Thursday, Mar 22nd

Last update08:40:09 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: மங்கையர் மலர் அழகுக்கலை பெண்களின் முகஅலங்காரம் - கண்கள் மற்றும் கூந்தல் அலங்காரம் இணைப்பு

பெண்களின் முகஅலங்காரம் - கண்கள் மற்றும் கூந்தல் அலங்காரம் இணைப்பு

E-mail Print PDF

பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு  ஒப்பிட்டு சொல்லும்போதே அதனுடைய மெதுமையும், அழகும் வெளிப்படுகின்றன.  ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் அவரின் சிரிப்பு  முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சிரிக்கும்போது  உதடும், பற்களும் இணைந்து தனியழகை தோற்றுவிக்கின்றது.

தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும் தங்களை அழகாக்கும் மேக்கப் செய்து கொண்டால் அழகாக தோற்றமளிப்பார்கள்.

உங்கள் முகம் அழகாக பிரகாசிக்க கன்னங்களை மட்டும் அழகு செய்தால் போதாது. அதன் முக்கிய உறுப்புகளையும் அழகு படுத்தும் போதுதான் பூரண பலன் கிடைக்கின்றது.

உதடுகள்
சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள்வார்கள். கோடை மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:
கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், ”வசலின்” தடவிக் கொள்ளலாம். வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், "E' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை” தடவி வரலாம்.

உதடுகளுக்கு சும்மா வெடிப்புக்கு வசலின் தடவினா போதாதா என்று கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வனப்பும் ஒரு முக்கிய காரணியாகும். நாம் தினசரி முகத்தினை அலங்கரிக்கும்போதே உதடுகளையும் அலங்கரிக்க பல வழிகளும் இருக்கின்றன . .

உதடு சிவப்பாக தோற்றமளிக்க செய்ய வேண்டியவை:
அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.

இவற்றிற்கான சிகிச்சை முறைகள்:
பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கருமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போட்டு கொள்வது எப்படி? : சிலருக்கு தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ
சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

அழகுப்படுத்திக் கொள்வது எப்படி?

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் நச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

நாக்கால் உதட்டைத் தடவாதீர்கள்!: தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.

ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு  க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும்.

ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.

உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும்.

மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.

உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண்டு ஷேப் வரைந்த பிறகு, லிப்ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையிலும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும் முன்பு உதடுகளுக்கு பவுடர் அடிக்க தேவையில்லை.

லாங்க் ஸ்டே உபயோகிக்காதவர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.

லிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம்.

இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம்.

பற்கள்

உதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது  அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல்துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம்.

அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.
இடைவெளி  ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.

வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும்.

இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை(cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம்.

சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத்தை தடுப்பது.

இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.

பார்ட்டி (விசேஷங்களுக்கு) மேகப் முறை

பார்ட்டிக்கு மேக்கப் (விசேஷங்களுக்கு) செய்வதற்கு முன்பு சில அடிப்படை டெக்னிக்கை அறிந்து கொள்ளுங்கள்:
1) பார்ட்டி அன்றோ அல்லது முதல் நாளோ, எக்காரணம் கொண்டும் ப்ளீச்சிங் செய்யாதீர்கள். முகம் நிறம் மாறிப் போய் விடும். என்ன மேக்கப் போட்டாலும் எடுபடாது. 4 நாள் முன்பே செய்துக் கொள்ளுங்கள்.

2) பேஷியலும், வாக்சிங், திரெட்டிங்கும் அப்படியே. 2 நாள் முன்பு செய்தால் போதும். இதனால் சில கல்யாண பெண்கள் கல்யாண தினத்தன்று முகம் வேறுபட்டு தெரிவார்கள். அன்றே எல்லா ட்ரீட்மெண்டும் செய்தால் முகம் எப்போதும் போல் நார்மலாக இருக்காது.

3) விசேஷம் காலையிலா அல்லது இரவா என்பதிற்கேற்ப மேக்கப் செய்யுங்கள்.

4) மேக்கப்பின் ரகசியமே நீங்கள் மேக்கப் அதிகம் போட்டதாக தெரியக் கூடாது. முக்கியமாக விசேஷங்களில் வீடியோ,போட்டோவில் பளிச்சென்று தெரிய வேண்டும் என்று சிலர் மேக்கப்பை நிறைய போட்டுக் கொள்வார்கள். நேரில் பார்க்க நன்றாக இருக்காது.

5) முடிந்தால் முதல் நாளே தலை குளித்து விடுங்கள். சில சமயம் அன்று எண்ணெய் வைத்து குளித்தால் முகம் பொலிவாக இருக்காது. தலைக்கு எண்ணெய் தடவி இருந்தால் உங்கள் முகம் மேக்கப்போடு ஒத்துப் போகாது. அதற்கு பதில் தரமான ஹேர் ஜெல் அல்லது ஸ்ப்ரே பயன் படுத்துங்கள்(படியாத முடி உள்ளவர்களுக்கு மட்டும்)

6) பட்டுப் புடவை கட்டுவதாக இருந்தால் முதலில் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளித்து பிறகு மீண்டும் லேசாக சோப் தேய்த்து கழுவுங்கள். இப்படி செய்வதால் மேக்கப்பிற்கு பின், முகம் இயற்கையாக இருப்பதைப் போல் அழகாக இருக்கும். அதே சமயம் பளிச்சென்றும் இருக்கும்.ஆனால் டிசைனர் சாரீஸ் கட்டும்போது மஞ்சள் தேவையில்லை. மாடர்னாக இருக்காது.

7) கை வாக்ஸிங் செய்வதால், மெஹந்தி போட்டால் அழகாக இருக்கும். டிசைனர் சாரி என்றால் Arabic Design மெஹந்தி நன்றாக இருக்கும். சில வகை பொட்டு வீடியோ,போட்டோவில் தெரியாது. அதிகம் டிசைன் இல்லாத அடர்ந்த(டார்க்) நிறம் கொண்ட பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

மேக்கப் செய்யும் முறை:
1) முதலில் முகத்தில் எண்ணெய்ப் பசை இல்லாத மாய்ஸ்சுரைசிங் லோஷன் போட்டுக் கொள்ளுங்கள். Nivea(Creme இல்லை லோஷன்),Jonson's Baby lotion போடலாம். நன்கு கழுத்து,முகம் முழுதும் தடவி(புருவம்,இமையில் படாமல்)உலர விடுங்கள்.

2) முகத்தில், கழுத்தில் பவுண்டேஷனை புள்ளியாக வைத்து முகம் முழுதும் நன்கு தடவுங்கள். எப்போதும் புருவம்,இமையில் படக் கூடாது.உதட்டிம் தடவலாம். இது போல் செய்தால் லிப்ஸ்டிக் அதிக நேரமும், அழகாகவும் தெரியும்.

3) சிறிது நேரம்( 10 நிமிடம் போல) முகத்தில் பவுண்டேஷன் பரவும் வரை பவுடர் பூசாமல் இருங்கள். பிறகு பிரஷ் அல்ல்து பஃப்பில் பவுடர் தடவுங்கள்.

4) கண்ணில் எப்போதும் ஐ ஷேடோ போட்டுவிட்டுதான் மஸ்காரா,ஐ லைனர் போட வேண்டும். வயதானவர்கள் மஸ்காரா மட்டும் போட்டால் நன்றாக இருக்கும். சிலர் ஸ்டிக்கர் போல் வரும் ஒரு வித ஐலைனர் போடுவார்கள். அது செயற்கையாக இருக்கும். இயல்பான லுக் கொடுக்காது. ஆடை நிறத்துக்கு தகுந்த நிறத்தில் ஐ ஷேடோ உபயோகிக்கவும். எந்த நிற ஐ ஷேடோ போட்டாலும் கண்ணின் மேல் பக்கம் புருவம் அருகே பிரவுன் நிறம் பயன் படுத்த வேண்டும். ஒரு கலர் மட்டும் உபயோகிப்பதைவிட இப்படி இரண்டு நிறம் உபயோகிப்பது நன்றாக இருக்கும். பிறகு ஐ லைனர்,மஸ்காரா போடவும்.

5) பிறகு கன்னம் அருகே பக்கவாட்டில் முக நிறத்தில் அல்லது டல் பிங்க் நிறத்தில் உள்ள ரூஜ் தடவுங்கள். டார்க் பிங்க் எல்லோருக்கும் நன்றாக இருக்காது. தனியாக கன்னம் இரண்டும் தெரியும். அதே பிரஷ் கொண்டு(தனியாக ரூஜ் எடுக்காமல்) மூக்கின் மீது மேலிருந்து கீழாக தடவுங்கள்.

6) லிப் லைனரைக் கொண்டு உதடு ஓரங்களை வரைந்து லிப்ஸ்டிக் போடவும். லிப் Gloss ஒரு நிமிடம் கழித்து போடுங்கள்.

7) இரவு நேரமாக இருந்தால் முகத்தில் லேசாக Revlon illuminator ஐ பிரஷ்ஷால் தடவவும். முகம் பளிச்சென்று இருக்கும். காலை மேக்கப்பில் வேண்டாம். அதே போல் இரவு மேக்கப்பிற்கு மஞ்சளையும் தவிர்த்து விடலாம்.

8) மேக்கப்புடன் புன்னகையையும் அணிந்து கொள்ளுங்கள். அதுவே அழகை அதிகமாக்கும்.

பயனளிக்கும் பொதுவான சில அழகுக் குறிப்புகள்
இங்கே கொடுக்க்கப் பெற்றுள்ள குறிப்புகள் யாவும் அனுபவத்தில் அனைவருக்கும் நல்ல பலன்களை தந்துள்ளது. இவை எல்லாம் வெளிநாட்டில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இந்தியாவிலும் இலங்கையிலும் பெற்றுக் கொள்ளலாம்

1) எப்போதும்போல் சோப் போட்டு குளித்த பிறகு கீழே தந்துள்ள பொடிக் கலவையை முகம், உடம்பில் தேய்த்து குளித்தால் பரு, கரும்புள்ளி, ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது.
இதற்கு தேவையானது
பன்னீர் ரோஜா - 200 கிராம் (காய வைத்தது)- நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது பூக்கடையிலிருந்து வாங்கி வந்து காய வைத்து கொள்ளவும்.(Light Rose not Dark Rose.)
வசம்பு - 100 கிராம்- தழும்பு, கரும்புள்ளிக்கு உகந்த மருந்து
கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம்
புனுகுப்பட்டை - 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
கடலைப்பருப்பு -100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்

இவை அனைத்தையும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத்து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சின்னக் குழந்தைகளுக்கு பேபி சோப் போட்டு குளிக்க வைத்த பிறகு இந்த பொடியை உடம்பு முழுதும் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். சிறு வயதிலிருந்து குளித்தால் உடம்பில் முடி இருக்காது. ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் முடியை போக்கும் தன்மையுள்ளது.
மேலும் முகத்திற்கு போடும் மஞ்சள் போல் கலர் பிடிக்காது. போட்டதே தெரியாது.
2) இதே பொடியை உபயோகப்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு பேக்(Face Pack) போடலாம்.
தயிர் - 1 ஸ்பூன்
பொடி - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 10 துளி

எல்லாவற்றையும் கலந்து முகம்,கழுத்து முழுவதும் தடவி காயும் வரை ஊறவைத்து கழுவவும்.

3) முகத்தில் பரு இருப்பவர்கள் மேலே சொன்ன பேக்குடன் 1 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த்து பேக் போடவும். முல்தானி மட்டி(ஒரு வகை களிமண்) முகத்தில் எண்ணெய் பசையை சுத்தமாக எடுத்து விடும். பரு வரவே வராது. எண்ணெய் பசை சருமம், பரு அதிகம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறையும், சாதாரண சருமம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும், உலர்ந்த சருமம் உள்ளவர்கள் தயிர் அதிகம் கலந்து மாதம் ஒரு முறையும் உபயோகப்படுத்தவும். ஆண்களுக்கும் இந்த பேக் போடலாம்.

4) முக்கியமாக இரவு தூங்கப்போகும் போது முகம் கழுவி விட்டுதான் படுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் எதுவும் வராது. பேபி லோஷன் மட்டும் போட்டுக் கொள்ளலாம்.

5) கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையானது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீரை(Rose Water) ஊற்றி இரண்டு கண்ணிலும் வைத்துக் கொள்ளுங்கள்.

6) முகத்தை மாதம் ஒரு முறை ஸ்க்ரப்பிங் செய்யவும். அப்போதுதான் இறந்த செல்கள் நீங்கும். மேலே குறிப்பிட்ட பொடியையே தண்ணீரில் குழைத்து உபயோகப்படுத்தலாம். அல்லது
ஆப்பிரிகாட் ஸ்க்ரெப்பர் போல கடையில் கிடைக்கும் தரமான பொருட்களை உபயோகப்படுத்தவும்.

7) கைகள் மிருதுவாக இருக்க, தூங்கும் முன்பு சமையல் உப்பை(Table Salt) ஐ- 2 ஸ்பூன் ஈரமான கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்.பிறகு கையை கழுவி துடைத்து ஆலிவ் ஆயில் தடவி விடவும்.

நாம் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு கண்ணாடியை பாருங்கள். அந்த எண்ணமே உங்களை அழகாக காட்டும். பிறருடன் உங்களை ஒப்பிட்டாதீர்கள். அவரவர் வாழும் வாழ்க்கை அவரவர்க்கு. இது Miss.Universe சுஷ்மிதா சென் சொன்னது.

கல்யாணம் ஆகிவிட்டால் போதும்.இனி எப்பிடி இருந்தால் என்ன என்று நினைக்காதீர்கள். கல்யாணம் ஆகும் வரை அழகாக இருந்த நாம் கணவருக்காக இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

பெண் பார்க்க வரும் போது அழகாக உடுத்தும் நாம் கல்யாணம் ஆகிய பிறகு அதை மறந்து விடக்கூடாது. பிறகு நீங்க கல்யாணம் ஆனப்ப இருந்த மாதிரி இப்ப இல்லைன்னு குறை கூற கூடாது. வெளியில் என்னதான் நாம் நன்றாக இருந்தாலும், யார் நம்மை ரசிக்க வேண்டுமோ அவருக்காக டிரஸ் செய்து கொள்ளுங்கள். வீட்டில் எப்போதும் பிரெஷ்ஷாக இருங்கள். வெளியில் செல்லும் போது லைட்டாக மேக்கப் செய்து கொள்ளுங்கள்.

கண்கள் அலங்காரம் இங்கே அழுத்துங்கள்

கூந்தல் அலங்காரம் இங்கே அழுத்துங்கள்

நன்றி

 

588/17/06

BLOG COMMENTS POWERED BY DISQUS