Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் உயிர்த்த ஞாயிறு - ஈஸ்ரர் பண்டிகை - 16.04.2017

உயிர்த்த ஞாயிறு - ஈஸ்ரர் பண்டிகை - 16.04.2017

E-mail Print PDF
Image may contain: one or more people

உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டவரின் உயிர்ப்புத் திருநாளை 16.04.2017 அன்று உயிர்த்த ஞாயிறு - Easter - Sunday பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் இயேசுநாதர் பெரிய வெள்ளி தினம் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீர்த்தபின் நிலக்கீழ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை கல்லறையில் (மரணத்தில்) இருந்து உயிர்த்தெழுந்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு - Easter - Sunday கொண்டாடப்பெற்று வருகின்றது.

இது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணையில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இவ் புனித தினம் இவ் வருடம் 16.04.2017 ம் நாளாகும். இந்நாள் இயேசு பிரான் சிலுவையில் அறையப்பெற்ற புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பெற்று வருகின்றது.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையினரால் இவ் விழா குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை வரை எட்டு நாட்கள் ”பரிசுத்த வாரம்” திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இந்த ”பரிசுத்த வாரம்” வாரம் கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் புனித வாரம். இயேசு பெருமான் மானிடர் கறை போக்க இரத்தம் சிந்த ஆயத்தமாகும் உச்சக் கட்ட நாட்கள்.  இப் புனித வாரம் குருத்தோலை ஞாயிறு 09.04.2017 அன்று ஆரம்பமாகி உயிர்த்த ஞாயிறு 16.04.2017 அன்று தினத்துடன்  நிறைவாகின்றது. இதில் சிறப்பு மிக்கவை ”புனித வியாளன்” மற்றும் ”புனித வெள்ளி” இவற்றின் வரலாறு பலர் அறிந்திருக்கலாம்.

புனித வியாளன்.
யேசுவின் போதனைகள் பல யூத பெரியார்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாய் அமைந்தது. இதனால் அவர்கள் இயேசுவின் மேல் பொய் குற்றம் சாட்டி கொலை செய்ய தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் யேசுவை அவர் சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத் என்பவனை பணத்தாசை காட்டி மயக்கி ஜேசு நாதரின் இரவு உணவின் போது அவரை கைது செய்தனர். திருவிவிலியத்தின் படி அது ஓர் வியாளக்கிழமை அன்றே தொடங்கியது யேசுவின் பாடுகள்.

இதனை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருப்பலி மூலம் ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளனர். எனினும் அனைத்து கிறிஸ்வர்களாலும் பெரிய (புனித) வியாளன் என்று கூறப்படும் தினத்தில் நினைவு கூரப்படும். இதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகளும் சடங்குகளும் இடம் பெற்ற வண்ணமே இருக்கும். இது ஆதி கிறிஸ்தவ சமூகங்களில் இருந்து பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஓர் வழிஆராதனை முறையாகும். அத்தோடு யேசு அன்னாளில்தான் தம் சீடர்களின் பாதங்களை கழுவி தன் தாழ்மையை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனை நினைவு கூர்ந்தும் பல விதமான சடங்குகள் தேவாலயங்களில் இடம் பெறும்.

இலங்கையை பொறுத்த மட்டில் தேவாலயங்களில் மட்டுமல்ல வீடுகளில் கூட பசான் எனப்படும் ஒருவகையான துக்க ஒப்பாரி ஓலங்கள் இசைக்கப்படும். இது யேசுவின் துன்பமான சிலுவை பயணத்தின் 14 துயர நிலைகளையும் கூறி நிற்கும்.

புனித வெள்ளி
இது யேசு கிறிஸ்து மும்மணி நேரம் சிலுயைில் தொங்கி இறந்த தினமாகும் இந்த நாள் கிறிஸ்தவர்களின் கறுப்புதினமாகும். கூடுமானவர்கள் இந்த நாளில் உணவை தவிர்த்து ஜெபம், தபம், விரதம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பர். மற்றவர்கள் மச்சம் மாமிசம் தவிர்த்து கூடியவரை அமைதியை கடைப் பிடித்து அதை ஓர் துக்க தினமாக அனுஸ்டிப்பர்.

தேவாலயங்களில் இவற்றை நினைவு கூரும் விதமாக பாஸ்கு எனக் கடும் சடங்கு முறையிலான வழியாடு இடம் பெறும் இது பொதுவாக கத்தோலிக்க தேவாலயங்களிலேயே இடம் பெறும்.

மற்றய கிறிஸ்தவர்கள் தொடர் ஆராதனைகளில் பங்கு பற்றுவர். ஆனால் ஜெபம், விரதம் என்பவை சகல கிறிஸ்தவர்களும் இக்காலத்தில் கடைப்பிடிப்பர்.

இயேசு இருள் படர்ந்திருந்த போதே உயிர்த்திருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது இருளுக்கும் ஒளிக்குமான போராட்டம், சாவுக்கும் உயிர்ப்புக்குமான போராட்டம், கெட்டதுக்கும் நல்லதுக்குமான போராட்டம், சாத்தானுக்கும் இயேசுவுக்கும் இடையிலானப் போராட்டத்தில் இயேசு என்னும் ஒளியானவர் சாவை பாவத்தை வென்று இருளின் ஆட்சியை பாவத்தின் சாபத்தையும் சாவையும் வென்ற சத்தியனாக விளங்குகின்றார்.

நாம் எப்பொழுது இவனை/இவளை மன்னிக்கவே முடியாது என்றும் இவன்/இவள் முகத்தை நான் பார்க்கவே மாட்டேன் என்றும், நான் செத்தாலும் அவனுடன்/அவளுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு அவனை/அவளை மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.

நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம். இறைமகன் காட்டிய வழியில் அவருக்கு பிரமாணிக்கமாய் நாமும் வாழ இந்நாளில் திடசங்கற்பம் கொள்வோம்.

விரதத்தின் மகிமை:
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. இந்த நாளை அனைவருமே கொண்டாடலாம்.

ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுந்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.

ஈஸ்டர் முட்டை:
ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

பேகன் நம்பிக்கையைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டத்தில், பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது, இதனை தழுவி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றனர்.

பழங்கால வழக்கங்களில் சாயம் பூசப்பட்ட அடிக்கப்பட்ட அல்லது வண்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் தற்கால வழக்கில், சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும். இல்லையென்றால், அவை பொதுவாக புற்கள், வைக்கோல்களால் அலங்கரிக்கப்பட்ட பறவையின் கூடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட கூடையில் வைக்கப்படுகின்றன.4603.12.04.2017

BLOG COMMENTS POWERED BY DISQUS