Tuesday, Dec 12th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் ஒட்டுதல் முறையால் நல்ல பயன் தரும் இன தாவரங்களாக மாற்றுவது எப்படி? செய்முறை விளக்கங்களுடன்

ஒட்டுதல் முறையால் நல்ல பயன் தரும் இன தாவரங்களாக மாற்றுவது எப்படி? செய்முறை விளக்கங்களுடன்

E-mail Print PDF

ஒரு விதையில் இருந்து முளைத்த தாவரம் பயனற்றது எனக் காணுமிடத்து அதனை பயனுள்ள நல்ல இனமாக மாற்றுவதற்காகவே ஒட்டுதல் முறை மேற்கொள்ளப் பெறுகின்றது. உதாரணமாக ஒரு புளிப்புத் தன்மையுள்ள மாங்கனிகளை தரக்கூடிய மாங்கன்றை நல்ல இன மாங்கன்றாக மாற்றும் முறையே ஒட்டுதல் எனபெறுகின்றது.

இந்த ஒட்டுதல் முறையினால் ஒரு பூச்செடியையோ அல்லது மரக்கன்றையோ அதே இனத்தைச் சேர்ந்த பல வகையான கனிகளை அல்லது பூக்களைத் தரக்கூடிய ஒரு புதிய வகை தாவரமாக மாற்றம் செய்ய முடிகின்றது. ஒட்டுதல் முறையாக வளரும் தாவரங்கள் கூடிய விரைவில் பயன் தரக்கூடியனவாகவும் ஒட்டுவதற்கு பயன் படுத்தப்பெற்ற மரத்தின் குணங்கள் முழுதும் பெற்றனவாகவும் காணப்பெறுகின்றது. அத்துடன் விதையில் இருந்து முளைத்த தாவரத்திலும் பார்க்க அதிக விளைச்சலையும் தருகின்றது. அதனால் எல்லோரும் ஒட்டு இன தாவரங்களையே பயிரிடுகின்றார்கள்.

ஒரு தாவரம் நல்ல இன தாவரத்தின் விதையில் இருந்து முளைத்தாலும் கூட, அதில் கூடிய விரைவில் பயனைப் பெறுவதற்காகவும், அதிக விளைச்சலைப் பெறுவதற்காகவும், தாம் விரும்பும் வகை கனிகளை அல்லது பூக்களைப் பெறுவதற்காகவும் எல்லோரும் ஒட்டுத் தாவரத்தையே விரும்புகின்றார்கள். அது மாத்திரமன்றி ஒட்டுவதன் மூலம் ஒரே பூச்செடியில் பல விதமான பூக்களையும், ஒரே மரத்தில் பல விதமான கனிகளையும் பெறக்கூடியதாக இருக்கின்றது.

உதாரணமாக சிவப்பு நிற பூப்பூக்கும் றோசாச் செடியை வைத்திருக்கும் ஒருவர் அந்த செடியிலேயே மஞ்சள், வெள்ளை போன்ற பூக்களையும்; ஒரு புளிகும் தன்மை கொண்ட மாமரத்தை வைத்திருக்கும் ஒருவர் அந்த மரத்திலேயே கறுத்தக் கொழும்பான், அம்பலவி, விலாட்டு போன்ற பல்லின கனிகளை தரக்கூடிய கிளைகளை அல்லது அரும்பை ஒட்டுவதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

இவை மாத்திரமன்றி வறட்சியை தாங்கி அதிக விளைச்சலைத் தரக்கூடியதாக விளாத்தி மரத்தில் தோடை, எலும்பிச்சை போன்ற மரங்களையும் ஒட்டி அதிக பலன் பெறுகின்றனர்.

ஒரு வித்திலைத் தாவரம், இரு வித்திலைத் தாவரம் என பூக்கும் தாவரங்கள் இரு வகைப்படும். தாவரங்கள் அனைத்தும் தமக்கு வேண்டிய உணவை ஒளித்தொகுப்பு மூலம் தாமே தாயார் செய்து கொள்கின்றது. இதற்கு விதி விலக்காக தூத்துமக் கொத்தான் போன்ற சில முழு ஒட்டுண்ணித் தாவரங்கள் இருக்கின்றன. அவைபற்றியிருக்கும் தாவரத்தில் இருந்து தமக்கு வேண்டிய உண்வை பெறுகின்றன. குருவிச்சை போன்ற அரை ஒட்டுண்ணித் தாவரங்கள் தாம் பற்றி இருக்கும் தாவரங்கள் வேரினால் உறுஞ்சப்பெற்ற நீரை அத்தாவரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து பெற்று தாமே தமது உணவை இலைகளில் தயார் செய்கின்றன.

ஒளித்தொகுப்பு என்னும் செயல் முறையானது தாவரங்களில் காணப்பெறும் இலையில் பச்சையம் (சில இலைத் தண்டு தாவங்களில் தண்டில்) உள்ள பகுதிகளில் சூரிய சக்தியையும், காற்றில் உள்ள காபனீர் ஒக்சைட்டையும், வேரினால் உறுஞ்சப்பெற்ற நீரையும் கொண்டு தமது உணவை தாமே தயாரிப்பதாகும். இதன்போது ஒக்சிசன் வாயு கழிவுப் பொருளாக வெளிப்படுத்தப்பெறுகின்றது. தாவரங்களில் நிகழும் ஒளித்தொகுப்பு நிகழ்வினால் வாயு மண்டலத்தில் ஒச்சிசனின் சமனிலை பேணப்பெறுகின்றது.

இரு வித்திலைத் (நெல், புல், கமுகு தென்னை போன்றவை ஒரு வித்திலைத் தாவரங்களாகும்) தாவரத்தின் நடுப்பகுதில் காணப்படும் வைரமான பகுதி மூலம் வேர்கள் நிலத்தில் இருந்து உறுஞ்சப் பெறும் நீரானது தாவரத்தின் இலைகளுக்கு கடத்தப் படுகின்றது. தாவரத்தின் இலைகளில் தயாரான உணவானது தோல் பட்டையின் கலங்களினூடாக தாவரத்தின் மற்றைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பெறுகின்றன.

தாவரங்களில் ஒட்டுதல் செய்யும் போது தாவரத்தின் தோல் பட்டையே முதலில் ஒட்டுப் பெறுகின்றது. அதன் பின் மற்றையவை இணைந்து கொள்கின்றன. தாவரத்தின் தோல் பட்டைகள் ஒட்டுப் பெற்றதும் அத் தாவரத்தில் இருந்து ஒட்டப்பெற்ற புதிய உறுப்பிற்கும் உணவுகள் எடுத்துச் செல்லப்பெறுகின்றது, அதனால் புதிய உறுப்பானது இறந்து போகாது துளிர்த்து வளர ஆரம்பிக்கின்றது. பட்டைகளில் ஒட்டு தொடர்பற்றனவாக இருக்குமாயின் ஒட்டப் பெற்ற உறுப்பானது (பட்டுப்) இறந்து போகின்றது.

தாவரங்களில் ஒட்டுதல் பல வித்தியாசமான முறைகளில் மேற்கொள்ளப் பெறுகின்றன. அவையாவன அரும்போட்டும் ஆப்பு ஒட்டு, பக்க ஒட்டு என பல வகைப்படும்.

ஒட்டுதலின் போது ஒரு தாவரத்தின் பட்டையானது ஒட்டப் பெறும் தாவரத்தின் உறுப்பில் உள்ள பட்டையுடன் சரியான முறையில் பொருத்துவதன் மூலம் தாய்த் தாவரத்தின் பட்டைக்கும் பொருத்தப்பெற்ற தாவர உறுப்பின் பட்டைக்கும் இடையில் தொடர்பை ஏற்படுகின்றது.

ஆப்பு ஒட்டு:
இவ் வகை ஒட்டுகள் பொதுவாக இளம் மரக்கன்றுகளில் மேற்கொள்ளப்பெறுகின்றன. பொதுவாக மா, பியேஸ், சேரி போன்ற பழ மரங்களில் பிரதான தண்டுப் புகுதியை சுமார் ஒரு அடி உயரத்திற்கு மேல் துண்டித்து அதற்குப் பதிலாக வேறு ஒரு நல்ல இன மரக் கிளையை  பொருத்தி ஒட்டச் செய்யும் முறையாகும்.

ஆப்பு ஒட்டு ஒட்டுவதற்கான ஆயத்தங்கள் செய்யும் முறை:
1.  ஒட்டப் போகும் இளம் மரத்தின் பருமன் அளவுக்கு ஏற்றதாக நல்ல இன மரத்தின் கிளை ஒன்றை மரங்கள் துளிர ஆரபிப்பதற்கு முதல் தெரிவு செய்யுங்கள்

2.  அக் கிளையில் உள்ள இலைகளை அவற்றின் காம்பிற்கு மேல் இலை ஆரம்பிக்கும் இடத்தில் கத்தரிக் கோலால் வெட்டி விடுங்கள். (இவ்வாறு செய்வதனால் அக் கிழையில் உள்ள எல்லா இலைகளும் சுமார் 10 நாட்களில் தாமாகவே உதிர்வதுடன் அதன் தோல்பட்டையும் தடிப்பமடைந்து புதிய துளிர் வளர்வதற்கு ஆயத்தமாகின்றது. ஒட்டுக்கள் சரியாக ஒட்டிக் கொள்வதற்கு அதன் தோல் பட்டை தடிப்பமாக இருப்பது முக்கியமாகும்)

3.  இதே போன்று ஒட்டப் போகும் இளமரத்தினுடைய இலைகளையும் வெட்டி விடுங்கள். அவையும் இலைகளை தாமாகவே கொட்டி புதிய துளிர் விடும் நிலைக்கு ஆயத்தமாகும்.

4.  தயார் செய்யாத கிளைகளையும் ஒட்டுவதற்கு பாவிக்கலாம் அவை வெற்றியளிக்கும் விகிதம் மிகவும் குறைவானதே.

ஒட்டும் முறை:
முதலில் தயார் படுத்திய கிளையை ஒரு மரம் வெட்டும் கட்டரால் (சிதைவடையாது) நோப்படாது வெட்டி அதனை ஒரு பலகையில் வைத்தோ அல்லது கையால் பிடித்துக் கொண்டோ தண்டின் அடிப் பகுதியில் ("V") ஆப்புப் போல் வரக்கூடியதாக நல்ல கூரான கத்தியினால் வெட்டிக் கொள்ளுங்கள்.

வெட்டுப் பகுதி ஒரே வெட்டினால் வெட்டப்படுதல் வேண்டும். பகுதி பகுதியாக வெட்டி ஒழுங்கு படுத்தும்போது அப் பகுதியில் பள்ளம் திட்டிகள் ஏற்படலாம். பள்ளம் திட்டிகளாக இருந்தால் ஒட்டு சரியாக படியாது போய்விடும். அதனால் இரு வெட்டுக்களும் ஒழுங்காக இருக்க வேண்டியது அவசியம்.

அதன் பின் ஒட்ட வேண்டிய இளம் மரத்தின் தண்டை வெட்டி வைத்துள்ள கிளையின் பருமனுக்கு பொருத்தமான இடத்தில் கட்டரால் வெட்டி எடுத்து விடுங்கள்.

இப்போது சுத்தமான ஒரு கூரிய கத்தியினால் தாய்த் தண்டின் வெட்டுப் பகுதியின் மையத்தில் இரு பக்கங்களும் சரிசமனாக வரக்கூடியதாக இரண்டாக பிளந்து விடுங்கள். இப் பிளவானது வெட்டி வைத்த கிளையில் வெட்டப்பட்ட பகுதியிலும் சிறிது ஆழமாக இருத்தல் வேண்டும்.

இப்போது வெட்டி வைத்த கிளையை அதன் மீது அழுக்குகள், கை படாதவாறு எடுத்து ஒட்ட வேண்டிய மரத்தின் வெட்டுப் பிளவுகள் இரண்டையும் இரண்டு விரல்களால் அகலமாக்கி பிடித்துக் கொண்டு கிளையை அதனுள் சொருகி விடுங்கள்.

இப்போது அடித் தண்டினதும், கிளையினதும் வெளிப்பக்க மட்டம் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அடித் தண்டை விட கிளையின் தண்டு மெல்லியனவாக இருந்து இரு பக்கமும் சரியாக பொருந்தாது விட்டால் அவற்றின் ஒரு பக்க பட்டைகளாவது ஒழுங்காக பொருந்துபடி அமைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அவ்விடத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மெதுமையான ஆனால் பெலமான நூலால் அப்பகுதியை வரிந்து (பலமுறை சுற்றி) வெட்டுப் பட்ட இடம் மறையும் வரை சுற்றிக் கட்டி விடுங்கள். இப்போது அடி மரத்தின் வெட்டிய நுனிகள் இரண்டும் கிளையின் வெட்டுப் பகுதிக்கு மேலாக இருக்க வேண்டும்.

அதன் பின் ஒட்டிய கிளையை ஒரு வெள்ளை பொலித்தீன் பாக்கினால் மூடி ஒட்டுக் கட்டிற்கு கீழாக பிடித்து கட்டி விடுங்கள். இவ்வாறு செய்வதனால் ஆவியுயிர்பினால் கிளையானது அதிக நீரை இழந்து வாடாது இருப்பதோடு, மழையில் இருந்தும் பாதுகாக்கப் பெறுகின்றது.

ஆப்பு ஒட்டுதல் வெற்றி பெற கவனத்தில் கொள்ள வேண்டியவை:
இரண்டு பக்க தோல் பட்டைகளும் ஒன்றாக பொருந்தி இருத்தல் வேண்டும்

ஆப்பு வெட்டு வெட்டும் போது ஒரே வெட்டில் வெட்டப்பெற்றிருக்க வேண்டும்

வெட்ட உபயோகிக்கும் கத்தி கூரியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு முறை வெட்டியபின் கத்தியில் கயர் போன்று படிந்திக்கும். அதனை கழுவி துடைத்த பின்பே மறுமுறை பாவிக்க வேண்டும்

ஒட்டப்பெறும் மரம் வளம் பொருந்தியதாக இருத்தல் வேண்டும்

மழை பெய்யாத காலமாக இருத்தல் வேண்டும்

ஒட்டிய பின் அதன் தாய் மரத்தின் ஒட்டிற்கு கீழ் உள்ள கக்கங்களில் துளிர் விடாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். துளிர் வந்தால் அவற்றை முறித்து விடுதல் வேண்டும்.

அரும்பு ஒட்டு:
அரும்பு ஒட்டு என்பது ஒரு நல்ல இன மரத்தின் கக்கத்தினை (தண்டிற்கும் இலைக் காம்பிற்கும் இடையில் உள்ள முளை) எடுத்து வேறு ஒரு மரத்தில் ஒட்டுவதாகும்.

அரும்பு ஒட்டு ஒட்டுவதற்கான ஆயத்தங்கள் செய்யும் முறை:
இதற்கும் ஒட்டவேண்டிய மரத்தின் அளவுக்கு மொத்தத்திற்கு ஏற்ற நல்ல மரத்தின் கிளையைத் தெரிவு செய்யும் போது அக்கிளையில் உள்ள கக்கத்துடன் இருக்கும் இலை இல்லாதிருத்தல் வேண்டும்.
கிளையானது செழிப்பானதாக இருக்க வேண்டும்

அரும்பு   ஒட்டு ஒட்டும் முறை:
தேர்ந்தெடுத்த கிளையை கட்டரால் சிதைவு ஏற்படாது வெட்டி எடுத்து அதனை குறிக்கப்பெற்ற கக்கம் உள்ள பகுதியை சுமார் ஒரு அங்குல அளவுள்ள துண்டாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின் அந்த கக்கம் நடுவில் இருக்கும் படியாக அந்தத்துண்டை இரண்டாக பிளக்கவும்..
அதன் பின் கக்கம் உள்ள பாதியை எடுத்து அதில் உள்ள வைரமான பகுதியையும் தோல் பட்டையையும் மிகவிம் கவனமாக தோல்பட்டை சிதைவுறாது பிரித்து எடுத்து தோள்ப் பட்டையின் உள்பகுதி பாதிக்காது இருக்கும்படி வைக்கவும்.
இப்போது ஒட்ட வேண்டிய மரத்தின் கக்கம் இல்லாத ஒரு பகுதியை வெட்டிய கிளையின் பருமன் (மொத்தம்) உள்ள பகுதியை தெரிவு செய்து அதில் சுமார் ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவில்  ( I ) போன்று மேற் பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் நடுவிலும்  கூரிய மெல்லிய பிளேட்டுப் போனற ஆயுதத்தால் தண்டின் உட்பகுதியில் காயம் ஏற்படாத வண்ணம் கீறி விடவும்.

அதன் பின் கூரிய ஆயுத நுனியினால் நடுக் கீற்றுக்கு இரு பக்கமும் உள்ள தோல் பட்டையை கவனமாக கிழளப்பி விரித்து விடவும்.

அதன் பின் வெட்டி வைத்த கிளையின் பட்டையை எடுத்து அதன் உட் பகுதியில் கை படாவண்ணம் மரத்தில் கிழப்பி விட்ட இரு பட்டைகள்க்கும் நடுவில் கீழ் வெட்டோடு தோல்பட்டையின் கீழ்ப் பகுதி சரியாக பொருந்தும் படி வைத்துஇரு பக்க பட்டைகளையுமதன் மேல் மூடி அமத்திக் கொள்ளவும்.

இப்போது மேல் பக்க வெட்டுக்கு மேலாக பொருத்திய தோல்ப்படை சிறிது உயர்ந்து காணப்படும். அதனை மேல் வெட்டோடு பொருந்தக் கூடியதாக கூரிய பிலேட் கத்தியால் அமத்தி வெட்டி விடவும்.

இப்போது பொருத்திய தோல்பட்டையின் மேல் பக்கமும் கீழ்பக்கமும் இடை வெளி இன்றி பொருந்தி நிற்கும். அத்துடன் பொருத்திய தோழ்பட்டையின் அரும்பு மையத்தில் இருக்கும்.

இப்போது மெதுமையான தைரியமான நூலினால் முகை மட்டும்  தெரியும்படி விட்டு வரிந்து கட்டவும். இதன் மேல் பொலித்தீன் பேபரினால் சுற்றி மேலும் கீழும் கட்டி விடவும்.

இம் முறையே விளாத்தி மரத்தில் எலுமிச்சை, தோடை ஒட்டுவதற்கும், பெரும்பாலும் பயன்படுத்து கின்றார்கள்

எலுமிச்சை தோடை மரங்களின் கிளைகளில் கக்கம் எடுபதற்கு தெரிவு செய்யும் கிளையில் முள்ளும் இலையும் இல்லாத கக்கம் உள்ள கிளையாக இருக்க வேண்டும், முள்ளு உள்ள இடத்தில் உள்ள கக்கம் பிரித்து எடுப்பது சிரமமாகும்.

ஒட்டப்பட்ட அருன்பு ஒட்டுப் பெற்றதும் அதற்கு மேற்பக்கத்திற்கு மேல் உள்ள தண்டை (2-3 அங்க்குலம்) கட்டர் கொண்டு வெட்டி விடுவார்கள் அதன் பின் ஒட்டிய கக்கத்தில் இருந்து முளை வர ஆரம்பிக்கும். அதுவே பின் தாய் மரமாக வோ கிளை மரமாக வோ வளருகின்றது.


ஒட்டுதல் வெற்றி பெற கவனத்தில் கொள்ள வேண்டியவை:

ஒட்ட வேண்டிய கக்கம் உள்ள பகுதியை பிரித்து எடுக்கும் போது தோல்பட்டை பிரியாது, சிதைவுறாது இருத்தல் வேண்டும்

மேல் பக்க கீழ்ப் பக்க தோல் பட்டைகளும் ஒன்றாக பொருந்தி இருத்தல் வேண்டும்

தண்டில் வெட்டும் போது உட்பகுதி சிதைவுறாது இருத்தக் வேண்டும்

வெட்ட உபயோகிக்கும் கத்தி கூரியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு முறை வெட்டியபின் கத்தியில் கயர் போன்று படிந்திக்கும். அதனை கழுவி துடைத்த பின்பே மறுமுறை பாவிக்க வேண்டும்

ஒட்டப்பெறும் மரம் வளம் பொருந்தியதாக இருத்தல் வேண்டும்

மழை பெய்யாத காலமாக இருத்தல் வேண்டும்

ஒட்டிய பின் அதன் தாய் மரத்தின் ஒட்டிற்கு கீழ் உள்ள கக்கங்களில் துளிர் வரவிடாது பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

தொடரும்...




8726.19.04.2017




 

 

1695.02.06.2014

BLOG COMMENTS POWERED BY DISQUS