Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

148 வது "கனடா தின - Canada Day" நல்வாழ்த்துக்கள்” - 01.07.2015 - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

கனடா 01.07.2015 அன்று தனது 148 வது “கனடா தினம்” (கனடா பிறந்த தினத்தை) கொண்டாடுகின்றது.

கனடா தினம் என்பது கனடாவின் தேசிய தினமாகும். அதாவது, வட அமெரிக்காவின் மூன்று குடியேற்றத்திட்டங்களை ஆண்டுவந்த பிரித்தானியா; அவை மூன்றையும் ஒன்றாக இணைத்து “கனடா” என்னும் ஒரு நாடாக (பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் 1867ன் கீழ்) பிரகடனப்படுத்திய நாளே கனடா தினமாக கொண்டாடப்பெற்று வருகின்றது.

கனடா தனது முதலாவது பிறந்த தினத்தை 01.07.1868 ல் கொண்டாடியது. ஆரம்பத்தில் இத் தினத்தை “டொமினியன் தினம்” என அழைத்தனர். அதன் பின்னர்,

1982 ம் ஆண்டு ஒக்ரோபர் 27 திகதி இத் தினத்தை "கனடா தினம்" (Canada Day) என சட்ட பூர்வமாக மாற்றப் பெற்றது. இத் தினத்தை கனடாவின் "பிறந்த தினம்" எனவும் அழைப்பதுண்டு.

புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் இன்முகத்துடன் வரவேற்று, வாழ்வளித்து நாம் வேறு நாடுகளில் பிறந்திருந்த போதும் தனது நாட்டில் எமக்கும் பிரஜா உரிமையும் தந்து எல்லா மக்களையும் தாம் பெற்ற மக்களாக மதித்து காத்தருளும் “கனடா தாயை” வணங்குகின்றோம், இன்முகத்துடன் வாழ்த்துகின்றோம்.

வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு நாடாகும்.

”ஒட்டாவா” கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. கனடா 1867 ஆண்டே அரசியல் சட்டமைப்பு கொண்ட ஒரு நவீன கூட்டாட்சி நாடாக உருவானது.

ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடிமக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இன்று கனடா பல்லின மக்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும். கனடிய பழங்குடிமக்கள் அரசியல் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக இனங்காணப்படுகின்றனர்: ”இன்டியன்ஸ்”, ”இனுவிட் (Inuit)”, ”மெயிற்ரீஸ் (Metis)”.

மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் நோக்கில் பலவகைப்படுவார்கள். கனடிய பழங்குடிகள் தங்களை ”முதற் குடிகள் (First Nations)” என்று அழைத்தார்கள். இம்மக்களின் வாழ்வியல் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக்கொண்டு முதற் குடிகளை ஆறாக பிரிக்கலாம்.

அவை பின்வருமாறு:
• சமவெளி மக்கள் – (Plains)
• இறொக்குவா குடிகள் – Iroquoian Nations
• வட வேட்டுவர் – Northern Hunters
• வட மேற்கு மக்கள் – Northwest Cost
• அல்கோன்கிய குடிகள் – Algonkian Nations
• பீடபூமி மக்கள் (Plateau)

பழங்குடிகள் கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களே ”இனுவிட்” ஆவார்கள். இவர்களை அழைக்க ”எஸ்கிமோ” என்ற (தற்போது இழிவாகக் கருத்தப்படும்) சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத் தோல் உடுப்புடன் பனிக் கட்டியால் கட்டப்பட்ட, மொழுகப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு.

பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608 ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கில குடியேற்றங்கள் நியூ பவுண்ட்லாந்தில் 1610ம் ஆண்டு குடியமர்ந்தனர்.

ஐரோப்பியரின் வருகை புது நோய்களை வட அமெரிக்காவுக்கு கொண்டுவந்தது. அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் அந்த நோய்களுக்கு இரையானார்கள்.

பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் கனேடிய கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும். பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடிவரவாளர்களாலும் முதற்குடிமக்களாலும் கனடா உருவாக்கப்பட்டது.

கூட்டமைப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1870களில் சீனர்கள் தொடருந்து பாதை கட்டமைபில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885ம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது.

குறிப்பாக “Chinese Exclusion Act” 1923ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆண்டில் மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடி வந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என அழைக்கப்பட்டது.

1920 ஆண்டளவில் கனடா இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது.

இக்கொள்கை 1967ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.

உலகில் கனடா முதன்முதலாக பல்லினப்பண்பாடு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக 1971ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்பிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையினராக இருந்தார்கள்


"கனடா தாயே ஊழி உள்ளவரை நிலைத்து நின்று ஆதரவற்றவர்களுக்கு இடமளித்து காத்தருள்வாய் தாயே"

"வாழ்க கனடா வாழிய வாழியவே"

பணிப்புலம்.கொம்


நிகழ்வை வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Canada National Anthem

O Canada !
Our home and native land !
True patriot love
In all thy sons command.
With glowing hearts
We see thee rise,
The true North
Strong and free !
From far and wide,
O Canada,
We stand on guard
for thee.
God keep our land
Glorious and free !
O Canada,
We stand on guard for thee.
O Canada,
We stand on guard for thee.

 

கனடா தேசீய கீதம்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீ !
ஒளி நிறைந்த எமது
உள்ளத் தோடு நீ
உயர்வதைக் காண் கின்றோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டம்,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !

"உன் பாதம் பணிகின்றோம் தாயே"

பணிப்புலம்.கொம்

 

884.06.2015

சேவைநலன் பாராட்டு விழா - விஞ்ஞான ஆசிரியை திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்கள்- 19.06.2012

E-mail Print PDF

பதினெட்டு வருடங்களாக எமது பாடசாலையில் விஞ்ஞானபாட ஆசிரியையாக கடமை ஆற்றி ஒய்வு பெறும் ஆசிரியை

திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்கள்

காலம்: 19,06,2012 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி

இடம்: சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலய வித்துவான் மு.விருத்தாசலம் ஞாபகார்த மண்டபம்

எமது பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியராக கடந்த 18 வருடங்கள் சிறந்த சேவையாற்றி எமது மக்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்து ஓய்வுபெறும் திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் இவ் விழாவில் பங்குபற்றி சிறப்பித்து நன்றி செலுத்தி பாராட்ட வருகை தருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பாடசாலை சமூகம்,
பழைய மாணவர் சங்கம்
சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

தகவல்: பிரகலாதன் அவர்கள்

அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல்;
கொள்ளை, கொலை தொழிலைச் செய்து வந்த  திருடனை 
ராமாயணம் என்ற வராலாற்று காவியத்தை படைக்கும் அளவிற்கு
வால்மீகி உருவாகக் காரணமான நாரதரைப் போல்;
விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல்;
எங்கள் ஊர் பாடசாலையில் பல மேதைகளை உருவாக்க காரணமாக இருந்த
ஆசிரியை திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்களின் சேவையை
பாராட்டுகின்றோம், போற்றுகின்றோம், நன்றி கூறுகின்றோம்.
பணிப்புலம்.கொம்

ஆசிரியர் என்பவர்....

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.

இருக்கும்  இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாதது; தமக்குக் கிடைத்ததை பிறருக்கும் கொடுத்தால் வளர்ச்சிபெறுவது; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாதது கல்வி. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் "செல்வம்" எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல! என்பது அதன் பொருள். அந்த கல்வியை போதிப்பவர் யார்? அவரைப்பற்றி அறிந்து கொள்ள முனைவோம்.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள்தான் ஆசிரியர்கள் என்று அழைக்கின்றார்கள். மாணவர்களை முதன்மை படுத்த பசளையாக இருந்து ஊக்குவிப்பவர்கள் ஆசிரியர்கள்.

நாட்டின் மிக முக்கியத்துவம் கொண்ட தொழில்களில் ஆசிரியத் தொழிலும் ஒன்று. ஏனெனில் பாடப் புத்தகம் என்பதற்கு வெளியே நிதர்சன உலகை உருவகப்படுத்தி அதற்கு உவமைகள் காட்டி, பல விஷயங்களை கற்றுக் கொடுத்து, ஒரு தலைமுறை மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறையையும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்துள்ளது.

“எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும்.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே அவை பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.

அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாகின்றனர்.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும்.

சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர் உன்னத உணர்வு மனதில் ஏற்படும்.

அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

நன்றி

"தந்தையர் தின வாழ்த்துக்கள்" - 19.06.2016

E-mail Print PDF

எமது உடலின் மூலக்கருவாகவும், எமது பெயரின் முதல் பெயராகவும் அமைந்து
எமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருந்து அன்போடு எம்மை
வளர்த்தெடுத்து நாம் இப் பூவுலகில் பேரோடும் புகழோடும் வாழ வழி சமைத்த அன்புத் தெய்வத்தை
இத் தினத்திலாவது நினைவு கூர்ந்து அன்போடு உறவாடி மகிழ்வித்து, வணங்கி நல்லாசி பெறுவோம்

பத்து மாதம் கருவினில் சுமந்து, மடியிலும், மார்பிலும் ஏந்தி, பாலூட்டி, தாலாடி, உணவூட்டி, மலசலம் எடுத்து, சுத்தம் செய்து, அன்புகாட்டி வளர்த்த அன்னையையோ; அல்லது தான் உருகி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திபோல் தான் வருந்தி மாடாக உழைத்து, தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய பாச உணர்வோடு தோழிலிலும், தொட்டிலிலும் தாலாட்டி, அறிவூட்டி, வழிகாட்டி பாதுகாத்து வளர்த்து பெரியவனாக்கிய தந்தையையோ அல்லது இருவரையுமோ தான் இருக்கும் வீட்டில் வைத்து பராமரித்து, உணவு வழங்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள்; முதியோர் இல்லங்களிலும், வேறு இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோருக்கு, அல்லது இறந்துவிட்ட தம் பெற்றோரை நினைவுகூறும் ஒரு திருநாளாக நன்றிக் கடன் செலுத்த உருவாக்கப் பெற்றதே அன்னையர் தினமும், தந்தையர் தினமுமாகும்.

இவை, ஆரம்ப காலத்தில் மேற்குலக நாடுகளிற்கு பொருத்தமாக இருந்த போதிலும், தற்பொழுது அவ்வூர்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களிற்கும் பொருந்தும் வகையில் அமைந்து விட்டதால் அதை நாமும் கொண்டாடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வருடத்தில் ஒரு முறையாவது இப் பூவுலகில் எம்மை படைத்து, பாதுகாத்து, எமது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் கண் கண்ட தெவங்களான பெற்றோரை கண்டு அவர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்து அவர்களுடன் கூடிக்குலாவி, அவர்களுக்கு பரிசுகள், சிறப்பு விருந்துகள் வழங்கி, அவர்களின் ஆசீர்வாதங்களை பெறும் தினமாக இத்தினம் கொண்டாடப் பெறுகின்றது.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றுரைத்த தமிழ் கலாச்சாரம், பெற்றோரை கண்கண்ட தெய்வங்களாக மதித்து வாழ்ந்து வந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது வருடம் ஒருமுறை தரிசிக்கும் வெளிநாட்டுக் கலாச்சாரத்திற்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை கவலையத் தருவதாயினும் தவிர்க முடியாததாகி விட்டது. சிலர் தம் பெற்றோருடனே வாழ்ந்து கொண்டும் இத்தினத்தை பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்தும் தினமாகவும் அவர்கள் போற்றி வழிபட்டு ஆசீர்வாதம் பெறும் தினமாகவும் கொண்டாடுகின்றார்கள்.

தந்தையர் தினம்; ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பெறுகின்றது. உலகிலேயே முதல் முறையாக 1910 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் என்ற பெண்மணியே. இத் தினம் இவ்வருடம் ஜூன் மாதம் 19ம் திகதி அமைகின்றது.

1909ம் ஆண்டு ஸ்போகேனில் உள்ள சர்ச்சில் அன்னையர் தினம் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட அவர்; தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கருதினார். அடுத்த ஆண்டே அதை அவர் நிறைவேற்றினார். அன்று முதல் அது உலகெங்கும் பிரபலமாகி தற்போது உலக அளவில் கொண்டாடப்படும் தினமாகியுள்ளது.

1910ம் ஆண்டு கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தின்போது உயிருடன் இருக்கும் தந்தையருக்கு சிவப்பு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இறந்த தந்தையரின் சமாதிகள், படங்களுக்கு வெள்ளை ரோஜா வைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்து உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1972ம் ஆண்டு, ஒரு சட்டத்தின் மூலம் தந்தையர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அதிபர் நிக்சன் அறிவித்தார்.

தந்தையர் தினம் தவிர ஆடவர் தினமும் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, தந்தையர் ஆகாத ஆண்கள், இளைஞர்களுக்கானதாகும்.

அன்னையர் தினம் தற்பொழுது ஆசிய நாடுகளில் பிரபலமாகியுள்ளதைப் போல தற்போது தந்தையர் தினமும் இங்கும் கொண்டாடப்படுகிறது.

முதியோர் இல்லம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மருமகள் என்னசொல்வாளோ? இல்லைமருமகள் பேச்சைக்கேட்டு மகன் என்னசொல்வானோ என்று கால்வயிற்றையும் அரைவயிற்றையும் நிரப்பிக்கொண்டு திண்ணையே கதி என்றிருக்கும் தந்தைமார்களுக்கு வருடத்தில் இந்த ஒருநாளாவது சுபதினமாக இருக்கலாம், என்றால் "தந்தையர் தினம்" கட்டாயம் கொண்டாடியே ஆக வேண்டும்.

தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற ஔவையின் வைர வரிகளும், அன்னையோடு அறுசுவை போம் தந்தையோடு அறிவு போம் என்ற முதுமொழியும் வெளிநாடுகளில் செயலிழந்து போயுள்ளது என்பது வெளிப்படை.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
திருக்குறள்

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

அப்பாவுக்கு ஒரு கடிதம்

ஐந்து பிள்ளை பெற்றிருந்தும் ஆண் பிள்ளை இல்லை என்ற
ஆறாத் துயரோடு ஆடியிலே தேரோடும் அம்மனுக்கு நேர்த்திவைச்சு
காலமெல்லாம் நோன்பிருந்து கடவுள் தந்த பிள்ளை என்று
கஸ்டமே தெரியாமல் செல்லமாக வளர்த்து - என்னை
"சோம்பேறி" என்ற பட்டம் பெற வைத்தவரே!

பள்ளிப் படிப்பு ஏனோ பாகற்காய் போல் கசத்திருக்க    
நொண்டிச்சாட்டு பல கூறி பள்ளிக்கு ஆப்பு வைத்து
அம்மாவின் அரவணைப்பில் செல்லமாக இருந்த - என்னை
சுள்ளித் தடியெடுத்து சுழர நாலு போட்டு அன்று
பள்ளிக்கு அனுப்பி வைத்து பாடம் சொல்லித் தந்திருந்தால்
"பட்டம்" பெற்று நானும் பலபேர் போற்ற வாழ்ந்திருப்பேன்

கனடா போய்விட்டால் சுகவாழ்வு வாழ்வாய் என்று
வட்டிக்கு காசு வாங்கி வழி அனுப்பி வைத்தவரே
கடிதம் எழுதத் தெரியாமல் கலங்குகின்றான் - உன்பிள்ளை
கல்லாப் பிழை தெரிந்து கலங்குகின்றான் தன்னை எண்ணி

பள்ளிக்கு சென்று அன்று நாலு சொல்லுப் படித்தவர்கள்
சுழரும் கதிரையிலே சுழையாக சம்பாதிக்க - உன் செல்லம்
இராப் பகலாய் கழுவுகிறான் எச்சில் கோப்பை கனடாவில்
திண்ணைக்கு மண் எடுத்து திமிர் பிடித்த என் உடம்பு
இப்போ ஏப்பைக் காம்பாகி எலும்பெல்லாம் தெரியுதப்பா!

செல்லப் பிள்ளையாக்கி என்னை ஊர் சிரிக்க வைத்தவரே
உன் ஆசை நிறைவேற்ற என்னை பொம்மையாக வளர்த்தவரே
கண்ணிருந்தும் குருடன்போல் வாழ்கின்றான் - உன் செல்லம்
மாற்று மருந்தாக ஒரு படித்த பெண்ணாய் பாருமப்பா

அன்னையரே தந்தையரே என் அருமைப் பெற்றோரே
"ஆரம்பக் கல்வி" அதன் அருமைதனை எடுத்துரைக்க
எண்ணத்தில் வந்துதித்த கதையொன்றைக் கூறிவிட்டேன்
ஏழ்மையில் வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வழிகாட்டும்
அந்த ஆரம்பக் கல்விதனை
புகட்டிவிடு தவறாது

நன்றி

பணிப்புலத்தான்

தந்தையர் அனைவருக்கும் எமது தந்தையர் தின வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

 

5224.19.06.2016

இரண்டாம் எலிசபெத் மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் - வைரவிழா - ஆபரணங்கள் இணைப்பு

E-mail Print PDF

பிரிட்டிஷ் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் பொருட்டு வைர விழா கொண்டாட்டங்கள் பிரிட்டனில் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. ஜூன் மாதம் (2012) 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை இந்த விழா நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகின்ற போதிலும் நாட்டின் தலைவராகவும், தேசத்தின் தலைவராகவும் விளங்க வேண்டிய கடமைகள் அரியணையில் இருப்பவருக்குதான் உண்டு. அந்த வகையில் பிரித்தானியா நாட்டுத் தலைவியாக மாண்புமிகு இரண்டாம் எலிசபெத் மகாராணியார் விளங்குகின்றார்.

பிரிட்டனின் 6ஆம் ஜோஜ் மன்னருக்கும் அவரது துணைவியார் எலிசபெத் மக்காராணிக்கும், மூத்த பிள்ளையாக 1926 ஆம் ஆண்டு
ஏப்பிரல் மாதம் 21ம் திகதி பிறந்தார். அவருக்கு அப்போது எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்ற பெயர் சூட்டப்பெற்றது. 1952ஆம் ஆண்டு பிரித்தானிய மன்னராக இருந்த இவரது தந்தை காலமான நிலையில் 26 வயதிலேயே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் மகாராணி என்ற பெயருடன் முடிசூடிக்கொண்டார்.

பிரிட்டனில் நூற்றாண்டுகள் காலம் பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ள அரசியல் சாசன கடமைகளையும், பிரதிநிதித்துவப் பொறுப்புகளையும் மகாராணி இரண்டாம் எலிசபெத் நிறைவேற்றிவருகிறார்.

இவ் வைர விழா கொண்டாட்டங்களின் ஆரம்பத்தை அறிவிப்பதற்காக லண்டன், எடின்பரோ, கார்டிஃப் பெல்ஃபாஸ்ட் ஆகிய இராஜ்ஜியத் தலைநகரங்களில் 41 தடவை பீரங்கி வேட்டு தீர்க்கும் இராணுவச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

நேற்று 02.06.2012 சனிக்கிழமை லண்டன் அருகேயுள்ள டார்பியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் மகாராணி குடும்பத்தாரோடு கலந்துகொண்டுள்ளார்.

மகாராணி முன்னிலையில் பிரிட்டனின் முன்னணி ஓபரா இசைப் பாடகி கேதரின் ஜென்கின்ஸ் எ டே ஐவில் நெவர் ஃபர்கெட் என்ற பிரிட்டனின் தேசிய கீதத்தைப் பாடினார்.

ஞாயிறு லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் கடந்த முந்நூற்று ஐம்பது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் படகு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் படகுகள் அணிவகுக்கவுள்ள இந்த ஊர்வலத்தில் மகாராணியும் ஒரு படகில் பயணிக்கவுள்ளார்.

திங்களன்று முன்னணி இசைக்கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கச்சேரி ஒன்று பங்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று இராணுவ அணிவகுப்புடன் கூடிய ஊர்வலத்தில் ராணி பங்கேற்கிறார்.

கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.

இந்தக் கொண்டாட்ட காலம் முழுதும் பிரிட்டனில் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

ஏராளமான வீதி விருந்துகளும் பொது நிகழ்ச்சிகளுமாக பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பிரிட்டனின் மகா ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில், அபிப்பிராய வாக்கெடுப்பில் பிரிட்டனின் புகழ்பெற்ற மன்னர்கள், மகாராணிகள் வரிசையில் எலிசபெத்தே முன்னணியில் திகழ்வதாக த டெலிகிராப் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது. .

பிரிட்டனில் முடியாட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமென 55 சதவீதமான வாக்காளர்கள் கருதுவது இந்த அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் வெளிவந்திருக்கிறது. 28 சதவீதமானோர் மட்டுமே நாடு குடியரசாக மாறவேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றனர். மகாராணி எலிசபெத்திற்குப் பின்னர் இளவரசர் சார்ள்ஸே முடிசூடவேண்டுமென 58 சதவீதமானோர் கருதுகின்றனர்.

ஆனால், 35 சதவீதமானோர் கேம்பிரிட்ஜ் கோமகன் (வில்லியம்) பதவியேற்க வேண்டுமென விரும்புகின்றனர். முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் மன்னராக முடிசூடினாலும் அவரின் மனைவியான கோர்ன் வோல் சீமாட்டி கமீலா மகாராணியாகமாட்டார் என 61 சதவீதமானோர் நம்புகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் சிறப்பான மன்னர் மற்றும் மகாராணிகள் யார் என்ற போட்டியில் தற்போதைய மகாராணி இரண்டாம் எலிசபெத்தே முன்னணியில் விளங்குகிறார். அவருக்கு 35 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. எலிசபெத்தின் பூட்டியான விக்டோரியா மகாராணிக்கு 24 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 

இவர்களின் மூதாதையரான முதலாம் எலிசபெத்திற்கு 15 சதவீதமான ஆதரவே கிடைத்திருக்கிறது. எட்டாம் ஹென்றி மன்னருக்கு 3 சதவீத வாக்குகளும் ஐந்தாவது ஹென்றிக்கு ஒரு சதவீத வாக்கும் கிடைத்துள்ளன. இந்த வரிசையில் மூன்று மகாராணிகளுமே முன்னணியில் விளங்குகின்றனர்.

வைரவிழா ஆரம்பமான நிலையில் எப்சம் டேர்பையில் 1 1/2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து குழுமியிருந்தனர். பந்தயங்களைப் பார்த்து ரசிப்பது மகாராணிக்கு மிகவும் விருப்பமான விடயமாகும்.  வைரவிழாவை முன்னிட்டு பல போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளை மகாராணியும் எடின்பேர்க் கோமகனும் (மகாராணியின் கணவன் இளவரசர் பிலிப்) கண்டுகழித்து வருகின்றனர்.

இவர்களுடன் மகாராணியின் இரண்டாவது மகன் யோக் கோமகனான இளவரசர்  அன்ரூவும் அவரின் மகள்மாரான பியட்ரிஸ் யூஜின் மற்றும் வெசைக்ஸ் பிரபு, சீமாட்டி ஆகியோரும் இவர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

கிராமங்கள் பட்டணங்கள் நகரங்களில் பாரியளவு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. வீதிகளில் விருந்து வைபவங்களும் இடம்பெறுவதுடன் தலைநகர் லண்டன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இன்று திங்கட்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியிலே முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் இசைக் கச்சேரி இடம்பெறவுள்ளது. நாளை இராணுவ அணி வகுப்புடன் கூடிய ஊர்வலத்தில் மகாராணி பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து வான வேடிக்கையும் இடம்பெறவுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திலும். உலகின் பலபாகங்களிலுமாக 400 தீபங்கள் ஏற்றப்படவுள்ளன.

டொங்கிங் வீதியில் நடைபெறவுள்ள வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர் டேவிட் கமரூன் கலந்து கொள்வார்.

பிரிட்டிஷ் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் வைர விழாக் கொண்டாட்டங்கள் சனிக்கிழமை பிரிட்டனில் மாத்திரமன்றி அதன் முன்னாள் காலனிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இடம்பெறுகின்றன.

இதேவேளை, பிரிட்டிஷ் மகாராணியார் ஒருபோதும் முடிதுறக்க மாட்டார் என அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். தனது ஆயுள் முழுவதும் அவர் நாட்டிற்கு சேவையாற்றுவார் என்றும் அதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரிட்டனின் வரலாற்றில் வைர விழா கொண்டாடும் இரண்டாவது அரசியாக எலிசபெத் விளங்குகிறார். அவரின் பூட்டியான விக்டோரியா மகாராணியே முதலாவதாக வைர விழாவைக் கொண்டாடியிருந்தார். பிரிட்டனுக்குக் கிடைத்த அசாதாரணமான கொடை “என கன்டர்’பரி பேராயர் மகாராணியை வர்ணித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் மகாராணியை மிகவும் சாதுரியமானவரும் பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை கொண்டவரும் என வர்ணித்திருக்கிறார்.

அதேசமயம் முடிவுக்குரிய இளவரசர் சாள்ஸ் தனது தாயாரை அற்புதமான தாய் என்று வர்ணித்திருக்கிறார்.

இந்த வாரம் முழுவதும் பிரிட்டனில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சிறுவர்கள் நிகழ்வுகளும் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளன.

தனது தந்தையார் ஆறாம் ஜோர்ஜ் மன்னர் இறந்ததை அறிந்துகொண்டு அதன் பின்னர் அவர் மகாராணியாகப் பதவியேற்ற வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த புகைப்படங்கள் பல ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரிட்டனின், பிக்பென் கோபுரத்திற்கு மகாராணி எலிசபெத்தின் பெயரைச் சூட்டுவதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

மகாராணியின் பெறுமதிமிக்க ஆபரணங்களில் சில

கீழே உள்ள படத்தில் நடுவே வில்லியம்சன் பிங்க் என்றழைக்கப்படும் உலகின் மிக அபூர்வமான வைரக்கல்


"கணினியியல் பொறியியலாளர்" பட்டம் பெற்ற சுதாகரன் கோபாலகிருஷ்ணன் - பாராட்டுகள், வாழ்த்துகள்

E-mail Print PDF

பாராட்டி வாழ்த்துக்கின்றோம்

"கணினியியல் பொறியியலாளராக" (11.11.2011) எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற  சுதாகரன் கோபாலகிருஷ்ணன் அவர்களை காலையடி மறுமலர்ச்சி மன்றம் பாராட்டி, வாழ்த்தி, கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது

காலையடி மறுமலர்ச்சி மன்றம்

தகவல்: நிவர்சன்

"கணினி பொறியிலாளர்" சுதாகரன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மேலும் பல பட்டங்கள் பெற்று உலகம் போற்றும் மாமேதையாக வாழ்க, வளர்க  என வாழ்த்துகின்றோம். திறமையை பாராட்டுகின்றோம், முயற்சியை போற்றுகின்றோம்.

பணிப்புலம்.கொம்

அன்னையர் தின வாழ்த்துள் -14.05.2017 ( அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல் - இணைப்பு)

E-mail Print PDF

Image may contain: flower, text and nature

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவர்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவர் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை

கண் கண்ட அன்புத் தெய்வத்திற்கு எமது வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) அன்னையரை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக மேல்நாட்டவர்கள் கொண்டாடினாலும், பெரும்பாலான தமிழர்கள் தம் வாழ்வில் எல்லா நாளும் அன்னையர் தினமாகவே எண்ணி தினமும் அவர்களை பராமரித்து மகிழ்விக்கின்றார்கள். தமிழ் இந்துக்களோ, அவர்கள் இறந்த பின்பும் அவர்களை நினைவு கூர்ந்து விரதம் அனுஷ்டித்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செகின்றார்கள்.

பொதுவாக மேலைத் தேசத்தவர்கள் தாமும் பிள்ளைகளும் மாட மாளிகையில் வாழ்ந்து கொண்டு தமது பெற்றோரை முதியோர் இல்லங்களில் பொது பராமரிப்பில் விட்டு விட்டு எப்போதாவது ஒருநாளைக்கு அல்லது அன்னையர், தந்தையர் தினங்களில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கின்றார்கள்.

கீழைத்தேசதில் வாழும் தமிழர்களும் மற்றைய சமூகத்தினரும் தன்னை  பெற்று வளர்த்து, அறிவூட்டி இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய அன்னையையும், தந்தையயும் வயதான காலத்திலும் தம்முடனேயே வைத்திருந்து அவர்களுக்கு தினம் தினம் பணிவிடைகள் செய்து பராமரித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும்போது "அன்னையர் தினம்" என ஒருநாள் தேவையே இல்லை எனலாம்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் எம் சமூகத்தினர் பலர் மற்றைய சமூகத்தினரை பின்பற்றி அவர்களும் தம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டுவிடு தாம் மாடமாளிகையில் சுகவாழ்வு வாழ்கின்றார்கள். அவர்கள் முதியோராகிய பின் அவர்களின் பிள்ளைகளும் தமது பெற்றோர் அவர்களின்த பெற்றோருக்கு செய்தனவற்றையே செய்வார்கள் என்பதனை மறந்து விடுகின்றார்கள்.

மேற்குலகம் கொண்டாடும்  அன்னையர் தினத்தை கீழைதேச மக்களில்  சிலர் பின்பற்றி அதனை தங்கள் உறவுகள் ஒன்றுகூடி அன்னைக்கு விழா எடுத்து அவர்களின் சேவைக்கு நன்றி கூறி பாதம் பணிந்து அவர்களின் ஆசீர்வாதம் பெறும் சிறப்பான நாளாக கொண்டாடுகிறார்கள். 

பத்து மாதம் சுமந்திருந்து பெற்று, பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்து,  நாளெல்லாம் பட்டினியாய் தான் இருந்தாலும், ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி;  உடம்பெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா?

கல்வி அறிவின்றி இளம் வயதில் தாம் பல வலிகளை அனுபவித்த அனுபவத்தினால் தமது பிள்ளைகளை உலகம் போற்றும் வித்தகர்களாகவும், உத்தமர்களாகவும் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக; தாம் மகிழ்வோடு குடும்பத்துடன் வாழக்கூடிய சூழ் நிலையிலும் தம் மகிழ்வை தம் குடும்ப ஈடேற்றத்திற்காக அர்ப்பணித்து  தம் குடும்பத்தை பிரிந்தும்  ஆடி, ஓடி சம்பாதிக்கும் அனைவரும் வலி இல்லாத நின்மதியான கடைசிகட்ட வாழ்கையையே எதிர்பார்க்கிறார்கள்.

தனது உணவில் ஒரு பகுதியை கருவிலிருக்குபோது 10 மாதங்களாக ஊட்டி வளர்த்து, குழந்தையாக பிரசவித்த பின்னர் தனது உதிரத்தையே பாலாக மாற்றி பருகத்தந்து வளர்த்தெடுப்பவளும். தன் அன்பு நிறைந்த இனிய மொழிகளால் உலகம் போற்றும் உத்தமர்களாக உருவாக்குபவளும் அன்னையே. உந்தியிலும், மடியினிலும், தோழிலினிலும் சுமந்து உணவூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தெடுத்த அந்த அன்புத் தெய்வத்தை ஆதரித்து அன்பு செலுத்த ஒருநாள் போதுமா?

அதனால்போலும் கீழைத்தேய பாரம்பரியங்களுக்கு அமைய இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளின் மக்கள் தங்கள் அன்னையரை மிக உயர் நிலையில் வைத்து அன்புடன் கெளரவமாக, வாழ்நாள் பூராவும் பணிவிடை செய்து, நன்றிக்கடனை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை" என்ற வரிகள் தாய்மையின் “புனிதத்துவம்”, தாய்மையின் “பெருமை”, தாய்மையின் “தியாகம்” தாய்மையின் “கருணை உள்ளம்” போன்றவற்றை எடுத்துக் கூறத்தக்க வரிகளாகும்.
இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை என்பதனால் கோவிலாக ஒப்பிடுகிறார்கள் எனலாம். “அம்மா..” என்ற இன்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்கள் ஆயிரமாயிரம். ஒருவர் தனது இன்பத்தின் போதும், துன்பத்தின்போதும் கூவி அழைக்கும் அன்புத் தெய்வமும் அம்மாவே.
.
ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் “அன்னை” என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கின்றது.

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே ”மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை” மேற்குலக நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடுகின்றார்கள்.

நாகரீகம் படைத்த மேற்குலக நாடுகளில் அன்னையர் தினம் அந்த குறிப்பிட்ட தினத்தில் மாத்திரமே மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. வருடத்தில் 365 நாட்களும் மேற்கத்திய நாடுகளின் முதுமை நிலை அடைந்துள்ள அன்னையர் வயோதிப மடத்தில் அல்லது ஒரு பராமரிப்பு நிலையத்தில் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பராமரிப்பு செலவினத்தை மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களே பொறுப்பேற்கின்றன.
ஓரிரு அன்னையரின் பிள்ளைகளே தங்கள் செலவில் தங்களுடைய தாய்மாரை வசதியான கூடிய கட்டணம் அறவிடும் பராமரிப்பு நிலையங்களில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் கூட தங்களின் சகல வசதிகளையும் உடைய மாடமாளிகைகளில் தங்கள் அன்னையரை வைத்து பராமரிப்பதில்லை.

சில அன்னையரின் பிள்ளைகளே கிறிஸ்மஸ் தினம், புத்தாண்டு தினம், அன்னையரின் பிறந்த தினம் ஆகிய மூன்று நாட்களில் அன்னையரை சென்று சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து விட்டு திரும்புவார்கள்.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்னையரை அன்னையர் தினத்தில் மாத்திரமே போய் பார்த்து பூச்செண்டுகளையும், அன்பளிப்புகளையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்கள். இது அன்னையர் மீது கொண்டுள்ள அன்பினால் அவர்கள் செய்வதில்லை. சம்பிரதாயத்தை கெளரவிக்கும் முகமாகவே இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.

உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. அன்னையர் தினம் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து,  இத்தாலி, துருக்கி, ஆஸ்ட்ரேலியா, மெக்சிகோ, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

வேறு சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடப்பட்டு வருகிறது. "அன்னையர் தினம் " Mother's Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன.

பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளுக்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் தேதி மூன்று நாள் விழா நடத்தினர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன..

இவ்வாறான நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவியரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.

"ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் தன் இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டு சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் Jarvis மறைந்தார்.

இவரின் மகள் அனா ஜார்விஸ் Anna Jarvis முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதைத் தொடர்ந்து அனா ஜார்விஸ் Anna Jarvis 1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும், நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. 46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்திலாவது நாம் எமது அன்னையை மட்டுமல்ல எல்லா அன்னையர்களையும் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகள் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம்.

ஏனெனில். அன்னையின் பெறுமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.

அன்னையும் பிதாவும் பின்னடிக் இடைஞ்சலா???

இங்கே அழுத்துங்கள்


1328.11.05.2017

Page 5 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்