Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சைவமும் தமிழும் விரதங்களும் தோத்திரங்களும்

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும் - விளக்கங்களுடன் - பிள்ளையார் பெருங்கதை இணைப்பு

E-mail Print PDF

"ஓம் விக்ந விநாயக பாத நமஸ்தே"


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

ஆவணிமாத சுக்லபக்ஷ் சதுர்த்தி திதியில் அனுஷ்டிக்கப்பெறும் இவ் விரதமானது இவ் வருடம் 29.08,2014 திங்கட்கிழமை சாந்தை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட பல பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் இவ் விரதம் அனுஷ்டிக்கப்பெறுகின்றன. இந்தியாவில் பிள்ளையார் பட்டி போன்ற பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் 10 நாட்கள் பெருவிழாவாகவும் கொண்டாட்டப் பெறுகின்றன.

பிள்ளையார் பெரும்கதை பிரார்த்தனை செய்ய இங்கே அழுத்துக

விரதம்:
மனமானது, பொறிவழி (ஐம்பொறிகளின் தூண்டுதலுக்கு) போகாது நிற்றற் பொருட்டு; உணவை விடுத்தேனும், சுருக்கியேனும், மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.

இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சமய அனுட்டானங்களில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும்.

மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

Read more...

அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த கந்தர் அனுபூதி - உரையுடன்

E-mail Print PDF

அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் ஒரு சிறந்த பாராயண நூலாகும்.

காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

கல்லைப் போன்ற கடினமான உள்ளம், பக்தியினால் உருகும்படிக்கு, அடைக்கலமான அடியவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகனுக்கு, எல்லா இலக்கண அம்சங்களும் பொருந்திய தமிழ் மாலை, சிறப்பாக அமையும் பொருட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளை நாடி துதிப்போம்.

நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே  1.

அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற, கஜமுகாசுரனை, போர் செய்து அழித்த, ஒப்பற்ற விநாயகப் பெருமானின், தம்பியே, பிரணவ நடனமாடும் மயில், உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம், அடியார்களுக்கு முருகனின் அருளைத் தெரிவிக்கின்ற சேவல் (இவை மூன்றையும்) துதித்துப் பாடுகின்ற தொழிலையே என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும். ..

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே  2.

மங்காத உள்ளக் களிப்பும், துன்பமற்ற நிலையும், யோக சொரூபனும், நன்மை பயப்பவனும், அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும், நீ தானே முருகா, உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ, நான் எனும் ஜீவ போதம் இழந்து அனுபவிக்கும் பேரின்ப நிலையை, மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும். ..

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே  3.

ஆறுமுகக் கடவுளே, நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?) ஆகாயமோ?, தண்ணீரோ?, நிலமோ?, நெருப்போ?, காற்றோ?, அறிவு தோன்றும் இடமோ?, ஓதப்படும் நான்கு வேதங்களோ?, நான் என்கிற தத்துவமோ?, மனமோ?, என்னை ஆட்கொண்ட இடம் தானோ? ..

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே  4.

சுற்றத்தினர் சூழ போருக்கு எழுந்த, சூரபத்மனின் மார்பையும், கிரவுஞ்ச மலையையும், தொளைத்து ஊடுறுவிப் போகும்படி, தொடுத்த வேலாயுதத்தை உடையவனே, வளையளை அனிந்த கைகளை உடைய மனைவியுடன், மக்களும் (பிற செல்வம், உறவினர்) என்று கூறப்படுகின்ற அடியேன் கட்டுண்டு அழிவது, முறையோ முறையோ (முறை ஆகாது) ..

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே  5.

வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம், நீக்க வல்லவராகிய, உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான், தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை), தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை சதா நினைத்து, சோர்வு அடையச் செய்கிற, உலக மாயைக்குள் கிடந்து, கலங்குவதை நான் விடவில்லையே. ..

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே  6.

எனக்கு இடும் கட்டளை எவை என வினவி, வள்ளி பிராட்டியின் திருவடிகளை வணங்குகின்ற, குன்றாத, மிகுந்த காதல் கொண்டுள்ள, கருணைக் கடவுளே, மிகவும் கடினமான மனமாகிய கல்லின் மீது, உனது திருவடியான, அழகு மிகுந்த தாமரை மலருவது என்ன ஆச்சரியம்? ..

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே  7.

ஏ மனமே, நீ கெட்டு வீணே ஒழிகின்றாய், நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக, இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம் செய்வாயாக, வேலாயுதக்கடவுளின் திருவடிகளைத் தியானிப்பாயாக, நீண்ட பிறவித் துன்பத்தை, பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக வினைகள் யாவையும் விட்டு விடுவாய் ..

அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே  8.

குமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள், நான் தான் எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ..

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே  9
.

கிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே, தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது, மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்? ..

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே  10.

மலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக் கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே  11.

திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ..

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே  12

செவ்விய மானின் புதல்வியாகிய வள்ளியம்மையாரை, வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், மிகப் பெரியவனும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து இருப்பாய், என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது நின்றேன், இது என்ன ஆச்சரியம். ..

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே  13.

உருவப் பொருளும் அன்று, அருவப் பொருளும் அன்று, உள்ள பொருளும் அன்று, இல்லாத பொருளும் அன்று, இருளும் அன்று, ஒளியாகிய பொருளும் அன்று, என்று சொல்லும் தன்மையில் உள்ள அப் பரம் பொருளே, முருகப் பெருமான் என்றும், ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும், நமது பரம குரு என்றும், அப்பரமனது திருவருளைக் கொண்டு அறியாமல், மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது. ..

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே  14.

ஏ மனமே, உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகிய, ஐம் பொறிகளின் வழியே செல்லும் ஆசைகளை, முற்றிலும் ஒழித்து விடு (அதனால்), திருக் கரத்தில் விளங்கும் ஒளிவீசும் வேலாயுதத்தை உடைய, முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று, உயர்வு பெற்று வாழ்வாய். ..

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே  15.

போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும், பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற, குரு சிரேஷ்டனே, அருங் குணங்கள் எட்டிற்கும் உறைவிடமானவனே, முருகன், குமரன், குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து கூறி, உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து, மெய்யுணர்வை எப்போது அடியேனுக்கு தந்து அருள் புரிவாய். ..

பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே  16.

வீரனே, முதுமையான சூரபத்மன் கிளைகள் அழியும்படி, வேலாயுதத்தைச் செலுத்தின தீரனே, தேவ லோகத்தைக் காத்தவனே, சிந்திக்கத் தெரியாத தீவினைகளை உடைய அடியேன், பெரிய நீண்டுகொண்டே செல்லும், நோயால் கட்டப்பட்டு, சுழலுதல் தகுதி ஆகுமா? ..

யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே  17.

நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும், நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும், தாமே திரும்பப் பெற வேண்டி, வேலாயுதக் கடவுள் நமக்குக் கொடுத்ததினால், இப் பூமியில், நீங்கள் மயக்கங்களை விட்டு, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் உத்தம சீலர்களே, நம்மை அவனுக்கு அர்ப்பணித்து அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்.

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே  18

பிறப்பில்லாதவனும், இறப்பில்லாதவனும், நினைப்பில்லாதவனும், மறதி இல்லாதவனும், பிரம்மனும் திருமாலும் தேடி காண முடியாதவனும், மலம் இல்லாவனுமாகிய சிவ பெருமானின், குமாரனே, எல்லாவற்றிற்கும் மேலானவனே, பாப இல்லாதவனே, பாபம் இல்லாதவனே, தேவ லோக ரட்சகனே, ராட்சசர்களுக்கு பயங்கரமானவனே.

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே  19.

முதலும் முடிவும் இல்லாத, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசனே, வறுமை என்கிற ஒரு பாவி வந்து விட்டால், உடல் அழகும், செல்வங்களும், நல்ல மனமும், நல்ல குணநலங்களும், பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும், பிறந்த குலத்தின் பெருமையும், நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே). ..

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே  20.

விரிந்து பரந்த உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் விரும்பும் தாரகப் மந்திரமாம் பிரணவப் பொருளே, விண்ணுலகோரைக் காத்த தேவசேனாபதியே, தேவ லோகத்தைத் தாங்குபவரே, அடைவதற்கு அரிது ஆகிய உண்மைப் பொருளைப் பெறுவதற்கு, அடியேனாகிய நான், தகுதி உடைவனாகும்படி உபதேசம் செய்து உணர்த்தி அருளிய திறம் ஆச்சரியமானது. ..

கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே  21.

கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே, முருக வேளே, மயிலை வாகனமாகக் கொண்டவனே, அடியார்களைக் காக்கும் விரதம் கொண்டவனே, அசுர கூட்டங்களையும் சூரனையும் அழித்தவனே, நினைப்பு மறப்பு அற்ற வழியைக் கண்டு கொள்ள, அடியேனுக்கு, உன்னுடைய இரு திருவடித் தாமரைகளைத் தருவதற்கு, உன்னுடைய திரு உள்ளம் எப்போது இசையுமோ? ..

காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ  22.

கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய, வள்ளிப் பிராட்டியின் பாதங்களைத் தொழுகின்ற, முருக வேளை, தேவர்களின் அரசனை, மேரு மலையன்ன பெருமை உடையவனை, காளைப் பருவம் கொண்ட குமரன், ஈசன் என தியானம் செய்து, அவனுடைய திருவடிகளை வணங்கும்படியான, தவத்தினை அடியேன் அடைந்தது ஆச்சரியமானது. ..

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே  23.

கூர்மையும் வலிமையுமுடைய வேலாயுதத்தை ஏந்தி மகிமை பெற்றவனே, குறவர் குலத்து வளர்ந்த மின்னல் கொடி போன்ற வள்ளி நாயகியைச் சேர்கின்ற, குணக் குன்றமே, உனது திருவடியைத் தியானிக்காமல், அறிவின்மையினால், அடியேன் அடியோடு அழிந்து போகலாமோ., இது நீதியோ? இது நீதியோ? ..

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே  24.

சூரபத்மன் குலம் முழுவதையும், அவனுக்கு காவலாய் இருந்த கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் சென்ற கொடிய கொலை புரியும் வேலாயுதத்தை திருக்கையில் தாங்கிக் கொண்டிருப்பவனே, இந்திரனுடைய நகரத்திற்கு அரசனே, கூரிய வேல் போன்ற கண்களை உடைய, மாதர்களுடைய தனபாரங்களை, சேர விருப்பங்கொண்ட அடியேன், உனது திரு அருள் பேற்றை பெற நான் நினைக்க மாட்டேனோ? ..

மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே  25.

திருக்கரங்கள் மட்டுமோ, கையில் விளங்கும் வேலாயுதம் மட்டுமோ, திருவடிகள் மட்டுமோ, திருமேனி முழுவதும் செம்மை நிறம் கொண்டவனே, மயில் ஏறிய மாவீரனே, கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை, என்றும் நிலையானது என மகிழ்ந்து, அந்தோ, அடியேன் உழலுதல் நீதியோ? ..

ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே  26.

வேதங்களிலும் ஆகமங்களிலும் காணப்படுகின்ற உட் பொருளான ஞானத்தையே வடிவாகக் உடையவனே, மனதிற்கு எட்டாத நிலையில் இருப்பவனே, தேவ லோகத்தின் முடி மணியாக விளங்குபவனே, உனது திருவடியை அன்றி வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லாத அடியேன், திருவருளைப் பெற்று உய்யுமாறு, நீ ஒரு சிறிதேனும் நினைக்க வில்லையே (நினைத்து அருள் புரியவும்). ..

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே  27.

பொன்னைப் போன்றவனே, நவ ரத்தினம் போல் ஒளியை வீசுபவனே, பேரின்பப் பொருளே, பேரருளானவனே, தலைவனே, மயிலை வாகனமாகக் கொண்ட மேலானவனே, மின்னலைப் போல் தோன்றி உடனே மறையும் நிலையில்லாத இவ்வுலக வாழ்வை நிலையானது என எண்ணிக் கொண்டிருக்கும் நான், இந்த நிலையை என்ன என்று கூறுவேன், இந்த உலகில் என் தலை விதியின் பயன் இதுதானோ? ..

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே  28.

கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை (அனுபவித்து அனுபவத்தில் காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம் இத்தன்மையது என்று), சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது). ..

இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே  29.

போர் புரிவதற்கு ஏற்றதான, பன்னிரு திருத் தோள்களிலும், அடியேனுடைய பாமாலைகளையே தரித்துக்கொண்டிருக்கும், ஒளிவீசும் வேலாயுதக் கடவுளே, இந்த இல்வாழ்க்கை எனும் மாயை வலையில், அடியேனை சிக்க வைத்து விட்டாய், தீயவனாகிய என்னுடைய, அறியாமையால் செய்த பிழைகளை பொறுத்தாய் இல்லையே. ..

செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே  30.

செவ்வானம் நிறத்துடன் தோன்றும், ஐவேலை உடைய முருகப் பெருமான், அந்த ஒரு நாள், இந்த உபதேசத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும்படி, உபதேசத்தால் உணர்த்திய சுவானுபூதியை, அங்ஙனம் உபதேசித்த முறையில் தமக்குள் உள்ளுணர்வால் உணர்வதல்லாமல், அதை மற்றவர்களுக்கு எவ்வாறு வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியும்? (முடியாது). ..

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே  31.

மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானே, பாழ்பட்ட இவ்வுலக வாழ்வு என்கின்ற, இந்தப் பெரிய மாயை என்கின்ற படு குழியிலே, நீ விழுவாயாக என்று, அடியோன் தலையில் எழுதி விட்டீரே, (இதற்கு காரணமான) இழிவான செய்கைகள், அடியேன் முன் செய்தவைகள் இருகின்றனவோ?, இனி தேவா£ர் வாழ்ந்து போவீராக. ..

கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே  32.

கொலை செய்வதையேதான் தொழிலாகக் கொண்ட, வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளிப் பிராட்டியாரை தழுவி மகிழ்கின்றவனே, மலை போன்றவனே, கிரவுஞ்ச மலையை இரு கூறிட்டு வெற்றி வாகை கொண்டவனே, முதன்மையான சமயவாதிகளோடு வாதம் செய்து பிணக்குதல் செய்து, சாஸ்த்ர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி, அப்படிப்பட்ட வாத பிரதிவாத மாயையிலே நான் மூழ்கிவிடுவேனோ? (மூழ்க்விடக் கூடாது). ..

சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே  33.

கங்கா நதி தாங்கிக்கொண்டு வந்து கொடுத்த, தேவர்கள் வேண்டியபடி சிவ பெருமானிடத்தில் தோன்றியவரே, கந்தப் பெருமானே, முருகப் பெருமானே, கருணைக்கு இருப்பிடமானவனே, மனதில் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும், மனைவி செல்வம் எனப்படும், விந்திய மலைக் காடுபோன்ற இத் துன்பத்தை, அடியேன் என்று விடுவேன்? ..

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே  34.

போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவரே, ஆறுமுகக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவரே, அழகிய விலை மாந்தர்களின், தீய வழியில் சென்று, நான் கெட்டுப் போகாமல், அடியேனுக்கு வரம் தந்தருள்வீர். ..

விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே  35.

பிறைச் சந்தரனைப் போன்று, வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய, வள்ளி பிராட்டியைத் தவிர, வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு விரதமாகக் கொண்ட கந்தக் கடவுளே, விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே, பிரம தேவன் படைத்த, இந்த தேகத்தை விட முடியாத அடியேன், நல்ல கதியை அடையும் பொருட்டு, தாமரை மலர்கள் போன்ற உனது திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்? ..

நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே  36.

பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், தங்கள் தலையில் சூடிக் கொள்ளும் தாமரைபோன்ற பாதங்களை உடையவனே, மின்னல் கொடிபோன்ற வள்ளி பிராட்டியின் பாதங்களை தமது தலையில் சூட்டிக் கொண்டவனே, சிவ பெருமான், நாதனே, குமரனே போற்றி என உன்னை வணங்கி, எனக்கு உபதேசி என விளம்ப, நீ அவருக்கு உபதேசித்த பொருள் எது? (அதை நீ எனக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும்). ..

கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே  37.

ஏ மனமே, கிரவுஞ்ச கிரியின் மீது, வெற்றி வேலை உடைய கந்தக் கடவுளின், அடியார்களின் திருக் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற, பதவியை அடைவதையே விரும்புவாய், நான் எனது என்கிற அகங்காரத்தை, பொறுமை எனும் ஞானத்தால் வேரோடு நீக்கி விடுவாயாக ..

ஆதாளிaய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே  38.

கூதாள மலரை சூடியவனே, வேடர் குலத்துதித்த வள்ளிப் பிராட்டியின் தலைவனே பேய்க் கூட்டங்கள் துதிக்கும் வேலாயுதனே, வீண் பேச்சுக்களை பேசுகிறவனும், நல்லவைகளை பற்றிய அறிவு இல்லாதவனும், மட்டமான தீக்குணம் கொண்ட அடியேனை, ஒரு பொருளாகக் கருதி ஆண்டு கொண்ட அருளை எப்படி விரித்து கூற முடியும்? ..

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே  39.

மன்னனே, வேடர் குலத்தில் உதித்த வள்ளிப் பிராட்டியின் திருத் தோள்களை தழுவும் தெய்வீகனே, மங்கல மூர்த்தியும் சுகத்தைத் தருபவருமான சிவ மூர்த்தியின் குருநாதனே, ஏழு வகையான எனது பிறவிகள் தொலையுமாறு, மாயையிலிருந்தும் நீங்காத, மூன்று ஆசைகளும், எப்போதுதான் அடியேனை பற்றாது நீங்குமோ? ..

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே  40.

வள்ளி மலையில் சுனைகளிடத்தும், மலை அருவிகள் விழுமிடத்தும், பசுமை நிறங்கொண்ட தினைப் புனத்திடத்தும், பரணிடத்தும், வள்ளிப் பிராட்டிக்கு அருள் செய்யும் பொருட்டு சுற்றித் திரிந்த பெருமானே, ஆன்மாக்களின் இருவினைகளையும் ஓடச் செய்யும், ஞான ஒளி வீசுகின்ற வேலாயுதத்தை ஒருகாலும் மறக்க மாட்டேன், இல் வாழ்வில் கலக்கம் கொண்டு மயங்கி அழியலாமோ? ..

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே  41.

அழகனே, முருகப் பெருமானே, மயிலின் மீது வரும் பெருமானே, யோகீசனே, சிவ ஞானத்தை பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உபதேசம் செய்பவனே. யமன் வந்து என் உயிரை பறித்துக்கொண்டு போகும் அந்தக் கடைசி நாளில், அடியேன் இறந்து போகாதபடி, அடியேனை உமது திருவடி நிழலிலே தங்கும்படி காத்தருளும். ..

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே  42.

தியானிக்கப் படுகின்ற பொருளை, காலம், இடம் முதலியன பற்றி நினைக்காமல் தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டு, பசு, பாச ஞானங்களை விட்டு, பதி ஞானத்தால் அறியும் உண்மை வழியை, ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய கடவுள் மெளன குருவாய் வந்து உள் நின்று உணர்த்திய உடனே, உலகத்தாறோடு நெருங்கும் உறவு நீங்கி, வாக்கும் அற்று, நினைவும் அற்று, சுட்டி அறிகின்ற அறிவும் அற்று, அறியாமையும் முற்றிலும் நீங்கிவிட்டன. ..

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே  43.

தூய்மையான இரத்தின மணிகளும், ஆடைகளும் அணிகின்ற வள்ளி பிராட்டியாரின், காதலனே, முருகப் பெருமானே, நீ காட்டிய அன்புடன் கூடிய அருளினால், ஆசையாகிய விலங்கு, தூள் தூளாக பொடியான பின் மெளன நிலையுடன் கூடிய அநுபூதி நிலை எனக்குக் கிடைத்தது. ..

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே  44.

பகைவர்களையும், மாயை மற்றும் மலங்களையும் அழிக்கின்ற, ஓப்பற்ற வேலாயுதக் கடவுளின் திருவடிகள், முத்தி தலத்திலும், தேவர்களின் சிறப்பான தலைகளிலும், வேதங்களிலும் வள்ளி வாழ்ந்த வெப்பமான காட்டிலும், தினைப் புனத்திலும் மணக்கும்படி விளங்கும், அத்தகைய திருவடிகளை என் தலை மேல் சூடும்படி தந்தருளிய கருணையை சொல்லி விளக்க முடியுமோ? (முடியாது). ..

கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே  45.

சற்குருநாதனே, குமரனே, வஜ்ர படையோனே, தெய்வயானைக்கு நாயகனே, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு சிவ யோகத்தை அருள் பாலிக்கும் கருணாமூர்த்தியே, தாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுத் தராமல் ஒளித்து வைத்துக்கொள்ளும் குருமார்களிடம் சென்று, அக் கல்வி ஞானத்தை நான் யாசிக்கா வண்ணம், உண்மைப் பொருளை உபதேசித்து அருள்வாயோ? ..

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே  46.

கந்தக் கடவுளே, ஒளி படைத்த வேலாயுதத்தை உடையவனே, உமையம்மையின் திருக்குமரனே, என்றும் இளையோனே, வேத நாயகனே, எங்களுக்கு பெற்ற தாயாகவும், எனக்கு அருள் புரியும் தந்தையும் நீதானே, அடியேனுடைய மனக் கவலைகளை எல்லாம், தீர்த்து என்னை ஆண்டு அருள்வீராக. ..

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே  47.

கோபித்து வந்த, சூரபத்மனை அழித்து, துன்பத்தைக் கூறி முறையிட்ட தேவர்களின் உலகத்தை, திருப்பி கொடுத்து சந்தோசப் படுத்தியவனே, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, அவற்றிக்கு அப்பால் உள்ள அநுபூதியாகிய குக சாயுச்சிய நிலையை, அடியேன் பெறும் பேறாக, பெற்றுக் கொள்ளுகின்ற வழியை எனக்கு அருள்வாயோ? ..

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே  48.

உலகாயத பந்த பாசத்தில் நெருக்கமான உறவுகள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டு, அதனால் மல இருள் முற்றிலும் வலிமை குன்றி ஒழியும்படி, மயக்கத்தை வென்ற சிவ ஞானிகளுடன், பொருந்தி இருக்கும் வேலாயுதக் கடவுளே, ஜீவ போதம் தன்னை விட்டு நீங்கி, சிவ போத நிலையில் அடங்கி, அந்த அருட் காட்சியில் லயித்து பதிஞானத்தால் உணர்கின்ற சிவ ஞானிகளது உள்ளுணர்வில், பிரிதல் சிறிது கூட இல்லாமல், கலந்து நின்ற பெருமான் நீ அல்லையோ? ..

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே  49.

ஒளி வீசுகின்ற கதிர் வேலாயுதத்தை உடையவனே, வெவ்வேறு வடிவங்களை எடுக்கும் திறமையைப் பெற்றவனே, உன்னைத் தியானிக்கும் அடியவரது துன்பத்தைப் போக்கும், கருணை நிரம்பிய பேரொளியே, கருவி கரணங்களிலிருந்து கழன்று, தனிமையான இனிமையில் நிலைத்து நின்ற பேரின்பத்தை, மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படி, இனி மற்றவர்க்கு விளக்கிச் சொல்ல இயலுமோ? (இயலாது). ..

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே  50.

கங்கா நதியின் திருக் குமாரனே, மெய் அறிவிற்கும் அதனால் விளையும் பேரின்பத்திற்கும் தலைவனே, அந்தத் திதி புத்திரராகிய அசுரர்களின், வலிமையை அழித்த போர் வீரனே, அறிவு கெட்டு, மிகவும் வாட்டமுற்று, மயக்கமுற்று, அற நெறியால் வரும் உனது அநுபூதி நிலையை இழந்து, கெட்டு ஒழிந்து விட மாட்டேன் ..

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே  51.

ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராகவும், அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும், சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், உள்ள முருகக் கடவுளே என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன். ..

கந்தர் அனுபூதி முற்றிற்று.
விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும் - விளக்கங்களுடன்

E-mail Print PDF

"ஓம் விக்ந விநாயக பாத நமஸ்தே"

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விரதம்:
மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்

இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும்.

மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

விநாயகரும் தத்துவங்களும்:

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகனா!

தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து "ஓம்" என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் ‘பிரணவன்’ என்றும் ‘மூத்த பிள்ளையார்’ என்றும் அறியப்படுகின்றது. ‘ஓங்கார நாத தத்துவம்’ சிவனையும் சுட்டிநிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாக் அழைக்கப்படுகின்றார். "ஓம்" என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர்.

அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடுகளிலே வலது திருவடியை “முற்றறிவு” அதாவது "ஞானசக்தி" என்றும் “இடது திருவடியை“முற்றுத்தொழில் அதாவது "கிரியாசக்தி" என்றும் உணர்த்தப்படுகின்றது. அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது.

எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்த ஒருரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால்,ஆனைமுகனின் பானை வயிற்றில்தான் (புவியும்) பிரபஞ்ச்சமே அடக்கம் என்பர். அவன் செயல் புவி ஈர்ப்பு விசையிலும் மேலானது அத்தனை அண்டங்களையும் கட்டி இழுத்திடும் விசை என்றும், வழிமாறிப்போனவற்றை சமன் செய்யும் விசை என்றும் போற்றுகின்றனர்

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு "ஐங்கரன்" என்ற நாமம் விளங் குகின்றது. அவரை "பஞ்சகிருத்திகள்" என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.

வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்" இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்" உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.

அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் "குண்டலினி சக்தியின்" வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது.

மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு "சித்தி", "புத்தி" என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது.

விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது.

துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக "பிள்ளையார் சுழி" எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி ‘ள’ என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும்.

இதற்கு ஒரு தத்துவம் உண்டு, பூஜ்ஜியமன வட்டதை "0" பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை ” நாதம்" என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை "நாதபிந்து" என்பவர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.

எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

விநாயகர் விரதங்கள்.
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச (வளர்பிறை) சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன.

சுக்கில பட்சச் சதுர்த்தியை "சதுர்த்தி விரதம்" என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை "நாக சதுர்த்தி" என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை "விநாயக சதுர்த்தி" என்றும் கைக்கொள்கின்றனர்.

மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை "சங்கடஹர சதுர்த்தி விரதம்" என்கின்றனர்.

இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை "சங்கடஹர விநாயக சதுர்த்தி" என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் "விநாயக சதுர்த்தி விரதமே" அதிவிஷேடமானது.

சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான "தேவி" விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

விநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. ஒருசில வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு.

சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. அனேகமான இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர்.

அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் விஷேட நோன்பு தினமாகக் கைக்கொள்வர். மேலும் சிலர் காரத்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வ பட்ச ஷஷ்டிவரை அதை "விநாயக ஷஷ்டி" என்பர்கள்

காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர். அந்த நாட்களில் அனேகமான விநாயகர் ஆலயங்களில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறுவதுடன் "பிள்ளையார் கதை" ஜபெருங் கதை என்ற புராண படனமும் பராயணம் செய்யப்படும்.

தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, மொறிஷியஸ் தீவு மற்றும் மேற்கு நாடுகளிலும் விநாயக வழிபாடு, ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மாத்திரமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, பிளாஸ்ரர் ஒவ் பரிஸ் முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர்.

ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, "ஆனந்த சதுர்த்தசியான" பத்தாம் நாள் ஆடல் பாடல்கள், பஜனைகள், வாத்திய இசைகள் சகிதம் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ, ஆறு குளங்களிலோ, கிணறுகளிலோ நீருடன் சங்கமிக்க விட்டுவிடுவர். இப்படிச் செய்வதனால் சூழல் மாசடைவதாக ஆர்வலர்கள் எதிர்க்குரல் எழுப்புகின்றனர்.

இந்தக் கலாசாரம் மெதுமெதுவாகத் தென்னகத்திற்குள்ளும் வந்து சேர்வதாகக் கூறப்படுகின்றது. சத்திரபதி சிவாஜி மன்னர் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த விநாய சதுர்த்தி விழா, பின்னாட்களில் நாடு வேற்று நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த காரணத்தால் விநாயக சதுர்த்தி விழாவின் முக்கியத்துவம் குன்றிவிட்டது.

1893ம் ஆண்டளவில் லோகமானிய திலகர், அந்நியரின் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக விநாய சதுர்த்திக் கொண்டாட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். அதைப் பிரபல்யப்படுத்தி பெரு விழாவாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளையும் வகுத்துவைத்தார். அன்றிலிருந்த இன்றுவரை வட மாநிலங்களில் அந்தப் பத்துத் தினங்களும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

விநாயகரின் ஒரு கரத்தில் ஏடும் மறுகரத்தில் கொம்பும் இருப்பது போன்று காணப்படுகின்ற கணத்தை ‘வித்தியபிரதாதா’ என அழைப்பர். விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர்.

அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும் .

சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

விநாயகர் சதுர்த்தி விரதத்தின் சிறப்பு:
விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயக சஷ்டி போன்ற விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்பவமான தினம் இது என்பர்.

சூரியன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததுள்ளது

விநாயகருக்கு அறுகும் வன்னிப் பத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மருது, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.

கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.

அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அநுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.

இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அநுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.

அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.

தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.

விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)

விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.

இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்). அவை பற்றிய விபரம் (நாமமும் அங்கமும்) கீழே  தரப்பெற்றுள்ளன.

மாத சதுர்த்தி விரதம்:
மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.

மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

விரத உத்தியாபனம்:
குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து, விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.

முன்பு கூறப்பட்ட விதமாக வீட்டிலே பூஜை வழிபாடுகள் செய்யும்போது தங்கம், வெள்ளி, செம்பு இவற்றில் ஏதாவதொரு உலோகத்தில் விநாயகர் திருவுருவத்தைச் செய்து வைத்து ஆவாகனம் செய்து பூஜை நடத்த வேண்டும். அன்று உபவாசமிருந்து மறுநாட்காலை புனர்பூஜையின் பின் (மீண்டும் பூஜை செய்தல்) உத்வாசனம் செய்து அர்ச்சகருக்குரிய தஷிணை தாம்பூலங்களுடன் உலோகப் பிரதிமையையும், கும்பப்பொருட்களையும், வேட்டி சால்வை முதலிய தானங்களையும் வழங்கி இதன்பின் மஹேஸ்வர பூஜை செய்து (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்) தாமும் காலை எட்டரை மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து விரத பூர்த்தி செய்யலாம்.

விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது "வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம் விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன அஹம் அத்ய கரிஷ்யே "
(விரதபூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.) என்று சங்கல்பத்துடன் ஆரம்பித்து முடிவில் அர்ச்சகருக்குரிய தானம் வழங்கும் போது " ப்ரதிமாம் வஸ்த்ர சம்யுக்தாம் கும்போகரணைர்யுதாம், துப்யம் தாஸ்யாமி விப்ரேந்த்ர யதோக்த பலதோ பவ " (பிரதிமை, வஸ்திரங்கள், கும்பப்பொருட்கள் முதலிய தானங்களை மகிழ்ச்சியுடன் பிராமணோத்தமருக்கு வழங்குகிறேன், இவ்விரதத்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் எனக்கு உண்டாகட்டும்.) என்று பிரார்த்திக்க வேண்டும்.

பூஜை முடிவில் கும்பத்தால் யஜமானுக்கு அபிஷேகம் செய்வித்தலும் சொல்லப்பட்டிருக்கிறது. உலோகப் பிரதிமை செய்வதற்கு வசதியில்லாதவர்கள் களிமண்ணால் செய்து வழிபட்டபின் அதனை நீர்நிலையில் விட்டு விடலாம்.

விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம், பூஜை, அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து அர்ச்சகருக்குரிய தாம்பூல தஷிணைகள் தானங்கள் வழங்கி முன்கூறியவாறு விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரத பூர்த்தி செய்யலாம்.

ஸ்ரீ விநாயகர் துதி!
கஜாநனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸ¤தம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாதபங்கஜம்

மூஷிக வாஹன மோதகஹஸ்தம்
சாமரகர்ண விலம்பித ஸ¤த்ர
வாமநரூப மஹேஸ் வரபுத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்:
விநாயகப் பெருமானுக்குரிய அங்க பூஜைக்குரிய நாமங்களும் அந்தந்த நாமங்களுக்குரிய அங்கங்களும்: ( இந்த நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி பத்ரம், புஷ்பம், அறுகு ஆகியவற்றுள் ஏதாவதொன்றினால் அந்தந்த அங்கங்களில் அர்ச்சிக்க வேண்டும்)

ஓம் பார்வதீ நந்தநாய நம : - பாதௌ பூஜயாமி - கால்கள்
ஓம் கணேசாய நம : - குல்பௌ பூஜயாமி - கணுக்கால்கள்
ஓம் ஜகத் தாத்ரே நம : - ஜங்கே பூஜயாமி - பாதத்துக்கு மேல்
ஓம் ஜகத் வல்லபாய நம : - ஜானுனீ பூஜயாமி - முழங்கால்
ஓம் உமாபுத்ராய நம : - ஊரூ பூஜயாமி - தொடை
ஓம் விகடாய நம : - கடிம் பூஜயாமி - இடுப்பு
ஓம் குஹாக்ரஜாய நம : - குஹ்யம் பூஜயாமி - மறைவிடம்
ஓம் மஹத்தமாய நம : - மேட்ரம் பூஜயாமி - ஆண்குறி
ஓம் நாதாய நம : - நாபிம் பூஜயாமி - தொப்பூள்
ஓம் உத்தமாய நம : - உதரம் பூஜயாமி - வயிறு
ஓம் விநாயகாய நம : - வஷம் பூஜயாமி - மார்பு
ஓம் பாஸச்சிதே நம : - பார்ஸ்வௌ பூஜயாமி - இருபக்கங்கள்
ஓம் ஹேரம்பாய நம : - ஹ்ருதயம் பூஜயாமி - இதயம்
ஓம் கபிலாய நம : - கண்டம் பூஜயாமி - கழுத்து
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம : - ஸ்கந்தௌ பூஜயாமி - தோள்கள்
ஓம் ஹரஸுதாய நம : - ஹஸ்தான் பூஜயாமி - முன்கைகள்
ஓம் ப்ரஹ்மசாரிணே நம : - பாஹுன் பூஜயாமி - மேற்கைகள்
ஓம் ஸுமுகாய நம : - முகம் பூஜயாமி - முகம்
ஓம் ஏகதந்தாய நம : - தந்தௌ பூஜயாமி - தந்தங்கள்
ஓம் விக்கினநேத்ரே நம : - நேத்ரே பூஜயாமி - கண்கள்
ஓம் சூர்ப்பகர்ணாய நம : - கர்ணௌ பூஜயாமி - காதுகள்
ஓம் பாலசந்த்ராய நம : - பாலம் பூஜயாமி - நெற்றி
ஓம் நாகாபரணாய நம : - நாஸிகாம் பூஜயாமி - மூக்கு
ஓம் கிரந்தனாய நம : - சுபுகம் பூஜயாமி - மோவாய்
ஓம் ஸ்தூலௌஷ்டாய நம : - ஒஷ்டௌ பூஜயாமி - மேலுதடு
ஓம் களன்மதாய நம : - கண்டௌ பூஜயாமி - கழுத்து
ஓம் கபிலாய நம : - கசான் பூஜயாமி - இடுப்பு
ஓம் சிவப்ரியாய நம : - சிரம் பூஜயாமி - தலை
ஓம் ஸர்வமங்களஸுதாய நம : - ஸர்வாண்யங்காணி பூஜயாமி - எல்லா அங்கங்களும்.

விநாயக பத்ர பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும், அவற்றுக்குரிய பத்திரங்களும்:
ஓம் உமாபுத்ராய நம : - மாசீபத்ரம் சமர்ப்பயாமி - மாசிப்பச்சை
ஓம் ஹேரம்பாய நம : - ப்ருஹதீபத்ரம் சமர்ப்பயாமி - கண்டங்கத்தரி
ஓம் லம்போதராய நம : - பில்வபத்ரம் சமர்ப்பயாமி - வில்வம்
ஓம் த்விரதானனாய நம : - தூர்வாம் சமர்ப்பயாமி - அறுகம்புல்
ஓம் தூமகேதவே நம : - துர்தூரபத்ரம் சமர்ப்பயாமி - ஊமத்தை
ஓம் ப்ருஹதே நம : - பதரீபத்ரம் சமர்ப்பயாமி - இலந்தை
ஓம் அபவர்க்கதாய நம : - அபாமார்க்கபத்ரம் சமர்ப்பயாமி - நாயுருவி
ஓம் த்வைமாதுராய நம : - துளசீபத்ரம் சமர்ப்பயாமி - துளசி
ஓம் கிரந்தனாய நம : - சூதபத்ரம் சமர்ப்பயாமி - மாவிலை
ஓம் கபிலாய நம : - கரவீரபத்ரம் சமர்ப்பயாமி - அலரி
ஓம் விஷ்ணுஸ்துதாய நம : - விஷ்ணுக்ராந்தபத்ரம் சமர்ப்பயாமி - விஷ்ணுகிராந்தி
ஓம் வடவே நம : - தாடிமீபத்ரம் சமர்ப்பயாமி - மாதுளை
ஓம் அமலாய நம : - ஆமலகீபத்ரம் சமர்ப்பயாமி - நெல்லி
ஓம் மஹதே நம : - மருவகபத்ரம் சமர்ப்பயாமி - மருக்கொழுந்து
ஓம் ஸிந்தூராய நம : - ஸிந்தூரபத்ரம் சமர்ப்பயாமி - நொச்சி
ஓம் கஜாநநாய நம : - ஜாதீபத்ரம் சமர்ப்பயாமி - மல்லிகை
ஓம் கண்டகளன்மதாய நம : - கண்டலீபத்ரம் சமர்ப்பயாமி - வெள்ளெருக்கு
ஓம் சங்கரீப்ரியா நம : - சமீபத்ரம் சமர்ப்பயாமி - வன்னி
ஓம் ப்ருங்கராஜத்கடாய நம : - ப்ருங்கராஜபத்ரம் சமர்ப்பயாமி - கரிசலாங்கண்ணி
ஓம் அர்ஜுனதந்தாய நம : - அர்ஜுனபத்ரம் சமர்ப்பயாமி - வெண்மருது
ஓம் அர்க்கப்ப்ரபாய நம : - அர்க்கபத்ரம் சமர்ப்பயாமி - எருக்கு

விநாயக புஷ்ப பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும் அவற்றுக்குரிய புஷ்பங்களும்:
ஓம் பஞ்சாஸ்ய கணபதியே நம : - புந்நாக புஷ்பம் சமர்ப்பயாமி - புன்னை
ஓம் மஹாகணபதியே நம : - மந்தார புஷ்பம் சமர்ப்பயாமி - மந்தாரை
ஓம் தீர கணபதயே நம : - தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி - மாதுளை
ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம : - வகுள புஷ்பம் சமர்ப்பயாமி - மகிழ்
ஓம் ஆமோத கணபதயே நம : - அமருணாள புஷ்பம் சமர்ப்பயாமி - வெட்டிவேர்
ஓம் ப்ரமத கணபதயே நம : - பாடலீ புஷ்பம் சமர்ப்பயாமி - பாதிரி
ஓம் ருத்ர கணபதயே நம : - த்ரோண புஷ்பம் சமர்ப்பயாமி - தும்பை
ஓம் வித்யா கணபதயே நம : - துர்த்தூர புஷ்பம் சமர்ப்பயாமி - ஊமத்தை
ஓம் விக்ன கணபதயே நம : - சம்பக புஷ்பம் சமர்ப்பயாமி - செண்பகம்
ஓம் துரித கணபதயே நம : - ரஸால புஷ்பம் சமர்ப்பயாமி - மா
ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம : - கேதகீ புஷ்பம் சமர்ப்பயாமி - தாழை
ஓம் ஸம்மோஹ கணபதயே நம : - மாதவீ புஷ்பம் சமர்ப்பயாமி - முல்லை
ஓம் விஷ்ணு கணபதயே நம : - ஸம்யாக புஷ்பம் சமர்ப்பயாமி - கொன்றை
ஓம் ஈச கணபதயே நம : - அர்க்க புஷ்பம் சமர்ப்பயாமி - எருக்கு
ஓம் கஜாஸ்ய கணபதயே நம : - கல்ஹார புஷ்பம் சமர்ப்பயாமி - செங்கழுநீர்
ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம : - ஸேவந்திகா புஷ்பம் சமர்ப்பயாமி - செவ்வந்தி
ஓம் வீர கணபதயே நம : - பில்வ புஷ்பம் சமர்ப்பயாமி - வில்வம்
ஓம் கந்தர்ப்ப கணபதயே நம : - கரவீர புஷ்பம் சமர்ப்பயாமி - அலரி
ஓம் உச்சிஷ்ட கணபதயே நம : - குந்த புஷ்பம் சமர்ப்பயாமி - குண்டுமல்லி
ஓம் ப்ரஹ்ம கணபதயே நம : - பாரிஜாத புஷ்பம் சமர்ப்பயாமி - பவளமல்லி
ஓம் ஜ்ஞான கணபதயே நம : - ஜாதீ புஷ்பம் சமர்ப்பயாமி - மல்லிகை

விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)
ஓம் கணாதிபாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் ஆகுவாஹனாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் ஈசபுத்ராய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் இபவக்த்ராய நம:
ஓம் மூஷிகவாஹனாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் கபிலவர்ணாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் மோதகஹஸ்தாய நம:
ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:
ஓம் கஜநாஸிகாய நம:
ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:
ஓம் கஜமுகாய நம:
ஓம் ஸுப்ரஸன்னாய நம:
ஓம் ஸுராக்ரஜாய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:

பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.
இருபத்தொரு பத்திரங்களுரைக்கும் தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்.

மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.

வாக்குண்டாம் நல்லமன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!
- ஒளவையார்

“நற் குஞ்ரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.” உமாபதி சிவாச்சாரியாரின் “திருவருட்பயன்”
மகிமைபெற்ற எம்பிரானை நாமும் வாழ்த்தி வணங்கி உய்திபெறுவோம்.

"ஓம் விக்ந விநாயக பாத நமஸ்தே"


6992.18.02.2015

ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும் - அம்பிகையின் வடிவங்களின் விளக்கம் இணைப்பு

E-mail Print PDF

"ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி"

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவ் வருடம் 22.07.2014 முதற் செவ்வாயாகவும், 29.07.2014, 05.08.2014  ஆகிய தினங்கள் இடைச் செவ்வாயாகவும், 12.08.2014 கடைசிச் செவ்வாயகவும் அமைகின்றன.

Read more...

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் - 06.08.2015

E-mail Print PDF


ஆடி மாதத்தில்
(தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  13.08.2015 சனிக்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது.

Read more...

விநாயகர் அகவல் - ஔவையார் அருளிச் செய்தவை

E-mail Print PDF

விநாயகர் அகவல் - ஔவையார் அருளிச் செய்தவை

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

Read more...

Page 2 of 7

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்