Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை கவிதை

உறவு

E-mail Print PDF


சுற்றுகின்ற பூமியிலே
சுழன்றுவரும் மனிதவெள்ளம்
பற்றுகின்ற உறவுமுறை நூறு! – இப்
பல்லுறவும் பொய்யெனவே கூறு!

தந்தையென்ன பெற்றெடுத்த
தாயுமென்ன இவ்வுறவு
இந்தஒரு பிறப்பில்வந்த ஒட்டு! – இது
இற்றுவிழும் புற்றுமண்ணின் ஒட்டு!

தம்பியென்ன அண்ணனென்ன
தங்கையென்ன தமக்கையென்ன
வெம்பிவிழும் பிஞ்சுகளைப் போல – பின்
விழுந்துவிடும் உறவுமுறை சால!

கூடவந்த தாரமென்ன
கூடிவந்த பிள்ளையென்ன
ஆடவந்த ஊஞ்சலென ஆடும்! – அந்த
ஆட்டம்முடிந் தால்தனியே ஓடும்!

பகையுமில்லை நட்புமில்லை
பற்றுமில்லை வெறுப்புமில்லை
புகையுமிழும் தீயெனவே ஆகும்! – ஒரு
பொய்யெனவே மெலமறைந்து போகும்!

பரிவுமென்ன பிரியமென்ன
பாசமென்ன காதலென்ன
பிரிவதற்கே வருவதிந்த உறவு! – மிகப்
பிளந்துவிட்ட நெஞ்சுகொள்ளும் துறவு!

சொந்தமென்ன பந்தமென்ன
சொச்சமென்ன மிச்சமென்ன
கந்தலென ஆகுமொரு நெஞ்சம்! – இரு
கண்வழியும் அருவிமட்டும் மிஞ்சும்!

யாருறவை உண்மையென்றும்
யாருறவைப் பொய்யென்றும்
ஓருறவைச் சொல்வதென்ன கோலம்! – இது
உளம்மயங்கிச் செய்யும்அலங் கோலம்!

உதடுசொலும் மொழியையெலாம்
உண்மைமொழி என்றுகொண்டால்
நிதமுருகி நொறுங்கிவிட நேரும்! – இந்த
நிலையுணர்ந்தால் மனத்தெளிவு சேரும்!

நீரிலெழும் குமிழிகளை
நிலையெனவே கொண்டுவிட்டால்
பாரிலெழும் வேதனைகள் கோடி! – மனம்
பதைபதைத்துச் சிதைந்துவிடும் வாடி!

காசுபணம் கல்விநலம்
கவிதைநயம் என்பதெல்லாம்
பூசுகின்ற புண்மருந்தை ஒக்கும்! – இது
போதுமிது போதுமினி துக்கம்!

உடல்கலந்து நிலவுகின்ற
உயிரொருநாள் பிரிந்துவிடும்
குடல்குலுங்க அழுதுவைப்பார் கொள்ளி! – உடன்
கூடியவர் விலகிடுவார் தள்ளி!

பாடிடும்வாய் ஈமொய்க்கும்
பாட்டெழுதும் கைவிறைக்கும்
தேடிவைத்த உறவுமுறை எல்லாம் – எரி
தீயிட்டுக் கொளுத்திவிட்டுச் செல்லும்!

மூளவைத்த கட்டைகளில்
மூச்சடங்கிக் கிடக்கையிலே
பாழும்மனம் உறவினையா நாடும்! – கண்
பாசமென்ற பேர்களையா தேடும்!

கையெரிய முகமெரியக்
காலெரிய நெஞ்செரிய
மெய்யெரிய  நெருப்பெரியும் போது – ஒரு
மென்னகையும் புன்னகையும் ஏது!

நாறுகின்ற உடலெரிந்து
நதிகலக்கும் பிடிசாம்பல்
கூறுகின்ற அன்புமொழி போலி! – வரும்
கூற்றுவனைத் தடுப்பதெந்த வேலி!

சுற்றுகின்ற பூமியிலே
சுழன்றுவரும் மனிதரிலே
பற்றுகின்ற ஓருறவும் இல்லை! – அந்தப்
பரமனடி பற்றலொன்றே எல்லை!

அரும்புகளின் அறிவு மலர அறிவுரைகள்

E-mail Print PDF


சின்னஞ் சிறிய குழந்தைகளே,
தேன்மொழி பேசும் குயிலினமே,
கன்னலின் இனித்திடும் நற்சாறாய்
கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே!

நல்லதை என்றும் எண்ணிடுவீர்
நற்செயல் புரிந்தே உயர்ந்திடுவீர்
அல்லதைப் புறத்தே ஒதுக்கிடுவீர்
ஆன்றோர் நல்வழி நடந்திடுவீர்

தேசம் தன்னை நேசித்தே
தினமும் கடமைகள் ஆற்றிடுவீர்
பாசத்துடனே தமிழ் மொழியை
பாங்காய் நாளும் வளர்த்திடுவீர்

கல்வியைக் கண்ணாய்ப் போற்றிடுவீர்
கணினி இயலைக் கற்றிடுவீர்
பல்மொழி ஞானம் பெறுவதனால்
பாரினில் எங்கும் சென்றிடலாம்

எல்லா உயிரும் சமமென்ற
உணர்வை நெஞ்சினில் கொள்வீரே
அல்லா ஏசு ராமபிரான்
அனைவரும் நமக்கு ஒன்றேதான்.

வேண்டாம் நமக்குள் பிரிவினைகள்
வெறுப்பின் வேர்களை அறுத்தெறிவீர்
ஆண்டவன் பேரால் நமக்குள்ளே
அடிதடி நிகழ்தலை தடுத்திடுவீர்.

சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்க்கம் நம்முன் உருவாகும்
கல்லும் கூட கனியாகும்.
கனவுகள் எல்லாம் நனவாகும்.

வாழும் நாட்கள் மிகக்குறைவு
வாழ்க்கை நீண்ட கடும்பயணம்
சூழும் தடைகளைப் பொடியாக்கி
சுறுசுறுப்புடனே உழைத்திடுவீர்.

நம்பிக்கை தீபம் எரியட்டும்
நாளைய உலகம் உம்கையில்
தெம்புடன் செயல்கள் புரிந்திடுவீர்
தேசம் தன்னை உயர்த்திடுவீர்.

உடலை நன்கு போற்றுங்கள்
உணவை மென்று தின்னுங்கள்
திடமாய் காரியம் செய்திடுவீர்
துணிவால் நெஞ்சை நிரப்பிடுவீர்.

மரங்களை நட்பாய் மதித்திடுவீர்
மண்ணில் வனங்களைப் பெருக்கிடுவீர்.
விண்மழை இங்கே கொட்டட்டும்
வசந்தம் வாழ்வில் கிட்டட்டும்.

வறுமை தடைஎனல் அறிவீனம்
வாழ்க்கையில் சோம்பல் பலவீனம்
எருமையாய் சோம்பி இருக்காமல்
எருதென உழைத்தால் பிரகாசம்.

தோல்விகள் தொகையாய் படையெடுக்கும்
துவண்டு நின்றால் அடிசறுக்கும்
ஆல்போல் நிமிர்ந்து நின்றிடுவீர்
அடிக்கும் புயலை வென்றிடுவீர்.

அறிவியல் உலகை முன்னேற்றும்
ஆயுதம் முற்றிலும் விலக்கிடுவீர்
வெறிப் போருணர்வை வெறுத்திடுவோம்
வெல்வோம் உலகை அன்பாலே.

உணவைப் பெருக்கும் வழிகாண்போம்
உழைக்கும் மக்களைப் போற்றிடுவோம்
பணம்தான் எல்லாம் என்றெண்ணி
பண்புகள் தம்மை இழக்காதீர்.

புதுப்புது கலைகள் கற்றிடுவீர்
புதுமைகள் பலபல கொணர்ந்திடுவீர்
கற்றலை என்றும் தொடர்ந்திடுவீர்
கடைசி வரைக்கும் படைத்திடுவீர்

ஆயிரம் பட்டங்கள் பெற்றாலும்
அடக்கம் இல்லார் அறிவில்லார்
பணிதல் யார்க்கும் நன்றென்ற
பொய்யா மொழியை மறவாதீர்.

தோல்வியைக் கண்டு துவளாதீர்
துணிந்து நின்றால் வென்றிடலாம்.
ஆல்போல் வாழ்க்கை தழைத்திடுமே!
அகிலாய் எங்கும் மணந்திடுமே!

ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்திடுவீர்
ஒற்றுமை பலமென உணர்ந்திடுவீர்.
பிரிந்து நிற்றல் பலவீனம்.
பின்னப் படுதல் அறிவீனம்.

கூட்டாய் மேய்ந்த எருதுகளை
கொல்ல முடியலை சிங்கத்தால்.
பாட்டினில் படித்த பாடத்தை
பகுத் தறிவோடு சிந்திப்பீர்.

பழமையில் நல்லதை எடுத்துக்கொள்.
புதுமையை அதனில் குழைத்துக்கொள்.
செழுமையில் வாழ்வு சிறக்கட்டும்.
சாதனை செயலில் பிறக்கட்டும்.

பணவெறி என்றும் நன்றல்ல
பண்புகள் தாமே பெருஞ்செல்வம்.
குணமே என்றும் பிரதானம்.
குற்றம் களைந்து வாழ்ந்திடுவீர்.

பதவி வெறியில் மூழ்காதீர்.
பாவச் செயல்கள் புரியாதீர்..
உதவி கேட்டு வருவோரை
உதறித் தள்ள முயலாதீர்.

ஏசுவைப் போல மானுடத்தை
நேசிக்க வேண்டும் எந்நாளும்.
புத்தனைப் போல வாழ்வினிலே
போக்கிட வேண்டும் பேராசை.

ஔவைப் பாட்டி சொன்னபடி
முயன்று நல்வழி சென்றிடுவீர்.
காந்தி காட்டிய பாதையிலே
காத்திடு வீரே சத்தியத்தை.

முன்னைப் போர்கள் இனிவேண்டாம்.
முயன்று கொணர்வோம் நல்லுறவை.
அன்னை தெரசா அடியொற்றி
அணைப்போம் அன்பால் அகிலத்தை.

முதுமையை என்றும் இகழாதீர்.
முன்னோர் சொற்களைத் தள்ளாதீர்.
அக்கறை அவர்மேல் கொண்டிடுவீர்.
அன்பாய் அவர்களைப் புரந்திடுவீர்.

வீரம் மட்டும் நெஞ்சினிலே
இருந்தால் மட்டும் போதாது.
ஈரம் அதிலே சுரக்கட்டும்.
இரக்கத்தால் அது நிரம்பட்டும்.

ஏழையர் தம்மை எந்நாளும்
அணைத்திட வேண்டும் அன்போடு.
கீழாய் எவரையும் நடத்தாதே
மானுடர் யாவரும் சரிசமமே.

வேர்வை சிந்தி பெறப்பட்ட
ஒவ்வொரு பொருளும் வைரம்தான்.
ஆர்வத்துடனே உழைப்பதனால்
ஆயிரம் சாதனைப் பூப்பூக்கும்.

மூடப் பழக்கம் ஒழித்திடுவீர்
முட்டாள்தனத்தை மாய்த்திடுவீர்.
பகுத்து அறிவீர் என்றென்றும்;
படைப்பீர் புதிய உலகத்தை.

நன்றி

பெண்ணின் பெருமை

E-mail Print PDF

செய்யெனில் கேட்பாள், செய்யாயின் என்ன?
செய்யாதே என்று செப்பினாள் கேட்பாள்:
செய்தால் என்ன? எதிர்ப்பதக் கேள்வி
எழுப்பித் தெளிந்தபின் எதையும் செய்யும்
பெருத்த முழக்கவர் பேதைப் பெண்களாம்.

தீவிரப் பிழம்பைத் தெறிப்புற ஏந்தி
எத்தகை துக்கம் எழும்பிடும் போதும்
எற்றி உதைத்தே எதிர்நடை போடும்
பிரகடனத்தவர் பெதும்பைப் பெண்களாம்.

திட்டம் தீட்டித் திறம்படச் செயல்படும்
மதிநுட்பத்தை மகுடமாய்ச் சூடி
வெட்டொன்றாயின் துண்டிரண் டாக்கும்
மறம் மலிந்தவர் மங்கையர் ஆவராம்.

வாழ்க்கை என்கிற சதுரங் கத்தில்
காய்களை நகர்த்திக் கணக்கை முடிக்க
வாய்பேசாது செயலினில் பேசும்
வாலிபச் சித்தர் மடந்தையர் ஆவராம்.

மூடக் குழியில் முடங்கிய பேரைக்
கூட இழுத்துக் கொலுவுறச் செய்து,
தேடலின் பாடலைத் தினம்தினம் பாடும்
ஆடக விழியர் அரிவையர் ஆவராம்.

முலாம் பூசிவரும் முகங்களின் முன்னே
ஒப்பனை தரிக்கும் உயிர்களின் முன்னே
உண்மைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்
ஜீவ தேவியர் தெரிவையர் ஆவராம்.

அர்த்த நர்த்தனம் ஆடி, மனமெனும்
கர்ப்பக் கிரகத்தில் கவிதைகள் பாடி
நடுநிலை வகிக்கும் நாகரிகத்துடன்
அனுபவச் சிறகை அடித்துப் பறக்கும்
பிரபஞ்ச மெளனியர் பேரிளம் பெண்களாம்.

செயற்கை நெடியின் இறுக்கம் பொறாமல்
நியம  எஃகை நெஞ்ச நெருப்பால்
வசதியாய் வளைத்து வழி சமைப்பதிலே
தேரிய பேர்கள் தீரப் பெண்களாம்.

எதனை இயலாது என்று இயம்பினரோ
அதனை முதலில் நிகழ்த்திக் காட்டி,
இயம்பிய வார்த்தைக்கு எடைக்கு எடை சமமாய்ச்
சுயர்ஒளிர் கருத்தைச் சுடச்சுடக் கொடுக்கும்
வலி மிகுந்தவர் வைரியப் பெண்களாம்.

காரணங்களுக்கு விடை கொடுத்துவிட்டுக்
காரியங்களுக்கு மடை திறப்பதனால்
மலர்மறப் பெண்கள் மதியொளிர் மதிப்பில்
இலக்கை அடைவதே இயற்கை ஆதலால்
தோழியர் நெஞ்சத் தூய்மையின் நாமம்
வாழிய வென்று வாழ்த்துவம் நாமே.

1537.16.02.14


எங்கும் சாதி எதிலும் சாதி....

E-mail Print PDF


எங்கும் சாதி எதிலும் சாதி;
சாதியென்றசகதியில் குளித்து
சாதியை அடையாளமிட்டு
சமுகத்தை சூனியமாக்கும்
சூழ்ச்சிகாரர்களே...!!!!
இவர்களிடமும் கேளுங்களேன்
சாதியை....!?

படுக்கை விரித்து படுத்து

காம இச்சையை காசாக்கி
எச்சிலால் எல்லாடத்தையும்
நனைத்து எழும் விலைமகளிடம்
நீகேட்டதுண்டா.........?

இரு பால்கலப்பால்

எப்பால் என புரியாமல்
முகவரி தொலைத்த
உறவுகளிடம் கேள்;
"குறிப்பிட்ட சாதியிலிருந்து
மட்டும்தான்
வந்தீர்களா.............?"

அறுவை சிகிச்சையில்

செலுத்தப்பட்ட ரத்தத்திற்கு
நீ கேட்டதுண்டா..?
எந்த சாதி ரத்தமென‌
அந்த மருத்துவனிடமாவது கேட்டதுண்டா..?
எந்த சாதிகாரனென்று..?

உணவிட்டு உயிர்காத்து

உடல் வளர; உழைத்து காத்த
உழவனிடம் கேட்டதுண்டா சாதியை...?
வேறு சாதிக்காரன் வியர்வை
விழுந்த சேற்றில்
விளைந்த சோற்றை
உண்டதில்லையா நீ ஒரு போதும்....?

கேவலம்....

வெள்ளை சுருட்டின் வெந்த உடம்பின்
கடைசி நெருப்பை கடனாகதந்து
உன் சுருட்டை உயிர்ப்பித்தவனிடமாவது
கேட்டதுண்டா... சாதியை....?

வயிற்று பசிக்கு சோறு போட்டவன்

வட்டிக்கு பணம் கொடுத்தவன்
பேருந்து நெரிசலில்
உட்கார இடம் கொடுத்தவன்
இவன்களில் எவனிடமாவது
என்றாவது கேட்டதுண்டா...?
சாதியை....?

வேசியுடன் படுக்க சாதி தேவையில்லை;

வேலைக்கு வேண்டும் சாதியிங்கே...

கடன்வாங்க சாதி கேட்க மாட்டான்

கல்வி பணிக்கு சாதி கேட்பான்;

சாதி என்பது தவறுயென‌

தெரிந்தாலும்.........

பின் ஏனடா.......

சாதி சகதியை...
பூசிக்கொண்டு பூரிப்படைகிறாய்.?
சாதியோடு இங்கு வாழமுடியது..
சாதி ஓடும் வரை வாழ்வு புரியாது...
இனிமேலும் சாதிபார்ப்பவன்
நரம் தின்னும் நாயின்.........

நன்றி:Karthik Ganesan


மனிதம்

E-mail Print PDF

தந்தையர் தினம்

E-mail Print PDF

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயலென்றார் வள்ளுவனார்

தந்தையர் தினமாம் இந்தநாள், தரத்தினிலே.....
முந்தி இருக்கும் மகன்மார் மட்டுமன்றி.....

மகள்மாரும் நன்றியுடன் மனமாரத் தந்தையரின்
புகழ்பாடி நிறைவாகப் புளகாங்கிதம் கொண்டு...

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலப் பொறுமையிலே....
நிகழ்காலம் மட்டுமன்றி வருங்காலமும் உணர்ந்து...

தான்பெற்ற மக்களின் தரமுயர்த்தப் பெருமுயற்சி
ஆனமட்டும் முயன்று அல்லும்பகல் உழன்று....

ஊன்,உறக்கம் இழந்து உறவான செல்வங்களை
வானுயர உயர்த்திவிட்ட வலுவான அத்திவாரம்.....அப்பா!

பலமாகப் போட்டுவைத்துப் பக்கத் துணையிருந்து....
விலைமதிக்க முடியாத விற்பன்னர் ஆவதற்கு....
கல்வியிலும் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு....
சொல்லியவர் வளர்த்தார் தொல்லுலகில் வாழ்கவென்று!

ஆக்கம்: வள்ளியம்மை சுப்பிரமணியம் (தொல்புரம்)

Page 2 of 4

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்