Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம் நோய்கள் பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் சிறுநீர் கசிவும் அதற்கான தீர்வும்

பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் சிறுநீர் கசிவும் அதற்கான தீர்வும்

E-mail Print PDF

சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதை மருத்துவ ரீதியாக, Stress Urinary Incontinence என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். வீட்டில் நடக்கும் சுப காரியங்களில் கூட கலந்து கொள்வதில்லை. வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள்.

வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர்.

வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம் இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன. சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம்.

மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும். சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும்.

சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும்.

அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது.  SLING என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும்.

தொற்றுநோய் தாக்குதல்:
இதுதவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கை வைத்தியம்:
இளநீரும், தண்ணீரும் நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும்.
தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.

யோகாசனங்கள்:
சிறுநீர் கோளாறுகளை யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், சலபாசனம், தனுராசனம், மத்ஸ்யேந்திராசனம், விருச்சிகாசனம், சவாசனம் முதலியன செய்வதன் மூலம் சிறுநீரக தொற்று, கோளாறுகளை குணப்படுத்தலாம்.

இந்த விநோத நோய் எத்தகைய பெண்களுக்கு வரும்?
இந்த நோய் சுகப்பிரசவமான பெண்களுக்கு, அடுத்து வயது முதிர்ச்சியானவர்களுக்கு, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு, 35 வயதிற்கு மேலானவர்களுக்கு, குண்டான பெண்களுக்கு, மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு, கருப்பை அகற்றப்பட்டவர்களுக்கு, சிறுநீர் பையில் துவாரம் ஏற்பட்டவர்களுக்கும் வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு எல்லாம் கட்டாயம் வரும் என்பதில்லை.

இந்த நோயின் வெளிப்படையான அறிகுறிகள் எப்படியிருக்கும்?
இருமினால், தும்மினால், சிரித்தால் சிறுநீர் கசியும். மேலும் சிலருக்கு சிறுநீரை அடக்க முடியாமல் பாத்ரூமிற்குள் நுழைவதற்குள் அவசர அவசரமாக வந்துவிடும்.

பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்?
பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடித்தள தசைகள் Urethra என்கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப் பிடித்து வைத்திருக்கும். சில பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் தளர்ச்சியோ, பலவீனமோ அடைகின்ற பொழுது பெண்களுக்கு இருமினால், பலமான பொருட்களை தூக்கினால், சிரித்தால் அவர்களையும் அறியாமல் சிறுநீர் கசிந்துவிடும். ஆக கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவிற்கு முதல் காரணமாக இருப்பது தசைகளின் தளர்ச்சியே.

அடுத்து-சிறுநீர் (Urethra) குழாயினை Spinchter என்கிற தசைகள் பாது- காப்புடன் சிறுநீரை நாமாக வெளியேற்றும் வரையில் இறுக்கமாக மூடியே வைத்திருக்கும். நாம் சிறுநீர் போகும்போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீரை வெளியேற்றும். ஆனால் இந்த Spinchter தசைகள் சில பெண்மணிக்கு ஒழுங்காக, முறையாக செயல்படாமல் போகும். இதனால்கூட கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கசியலாம்.

என்னென்ன சோதனைகள் செய்து இந்த பாதிப்பின் தீவிரத்தை அறிவீர்கள்?
சிறுநீர் டெஸ்ட் செய்து கிருமி தொற்று இருக்கிறதா என்று பார்ப்போம்.
சிறுநீர் பை ஸ்கேன் செய்வோம்.

சிஸ்டஸ்கோபி (Cystoscopy) மூலம் (Urine Culture test) சிறுநீர்ப் பையின் உட்புறத்தை டெலெஸ் கோப் மூலம் சிறுநீர் பையை ஆராய்ந்து கற்களோ அல்லது காசநோய் கேன்ஸர் இருக்கிறதா என்று பார்ப்போம். மேலும் யூரோ டைமனமிக்ஸ் (Uro Dynamics) என்னும் சோதனை முறையில் சிறுநீர் பையின் தன்மை, அதன் வடிவம், செயல்பாடு போன்றவற்றையும் சோதனையிட வேண்டியிருக்கும்.

சிரித்தால், இருமினால் வருகிற துன்பத்திற்கு என்ன நவீன சிகிச்சை?
பிரச்சினையின் தீவிரம் பொருத்து சிகிச்சை மாறுபடும். ஆரம்ப நிலை என்றால் Pelvic floor exercise (தசைப் பயிற்சி) கற்பிக்கப்படும். அடுத்து Bio Feed bact யோனிக் குழாயில் அல்லது மலக்குழாயில் F.E.S என்கிற Functional Electrical Stimulation எனும் முறையில் பாதிப்பை குணப்படுத்தலாம். எனினும்- இதனை வாழ்நாள் முழுதும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதை எல்லாம் தவிர்த்து நிரந்தர தீர்வு வேண்டும் என்றால்- Sling operation என்கிற அறுவை சிகிச்சை மூலம் குணம் பெறலாம்.

இந்த ஆபரேஷனை செய்துகொண்டு உடனே வீட்டுக்குச் சென்று விடலாம். இந்த சிகிச்சைக்கு பதிலாக இன்னொரு முறையில் லேப்ராஸ்கோபிக் மூலம் Laproscope Burch ஆபரேஷனும் செய்து கொள்ளலாம். இச்சிகிச்சையும் நிரந்தர தீர்வாகும். இப்பிரச்சினையை வயதானால் வருகிற சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு மன உளைச்சல் அடையாமல் டாக்டரிடம் சென்று பார்ப்பது நல்லது.

இந்த பெண்களுக்கான சிறுநீர் பிரச்சினை அந்த காலத்திலிருந்தே இருந்து வந்ததுதானே? இப்போது புதிதாக வந்துள்ளதா?
சிரித்தால், இருமினால், தும்மினால், அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் பெண்களுக்கு சிறுநீர் கசிவது அல்லது கட்டுபாடற்ற சிறுநீர் கசிவு என்பது பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக உள்ள பிரச்சினைதான். ஆனால் பெண்களின் வினோத -இந்த மாதிரியான நோய்க்கு எந்த வகையான சிகிச்சையும் மிக மிக அண்மைக் காலம் வரை இல்லாமலிருந்தது. இப்போது இந்த பெண் நோயை குணப்படுத்த தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய மருத்துவ நிபுணர்களே உள்ளனர்.

மேலும் இந்த வினோத நோயினை பற்றி பெண்களுக்கு வரும் பல வகையான நோய்களை குணப்படுத்தும் பல மருத்துவர்களுக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. எனவே அந்த மருத்துவர்கள் பெண்களிடம் இதுபோன்ற பிரச்சினையைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. உலகம் முழுதும் உள்ள 40 சதவீதம் பெண்களுக்கு

இந்த பிரச்சினை இன்றைய நாளில் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இந்த பிரச்சினை ஒன்றும் உயிர் போகிற உடல் நலக் குறைபாடு இல்லை தான். எனினும் வெளி உலகத்திற்கு சகஜமாக போக முடியாமல் சந்தோஷ மாக சிரித்து மகிழ முடியாமல், மனசுக்குள் புழுங்க வைக்கும் இத்தகைய நோயுடன் வாழ்நாள் முழுதும் வாழத் தான் வேண்டுமா? பெண்கள் இன்றைய நாளில் குடும்பத்தை, குழந்தைகளை காப்பாற்ற தினமும் வீட்டை விட்டு வெளியே வந்து அரக்க பரக்க உழைத்து முன்னேற வேண்டிய நிலைமையில்தான் உள்ளார்கள். இவ்வாறு குடும்பத்திற்குள்ளும் வெளி உலகத்திலும் உழைக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிற பெண்கள்… இது மாதிரியான சங்கடம் தருகிற நோய்களையும் சுமந்து கொண்டு திரியத்தான் வேண்டுமா? யோசியுங்கள்.

இந்த குறைபாட்டை மறுபடியும் வரவிடாமல் செய்கிற அதிநவீன சிகிச்சைகள் வந்து விட்டன. இதுபோன்ற பெண்களின் சிறுநீரக மற்றும் சிறுநீர் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கென்றே யூரோ கேனாகாலஜி என்கிற நவீன மருத்துவதுறை வந்துள்ளது என்பது மக்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்.

இந்த உபாதையை கட்டுப் படுத்துவது, குணப்படுத்துவது எப்படி?
சிறுநீரகம் உற்பத்தி செய்யும் சிறுநீர், இரண்டு குழாய்கள் மூலம் சிறுநீர் பையை வந்தடையும். சிறுநீர்ப்பை சிறுநீரை சேமித்து வைக்கிறது. சிறுநீர் பையின் “கழுத்து”, ஒரு சுருக்குப்பை போன்ற தசையால் ஆனது. இது மூடவும், திறக்கவும், கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுநீர்ப்பை நிரம்பியதும், நரம்புகள் மூலம் தண்டுவடத்திற்கு செய்தி செல்லும். மூளை உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதலை உண்டாக்கும்.

சூழ்நிலையை பொறுத்து சிறுநீர் உடனே கழிப்பது (அல்லது) சிறிது நேரம் அடக்கிக்கொள்வது நடக்கும். இந்த அடக்கிக் கொள்ளும், பிடித்து வைக்கும் விஷேச தன்மைக்குக் காரணமாக இருப்பது மண்ணீரல். சிறுநீர் உடனே கழித்தால் “பையின்” கழுத்து தசை விரிந்து சிறுநீரை சிறுநீர் தாரை வழியே வெளியேற்றும், சிறுநீர் பையின் தசைகளும் சுருங்கி, விரிந்து இதற்கு உதவும். இந்த செயல்பாடுக்காகவே சிறுநீர்ப்பை “பலூன்” போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பலூன் போன்ற சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமாக இருப்பது மண்ணீரல்.

வயது கூடக்கூட, உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சிறுநீரகத்தின் சக்திக் குறைவினால் அதனுடைய துணை உறுப்பான சிறுநீர்பையின் தசைகள் பலவீனமடைந்து, அதில் சேமிக்கப்படும் சிறுநீரின் அளவு குறையும். சிறுநீரை அடக்கிக் கொள்ளும் திறமை குறையும்.

சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீர் முழுவதும் வெளியேறாமல், சிறிதளவு சிறுநீர், நிரந்தரமாக பையில் தங்கிவிடும். இதன் காரணமாக நாளடைவில் பெண்களின் நீர்த்தாரை எனப்படும் “லைனிங்” நலிவடையும். சிறுநீர்ப் பையில் எப்போதுமே “தசை அசைவுகள்" (மூளையிலிருந்து கட்டளை வந்தாலும், வராவிட்டாலும்) நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

இளவயதில் இந்தத் தசை அசைவுகளை, தேவை இல்லாத போது, மண்ணீரல் தடுத்து வைக்கும். வயதானால் இந்த தடுக்கும் சக்தி குறைந்து போகும். எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டாகும். சிறுநீர்ப்பையின் கழுத்து தசைகள் சரிவர மூடிக்கொள்ளாமல், பிடித்து வைத்துக் கொள்ளும் பலத்தை இழக்கும்.

இந்த நோயை அறிகுறிகளை பொறுத்து, ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.

1. அடக்கமுடியாத நீர்க்கசிவு
திடீரென்று, தீவிரமான, அடக்க முடியாத சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, சிறுநீர் வெளியேறுதல். பாத்ரூமை நோக்கி ஒடுவதற்குள் நீர் கசிந்து விடும். அல்சீமர் (மறதி வியாதி) நோய், பார்கின்ஸன் நோய், பக்க வாதம் போன்ற நரம்பு நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அளவுக்கு அதிகமான தாம்பத்ய உறவு, அளவுக்கதிகமான சுய இன்ப பழக்கம், போன்ற, சிறுநீரகச் சக்தியைக் குறைக்கும் வாழ்க்கை முறைகளே இதற்குக் காரணங்களாகும்.

இந்த வகை நோயாளிகளுக்குத் தண்ணீரைத் தொட்டால், தண்ணீரால் கை கால்கள் கழுவினால், ஏன், தண்ணீர் ஓடும் சப்தத்தை கேட்டாலே உடனே சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்! மேலும் தாம்பத்ய உறவு முடிந்த அடுத்த வினாடியே சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். சிறுநீரகமே நரம்பின் வலுவுக்குப் பொறுப்பாக இருப்பதால், சிறுநீரக சக்திக் குறைவு நரம்பு பாதிப்புகளை உண்டாக்கி இந்த நிலைக்கு காரணமாகிறது.

இந்த வகை நோயாளிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியாக வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் பின்னாட்களில் மிகுந்த உடல் மற்றும் மன நோய்களுக்கு ஆட்பட வேண்டியதிருக்கும். தேவையானால் இந்த வகை நோயாளிகளுக்கு யோக சிகிச்சையுடன் கூடிய "வாஜிகரணம்" என்று சொல்லக்கூடிய ஆயுர்வேத சிகிச்சையும் தேவைப்படலாம்.

இந்த வகை நோயாளிகள் சிறுநீரகச் சக்தியை அதிகப்படுத்தும் சலபாசனத்தோடு, சுப்தவஜ்ராசனம், உத்தான பாதாசனம், ஜானுசிரசாசனம், வீரிய ஸ்தம்பன் ஆசனம்,போன்ற ஆசனப்பயிற்சிகளைச் செய்யலாம்,  அஸ்வினி முத்திரையோடு கூடிய சக்தி முத்திரை பிராணாயாமமும், வஜ்ரோலி முத்திரைப் பயிற்சியும் இந்த நிலை நோயாளிகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

2. அழுத்த நீர்க்கசிவு
இருமினால், தும்மினால், சிரித்தால், ஓடினால், வேறு சில அசைவுகளால் சிறிதளவு சிறுநீர் தானாக சிந்துவது அழுத்த நீர்கசிவாகும். பெண்கள் தாய்மையுறும் காலங்களில் இந்த நிலை ஏற்பட்டால் பயப்படத்தேவையில்லை.கர்ப்பப்பையின் அளவு பெரிதாவதால் அது சிறுநீர்ப்பையை அழுத்தும். ஆனால் பிரசவத்திற்குப் பின்னும் இந்த நிலை ஏற்பட்டால் கவனிப்பது அவசியமாகும்.

கர்ப்பப்பை என்பது பஞ்ச பூதத்தில் மண்ணின் அம்சம், மண்ணில் விழும் விதை வளர்ந்து விருட்சமாவதைப்போலக் கர்ப்பப்பையில் விழும் பீஜமே ஒரு புது ஜீவனாக உருவெடுக்கிறது. சிவராஜயோக உடற்கூற்றுத் தத்துவத்தின்படியும் அக்குபஞ்சர் எனக்கூறப்படும் குத்தூசி வைத்தியத் தத்துவப்படியும் மண்ணீரலின் கட்டுப்பாட்டிலேயே கர்பப்பை உள்ளது.

பிரசவதிற்குப்பின் கர்ப்பப்பையும் , அடிவயிறும் சுருங்கித் தனது இயல்பு நிலைக்குத் திரும்ப மண்ணீரலே பொறுப்பு. மண்ணீரலின் சக்தி குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பையும், அடிவயிறும் இயல்பு நிலைக்குத் திரும்புவதில்லை,   இதன் காரணமாக சிறுநீர்ப் பையைச் சுற்றியுள்ள தசைகள் எப்போதும் ஒருவித அழுத்தத்துடனேயே இருக்கும்.

இந்த நிலை தொடரும்போது மூடி, திறக்கும் சிறுநீர்பையின் “கழுத்து” சிதைந்து சரிவர திறந்து மூட முடியாமல் போகும். எஸ்ட்ரோஜன் பெண் ஹார்மோன், மெனோபாஸ் ஏற்பட்ட பெண்களில் குறைந்து விடும். இதனாலும் யூரின் கட்டுப்படாமல் போகும்.

குண்டானவர்களின் அடிவயிற்றுத் தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்திக் கொண்டேயிருக்கும். இதனாலும் சிறுநீர்க்கசிவு உண்டாகும். அடிக்கடி அபார்ஷன் செய்து கொள்பவர்கள், இடுப்புப் பகுதியில் அடி அல்லது காயம் அடைந்தவர்கள், சிசேரியன், அல்லது கர்ப்பப்பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கட்டுப்பாடற்ற நீர்க்கசிவு ஏற்படும்.

இந்த வகை பெண்களுக்குத் தனுராசனம், உத்தித பாதாசனம், அர்த்த கர்ப்பாசனம், யோக முத்ரா,போன்ற ஆசனப் பயிற்சிகளோடு, நகுலாசனத்தோடு கூடிய சஹஜரோலி முத்திரைப்பயிற்சி(ககல் பயிற்சி) நல்ல பலனைத்தரும். உட்டியானா பந்தம், உதாணனை செயல்படுத்தி கர்ப்பப்பையை சீரமைக்கும். (உடலிலுள்ள, ஆயசங்கள் என்னும் பைகளின் கட்டுப்பாடு உதானனிடமே உள்ளது) சிலருக்கு குறிஞ்சிக்குழம்பு போன்ற ஆயுர்வேத மருந்துகளும் தேவைப்படலாம்.

3. நிரம்பி வழியும் நீர்க்கசிவு
சிறுநீர்ப்பை முழுவதும் நீர் சேர்ந்தாலும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றாது. இதனால் சிறுநீர் கழிக்கும் உணர்வு இல்லாமலே சிலருக்கு சிறுநீர் கழிந்து விடுவதுண்டு.– இந்த வகை சிறுநீர் கட்டுபாடின்மை பெண்களைப் பாதிப்பது குறைவு.

தண்டுவட நரம்பு பாதிப்புகள், டயாபடீஸ், ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும் இது ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு ஆண்கள் உடலில் முக்கியமானது புராஸ்டேட்சுரப்பி. ஆனால் ஆண்களுக்கு இந்த சுரப்பியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 40 வயதிற்கு மேற்பட்டோரில் 60 சதவீதத்தினர் புராஸ்டேட் பிரச்சினையால் அவதியுறுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.

யோக மருத்துவ ஆராய்ச்சியில் ஓர் ஆச்சர்யமான விஷயம் செருப்புத்தைக்கும் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு புராஸ்டேட் பிரச்சினை வருவதில்லை. காரணம் அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஒரு விசேஷ நிலை. புராஸ்டேட் சுரப்பியால் வரக்கூடிய சிறுநீர் கசிவைத்தடுக்க, பத்த கோனாசனம், கோரக்கர் ஆசனம், அபானாசனம் போன்ற ஆசனப் பயிற்சிகளோடு, வியாக்ர பிராணயாமமும் நல்ல பலன் தரும்.

4. செயல்பாடுகளால் வரும் நீர்க்கசிவு
கேரளாவில் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உள்ள மாணவர்களுக்குப் "புரோட்டின் யூரியா" எனும் நோய் தாக்கியது, காரணம் ஆராய்ந்ததில் ஒரு உண்மை தெரிய வந்தது. பள்ளியில் சுகாதாரமற்றச் சூல்நிலையிலுள்ளக் கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதை விரும்பாத மாணவர்கள் சிறுநீரை அடக்க ஆரம்பித்ததின் விளைவே புரோட்டின் யூரியா – இதுபோல சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும் நீண்டநேரமாக அடக்கி வைப்பவர்களுக்கு, நாளடைவில் சிறுநீர் கசிவு நோய் ஏற்படலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சில உடலியல் பாதிப்புகளால் உடனடியாக பாத்ரூம் ஒடுவது சாத்தியமில்லாமல் போகலாம். அதுபோல ஆர்த்தரைடீஸ், அல்சீமர் வியாதி உள்ளவர்களுக்கும் இந்த நிலை சிறுநீர் கசிவுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. “வேகங்களை அடக்கினால் சோகம்தான்” என்பது மருத்துவப் பழமொழி. அதன்படி அளவுக்கதிகமாக சிறுநீரை அடக்காமல் இருப்பதே நல்லது.

5. தற்கலிகமான நீர்க்கசிவு
– ஜலதோஷம், இருமல், சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று நோய்கள், சிலவகையான மருந்துகள் ஏற்படுத்தும் ஒவ்வாமை, போதிய உடல் அசைவு இல்லாமல் இருக்கும் நிலையில்,சில வகையான பித்த நோய்கள் இவற்றாலும் சிறுநீர் கட்டுபாடின்றி போகும். டிப்ரெஷனுக்கு கொடுக்கப்படும் மருந்துகள், மனோ வியாதிக்கான மருந்துகள், மனதை சாந்தப்படுத்தும் மருந்துகள் அலர்ஜி மருந்துகள் முதலியன இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம். இதனைக் கண்டறிந்து நீக்கிவிட்டால் நீர்க்கசிவு நின்று விடும்.

நன்றி

3519.23.03.2015

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS