Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும் ஜோதிடம்

குரு பார்க்க கோடி நன்மை - வாக்கிற்கும், அறிவுக்கும் அதி தேவதையான குருபகவான் பற்றிய விளக்கம்

E-mail Print PDF


வியாழ பகவான் துதி
பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கல்யானம்
வருநிறை மரபு நீடி வாய்க்குஞ்சந் ததித ழைக்கத்
தருநிறை ஆடை ரத்னந் தான்பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பெற்றாள் குரைகழல் தலைக்கொள்வோமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய், பிரமம்மமாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடு.

ஜீவராசிகளின் முன்வினைகளுக்கேற்ப சுக, துக்கங்களை அதன் பலாபலன்களை இறைவன் ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் என்பதனை ஜோதிட சாஸ்திரமூலம் நாம் அறிகின்றோம்.

பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு ஜீவனும் பிறக்கின்ற நேரத்தில் ராசி மண்டலத்தில் எந்த இடத்தில், எந்த கிரகம் சஞ்சரிக்கின்றதோ அதைப் பொறுத்தே வாழ்வில் நன்மையும் தீமையும் மாறி மாறி அனுபவிக்கின்றனர்.

அரசனாக, சுகமான வளமாக வாழ்வதும் ஆண்டியாக வறுமைக்கோட்டில் வாழ்வதும், நோய் நொடிகளினால் துன்பப்படுவதும், கல்விமானாக சிறந்து விளங்குவதும், வளமான தொழில் அமைவதும், நல்வழிகாட்ட, நல்ல குரு அமைவதும் வாழ்க்கைத் துணையாக நல்ல மனைவி அமைவதும் ஜாதகத்தில் கிரகங்களின் இடத்தைப் பொறுத்தே அமைவதாகும்.

சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனு - மீன ராசிகளுக்கு அதிபதி, கடக ராசியை உச்சம் பெறும் வீடாகவும், மகர ராசியை நீசம் பெறும் வீடாகவும் கொண்டவன். புனர்பூஷம், விசாகம், பூரட்டாதி குருபகவானுக்கு விருப்பமான நட்சத்திரங்களாகும். வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை நிறைந்திட வேண்டும்.

தேவர்கள், முனிவர்களுக்கு நல்லறிவு, ஆன்மீக ஞானத்தை வழங்கும் ஞானகுருவான வியாழ பகவானுக்கு ”பிரகஸ்பதி” என்ற பெயர் ஏற்பட்டது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாகும்.

ஒருவருடைய ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் குருபகவானின் பார்வையினால் விலகுகிறது. அதனாலேயே ....குரு பார்க்க கோடி நன்மைஎன்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர்.

வாக்கிற்கும், அறிவுக்கும் அதி தேவதையான குரு உச்ச வீடாகிய கடகராசியில் இருக்கப் பிறந்த ஜாதகன் என்றுமே சுகமான வாழ்வு வாழ்வான் என்பது ஜோதிடசாத்திரம். மேலும், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையில் அமைந்தால் அன்றைய நாள் குருபகவான் வழிபாட்டிற்கு மென்மேலும் சிறப்புடையதாகும்.

வியாழ சுகம் குறைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் கலந்த நீரினால் வியாழ பகவானுக்கு அபிஷேகம் செய்வித்து மஞ்சல் நிற பட்டுச் சாத்தி, முல்லை, பொன்நொச்சி மலர்களால் அர்ச்சனை செய்து, மஞ்சள் கலந்த எலுமிச்சம்பழ ரசத்தால் அன்னம் படைத்து கடலை நிவேதனம் செய்து குருபகவானுக்கு விருப்பமான ‘அடானா’ ராகத்தில் கீர்த்தனைகள் பாடி வழிபட்டால் குரு கிரகதோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும். பசு நெய்யினால் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

மேலும், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையில் அமைந்தால் அன்றைய நாள் குருபகவான் வழிபாட்டிற்கு மென்மேலும் சிறப்புடையதாகும். குருப் பெயர்ச்சி (வியாழ மாற்றம்) காலத்தில் வியாழ பகவானுக்கு கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சல் நிற வஸ்த்திரம் தானம் செய்து அரசு சமித்தினால் ஹோமம் செய்து 9, 12, 16, 24 என்ற எண்ணிக்கையில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சுகானந்தப் பெருவாழ்வு வாழலாம்

நவகிரகங்களிலேயே, இதிகாச-புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும்-அசுர குருவான சுக்கிராச்சார்யாரும்தான் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரைப் பற்றியும் தனி நூலே எழுதி விடலாம். அந்த அளவிற்கு, அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

தேவகுருவின் உபதேசங்களும் அசுர குருவின் உபதேசங்களும் மிகவும் புகழ் பெற்றவை, குரு அருள் இன்றேல், திருவருள் இல்லை ஆகையால், வியாழ பகவான் உபதேசம் ஒன்றைப் பார்த்து விட்டு, பிறகு அவரைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

ஒரு சமயம், இந்திரன் துர்வாசரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான். துயர வசப்பட்ட அவன், தேவ குருவான வியாழ பகவானைத் தேடி ஓடினான். அப்போது வியாழ பகவான் கங்கைக் கரையில், கிழக்கு நோக்கி சூரியனைப் பார்த்து நின்றபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார். மெய்சிலிர்த்துப் போய்ப் பரமானந்த நிலையில் முகத்தில் ஒரு பெருமிதம் ததும்பத் தவம் செய்து கொண்டிருந்த அந்த உத்தமசீலரின் திருவடிகளில் போய் இந்திரன் விழுந்து வணங்கினான். தன் துயரையெல்லாம் சொல்லி அழுதான்.

அதைக்கேட்ட வியாழ பகவான் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தார். ‘‘தேவேந்திரா! ஏன் அழுகிறாய்? விவரம் அறிந்தவன், நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்பட மாட்டான். ஏனென்றால், செல்வங்களும் இப்போது உனக்கு நேர்ந்ததைப் போன்ற பிரச்னைகளும் நிரந்தரமானவை அல்ல! அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச் சக்கரம் உருளும்போது, கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா?

அதைப்போல, நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இருக்கும்போது, நீ ஏன் அழுகிறாய்? நல்லதோ, கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி! அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது. யாராக இருந்தாலும், தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாமவேதத்தில் பரமாத்மா பிரம்மனுக்கு உபதேசித்திருக்கிறார்’’ என்று வியாழ பகவான்  இந்திரனுக்குக் கூறினார்.

அத்துடன் தானம் செய்வதின் மகிமை, அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம், இடத்திற்குத் தகுந்தபடி தானப் பலன்கள் அதிகரிப்பது எனப் பல வகைகளிலும் இந்திரனுக்கு உபதேசம் செய்த வியாழ பகவான், இந்திரன் துயரத்தில் இருந்து விடுபட்டுப் பழைய நிலையை அடைய வழியும் காட்டினார். இந்திரனும் அப்படியே செய்து, பழையபடியே சொர்க்கலோக வாழ்வைப் பெற்றான். இப்படிப்பட்ட குருபகவான், நவகிரகங்களில் ஐந்தாவதாக இடம் வகிக்கிறார்.

இவருக்கு வியாழ பகவான், பிரகஸ்பதி என்ற வேறு பெயர்களும் உண்டு. தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். மங்கலமே வடிவானவர்.

பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கிரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான். (தாயார் பெயர் வசுதா என்றும் சொல்லப்படுவதுண்டு). பரீட்சித்தின் பிள்ளையான ஜனமே ஜயன் என்பவன் பாம்புகளை எல்லாம் அழிப்பதற்காக ஒரு யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தை நிறுத்தச் செய்து, பாம்புகளையெல்லாம் காப்பாற்றியவர் வியாழ பகவான். ஒருசமயம், இந்திரன் தெய்வத்தின் திருவருளைச் சிந்தித்து, பக்தியில் ஆழ்ந்து, தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாதிருந்தான். தேவர்களுக்கு அரசனாக இருந்து தேவேந்திரன் அவ்வாறு கடமைகளைச் செய்யத் தவறியதால், தேவர்களின் வாழ்க்கையில் ஏராளமான இடையூறுகள் உண்டாகின.

அந்த நேரத்தில் தேவர்கள் எல்லோரும் தங்கள் குருவான பிரகஸ்பதி பகவானிடம் போய் முறையிட்டார்கள். அவர்களின் குறையைக் கேட்ட வியாழ பகவான், இந்திரனின் மனதை மாற்ற, அவனை மறுபடியும் செயல்பாடுகளில் இறங்க வைக்க, வேறு வழியில்லாமல், உலகாயத வாழ்க்கை முறையை இந்திரனுக்கு உபதேசித்தார். ‘‘நன்றாக சுவைமிகுந்த உணவை உண்டு, விலை உயர்ந்த அலங்காரமான ஆடைகளை அணிந்து, பெண்களுடன் மகிழ்ச்சியாக சுகங்களை அனுபவிப்பதே வாழ்க்கையின் லட்சியம்’’ என்று பல விதங்களிலும் எடுத்துச் சொல்லி, இறைவழிபாட்டிலிருந்து இயல்பான வாழ்க்கைக்கு இந்திரனை இழுத்தார் வியாழ பகவான்.

இந்திரனும் வியாழ பகவானின் வார்த்தைகளால் மனம் மாறி, தெய்வ சிந்தனையைவிட்டு விலகினான். அதன்பிறகு தன்னுடைய சொர்க்க லோக வாழ்க்கையில் முன்னிலும் ஆர்வமாக ஈடுபட்டான். அவனை அப்படியே விட்டுவிட்டால் இழுக்கு உண்டாகும் என்பதால், சில காலம் சென்றதும் வியாழபகவான் மெல்ல மெல்ல இந்திரனுக்குக் கடவுள் உணர்வை ஏற்றினார். இவருக்குத் தெரியாத, இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் ‘சஞ்ஜீவினி’ என்ற வித்தையை, இவர் பிள்ளையான கசன், சுக்கிராச்சார்யாரிடம் சீடனாக இருந்து கற்றான்.

வியாழ பகவான் காசிக்குச் சென்று, ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட்டார். அந்த வழிபாடு, பதினாயிரம் தேவ வருடங்கள் நடந்தது. முடிவில் சிவபெருமான் அங்கே தரிசனம் தந்து வியாழ பகவானிடம், ‘‘அரும்பெரும் தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தியானத்திலேயே நிறுத்தியதால் உன்னை ‘ஜீவன்’ என்று உலகத்தவர் வழங்குவார்கள். உன்னுடைய குணங்களாலும் நம்முடைய திருவருளாலும் நீ இந்திரனுக்கு குருவாக விளங்குவாயாக!’’ என்று சொல்லி வரமளித்தார் எனக் காசிகாண்டம் எனும் நூல் கூறுகிறது.

வியாழ பகவான் தங்க நிறம் கொண்ட திருமேனி படைத்தவர். நான்கு திருக்கரங்களைக் கொண்டவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலை, யோக தண்டம், அபயம் என ஏந்தி இருப்பார்.
சாந்தமான வடிவத்தோடு, சதுரமான பீடத்தில் இருப்பார். கிழக்கு நோக்கி, தலையில் மகுடம் தாங்கி வீற்றிருப்பார். பொன்னிறத் திருமேனி கொண்ட இவர் பொன்னிறச் சந்தனம் பூசி, பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாடை, பொற்குடை, பொன்னிறக்கொடி, பொன் தேர் ஆகியவற்றைக் கொண்டவர்.

தனுர் ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதியான வியாழ பகவானுக்கு உரியவை:
தானியம் - கடலை,
ரத்தினம்-புஷ்பராகம்,
மலர்-முல்லை,
சமித்து-அரசு,
சுவை-இனிப்பு,
உலோகம்-தங்கம்,
மிருகம்-மான்,
பட்சி-கௌதாரி,
அன்னம்-தயிர்சாதம்,
திசை-வடக்கு,
தேவதை-பிரம்மா,
பிரத்யதி தேவதை-
இந்திரன்.

இவருக்கு சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், சௌம்யமூர்த்தி என பல்வேறு திருநாமங்கள் உண்டு.
வியாழ பகவான் தன் மனைவி தாரையோடும் பரத்துவாசர்-யமகண்டன்-கசன் என்னும் பிள்ளைகளோடும் எழுந்தருளி இருப்பார். இவருக்கு வாகனம் யானை; அன்ன வாகனம் என்றும் ஒரு நூல் கூறுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர், வியாழ பகவானைத் துதித்து கீர்த்தனை எழுதியிருக்கிறார். வியாழ பகவான் மிகுந்த வலிமை உடையவர்.

சர்வ வியாபகர். வாக்குக்கு அதிபதி, இந்திரன் முதலானவர்களின் வழிபாட்டிற்கு உரியவர். திருமால் முதலானவர்களால் புகழ் பெறுபவர், வஜ்ராயுதம் கொண்டவர், கற்பகம் போல வேண்டியவற்றை அருள்பவர். ஏழைக்கு இரங்குபவர், பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்னும் நான்கு வகையான வாக்குகளாக விளங்குபவர், கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கமற்றவர்  என்றெல்லாம் ஸ்ரீதீட்சிதரின் கீர்த்தனை வியாழ பகவானைப் புகழ்கிறது. வியாழ பகவான் நமக்கு நல்ல வாக்கு வன்மையையும் ஞானத்தையும் அருள வேண்டுவோம்!

தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைந்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும் கெளரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர், தனகாரகன், புத்திரகாரகன், பீதாம்பரர், பிரஹஸ்பதி, வியாழ பகவான் என போற்றப்படும் குருபகவான்.

இன்று நாமும் ஆசாரசீலராக விரத மிருந்து ஆலயம் சென்று குருபக வானையும் தெட்சணாமூர்த்தியையும், இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வங்களையும் வணங்கி வழிபட்டு குருபார்வை பெற்று சகல தோஷங்களும் நீங்கப் பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக!

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க் காவின் மந்திர்
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக் அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இரு மலர்ப் பாதம் போற்றி!!

சுபம்

சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்

E-mail Print PDF

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரும், சுகபோக இன்பங்களை தருபவருமான சுக்கிரன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய கிரகம் ஆவார். ஒருவர் சாதாரண நிலையில் இருந்து திடீர் ராஜயோக பலன்கள், பதவி, பட்டம், வீடு, வாசல், பங்களா, கார், அதிகாரம் என்று அமையும்போது, அவருக்கென்னப்பா.. ”சுக்கிர திசை” அடிக்கிறது என்று சொல்வார்கள். அந்தளவுக்கு வினோதங்கள் புரிந்து ஒருவரது வாழ்வில் வளங்களை சேர்க்கும் வல்லமை படைத்தவர் சுக்கிர பகவான்.

ஆய கலைகள், அனைத்து விதமான ஆசாபாசங்களுக்கும் அதிகாரம் பெற்றவர், காதலின் ஏகபோக சக்கரவர்த்தி, சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். இவரை ”சிற்றின்பத்தின் திறவுகோல்” என்றுகூட சொல்லலாம். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு ”களத்திர காரகன்” என்ற அந்தஸ்து உண்டு. இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும்.

வழிபாடு - பரிகாரங்கள்
சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம்.

ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். நாளை சுக்கிர பகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக!

நன்றி: ஜோதிட முரசு - மிதுனம் செல்வம்

சுக்கிரன் அம்சங்கள்

கிழமை    : வெள்ளி
தேதிகள்    : 6, 15, 24
நட்சத்திரம்    : பரணி, பூரம், பூராடம்
ராசிகள்    : ரிஷபம், துலாம்
உச்சம்    : மீனம்
நீச்சம்    : கன்னி
ரத்தினம்    : வைரம்
உலோகம்    : வெள்ளி
தானியம்    : மொச்சை
நிறம்    : வெண்மை
ஆடை    : வெண்பட்டு
திசா காலம்    : 20 ஆண்டுகள்

சர்வம் புதன் மயம்

E-mail Print PDF

நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான சக்தி, ஆற்றல், உரிமை மற்றும் அதிகார அமைப்புகள் உள்ளன. சில கிரகங்களுக்கு மிக முக்கியமான காரகங்களும், அதிகாரங்களும்  கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். சவும்யன் என்று அழைக்கப்படும் இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.

அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும் தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். சர்வம் பிரம்மமயம் என்று சொல்வார்கள். ஆனால், மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, சர்வம் புதன்மயம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு புதன் கிரகம் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய ஸ்தானம் வகிக்கிறது.

புதன் ஆதிக்கம்
எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் மகன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டம், அறிவு, ஆற்றல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆதிக்கம், பேச்சாற்றல், சொல்லாற்றல், கணிதம், சாதுர்யம், கபடம், கவிதை, கதை, சிற்பம், சித்திரம், ஓவியம், இயல், இசை, நாடகம், நுண்கலைகள் என பல துறைகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. தர்க்கவாதம் செய்தல், சமயோசித புத்தியுடன் பேசுதல் ஆகியவற்றிற்கு புதன் அருள் தேவை.

புதனின் அமைப்பு ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் எந்தத் துறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம். அந்த கல்விக்கு அதிபதியாக புதன் திகழ்கிறார். இன்றைய சூழ்நிலையில் கல்வி என்ற சரஸ்வதி நம்மிடம் இருந்தால் தனத்தை தரும் மகாலட்சுமி தானாக நம்மிடம் வந்து விடுகிறாள்.

சட்டத்தின் சாராம்சம், நுணுக்கங்கள் தெரிந்த நீதிபதிகள், வாதத்திறமை மிக்க வக்கீல்கள், புத்திக் கூர்மையுடன் விளங்குகின்ற கணித ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர்கள், ஆடிட்டர்கள், சிந்தனைத்திறன், கற்பனைத்திறன் மிக்க பத்திரிகையாளர்கள், மீடியா, பதிப்பகத்துறையினர், பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராயும் திறன் படைத்த ஜோதிடர்கள், வான சாஸ்திர நிபுணர்கள், ஐ.டி.துறை மற்றும் கணித வல்லுநர்கள், தொலைத்தொடர்புதுறை, அஞ்சல் துறை, நிதித்துறை, வங்கி ஆகியவற்றில் வேலை பார்க்கும் யோகம் பெறவும், அத்துறைகளில் நமது பணியை சிறப்பாக செய்து சாதனை படைக்கவும் புதபகவானின் அருள்பார்வை கட்டாயம் தேவை. அவரது அருள் கடாட்சம் இருந்தால்தான் இத்துறைகளில் கால்பதிக்க முடியும் என்பது உறுதி.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வார்கள். இதை சிலர் தவறாக புதன் கிழமை என்று அர்த்தம் செய்து கொண்டி ருக்கிறார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது தன, புத்திரகாரகனான குருவைக் குறிக்கும். குருவிற்கு, தனம் எனும் பணத்தையும், புத்திரயோகம் என்னும் குழந்தை செல்வத்தையும் தரக்கூடிய ஆற்றல் உள்ளது. ஆனால், பொன்னவன் என்று அழைக்கப்படும் குருவின் அருளுடன், புதனின் பலமும் சேருவது மிக அவசியம்.

ஏனென்றால் ஒருவர் எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் அதை சரியான வகையில் தக்க வைத்து ஒன்றுக்கு பத்தாக பெருக்கி, அந்தப் பணத்தை சரியான வகையில் முதலீடு செய்து கணக்கு, வழக்கு பார்க்க, புதனின் பலம் அவசியம் தேவை. அதேபோல் குழந்தை செல்வத்தை தருபவர் புத்திரகாரகனான குரு. என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய அம்சமான நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன். இவருடைய பரிபூரண அருள் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை வைத்துதான் பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்ற சொல் வழக்கு உண்டானது.

புதனின் அருட்கொடை இது போன்றே எல்லா விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது. மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய முடியாது. ‘எல்லாமே புதன்தான் என்றால் மற்ற கிரகங்களுக்கு வேலை இல்லையா?’ என்று கேட்கத் தோன்றும். ஆம், உண்மைதான். எல்லா கிரகங்களின் காரகத்திலும் புதனின் ஊடுருவல் இருக்கும். உதாரணத்திற்கு சினிமாத்துறைக்கு முக்கிய கிரகம் சுக்கிரன். ஆனால், புதனின் அருள் இருந்தால்தான் டைரக்ஷன், நடிப்பு, வசன உச்சரிப்பு, நகைச்சுவை, பலகுரலில் பேசும் திறமை என்று எல்லாம் வெளிப்படும். இதைப் போன்றே எல்லா துறைகளிலும் புதனின் பங்கு மிக முக்கியமானதாகும். சேரும் இடம், பார்க்கும் இடம், இருக்கின்ற ராசிக்கு தக்கவாறு, புதன் ஜாதகரை மாற்றிவிடுவார்.

புதனின் வக்ர காலம்
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். அதேநேரத்தில் கிரக மாற்றங்களின்படி புதன் வக்ரமாக  இருக்கும் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது; திட்டங்கள் போடக்கூடாது. புதிய தொழில், வியாபார சம்பந்தமான ஆலோசனைகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றை செய்தால் அதில் ஏதாவது குறைபாடு, பிரச்னை ஏற்படும். வேலை முடியாமல் இழுத்தடிக்கும். எந்த விஷயத்திலும் தடை, தாமதம் உண்டாகும். ஏற்கனவே முடிவு செய்த விஷயங்களில் தாமதம் வரலாம்.

காதலர்களுக்கு வீண் சந்தேகங்கள், பிணக்குகள் ஏற்படலாம். குறிப்பாக வண்டி, வாகனம், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு, தொலைபேசி வியாபார இடமாற்றம், ஏஜென்சி போன்ற தொழில் சம்பந்தமான விவகாரங்களை புதனின் கோட்சார நிலை அறிந்து செய்வது நல்லது. வக்ரமாகவும், நீசமாகவும், அஸ்தங்கமாகவும் புதன் இருக்கும் காலங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

தீயச் செயல்கள்
புதன் சமநிலை கிரகம். இந்தக் கிரகம் ஒருவரை நல்வழியிலும் கொண்டு செல்லும்; தீய வழியிலும் கொண்டு செல்லும். மனிதனின் எல்லா வகை போதைப் பழக்கங்களுக்கும் வலிமை இல்லாத புதனே காரணம். புதனுடன் நீச்சக் கிரகங்கள், வக்ர கிரகங்கள், பாவகிரகங்கள், 6, 8, 12ம் இட ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் ஜாதகரின் புத்தி, அறிவு, ஆற்றல் எல்லாம் தீயவழிகளில் வேலை செய்யும். தன்னுடைய மூளையை கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவார். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுவார். தீவிரவாத சிந்தனைகள் தோன்றும். பல அழிவு வேலைகளுக்குக் காரணமாக இருப்பார். இவர் செய்யும் தகிடுதத்தங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

புதனால் உண்டாகும் நோய்கள்

புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். இந்த விஷயங்கள் புதனின் தசா புக்தி காலங்களில் அதிகமாக இருக்கும். அத்துடன் புதனுடன் சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்களின் தசாபுக்திகளிலும் உடல் கோளாறுகள் ஏற்படும்.

புதனின் அம்சங்கள்
கிரகம் - புதன்
ராசி வீடுகள் - மிதுனம், கன்னி
நிறம் - பச்சை
உச்ச ராசி - கன்னி
நீச்ச ராசி - மீனம்
எண் கணிதம் - 5
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
தசா காலம் - 17 ஆண்டுகள்
அம்சம் - விஷ்ணு
ரத்தினம் - மரகதம்
தானியம் - பச்சைப்பயறு
மலர் - வெண்காந்தள்
திசை - வடகிழக்கு
சமித்து - நாயுருவி
உலோகம் - பித்தளை
வாகனம் - குதிரை
காரகம் - தாய்மாமன் - கல்வி
பரிகார ஸ்தலம் - மதுரை, திருவெண்காடு.

நன்றி: ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

வீரம், ஆற்றல், யோகம் தரும் செவ்வாய்!

E-mail Print PDF

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம், வீரதீர  செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற பல தன்மைகள்  கொண்ட கிரகம். 

போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட்   போன்றவற்றுக்கான அதிபதி  செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். 

போட்டி, பந்தயங்கள், உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ்பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங்,  அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு  சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.

அரசாங்க உயர் பதவிக்கு அனுகிரகம் செய்வதும் செவ்வாய்தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு,  குரலில்  அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. ரத்த கிரகம் நம் உடலில்  ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரகமாக இருப்பவர் செவ்வாய். இவர் பலமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளைக்கு ஆற்றலும்,  சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய்.

பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர். செவ்வாய்  பலம் குறைந்தால் உடலில் ரத்த  சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு  கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கு சகோதர, சகோதரிகள் உண்டா? அவர்களால் ஒருவருக்கொருவர் ஆதாயம் அனுகூலம் ஏற்படுமா? சகோதர பிரச்னைகள் உண்டாகுமா?  பூர்வீக  சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கக்கூடியவர் செவ்வாய்.

செவ்வாய் பூமிக்குக் காரகன். இவர் அருள்  இருந்தால்தான் பூர்வீக  சொத்துகள் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட்,  பங்களா போன்றவை செவ்வாய்  பகவானின் பரிபூரண தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும். அதேபோல் ரியல் எஸ்டேட் என்ற நிலம்  வாங்கி விற்கும் தொழில், கட்டிடத் தொழில், சிவில்  இன்ஜினியரிங் போன்றவற்றில் புகழும், பணமும் குவியும்.

பிறந்த லக்னமும் செவ்வாயும் தரும் யோகம்
எந்த லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களைத் தருவார்?

மேஷ லக்னம் ராசி - தலைமை பதவி, அதிகாரம், ஆட்சி பீடம்.

ரிஷப லக்னம் ராசி - மனைவி வழியில் கூட்டுத் தொழில் மூலம் யோகம்.

கடக லக்னம் ராசி - தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு.

சிம்ம லக்னம் ராசி - நிலபுலன்கள், தந்தை வழியில் பூர்வீக சொத்து மூலம் கல்வி, செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்.

துலா லக்னம் ராசி - சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்.

விருச்சிக லக்னம் ராசி - உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்.

தனுசு லக்னம் ராசி - பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம், திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்.

மகர லக்னம் ராசி - தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நில புலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்.

மீன லக்னம் ராசி - பூர்வீக சொத்துகள், தந்தை வழியில் சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம்.

மீதமுள்ள மிதுனம், கன்னி, கும்ப லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில்   பிறந்தாலும் செவ்வாய் நீச்சமாக 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும்.  அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமலும் இருக்க  வேண்டும்.

செவ்வாயும் திருமணமும்
செவ்வாய்க்கும் திருமணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.  செவ்வாய்  தோஷம் பற்றி அச்சப்படும்படி பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டாலும் அவை வெறும் வதந்திகள்தான்.

பழமையான ஜோதிட நூல்களில் செவ்வாய்  தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம் ஆகும். இப்படி  தோஷம் உள்ள ஜாதகத்தை அதேபோன்று தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்க்க வேண்டும். ஏதேனும் பரிகாரம்  செய்து தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக முற்றிலும் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் சேர்க்கக்கூடாது.

செவ்வாயும் நல்ல நாளே
கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். செவ்வாய் கிரகத்துக்கு உரிய நாள், செவ்வாய்க் கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்  என்ற  சொல்லுக்கே மங்களம் என்றுதான் பொருள். கோயில்களில் முக்கிய பரிகார பூஜைகளை செவ்வாய்க் கிழமையில்தான் செய்வார்கள்.  ஆகையால் செவ்வாய்க்  கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட  பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு நாம்  செவ்வாய்க்கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ  சாதாரணமாக நடக்கின்றன.

அவர்கள் செவ்வாயை “மங்கள்வார்” என்று குறிப்பிடுகின்றனர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை  விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர்.  செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன.

இந்த  நாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம்.  இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.  சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம்.  வேலையில் சேரலாம். பூமி பூஜை போடலாம். வீடு மாறலாம். புது வீட்டில்  பால் காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத  நிலைமைக்குக்கூட வாய்ப்புண்டு. இந்த நாளில் முருகன்  கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும், வினையும் நம்மை எதுவும் செய்யாது.செவ்வாய்க்  கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து  நின்று பலன் தரும்.

வழிபாடு - பரிகாரம்
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முரு கப்பெருமானை  வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே  உள்ள வைத்தீஸ்வரன் கோயில், முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், பின்பும் இங்கு வந்து வழிபடுவது  சிறப்பாகும்.

நவகிரக திருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை  தரிசிப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
தினமும் கந்த  சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் புத்திர  யோகம், பூமி பாக்யம் முதலான சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.

நன்றி: ஜோதிட முரசு - மிதுனம் செல்வம்

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்

E-mail Print PDF

நம் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நாள், நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷமும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களின் அனுக்கிரகமே முக்கியமாக இருக்கிறது. நவகிரகங்களில் பிரசித்தி பெற்றதும், பிரதானமாக இருப்பதும் சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யத்தை தருபவராக திகழ்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப சிறிதும் பாரபட்சம் இன்றி பலாபலன்களை அருள்கிறார் கடவுளர்களை கூட இவர் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை.

இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் ஆகிய அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானைச் சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைகூட மிகப்பெரிய பட்டம் பதவி என்று அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜ தந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். இவர் 12 ராசிகளை சுற்றி வர சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். ஆகையால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவன் இல்லை, 30 ஆண்டுகள் தாழ்ந்தவன் இல்லை என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு ஜாதகத்தில் தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.

அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை
, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை," "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்
ஒருசமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம் என்று கேட்டார். அதற்கு சனிபகவான் ‘‘நான் நீதிமான், எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது,’’ என விளக்கம் தந்தார். ‘‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு,’’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரரும் அந்த காலத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் குறிப்பிட்ட அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டார். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்தபிறகு சாக்கடையில் இருந்து வெளியே வந்த தேவேந்திரன் சனீஸ்வரரிடம் சென்று "உங்கள் பார்வையிலிருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா?" என்று பெருமையடித்துக் கொண்டார். அதற்கு சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, "நீங்கள் சிம்மாசனத்தை விட்டு, சாக்கடையில் சென்று உழன்றீர்களே அதுகூட என் பார்வை  பீடிப்பினால்தான்" என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனியின் கோச்சார பலன்
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. கோச்சார கிரக பெயர்ச்சியும் உண்டு. ஆனால், சனிக்கு கோச்சார கிரக பெயர்ச்சி பலம் அதிகம். காரணம் இவர் ஒரு ராசியில் சுமார் இண்டரை வருடங்கள் தங்கி இருந்து பலன் தருவார். ஒரு ஜாதகத்தில் 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வந்து செல்லும்போது ஏழரைச் சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், எட்டாம் வீட்டிற்கு வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட, நஷ்டங்கள், உடல்நலக் குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், "உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது" என்று சொல்லி திட்டுவார்கள். மாறாக உன்னை சூரியன் பிடித்து ஆட்டுகிறான். உனக்கு கேது பிடித்து இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை. ஜாதகத்தில் எந்த கிரக தசாபுக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை, யோகம், அதிர்ஷ்டம், கஷ்ட-நஷ்டங்களைத் தருகின்ற தன்மை, அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால், சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் பொதுவாக பரவலாக நம்மிடையே தவறாக ஏற்பட்டு  விட்டது.

ஏழரைச் சனியில் சுபம்
சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார். வராத பணம் கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும்.

நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்யம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும்.

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை ”கரிநாக்கு” என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது.

ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம்.

வழிபாடு - பரிகாரம்
மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர், துப்புரவுத் தொழிலாளிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும், சனீஸ்வரருக்கு மிகவும் பிரீதியானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை  வரும் பிரதோஷ  தினத்தில் சிவனுக்கு வில்வத் தளங்களால் மாலை சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் எற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். இல்லாதோர், இயலாதோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கித் தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

நன்றி: ஜோதிட முரசு- மிதுனம் செல்வம்

Page 2 of 5

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்