Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு!

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு!

E-mail Print PDF

"ஒருவரின் உண்மை வடிவத்தை, பண்பின் பக்குவத்தை, அறிவின் முதிச்சியை பிரதிபலிப்பதற்கு அவரின் வார்த்தைகளைப் போல் தகுந்த கண்ணாடி வேறேதும் கிடையாது". ஒரு ஊரின் வளர்ச்சி அதன் குறைகளை உணரத் தொடங்குவதிலிருந்தே தொடங்குகிறது. அதுபோல் ஒருவரின் வளர்ச்சி அவர் தம்மில் இருக்கும் குறைகளை உணரத் தொடங்கும்போதுதான்  ஆரம்பிக்கின்றது. நாம் எங்கிருக்கிறோம் என்று தெரிந்தால்தான் அங்கிருந்து அடுத்த நிலையை அடைய முடியும். அவ்வாறு உணரச் செய்வதில், இணைய ஊடகங்களிற்கு  ஓரளவேனும் பங்கு உண்டு.

நாம் இப்பொழுதும் குப்பை மேட்டில்தான் இருக்கிறோம் என எண்ணி எமது குலத்தை இழிவாக மற்றையவர்கள் மதிக்கும் விதத்தில் கருத்துகள் என்ற பெயரில் அலப்பறை பதியப் பெறுகின்றன. கருத்து என்பது விமர்சனம் என்பதில் இருந்து வேறுபட்டது. இருப்பினும் இன்றைய தேதிகளில் இன்னும்  நம் கண்ணுக்கெட்டும் கற்பனைச்  செய்திகளையும் அதற்கு ஒரு  சிலர் வார்க்கும்  கருத்து வினைகளையும் பார்க்க,  இதை விடக் கேவலமான ஒரு நிலை மனிதத்திற்கு உண்டோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தந்தியை விட வேகமாகப் பரவக்கூடியது வதந்தி. ஒரு விடயத்தை ஒன்றுக்கு பலவாறாக மிகைப்படுத்தியோ உருவாக்கியோ சொல்வது ஒரு சிலரின் மனித சுபாவம்.  இன்னொரு வகையினர், வதந்தியை உண்மையென நம்பிக் கருத்து இயற்றுபவர்கள்.  அவர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதோடல்லாது, ஒரு சமயத்தில் அதற்கு இடம் பொருள் ஏவல் குறித்து மற்றைய சிலரையும் நம்ப வைத்து விடுகிறார்கள்.  இந்தத் தறுவாயில், அந்த வதந்தியை கட்டவிழ்த்து விட்டவன், தான் உருவாக்கியது வதந்தியல்ல உண்மையான செய்தி என்று நம்பத் தொடங்குகிறான்.  அதாவது, ஒரு முற்றிய நிலை.  இதற்கு வைத்திய துறையில், காதுக்குள் இலகுவாக நுளையாத ஒரு பெயரும் உண்டு. உண்மைச் செய்தி வெளிவருவதற்கு முதல் வதந்தி அரைவாசி தூரம் சென்று விடுகின்றது.

தாள் பத்திரிகை, மற்றும் ஒரு வழிச் செய்தி ஊடகங்களின் காலப்பகுதியில், மக்களின் கருத்துப் பகிர்வு என்பது ஒரு பொருட்டாக இருக்கவில்லை.  அந்நிலை மாறி, இணையக்கருத்துப் பரிமாறல்  பல ஆக்கபூர்வமான நிலையை உருவாக்கி இருக்கும் இவ்வேளை ஒரு சில ஊடகங்களின் அலப்பறை (அலம்பல்) ஒரு சிலர் நபர்கள் தங்கள் அறிவீனம் காரணமாக பல பெயர்களில் பதிவுகள் செய்து பலர் அதனை ஆதரிப்பதாக ஷோகாட்டி எம்மூர் மக்களை பாரதூரமான (தவறான) நிலைக்கு இட்டுச்  செல்வதாக அமைந்துள்ளமை வேதனை தருகின்றது.

ஒரு செய்தியை பார்த்து, அதற்கு கருத்துச்  சொல்லி  சொல்லியே  அந்த செய்தியை மாற்றி வேறு விதமாகக் கொண்டு செல்லக்கூடிய சக்தி கருத்து பகிர்வோரிடம் உண்டு என்பதனை இக்காலத்தில் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது.  உண்மைகள் பொய்யாக்கப் பெறுகின்றன. பொய்கள் உண்மையென வர்ணிக்கப்பெறுகின்றன. பெரிய சாதனைகள் தகுதியற்றனவாக்கப் பெறும் அதே சமயம் சிறிய விடயங்கள் பெரிய சாதனைகளாக பேசப்பெறுகின்றன.

கருத்துப் பகிர்வில், கூறப்பெற்ற கருவை வாதிக்கு விளங்கச் செய்ய பிரதிவாதியும் பிரதிவாதிக்கு விளக்கமளிக்க வாதியும் முயல்வது தானே ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம்.  இதைப் புரிந்துகொள்ள முயலாமல் அல்லது எதிர் கருதுக்களை விவாதிக்காமல் சில இணையங்கள் வதந்திகளை  பரவ விடுவதோடு மட்டும் நின்றுவிடாது, தனிமனித தாக்குதலை  தொடர்ந்தும் மேற்கொண்டிருப்பது அநாகரீகமானதும் ஆரோக்கியமற்றதுமாகும். மாறும்  மனித சுபாவாத்தில் இருக்கும் எந்த ஒருவனையும் இந்த கருத்துக்கள் பாதிக்கிறது.  எம் கலாச்சாரம் இவ்வளவு தரம் தாழ்ந்ததல்ல என்பது எம் சாரமான கணிப்பு.

முன் ஒருகாலத்தில் கழுதையை பிரியமாக  வளர்த்தவன், அதற்கு கந்தர்வசேனன் என்று பெயரிட்டிருந்தான்.  ஒரு நாள் அது திடீரென செத்துப் போய்விடுகிறது.  அதனால் அழ ஆரம்பித்தவனிடம் காரணம் கேட்க, கந்தர்வசேனன் இறந்துவிட்டதாக சொன்னான்.  கேள்வி கேட்டவன், சரி கந்தர்வசேனன் என்பது முக்கியமான ஒரு பெரிய மனிதன் போல இருக்கும் என்று முடிவு செய்தான்.

துக்கத்தை  தாமும் பகிர்ந்துகொள்ளத் தலையை மொட்டையடித்தான், மீசையை எடுத்தான். கறுப்பு உடையை அணிந்தான்.  கந்தர்வசேனன் இறந்த செய்தி காற்று வாக்கிலே பரவ எல்லோரும் துக்கம் அனுஷ்டிக்க தொடங்க்குகிறார்கள்.  எங்கே பார்த்தாலும் மொட்டைத்தலை.  இச்செய்தி அரச சபை வரை செல்கிறது.  மந்திரியும் மொட்டை அடித்தார்.  ராஜாவும் மொட்டை அடித்தார்.  ராணி கேட்கிறார் யார் அந்த கந்தர்வசேனன் என்று.  ரரஜா மந்திரியைக் கேட்க, மந்திரிக்கும் தெரியவில்லை.  விசாரிக்க, கடைசியில்தான் தெரிந்தது கந்தர்வசேனன் கழுதை என்று!

தற்காலத்தில் தோற்றுவிக்கப்படும் மிகவும் தெளிவான சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட குழப்பநிலையை உணர்ந்து கொள்ளும் சக்தியைக்கூட சிலர் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தபோது அவர்களுக்காக கவலைப்படுவதை விட்டு வேறு எதுவும் நினைக்கமுடியவில்லை. சர்ச்சைக்குரிய விடயங்களில் கருத்து சொல்பவர்கள் பலவகை.  ஒரு செய்தியை உண்மையென நம்பி கருத்து சொல்பவர்கள், எதிரிக்கு எதிரி நண்பன் எனும் சூட்சுமத்தில், தமக்கு பிடிக்காதவர்களையோ எதிரி என்று கருதக்கூடியவர்களையோ குறிப்பிடப்படும் விடயம் உண்மையோ இல்லையோ, அதில் குறிப்பிட்டவர்களை ஒரு கை பார்க்கும் சந்தர்ப்பாமாக பயன் படுத்துகிறார்கள். 

அடுத்ததாக, அச்செய்தியை வெளியிட்டவர்கள் தமக்கு எத்த ஒரு வகையில் வேண்டியவர்களாகவோ ஏதோ ஒரு விடயத்தில் உதவியவர்களாகவோ இருந்தால் அதற்கு கண்மூடித்தனமாக்க ஆதரவாக கருத்து சொல்வார்கள்.  இன்னும் ஒரு வகையினர், ஒரு சில சில்லறைத்த்தனமான விடயங்களுக்காக, குறிப்பிடப்பெறும் விடயம் உண்மையோ இல்லையோ, அதனை உண்மை என்று வாதிடுவார்கள்.  இப்படி சில்லறைத் தனமானவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள்  வேறு  யாருமல்ல, சமூகத்தில் தம் விலாசத்தை தொலைத்தவர்களாக அல்லது தம்மை அறிமுகப் படுத்துவதற்காக ஒவ்வொரு பதிவிலும் தனது வீரதீர செயல்களை (தற்புகழ்ச்சி) முக்கியமாக சொல்லப்பெற்று தங்களை பிரபல்யமான நபர் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில் அவர் உட்கொண்ட அளவுக்கு தக்கவாறு பதிவுகளின் தரம் அமைந்திருப்பதை உணரலாம். 

கருத்துப்  பரிமாறல்களுக்கும் ஒரு தர்மம் உண்டு.  அத்தர்மம் பேணப்படும் பட்சத்தில், "உனது கருத்துகளை நான் எற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், உனது கருத்து சொல்லும் உரிமைக்காக கடைசி வரை போராடுவேன்" என்ற ஒரு மிகச் சிறந்த அறிஞனின் எண்ணம் கருத்து சுதந்திரத்துக்குரிய தேவையோடு நியாயப்படுத்தப்படுகிறது. வலைப்பதிவு இரு வழி பாதை போன்றது.  எழுத்தாளர் பீடத்தில் அமர்ந்து எழுதித்தள்ள, பவ்வியமாய் படிக்க இது பத்திரிக்கை அல்ல. இங்கு எழுதுபவனும், வாசகனும் ஒன்றே. நுட்பப் புரிதல் என்பது அவரவர் தேவையுடன் தொடர்புபடுகிறது.

வலைப் பதிவுகளில் நுட்பங்களின் உச்சத்தைப் பயன்படுத்துவோர் கூட ஒருசில இடங்களில் வந்து தடுமாறியிருக்கிறார்கள். அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் அல்ல; அதற்கான தேவை ஏற்படாததால். தேவை ஏற்பட்டாற்கூட புரிந்து கொள்வதற்கான தடைகள் ஏராளம்.  அறிவியல் உட்படப் பல்துறைகளிலும் ஏற்படும் முன்னேற்றங்களும் அவை சார்ந்த வளர்ச்சியும் தமிழ்ச் சூழலுடன் பொருத்தி உரையாடப்படுவது மிக அரிதாகவேயுள்ளது.

ஊர் விடயங்கலள் பற்றிய விவாதங்களில் நடந்த ஆரோக்கியமற்ற தன்மை, நாட்டின் அசாதாரண நிலைகளையெல்லாம் ஒருவருக்கொருவர் உதவியாக  இருந்து  கடந்து  வந்து,  புரிதல்கள் மூலம் ஒற்றுமையாக ஒழுகிய  ஊரை கூறு  படுத்துவதனை  ஊக்கப்படுதுவது போல அமைந்து விடுகிறதைப் பார்க்ககூடியதாக இருக்கிறது. 

கருத்துக்களத்தின் நாகரிகத்தைப் பேணும் பொறுப்பு ஒவ்வொரு கருத்தாளருக்கும் இன்றியமையாதது.  கருத்து முரண்பாடுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் மனப்பான்மை கொண்டவர்களின் இழிசெயல்களால் எம் ஊரின் பெருமை மழுங்கடிக்கப்படக்கூடாது.  கருத்துக்களை எழுதும் போது கண்மூடித்தனமாக குழுக்களாகப் பிரிந்து செயற்படுவது போன்ற பிரம்மைகளை உருவாக்குவது  ஒற்றுமையாக  வாழவேண்டிய எம் சமுதாய மத்தியில் தேவையில்லாத  புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடாது.

"வசனங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது செயல்களைக் காட்டிலும்". 
"தொடர்ந்து பற்றிவரும் அறியாமையைப்போல் கேவலமானது வேறொன்றும் கிடையாது"

மறதியும் மன்னிப்பும் எம் வாழ்க்கையில் இல்லை என்றால், இன்று உலகம் ஓர் சுடுகாடு, நாம் இருக்கும் இடமும் இடுகாடாக போய் இருக்கும்.  எதிர்காலத்தில் பலரின் சிந்தனைகளைத் தூண்டும் சக்தி உங்கள் எழுத்துக்கு இருக்குமானால் அது பல தட்டு வளர்ச்சிக்கு எம் எதிர்கால சந்ததியினரை இட்டுச்செல்லும்.  எம்மூர் ஒன்றும் நாம் அறியக்கூடிய தொலைவிற்கு எட்டாத வேறொரு கிரகத்தில் அமைந்து விடவில்லை - அறிந்து ஆராய்ந்து தெளிந்து, மெய்ப்பொருள் காண்பதறிவு.

கிரீதன் கனகரத்தினம்

நன்றி

303.11.30.13

BLOG COMMENTS POWERED BY DISQUS