Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை சினிமா

மார்ச் 28 வெளியாகிறது "இனம்"

E-mail Print PDF


சந்தோஷ் சிவன் தயாரித்து இயக்கியிருக்கும் இனம் மார்ச் 28 வெளியாகிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை வெளியிடுகிறது.

ஈழ அகதியை மையமாக வைத்து சந்தோஷ் சிவன் இனம் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் சரிகா, ஜானகி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனாதைகள் சிலரின் கதையும் இதில் சொல்லப்பட்டுள்ளது. படத்தின் ஆங்கிலப் பெயர் சிலோன்.

லிங்குசாமியின் அஞ்சான் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அப்போது தனது இனம் படத்தை அவருக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தார் சந்தோஷ் சிவன். படம் பார்த்த லிங்குசாமி, இந்தப் படத்தை வெளியிடுவது திருப்பதி பிரதர்ஸுக்கு பெருமை சேர்க்கும் என்று படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இனம் சென்சார் செய்யப்பட்டு யுஏ சான்றிதழ் வாங்கியுள்ளது. இந்நிலையில் மார்ச் 28 படத்தை வெளியிடுவதாக திருப்பதி பிரதர்ஸ் அறிவித்துள்ளது.

மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

E-mail Print PDF

சிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்கான நட்பு வட்டாரமும் பெரியது என்பதால் வாரத்தில் ஒரு மிட்நைட் பார்ட்டியிலாவது இவர்கள் பங்கேற்பார்கள்.
கடந்த பொங்கலுக்கு ஜில்லா  படம் ரிலீஸ் ஆகும்போது விஜய்யை சந்தித்தார் தனுஷ். அப்போது ஜில்லா படம் வெற்றி பெற வாழ்த்தினார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு மிட்நைட் பார்ட்டியில் சிம்பு, தனுஷுடன் விஜய்யும் பங்கேற்றார்.
மூவரும் சேர்ந்து போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர். அதை சிம்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மிட்நைட் பார்ட்டிகளில் விஜய் அதிகம் பங்கேற்பதில்லை. ஆனால் சமீபகாலமாக அவர் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறாராம். சனிக்கிழமை பார்ட்டியில் அவர் சிம்பு, தனுஷை சந்தித்து அவர்களுடன் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இதன் மூலம் மூவருக்கும் இடையே புதிய நட்பு மலர்ந¢துள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

புலிவால் - திரை விமர்சனம்

E-mail Print PDF


எஸ் ஷங்கர் நடிப்பு: விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, சூரி, தம்பி ராமையா
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ்
தயாரிப்பு: ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
இயக்கம்: ஜி மாரிமுத்து

மலையாளத்தில் வெளிவந்த சப்பா குரிசு படத்தை புலிவாலாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜி மாரிமுத்து. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைபார்க்கும் சாதாரண இளைஞன் விமல். உடன் வேலைப் பார்க்கும் அனன்யாவுடன் காதல். இவர்களின் நண்பர் சூரி. எஸ்எம்எஸ் ஜோக் ஸ்பெஷலிஸ்ட். பிரசன்னா ஒரு மேல்தட்டு இளைஞர். இனியாவுடன் திருமணம் நிச்சயமான பிறகும், ஒரு நாள் பொழுது போக்க ஒரு பெண் தேடுகிறார்.

தன் அலுவலக செகரட்டரியான ஓவியாவை கெஸ்ட் அவுஸுக்கு வரவழைத்து, செக்ஸ் வைத்துக் கொள்கிறார். அதை முழுசாக தன் ஐபோனில் வீடியோவாக பதிவு செய்து வைக்கிறார். இது புரியாமல் பிரசன்னாதான் தன் கணவன் என்கிற அளவுக்கு கற்பனை செய்து கொள்கிறார் ஓவியா. பிரசன்னாவுக்கும் இனியாவுக்கும் நிச்சயதார்த்தம் என்கிற தகவல் கிடைத்ததும், உடைந்து போகும் ஓவியா, பிரசன்னாவை ஒரு காபி ஷாப்புக்கு வரவழைத்து குமுறுகிறார். நீயும் ஆசைப்பட்டுத்தானே படுக்கைக்கு வந்தாய்… என தட்டிக் கழிக்கப் பார்க்கிறார் பிரசன்னா.

ஆனால் தன்னை மோசடி செய்ததற்காக போலீசுக்குப் போகப் போவதாக ஓவியா கோபப்பட, அப்போது தன் செல்போனில் உள்ள அந்த பலான வீடியோவைக் காட்டி மிரட்டுகிறார் பிரசன்னா. இவ்வளவு கேவலமானவனா என்ற வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறார் ஓவியா… பதட்டத்தில் டேபிளைத் தள்ளிவிட்டு அவர் பின்னால் விரைகிறார் பிரசன்னா. அப்போது அந்த செல்போன் கீழே விழுந்து, அங்கு யதேச்சையாக வரும் விமல் காலடியில் கிடக்க, அதை எடுத்துக் கொள்கிறார் விமல். ஆனால் உள்ளே என்ன இருக்கிறதென்று அவருக்குத் தெரியாது.

அட, அந்த ஐபோனை உபயோகிக்கக் கூடத் தெரியாது விமலுக்கு. ஆனால் அந்த போனைக் கொண்டு, தனது சின்னச் சின்ன வன்மங்களைத் தீர்த்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறை அதை கொடுத்துவிட முனையும்போதும் கொடுக்க வேண்டாம் என்ற சூழல்… இருவருக்குமிடையிலான இந்தத் துரத்தலில், அந்த போனை நீயே வைத்துக் கொள் என விமலுக்கு அன்புடன் தருகிறார் கடைசியில் பிரசன்னா.. இடையில் என்ன நடந்திருக்கும்? என்பதுதான் கதை. முடிஞ்சா என்னைப் பிடி பார்க்கலாம்… ரக துரத்தல் கதைதான் இது.

முதல் பாதியில் அதற்கான முஸ்தீபுகள் கூட கொஞ்சம் சரியாகவே பின்னப்பட்டிருக்கின்றன திரைக்கதையில். ஆனால் பின் பாதியில் அந்த சேஸிங்… இன்னும்கூட சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். மிக மெல்லியதான கதை, அதைவிட வலுவற்ற காட்சியமைப்புகள் காரணமாக பின்பாதியில் அலுப்புத் தட்டுகிறது. பிரசன்னா போன் செய்வதும், அதை விமல் எடுக்கலாமா வேண்டாமா என யோசிப்பதுமான காட்சிகளே திரும்பத் திரும்ப வந்து போரடிக்கின்றன. விமலுக்கு மிகக் கச்சிதமான வேடம். பயந்த சுவாபம், மேனேஜர் கொடுமையை வேறு வழியின்றி தாங்கிக் கொள்ளும் மிடில் க்ளாஸ் மனோபாவம் என இயல்பாக நடித்திருக்கிறார்.

அவரது காதலியாக வரும் அனன்யாவுக்கு பெரிய வாய்ப்பில்லை. பிரசன்னாவும் தன் வேடம் உணர்ந்து நடித்திருக்கிறார். கேரக்டர்படி இவர் செய்தது மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்பதால் அவர் மீது எந்தக் கட்டத்திலும் இரக்கமோ பரிதாபமோ தோன்றவில்லை. ஓவியாவுக்குள்ள ஸ்கோப் கூட இனியாவுக்கு இல்லை. முதல் பாதியில் வரும் இரண்டு டூயட் பாடல்கள் அட்டகாசம்.

ஆனால் அவை பத்து நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து வருவதுதான் வேகத் தடை. சேஸிங் காட்சிகளில் இன்னும் சிறப்பான பின்னணி இசை அமைத்திருக்கலாம். போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு இன்னொரு சிறப்பு. அந்தரங்க விஷயங்களை செல்போனில் படமெடுத்து வைத்துக் கொள்வது எத்தனை பெரிய சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதை உணரும்படியான காட்சிகள். ஆனால் ஒரு 20 நிமிடத்தில் நச்சென்று சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை சீரியல் மாதிரி ஆக்கியிருப்பதுதான் மைனஸ். நேரமிருந்தால், ஒரு முறை பார்த்து வைக்கலாம்!


ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம்

E-mail Print PDF

”நான் ஈ” புகழ் நானி நடித்திருக்கும் மூன்றாவது தமிழ் படம் தான் இந்த ‘ஆஹா கல்யாணம்’. ‘நான் ஈ’-யில் பார்த்த மாதிரியான அதே துறு துறு நானி. பாடி லாங்குவேஜை மட்டும் மாற்றியிருக்கிறார். அவ்வப்போது காமெடி செய்து கலக்கவும் வைக்கிறார்.

நாயகியாக வாணி கபூர் அசத்தல். அவரின் நடிப்பு, டான்ஸ் அதையும் ஆஹா சொல்ல வைக்கிறது. படவா கோபி, பார்த்தசாரதி ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சிம்ரன்.

படம் முழுக்க கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு, மனதில் மெதுவாக இசைந்துக்கொண்டே இருக்கும் பின்னணி இசையும், பாடல்களும் ப்ளஸ். தரணின் இசையில் தல பாடலும், மழையின் சாரலும் ரசிக்க வைக்கிறது.

கதையும், கதை நடக்கும் இடங்களும், அந்த திருமண வீடுகளும் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்பதால் வேறுமொழி (இந்தி) படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. வசனங்களின் மூலம் அந்த உணர்வை குறைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

படத்தின் கதைப்படி கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்தமாக வெட்டிங் பிளானிங் தொடங்க நினைக்கும் வாணி கபூர், ‘கெட்டிமேளம்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். இதில் பார்ட்னர் என்ற பெயரில் வந்து சேர்கிறார் நானி. முதலில் ஒரு சின்ன திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவரும் படிப்படியாக நிறைய திருமணங்களை நடத்தி முன்னுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு மிகப்பெரிய திருமணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பார்ட்டி கொண்டாடும் நாணியும், வாணியும் போதையில் எல்லை மீற, நாயகி வாணி கபூரை 5 முறை லிப் லாக் செய்கிறார் நானி. அதன்பின் வாணிக்கு நானி மீது இருக்கும் காதல் புரிகிறது. நானியிடம் காதலைச் சொல்ல வரும்போது, ஒரு தவறான புரிதலால் இருவருக்கும் உள்ள ஈகோவால் பிரிகிறார்கள். அதன்பின் ‘கெட்டி மேளம்’ என்னானது, நானி-வாணி காதல் என்னானது என்பது மீதிக்கதை?

ஆஹா கல்யாணம் - புதுமுயற்ச்சியின் வெற்றி

கோலி சோடா – விமர்சனம்

E-mail Print PDF

ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட் சென்னையிலுள்ள கோயம்பேடு தான். இந்த கோயம்பேட்டில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.

மார்க்கெட்டுக்கு போனோமா காய்கறிகளை வாங்கினோமா என்று தனது அன்றாட வாழ்க்கையை மட்டுமே பார்க்கும் சாதாராண மக்களாகிய நாம் என்றைக்காவது அங்கு மூட்டை தூக்கும் சிறுவர்கள் யார், ஏன் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று யோசித்திருப்போமா. அப்படி நம்மை யோசிக்க வைக்கும் படம் தான் இந்த கோலி சோடா.

கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் இந்த நால்வரை சுற்றி நடக்கும் வாழ்க்கையை தான் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள். தினமும் மூட்டையை தூக்கி ஒரு மூட்டைக்கு 5 ரூபாய், 10 ரூபாய் என எந்த வித எதிர்கால கனவுடன் இல்லாமல் இருக்கும் இவர்களுக்கு அறிவுரை சொல்கிறார் சுஜாதா (மார்க்கெட்டில் கடை நடத்திவருபவர்).

இவர் அறிவுரையின் பேரில் அதே மார்க்கெட் கந்துவட்டி விடும் ரவுடியிடம் உதவி கேட்டு செல்ல அங்கே ஆரம்பிக்கிறது கோலி சோடா கலவரம். பாக்குறதுக்கு கோலி சோடா சாதாரண தண்ணீராய் தெரிந்தாலும் அதை குலுக்கி அடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை தத்ரூபமாக இந்த சிறுவர்களை வைத்து காட்டியிருக்கிறார்கள். ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த சிறுவர்களை அடித்து துவைத்து இந்தியாவின் நான்கு திசைக்கு லாரியில் ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள்.

இவர்கள் எங்கே போனார்கள், என்ன ஆனார்கள், கடை என்னவாயிற்று என்பதை நேர்த்தியான திரைக்கதையால் வண்ணம் தீட்டியிருக்கிறார் இயக்குநர். கட்டிப்பிடித்து, உருண்டு பெரண்டு முத்தம் கொடுத்தால் தான் காதலா பார்வையிலேயே இவர்களின் காதலை காட்டியிருப்பது அழகு. மார்க்கெட் ரவுடி என்றால் தலை நிறைய முடி, வாய்ல பாக்கு, எப்பவும் தண்ணின்னு பார்த்து பழகிய நமக்கு இந்த டீசண்டான அதுவும் கொடூர குணம் கொண்ட ரவுடி நாயுடு(மது சுதன்) பார்க்கும்போது மிரள வைக்கிறார்.

ஏடிஎம் கேரக்டரில் நடித்திருக்கும் சீதே தான் படத்தின் முதுகெலும்பாக வருகிறார். பார்ப்பதற்கு தனுஷ் தங்கச்சி மாதிரி ஒல்லியாக இருந்தாலும் அவருக்கு கொடுத்திருக்கும் வேலையை கச்சிதமாக அதுவும் தலைமுடியை இழந்து சமர்ப்பித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆச்சி கதாபாத்திரத்தில் சுஜாதா முன் பார்த்திராத சிறந்த குணச்சித்திர வேடம் ஏற்றிருக்கிறார். இவரின் மகளாக வரும் யாமினி நல்ல அறிமுகம் இப்படி படத்தில் நடித்திருக்கும் அனைவருக்குமே ஒரு முக்கிய பொறுப்பு அதுவும் கதையை தாங்கி செல்லும் முக்கிய பொறுப்பை தைரியமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

முதல் பாதி முழுவதும் காமெடியில் விவேக்கிற்கு அடுத்து சமூக அக்கறையை கையில் எடுத்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு ஒரு சல்யூட் உதாரணமாக நஷ்டத்தில் ஓடும் பால் பேக்கட்டை வீடு வீடாகவும் கொடுக்கும் அரசாங்கம், லாபத்தில் ஓடும் சரக்கு பாட்டிலை ஏன் வீடு வீடாக கொடுக்க கூடாது என்கிறார். இவர் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் செய்யும் அலப்பறையில் வயிறு புண்ணானது தான் மிச்சம் சபாஷ் அண்ணாச்சி.

இசை எஸ்.என்.அருண்கிரி கானா பாலாவை வைத்து படம் ஆங்காங்கே நம்மை கைத்தட்ட வைத்திருக்கிறார். பின்னணி இசையை சேர்த்த சீலின் பாராட்ட வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நல்ல திறமையான ஒளிப்பதிவாளர்களை தேடினால் அதில் கண்டிப்பாக விஜய் மில்டன் இருப்பார். அதேபோல் தனக்கான ஒரு அடையாளத்தை சினிமாவில் நிலைநாட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த இவருக்கு இந்த கோலி சோடா நிச்சயம் தாகத்தை தணித்திருக்கும். ஆபாசம் என்று எதுவும் இல்லாமல், இரட்டை அர்த்தம் என்று முகம் சுழிக்க வைக்காமல் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படி ஒரு நல்ல அனுபவத்தை தந்த படமாக தமிழ்சினிமா.காம் இணையதளம் கருதுகிறது.

பண்ணையாரும் பத்மினியும் – திரை விமர்சனம்

E-mail Print PDF

80 களில் வாழ்ந்த பண்ணையார் அவருடைய முதல் காட்சிகயிலேயே அவர் எப்படிபட்டவர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ஊரில் அப்போதைய புது டெக்னாலஜியான ரேடியோ, தொலைக்காட்சி என அனைத்துமே இவர் கொண்டு வருகிறார். அதேபோல இவர் எதிர்பார்க்காமல் நண்பரின் மூலம் இவரிடம் வந்து சேரும் அந்த கார் தான் ஃபியட் பத்மினி. நான் ஊருக்கு போயிட்டு திரும்பி வரவரைக்கும் கார் உங்களிடமே இருக்கட்டும் என்று ஒப்படைத்துவிட்டு போகிறார் ”பிதாமகன்” மகாதேவன்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இந்த காரை வைத்தே நகர்கிறது. கார் ஓட்டத் தெரியாத பண்ணையாரிடம் வரும் பத்மினியை அவர்கள் ஒரு குழந்தைபோல பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார்கள். அந்த ஊரில் டிராக்டர் ஓட்டும் முருகேசனை அழைத்து அந்த காரை ஓட்டச் சொல்கிறார் பண்ணையாரான ஜெய்பிரகாஷ். டிராக்டர் ஓட்டியே பழகிய விஜய் சேதுபதிக்கு காரை கண்டதும் அவ்வளவு ஆனந்தம்.

பின் அந்த காரை வைத்து இவர்கள் ஊருக்குள் செய்யும் அட்டகாசத்தை பார்க்கும்போது நம்ம ஊரில் இப்படி ஒரு பண்ணையாரும் இப்படி ஒரு பத்மினியும் இல்லையே என்று ஏங்க வைக்கிறார்கள். பண்ணையாருடைய திருமண நாளன்று தனது மனைவியான துளசியை காரில் உட்கார வைத்து தானே ஓட்ட வேண்டும் என்று ஆசைபடுகிறார் ஜெய்பிரகாஷ்.

இதற்காக விஜய் சேதுபதியிடம் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தருமாறு கேட்க அதற்கு விஜய் சேதுபதி சொல்லிக் கொடுப்பதைப்போல் பாவணை காட்டுகிறார் பின் துளசியும் விஜய் சேதுபதியிடம் வந்து அந்த மனுஷன் கார் ஓட்டிடுவாரா, அவர் கார் ஓட்டனும் அதை நான் பாக்கனும்னு சொல்லும்போது நம்மை அறியாமல் நம் மனதில் ஒரு ஆழ்ந்த அனுதாபம் உண்டாகிவிடுகிறது.

இப்படி அந்த காரின்மேல் உயிரையே வைத்திருக்கும் ஜெய்பிரகாஷ், துளசி, விஜய் சேதுபதிக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. இதனால் காரை இழக்கும் அவர்கள் மீண்டும் பத்மினியை அடைந்தார்களா, பண்ணையார் கார் ஓட்டினாரா இல்லையா என்பதை ஒரு கவிதை போல காட்டியிருக்கிறார்கள்.

ஜெய்பிரகாஷின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். மனுஷன் என்னமா நடித்திருக்கிறார் முதல் முறையாக காரில் செல்லும்போதும் சரி, அந்த காரே அவரிடம் வந்து சேரும்போது வரும் காட்சியில் அவரின் நடிப்பு முழுவதையும் வாங்கியிருக்கிறார் இயக்குநர் அருண். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனை டவுன் ஆஸ்பத்திருக்கு கொண்டு செல்ல பத்மினி காரை அனுகுகிறார்கள் ஊர் மக்கள்.

பண்ணையாருக்குத்தான் காரே ஓட்டத்தெரியாதே ஊர் மக்கள் எல்லாம் காரை எடுங்க ஐயா சீக்கிரம் போகும் என்று சொல்லும்போது எனக்கு டபுள்ஸ் ஓட்டத்தெரியாது என்று ஜெய்பிரகாஷ் சொல்ல நமக்கு வயிறு புண்ணானது தான் மிச்சம். காரில் கியர் கம்பியை தேடும் விஜய் சேதுபதியை வந்து காரை எடுக்காம என்னடா கம்பியை தேடிட்டு இருக்க என்று மிரட்டும்போதும், அது என்ன கம்பின்னே தெரியாம வீட்டுக்குள்ள போயி ஒரு இரும்பு கம்பியை கொண்டுவருவதும் சிரிப்பிற்கு பஞ்சமில்லை தியேட்டரில்.

விஜய் சேதுபதியின் அறிமுகமே அவர் ஏதோ பெரிய விஷயம் பண்ணப்போறார்னு எதிர்பார்த்த நமக்கு அடுத்து நடக்கும் விஷயம் ஊருக்குள்ள இப்படி ஒரு காமெடி பீசா என்று சிரிக்க வைக்கிறார். மீண்டும் தன்னை ஒரு நல்ல நடிகன் என்று நிரூபித்திருக்கிறார் விஜய் சேதுபதி. காரை வைக்கோல் போருக்குள் மறைப்பது, பண்ணையாரிடம் சத்தியம் வாங்குவது என்று அனைத்து இடத்திலும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். பண்ணையார் காரை ஓட்டக் கத்துகிட்டா நம்மை கழட்டி விட்ருவாரோ என்று கோபம் கலந்த பயந்தோடு அவர் இருப்பது அருமை.

துளசி அவருடைய நடிப்பில் எந்த குறையும் வைக்காமல் தனது பங்கை நன்றாக செய்திருக்கிறார். படத்தில் காமெடி என்று பார்த்தால் ஜெய்பிரகாஷ், விஜய் சேதுபதி, பாலா சரவணன் என்று மூவருமே கலக்கியிருக்கிறார்கள். முக்கியமாக பாலா சரவணன் பேசும் வசனங்கள் அனைத்தும் காமெடி வெடி.

தற்போது குறும்பட இயக்குநர்கள் தான் கோலிவுட்டில் தொடர் ஹிட்டுகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விதமாக இந்த ஆரோக்கியமான புரட்சி உருவானதால் கோலிவுட்டில் சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கூட தைரியமாக படம் எடுக்க முன் வருகிறார்கள். இப்படத்தின் இயக்குநரான அருண் குமாரும் குறும்பட இயக்குநர் என்பதால் எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி இனி தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டும். இவரின் இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து அதில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

இசை ஜஸ்டின் அனைத்து பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது. டமார் டுமீர் என்று காதை கிழிக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக “எங்க ஊரு வண்டி” பாடல் அற்புதம். ஒளிப்பதிவு கோகுல் பெனாய் கிராமத்தை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். விஜய் சேதுபதி-ஐஸ்வர்யாவை விட துளசி-ஜெய்பிரகாஷ் ஜோடி அழகாகவும் எதார்த்தத்துடனும் அமைந்திருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் தோன்றும் சினேகா மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவருமே மனதில் நிற்கும்படி காட்டியிருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் பண்ணையாரும் பத்மினியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்…

Page 3 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்