தையர் தின வாழ்த்துக்கள்" - 19.06.2016

E-mail Print PDF

எமது உடலின் மூலக்கருவாகவும், எமது பெயரின் முதல் பெயராகவும் அமைந்து
எமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருந்து அன்போடு எம்மை
வளர்த்தெடுத்து நாம் இப் பூவுலகில் பேரோடும் புகழோடும் வாழ வழி சமைத்த அன்புத் தெய்வத்தை
இத் தினத்திலாவது நினைவு கூர்ந்து அன்போடு உறவாடி மகிழ்வித்து, வணங்கி நல்லாசி பெறுவோம்

பத்து மாதம் கருவினில் சுமந்து, மடியிலும், மார்பிலும் ஏந்தி, பாலூட்டி, தாலாடி, உணவூட்டி, மலசலம் எடுத்து, சுத்தம் செய்து, அன்புகாட்டி வளர்த்த அன்னையையோ; அல்லது தான் உருகி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திபோல் தான் வருந்தி மாடாக உழைத்து, தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய பாச உணர்வோடு தோழிலிலும், தொட்டிலிலும் தாலாட்டி, அறிவூட்டி, வழிகாட்டி பாதுகாத்து வளர்த்து பெரியவனாக்கிய தந்தையையோ அல்லது இருவரையுமோ தான் இருக்கும் வீட்டில் வைத்து பராமரித்து, உணவு வழங்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள்; முதியோர் இல்லங்களிலும், வேறு இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோருக்கு, அல்லது இறந்துவிட்ட தம் பெற்றோரை நினைவுகூறும் ஒரு திருநாளாக நன்றிக் கடன் செலுத்த உருவாக்கப் பெற்றதே அன்னையர் தினமும், தந்தையர் தினமுமாகும்.

இவை, ஆரம்ப காலத்தில் மேற்குலக நாடுகளிற்கு பொருத்தமாக இருந்த போதிலும், தற்பொழுது அவ்வூர்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களிற்கும் பொருந்தும் வகையில் அமைந்து விட்டதால் அதை நாமும் கொண்டாடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வருடத்தில் ஒரு முறையாவது இப் பூவுலகில் எம்மை படைத்து, பாதுகாத்து, எமது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் கண் கண்ட தெவங்களான பெற்றோரை கண்டு அவர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்து அவர்களுடன் கூடிக்குலாவி, அவர்களுக்கு பரிசுகள், சிறப்பு விருந்துகள் வழங்கி, அவர்களின் ஆசீர்வாதங்களை பெறும் தினமாக இத்தினம் கொண்டாடப் பெறுகின்றது.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றுரைத்த தமிழ் கலாச்சாரம், பெற்றோரை கண்கண்ட தெய்வங்களாக மதித்து வாழ்ந்து வந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது வருடம் ஒருமுறை தரிசிக்கும் வெளிநாட்டுக் கலாச்சாரத்திற்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை கவலையத் தருவதாயினும் தவிர்க முடியாததாகி விட்டது. சிலர் தம் பெற்றோருடனே வாழ்ந்து கொண்டும் இத்தினத்தை பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்தும் தினமாகவும் அவர்கள் போற்றி வழிபட்டு ஆசீர்வாதம் பெறும் தினமாகவும் கொண்டாடுகின்றார்கள்.

தந்தையர் தினம்; ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பெறுகின்றது. உலகிலேயே முதல் முறையாக 1910 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் என்ற பெண்மணியே. இத் தினம் இவ்வருடம் ஜூன் மாதம் 19ம் திகதி அமைகின்றது.

1909ம் ஆண்டு ஸ்போகேனில் உள்ள சர்ச்சில் அன்னையர் தினம் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட அவர்; தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கருதினார். அடுத்த ஆண்டே அதை அவர் நிறைவேற்றினார். அன்று முதல் அது உலகெங்கும் பிரபலமாகி தற்போது உலக அளவில் கொண்டாடப்படும் தினமாகியுள்ளது.

1910ம் ஆண்டு கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தின்போது உயிருடன் இருக்கும் தந்தையருக்கு சிவப்பு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இறந்த தந்தையரின் சமாதிகள், படங்களுக்கு வெள்ளை ரோஜா வைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்து உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1972ம் ஆண்டு, ஒரு சட்டத்தின் மூலம் தந்தையர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அதிபர் நிக்சன் அறிவித்தார்.

தந்தையர் தினம் தவிர ஆடவர் தினமும் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, தந்தையர் ஆகாத ஆண்கள், இளைஞர்களுக்கானதாகும்.

அன்னையர் தினம் தற்பொழுது ஆசிய நாடுகளில் பிரபலமாகியுள்ளதைப் போல தற்போது தந்தையர் தினமும் இங்கும் கொண்டாடப்படுகிறது.

முதியோர் இல்லம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மருமகள் என்னசொல்வாளோ? இல்லைமருமகள் பேச்சைக்கேட்டு மகன் என்னசொல்வானோ என்று கால்வயிற்றையும் அரைவயிற்றையும் நிரப்பிக்கொண்டு திண்ணையே கதி என்றிருக்கும் தந்தைமார்களுக்கு வருடத்தில் இந்த ஒருநாளாவது சுபதினமாக இருக்கலாம், என்றால் "தந்தையர் தினம்" கட்டாயம் கொண்டாடியே ஆக வேண்டும்.

தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற ஔவையின் வைர வரிகளும், அன்னையோடு அறுசுவை போம் தந்தையோடு அறிவு போம் என்ற முதுமொழியும் வெளிநாடுகளில் செயலிழந்து போயுள்ளது என்பது வெளிப்படை.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
திருக்குறள்

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

அப்பாவுக்கு ஒரு கடிதம்

ஐந்து பிள்ளை பெற்றிருந்தும் ஆண் பிள்ளை இல்லை என்ற
ஆறாத் துயரோடு ஆடியிலே தேரோடும் அம்மனுக்கு நேர்த்திவைச்சு
காலமெல்லாம் நோன்பிருந்து கடவுள் தந்த பிள்ளை என்று
கஸ்டமே தெரியாமல் செல்லமாக வளர்த்து - என்னை
"சோம்பேறி" என்ற பட்டம் பெற வைத்தவரே!

பள்ளிப் படிப்பு ஏனோ பாகற்காய் போல் கசத்திருக்க    
நொண்டிச்சாட்டு பல கூறி பள்ளிக்கு ஆப்பு வைத்து
அம்மாவின் அரவணைப்பில் செல்லமாக இருந்த - என்னை
சுள்ளித் தடியெடுத்து சுழர நாலு போட்டு அன்று
பள்ளிக்கு அனுப்பி வைத்து பாடம் சொல்லித் தந்திருந்தால்
"பட்டம்" பெற்று நானும் பலபேர் போற்ற வாழ்ந்திருப்பேன்

கனடா போய்விட்டால் சுகவாழ்வு வாழ்வாய் என்று
வட்டிக்கு காசு வாங்கி வழி அனுப்பி வைத்தவரே
கடிதம் எழுதத் தெரியாமல் கலங்குகின்றான் - உன்பிள்ளை
கல்லாப் பிழை தெரிந்து கலங்குகின்றான் தன்னை எண்ணி

பள்ளிக்கு சென்று அன்று நாலு சொல்லுப் படித்தவர்கள்
சுழரும் கதிரையிலே சுழையாக சம்பாதிக்க - உன் செல்லம்
இராப் பகலாய் கழுவுகிறான் எச்சில் கோப்பை கனடாவில்
திண்ணைக்கு மண் எடுத்து திமிர் பிடித்த என் உடம்பு
இப்போ ஏப்பைக் காம்பாகி எலும்பெல்லாம் தெரியுதப்பா!

செல்லப் பிள்ளையாக்கி என்னை ஊர் சிரிக்க வைத்தவரே
உன் ஆசை நிறைவேற்ற என்னை பொம்மையாக வளர்த்தவரே
கண்ணிருந்தும் குருடன்போல் வாழ்கின்றான் - உன் செல்லம்
மாற்று மருந்தாக ஒரு படித்த பெண்ணாய் பாருமப்பா

அன்னையரே தந்தையரே என் அருமைப் பெற்றோரே
"ஆரம்பக் கல்வி" அதன் அருமைதனை எடுத்துரைக்க
எண்ணத்தில் வந்துதித்த கதையொன்றைக் கூறிவிட்டேன்
ஏழ்மையில் வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வழிகாட்டும்
அந்த ஆரம்பக் கல்விதனை
புகட்டிவிடு தவறாது

நன்றி

பணிப்புலத்தான்

தந்தையர் அனைவருக்கும் எமது தந்தையர் தின வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

 

5224.19.06.2016

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS